/* up Facebook

Jan 28, 2016

கனேடியத்தமிழ் சினிமாவில் பெண்கள் - கறுப்பிதென்னிந்தியா சினிமாவிற்கு கிடைத்திருக்கும் பரவலாக்கம், ஈழ, புலம்பெயர் சினிமாவிற்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. புலம்பெயர் சினிமா எப்போது அந்தந்த நாட்டு சினிமாத்துறைக்குள் தன்னை நுழைத்துக் கொள்கின்றதோ அப்போதுதான் அதற்கான நிரந்தர தளமும் கிடைக்கும்.

தென்னிந்திய தமிழ் சினிமாவின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதனால் அதில் ஆய்வுகளை நிகழ்த்துவது சுலபம், ஈழத்தமிழ் சினிமாவில் என்று பார்த்தால்கூட மிகவும் குறைந்த அளவிலேயே படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. எனது தலைப்பு புலம்பெயர் தமிழ் சினிமாவில் பெண்கள்.

புலம்பெயர் எனும் போது அதற்குள் அடக்கும் நாடுகள் பல, அங்கிருந்து எத்தனை முழுநீளத் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என்ற தகவல்கள் என்னிடமில்லை, இருப்பினும் சினிமா விரும்பி என்ற வகையிலும் ரொறொன்டோவில் திரையிடப்பட்ட பல திரைப்படங்களை நான் பாத்திருக்கின்றேன், என்ற வகையிலும் பார்த்த திரைப்படங்களின் அடிப்படையில் நான் உள்வாங்கியவற்றைக் கொண்டு இங்கே பேச உள்ளேன். மேலதிக தகவல்கள் உங்களிடமிருப்பின் கேள்வி பதில் நேரம் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த சினிமா உலகை எடுத்துக் கொண்டால் ஒப்பீட்ளவில் பெண்களின் பங்களிப்பு என்பது ஆண்களை விட மிகக் குறைந்த அளவிலே இருக்கின்றது, மேற்கத்தேய நாடுகளிலேயே இந்த நிலையெனில் தமிழ் சினிமா உலகில் பெண்களினது பங்களிப்பை நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. கமெராவிற்கு முன்னால் இருப்பவர்களாகவே அவர்கள் எப்போதும் பார்க்கப்பட்டு வருகின்றார்கள். பின்னால் இருந்த, இருக்கும் சிலர் கூட அவர்களின் ஆண் குடும்ப அங்கத்தவரின் சிபாரியில், அல்லது தெரிந்தவர்கள் சார்பில் வந்தவர்கள் ஆகத்தான் இருக்கின்றார்கள். கமெரா பின்னால் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா உலகமென்பது ஆண்மயப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தில் கதை சொல்லிகளாகவும், இயக்குனர்களாவும் எப்போதுமே ஆண்களே அதிகமிருந்து வருகின்றார்கள். ஆண்மேலாதிக்க நிறுவனம் ஒன்றிலிருந்து வரும் படைப்பு, தமக்கான உலகில் தாம் பெண்களிடமிருந்து எதிர்பாப்பதைத்தான் எடுத்துவரும், எடுத்துவர முடியும். அந்த வகையில்தான் தமிழ்சினிமா என்பது இதுவரைகாலமும் வந்துகொண்டிருக்கின்றது. சில விதிவிலக்குகள் இருக்கலாம்,  உதாரணத்திற்கு ரூத்திரய்யாவின் 'அவள் அப்படித்தான்' அதன் பின்னால் அவர் காணாமல் போய்விட்டார். இதுதான் தமிழ் சினிமாவின் நிலை. ரூத்திரய்யாவிற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அதாவது இந்திய, ஈழ, புலம்பெயர் சினிமாக்களின் பெண் அகவாழ்வை ஆராயும் எந்தத் திரைப்படமும் வரவில்லை என்றுதான் கூறமுடியும்.  எந்த ஒரு இலக்கிய வடிவத்திற்கும் உள்ளது போல்தான், திரைப்படத்துறைக்கும் இரு வேறு நீரோட்டங்கள் இருக்கின்றன. ஒன்று ஜனரஞ்சகம், மற்றது கலைப்படைப்பு அல்லது தீவிர படைப்பு. ஜனரஞ்சகம் வினியோகம், பிரபல்யம் போன்றவற்றை மையப்படுத்தி உருவாவது, மாறாக கலைப்படைப்பு  சமூக அக்கறையோடு செயல்படுவது. ஜனரஞ்சகப் படைப்பு நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது,  கலைப்படைப்பு படைப்பாளியின் நெறிமுறையிலிருந்து தன்னை விலகாமல் பார்த்துக்கொள்ளும்.

சரி இனி எனது தலைப்பான புலம்பெயர் சினிமாவில் பெண்கள் என்று பார்த்தால், இதுவரை காலமும் வெளிவந்த திரைப்படங்களில் பெண்களின் இருப்பிடம் என்பது திரைப்படங்களில் எப்படி அமைந்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டும். முதலாவது நான் அறிந்து புலம்பெயர் சினிமாவில் இதுவரை பெண் இயக்குனரின் திரைப்படம் வெளிவரவில்லை. எனவே நான் மேற்கூறியது போல் ஆண்மயப்படுத்தப்பட்ட சினிமாத்துறையில் ஆண்களின் பார்வையிலிருந்துதான் இதுவரைக்கும் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அடுத்து, புலம்பெயர் தீவிர இலக்கியச் சூழல என்பது பல ஆண்டுகாலமானது. தீவிர இலக்கியம் என்பது எப்போதும் விழிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே பெண்களுக்காகவும் அது எப்போதும் குரல் கொடுத்தபடியே இருக்கின்றது. அதன் காரணமாக புலம்பெயர் இலக்கியச் சூழலில் தீவிர இலக்கிய செயல்பாட்டிற்குள் இணைத்துக்கொண்டவர்களுக்கு புலம்பெயர் சூழலில் தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இலகுவில் அடையாளம் காணவும், அதனை அடையாளப்படுத்தவும், அப்பெண்களின் அகஉணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் புலம்பெயர் தீவிர இலக்கியத்தின் பரிச்சயம் நிச்சயம் வழிவகுக்கும். 

1996இல் பாரிஸில் இருந்து அருந்ததியின் இயக்கத்தில் 'முகம்' என்றொரு திரைப்படம் வெளிவந்தது, அது அகதிகளின் ஆன்மாக்களின் குரலாக வெளிவந்த திரைப்படம், ஒரு முழுநீளக் கலைப்படைப்பாக தன்னை அடையாளம் காட்டியது. அதன் பின்னர் நானறிந்து வெளிவந்த பல புலம்பெயர் திரைப்படங்கள், ஒன்றில் தென்னிந்திய தமிழ் மசாலா திரைப்படங்களின் பாதிப்பில் வெளிவந்தவை, அல்லது புலம்பெயர் தமிழ் சினிமாவிற்கான ஒரு புதிய மொழியைப் பதிய வைக்க முயன்று தோன்றவை என்றே கொள்ளலாம். இத்திரைப்படங்களில் பெண்கள் எப்படிப் பார்க்கப் பட்டார்கள் என்று நோக்கினால் கே.எஸ் பாலச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான 'உயிரே' திரைப்படம் மகனை இழந்த ஒரு தாயின் சோகத்தை சொன்னது என்பதற்கு மேலால் குறிப்படும்படியாக எதுவும் இருக்கவில்லை. இருப்பினும், தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தில் தன்னை வீழ்த்திக் கொள்ளாமல் அத்திரைப்படம் கனேடிய தமிழ் சூழல் ஒன்றை அப்போது தாங்கிவந்தது. அதனைத் தொடர்ந்து வந்த பல திரைப்படங்கள் புலம்பெயர் சூழலில் தமிழ் மக்களின் பல பிரச்சனைகளை தளமாகக் கொண்டு அமைந்திருந்ததன. குறிப்பிடும் படியாகப் பெண்களின் பிரச்சனைகள் என்று எதையும் தொட்டுச் செல்லவில்லை. அண்மைக் காலங்களில் கனேடிய தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் பிரத்தியேகமாகப் பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்திருயிருந்ததைக் காணக்கூடியதாருந்திருந்தது. ஒன்று ஜனா கே சிவாவின்  'சகாராப்பூக்கள்' இத்திரைப்படத்தின் திரைமொழி, வசன அமைப்பு, என்பன நேர்த்தியற்றனவாக இருப்பினும், இரண்டாவது தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைந்திருந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும் மையக்கரு என்னளவில் அதற்கான நியாயத்தை அடையவில்லை. கடந்த வருடம் பார்த்த திரைப்படம் அது, மனதில் பதியும் வகையில் எந்தக் காட்சியும் அமையாயததால் திரைப்படத்தை என்னால் மீட்டுப் பார்க்க முடியாமல் உள்ளது. காதல் தோல்வி தற்கொலை என்ற சென்டிமென்டல் வலுவைக்கொடுத்து இயக்குனர் பார்வையாளர்களின் பாராட்டை பெற முயன்றுள்ளார் என்றே படத்தைப் பார்த்து முடித்த போது நான் உணர்ந்தது. 

அடுத்து கதிர் செல்வகுமாரின் ஸ்டார் 67
இதுவும் ஒரு பெண்ணை தொலைபேசி மூலம் தொல்லை செய்பவன் ஒருவனின் கதை, இது ஒரு த்ரில்லர் திரைப்படம், பெண்பாத்திரத்தை ஆராயும் அளவிற்கு பாத்திரப்படைப்புகள் எதுவும் இல்லை என்பது எனது கருத்து.

அடுத்து திவ்யராஜன் அவர்களின் இயக்கத்தில் வெளியான 'உறவு' திரைப்படம். 'உறவு’ நான் மேற்கூறிய கூற்றிற்கு நல்ல ஒரு உதாரணம். அதாவது ஆண் மேலாதிக்க உலகில் பெண்ணியம் என்பதின் பார்வையாகத்தான் என்னால் அத்திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. அதாவது அண்மைக்கால இலக்கிய சர்சைகளின் வடிவில் சொல்வதானால் பார்ப்பனிய எழுத்தாளரின் தலித்திய சிறுகதை அது. ”உறவு” திரைப்படம் ஒரு பெண்ணின் பிரச்சனையை ஆராய்வதாக, பெண்ணிற்கு சார்ப்பான திரைக்கதை என்று முற்றுமுழுதாக இயக்குனரால் நம்பப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது என்று நான் நம்புகின்றேன், ஆனால் அது இயக்குனரின் பெண்ணியம் பற்றிய புரிதலின் போதாமை காரணமாக பெண்ணை ஒரு வில்லியாகப் பிரகடனப்படுத்திவிட்டதோ என்று நான் அஞ்சுகின்றேன். ஒரு சமூக பிரச்சனையை ஆராயும் வகையில் படைக்கப்படும் எந்தப் படைப்பும், பல உரையாடல்களுக்குள் சென்று பதப்பட்டுவருவதானல் மட்டுமே தன்னை நேர்த்திப்படுத்துக் கொள்ளும்.  பிரதிகளின் மையக்கரு சார் வல்லுனர்களிடம் கொடுத்து பலதடவைகள் வாசிக்கப்பட்டு மீள மீள எழுதுவதால் மட்டுமே ஒரு காத்திரமான பிரதியை உருவாக்க முடியும் என்று நான் நம்புகின்றேன். ஒரு கரு நுால் இழையில் தவறிப்போய் இயக்குனர் சொல்லவந்ததற்கு எதிர்கருத்தாக அது மாறிவிடும், அந்த வகையில்தால் ”உறவு” படத்தை என்னால் பார்க்க முடிந்தது.

அடுத்த புலம்பெயர் சினிமாவில் தனக்கென்றொரு காலடியைப் பதித்து நிற்கும் லெனின்.எம் சிவத்தின் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், தொழில்நுட்பத்தில் புலம்பெயர் சினிமாவில் ஒரு காத்திரமான தளத்தை இப்படம் கொண்டிருக்கின்றது. இத்திரைப்படத்தில் ஆறு வேறுபட்ட கதைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதனால், அக்கதைகள் மேலோட்டமாக மட்டுமே திரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. எனவே பெண் கதாபாத்திரங்களும் ஆய்வுக்கான தனது இடத்தை எடுத்துக் கொள்வதற்குப் போதிய கால அவகாசம் இயக்குனரால் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் இரண்டு பெண் பார்த்திரங்களை நான் குறிப்பிட விரும்புகின்றேன். 

இளம் பெண்ணின் தாயார் பெண்ணின் விருப்பமின்றி அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கின்றாள், அப்போது சினம் கொண்ட அந்தப் பெண் தனது தாயைப்பற்றி, இல்லாவிட்டால் அந்த சந்ததி பற்றிப் பேசும் வசனங்கள் மிகவும் காத்திரமானவை, இன்று புலம்பெயர் தமிழர்கள் குடும்பங்கள் பலவற்றில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அது, அதாவது பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தாம் நல்லது செய்கின்றோம், என்று உண்மையில் நம்பிச் செய்யும் பல செயல்கள், பிள்ளைகளை பெற்றோரையே மிகவும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளி விடுகின்றது. உங்களில் எத்தனை பேர் ஜெனிபர் பான் என்ற வியட்நாமியப் பெண்ணின் கொலைவழக்கை அறிவீர்களோ தெரியாது, ஸ்புரோவில் வாழ்ந்த இந்தப் பெண் தற்போது தனது பெற்றோரைக் கொலை செய்ததற்காக சிறைச்சாலையில் இருக்கின்றாள். தாய் இறந்துவிட்டாள், தந்தை உயிர்தப்பினார் பெற்றோர்களின் அதிக அன்பும், இறுதியில் பெற்றோரையே அவள் கொல்லும் அளவிற்குக் கொண்டுபோய் விட்டது. 

லெனின் இன்னும் ஆளமாக இந்தக் கருவை கையாண்டிருக்கலாம் என்ற ஆதங்கள் எனக்குப் படம் பார்த்து முடித்தபோது ஏற்பட்டது.

அடுத்து இப்படத்தை முக்கிய பெண் பாத்திரத்தை லெனின் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். ஊரிலிருந்து வந்த பெண், நாடு புதிது, தான் நம்பிவந்தவர்கள் தன்னைக் கைவிட்ட போதும் தளர்ந்துவிடாமல்,  தனது கௌரவத்தை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்காத காத்திரமான பெண்ணாக ஒரு நம்பிக்கையைத் தந்த பெண் பாத்திரமாக குறுகிய நேரத்திற்குள் அந்தப் பெண் பாத்திரத்தை நேர்த்தியாகப் படைத்த இயக்குனர் முடிவில் நான் மேற் கூறியது போலவே ஒரு ஆண் இயக்குனராகவே அப்பெண்ணின் முடிவை கையாண்டிருக்கின்றார். இம்முடிவில் எனக்குத் திருப்தியில்லை, நேர்த்தியாக உருவாக்கபட்ட ஒரு பாத்திரம் முடிவில், மிகவும் ஒரு சாதாரண பாத்திரமாகத் தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. இயக்குனர் கட்டமைத்த இந்தப் பெண் பாத்திரம் இப்படியான ஒரு அவசர முடிவை எடுக்காது என்பது என் நம்பிக்கை. ஒரு பெண்ணியவாதி, அல்லது ஒரு சாதாரண பெண் இயக்குனர் இப்பாத்திரத்தைக் கையாண்டிருந்தால் நிச்சயம் வேறு ஒரு முடிவுதான் எமக்குக் கிடைத்திருக்கும். 

நிறைவாக கனடாவிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நான் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன், எனது தலைப்பிற்குப் பொருத்தமான சில திரைப்படங்களையே நான் தெரிந்தேன், எல்லாவற்றையும் நான் விமர்சனத்திற்குத் தெரியவில்லை. நானும் ஒரு முழுநீளத் திரைப்படம் எடுத்துள்ளேன். அதிலுள்ள சிரமங்கள் எனக்கும் தெரியும். இருப்பினும் இனிமேலும் நாம் காரணங்கள் சொல்லாமல் ஒரு படைப்பைப் படைக்கும் போது அதற்கான நியாயத்தை செய்ய முயலவேண்டும். எம்மிடமிருப்பது காத்திரமான திரைக்கதை மட்டுமே அதற்கான நியாயத்தை நாம் செய்யும் போதுதான் புலம்பெயர் சினிமாவிற்கான ஒரு நிரந்தர தளத்தை நாம் உருவாக்க முடியும். 


மார்கழி மாதம் 26ம் திகதி ரொரொண்டோ தமிழ்சங்க மாதாந்த இலக்கியக் கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை
...மேலும்

Jan 26, 2016

பெண் எழுத்து: கொடுமையை எரிக்கும் பாலைவனப் பூஉலகம் முழுவதும் பெண்களின் நிலை, துயரம் நிறைந்ததாகவே இருக்கிறது. மதங்களின் பெயராலும் சடங்குகளைக் கைமாற்றும் நீட்சியாலும் பெண்களைத் தங்களின் உடமையாகக் கருதும் ஆண்களின் ஆதிக்கம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் காணப்படுகிறது. பெண் கைவிட்டுப் போய்விடக் கூடாதென்னும் சொந்தம்கொள்ளும் மனோபாவத்தால் தங்கள் மீது சுமத்தப்படும் அத்தனை விதிகளையும் கடவுளுக்காகவும் தங்களின் சந்ததிகளுக்காகவும் சிலுவை போலச் சுமப்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். எங்கோ, யாரோ ஒரு சில பெண்கள் வெகுண்டெழுந்து அதிலிருந்து மீற முயலும்போது, அவர்களை நோக்கி எல்லாத் திசைகளிலிருந்தும் வீசப்படும் அடக்குமுறைக் கயிறுகள், பெண்ணுடலையும் எண்ணங்களையும் தளைகளாய்ப் பிணைத்துக்கொள்கின்றன. அப்படியொரு தளையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர், வாரிஸ் டைரி.

நாலாயிரம் ஆண்டுகாலமாக ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் இருந்துவந்த, பெண் உறுப்புச் சிதைப்பைத் தடைசெய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய வாரிஸ் டைரியின் சேவையைப் பேசுகிறது Desert Flower என்னும் புத்தகம். தனது சுயசரிதையான இந்தப் புத்தகத்தை வாரிஸ் டைரி, கேத்லீன் மில்லருடன் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் தமிழாக்கம், ‘பாலைவனப் பூ’ என்னும் பெயரில் வெளிவந்திருக்கிறது.

