/* up Facebook

Dec 18, 2015

“நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்கிறது?” கவிஞர் தாமரை


நடிகர் சிம்பு- அனிருத் இசையமைப்பில் உருவான பீப் பாடல் குறித்து கவிஞர் தாமரை கருத்து தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இதுகுறித்து எழுதியிருக்கிறார். அதில்,

“கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி அழைப்புகள். சிம்பு-அனிருத் தொடர்புள்ள பாடல் குறித்து என் கருத்து வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு ஒருவாரமாக இரவு பகல் பாராத வேலை. வீட்டுக்கும், பணியிடத்துக்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். இதில் எங்கே போய் இதுபோன்ற பாடல்களையெல்லாம் கேட்பது ?

ஆனால் ஊடகங்கள் துரத்த ஆரம்பித்த பின்பு கேட்டு வைத்தேன். அப்புறம்தான் தோன்றியது, இதில் நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது என்று. இப்படியெல்லாம் எழுதலாமா, பெண்களை இழிவுபடுத்தலாமா, சமூக சீரழிவு இத்யாதி இத்யாதி…அடப்பாவிகளா, நானும் இதைத்தானே இருபது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இப்போதுதான் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல பொங்குகிறார்களே என்று…..

நான் சொன்னது மட்டுமல்ல , செய்தே காட்டியிருக்கிறேன். வெறும் வாய்ப்பேச்சில்லை, உதார் விடவில்லை, வாயால் வடை சுடவில்லை, செயலால் காட்டியிருக்கிறேன்.
நீண்ட நெடிய 18 ஆண்டுகள். ஆபாசமாக எழுதமாட்டேன், அருவருக்கத்தக்க வரிகள் தரமாட்டேன், சமூகத்தைக் கெடுக்கும் பாடல் எழுத மாட்டேன்…. பாடல்கள் மட்டுமல்ல , காட்சிகள், வசனங்கள், நடிகர்களின் உடல்மொழி எதிலும் ஆபாசம் கூடாது என்று வலியுறுத்தி வந்திருக்கிறேன். இதற்காகத் தனிப்பட்ட முறையில் எனக்குப் பல இழப்புகள் இருந்திருக்கலாம், ஆனால் என் ‘ கலை, கலைஞர்களின் பொறுப்புணர்வு ‘ தொடர்பான நிலைப்பாட்டில் எந்த சமரசமுமில்லை. நேற்று இப்படித்தான், இன்று இப்படித்தான் , நாளையும் இப்படித்தான்… எனவே, நானே கருத்தாக இருக்கும்போது, தனியாக இது குறித்துக் கருத்து வேறு சொல்ல வேண்டுமா ?…

சரி போகட்டும், நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்கிறது ?? அப்புறம் ஏன் இந்தப் ‘பொங்கல்’?
நல்ல பாடல்கள் வரவேண்டும் என்று இந்த சமூகம் விரும்பியிருந்தால், தாமரை போல் இத்தனை நேரம் ஒரு பத்துப்பேராவது வந்திருக்க வேண்டாமா ? ‘ தாமரை சமூகத்தைச் சீரழிக்காத, ஆபாசமற்ற நல்ல பாடல்களை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார், நானும் அவரைப் பின்பற்றி எழுதப் போகிறேன் ‘ என்று ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவர்கள் எத்தனை பேர்? கை தூக்குங்கள் பார்க்கலாம்…

இல்லையல்லவா, ஒருவர்கூட இல்லையல்லவா ?? அப்புறமென்ன, ‘ ஐயோ திரைப்படப் பாடல்கள் சீரழிக்கின்றன ? ‘ என்ற ஒப்பாரி ??
உண்மை என்னவெனில் தாமரைகள் இந்த சமூகத்திற்குத் தேவையில்லை. தாமரைகள் ‘ பிழைக்கத் தெரியாதவர்கள், காலாவதியாகிப் போனவர்கள், Museum pieces’…
நல்லனவற்றைக் கொண்டாடத் தெரியாத, பாதுகாத்து வைத்துக் கொள்ளாத சமூகத்திற்கு அல்லன தானே கிடைக்கும் ??
U asked for it, U got it, அப்புறம் ஏன் புலம்ப வேண்டும் ?

அரசியல், ஆன்மிகம், இலக்கியம், குடும்பம், கல்வித்துறை, நீதித்துறை, ஊடகங்கள்….. என சமூகத்தின் எல்லாத்தரப்பிலும் சீரழிவு, சீரழிவு, சீரழிவு… சினிமா மட்டும் சீலத்தோடு இருக்க வேண்டுமெனில் எப்படி ? சிம்புவும் அனிருத்தும் எங்கே இருந்து வந்தார்கள் ? வானத்திலிருந்து குதித்தார்களா ? வேற்றுக்கோள் வாசிகளா? இந்த சமூகத்திலிருந்துதானே அவர்களும் வந்தார்கள் ??
இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார், குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள் என்று ! எவ்வளவு உண்மை !! குழந்தைகள் பட்டதைச் செய்வதில்லை, பார்த்ததைத்தான் செய்கிறார்கள். நாம் ‘பின்நவீனத்துவவாதி’களாக இருந்து கொண்டு அவர்களை மட்டும் ‘முன்நவீனத்துவத்திற்கு’ப் போகச்சொன்னால் எப்படி ஐயா ??? க்க்குறும்பு…….!!!

தாமரை போன்றவர்கள் விதிவிலக்குகள், உதிரிகள். தனிமரம் தோப்பாகாது. தனிமரங்கள் தடையாகக் கருதப்படும் , வெட்டப்படும் , வீழ்த்தப்படும். நினைவில் கொள்ளவும் : அறம், விழுமியங்கள் அழிந்த சமூகத்திற்கு அறம், விழுமியங்கள் அற்ற படைப்புகள்தாம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே பீப் பாடலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர்கள் புலமை பித்தன், முத்துலிங்கம், சினேகன், பா. விஜய், யுகபாரதி உள்ளிட்ட கவிஞர்கள் 38 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல், பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும், ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிப்பதாக கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பாடல், சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்து விடும் என கவிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோல் சமூகத்தைச் சீரழிக்கும் பாட்டுக்கள், படைப்புகள் வெளிவராது செய்ய அனைத்து படைப்பாளிகளும், ஊடகங்களும் ஒன்றுபட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ்த் திரைப்படத்துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகள், சமூக அக்கறையோடும், பொறுப்போடும் இருக்க வேண்டும் என கவிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களால் அங்கீகரிக்கப்பட்டு மிகப் பிரபலமாக இருக்கும் படைப்பாளிகள், கலைஞர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என கவிஞர்கள் தங்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்