/* up Facebook

Dec 17, 2015

பாலியல் நிந்தனைச்சொற்களும் ஆணாதிக்கமும் - சிவசேகரம்


மனிதர் மனிதரை நிந்திக்கப் பயன்படும் சொல் பல வகையின. ஒருவரை இழிவாகப் பேச அவரைத் தாழ்த்தும் வகையிலான சொற்களும் சொற்தொடர்களும் பாவிக்கப்படுவது வழமை. எனவே நிந்தனைச் சொற்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றுக்குரிய சமுதாய விழுமியங்களை பிரதிபலிப்பன. பல்வேறு மனித சமுதாயங்களிலும் பன்படுத்தப்படும் நிந்தனைச் சொற்களில் கணிசமான ஒற்றுமை உள்ளது.

இது சமுதாய விழுமியங்களிடையே உள்ள பரவலான ஒருமையின் காரணமானது. அதேவேளை சமுதாய வேறுபாடுகளும் மொழி விருத்தியின் வேறுபாடும் நிந்தனைச் சொற்களிலும் வேறுபாட்டுக்கு காரணமாகின்றன. நமக்குப் பரிச்சயமான மொழியிலுள்ள நிந்தனைச் சொற்கள் பற்றியும் குறிப்பாக பாலியல் தொடர்பான சொற்கள் பற்றியும் கவனிப்போமாயின் பல ஆயிரம் வருடப் பெண்ணடிமை இழிசொற்களிலும் ஆழமாக வேரூன்றி இருப்பதை காணலாம்.

ஒருவரது தோற்றம் உடல்வலிமை செயற்திறமை அறிவு பண்பாடு ஒழுக்கம் ஆடை அலங்காரம் தொடர்பான நிந்தனைச் சொற்கள் பல உண்டு. இதற்கு உதாரணம் தந்து விளக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இவ்வாறான நிந்தனைச்சொற்கள் ஒருவரது குறைபாடுகளை மிகைப்படுத்தும் வகையில் பயன்படுவதுண்டு. சிலசமயம் ஒருவரது செயல்களின் மதிப்பீடாகவும் இவை பயன்படுவதுண்டு. சாதிப் பேராலும் பகையானதாகக் கருதும் ஒரு சமுதாயத்தின் பேராலும் ஒருவரை அயலார் என்று குறிப்பிடுவதாலும் மனிதரை இழிவுபடுத்தலாம். குறிப்பிட்ட ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேராதவரை அச்சாதிப் பெயரால் அழைத்து நிந்திப்பதை அறிவோம். இவ்வாறே சில அயல் இன, அயல் நாட்டுப் பெயர்க்குறிப்புகள் பயன்படுவதை அறிவோம். இதைவிட மிலேச்சன், பரதேசி ( சிங்களத்தில் பரதெமிலா அதாவது அந்நியத் தமிழன்) போன்ற சொற்கள்  அயலார் மீது நமது சமுதாயம் காட்டும் தயவின்மையையும் வெளிப்படுத்துவன.

இவ்வாறே பெண்மையச் சார்ந்த சொற்களும் (முக்கியமாகப் பேடி) ஒரு ஆணை பெண்மையுடையவன் எனக் குறிப்பிடும் சொற்களும் நிந்தனையாகப் பயன்படுவன. கடுமையான நிந்தனை பெருமளவும் பேய்பிசாசுகள் துர்த்தேவதைகள் விலங்குகள் போன்றவற்றின் பெயரால் மனிதரை அழைப்பதாகவோ அல்லது பாலுறுப்புக்களையும் பாலுறவையும் குறிக்கும் சொற்களாகவோ அல்லது இவற்றினதும் பிறநிந்தனைச் சொற்களதும் சேர்க்கையாகவோ அமைவதைப் பலரும் அறிவார்கள்.

எருமை, கழுதை, பன்றி, நாய் தேவாங்கு போன்றவை சனியன், மூதேவி, பிடாரி போன்று துரதிர்ஷ்டம் அல்லது துர்க்குணங்களுடன் இணைத்துக் காணப்படும். தேவுகளுடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு மனிதரை நிந்திக்கும் குறியீடுகளாகின்றன.ய யானை,பசு, பூனை எனும் சொற்கள் பொதுவாக நிந்தனைக்குப் பயன்படுவதில்லை. அவ்வாறு பயன்படும்போது அடைமொழியுடன் (கள்ளப்பூனை என்பதுபோல) வருவதையே அறிகின்றோம். இவை யாவும் குறிப்பிட்ட விலங்குகளையும் தேவுகளையும் பெண்களையும் பற்றி நமது சமுதாய வழக்கில் இருந்து வரும் கருத்துக்களையும் அவை தொடர்பான சமுதாய விழுமியங்களையும்  குறிப்பன. எவ்வாறாயினும் மிகுந்த சினமும் மிகையான அவமதிக்கும் நோக்கமும் கொண்ட சொற்கள் பாலியற் தன்மையுடையன. அது மட்டுமன்றி நடத்தை, பிறப்பு தொடர்பான சில சொற்களை விட்டால் மற்றவை ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி வழக்கிற்குப் புறம்பான சொற்களே.