சடங்கின் பெயரால் நிகழும் கொடுமை

ஆப்பிரிக்கக் கண்டத்தின் சோமாலியப் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பழங்குடியின நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் வாரிஸ் டைரி. தனது ஐந்து வயதில் வழிவழிச் சடங்கின் பெயரால், பாலுறுப்புச் சிதைப்புக்கு உள்ளானவர். பெண்ணின் அந்தரங்க இச்சையை மட்டுப்படுத்தி, பாலியல் உரிமையைச் சிறு வயதிலேயே இழக்கச் செய்யும் உறுப்புச் சிதைப்பு சடங்கின் பெயரால் சோமாலியாவிலுள்ள 80 சதவீதப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உறுப்புச் சிதைப்புக்குப் பின்பு அதிர்ச்சி, தொற்று, மூத்திர ஒழுக்குக் குழாய் சிதைப்பு, ஆறாத வடுக்கள் போன்றவை தொடங்கி மரணம்வரை வேதனை தொடர்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு இஸ்லாமிய நாடுகளில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் சிறுமிகள், இந்த ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

சிறுநீர் கழிக்க முடியாத வேதனையாலும், மாதவிடாய்க் கால அவதியாலும் வேதனைக்குள்ளான வாரிஸ் டைரியின், உடன்பிறந்த சகோதரியொருத்தி திடீரென்று ஒருநாள் காணாமல் போகிறாள். இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருத்தியும் காணாமல் போகின்றாள். அவர்களுக்கு என்ன நேர்ந்ததென்று அறியும் சிறுமி வாரிஸ் டைரியின் அடிமனதில் உறுப்புச் சிதைப்பு சடங்கின் அவலங்கள் தங்கிப்போகின்றன.

ஐந்து ஒட்டகங்களும் அறுபது வயதுக் கிழவனும்

ஐந்து ஒட்டகங்களுக்குப் பகரமாக, அறுபது வயதுக் கிழவனுக்கு பதிமூன்றே வயதானத் தன்னை திருமணம் செய்துவைக்க முயலும் தந்தையை ஏமாற்றிவிட்டு, பாலைவனம் வழியாக, பலநூறு மைல்கள் நடந்தும் ஓடியும் தப்பிப்பிழைக்கிறாள் வாரிஸ் டைரி. பிறகு வீட்டுவேலை செய்பவளாக, பன்னாட்டு உணவகத்தில் தரைப் பெருக்கும் தொழிலாளியாக வயிற்றுப்பாட்டைக் கழுவி, பின்னர் மாடலாகவும், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் நாயகியாகவும் வளர்ந்து, புகழ்பெறுகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு நேர்காணல் அவரை வேறொரு தளத்துக்கு இட்டுச்சென்று விடுகி்றது. அடிமனதில் அவசமாய்த் தங்கிப்போன அழுக்கைத் துடைக்கும் முயற்சியாக, ஐ.நா சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கான பிரிவு, பெண் உறுப்புச் சிதைப்பு தடுப்பு நடவடிக்கையில் இணைந்துகொள்ள அழைப்பு கிடைக்கிறது.

ஆண்களின் சுயநலம்

இந்த உறுப்புச் சிதைப்பு என்னும் கொடுமை குறித்து வாரிஸ் டைரி என்ன சொல்கிறார் தெரியுமா?

“குர் ஆன் இப்படிச் செய்யச் சொல்கிறது என்று பலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள அத்தனை இஸ்லாம் நாடுகளிலுமே இந்த வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றபோதும், அது இப்போது பிரச்சினையில்லை. ஆனால் குர் ஆனோ அல்லது பைபிளோ கடவுள் பெயரால் பெண்களுக்கு ‘அதை வெட்டிவிட வேண்டும்’ என்று எங்கும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கம் மிக எளிதாக, ஆண்களால் நடத்தப்படுகிறது. அவர்கள்தான் இந்தக் கோரிக்கையை வலுவாக ஆதரிக்கிறார்கள். அவர்களின் அறியாமை, சுயநலம் ஆகியவை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களின் பாலின விருப்பத்துக்குத் தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார் கள். தங்கள் மனைவிகளும் உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ள வேண்டும் என்று ஆண்கள் வற்புறுத்துகிறார்கள்.

பெண்ணுக்கானப் பட்டங்கள்

தாய்மார்களும் தங்கள் மகள் மீது இந்தக் கொடுமையைத் திணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். மகள்கள், தங்களுக்குக் கணவர்களை வைத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் தாய்மார்களுக்கு இருந்துவருகிறது. உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ளாத பெண் மோசமானவள், மாசுற்றவள், காம வேட்கை கொண்டு திரிபவள், திருமணம் செய்துகொள்ளத் தகுதியற்றவள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.

நான் வளர்ந்து வந்த நாடோடிக் கலாச்சாரத்தில் திருமணமாகாத பெண் என்ற சொல்லுக்கு இடமேயில்லை. ஆனால் தாய்மார்கள், தங்கள் மகள்களுக்கு சிறப்பான வாழ்க்கைச் சாத்தியங்கள் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பதுபோல, ஆப்பிரிக்கத் தாய்மார்கள் இந்த நடைமுறையைக் கைக்கொள்கிறார்கள். அறியாமையாலும் மூடத்தனம் நிறைந்த நம்பிக்கைகளாலும் ஆண்டுதோறும் பல லட்சம் சிறுமிகள், பிறப்புறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்படுவதற்குத் தகுந்த காரணங்கள் ஏதுமில்லை. உடல்ரீதியான வலி, மனரீதியான வேதனை, உயிரிழப்பு போன்ற காரணங்களே போதும், இதைத் தடுத்து நிறுத்துவதற்கு.

மட்டுமீறிய வன்செயலான பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் என் வேலைக்கு, ஐ.நா.வின் சிறப்புத் தூதர் அந்தஸ்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்திருக்க வில்லை” என்கிறார் வாரிஸ் டைரி.

தெளிந்த நீரோடை போன்ற எழுத்தாக்கம் சுவாரசியம் கூட்டுகிறது. புத்தகம் முழுக்க வாரிஸ் டைரியோடு சேர்ந்து வாசகரும் வலியையும் வேதனையையும் அனுபவித்தாலும், அனைத்தையும் வென்றுவிடும் உத்வேகமும் எழுகிறது. அதுதான் பெண் எழுத்தின், பெண் சக்தியின் வெற்றி.

நன்றி - திஇந்து
...மேலும்

Jan 23, 2016

‘‘ஆம்! நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவள்!"‘‘மேடம் ப்ளீஸ் ஒரு ஆட்டோகிராஃப்” என்று தன்னிடம் புத்தகங்களை நீட்டுபவர்களுக்கு ‘நைஸ் மீட்டிங் யூ' என்று கையெழுத்திட்டுப் புன்னகைக்கிறார் பர்கா தத்!

மூளையைக் கசக்கி ‘இன்ட்ரோ நரேஷன்' எழுதும் அளவுக்குப் பரிச்சயம் இல்லாதவர் அல்ல பர்கா தத். இந்திய தொலைக்காட்சி ஊடகத்தின் பெண் முகம். ‘யூ ஆர் வாட்சிங் தி பக் ஸ்டாப்ஸ் ஹியர்' என்று அவர் தொலைக்காட்சியில் தெரியும்போது, பல வீடுகளின் வரவேற்பறைகளில் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருப்பவர்கள் நிமிர்ந்து உட்காரும் ‘ஜெஸ்சரில்' தெரிந்துகொள்ளலாம் அவர் நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை!

அதேபோல ‘வீ த பீப்பிள்' நிகழ்ச்சியில் விவாதத்துக்கு அவர் தேர்வு செய்யும் விஷயங்கள் அத்தனையும் படு சீரியஸ்! நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை அவர் கையாளும் விதம் அறிவார்த்தமானது!

இத்தனை நாள் பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சமீபத்தில் தன் ஊடக அனுபவங்களைப் பக்கம் பக்கமாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ‘திஸ் அன்கொயட் லேண்ட்' எனும் அந்தப் புத்தகத்தில், இந்திய தொலைக்காட்சி ஊடகம் விரிவடையத் தொடங்கிய காலம் தொட்டு (1991) இப்போது வரையிலான சமகால இந்திய வரலாற்றை சொல்லிச் செல்கிறார் பர்கா.

முதன்முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போர் கார்கில் போர்தான். அதற்கு முக்கியக் காரணம் பர்கா தத். போரை நேரடியாகப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் செய்தியாளர் இவரே! “குண்டுகள் விழ, பதுங்கு குழியில் இருந்துகொண்டு, ஒரே உடை, என சுமார் 15 நாட்கள் ராணுவ வீரர்களோடு போரைப் பதிவு செய்தது எனக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுத்தந்தது” என்று அவர் சொல்லும்போது நம்மால் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் கடந்த வாரம் ‘தி இந்து' நடத்திய ‘லிட் ஃபார் லைஃப்' நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

பெண்கள், போர், தீவிரவாதம், காஷ்மீர், மத வன்முறை உள்ளிட்ட தலைப்புகளில் உங்கள் புத்தகத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். இவை நீங்களே தேர்வு செய்துகொண்டதா அல்லது உங்கள் அனுபவங்களை எழுத எழுத அந்தத் தலைப்புகளே உங்களைத் தேடி வந்தனவா?

தலைப்புகள் எல்லாம் என்னைத் தேடி வரவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பித்தேன். தவிர, இந்த விஷயங்களை எல்லாம் நான் ‘ரிப்போர்ட்' செய்திருக்கிறேன். ஆக, எனக்குப் பரிச்சயமான விஷயங்களைத்தான் நான் இதில் எழுதியிருக்கிறேன்.

புத்தகம் எழுத எவ்வளவு காலம் ஆனது?

சொல்லப்போனால் இந்தப் புத்தகம் நான்கு வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். கடைசியில் சென்ற ஆண்டு எழுதத் தொடங்கினேன்.

நீங்கள் சிறுமியாக இருந்தபோது பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானதைப் பற்றி முதன்முதலாக இந்தப் புத்தகத்தின் மூலம் கூறியிருக்கிறீர்கள். ‘இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்கிறோமே' என்று பயமோ, தயக்கமோ உங்களுக்கு ஏற்படவில்லையா?

நான் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒன்று நான் சிறுமியாக இருந்தபோது எனது தூரத்து உறவினர் ஒருவரால் நான் 'செக்ஷுவல் அப்யூஸு'க்கு ஆளானேன். அப்புறம், டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் என்னுடன் பயின்ற ஒருவரை விரும்பினேன். சில காரணங்களால் எங்கள் இருவருக்குள் வேறுபாடுகள் தோன்றின. அப்போது அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.

இந்த இரண்டு விஷயங்களும் என்னுள் ஆழமான காயத்தை ஏற்படுத்தின. பெண்ணுரிமை குறித்து நானே பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். பல இடங்களில் பேசியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது நாம் ஏன் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். நான் செய்தது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இதை நான் சொல்லாமல் போயிருந்தால் அது எனக்குத்தான் அவமானம். இன்டலெக்சுவலாகவும், எமோஷனலாகவும் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவுதான்!

உங்களுடைய ‘சோர்ஸ்களை' எப்படிப் பிடிக்கிறீர்கள்?

ரொம்பவும் சிம்பிள்! நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். அது பி.ஆர்.ஓ. ஆக இருந்தாலும் சரி. பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஆனாலும் சரி. நம்முடைய ‘ஸ்டோரி' எவ்வளவு ஸ்ட்ராங் ஆக இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, நம்முடைய சோர்ஸ் எப்படியிருக்கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.

இன்றைக்கு ‘சோஷியல் மீடியா' ரொம்ப வலுவாக இருக்கிறதே. அது ‘மெயின்ஸ்ட்ரீம்' ஊடகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?

சோஷியல் மீடியாவால் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதே சமயம் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஒரு விஷயத்தைப் பதிவேற்றியவுடன் உடனே லைக்ஸ், கமென்ட்ஸ், ரீட்வீட்களை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் பிரபலமாக விரும்புகிறார்கள். நாம் பிரபலமாவதற்காகப் பிறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைய டி.வி. ‘ஆங்கரிங்' என்பது ஒரு நிகழ்த்துக் கலை போல ஆகிவிட்டதே...

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஒரே கூச்சல், விருந்தினர்களைப் பேசவே விடாமல் செய்வது...

என்னுடைய நிகழ்ச்சிகளில் நீங்கள் அதுபோன்ற விஷயங்களைப் பார்க்க முடியாது.

உங்கள் போட்டியாளர்கள்...

அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் அப்படிச் செய்வதில்லை! நமது அரசியல் கட்சிகள் நம் ஊடகங்களை அமெரிக்கத்தனமாக மாற்றிவிட்டன. ‘அமெரிக்கனை சேஷன் ஆஃப் மீடியா' என்று நான் சொல்வேன். ஒவ்வொரு அரசியல் கட்சியும் டி.வி.யில் தன் சார்பாகப் பேசுவதற்கு ஆட்களை வைத்திருக்கிறது. கட்சிகள் இன்றைய நாட்களில் அதிகளவு ‘மீடியா சென்ட்ரிக்' ஆக வளர்ந்துவிட்டன. ஆனால் குறைந்த அளவே ‘டெமாக்ரடிக்' ஆக இருக்கின்றன.

தமிழகத்தில் அரசால் தொடர்ந்து ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அப்படியா? அரசே அவதூறு வழக்குப் போடுகிறதா? அது மிகவும் தவறு. ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்வது அடிப்படைக் கருத்துரிமை. இதுபோல வழக்குகள் போடுவதால் ஊடகங்களை மவுனமாக்கிவிட முடியாது.

இந்தக் கேள்விக்கு நீங்கள் பலமுறை பதிலளித்திருப்பீர்கள். ஆனாலும் கேட்கிறேன். 2ஜி வழக்கில் உங்கள் பெயர் அடிபட்டதே?

எனது ஊடக வாழ்க்கையில் என்னை ரொம்பவும் காயப்படுத்திய விஷயம் அது. ஏனென்றால் அது என் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. மத வன்முறை, தீவிரவாதத் தாக்குதல் போல 2ஜி விஷயமும் எனக்கு ஒரு ‘ஸ்டோரி' தான். பி.ஆர்.ஓ.க்களிடம் எப்படிப் பேசுவோமோ அப்படித்தான் நீரா ராடியாவுடன் ஸ்பெக்ட்ரம் குறித்து சில தகவல்களைப் பெறுவதற்காகப் பேசினேன். மற்றவர்களைப் போல ராடியாவும் எனக்கு ஒரு ‘சோர்ஸ்' தான். மற்றபடி இன்று வரைக்கும் நான் ராசாவை நேரில் பார்த்ததில்லை.

வளரும் பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் ஒரு ரோல் மாடல். கிராமத்திலிருந்து வரும் பெண்கள், நகரத்திலிருந்து வரும் பெண்கள்... ஊடகத்தில் யாரால் அதிகம் பிரகாசிக்க முடியுமென்று கருதுகிறீர்கள்?

கிராமம், நகரம் என்பதெல்லாம் முக்கியமல்ல. திறமை இருந்தால் போதும். வேறு எந்த வித்தியாசமும் எடுபடாது! மற்றபடி, பர்கா தத்தைப் போல வரவேண்டுமென்று முயற்சிக்க வேண்டாம். ‘ஜஸ்ட் பீ யுவர்செல்ஃப்!' அதுதான் உங்களை வெற்றி பெற வைக்கும்.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நிகழ்வுகளை வடக்கத்திய ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே...

அது உண்மைதான்! இந்த விமர்சனத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அதான் பர்கா தத்!

நன்றி- திஇந்து
...மேலும்

Jan 21, 2016

போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்! - தலித் போராளிப் பெண்


தண்ணீரை டம்ளரில் குடிக்காமல், இரு கைகளை ஏந்தி குடிக்கணும்.

கஞ்சியை, பனை ஓலையில் ஊற்றி குடிக்கணும். 
போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்!

சொல்கிறார், ஜாதி, பெண் கொடுமைகளுக்கு எதிராக, 22 ஆண்டுகளாக போராடும் சந்தனமேரி அம்மா அவர்கள் போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்!

சொல்கிறார், ஜாதி, பெண் கொடுமைகளுக்கு எதிராக, 22 ஆண்டுகளாக போராடும் சந்தனமேரி அம்மா அவர்கள்.:

நான், பர்மா நாட்டிலிருந்து, தாயகமான, சிவகங்கையின் சூராணத்துக்கு, புலம் பெயர்ந்தவள். பிழைக்க வழியின்றி, வேலை தேடி அப்பா, அந்தமான் சென்றார். உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேரில், மூத்தவள் என்பதால், வயல் வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றினேன். வேலை செய்யும் இடத்தில், தண்ணீரை டம்ளரில் குடிக்காமல், இரு கைகளை ஏந்தி குடிக்கணும்.

கஞ்சியை, பனை ஓலையில் ஊற்றி குடிக்கணும். திருமணமாகி, ஜாதி வெறி நடைமுறைகள் அதிகமுள்ள, ஓரிக்கோட்டைக்கு வந்தேன். இங்கு, சாவுக்கான வேலையை, தலித் மக்கள், அடிமை போல் செய்தனர். சாவுக்கு வருபவர்கள் தரும் நெல்லையே, கூலியாக தருவர். திருமண வீட்டிலும், இதே நிலை. ஓலை பெட்டி, மண்பானையை எடுத்துச் சென்றால் தான், சோறு கொடுப்பர்; வீட்டிற்கு வந்தே சாப்பிடணும். காளையார்கோவிலில், உயர் வகுப்பை சேர்ந்தவர், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து, பெண்களை திரட்டி போராடினோம்; பலனில்லை. அதனால், இடதுசாரி கட்சியில் சேர்ந்தேன். இங்கு, ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகளை, எப்படி சரி செய்யலாம் என்ற புரிதல் கிடைத்தது.

தொண்டியில், தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை அடைக்கப்பட்டது. மக்களோடு போராடி, பாதையை திறந்தேன். கண்டதேவி தேரோட்டத்தில், தலித் பெண்களை தேர் இழுக்க வைத்தேன். "ஒரு தலித் பொம்பளை' என, ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்தேன். ஓரிக்கோட்டையில், தலித்கள் தற்போது, அடிமை வேலைகள் செய்வதில்லை. "உழைக்கும் பெண்கள் இயக்கம்' ஆரம்பித்தேன். ஜாதி, பெண் கொடுமைகளுக்கு எதிராக, 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

"உசுர பணையம் வச்சு, எமனோட போராடி,

செத்துப்போன சத்தியவான மீட்டுவந்தா சாவித்திரி...

செத்துப்போன சத்தியவான மீட்டுவந்தா சாவித்திரி.

சாவித்திரி செத்திருந்தா, பெண்ணினமே.....

அந்த சத்தியாவான் வேற பொண்ண பார்த்திருப்பான்...

அந்த சத்தியாவான் வேற பொண்ண பார்த்திருப்பான்.

கற்பு, கற்பு என்று சொல்லி கதையளக்கும் புராணங்களை,

கேட்டால் எனக்கு கோபம் வருதம்பா...

