/* up Facebook

Jan 5, 2016

2015 முகங்கள்மண்ணைக் கீறி முளைக்கிற விதையைப் போல இயல்பானதல்ல பெண்களின் முன்னேற்றம். எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் அவர்கள் தடம்பதிக்க வேண்டும். ஆண்களுக்கு மிக இயல்பாகக் கிடைத்துவிடுகிற விஷயங்களுக்குக்கூடப் பெண்கள் போர்க்கொடி தூக்க வேண்டியிருக்கிறது. எங்கேயும் எப்போதும் அவர்கள் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நின்றால் குற்றம், நடந்தால் சமூக மீறல், ஓடினாலோ தலைப்புச் செய்தி. இத்தனை இக்கட்டுக்களையும் மீறித்தான் பெண் என்னும் பாலினம் இங்கே பிழைத்திருக்க முடிகிறது. 2015-ம் ஆண்டில் களம் கண்ட பெண்களையும் மாற்றத்துக்கு வித்திட்ட நிகழ்வுகளையும் பற்றிய தொகுப்பு இது.

>> துணிச்சலே கவசம்

விமான பயணத்தின்போது தனக்குப் பின் சீட்டில் அமர்ந்திருந்த முதியவர் செய்த பாலியல் சீண்டலைப் பொறுக்க முடியாத ஒரு பெண், உடனே அதைக் கண்டித்தார். அதோடு விட்டுவிடாமல் அதைத் தன் ஸ்மார்ட்போனில் வீடியோவாகப் படம்பிடித்து யூடியூபில் வெளியிட்டார். அந்த வீடியோவை ஐம்பது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்தார்கள் என்பதைவிட அந்த பெண்ணைச் சீண்டிய முதியவர், முகத்தை மூடியபடியே மன்னிப்பு கேட்டிருப்பதுதான் வெற்றி!

>> திறமைக்கு எல்லை இல்லை

கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் இந்திய டென்னிஸ் வரலாற்றிலும் உலக அரங்கிலும் தனி அடையாளத்தைப் பெற்றிருக்கிறார் சானியா மிர்ஸா. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர், மகளிர் இரட்டையர் ஆகியவற்றில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் நான்கு டபிள்யூ.டி.ஏ. பட்டங்களையும், மகளிர் இரட்டையர் பிரிவில் 27 டபிள்யூ.டி.ஏ. பட்டங்களையும் வென்று சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

>> மாற்றத்தின் அடையாளம்

சென்னை மெட்ரோ ரயிலின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் ஓட்டத்தைப் பெண் ஓட்டுநர் ஒருவர் தொடங்கிவைத்திருப்பது மாற்றத்துக்கான நம்பிக்கைக் கீற்று. இந்த வெற்றியும் பெருமிதமும் தனக்கு அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை என்கிறார் ப்ரீத்தி.

>> ஆடை பூதம்

பெண்கள் மீதான ஆடைக் கட்டுப்பாடு குறித்த விவாதங்கள் கடந்த ஆண்டு முழுவதுமே தொடர்ந்தன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் ஜீன்ஸ், டீ ஷர்ட், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போன்றவை அணிய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வரிசையில் லெகிங்ஸ் எனப்படும் ஆடை வகையும் கடந்த ஆண்டு சேர்ந்துவிட்டது.

>> அங்கீகாரம் தந்த தேசிய கீதம்

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுப் பாலினத்தவர்கள் பாடிய தேசிய கீதம் யூடியூபில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் தாங்களும் இந்தியாவின் குடிமக்களே என்பதை அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சமூகம் உரிய அங்கீகாரம் வழங்கியிருந்தால் அவர்கள் என்னவாக மாறியிருக்க முடியும் என்பதையே அந்த வீடியோ உணர்த்தியது.

>> விருது மங்கை

கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன் விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல் பாசியினைச் சேகரிக்கும் ராமேசுவரம் மீனவப் பெண் லெட்சுமிக்கு அமெரிக்காவில் உள்ள கடல்சார் ஆய்வு மையத்தின் விருது வழங்கப்பட்டது, எளியவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்.

