/* up Facebook

Dec 6, 2015

குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?! - ரஞ்சனி நாராயணன்


ஒரு குழந்தையை ‘கெட்ட குழந்தை என்று முத்திரை குத்துவது மிகமிகத் தவறு. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். தான் ஒரு கெட்ட குழந்தை என்ற எண்ணம் குழந்தையின் மனதில் ஊறிவிட்டால் அப்படியே நடந்து கொள்ளும். வளர்ந்த பின்னும் அந்த எண்ணம் மாறாது. அதனால் சிறு வயதிலேயே அந்தக் குழந்தையிடம் பேச வேண்டும். என்ன சொல்லலாம்? ‘இங்கே பாரு, நீ நிச்சயம் கெட்டவள் இல்லை. நீ இப்போ ரொம்ப சின்னவள். சின்னவங்க சில சமயம் தவறான காரியங்கள் செய்வார்கள். ஆனா நானும் அப்பாவும் சேர்ந்து உனக்கு தவறான காரியங்கள் செய்யாமலிருக்க உதவப் போகிறோம். நீ ரொம்பவும் நல்ல பெண் என்ற எண்ணத்திலேயே நீ வளர வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக தனது செய்கைகளை மாற்றிக் கொள்ளும்.

கோபப்படும் அல்லது கோபமாக இருக்கும் குழந்தையின் மனநிலையை மாற்ற சிரிப்பு நல்ல மருந்து. சின்னச்சின்ன தவறுகள் செய்யும்போது நாம் கோபப்படாமல் சிரித்துவிடுவதால் குழந்தையிடம் நாம் கோபித்துக் கொள்வோமோ என்கிற பயம் மறைந்து தன் செய்கைக்கு தானே வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பிக்கிறது.
எங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் இது:
என் பெண் அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். தமிழில் நிறைய பிழை செய்வாள். ‘க்’, ‘ச்’ போட மறுப்பதுடன் ‘கால்’ போடவும் மறந்து விடுவாள். அதை சுட்டிக் காட்டினால் அவளுக்கு ரொம்பவும் கோபம் வரும். ஒருமுறை அவளது மாதாந்திர டெஸ்ட்டின் போது என் அம்மா வந்திருந்தார். அவளது தமிழ் டெஸ்ட் பேப்பர் வந்தது. வழக்கம்போல எழுத்துப் பிழைகள்தான் அதிகம் இருக்கிறது என்று ஆசிரியர் எழுதியிருந்தார். ஒரு கேள்வியின் பதிலைப் பார்த்த என் அம்மா ரொம்பவும் சிரித்துவிட்டார். என் பெண்ணுக்கு கோவம், அழுகை எல்லாம்.

இந்தியாவின் பிரதமர் ‘இந்திரா காந்தி’ என்று எழுதும்போது இவள் ‘இந்திர கந்தி’ என்று எழுதியிருந்தாள். என் அம்மா சிரித்துக்கொண்டே, ‘ஏண்டி! இப்படி இரண்டு காலையும் உடைத்துவிட்டால், பாவம்  பிரதமர் எப்படி நடப்பார்?’ என்று கேட்டவுடன் என் பெண் உட்பட நாங்கள் எல்லோருமே  சிரித்துவிட்டோம். அவளது கோபமும் மாறியது. இனிமேல் பார்த்து எழுதுகிறேன் என்றாள்.

பெற்றோர்கள் கோபப்படுபவர்களாக, சத்தம் போடுபவர்களாக இருந்தால் குழந்தைகளும் அப்படி இருப்பதுதான் இயல்பு என்று நினைத்துக் கொள்வார்கள். எல்லா நேரத்திலும் குழந்தையைக் கோபித்துக் கொண்டால் உங்கள் கோபத்திற்கு மதிப்பு போய்விடும். இதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுவுமில்லாமல் கோபம் உங்களது யோசிக்கும் திறனை குறைத்துவிடும். நிதானமாக சூழ்நிலையை அலச முடியாது போகும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். நீங்கள் யோசிக்காமல் சத்தம் போட்டால், அது சூழ்நிலையை இன்னும் மோசமாக்கும். உண்மையில் மோசமாக இருக்கும் சூழலையும் நீங்கள் கையாளும் விதத்தில் சுலபமாக சரி செய்துவிடலாம். குழந்தையும் உங்களைப் பார்த்து எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை கையாளுவது என்று கற்றுக்கொள்ளும். நீங்களே உங்கள் குழந்தைக்கு ரோல் மாடலாக இருப்பது நல்லது.