பெண்களை கேவலமா ஆக்கிபுட்டான் பாருங்கம்மா....,

பெண்களை கேவலமா ஆக்கிபுட்டான் பாருங்கம்மா"

நன்றி - முகநூலில் பகிர்ந்தவர் பாலசுப்ரமணியம் சரஸ்வதி
...மேலும்

Jan 16, 2016

கேள்வி கேட்கலாமா கூடாதா: இப்போதய கேள்வி இதுதான் - ரொமிலா தாபர்

 | தமிழாக்கம்: கொற்றவை


இந்த விரிவுரைக்காக ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பதென்பது சற்று சிரமமான காரியமாகவே இருந்தது. எல்லாரும் சொல்வது போல், நிகில் சக்ரவர்த்தி பன்முகம் கொண்ட ஒரு மனிதர். அன்பும் பாசமும் கொண்ட ஒரு நல்ல நண்பர், மக்கள் குறித்த ஆர்வத்தோடு, அரசியல் மற்றும் நாம் வாழும் உலகின் பொதுவான சூழல் பற்றிய ஆர்வம் மிக்கவர். எங்கள் இருவருக்கும் ஒரு சில விஷயங்கள் பொதுவானதாக இருந்தன – இருவருமே பத்ம விருதை மென்மையாக மறுத்தவர்கள். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அது தனது சுதந்திரத்தை பாதிக்கும் என்று நிகில் கருதினார், ஒரு கல்வியாளராக எனக்கும் அதே உணர்வு எழ, நானும் அதை மறுத்தேன். எப்போதாவது வெளியாகும் அரசியல் வதந்திகள் குறித்த நிகிலின் துணுக்குகளுக்காகக் காத்திருப்பது  வீணல்ல. நினைவுக் குறிப்புகள் வெள்ளமெனப் பெருக்கெடுத்தோடு இக்காலகட்டத்தில், ஒருவேளை நிகில் தன்னுடைய நினைவுக் குறிப்புகளை எழுதியிருந்தால், ஊடக உலகமே ஊதித் தள்ளியிருக்கும்.

பொது விஷயங்கள் குறித்த அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்கு நிகில் மதிப்பு கொடுத்தவர். சமூகம் மற்றும் அரசியலுக்கு இடையிலான சார்புத்தன்மை பற்றி கேள்வி கேட்பவர்களுக்கான ஒரு வெளியை அவர் எப்போதும் வழங்கினார். இன்றைக்கு அந்த வெளி சுருங்கி விட்டது, அறிவுசார் பண்பளவு குறுகிவிட்டது.  அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் மக்களிடையே தாக்கம் செலுத்தும் கருத்து சொல்லிகள் மத்தியில் பொது அறிவுஜீவிளுக்கு முன்பிருந்ததை விட தற்போது மதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலை உண்மைதானா அல்லது ஏன் இந்நிலை என்பது குறித்து பேசலாம் என்றிருக்கிறேன், நிகிலுக்கு பிடித்த ஒரு பேசுபொருளாகவும் இது இருக்கலாம். எத்தகைய சமூகத்தை நாம் வேண்டுகிறோம், ஏன் அதை வேண்டுகிறோம் எனும் அக்கறை காரணமாக இப்பேச்சு அவசியமாகின்றது.

பொது அறிவுஜீவிளின் இருப்பானது குறிப்பால் எதனை உணர்த்துகிறது என்பது பற்றிய எனது கருத்தினை இன்று நான் உங்களிடம் பகிரவிருக்கிறேன். ஒரு வரலற்றாசிரியராக, கடந்த காலத்திலிருந்து தொடங்குவது தவிர்க்கவியலாததாகிறது. ஆகவே, பொது அறிவுஜீவிளின் தோற்றத்திற்குப் பங்களித்த நவீன காலங்களின் சிந்தனை மரபுக்குத் தொடர்புடைய ஐரோப்பிய சிந்தனையாளர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டு நான் எனது உரையை தொடங்குகிறேன். அதன்பிறகு, இந்திய மரபில் அத்தகைய பாத்திரம் வகித்த சில சிந்தனையாளர்கள் பற்றியும் குறிப்பிடுகிறேன். இரண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லையென்றாலும், பலவகையில் அவை இணையொத்தவை. பின்னர் இறுதியாக, பொது அறிவுஜீவிளின் பாத்திரம் எத்தகையதாக இருக்கலாம், இன்றைய சமூகத்தில் அத்தகையோர் பற்றிய விழிப்புணர்வு ஏன் அதிகமிருக்க வேண்டும் என்பதை விளக்கவிருக்கிறேன்.

மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகள் மற்றும் சமூக நீதிக்கு முதன்மைத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சமூக செயல்பாடு தொடர்பான பிரச்சினைகள் மீது பொது அறிவுஜீவிள் அக்கறை கொள்கின்றனர். பிரச்சினைகளின் தளம் பரந்தது. அவற்றிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் கருத்தியவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதிகாரம் என்று நாம் எதைக் கருதுகிறோம் – அது மதமோ, அரசோ அல்லது விவாதத்திற்குறிய பிரச்சினைக்கு ஏற்ப ஏதோ ஒன்று, மேலும் அளிக்கப்பட்டிருக்கும் தெரிவுகளை  நாம் எப்படி மதிப்பிடுவது - என்பது முதல் கேள்வி. அறிவு மற்றும் அதன் பயன்பாட்டை நாம் எதைக் கொண்டு மதிப்பிடுவது? உதாரணமாக, நிலவும் வைதீக கருத்துகளையும், உறுதியாக நிலை நாட்டப்பட்டுவிட்ட அதிகாரங்களையும் எதிர்க்கும் புத்தறிவு என்று நாம் எதிர்பார்க்கலாமா? எதிர்ப்பை நாம் எப்படி சமாளிப்பது? பகுத்தறிவுடன் கூடிய தர்க்கவாதம் கொண்டு நம்மைச் சுற்றி உள்ள உலகம் பற்றியும், அதன் கடந்த காலம் பற்றியும் விளக்குவதை  அது முதன்மையில் சார்ந்திருக்கிறது. பகுத்தறிவை வலியுறுத்துவதன் மூலம் கற்பனை என்பது ஒருவகையான சிந்தித்தல் நடைமுறை என்று நான் விலக்கவில்லை, ஆனால் அதிலுள்ள வேறுபாடுகளைப் புறக்கணிக்க இயலாது.

அத்தகைய அக்கறைகள் ஒன்றும் சமீபத்தில் வெளிப்பட்டவை அல்ல. பழங்காலம் தொட்டே அவை நிலவி வந்தன, பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டு வந்திருக்கின்றன. சமூகத்தை கட்டமைப்பவர்களை நோக்கி இன்றைக்கு நாம் கேள்வி எழுப்பும் இந்த உரிமைக்கான அடித்தளத்தை கடந்தகாலம் தொடங்கி அமைத்துக் கொடுத்த ஒரு சிலர் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த காலங்களில், பகுத்தறிவுவாதத்திலிருந்தும், தர்க்கப்பூர்வ சிந்தனையிலிருந்துமே கேள்விகள் தோன்றலாயின, ஆனால் அவை மனித நிலைமைகளால் மட்டுப்படுத்தப்பட்டன. பூமியில் ஒரு மேலான சமூகத்திற்கென கற்பனை செய்யப்பட்ட ஒரு எதிர்காலத்தின் கதவுகளை அப்பதில்கள் மூடிவிடவில்லை மேலும் அவை, சொர்கத்திற்காகவோ அல்லது அடுத்த பிறவிக்காகவோ காத்திருக்கச் சொல்லவுமில்லை. ஐரோப்பாவில் அத்தகைய சிந்தனை மரபு இருந்தது. இந்தியாவில் அத்தகைய சிந்தனை மரபின் இருப்பானது பெரும்பாலும் நிராகரிக்கப்படுகிறது. அத்தைய நிராகரிப்பை நான் எதிர்க்கிறேன். வைதீகத்தையும், அதிகாரத்தையும் கேள்வி கேட்க சவாலுக்குறிய தருணங்கலிலாவது சமூகங்கள் அனுமதிக்க வேண்டும், இல்லையேல் அத்தகைய சமூகங்கள் வெகு சீக்கிரத்திலேயே தம் மரணத்தைத் தானே தேடிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

ஐரோப்பிய கடந்தகாலத்திற்கு திரும்புவோமானால், பொது அறிவுஜீவிளின் முன்னோடிகள் தத்துவார்த்த கேள்விகளில் ஈடுபட்டனர், ஆனால் அச்சிந்தனைகள் அரசியல் மட்டத்திலும் ஊடுருவின, பரிந்துரைக்கப்பட்ட சமூக செயல்பாடாகவும் பிரதிபலித்தன. சாக்ரட்டீஸ் போன்று துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோதும் அதிகாரத்தை விமர்சிக்கும் உரிமைக்காக அத்தகையோர் உரிமை கோரினர். கடவுளின் இருப்பை மறுத்ததற்காகவும், ஏதேனில் நிலவிய நீதி முறைகள் பற்றி விமர்சித்ததற்காகவும் ஏதேனிய கிரேக்கர்கள் அவரை எதிர்த்தனர். அதற்காக விஷத்தை குடிக்கும் தண்டனைக்குள்ளானர் சாக்கிரட்டீஸ்.

இருப்பினும், ஐரோப்பிய சிந்தனையின் முக்கிய இழை ஐந்தாம் நூற்றாண்டின் சாக்கிரட்டிய முறைக்கு நம்மை அழைத்துச் செல்லும். எந்தவொரு கூற்றும் பல கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டது, அதன் ஆக்கக்கூறுகளுக்குறிய தொடர்புகளை நுணுக்கிக் காணும் வகையில் பிரித்தாயப்பட்டது. பின்னர் அவை ஒரு கருதுகோளாக சாதாரணமாக இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. எதிர்தரப்பால் மாற்றீடாக முன்வைக்கப்படும் அறுதியுரையானது இயக்கவியல் ரீதியான ஒரு விவாதத்திற்கு வழிவகுக்கும். கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம சொற்பொழிவாளரான சிசேரோ, ஆளுநர்கள் சிலரின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர், எவற்றையெல்லாம் கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் நினைத்தாரோ அவற்றையெல்லாம் கேள்வி கேட்கும் உரிமைக்காகக் குரல் கொடுத்தார், அதற்காக தனது சட்ட அறிவைப் பயன்படுத்தினார்.

கி.பி.இரண்டாம் ஆயிரமாண்டில், கத்தோலிக தேவாலயமானது அரசர்கள் மீது அதிகாரம் செலுத்தியது. தொடர் வந்த காலத்தில் அந்த அதிகாரமும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அறிவொளி இயக்கம் என்ற  ஐரோப்பிய சிந்தனை மரபின் தோற்றத்திற்கு வித்திட்ட விவகாரங்களில் அதுவும் ஒன்று. நமக்குப் பரிச்சியமான சில தத்துவவாதிகள் – லாக்கே, ஹூம், வால்டேர், மாடெஸ்கியு, திதெரோ, ரூசோ மற்றும் பலர் – மரபார்ந்த அறிவையும், நடைமுறைகளையும் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர்களுக்குள்ளும், பிறருடனும் அவர்களுக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அதன் விமர்சனபூர்வ தர்க்கத்திற்காகவே அவர்களது கேள்விகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கத்தோலிக்க தேவாலயங்களின் ஏக அதிகாரங்களுக்கு எதிர்ப்பு என்னும் பொதுவான செயல்பாட்டிற்கு அப்பால், குறிப்பாக இன்றைக்கு நாம் சிவில் சமூகம் என்று சொல்லக்கூடிய சமூகத்தின் விவகாரங்களில் இத்தர்க்கவாதமே அவர்களை ஒன்றிணைத்தது. சிவில் சமூகம் என்பது மதச்சார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கியதாக தற்போது பார்க்கப்படுகிறது. அவற்றுள் சில அரசால் நடத்தப்படுகின்றன. மதரீதியான விலக்கலும், வெறுப்புணர்வும் பிற்போக்குத்தனமாகக் கருதப்பட்டன. சேர்த்துக்கொள்வதிலும், வேறுபாடுகளை சகித்துக்கொள்வதிலுமே முன்னேற்றமானது அடங்கியிருப்பதாக வாதிடப்பட்டது.

மத எதிர்ப்பு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் தேவாலயங்கள் விமர்சிக்கப்படவில்லை, மாறாக சமூக நிறுவனங்களான – குடும்பம், கல்வி, ஆட்சி முறை மற்றும் நீதித்துறை – ஆகியவற்றின் மீது சம்பிரதாய மதங்களுக்கு இருந்த அதிகாரத்திற்கு எதிர்ப்பாக அவை தோன்றின. அந்நிறுவனங்கள் பெற்றிருந்த புனித அங்கீகாரங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறாக, ஆட்சி முறைக்குறிய அதிகாரங்களுக்கான ஊற்று மக்களுக்கிடையிலான சமூக ஒப்பந்தம் என்று முழங்கப்பட்டது. மற்ற விஷயங்களுக்கப்பால், சமய நம்பிக்கையை மேற்கோள் காட்டுவதைக் காட்டிலும் தற்கவாத ஆய்வு வலியுறுத்தப்பட்டதால், சமூக செயல்பாட்டின் மூலவிசையை கண்டறிந்து, தேவைப்படும் இடங்களில் மாற்றங்களைப் பரிந்துரைப்பது எளிதாக இருந்தது.

இருப்பினும், ட்ரேஃபஸ் விவகாரம் என்று சொல்லக்கூடிய ஒன்றோடு தொடர்புடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தத்துவவாதிகளிலிருந்து மாறுபட்டவர்களான பொது அறிவுஜீவிள் என்போர் ஓர் அங்கிகரிக்கப்பட்ட பிரிவினராக உருவெடுத்தனர். ஃப்ரென்ச்சு இராணுவத்தில் காப்டனாகப் பணியாற்றிய யூதரான டிரேஃபஸ் என்பவர் ஜெர்மானியர்களுக்கு சில இரகசிய தகவல்களைக் கசிய விட்டதாக ஒரு தவறான குற்றச்சாட்டிற்குள்ளாகி, சிறைவைக்கப்பட்டார். அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்டு இராணுவத்தின் பொது அதிகாரிகளும் சேர்ந்து ட்ரேஃபஸை நியாயமின்றி தண்டித்துவிட்டதாக இச்செயலை எதிர்த்தவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். எமில் ஜோலாவால் எழுதப்பட்ட இந்த குற்றச்சாட்டிற்கு பெருமளவிலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வித்துறையினர் ஆகியோரின் ஆதரவு கிடைத்தது. அவர்கள் அனைவரும் ‘அறிவுஜீவிகள்’ என்று அழைக்கப்பட்டனர். இறுதியாக உணர்ச்சிபூர்வ அதேசமயம் செமிட்டிய எதிர்ப்பற்ற ஒரு விசாரனையின் மூலம் ட்ரேஃபஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு, மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இவ்வாறாக, ‘அறிவுஜீவி’ என்னும் சொல்லுக்குறிய பொருள் இக்கருத்தை ஒட்டி உருப்பெற்றது: ஒருவர் அறிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அறியப்பட்ட ஒரு தொழிற்முறை அந்தஸ்த்தில் இருப்பவராக, பொது நடவடிக்கைகள் பற்றி அதிகாரத்திடம் விளக்கம் கோருபவராக, ஒருவேளை அத்தகைய கேள்வி முறை அதிகாரத்தில் உள்ளோரையும், அதிகாரத்தையுமே விமர்சிப்பதாக இருப்பினும் கேள்வி கேட்பவர்.

சமூகத்தின் அறிவுஜீவி மரபு பற்றிய ஒரு திறனாய்வு இருப்பின் அத்தகைய கேள்விகள் இன்னும் எளிதாகத் தோன்றும். ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு முறைகளைக் கொண்டு வாதங்களை எழுப்புவதென்பது, ஒருவேளை வரலாற்றுச் சூழலானது கேள்வி கேட்பதற்கான முறைகளையே மாற்றியமைப்பினும், ஆதாரங்களை சரிபார்ப்பது, ஆய்வு செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். (சொல்லப்போனால், தற்போது இம்முறையானது விஞ்ஞானத்திற்கு மட்டுமின்றி சமூக விஞ்ஞானத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது, சமூக மற்றும் அரசியல் நிறுவனங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த அறிவார்ந்த விளக்கங்களை வழங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, வரலாற்று ஆய்விற்கு இம்முறை எல்லா நேரங்களிலும் வரவேற்கப்படுவதில்லை மேலும், மரபார்ந்த கண்ணோட்டங்கள் மீது இவ்வாறாக கேள்வி எழுப்பப்பட்டன.)

பகுத்தறிவுவாதம் என்னும் கருத்தேகூட கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பகுத்தறிவு மீதான ஒரு மேலதிக மதிப்பிடானது முழுமையான விளக்கங்களைக் கொடுக்கவல்லதல்ல என்றும், மேலும், அனைத்து விளக்கங்களும் – பகுத்தறிவுடன் கூடியதோ அல்லது மற்றதோ – இரண்டும் சாத்தியமானதே என்னும் வாதம் மூலம் அதன் மையத்தன்மை கேள்விக்குள்ளானது. பகுத்தறிவு சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட விமர்சகர்கள் ஆதாரங்களைப் பொறுத்தும், சாதாரண விளக்கங்களில் உள்ளார்ந்த தர்க்கவியலைப் பொறுத்தும் பன்முகப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இருப்பினும், பகுத்தறிவு திறனாய்வு என்னும் மரபுத்தொடர் வரலாற்றுச் சூழல்களில் மாறுபட்டாலும், பகுத்தறிவு திறனாய்வு என்பது தன்னளவில் எப்போதும் தொடர்கிறது, தொடரவும்கூடியது.

நாம் இடைக்காலத்தவரல்லர்அல்லது நிலப்பிரபுத்துவ பண்புகளற்ற சமூகத்தவர் என்று சொல்லிக்கொள்ளத்தக்க தாரளவாத மதிப்பீடுகள் மற்றும் ஜனநாயகம் போன்ற நவீன சிந்தனைகளின் வேர்கள், தத்துவவாதிகள் மற்றும் இதரர்களுக்கிடையில் நடந்த விவாதங்களுக்கே நம்மை இட்டுச் செல்லும். மேலும், அவ்விவாதங்கள் ஐரோப்பாவிற்குள்ளாக மட்டும் நடக்கவில்லை, ஏனென்றால் காலனியத்தின் முதுகில் ஏறிக் கொண்டு உலகின் மற்ற பகுதிகளில் இச்சிந்தனைகள் சவாரி செய்தபோது அவை ஏற்பையும் எதிர்ப்பையும் பெற்றன.

நிலவும் சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளை எதிர்த்து மாற்றத்திற்காக பகுத்தறிவையும், தர்க்கபூர்வமான விளக்கங்களையும் வலியுறுத்திய நபர்கள் சிலர் பற்றி சொல்வதற்காக இப்போது நான் இந்திய மரபிற்குத் திரும்புகிறேன். நமது மூதாதையர்களுக்கு அறிவின் திறவுகோலாக பகுத்தறிவின் தேவை இருக்கவில்லை என்னும் கோட்பாடு நம்மில் ஆழமாக பதியவைக்கப்பட்டுவிட்டது, அதனால் பகுத்தறிவு சிந்தனையில் நமது பாரம்பரியத்தை நாம் புறக்கணித்துவிடுகிறோம். கேள்விகளை ஊக்குவித்து, காரண காரியங்களைப் பரிசோதித்து, பகுத்தறிவுடன் கூடிய விளக்கங்களை ஊக்குவித்த இந்திய தத்துவவாதிகள் சாக்கிரட்டீஸுக்கு சமகாலத்தவரக, ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு கண்டங்களில் வாழ்ந்தவர்கள், மற்றவர்களோடு எந்தத் தொடர்புமற்றவர்கள். ஆம்! நான் புத்தரைத்தான் குறிப்பிடுகிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் விஷம் குடிக்க நேரவில்லை, ஆனால் அவரது போதனைகள் தொடக்ககால வைதீக பிராமணியத்தின் பலமான எதிர்ப்பை சந்தித்தது. அவரது தத்துவங்கள் மாயை என்றும் தவறாக வழிநடத்துவதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் பௌத்தம் மெல்ல மெல்ல துடைத்தெறியப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. அண்டை நாடுகளில் பரவி செழித்து வளர்ந்தது. ஆனால், சில இடங்களில் அதுவே வைதீகமாகிப் போனது.