>> முன்னோடிப் பெண்

பேருந்து வசதிகூட இல்லாத குக்கிராமத்தைச் சேர்ந்த தாயம்மாள், ‘சிறந்த முன்னோடி’ விருதை மத்திய நிதியமைச்சர் கையால் பெற்றார். பள்ளியில் இடைநின்ற மாணவியான இவர்தான், கல்வித் துறையில் புதிய மாற்றங்களை முன்னெடுத்ததற்கான விருதைப் பெற்றிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் இசவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தன் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலருக்கும் கல்வி வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

>> அழகு ஆலோசனை

மருத்துவமனை ஊழலைச் சுட்டிக்காட்டுவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம், “நீங்கள் இப்படி வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினால் உங்கள் தோல் கறுத்துவிடும். பிறகு உங்களுக்கு மணமகன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, திருமணம் தாமதமாகிவிடும்” என்று அறிவுரை வழங்கினார் கோவா மாநில முதல்வர் லக் ஷ்மிகாந்த் பர்சேகர். காப்பீட்டுத் துறை சீர்திருத்த மசோதா குறித்த விவாதத்தின் போது, “தென்னிந்தியப் பெண்கள் அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களின் கறுப்பு நிறமும் அழகானது. அவர்களுக்கு நடனமாடவும் தெரியும்” என்று சொன்னார் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ்.

>> சாதிக்கும் மூன்றாம் பாலினம்

இந்திய காவல்துறை வரலாற்றில் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றிபெற்ற முதல் திருநங்கை சேலத்தைச் சேர்ந்த ப்ரித்திகா யாஷினி. திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு எத்தனை வரவேற்பைப் பெற்றதோ, அதற்கு நிகரான வரவேற்பு கிடைத்திருக்கிறது ப்ரித்திகாவின் வெற்றிக்கு.

>> தந்தைக்கு மரியாதை

பெண் கல்விக்கு ஆதரவாகப் பேசியதால் தலிபான்களால் சுடப்பட்டு, தற்போது உலகம் முழுவதும் பெண்கல்வியின் முகமாக அறியப்படும் மலாலா குறித்து வெளியான ‘ஹி நேம்ட் மீ மலாலா’ என்ற ஆவணப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

>> பெண் எழுத்து

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் புத்தகங்களில் பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களும் பெண்கள் குறித்த புத்தகங்களும் ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றாலும், வெளியாகிற புத்தகங்கள் மக்களின் கவனத்தைப் பெறுவதில் தவறுவதில்லை. அந்த அளவில் கடந்த ஆண்டு வெளியான புத்தகங்களில் நான் மலாலா (காலச்சுவடு பதிப்பகம்), வன்காரி மாத்தாய் (எதிர் வெளியீடு), கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? (எதிர் வெளியீடு), மீதமிருக்கும் சொற்கள் (அகநி வெளியீடு), தனிமைத் தளிர் (காலச்சுவடு), லட்சுமி என்னும் பயணி (மைத்ரி பதிப்பகம்) போன்றவை கவனம் ஈர்த்தன.

>> சூப்பர் ஹீரோ ப்ரியா ஷக்தி!

சூப்பர் ஹீரோக்களாக ஆண்களே வலம் வந்துகொண்டிருந்த காமிக்ஸ் உலகில், தனியிடத்தைப் பிடித்திருக்கிறார் ப்ரியா ஷக்தி. அமெரிக்க வாழ் இந்தியரான ராம் தேவினேனி என்பவரின் கருத்தாக்கத்தால் அவதரித்தவள்தான் ப்ரியா ஷக்தி. காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் பெண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட ப்ரியா ஷக்தி, தான் உருவாக்கப்பட்ட நோக்கத்தைப் பூர்த்திசெய்யத் தவறவில்லை.

>> இந்தியாவின் மகள்

நிர்பயா கொடுமையை மையமாக வைத்து, அந்த வழக்கின் குற்றவாளிகளின் பேட்டியை உள்ளடக்கி லெஸ்லி உட்வின் இயக்கிய ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படம் இந்தியாவின் வெளியிட தடைசெய்யப்பட்டது. ஆனால் வெளிநாடுகளில் வெளியான அந்தப் படம் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களைப் பற்றிய சமூகப் பார்வை குறித்தும் பல கேள்விகளை முன்வைத்தது.

நன்றி -   திஇந்து 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்