என் தோழி வீட்டில் நாய் வளர்க்கிறார்கள். ரொம்பவும் சின்ன குட்டி அது. ஒருமுறை அதனுடன் விளையாடிக்கொண்டே சான்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது அவளது குழந்தை. குட்டிநாய் திடீரென துள்ளிக் குதித்தது. அது குதித்த வேகத்தில் குழந்தையின் கையிலிருந்த டிபன் தட்டு கீழே விழுந்து அதிலிருந்த சாஸ் கார்பெட்டில் வழிந்தது. குட்டிநாய் சாஸின் மேல் கால் வைத்தபடி ஓட ஆரம்பித்தது. அறை முழுவதும் சாஸ் – குட்டி நாயின் கால் அடையாளங்களுடன்! என் தோழிக்குக் கோபமான கோபம். இப்போது எல்லாவற்றையும் யார் சுத்தம் செய்வது? நாயைப் பிடிக்கப் போனால் அது மற்ற அறைகளுக்கும் ஓடும். குழந்தையை கோபித்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை. இது குழந்தையின் தப்பு இல்லை. அதனால் சட்டென்று தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நாயை ஓடாமல் பிடித்து தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குச் சென்றாள். கூடவே தன் குழந்தையையும் அழைத்துக் கொண்டு போய், நாயை சுத்தம் செய்ய உதவுமாறு செய்தாள். நாய் சுத்தம் ஆகியதுடன், குழந்தையும் ஒரு பாடம் கற்றது. நாய் செய்த அமர்க்களத்தை சரி செய்ய அம்மா பாவம், எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் புரிந்தது. அன்றிலிருந்து சாப்பிடும்போது நாயுடன் விளையாடுவதில்லை என்ற தீர்மானமும் போடப்பட்டது.

முன்னுதாரண அம்மாவாக நடிகை தேவயானி, தனது மகள்களுடன்.
கோபக்காரக் குழந்தையை கையாள்வது பற்றி அடுத்த பகுதியிலும் பேசலாம். அதற்கு முன் சமீபத்தில் செய்தித்தாளில் நான் படித்த செய்தி ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நிகியா என்னும் சிறுமி, 8 ஆம் வகுப்புப் படிக்கிறாள். ஒருமுறை தனது பள்ளிகூட பையை தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகள் (நாலாம் வகுப்பு படிக்கும் சிறுமி) கோகிலாவிற்குக் கொடுத்திருக்கிறாள். கோகிலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘இதுதான் அக்கா, நான் பள்ளிக்குக் கொண்டு செல்லும் முதல் பை’ என்று கண்களில் நீர் வர நன்றி சொல்லியிருக்கிறாள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நிகியாவிற்கு இது மிகவும் வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்ல. இந்த உலகத்தில் நம்மை விட வசதியிலும் வாய்ப்பிலும் பின்தங்கி இருக்கும் குழந்தைகளைப் பற்றி முதல்முறையாக அவளுக்குத் தெரிய வந்திருக்கிறது. எப்படியாவது இந்த குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலில், தனது சக மாணவ மாணவிகளிடமிருந்து அவர்கள் உபயோகித்து இப்போது வேண்டாம் என்று வைத்திருக்கும் பள்ளி பைகள், குடிநீர் பாட்டில்கள், பென்சில்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள் எல்லாவற்றையும் சேகரித்து தன் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பள்ளிக்குக் கொடுத்திருக்கிறாள்.

அதிலும் அந்தச் சிறுமி யோசனையுடன் செயல்பட்டிருப்பது தான் பெரிய விஷயம். வெறுமனே கொடுத்தால் அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று நினைத்து அவர்களுக்கு ஒரு க்விஸ் நிகழ்ச்சி நடத்தில் அதில் கலந்து கொண்டவர்களுக்கு என்று கொடுத்திருக்கிறாள். மீதம் இருக்கும் பை, பாட்டில்கள் ஆகியவற்றை பள்ளித் தலைமையாசிரியரிடம் கொடுத்து யாருக்குத் தேவையோ அவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறாள் இந்தச் சிறுமி. ‘நான் பெரியவள் ஆனவுடன், மாத்ஸ் லாப் (maths lab) கெமிஸ்ட்ரி லாப் எல்லாம் இவர்களுக்காக அமைத்துக் கொடுக்கப் போகிறேன்’ என்கிறாள் இவள்.

இதைப் போல சிறுவர்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள். இளைய தலைமுறையின் நம்பிக்கை விளக்குகள். நான்குபெண்கள் குழு இந்தச் சிறுமியைப் பாராட்டுகிறது.

நன்றி - http://fourladiesforum.com/

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்