சிந்தனைகளின் வரலாற்றில் சுவாரசியமானதொரு அம்சம் என்னவென்றால், தங்களின் பரிணாம வடிவங்கள் குறித்து பல்வேறு வகைகளில் சமூகங்கள் சொல்லும் விளக்கங்கள்தான். அரசாங்கத்தின் தோற்றம் குறித்து புத்தரிடம் கேட்கப்பட்டபோது, ஆதிகாலத்தில் எல்லாரும் சமமாக வாழ்ந்தார்கள், அனைத்து வளங்களுக்கும் சமமான அதிகாரம் இருந்த அசலான யுடோப்பிய நிலை இருந்தது. குடும்பங்கள் எல்லை பிரிக்கப்பட்டபோது முதல் மாற்றம் ஏற்பட்டது, அவை சமூக அலகுகளாயின.  அதனைத் தொடர்ந்து தனியுடைமையாக நில உடமை முறை தோன்றியது. இம்மாற்றங்கள் குழப்பங்களையும், மோதலையும் விளைவித்தன. அதனால், மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி, தங்களை ஆளவும், குழப்பங்களுக்கு தீர்வாக அமையும் சட்டங்களை வகுக்கவும் - தங்களுக்குள் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்தான் மஹாசம்மட், மாபெரும் தலைவர். பயனளிக்கக்கூடிய வகையில், அது ஒரு சமூக ஒப்பந்தம் ஆகும்.  ஆனால் ஒரு விஷயம், ழான் ஜேக் ரூசோவோ அல்லது ஃப்ரெட்ரிக் எங்கல்ஸோ பௌத்த நூல்களைப் படித்திருக்கவில்லை!

இந்த பௌத்த விளக்கங்கள் பிராமணியத்தின் பல கதையாடல்களுக்கு முரணாக இருந்தன. அவற்றுள், கடவுளருக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போர் கதைகளும் அடக்கம், கடவுளர்கள் தோற்கும் நிலையில் இருந்ததால் அவர்கள் பிரஜாபதியிடம் உதவி கேட்டார்கள். சில கதைகளில், கடவுளருக்கு வெற்றி கிட்ட பிரஜாபதி தனது மகன் இந்திரனை நியமித்தான் – ஆட்சி முறைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.  தெய்வங்களிடம் முறையிடுவதும், புனித ஆணைகளும் அவசியமானது. மேலும், அதிகார மனவோட்டத்திற்கு அது சாயம் பூசுகிறது. ‘மாபெரும் தலைவர்’ என்னும் புத்தரின் கருத்தானது ஒருவகையில், அரசன் என்பதன் தலைகீழ் வடிவம் – தெய்வீகராக நியமிக்கப்படுகிறார், அவருள் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. இரண்டு தொன்மங்களிலும் உள்ள அனுமானங்கள் மாறுபட்டவை.

இந்த தொடக்ககால நூல்களில் மதம் என்று குறிப்பிடப்படும்போது, இந்து மதம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை – வெகு காலத்திற்கு பின்னரே அப்பதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் பல சமயங்கள் அதனதன் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. பொதுவாக குறிக்கப்படும்போது அவை பெரும்பாலும் இந்த இரண்டு பிரிவின் கீழ் வந்தன: பிராமணியம் – பிராமணிய நம்பிக்கைகளோடு தொடர்புடையது – ஷ்ராமணியம் – பௌத்த மற்றும் ஜைன போதனைகளைக் குறிக்கிறது. (பௌத்த பிக்‌ஷுக்கள் ஷ்ராமணர்கள் என்றழைக்கப்பட்டார்கள்). பல்லாயிரம் வருடங்களாக, கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகரின் அரசாணைகள் தொட்டு கி.பி. 11ஆம் நூற்றாண்டில், அல் பிருனியின் இந்தியா பற்றிய குறிப்புகள் வரை அனைத்திலும் மதங்கள் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளன.  முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய பதஞ்சலி என்னும் சமஸ்கிருத இலக்கணவியலாளர் அவ்விரண்டையும் பாம்பிற்கும், கீரிக்கும் ஒப்பிட்டுப் பேசும்போது கூடுதலாக ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறார். தெளிவாக, எந்த ஒன்றையும் கேள்வியின்றி நம்பும் ஒரு சிலர் ஒருபுறமும், கேள்வி கேட்பவர் மறுபுறமும் இருக்குமொரு சமுதாயத்தில் அவ்விவாதங்கள் நிச்சயம் கடும் குரோதமுடையதாகவே இருந்திருக்கும்.

அதன் பிறகு உலகாயதர்கள் என்றழைக்கப்பட்ட சார்வார்கர்கள் இருந்தனர். வாழ்வு குறித்த பொருள்முதல்வாத பார்வை கொண்டவர்களான அவர்கள் பெருமாலான தத்துவ மரபுகளை எதிர்த்தனர், மற்ற எந்த சிந்தனைகளுக்கும் துளி அளவு இடமும் அளிக்க மறுத்தனர். அவர்களின் அனைத்து நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன, ஆனால் பல அறியப்பட்ட நூல்களில் அங்குமிங்கும் அவர்கள் மேற்கோள் காட்டப்படுகின்றனர்.  இப்பிரிவுகள் சிலவற்றின் வாதங்களைப் புத்தர் ‘விலாங்கு மீனைப் போன்று நழுவுதல்’ என்று கூறுகிறார்.

கிறுத்தவ சகாப்தத்தின் தொடக்ககாலத்தில் பௌத்த மதமானது அரசு, வணிகர்கள் மற்றும் நில உடமையாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அப்போது வெளியான முக்கியமான சில பிராமண நூல்கள் பௌத்தர்களை மத எதிர்ப்பாளர்கள் என்றதோடு நாத்திகர்கள் – கடவுள் மறுப்பாளர்கள் என்றும் குறிப்பிட்டன. பிராமணிய கண்ணோட்டத்தின்படி ஷ்ராமணர்கள், சார்வாகர்கள், அஜீவிகர்கள், கடவுள் மறுப்பாளர்கள், பொருள்முதல்வாதிகள் மற்றும் பகுத்தறிவுவாதிகள் என அனைவரும் நாத்திகர்கள் என்றே ஒன்றாக முத்திரை குத்தப்பட்டனர்.  கடவுள் மறுப்பு, அதனையொட்டி வேதம் என்பது தெய்வீக வெளிப்பாடு என்னும் மறுப்பு; சாதிய நடைமுறைக்கு எதிர்ப்பு மற்றும் கர்ம வினை பற்றிய அவர்களது கருத்தும் மாறுபட்டது, சிலர் அதை முற்றிலுமாக மறுத்தனர். (நம்முடைய காலத்தின் இந்துத்துவா ஆதரவாளர்களின் நினைவு வருகிறது.  அவர்களை எதிர்ப்பவர் எவராயிருப்பினும் அனைவரும் மார்க்சியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர்!  ஆர்வமூட்டும் வகையில் இப்போதெல்லாம், அடிப்படைவாத இசுலாமியர்கள் தங்கள் மதத்தின் வைதீகத் தன்மையை எதிர்க்கும் தாராளவாத இசுலாமியர்களைக்கூட மார்க்சியர்கள் என்றழைப்பதாகக் கேள்வி!)

மத எதிர்ப்பாளர்களைக் கண்டு மநு சாஸ்திரமோ கிட்டத்திட்ட அஞ்சி நடுங்குகிறது, அவர்களை நாத்திகர்கள், பொய்யான போதனைகளை வழங்குபவர்கள் என்றழைக்கிறது. அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள், தமஸின், அதாவது இருண்மையின் தோற்றுவாய் என்கிறது. எதுவாகினும், மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி வந்த தத்துவ சிந்தனைகள் பல நாத்திக கருத்தையும் உள்ளடக்கி இருந்ததால் வைதீகத்திற்கு அது சவாலான காலகட்டமாகவே இருந்தது. ஆனால் அறிபூர்வமான வகையில் அதுவே ஓர் உற்சாகமான காலகட்டமாகும்.

எங்கெல்லாம் கடவுள் மறுப்பாளர்களுக்கு அதிக ஆதரவு இருந்ததோ, அங்கெல்லாம் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டனர்.  ஆரம்பகால நூற்றாண்டின் விஷ்னு புராணத்தில் மாயமோகி என்னும் நபர் பற்றியும், அவரது ஆதரவாளர்கள் பற்றிய எதிர்மறை குறிப்புகளும் நிறைந்திருக்கும். பெயரே குறிப்பது போல் மாயை மற்றும் வஞ்சனை  – இதுவே அக்குழுவின் குணாதிசயங்கள்.  அனைத்து தீய சக்திகளையும் – அசுரர்கள் மற்றும் தைத்தியர்களை – மாயமோகி ஒன்று திரட்டுகிறான், தன் சிந்தனைகளை போதித்து அவர்களை மாற்றிவிடுகிறான். சிவப்பு அங்கி உடுத்துவது, தலைமுடியை மழிப்பது, சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாமை, பிச்சை எடுத்து உண்பது ஆகிய குறிப்புகள் வழி அவர்கள் பௌத்தர்கள் மற்றும் ஜைனர்கள் என்று உணர்த்தப்படுகிறது. அவர்களுடனான சொல்லாடல்கள் (discourse) அனுமதிக்கப்படவில்லை, ஏனென்றால் அது தீட்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வாதங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும், ஆங்காங்கே சில குறிப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அதேவேளை கண்கூடாகத் தெரியும் அளவுக்கு இல்லையென்றாலும், இவ்விவாதப்பரப்பின் ஓர் அங்கமாக சார்வார்கர்கள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றனர். ஆன்மாவுக்கெதிராக பருப்பொருளின் முதன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் அவர்களின் கோட்பாடு பற்றி 9ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் குறிப்பிடுகிறார். பதிநான்காம் நூற்றாட்டில், சர்வதர்ஷன சங்கிரகம் என்று மாதவாச்சாரியாரால் ஒன்றிணைக்கப்பட்ட பிரதான தத்துவார்த்த மரபுகள் பற்றிய விவாதமானது, சார்வாக சிந்தனைகளின் சாத்தியப்பாடுகள் குறித்த ஒரு நீண்ட விவாதத்தோடு தொடங்குகிறது.  இறுதியில் அவர் அதை நிராகரித்திருந்தாலும், மிக நீளமாகவே அதுபற்றி விவாதிக்கிறார். சார்வாக சிந்தனைகளுக்கு பெரும் தாக்கம் இருக்கவில்லையென்றால், நிச்சயம் அது எளிதாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கும். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் காலனிய கல்வியின் விளைவாக, இந்திய நாகரீகத்தில் பகுத்தறிவு சிந்தனைகளே இல்லை என்றும் இந்தியாவின் பின் தங்கிய நிலைக்கு அதுவே காரணம் என்பதுபோன்ற பிம்பங்கள் சில காலனிய எழுத்தாளர்களின் வாதங்கள் மூலம் அரங்கேற்றப்பட்டன. தேசியவாத சிந்தனையாளர்களால் ஏற்றுக்கொள்ளவியலாத வாதமாக இது இருந்தபோதும், குறிப்பிடத்தக்க வகையில் இந்திய அறிஞர்களின் எதிர்ப்பை நாம் எங்கும் காண முடியவில்லை.  எந்தவொரு எதேச்சிகாரத்திற்கும் கேள்வி கேட்பவர்கள் விரும்பத்தகாதவர்கள். அதேபோல், இந்துத்துவம் என்னும் ஒற்றை தேசிய அடையாளத்தை கட்டமைக்க நினைத்தவர்கள் பிராமணியத்திற்கு எதிரான போதனைகளுக்கு இடமளித்திருக்க மாட்டார்கள்.

கடவுள் மறுப்பாளர்கள் வைதீகத்தால் நிராகரிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களுடைய சிந்தனைகள், மற்றும் அதையொத்த சிந்தனைகள் நூற்றாண்டின் தொடக்ககால தத்துவார்த்தப் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வாளர்கள் மட்டத்தில், புலமை வாய்ந்த பிராமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்கிடையில் நடந்த விவாதங்கள் ஈர்க்கக்கூடிய பல தத்துவார்த்தப் பள்ளிகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தன. தர்க்கம் மற்றும் காரண காரியம் பற்றிய விவாதங்களுக்கான வழிமுறைகளோடு கருத்துமுதல்வாதத்திற்கு ஆதரவான மற்ற தத்துவ முறைகளும் கூர்தீட்டப்பட்டன. அக்காலகட்டத்தில் முக்கிய தர்க்கவாதிகளாக இருந்த நாகார்ஜுனர், வசுபந்து, திக்நகர், தர்மகீர்த்தி போன்றோர் பெரும்பாலும் பௌத்தர்களாக இருந்தனர், அவர்களில் சிலர் பிராமணர்களாக பிறந்து, அக்கல்வியைப் பெற்றிருந்தாலும், பௌத்தர்களாகவே இருக்க விரும்பினர். கருத்துமுதல்வாதத்தை அவர்கள் நையாண்டி செய்தனர், குறிப்பாக நாத்திகத்தின் நுணுக்கங்கள் பற்றிய விவாதத்தின்போது. ஒத்த கருத்துகள் இருக்கவில்லை. மேலும் விவாதங்கள் பரவலாக நடந்தன, சில நேரங்களில் அவ்விவாதங்கள் இயக்கவியல் வடிவம் பெற்றன.

இவ்விவாதங்களுள், பகுத்தறிவு சிந்தனைக்கு மிக நெருக்கமாகத் திகழும் வானவியலாளர்கள் அல்லது கணிதவியலாளர்கள் ஆகியோருக்கும் தத்துவவாதிகளுக்கும் இடையில் விமர்சனபூர்வமான பகுத்தறிவுடன் நடந்த விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்த அறிவார்ந்த வாதங்களாக இருந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை காணக்கிடைப்பதில்லை. கணிதவியல் கணக்கீட்டின் அடிப்படையில் பூமி சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று வாதம் செய்தார் ஆர்யபட்டர். அவருடைய இந்தக் கோட்பாடு காப்பர்னிக்கஸ் மற்றும் கலிலியோ ஆகியோரின் கோட்பாடுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. ஐரோப்பாவில் இச்சிந்தனைகளின் வீரியத்தைக் கண்டு பைபிளை குறைத்து மதிப்பிடுவதாகவும் அதனால் சமூகத்தின் மீதான தமது ஆதிக்கத்திற்கு ஆபத்து நேரும் எனவும் கத்தோலிக்க வைதீகங்கள் அஞ்சின.  கலிலியோ தனது கண்டுபிடிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. சூரிய மைய மாதிரியைப் பற்றி இந்தியாவில் விவாதங்கள் நடந்தன, ஆனால் அவை பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை, ஒருவேளை இங்கு தேவாலயங்கள் இல்லாதிருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு வேறொரு காரணமும் தோன்றுகிறது, சூரிய மண்டல அமைப்பை ஏற்றுக்கொண்டால் ஜோதிடக் கணக்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இராஜாங்கங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாக ஜோதிடத்தை வைதீகங்கள் பயன்படுத்தி வந்தன. இவ்வாறாக பெரும்பாலான இடங்களில் பண்டைய ஞானம் தங்குதடையின்றி தொடர்ந்தன. இந்தியாவின் கணக்குக் கோட்பாடுகளும், ஜோதிடமும் தங்களளவில் படைப்பாற்றலுடன் வளர்ந்தன, ஆனால் முரண் என்னவெனில், பாக்தாத்தில் இருந்த அப்போதைய மூலமுதல் அறிவியல் (protoscience) மையத்தில் ஆய்வுப் பொருளானபோது அவை மேலும் செல்வாக்கு பெற்றன.

இதற்கிடையில், இந்தியாவில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதற்கான வெளியை மற்ற சமயப் பிரிவுகள் வழங்கின. மத அதிகாரங்கள் மற்றும் ஆள்பவர்கள் அல்லது இதர வைதீகங்கள் உயர்த்திப்பிடித்த நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுள் ஆண்டாள், அக்கம்மா மஹாதேவி மற்றும் மீரா ஆகிய சில பெண்களும் அடக்கம். சாதி விதிமுறைகளைப் புறக்கணித்து தனியொரு சமூக விதிகளைப் படைத்த அவர்களை வெகுவான மக்கள் கூர்ந்து கவனித்தனர். ஆனால் அவர்களின் படைப்புகளுக்கு மதரீதியாக அதிக கவனத்தைக் கொடுத்து அவர்களின் சொல்லாடகளிலுள்ள மேற்சொன்ன அம்சங்களை நாம் அரிதாகவே கவனிக்கின்றோம்.

அமீர் குஸ்ரௌவை தில்லி சுல்தான்கள் அறிந்திருக்கவில்லை. பதினான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட துக்ளக்-நாமாவில், பாரம்பரிய வரலாற்று வடிவத்தில் அரசவை அரசியல் குறித்த கவித்துவமான பார்வையை அவர் வழங்கியுள்ளார். சூரிய வட்டத்தை மையப்படுதியே அவர் தனது வானவியல் ஆய்வுகளை முன்வைத்தார். ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை கேள்வி கேட்பதாக அது கருதப்பட்டதால் வைதீக இஸ்லாத்திலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். குஸ்ரௌ அரசவைக் கவியாக இருந்தபோதும், அவரை எதிர்ப்பது சரியாகாது என்று சுல்தான்களும், வைதீகர்களும் நினைக்கும் அளவுக்கு அவருடைய கவிதைகளும், இசைக் குறிப்புகளும் அவருக்கென ஒரு அந்தஸ்தையும், ஆதரவையும் பெற்றுத்தந்தன. குஸ்ரௌவின் வழிகாட்டியும், நண்பருமான நிஜாமுதின் ஆலியா எனும் சிஷ்டி பிரிவைச் சேர்ந்த ஒரு சூஃபி சுல்தான்களிடம் இருந்து விலகி இருந்தார், அதை அவர் மற்றவர்களுக்கும் வலியுறுத்தினார்.

சில நூற்றாண்டுகள் கழித்து சம்பிரதாய மதங்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை மஹாராஷ்டிரத்தில் வாழ்ந்த ஏக்நாத் என்பவர் கேள்வி கேட்டார். அவர் எழுதிய பாகவதப் புராணம் மற்றும் ராமாயணம் ஆகியவை அவருடைய பிராமணியப் புலமையை பறைசாற்றவல்லது. சமூக ஒழுங்கையும், சாதி நடைமுறைகளையும் கேள்வி கேட்க அது ஒரு தடையாக இருக்கவில்லை.