பாலுறுப்புக்களையும், பாலுறவையும் குறிக்கும் நிந்தனைச் சொற்கள் தமிழ் எழுத்து வழக்கில் ஏற்கப்படாதவை என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறே சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும், எழுத்து வழக்கும் விஞ்ஞான மருத்துவ நடைமுறையும் பயன்படுத்தும் சொற்கள் நிந்தனையாகப்  பயன்படும் சொற்களினின்றும் வித்தியாசமானவையாக இருப்பதை காணலாம். 
ஒருவரை விபச்சாரியின் பிள்ளை என்றோ, திருமணமாகாத பெற்றோருக்குப் பிறந்தவரென்றோ ஏசுவதற்குப் பாவிக்கும் சொற்கள் எல்லா முக்கிய மொழிகளிலும் உள்ளன என்றே கூறலாம். இவ்வாறு ஒருவரை ஏசும்போது அது அவரைத் திருடர், ஒழுக்கம் கெட்டவர் என்று ஏசுவது போலில்லாது 
வெறும் அவதூறான நிந்தனையாகவே இருக்கும்.

இவ்வாறே ஒரு பெண்ணை ஒழுக்கங் கெட்டவள் என்று பொருட்படுமாறு சொல்லும் வார்த்தைகள் அவரது ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்துவதை விட அவரை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்டவை. எவ்வாறு நோக்கினும் இவ்வாறான வசைச் சொற்கள் ஒரு ஆணை அவமதிக்கும் போது கூட அவரது தாயை விபச்சாரி, அல்லது ஒழுக்கங் கெட்டவர் என்று அழைப்பதாகவே அமைகின்றன. அனைத்தினும் மோசமாகத் தாயுடன் 
பாலுறவு கொண்டவன் என்ற சொல்லால் அதிகம் அவமதிக்கப்படுவதும் அவமதிப்புக்கு உட்பட்டவனுடைய தாயேதான். ஒருவனைக் காமுகன் என்றோ ஸ்திரிலோலன் என்றோ குறிப்பிடுவோமாயின் அது வெறும் வசையாக இல்லாது குற்றச்சாட்டான முறையிலேயே சொன்னதாகக் கருதுவதற்கு இடமுண்டு. இந்த நிந்தனைக்குரிய சொற்கள் ஆணின் ஒழுக்கத்தை விட பெண்ணின் ஒழுக்கத்தையே கேள்விக்குட்படுத்தும் நியாயம் என்ன? இதற்கு விரிவான விளக்கம் இங்கு அவசியமில்லையென்று நினைக்கின்றேன். 

ஒருவரை பாலுறுப்புக்களின் பெயர்களால் அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்ட சொற்களால் இழிவுபடுத்தும்போதும் பாலுறவைக் குறிக்கும் சொற்களால் இழிவு படுத்தும் போதும், ஒருவரை விலங்குகளின் பெயரால் நிந்திப்பதைவிடக் கடுமையான உணர்வே தென்படுகின்றது 
மலம், அழுகல், துர்நாற்றம் போன்றவற்றுக்கு ஈடானவையாகவே பாலுறுப்புக்களை குறிக்கும் சொற்கள் பயன்படுகின்றன. இங்கும் பெண்களின் பாலுறுப்புக்களைக் குறிக்கும் சொற்களே நிந்தனைச் சொற்களில் அதிகமாக இருப்பதும் அவை ஆணுறுப்புக்களைக் குறிக்கும் சொற்களை விட 
அதிகமாகப் பாவிக்கப்படுவதும் தற்செயலானதல்ல. பாலுறவைக் குறிக்கும் நிந்தனைச் சொல் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி வழக்கில் புணர்ச்சி என்ற சொல்லைப் போலன்றி, ஆணால் பெண்ணுக்கு செய்யப்படும் காரியமாக இருப்பதும் நம் கவனத்திற்குரியது. 

இவை வெறுமனே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள் மட்டுமா அல்லது நமது சமுதாயங்களுட் பாலுறவு பற்றியும் பாலுணர்வு பற்றியும் இருக்கின்ற  வக்கிர உணர்வுகள், போலி அருவருப்பு, பாசாங்குகள் என்பவற்றின் வெளிபாடுகளுமா என்பது சிந்தனைக்குரியது. ஆபாசமான எழுத்து, பேச்சு, படங்கள் என்பவற்றை எதிர்ப்போர் கூட ஆத்திரம் வரும்போது பாலியல் நிந்தனச் சொற்களைக் கூசாது பாவிப்பதுண்டு.  மொழி வழக்கில் உள்ள துர்ப்பிரயோகங்களைப் போல நிந்தனச் சொற்கள் அதிகம் சிந்தனை இல்லாமலேயே பாவிக்கப்படுகின்றன. சாதிப் பெயராலோ 
பிரதேச, இனப்பெயராலோ  எவரையும் நிந்திப்பதை இன்று உலகின் சமுதாயங்கள் தவறென்று ஏற்கின்றன. அடிப்படையிலான மனித உணர்வான பாலுணர்வையும் அதைவிட முக்கியமாக மனித இனத்தின் ஒரு பாதியினரை அவமதிக்கும் சொற்பிரயோகங்கள் பற்றி நாம் கூடிய கவனம் காட்ட வவேண்டாமா?

நன்றி
சக்தி 
மார்ச் 1992 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்