புதிய வழிபாட்டு வடிவங்களை போதித்த அனைவரும் அதிகாரங்களைக் கேள்வி கேட்கவில்லை, ஆனால் அப்படி கேள்வி கேட்டவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். இதை செய்ய நாம் தயங்கி வந்துள்ளோம், ஏனென்றால், கடந்த காலங்களில் சமூக கருத்துரைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. சமய நம்பிக்கைகள் மற்றும் வழிபாடுகள் பற்றிய அத்தைகையோரது கருத்துகளைத் தவிர மற்ற பேச்சுகளை நாம் எளிதாகப் புறம் தள்ளி விடுகிறோம், மத நம்பிக்கைகள் ஒன்றும் அனைத்தையும் உள்ளடக்கியதல்ல, அவை வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பேசும் ஒன்றல்ல என்று எண்ணிக்கொள்கிறோம். ஆதலால், முதன்மையில் மத ஆசிரியர்களாக இருந்தவர்கள்கூட சமூகம் மற்றும் சமூக மதிப்பீடுகள் பற்றி கருத்துகளை வெளிப்படுத்தி வந்தனர். அக்கருத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானவை, குறிப்பாக பரந்த அளவிலான ஆதாரங்களைக் கொண்டு மதப் பிரிவுகள் சிந்தனைகளை உட்புகுத்தி வந்த காலகட்டமது.

நவீன காலத்திற்கு திரும்புவோமேயானால், தேசியம் எனும் கருத்தியல் சமூக ஒழுங்கை மறு கட்டமைப்பு செய்ய முயற்சித்தன. தேசியவாதமானது காலனியத்தை எதிர்த்திருக்கலாம், ஆனால் காலனிய ஆய்வுகளிலிருந்து கோட்பாடுகளை ஏடுத்தாளத் தயங்கவில்லை. இந்து மதத்தின் மேல்சாதியைச் சார்ந்த சமூக சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் போன்றவை புதிய வடிவிலான இந்து மத ஒழுங்குகளையும், சாதிய பாத்திரத்தையும் பரிந்துரைத்தன. ராஜா ராம் மோகன் ராய் பற்றியும், அவரது சமூக-மத சீர்திருத்தங்கள் பற்றியும் நாம் அறிந்தவர்களே, ஆனால் அவருடைய சமகாலத்தவரான செர்ஃபோஜி II, தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய குறுநில மன்னர் பற்றி குறைவாகவே நமக்குத் தெரியும்.  கல்வி முறையின் மீது கவனம் செலுத்தியதன் மூலம் அவர் வைதீகத்தை நோக்கி கேள்வி எழுப்பினார். அறிவொளி சிந்தனையாளர்களின் எழுத்துக்களைப் படித்ததன் மூலம், அறிவென்பது பகுத்தறிவின் நடைமுறையைச் சார்ந்திருக்கிறது, மேலும், அவை கல்வியின் மூலமே கற்பிக்கப்படுகின்றன என்று நம்பினார். அவர் தோற்றுவித்தப் பள்ளிகள் இக்குறிக்கோளை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே.  சரஸ்வதி மஹால் நூலகத்திற்காக அவர் சேகரித்த புத்தகங்கள், பொருள்கள் ஆகியவையும் அந்நோக்கத்திற்கானவையே.

அறிவு மரபை விமர்சனபூர்வமாகக் கேள்வி கேட்பதற்காக இவ்வியக்கங்கள் உருவாக்கப்படவில்லை என்றாலும், அவ்வப்போது அவை மேல்மட்டத்தை உரசிப் பார்த்தன. சாதியப் படிநிலையின் கருவானது மதத்தால் சட்டபூர்வமாக்கப்பட்ட நிலையிலும், சாதிக்கும் மதத்திற்கும் இடையிலான தொடர்பு பெரிதாக ஆய்வு செய்யப்படவில்லை. தங்கள் தாயகமான இந்தியா திரும்புவதற்காக ஆரியர்கள் ஆர்க்டிக் கண்டம் கடந்து வரவேண்டியிருந்தது என்னும் தனது கருத்திற்கப்பாலும் ஆரியர்கள் வேய்த இந்திய நாகரீகத்தையும், மேல் சாதி கலாச்சாரத்தையும் 19ஆம் நூற்றாண்டுகளில், பால கங்காதர திலகர்ஆதரித்தார். ஆனால் ஜோதிபா பூலேவோ ஆரியர்களின் வருகையை கீழ் சாதியினரின் ஒடுக்குமுறைக்கான தர்க்கபூர்வ விளக்கக் காரணமாகப் பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, சூத்திரர்கள் எனப்பட்ட சுதேசிகளான பூர்வ பழங்குடிகளை ஒடுக்கிய பிராமணர்களே ஆரியர்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வையை திலகர் விரிவுபடுத்திப் பேசினார், ஆனால் பூலேவோ நிலவும் சமூகத்தை விளக்குவதற்காக அவற்றைக் கொண்டு கேள்வி எழுப்பினார். இரண்டு பார்வைகளுமே வரலாற்றுபூர்வமாக தவறானது, ஆனால் முக்கியமானது என்னவெனில், பூலே ஆழமான கேள்விகள் எழுப்பினார் என்பதே ஆகும்

பிராமணிய நம்பிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து சாதிய அதிகாரத்தை கேள்விகேட்டவர்களின் பட்டியல் இன்னும் இருக்கிறது. பெரியார் அல்லது ஈ.வே.ரா, கல்வியாளர் இல்லையென்றாலும், நிறைய கற்றரிந்தவராக அறியப்பட்டவர். அவருடைய கல்வித்துறை சகாக்களும் அப்படியே. இந்து தொன்மங்களில் காணப்பட்ட முரண்களைப் பெரியார் தீவிரமாக விமர்சித்தார், ஒரு பகுத்தறிவாளராக, அவை யாவும் இந்தோ ஆரிய மக்களின் புனைவாக்கம் என்று அத்தொன்மங்களை நிராகரித்தார். சமூக சமத்துவத்திற்கு ஆதரவான, குறிப்பாக பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

நான் இங்கே குறிப்பிட்ட நபர்கள் யாரும் நவீன பொருளில் பொது அறிவுஜீவிள் அல்ல. மேலான ஒரு சமூகத்தை அடைவதற்காக நடைமுறை யதார்த்தத்தை கேள்வி கேட்டவர்கள். அவரவர் தொழில்முறையின் அடிப்படையில் பெற்ற மதிப்பின் காரணமாக அச்சிந்தனையாளர்களின் பேச்சுக்களை மக்கள் பொருட்படுத்தினார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளோ அல்லது அவற்றின் ஒத்த தன்மையோ அல்ல விஷயம், மாறாக காலத்துறிய பிரச்சினைக்கேற்ப கேள்விகளின் தன்மை மாறியபோதும் ஒவ்வொன்றையும் அவர்கள் பகுத்தாய்ந்ததே விஷயம். அக்கேள்விகள் ஏதும் தன்னிச்சையானவையல்ல. முறையான விமர்சனபூர்வ பகுத்தறிவினால் வழிநடத்தப்பட்டவை.  மேலும், கேள்வி கேட்பவர்கள் முக்கியமான வரலாற்றுரீதியான மாற்றங்கள் உருவான தருணங்களில் தீர்க்கமாக குரல் எழுப்பியவர்கள், எழுப்புபவர்கள்.

வரலாற்றில் மாற்றம் ஏற்பட்ட தருணங்களும், சமூகத்தை புதுவிதமாக ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டடைவதும் இந்தியாவில் முன்னும் பின்னும் நடந்த வண்ணமே இருந்திருக்கிறது. சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளையும் சமூகத்திற்கு அவை எங்கணம் வடிவம் கொடுக்கின்றன என்பதையும் புரிந்துகொள்வதற்கு ஆக்கப்பூர்வமான முறைகள் நம்மிடையே இப்போது உள்ளன. அவற்றுக்கிடையிலான தொடர்பு ஆய்வு செய்யப்பட வேண்டியவை. அத்தகைய ஆய்வுகளைச் செய்ய கவனிக்கத்தக்கப் பாத்திரமாற்றும் பொது அறிவுஜீவிள் தேவை: அதுமட்டுமின்றி, நம்முடைய அறிவு மரபில் உள்ள பகுத்தறிவு சிந்தனை மரபுகள் பற்றி எடுத்துரைக்கவும் அவர்கள் தேவை. ஆனால், இப்போக்கு தற்போது மெல்ல அழிந்து வருகிறது.

காலனிய எதிர்ப்பிற்காக தோன்றிய மைய நீரோட்ட இந்திய தேசியவாதமும், தாராளவாத ஜனநாயகத்தின் தோற்றமும், மதச்சார்பற்ற இயக்கங்களாக இருக்கும் நோக்கோடு பொது அறிவுஜீவிளின் செயல்பாடுகள் கண்கூடத் தெரிவதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுத்தன. நிறைய பேர் அறிவுஜீவி பாத்திரத்தைப் பூண்டனர், குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னர். பரந்தளவிலான விவாதங்களை அவர்கள் நடத்தினார்கள். பிந்தைய சம்பவங்கள், அது அவசர காலகட்டமோ அல்லது குறிப்பிட்ட மதத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையோ, அத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடப்பதை தடுக்கும் விதமாக பொது அறிவுஜீவிளின் தேவை பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகரித்தது. நிகில் சக்கிரவர்த்தி, ரொமேஷ் தாபர் மற்றும் பலர் தணிக்கை வடிவங்களையும், மாற்றுக் குரல்களை நசுக்குவதற்கான முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தனர்.

இன்றைக்கு, பல்வேறு துறைகளில் நிபுனர்கள் பலர் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் பெரும்பாலும் தம் துறைக்கப்பால் இருக்கும் வெளி உலகம் பற்றிய பிரக்ஞை இன்றி இருக்கின்றனர். சில வேளைகளில் அந்நிபுணர்கள் பொது அறிவுஜீவிளுக்கு மாற்றாக கருதப்படுகின்றனர். ஆனால் இரு தரப்பினரும் ஒன்றல்ல. முன்பைக் காட்டிலும் இப்போது பல கல்வியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதிகாரத்தை எதிர்க்கத் தயங்குகிறார்கள், இது சுதந்திர சிந்தனைக்கு எதிரானது என்றாலும், அவர்கள் எதிர்ப்புக்கு அஞ்சுகின்றனர். ஏனென்றால் அவர்கள் தொல்லைகளின்றி அறிவை முன்னெடுக்க விரும்புகிறார்கள், அல்லது அதிகாரத்தின் ஆணைக்குட்பட்டு அறிவை துறக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

பொது அறிவுஜீவிகளின் பாத்திரத்தை விளக்கி நிறைய எழுதப்பட்டுள்ளன. அத்தகைய நபர் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்கின்றி சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கருதப்படுகிறார். மேலும், எவரின் பிரச்சாரமாக இருப்பினும் எல்லாவற்றையும் பற்றிய கருத்துரீதியான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். பகுத்தறிவுடன் கூடிய விமர்சனங்களே அவசியமான தொடக்கப்புள்ளி. ஒரு பொது அறிவுஜீவி என்பவர் தன்னை ஒரு சுதந்திரமான நபராகவும், அதற்கும் மேலாக மற்றவரின் பார்வைக்கு அப்படிப்பட்டவராகவும் திகழ வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்முறை அந்தஸ்த்தானது ஒருவர் சுதந்திரமாக செயல்படுவதை எளிதாக்குகிறது. அத்தகைய அந்தஸ்தில் இன்றைய பொது அறிவுஜீவிகள் இருப்பதோடு, குடிமக்களின் உரிமைகள் யாவை, குறிப்பாக சமூக நீதிக்கான பிரச்சினைகள் பற்றிய அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர். மேலும், இவ்விவகாரங்களை பொதுக்கொள்கை பிரச்சினையாக எழுப்பும் ஒரு எத்தனமும் அவர்களிடம் இருக்கிறது.

சமூகத்திற்காகப் பேசுவதும் அதை பேசுவதற்கான தார்மீக அதிகாரத்தைக் கோருவதுமே விமர்சகருக்குரிய நீதி. தொழிற்முறை மரியாதையையும், சமூக அக்கறையையும் இணைத்து செயல்படுவதானது சில வேளைகளில் ஒருவருக்கு தார்மீக அதிகாரத்தையும், மக்கள் ஆதரவையும் பெற்றுத் தரக்கூடும். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதி, ஆனால் வெளிப்படையாக உணரக்கூடிய ஒன்றல்ல. கடந்த காலங்களில் சமூகத்திலிருந்து விலகி இருந்தவர்கள் மாற்றங்களைப் பரிந்துரைத்தபோது, அதற்கு உள்நோக்கம் ஏதுமில்லை என்று நம்பப்பட்டது. ஆனால் எப்போதும் அப்படி இருக்கவில்லை. ஒரு சில சாதகங்கள் இருக்குமென்றாலும், ஏதோவொரு அரசியல் கட்சியோடும் முறைப்படியான ஒரு இணைப்பானது சுதந்திர சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கான பரிந்துரைகளுக்கும் இடையூறாக இருக்கக்கூடும்.

ஒரு இயல்பான மனப்பான்மையோடு, தொழில்முறை நிபுணர்களும் கல்வியாளர்களும் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகையோர், அவர்கள் மட்டுமென்றில்லை எவரும் மாற்று சிந்தனைக்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கலாம், பரந்த சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றியும் பேசலாம். பகுத்தறியப்பட்ட, தர்க்கபூர்வ ஆய்வுகளிலிருந்தே அத்தகைய சிந்தனைகள் எழும். இருப்பினும், பகுத்தறிவுடன் கூடிய விளக்கங்களைத் தருவதற்கான உரிமைக்காக இல்லாவிட்டாலும் எவ்வளவு கவனமாகப் பேசினாலும் மாற்று சிந்தனை என்று சொல்லப்படும் பரந்த பொருளிலான சிந்தனை முறைக்குக்கூட ஆதரவாகப் பேசத் தயங்குகின்றனர். எந்தத் தயக்கமுமின்றி புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன, கசக்கி எரியப்படுகின்றன. மேலும் புத்தகங்கள் எரிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்களிலுமிருந்தும் மதம் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு அடிபணிந்து அல்லது அரசின் தலையீட்டினால் பாடதிட்டங்களையே மாற்றுதல் ஆகியவற்றிலிருந்து இது வெளிப்படையாகத் தெரிகிறது. நன்கு செயல்பட்டுவந்த பதிப்பாளர்கள்கூட இடுப்பொடிந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் இத்தகைய நடவடிக்கைகள் கல்வியாளர்கள் மத்தியிலோ அல்லது தொழில்முறையாளர்கள் மத்தியிலோ ஏன் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்துவதில்லை?  வழக்கமாகச் சொல்லப்படும் பதில் என்னவெனில், இச்செயல்களைத் தூண்டுபவர்களுக்கு அரசியல் அதிகார பின்புலம் இருக்கிறது என்பதே. ஆனால் அது மட்டுமே காரணமா?

கடந்த பத்தாண்டுகளில் சுதந்திர வெளி குறுகிக்கொண்டே வருவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அந்நிலை அப்போது எதிர்க்கப்பட்டது, இப்போது நமது முறை. மரபார்ந்த அதிகாரத்தைக் கோருபவர்களை கேள்வி கேட்பதும், பொறுப்புள்ள நடவடிக்கையைக் கோருவதும் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும், குறிப்பாக நீதி மறுப்பு நிகழும்போது அது கண்டிப்பாக நிகழ வேண்டும். சமூக வலைதளங்கள் ஓர் சுதந்திர வெளியாகக் கருதப்பட்டது, ஓரளவுக்கு அது உண்மைதான். ஆனால் சமூப காலங்களில் மதவாத செயல்பாடுகள் குறித்து, சமகால அரசியல் குறித்து விமர்சனபூர்வமாக கருத்து தெரிவிக்க பலர் அஞ்சுகின்றனர். அதிலும் முக்கியமாக மத அடையாளங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதம் பற்றிய கற்பனையான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களது வெறுப்பு அரசியல் பிரச்சாரங்கள் என்று வரும்பொழுது நாம் நேருக்கு நேர் கேள்வி கேட்பதில்லை.

அப்படி கேள்வி கேட்பதென்பது, மத நோக்கங்களைக் கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் நிறுவணங்கள், அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை மதம் அல்லாத காரணங்களுக்காகப் பயன்படுத்துவதை விமர்சிப்பது என்பதாகும். சமீபத்தில் தோன்றிய மதமானாலும் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள அவையும் சட்டங்களை, ஒழுங்குகளை வகுக்கின்றன. அவர்களுடைய செயல்பாடுகள் கொலை, வல்லுறவு மற்றும் சீர்குலைவை விளைவிக்கலாம். மதங்கள் வன்முறையை போதிப்பதில்லை என்று அவ்வமைப்புகளோடு தொடர்பற்றவர்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். ஆனால் பிரச்சினை அதுவல்ல, அனைத்து மதங்களும் நற்குணங்களை போதிக்கன்றன என்பது தெரிந்ததே, ஆனால், கேள்விக்குரியவை அம்மதிப்பீடுகள் அல்ல மாறாக, மதத்தின் பெயரால் அரங்கேறும் அமைப்புகளின் நடவடிக்கைகளும், அதன் நம்பிக்கைகளும்; அந்நடவடிக்கைகள் எப்போதும்  மத ஒழுங்குக்குள் மட்டும் இருப்பதில்லை. வன்முறையையும், பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுக்கத் தயங்காத அத்தகைய அமைப்புகள் நமக்கொன்றும் புதிதல்ல. நாமறிந்த இந்துமதம் மற்றும் இஸ்லாம் சீக்கியம் போன்ற மதங்களும் அதற்கு உதாரணம். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளுக்கெதிராக, அதை மதத்தின் பெயரால் செய்தாலும், அவற்றுக்கெதிராக சட்டங்கள் இயற்றப்படுமா?  அது அவசியமானதே என்றாலும், தண்டனை மட்டும் போதாது. மதங்களுக்காதரவாக அவை ஏன் நடக்கின்றன என்பது பகுப்பாயப்பட்டு, அதை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும். மத நம்பிக்கை உடையவர்கள் இத்தகைய வன்முறை செயல்களை ஆதரிக்கின்றனரா? இல்லையென்றால், தம் மதத்தின் அடையாளத்தை முன் வைத்து வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றை புரியும் அப்பயங்கரவாதிகளிடமிருந்து அத்தகையவர்கள் தம்மை துண்டித்துக் கொள்ள வேண்டாமா?

பொது அறிவுஜீவிளின் வீழ்ச்சிக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. நான் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். மிகவும் வெளிப்படையான அதே சமயம் பெரிதாக ஒப்புக்கொள்ளப்படாத நவதாராளவாதம் தோற்றுவிக்கும் பாதுகாப்பின்மை ஒரு முக்கிய காரணமாகும். அது கொண்டு வந்திருக்க வேண்டிய பொருளாதார ஏற்றத்தின் விளைவாக, ஆனால் தவறாகிவிட்ட ஏற்றத்தினால் எழுந்தவை அவை. வேலை வாய்ப்பு மிகவும் போட்டிக்குரியதாகிவிட்டது, மோதல் போக்கை இது இன்னும் அதிகப்படுத்துகிறது மேலும், மனித உறவுகளை சார்ந்திருப்பதை மெல்ல மெல்ல சீரழிக்கின்றது. செல்வக் குவிப்பில் அருவருக்கத்தக்க ஏற்றத்தாழ்வு இந்த மோதலை மேலும் வலுப்படுத்துகின்றன. ஒழுக்கக் கோட்பாடுகள் பகட்டான விளம்பரங்கள் மூலம் வெறும் ஜிகினா வாசகங்களாக மாற்றப்பட்டு விட்டன. ஊழல் என்பது சகஜமான ஒன்றாக ஏற்கும் நிலை வந்துவிட்டது. செல்வந்தர்கள் தொழும் பொது தெய்வமாக பணம் மாறிவிட்டது. மற்றையரோ வீழும் துளிகளுக்காக ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். சமத்துவத்தைக் கோரும் உரிமை கோருவதில் உள்ள மனஎழுச்சிகளுக்கும், புதிய வகையிலான சாதி மற்றும் மத அதிகாரங்களால் அவை மறுக்கபடுவதற்கும் இடையே மோதல்கள் நிலவுகின்றன.

நவ தாராளவாதக் கலாச்சாரமும், பொருளாதாரமும் அவ்வளவு எளிதாக மாற்றப்படக் கூடியதல்ல, ஆனால் அதன் தீமைகளைக் குறைக்க முடியும். ஆனால், வளங்கள், நலன்கள் மற்றும் சமூக நீதிக்கான மக்களின் உரிமைகள் மீது சமூகத்தின் வேர்கள் ஊன்றப்பட்டிருக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பின் தேசிய-அரசு உருவாக்கப்பட்டபோது இருந்த பிரச்சினை இதுதான். 1960கள் மற்றும் 70களில், குடிமக்களுக்கு சம உரிமைகள் நிறைந்த ஒரு சமூகத்தை, கோட்பாட்டளவில் மட்டுமின்றி யதார்த்தத்திலும் எப்படி உருவாக்குவது என்று நடந்த விவாதங்களை நான் நினைவுகூர்கிறேன். அத்தகைய விவாதங்கள் தொடர வேண்டுமென்றால் நாம் பொது அறிவுஜீவிகள் பக்கம் திரும்ப வேண்டும், ஒரு துடிப்பான சமூகத்திற்கு அது அவசியமானதும்கூட; மேலும் கேள்விகள் கேட்கப்பட வேண்டுமென்றால், அவர்களை முன்னணிக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் அதற்கும் அப்பால், அத்தகையோர் கேட்கும் கேள்விகள் சரியானதே என்று புரிந்துகொள்ளும் சமூகமும் வேண்டும்.

எது விவாதிக்கப்பட வேண்டும், ஏன் விவாதிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்ற, விமர்சனபூர்வ பகுப்பாய்வுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு எதிர்வினையாற்றும் ஒரு சமூகத்தை நாம் எப்படி உருவாக்குவது? அவ்வெதிர்வினையானது பரிந்துரைக்கப்பட்ட அனைத்திற்கும் ஆதரவு என்றிருக்க வேண்டியதில்லை, குறைந்தபட்சம் மாற்று சிந்தனைகளை, பரிந்துரைகளை விவாதத்திற்குட்படுத்துவது என்றாவது இருக்கலாம். இது ஒரு தொடக்கத்தைக் கோருகிறது. கல்வியூட்டப்பட்ட மக்களாகுதல், பொது அறிவுஜீவிகளின் பாத்திரத்தை வரவேற்கும் மக்களாக மட்டுமின்றி, அவர்களின் தேவையை அங்கீகரிக்கும் அறிவைப் பெற்ற மக்களாக மாறுதல் அவசியமாகிறது.

கற்றரிந்த மக்களாகுவதற்கு, நம்மை நாமே எப்படி கற்பித்துக் கொள்வது? பல்வேறு துறைகளில் இருக்கும் தொழில்முறையினர் மற்றும் தங்களது தொழில்முறை நிலைப்பாட்டிலிருந்து மாற்று அதிகாரத்தை வரையறுத்துக் கொள்ளும் பொது அறிவுஜீவிகள் ஆகிய இருதரப்பிற்கும் இக்கேள்வி பொருந்தும். இன்றைக்கு, நம்மை நாமே கற்பித்துக் கொள்வதற்கான இரண்டு வழிமுறைகள் உள்ளன. வாய்மொழி வடிவில், முறைசாரா மறைமுகக் கல்வியாக காட்சி ஊடகங்கள் மூலம், இரண்டாவது முறைசார் கல்வி நிறுவனங்கள் மூலம்.  இணையம் என்பது இங்கு இடையகம். மற்ற இரண்டைப் போலவே இதுவும் முழு சமூகத்தையும் சென்றடைந்துவிடவில்லை. தொலைக்காட்சி அலைவரிசைகளோ, அரிதான எண்ணிக்கை தவிர, பங்கேற்பாளர்கள் சுழற் நாற்காலி ஆடுவது போல் நடக்கும் விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் ஒருவரை ஒருவர் போலச் செய்கின்றனர். அனைத்தும், முற்றிலுமாக அனைத்தும், அரசியலாக, அதற்கு சற்றும் தொடர்பில்லையென்றாலும், சமகால அரசியல் நோக்கிலேயேப் பார்க்கப்படுகின்றன. அதனால், ஒவ்வொரு நிகழ்ச்சியும், தேடலுடன் கூடிய விவாதங்களை அனுமதிக்காத போக்கைக் கொண்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களால் நிரம்பி வழிகின்றன. அவர்களின் பேச்சுகளைத் தாண்டி அரிதாகவே அந்நிகழ்ச்சிகள் உண்மைகளை ஆய்வு செய்கின்றன. மாற்று சானல்களுக்கே வழி இல்லையா என்று எனக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது, பொருளாதார ரீதியாக அது சிரமம் என்றால், குறைந்தபட்சம் ஒரு பண்பலையாவது? இலாபம் மட்டுமே குறிக்கோளாக கொள்ளாத பண்பலை! மாற்று சிந்தனைகள், தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவித்து, ஒற்றை தரப்புக்கப்பால் ஆய்வு செய்து, விமர்சனபூர்வ கேள்விகளால் உத்வேகம் அளிக்கும் ஒரு பண்பலை? எதிர்வரும் தேர்தெலுக்காக மட்டுமின்றி சமூகத்திற்காக, சிறந்த எதிர்காலம் பற்றிய சிந்தனையோடு குரல் கொடுக்கும் அக்கறை மிகுந்த குரல்கள் ஒலிப்பதற்காக பொருளாதார ரீதியாக நாம் எப்படி உறுதி செய்வது?

அடுத்து, முறைசார் கல்வி என்று மற்றதொரு வழிமுறை உள்ளது. இதை நாம் இரண்டு மட்டங்களாகப் பார்க்க வேண்டும்: கல்வியின் உள்ளடக்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சுதந்திரம். கல்வியானது,  கல்வியாளர்களின் கையிலிருந்து, அரசியல்வாதிகள் மற்றும் கலாச்சார மற்றும் மத நிறுவனங்களாக பாவனை செய்யும் அரசியல் அமைப்புகளின் கையில் இன்று சென்றுவிட்டது. அரசியல்வாதிகள் அறிவுஜீவிகளை எங்கணம் பொருட்படுத்துகின்றனர் என்பதை – ஒருவேளை அவர்கள் அங்கணம் பொருட்படுத்துவதாயின் - இவ்விஷயம் முக்கியமானதாக்குகிறது.

சரியாகச் சொல்வதானால், கற்றலின் சாரமானது ஒரு நபரை ஆய்வு பூர்வமான, தர்க்க பூர்வமான மற்றும் சுதந்திரமாக, படைப்பாற்றல் மிக்க வகைகளில் சிந்திக்கத் தூண்டுதலாக இருக்க வேண்டும். அறிவானது தொழில்நுட்பமாக வடிவெடுக்குமிடத்து அவ்வறிவை உற்பத்தி செய்வதற்கான, அதை தக்க வைத்துக்கொள்வதற்கான குறிப்பிட்ட சூழலை அது கொண்டிருக்கின்றது எனும் விழிப்புணர்வை பகுத்தறிவின் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும். சூன்னியத்திலிருந்து அவை வடிவெடுத்திருக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அந்த நூற்றாண்டில்தான் நடந்திருக்க வேண்டும். தேவைப்பட்ட தொழில்நுட்ப அறிவோ, அது தொடர்பான அறிவோ இன்றி அவை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்க முடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட கால வளர்ச்சி தேவைப்படுகின்றது, எத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டது என்பதற்கு வரலாற்று அறிவியலாளர்கள் ஆதாரம் கண்டுவிடலாம். ஒரு கண்டுபிடிப்பை சாத்தியமாக்கிய தொழில்நுட்பமும், அறிவும் எவ்வாறெல்லாம் பரிணமித்தன, வளர்ந்தன என்பதை அவர்கள் அவதானித்துவிடலாம்.

நமது சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி பற்றி பேச வேண்டுமெனில், நாம் கடந்தகாலத்தில் அறிவியலின் பாத்திரம் குறித்து - அறிவு தளத்திலும், தொழில்நுட்பம் வாயிலாக பயன்பாட்டிலும் - என இரண்டு தளங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னரே இந்தியாவில் இருந்தது என்று சொல்வதற்கு பதில், வரலாற்றின் போக்கில் அறிவின் இயல்பு, தொழில்நுட்பத்தின் இயல்புகளையும், அவற்றைக் கொண்டு நாம் என்ன செய்தோம் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். 15ஆம் நூற்றாண்டில் கேரளத்து கணிதவியலாளர் ஒருவர் நுண்கனிதத்தை (calculus) கண்டுபிடித்திருந்தால், அறிவின் வளர்ச்சிக்காக அக்கண்டிடுப்பு எவ்வகையில் பயன்படுத்தப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஏற்கணவே உள்ள அறிவு பற்றிய செய்திகளைக் கொடுப்பதே கல்வியின் முதல்படி. இருக்கும் அறிவின் இடத்தில் கற்றல் நடைமுறையின் வாயிலாக புதிய அறிவை பதிலீடு செய்யும் அவசியம் இருக்கிறது என்று மதிப்பீடு செய்வது அடுத்தபடியாகும். பெரும்பாலான பள்ளிகளில், இன்றைய கல்வி திட்டங்கள் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை. பள்ளிக்கூடங்களின் பற்றாகுறைக்கும், இருப்பவற்றின் மோசமான நிலைக்கும் திட்டமிட்ட கொள்கைகளே காரணமாக இருக்கலாம். மேலும்,  மக்கள் படிப்பறிவு பெற்றுவிடுவார்கள் என்பதோடு அவர்கள் கற்றரிந்தவர்களாகி விடுவார்கள் எனும் அச்சமும் அதற்கு காரணமாக இருக்கும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் கடந்த அரை நூற்றாண்டுகால புறக்கணிப்புக்கு இதுவே காரணம். அதோடு மட்டுமின்றி, பல்கலைக்கழக அளவில், சரி அதைக்கூட விட்டுவிடுவோம், உயர்நிலைப் பள்ளி அளவில்கூட அறிவைக் கையாள்வதற்கான எவ்வித தயாரிப்புகளும் இல்லை. ஆனாலும், மேலும் மேலும் பல்கலைக்கழகங்களைத் திறக்க தயாராகிக் கொண்டிருக்கிறோம், ஐ.ஐ.டிக்கள், ஐ.ஐ.எம்கள்; இது போதாதா? இந்நிலையானது கல்வியை ஓர் அர்த்தமற்றதாக நீர்த்துப் போகச் செய்கிறது – உண்மையில் அதை மீச்சிறு பொது வகுத்தி (Least Common Denominator) போலாக்கிவிட்டது. இதனை நாம் ‘மீ.பொ.வ கல்வி’ (LCD education) எனலாம். கேள்வி கேட்கும் அறிவுக்குத் தூண்டுதலாக இருக்கவேண்டிய சிந்தனை முறைகளும், பொது அறிவுஜீவிகளின் கருத்துகளோடு எதிரொலிக்கும் வகையான அறிவு வளர்ச்சியையும் நடப்பு கல்வி முறையானது அடிப்படையிலேயே முடக்கிப் போடுகிறது. இவ்வமைப்பையும் கடந்து சுதந்திரமாக, படைப்பாற்றலுடன் சிந்திக்க பழகிக் கொண்டவர்களுக்கு உண்மையில் நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். ஆனால், நாம் எதிர்பார்க்கும் விமர்சன வட்டத்திற்குள் அவர்கள் வருவதில்லை. கல்வியானது மாணவர்களைக் கேள்வி கேட்கவும், சுதந்திரமாக சிந்திக்கவும் தூண்டுதலாக அமையுமாயின், நமக்குக் கிடைக்கக்கூடிய ஆற்றல் மிக்க, சிந்திக்கும் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தற்கால பொது அறிவுஜீவிகள் பேசக்கூடிய பிரச்சினைகள் எவையாக இருக்கலாம் என்ற கேள்வி எழலாம். சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு, சொல்லப் போனால் பெரும்பான்மை இந்தியர்களுக்கு நல்லாட்சி என்பது காலத்திற்கு ஒவ்வாத காலனிய வேர்களை இன்னமும் பற்றிக்கொண்டிருக்கும் தற்கால வாழ்வாதாரச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதாகும். நியாயமற்ற தேசிய செல்வப் பங்கீடே வறுமை நிலை உயரக் காரணம். காலனியக் கொள்கையின்படி உருவாக்கப்பட்ட சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான முன்னுரிமைகளே இன்றளவிலும் நிலவுகின்றன. காலனிய நிர்வாக முறையானது பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்கள் எனும் பேதங்களைக் கண்டுபிடித்து, மத அடையாள அரசியலை ஊக்குவித்தது. இவையே இப்போது சாஸ்வதமாகக் கருதப்படுகின்றன. அவை ஜனநாயக செயல்பாட்டை அனுமதிப்பதில்லை, ஏனென்றால் ஒரு ஜனநாயகத்தில், பெரும்பான்மை என திகழ்வோர் பிரச்சினைக்கு பிரச்சினை நிலைமாறக் கூடியவர்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் இடஒதுக்கீட்டை நிரந்தரமாகக் கொண்டிருப்பதென்பது, அவற்றால் சிறு அனுகூலங்கள் கிடைப்பதானாலும், மதம் மற்றும் சாதிய அடையாளங்களை மீண்டும் வலியுறுத்துவதாகும். நமது சமூகத்தையும், பொருளாதாரத்தையும் மாறுபட்ட வகையில் ஒழுங்குபடுத்துவதில், அதாவது காலனிய அடையாளங்களை புறந்தள்ளிவிட்டு சமத்துவமான செல்வப் பங்கீட்டை மேற்கொள்வதே தீர்வாகும்.

மதச்சார்பற்ற ஒரு சமூகமே வெற்றிகரமான ஜனநயாக சமூகமாகத் திகழமுடியும்; அனைத்து மதங்களின் ஒன்று சேர்ந்த இருப்பிற்கப்பால் முன்னேறும் ஒரு சமூகம் என்பதே இதன் பொருள்; அதாவது, குடிமக்களாக சமூக உறுப்பினர்கள் அனைவருக்கு சமமான சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் இருப்பது, மதச்சார்பற்ற வகையில் அவ்வுரிமைகளைப் பிரயோகிக்கும் உரிமை இருப்பது; அவ்வுரிமைகளை பிரயோகிப்பதில் மத நிறுவனங்களின் தலையீடற்ற ஒரு சுதந்திர சமூகம்; தம் விருப்பப்படி எந்தவொரு மதத்தில் வேண்டுமானாலும் இருப்பது அல்லது இல்லாதிருப்பதற்கான சுதந்திரம் நிறைந்த ஒரு சமூகமாக அது இருக்க வேண்டும். மதச்சார்பின்மை என்றால் என்ன, ஜனநாயகத்திற்கு அது ஏன் அவசியம் மற்றும் மதச்சார்பின்மை நடைமுறையை பாதுகாக்கும் முறைகளை விளக்குவதில் பொது அறிவுஜீவிகளை ஈடுபடுத்தும் ஒரு சமூகமாக அது இருக்க வேண்டும்.

நம் சமூகத்தில் பொது அறிவுஜீவிகளே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்கள் ஒன்றும் வேற்று கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் மேற்சொன்னதுபோல் அவர்களுக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. தற்போதைய அறிவுஜீவிகள் முந்தைய அறிவுஜீவிகள் ஆற்றிய பாத்திரத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட பாத்திரத்தை ஆற்றவில்லையென்றாலும், நம் காலத்திலும் அவர்களுக்கான தேவை இருப்பதை அங்கீகரிக்கும் வரலாற்று தேவை உள்ளது. நமது சமூகத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான புதிய கோணங்களை அவர்களின் முன்னோடிகள் நமக்கு வழங்கினார்கள். மனித நிலைகள் பற்றிய பகுத்தவறிவுடன் கூடிய தர்க்கபூர்வமான வாதங்களைக் கொண்டு சமூகத்தை கட்டுப்படுத்தியவர்கள் மீது மதச்சார்பற்ற வகையில் ஒரு தார்மீக அதிகாரத்தை செலுத்தியதன் மூலமும்; மிக சமீபமாக காலனிய ஆதிக்கத்தை மறுத்தலித்து கேள்வி கேட்டதன் மூலமும் அம்முன்னோடிகள் அதைச் செய்தனர். முந்தைய அவைதீகர்கள் நனவுபூர்வமாக அவர்களை அங்கணம் ஊட்டி வளர்த்தனரா? விமர்சனபூர்வ பகுத்தறிவை கைகொள்ளும் பொது அறிவுஜீவிகளே இம்மரபின் வாரிசுகள்.

இவ்வுரையின் தலைப்பு கேள்வி கேட்பது பற்றியது என்பதால், ஒரு நீண்ட கேள்வியுடன் எனது உரையை முடித்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய, தொடர்புடைய கேள்விகள் கேட்கக்கூடிய சிந்தனையாளர்கள் பற்றாக்குறை ஏதும் நம்மிடையே இல்லை. ஆனால், பெரும்பாலும் குரல்கள் கேட்கவேண்டிய தருணங்களில் அமைதியே நிலவுகின்றன. அனுசரித்துப் போவது நமக்கு அனுகூலமாக இருக்கிறதா? கேள்விகேட்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணி நாம் அஞ்சுகிறோமா?  சிந்திப்பதற்கான, மேலும் கூட்டாக சிந்திப்பதற்கான ஒரு சுதந்திர வெளி நமக்குத் தேவைப்படுகிறதா?

(விரிவுரையிலிருந்து சற்றே விரிவுபடுத்தப்பட்ட கட்டுரை இது. விரிவுரைக்கான முதல் பிரதி மீது கருத்துரை கொடுத்ததன் மூலம், என்னுடைய சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள உதவி செய்த அமித் பாதுரி, தீபக் நய்யார் மற்றும் நீலாத்ரி பட்டாச்சார்யா ஆகியோருக்கு நன்றி).

நன்றி: http://www.thebookreviewindia.org/.  புக் ரிவியு நிறுவனத்தார் மற்றும் ரொமிலா தாபர் ஆகியோரிடமிருந்து உரிய அனுமதி பெற்று இக்கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

...மேலும்

Jan 14, 2016

2015 ஒரு பார்வை: வசப்படுமா பாலின சமத்துவம் - பா. ஜீவசுந்தரி


“பெண்களுக்கு எதிரான வன்முறை களுக்கு முடிவு கட்டுங்கள். உலகம் முழுவதும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மிகப் பெரும் பிரச்சினை. உலக அளவில் மூன்றில் ஒரு பெண் வன்முறையால் பாதிக்கப்படுகிறார். மனித உரிமைகளை மீறிய அந்தச் செயலுக்கு முடிவு கட்ட வேண்டும். பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் வன்முறை நிகழக் கூடாது. ஆண் – பெண் சமத்துவம் உருவாக வேண்டும்” என்ற முழக்கத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கும் அளவுக்குத்தான் பெண்களின் நிலை உலகெங்கும் இருக்கிறது. ஐ.நா. பெண்கள் நலப் பிரிவின் நிர்வாக இயக்குநரும் செகரட்டரி ஜெனரலுமான பும்ஸைல் லம்போ நகுகா விடுத்துள்ள அறிக்கைதான் இப்படிச் சொல்கிறது.

படித்த/ படிக்காத, பணிபுரிகிற/ இல்லத்தரசிகளாக இருக்கின்ற, பால் மணம் மாறாத குழந்தைகள்/ பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வயது முதிர்ந்த பெண்மணிகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் இங்கு ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தவையே நமக்கு அனைத்தையும் சொல்லாமல் சொல்கின்றன.

பாலியல் வல்லுறவுகளும் தண்டனையும்

நிர்பயா கூட்டுப் பாலியல் வழக்குக்குப் பின் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும்கூட குற்றங்கள் குறையவில்லை. வயது வித்தியாசமற்ற, கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. மிகச் சமீபத்தில் ஹரியாணாவில் ரோதக் நகரில் நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பில் 7 பேருக்குத் தூக்கு தண்டனை, எட்டாவது நபர் நபர் ஒரு சிறார். அப்படியானால் தண்டனையால் என்ன பயன்? இளைஞர்கள், ஆண்களிடம் மன மாற்றம் ஏற்பட்டுவிட்டதா? “உங்களை யாராவது பலாத்காரம் செய்தால், அதை எங்களால் எப்படித் தடுக்க முடியும்?” என்று ஒரு பெண் செய்தியாளரிடம் நாகூசாமல் எதிர்க் கேள்வி எழுப்பும் அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கும்வரை, தண்டனை என்ன செய்துவிட முடியும்?

யாருக்கு அதிகாரம்?

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து படித்து முன்னேறி காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற விஷ்ணுப்ரியா தொடர்ந்து பணியாற்ற முடியாமல், பல்வேறு வித மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். அதைக் கோழைத்தனமென்றும், அவர் காவல்துறை பணிக்குச் சற்றும் பொருத்தமற்ற ஒரு நபர் என்றும் எள்ளி நகையாடுகிறது சமூகம். இங்கு அந்த நிலை என்றால், ஹரியாணா மாநில காவல்துறை அதிகாரி சங்கீதா கலியா எதிர்கொண்டது வேறு மாதிரியான தாக்குதல்.

மக்கள் குறைதீர் கூட்டத்துக்குத் தலைமை ஏற்ற அமைச்சரிடம், மாநில எல்லையில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாகத் தொண்டு நிறுவனம் ஒன்று புகார் அளித்தது. இது பற்றி அமைச்சருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, சங்கீதா கலியாவைக் கூட்டத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் முன்னிலையில் அநாகரிகமாகக் கூச்சலிடுகிறார் அமைச்சர். ஆனால், அவர் வெளியேறவில்லை. இதனால் கோபத்துடன் அமைச்சர் வெளியேறியதுடன் முதல்வரிடமும் காவல்துறை அதிகாரி சங்கீதா பற்றி புகார் அளிக்கிறார். அதன் பின் 24 மணி நேரத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு சங்கீதா கலியா இடமாற்றம் என்ற பெயரில் தூக்கி அடிக்கப்படுகிறார். இவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்தான். ஒரே துறை, ஆனால் நடைமுறைகள் எங்கும் மாறவில்லை. வாய் மூடி மௌனியாக இருந்து, மேலதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு பெண் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார். மற்றவர் துணிச்சலாக அதை எதிர்கொள்ளும்போது தண்டனையாக இந்தியாவின் எங்கோ ஒரு பகுதிக்கு மாற்றப்படுகிறார்.

அனைத்துத் தளங்களிலும் உடைக் கட்டுப்பாடு

ஈவ் டீஸிங் என்பது மாணவிகள், இளம் பெண்கள் மீது மட்டுமல்ல, கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்கள் மீதும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட வேதனைச் சம்பவங்கள் நம் கிராமப்புறப் பள்ளிகளில் நிகழ்ந்திருக்கின்றன. மதுரை அருகே வன்னிவேலம்பட்டி கிராமத்தின் அரசுப் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் உதிர்க்கும் கமெண்ட்டுகளிலிருந்து தப்பிக்க, கல்வித் துறை அதிகாரியே அவர்களுக்கு ஓவர் கோட் அளித்து அணிந்து வரச்செய்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. பெண் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் கோட் அணிந்து கொள்ளும்போது ஆசிரியர்களும் அவ்வாறு அணிவதில் தவறு ஏதுமில்லை என்றும், அதனால் ஆசிரியைகளுக்கு மதிப்பு கூடும், மாணவர்களால் மதிக்கப்படுவார்கள் என்றும் தலைமை ஆசிரியர் அதை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். அவர் ஒரு ஆண் என்பதையும் மறைமுகமாக இங்கு உடைக் கட்டுப்பாடு திணிக்கப்படுவதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

தமிழ்நாட்டில் பெண்கள் லெகிங்ஸ் அணிவது கலாச்சார மீறல், கண்ணியக் குறைவு என்றால், வட கிழக்குப் பகுதிகளின் உச்சியில் இருக்கும் அஸ்ஸாமில் பெண்கள் ஸ்கர்ட் அணிவது சர்ச்சைக்குரியதாகிறது. குரங்குகள் பேண்ட் அணிவதுடன் ஒப்பிட்டுத் தொலைக்காட்சிகளில் அது செய்தியாக்கப்படுகிறது. பாரம்பரியம், கலாசாரம் என்ற பெயரில் கோயில்களில் நுழையவும் உடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

கடவுளுக்கும் ஆகாதவளா பெண்?

உச்சகட்ட அராஜகமாக பெண்களே நுழைய முடியாத கோயில்களும் இருக்கின்றன. சனீஸ்வரனைப் பார்க்கவும் வணங்கவும் ஒரு பெண் கள்ளத்தனமாக மகாராஷ்டிர மாநிலத்தின் குட்டிச்சுவர் மட்டுமே கொண்ட அந்தக் கோயிலுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அந்தப் பெண் உள்ளே வந்ததாலேயே சனீஸ்வரனுக்குச் சனி பிடித்ததாக ஆசாரத்துடன் அங்கு தீட்டுக் கழிக்கப்படுகிறது. மற்றொரு புகழ் வாய்ந்த கோயிலின் அறங்காவலர் ஒருவர் பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறதா என்று சோதித்துப் பார்த்த பிறகே உள்ளே விடுவோம் என்கிறார். சோதனை செய்யக் கருவி கண்டுபிடிக்கவும் அவரின் விஞ்ஞான மூளை குயுக்தியுடன் செயல்படுகிறது. கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என்றால் பெண்ணை யார் படைத்தது? அவளுக்குள் ‘தீட்டு’ என்ற மாதவிடாயை உருவாக்கியது யார்?

பிள்ளை பெற்றால் மட்டும் போதும்

மதத்தின் பெயராலும், மூட நம்பிக்கைக் கருத்துகள் விஷ வித்துக்களாக ஊன்றப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினரான இந்து சன்னியாசி சாக்‌ஷி மகராஜ், ‘ஒவ்வொரு இந்துப் பெண்ணும் குறைந்தது நான்கு பிள்ளைகளாவது பெற வேண்டும்’ என்று முத்து உதிர்க்கிறார் என்றால், மலையாளக் கரையோரம் அகில இந்திய சன்னி ஜமாத்தின் இஸ்லாமியத் தலைவர், ‘பெண்கள் பிள்ளை பெறுவதற்கு மட்டுமே லாயக்கானவர்கள்’ என்று அதிர்வேட்டு வெடிக்கிறார். பெண் என்பவள் இவர்களை எல்லாம் பொறுத்தவரை வெறும் பிள்ளை பெறும் கருவி மட்டுமே.

அனைத்துத் தரப்பிலும் எதிர் நிலையே

நம் வீட்டுக் கூடத்துக்குள் நடுவில் உட்கார்ந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியோ விளம்பரங்களால் நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது. பெண்நிலைக்கு எதிரானதாகவே அதன் வாசகங்களும் பல நேரங்களில் நம் காதுகளில் தேள் கொடுக்காய்க் கொட்டுகின்றன.

பெண்கள் நிலை இதுவென்றால், மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் வைக்கும் கோரிக்கைகள் காதுகளில் ஏறுமா? எல்லாத் தடைகளையும் மீறி அவர்களில் சிலர் காவல்துறையிலும், கலைத்துறையிலும், அரசியலிலும் பங்கு பெறும்போது மனசு துள்ளத்தான் செய்கிறது.

பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றச் செயல்களின் அடி நாதமாக, ஒற்றைச்சரடாக ஓடுவது பெண் வெறும் உடலாக மட்டுமே பார்க்கவும், பாவிக்கவும் படுகிறாள் என்பதுதான். சிறு குழந்தைகளிலிருந்தே கண்பிக்கப்படும் ஆண் / பெண் பாகுபாடு முற்றிலும் களையப்பட்டாலொழிய இதற்கு விமோசனம் இல்லை. பாலினப் பாகுபாடு நீக்கப்பட வேண்டியது பற்றியும் பாலின சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் தீவிரம் குறித்தும் நாம் பேசாவிட்டால், அதற்காக முயற்சி செய்யாவிட்டால் ஆண் மையக் கருத்தாடலும் கலாச்சாரமும்தான் அனைத்து மட்டத்திலும் விஷக் கிருமிகளெனப் பரவும். எந்தத் துறையிலும் சாதனைகளின் வீச்சைவிட வேதனைகளே மிஞ்சுவதை என்னவென்று சொல்ல?

புதிதாய்ப் பிறக்கவிருக்கும் இந்த ஆண்டிலாவது மனித குலத்தின் சரிபாதியான பெண்கள் பாரபட்சம் காண்பிக்கப்படாமல், பாலியல் சமத்துவத்துடன் நடத்தப்படுவார்கள் என்று நம்புவோம்; நம்பிக்கைதான் வாழ்க்கை.

ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறும் தகவல்கள் மேலும் கவலை கொள்ள வைக்கிறது.

* நம் நாட்டின் 10 சதவீதப் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை.

* மொத்த உள் நாட்டு உற்பத்தியில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு 39 சதவீதம்.

* பாலினச் சமத்துவ நிலையில் இந்தியா 130-வது இடத்தையே பெறுகிறது.

* பாராளுமன்ற உறுப்பினர்களில் 12.2 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள்.

* இடைநிலைக் கல்வி பெற்ற பெண்கள் 27 சதவீதத்தினர் மட்டுமே

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com:

நன்றி - thehindu
...மேலும்

Jan 13, 2016

என் பாதையில்: சுய தண்டனை தேவையா?


நம் நாட்டில் பல பெண்கள் பிரச்சினை என்று வந்துவிட்டால் போதும், தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் செய்வதால் மட்டும் மாற்றம் நிகழ்ந்துவிடுகிறதா என்ன? மாற்றம் நிகழாததுடன் அவர்களுடைய பிரச்சினைகள் அதிகமாவதுதானே இங்கே நிதர்சனம்?

என்னுடைய தோழி ஒருத்தி ஒரு நாள் மிகவும் வாடிப்போய் என் வீட்டுக்கு வந்தார். இரண்டு நாட்களாகச் சாப்பிடாததுதான் அந்த முக வாட்டத்துக்குக் காரணம் என்பதை அறிந்தபோது உண்மையிலேயே எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. தனது தங்கை திருமணத்துக்கு வர மறுத்த தன் கணவரை எதிர்த்து சத்தியாகிரகம் பண்ணிக்கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார். கணவர் வராவிட்டால் சங்கடமாகத்தான் இருக்கும்.ஆனால் அதற்காக இருக்கிற துன்பம் போதாதென்று உடல்நலக் குறைவு என்ற இன்னொரு துயரத்தையும் இழுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? மனசு பொறுக்க மாட்டாமல் என்னால் முடிந்த அளவு அறிவுரை சொல்லி அனுப்பினேன். ஆனால் அத்தனையும் காற்றில் கரைந்த கற்பூரமானது. தன் உண்ணாவிரதப் போராட்டத்தை நீடித்த தோழியின் உடல்நிலை மோசமாக, கடைசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கையின் திருமண நாளன்றும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். உடல்நிலை மோசமாகி, மனம் இன்னும் பாதிக்கப்பட்டு வேதனை அதிகமானதுதான் மிச்சம்.

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண், தன் உறவுக்காரப் பெண் ஒருவரை அழைத்துவந்திருந்தார். சுமார் இருபது வயதேயான அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்தன. வேலை முடிந்ததும் இருவருக்கும் காபி போட்டுக் கொடுத்தேன். ஆவலுடன் வாங்கிய அந்த இளம்பெண், வாயில் காபியை ஊற்றியதும் முகம் அஷ்டகோணலாக மாறியது. அத்தனை மோசமாகவா இருக்கிறது நான் போட்ட காபி என்று யோசித்துக்கொண்டே காபியில் சர்க்கரை சரியாக இருக்கிறதா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். என் கேள்விக்குப் பதிலே இல்லை. அந்தப் பெண்ணின் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

பிறகு என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணே நிலைமையை விளக்கினார். கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் அந்தப் பெண் ஆசிட்டைக் குடித்துவிட்டாளாம். சிகிச்சை எடுத்த பிறகும் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள். ‘கோபத்துல ஏதோ தெரியாத்தனமா குடிச்சிட்டேம்மா. இப்ப சாப்பிட முடியல, எதையும் குடிக்கக்கூட முடியலம்மா. தெனம் தெனம் நரக வேதனைதான். ஏன்தான் அப்பிடி செஞ்சேனோ?’ என்று அந்தப் பெண் சொல்லும்போதே வேதனையாக இருந்தது.

அழகின் உறைவிடமாக இருந்த என் உறவுக்கார அக்கா ஒருவர், கணவர் சந்தேகப்படுகிறார் என்ற வருத்தத்தில் உடல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுக்க மாட்டேன் என்று தகராறு பண்ணி இப்போது பிறர் தயவின்றி எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.

பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்குக் குடி வந்த அக்காவும் அப்படித்தான். மாமியாருடன் ஏற்பட்ட சண்டையால் விஷம் குடித்து சாவின் வாசல்வரை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்தார். அந்த நொடியில் ஏற்பட்ட மரண பயமே அவருக்கு வாழ்வின் மீது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியதை அவர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.

நாம் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல. பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் தப்பி ஓடுவதால் எந்தப் பலனும் வரப் போவதில்லை. துணிந்து நின்றாலே துயரம் விலகும்.

- ஜே. லூர்து, மதுரை.

நன்றி - Thehindu
...மேலும்

Jan 12, 2016

“ஒரு சொல் கொல்வதற்குப் போதுமானதெனில், நல்லதொரு கவிதை வாழ்வதற்குப் போதுமானது” - தமிழ் நதி


வாசிக்கத் தொடங்கியிராத பால்ய காலத்திலிருந்து இன்றுவரை புத்தகங்களுக்கு நடுவில்தான் எனதிருப்பு தொடர்கிறது. அப்பாவும் அண்ணாவும் அப்பாவின் சகோதரிகள் இருவரும் வாசிப்புப் பழக்கம் நிறைந்தவர்கள். ஆனால், அவர்களில் எவரும் கவிதைகளை விரும்பி வாசித்ததாக எனக்கு நினைவில்லை. யதார்த்தத்தில் நிகழ்வதற்கரிய சாகசங்கள், ‘புனிதமான’காதல்கள், கதாநாயகர்களின் (கதாநாயகிகள் கதைகளிலும் பலகீனர்களாக இருந்தார்கள்) அதிபிம்பங்கள் உலவும் நாவல்களையும் சிறுகதைகளையுமே அவர்கள் விரும்பி வாசித்தார்கள்.

கவிதைகள் அறிமுகமாவதற்கு நான் காதலில் விழும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது. விழுந்ததுதான் தாமதம், கவிதை எங்கிருந்தோ வந்து என்னோடு உறவாடத் தொடங்கிற்று. உருகி உருகி வாசித்து, அதனிலும் உருகி உருகி கவிதைகளை எழுதத்தொடங்கினேன். அக்கவிதைகளில் இரவிலும் பகலிலும் நிலவு காலித்திருந்தது; பட்டாம்பூச்சிகள் குறுக்கு மறுக்காகப் பறந்துகொண்டிருந்தன; எங்கெங்கும் பூக்கள் மலர்ந்து காற்றிலாடிக் கொண்டிருந்தன; மேகங்கள் தரையிலேயே வாசம் செய்தன; துயரமொரு நதியாய் பெருக்கெடுத்து கண்முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் கிடந்த அதலபாதாளம் என் கண்களுக்குப் புலப்பட்டது புலம்பெயர் நாடொன்றில்(கனடாவில்) வாழத் தொடங்கியபோதுதான்.

நிலம், மொழி, காலநிலை, மனிதர்கள், சிக்கல்கள் என அனுபவங் கொள்ளவேண்டியிருந்த எல்லாமே புதியவை. மரங்கள் நிறைந்த வனத்திலிருந்து வழிதவறி, கட்டிடக் காடாகிய நகரத்திற்குள் நுழைந்துவிட்ட பறவையைப் போல திகைத்துப்போனேன். என்னதான் முயன்றும் புதிய நிலத்திற்குப் பழக மறுத்தது மனம். அந்த இருண்மையானது இப்போது நினைத்தாலும் மனச்சோர்வினுள் வீழ்த்திவிடக் கூடியளவு அடர்த்தியோடிருந்தது. குளிரும் தனிமையும் நடுக்குற வைத்த நிகழ்காலத்திலிருந்து, இறந்தகாலத்தின் இனிய ஞாபகங்களுள்ளும், எதிர்காலம் பற்றிய கனவுகளுள்ளும் மீண்டும் கவிதைகள் வழியாகத் தப்பியோடினேன். என்னை தற்கொலையிலிருந்தும் மனப்பிறழ்விலிருந்தும் கவிதைகளே காப்பாற்றின. நாளாக நாளாக கவிதைகளின் உருசி பிடிபட்டுவிட்டது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் புதிய நிலத்தின் சவால்களை எதிர்கொண்டு லௌகீக ரீதியாக மேற்சென்றார்கள். நானோ எனக்கான உலகொன்றை எழுத்தினால் பிரதியீடு செய்து அதில் நிரந்தரமாக வாழ முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

காட்சிரூபம், செவிவழி, பட்டறிவு இன்னபிறவற்றினூடாக உள்வாங்கப்பட்ட விசயங்களை அடிப்படையாகக் கொள்வதனோடு, அவற்றுக்கு அப்பாலும் இயங்கும் மனவோட்டத்தைப் பிணைத்து, அனுபவங்கள் அகவயப்பட்ட சித்திரங்களாக மாற்றப்படும்போது கவிதை பிறக்கிறது. எழுத்தெனப்படுவது சிலரைப் பொறுத்தளவில் உன்னதமான கற்பனையுலகைத் (utopia) தேடும் நெடும்பயணந்தான். அதாவது, முழுமையற்ற உலகின் குறைநிரப்பியாக எழுத்து தொழிற்படுகிறது. கவிதை அந்தக் குறைநிரப்புதலை அழகியலோடும் செறிவோடும் செய்கிறது.

ஒரு சொல் கொல்வதற்குப் போதுமானதெனில், நல்லதொரு கவிதை வாழ்வதற்குப் போதுமானது. ஒரு நல்ல கவிதை தன்னைப் படித்து முடிப்பவரை ‘இது போதும்… இது போதும்’என பொங்க வைக்கவேண்டும். இந்தப் புறவுலகின் அற்பத்தனங்களை, லௌகீக ஓட்டங்களைப் பார்த்து நகைக்கிற அளவு கலைசார் உன்மத்தத்தை ஊட்டக்கூடியதாக இருக்கவேண்டும். செழுமையும் வடிவ நேர்த்தியும், சொற்தேர்வும் உணர்வு வெளிப்பாடும் பாசாங்கின்மையும் கொண்டமைந்த கவிதைகளால் அத்தகு உன்மத்தத்தை ஊட்டவியலும். ஆனாலும், நிபந்தனைகளற்றதும் அப்படி ஏதும் இடப்பட்டால் அதை உடைத்துக்கொண்டு முன்னகர்வதும்கூட கலைசார் செயற்பாடே. அடிப்படையில் அஃது அதிகாரங்களை மறுத்தோடுவதாகும்.

‘இன்னதுதான் கவிதை’ என்று அதனை சட்டகங்களுள் அடக்கவியலாது. கோட்பாடுகளும் தத்துவங்களும் கவிதை குறித்து நுணுக்கமாக அலசி ஆராய்வதற்கு உதவக்கூடும். ஆனால், அத்தகைய கோட்பாடுகள் சுட்டும் வரையறைகள், படைப்பாக்கத்திற்கு முன்நிபந்தனைகளாக அமையும்போது அவை கவிதையின் ஆன்மாவையே கொன்றுவிடும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.

தமிழில், முன்னொருபோதும் இல்லாத அளவில் கவிதைகளின் பெருக்கத்தை இப்போது காணமுடிகிறது. மறுவளமாக, முன்னொருபோதும் இல்லாத அளவு கவிதைக்கான வாசகர்கள் குறைந்துபோய்விட்டார்கள். எண்ணுக்கணக்கற்ற தொகுப்புகள், அச்சு மற்றும் இணைய சஞ்சிகைகள், தனிப்பட்டவர்களின் வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள், ‘புளொக்’எனப்படும் வலைப்பூக்கள் என எங்கெங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன கவிதைகள். இவற்றுள் எதை வாசிப்பது எதை விடுவது என்ற திகைப்பு மேலிடுகிறது. இந்தக் குழப்பத்தின் இருளை அடர்த்துவது கவிதைகளின் பெருக்கம் மட்டுமன்று; தமிழைப் பீடித்திருக்கும் குழுவரசியல் நோயுங்கூட அந்தத் திகைப்பிற்குக் காரணமாகும்.

ஒரு கவிதையானது அதன் கவித்துவத்திற்காக மட்டும் கொண்டாடப்படாமல், அதை எழுதியவரைப் பற்றி ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்ட இதர மனச்சித்திரங்களுக்காகவும் சேர்த்தே கொண்டாடப்படுவதென்பது துரதிர்ஷ்மானது. இத்தகு சூழலில் கவிதை தன் பலத்தில் நிற்கவில்லை. ஒரு பெயரின் ஒளிவட்டத்தில் அது பிரகாசிக்கிறது. அந்தப் பெயருக்குப் பதிலாக வேறொரு அறிமுகமற்ற பெயரைப் பிரதியீடு செய்து பார்த்தால், அக்கவிதை அனாதையாகி இருளில் கிடப்பதைக் காண்போம். வாசகரை- சுயமாகத் தீர்மானிக்க நமது குழு, அமைப்பு, பதிப்பக, நட்பு வட்ட இரசிக சிகாமணிகள் விடுவதில்லை. இதன் பொருள், மேற்குறித்தோரால் பரிந்துரைக்கப்பட்டவர்களின் கவிதைகள் தரமற்றவை என்பதன்று. ஒருவரால் எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் தரமாக இருக்கும் என எதிர்பார்ப்பதற்குமில்லை. ஒரு தொகுப்பில் ஐந்தாறு கவிதைகள் தேறினாலே அது வெற்றிபெற்ற தொகுப்புத்தான். ஆனால், சிலசமயம், கவிதை என்ற பெயரில் எழுதப்படும் துணுக்குகள்கூட, எழுதியவரின் பெயரின் நிமித்தம் அதிரடியான சிலாகிப்புகளைப் பெறும்போது, தகுதிக்கு மீறிக் கொண்டாடப்படும்போது அஃது வாசகரதும், சக எழுத்தாளரதும் சுயமான தேர்வினுள்  அத்துமீறி நுழையும் நுண்ணரசியலைச் செய்வதை அவதானிக்க முடிகிறது. இன்னுஞ் சொல்லப்போனால், இந்தக் குழுவரசியலானது சமகால தமிழிலக்கியத்தை கற்பனா தளமொன்றிலே நிறுத்திவைத்திருக்கிறது. கறாரான, சமரசம் செய்துகொள்ளாத விமர்சகர்கள் அரிதாக இருப்பதனால் நேர்ந்த துர்ப்பாக்கியம் இது.

இந்நிலையில், படைப்பை முன்னிலைப்படுத்துவதா? படைப்பாளியை முன்னிலைப்படுத்துவதா? என்ற விவாதம் எழுந்தேயாகவேண்டியுள்ளது.

மேற்குறித்த விசனங்களுக்கு அப்பால் சிலர் அற்புதமான கவிதைகளை எழுதுகிறார்கள். அப்படி எழுதும் கவிஞர்களின், எழுத்தாளர்களின் பெயர்களைப் பட்டியலிடுவது போன்ற ஆபத்தான வேலை வேறேதும் இல்லை. ‘அன்னந் தண்ணி’இல்லாமல் இணையத்தில் விழுந்து புரண்டு குடுமிப்பிடிச் சண்டை போடுவதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே இந்த ‘பட்டியல்’ விவகாரத்தினுள் நுழையலாம். ஆக, இலக்கியம் குறித்த மிகுபிரக்ஞையும், சொற்செட்டும், உணர்ச்சியை மேவாது உள்நின்று இயங்கும் அறிவார்த்தமும் மிக்க படைப்புகளைத் தந்தவர் என்றவகையில் பிரமிளே எனது ஆதர்சம்.

இலக்கியமானது நாடுகளின் எல்லைகளையும், இன-மொழி-மத வேறுபாடுகளையும் கடந்து உலகளாவிய மக்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக அமையும்போது அஃது மானுடத்தின் பொது உரையாடலாக பரிணமிக்கிறது. அவ்வகையில், மஹ்மூத் தார்வீஷ், பாப்லோ நெருதா இருவரும் எனக்கு மிக நெருக்கமான உணர்வினைத் தருகிறார்கள். பாலஸ்தீனத்தையும் சிலியையும் குறிக்கும் வரிகளில் என்னால் ஈழத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. எல்லாவற்றிலும் அரசியல் கலந்திருக்கிறது என்றபோதிலும், நேரடியான அரசியல்தன்மை வாய்ந்த கவிதைகளை விரும்பிப் படிக்கிற அளவுக்கு இதர கவிதைகளைப் படிக்க முடிவதில்லை. அதற்கு, பேரினவாதத்தால் குரூரமாக கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற, பிராந்திய வல்லரசினால் காலகாலமாக வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற, நவகாலனித்துவ நாடுகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிற இனத்தைச் சேர்ந்தவள் என்பதொரு காரணமாக இருக்கக்கூடும்.

“குறித்துக்கொள் நான் ஒரு அரேபியன்” என்ற வரியானது, “குறித்துக்கொள் நான் ஒரு ஈழத்தவள்”
என்றே எனது மூளைக்குள் பதிவாகிறது.

எங்கள் நிலத்திலிருந்தும் எங்கள் கடலிலிருந்தும்
வெளியே போங்கள்
எங்கள் கோதுமைகளை விட்டு எங்கள் உப்பை விட்டு
வெளியே போங்கள்
எங்கள் காயங்களை விட்டு
எங்கள் எல்லாவற்றையும் விட்டு
வெளியே போங்கள்
நினைவுகளின் நியதியையொப்பி
வெளியே போய்விடுங்கள்.

என்ற, மஹ்மூத் தார்வீஷின் வரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமானவை.

மரணமடைந்த எமது தோழர்களின் சார்பாக
நான் தண்டனை கோருகிறேன்
சுற்றிலும் நடந்த கொடுமைகளை மறந்துவிட்டு
அவர்களோடு நான் கைகுலுக்க விரும்பவில்லை
இரத்தக் கறைபடிந்த அவர்களின் கைகளை
நான் தொட விரும்பவில்லை
நான் தண்டனை கோருகிறேன்
தூரதேசங்களுக்கு அவர்கள்
தூதர்களாய் அனுப்பப்படுவதை
நான் விரும்பவில்லை
அல்லது
நடந்த கொடுமைகளை
உள்வீட்டுக்குள் பொத்திவைத்து
காற்றோடு அவைகள்
கரைந்துபோக விட்டுவிட நான் விரும்பவில்லை
இந்தத் திறந்தவெளிக் காற்று மண்டலத்தில்
அவர்கள் விசாரிக்கப்படுதலைக் காண
நான் விரும்புகிறேன்
இந்தத் திறந்தவெளிச் சதுக்கங்களில்
அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவதைக் காண
நான் விரும்புகிறேன்

என்ற பாப்லோ நெருதாவின் வரிகளும் அட்சரம் பிசகாமல் எங்களுக்காக எழுதப்பட்டவை போலவே தோன்றுகின்றன. இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட, காணாமலடிக்கப்பட்ட, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட, வன்புணர்வுக்காளாக்கி கொல்லப்பட்ட, சிறைகளில் வாடுகிற எங்கள் சனங்களுக்கான நீதியைக் கோரி, கோபத்தோடும் துயரத்தோடும் அனைத்துலகத்திடம் நாங்கள் வாதிடுகிற குரலை மேற்குறித்த வரிகள் அப்படியே எதிரொலிக்கின்றன. இத்தகைய கவிதைகளே, எழுதுகோலினால் போராடுவது எங்ஙனம் என்பதை எங்களுக்குச் சொல்லித் தருகின்றன. எழுத்தெனப்படுவது தூலமான போராட்டமில்லை தான். அதனால் பயனொன்றுமில்லை என நகைப்பவரும் இருக்கக்கூடும். எங்களளவில், குறைந்தபட்சம் வெளிப்பாட்டுக் கருவியாகவோ, ஆற்றுப்படுத்துவதாகவோ, கூட்டுணர்வின் குரலாகவோ கவிதை இருந்துவிட்டுப் போகட்டுமே!

அக புறவுலகின் தாக்கங்களே என்னையும் கவிதையை நோக்கிச் செலுத்துகின்றன.  வாழ்வு, சலனமற்ற நதியென நகரும்வரை சிக்கலில்லை. மழையும் புயலும் வந்து வெள்ளம் பெருக்கெடுக்கையில் அதே நதி தடம் மீறிப் பாய்கிறது. நதிபோல் இலக்கியம் எழுந்தமானத்திற்குப் பாயமுடியாது. ஆனால், அது தொடர்ந்து சலனத்திற்கு ஆட்படுகிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது கவிஞர்கள் பலர் அவ்விதம் மனச் சமநிலை குலைந்து எழுத முற்பட்டார்கள். குரூரமான அபத்தச் சூழலை எவ்வண்ணம் கடந்துசெல்வதெனத் தெரியாமல் தடுமாறினார்கள். எனக்கும் அது நேர்ந்தது. சூழலைக் கழித்து எழுத்தினை மதிப்பிடவியலாது என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். பெரும்பாலான அரசியற் கவிதைகளின் நேரடியான, எளிமையான தன்மைகளால் அவை கவிதையென்ற கட்டுக்குள் வரவில்லையெனச் சொல்வாருமுளர். பாப்லோ நெருதாவின் கவிதைகள் புரிந்துகொள்வதற்கு எளிமையானவைதாம். அவை சிலியின் ஆன்மாவைத் தட்டியெழுப்பவில்லையா? அழுக்கான சாக்குத் துணியை மட்டுமே ஆடையாக இடுப்பில் சுற்றிய, காலணி அணியாத சந்தைத் தொழிலாளர்கள் மத்தியில் நெருதா தன் கவிதைகளை வாசித்து முடிந்ததும், “இந்த அளவுக்கு வேறெதுவும் எங்களை நெகிழவைத்ததில்லை” என்று, நெருதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கள் பனிக்க ஒரு தொழிலாளியை சொல்லத் தூண்டியது கவிதைதானே?

மேட்டிமைக் குடிகளின் மேசைகளை அலங்கரிக்கும் பூச்சாடியாக கவிதை இருக்கவேண்டிய அவசியமில்லை. எளிய மக்களை, அரசுகளும், அரசுகளைத் தாங்கிப்பிடிக்கும் பெருநிதிய நிறுவனங்களும் கூறுபோட்டுத் தின்றுகொண்டிருக்கும் இந்நாட்களில் அரசியல் கவிதைகளின் தேவை பெரிதும் உணரப்படுகிறது.

அண்மையில், துருக்கி கடற்கரையோரமாக செத்துக் கிடந்த சிரியக் குழந்தை அய்லானுடைய சின்னஞ்சிறிய உயிரற்ற உடல் என்னையும் கவிதை எழுதத் தூண்டியது. ஆனால், அதை எழுதுவது ஒரு குற்றமாகப்பட்டது. வளர்ந்தவர்களுள் ஒருத்தியான நான் ஏதோவொரு வகையில் மறைமுகமான குற்றவாளியாக உணர்ந்தேன். அக்குழந்தையின் முகத்தில், உலகெங்கிலும் கொல்லப்படும் குழந்தைகளை நான் பார்த்தேன். அத்தகு சந்தர்ப்பங்களில் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு அஞ்சி எழுதாமல் விட்டுவிடுகிறேன். எழுதுவது மட்டுமல்லாமல், எழுதாமலிருப்பதுங்கூட சில நேரங்களில் எழுத்து சார் செயற்பாடுகளுள் ஒன்றாகிறது. அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காக சிலர் புனைபவற்றைக் காண்கிறபோதும் இந்தப் பின்னடிப்பு நேர்கிறது. உயிரினங்களின் (குறிப்பாக மனிதகுலத்தின்) இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் போர் மற்றும் இயற்கை அழிவுகளின்போது, எழுத்தும்கூட வாழ்வதற்காக நாம் கற்பித்துக்கொண்டிருக்கிற பொய்யோ, பாவனையோ எனும் ஐயம் எழும்போதிலும் எழுதமுடிவதில்லை. இந்தப் பேதலிப்புகளையெல்லாம் கடந்துதான் எழுதவேண்டியிருக்கிறது.

ஒரு சொல் அல்லது வாக்கியம் மின்னலிட்டு மறைந்தவுடன் அதைக் கவிதையாக்க அமர்வதில்லை. அது இருக்கவிடாமல் இடைவிடாமல் தொந்தரவு செய்யும்போதே கவிதையாக உருமாறுகிறது. மனதிற்குள் வரிகள் வளர்ந்துகொண்டேயிருப்பதை சிலசமயங்களில் உணர்வதுகூட இல்லை. எழுத அமர்ந்ததும் யாராலோ ‘டிக்டேற்’செய்யப்படுவதுபோல சரசரவென எழுதிச்செல்வது ஒரு மாயம்போல நிகழ்கிறது. ஆனால், ஒரு சஞ்சிகைக்கோ பத்திரிகைக்கோ யாராவது கவிதை தரும்படியாகக் கேட்கும்போது, வலுக்கட்டாயமாக என்னைப் பிடித்து நான் மேசையின் முன் அமரவைக்கிறபோது அந்த மாயத்தின் நிழலையும் காணமுடிவதில்லை. அப்படியே முயன்று எழுதினாலும் அதன் உட்புறம் கோறையாக இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ளவியலும். எப்படிப் பார்த்தாலும் கவிதை தன்னை எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறது. ஒரு தேவதை மண்ணில் கால் பதித்ததும் மானுடத்தியாகிவிடுவதைப்போல, எழுத எண்ணியதற்கும், எழுத்தில் வந்ததற்கும் இடையிலான இடைவெளி எத்தனை முயன்றும் நிரவமுடியாததாயிருக்கிறது.

ஒரு பெண்ணாக ஒப்பீட்டளவில் என் பாடு பரவாயில்லை. இருந்தும், பாரபட்சமான குடும்ப அமைப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பெண்கள் அன்றேல் குடும்பத்தினுள்ளேயே எழுதும் வெளி கிடைக்கப்பெற்ற (அல்லது ‘அனுமதி’க்கப்பட்ட) பெண்கள் என்று பார்த்தாலுமே இந்த ‘பெண் வேலை’கள் அவர்களை விட்டு அகலுவதில்லை. ‘குழம்பினுள் ஒரு கவிதையை அழித்தேன்’ என்ற வரி யாரால் எழுதப்பட்டது என மறந்துபோயிற்று. ஆனால், அது உணர்ந்து எழுதப்பட்ட வரி. ஒப்பீட்டளவில் கவிதையோடு அதிகநேரம் இருப்பவர்களும் அதை குறை ஆயுளில் கொல்லக் கொடுப்பவர்களும் பெண்கள்தாம்.

இப்புறவுலகிலிருந்து விலகி (முற்றிலுமாக அல்ல) எழுத்தோடும் வாசிப்போடும் வாழ்கையில் நூறு பழிப்புகளை எதிர்கொள்ளலாம். பொருளியல்சார் அவமானங்களை நேரிடலாம். ஆயிரம் மனக்கொந்தளிப்புகள் உள்ளோடலாம். எழுதிய எழுத்தின் நிமித்தம் குரோதங்களையும் விரோதங்களையுங் கூட சம்பாதித்திருக்கலாம். ஆனால், எழுத்து தருகிற ஆறுதலை மனிதர்கள் தருவதில்லை. தூலமற்ற ஒன்றே என் போன்றவர்களைச் செலுத்திச் செல்கிறது. எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டுகிறது. வாழ்நாள் துணையாக இருப்பேனென தோளைத் தொட்டு உறுதி சொல்கிறது. யோசனையிலாழ்ந்தபடி நடந்துசெல்லுமொருவரின் பாதையைக் குறுக்கறுத்தோடும் குட்டி அணிலைப்போல, நெஞ்சினுள் கனிவூட்டி வாழ்வினை மலர்த்துவது எழுத்தே. அதற்கென் நன்றிகள்.

இதில் எடுத்தாளப்பட்ட கவிதைகளைத் தமிழாக்கம் செய்தவர்: யமுனா ராஜேந்திரன்.

நன்றி - http://www.kapaadapuram.com/?p=89
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்