/* up Facebook

Dec 18, 2015

பெண்ணியத்தில் வெளிவந்த நிர்மலா கொற்றவையின் கட்டுரை தொடர்பாக - (விஜி - பிரான்ஸ்)நிர்மலா கொற்றவை தனது சாவின் உதடுகள் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்த “உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்” எனும் கட்டுரையை பெண்ணியம் இணையத்தளம் கடந்த 14 அன்று நன்றியுடன் மீள வெளியிட்டிருந்தது.
இந்தக் கட்டுரையை பெண்ணியம் பிரசுரித்திருக்கக் கூடாது என்கிற வாதத்தை முன்வைத்து விஜி (பிரான்ஸ்) அவர்கள் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். அதில் அந்த பெண்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது என்பதே அவரது கருத்தின் சாரமாக இருந்தது. அந்த ஒரு காரணம் அக்கட்டுரையை நிராகரிக்க போதுமானது அல்ல என்று பதிலளித்திருந்தோம். அக்கட்டுரையின் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்பினோம். மேலும் பெயர்கள் குறிப்பிடப்பட்ட விடயம் குறித்து விஜி ஒரு குறிப்பை பகிரங்கமாக எழுதினால் அதனை வெளியிடுவதில் எந்த தடையும் இருக்காது என்பதைத் தெரிவித்ததுடன் அப்படி ஒரு உரையாடல் தொடங்கப்பட்டால் ஒரு நிலைப்பாடு எடுக்கவும் பலருக்கும் வாய்ப்பாக இருக்கும் என்பதையும் தெரிவித்தோம். அதற்கிணங்க அவர் அனுப்பியுள்ள குறிப்பு இது.

பெண்ணியம் இணையத்தளத்தில் பதிவாகியிருக்கும் நிர்மலா கொற்றவையின் கட்டுரையை வாசிக்கும் போது எனக்கு இரட்டிப்பான அதிர்வைத் தந்தது. ஒன்று எமது தமிழ் சமூகத்தின்  பிரசைகளான சிம்பு, அனிருத்   போன்ற இரு ஆண்களினது பெண் வெறுப்பு சொல்லாடல்களுக்கு எதிர்வினையாக சிம்புவின் இழிசெயலுக்கு  எவ்வித சம்பந்தமுமற்ற  அவரது குடும்ப  பெண்களின் பெயர்களை இணைத்து  பெண்களையே  மீண்டும் இக்கட்டுரையும்  நிந்தித்திருப்பது, இரண்டாவது அந்தவகையில் அக்கட்டுரை கொண்டிருக்கும் ஊடக தர்ம மீறலை   கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் பெண்ணிய இணையத்தளம் அதை பிரசுரித்ததன் ஊடாக கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் ஊடக தர்மத்தை மீறியிருப்பது..

எம்முடைய இந்த ஆணாதிக்க சமூகத்தில்  பெண்ணுறுப்புகளை பெண்களை அவமதிக்கும் நோக்கில் பாவிப்பது ஒன்றும் புதிதல்ல.  இதுபோன்ற வார்த்தைகள் எமது ஆண்களின் வாயில் இருந்து மிக மிகச் சாதாரணமாகவே வெளிப்படுத்தப்படுகின்றது . பெண்களை வசைவதற்கு மட்டுமல்ல ஒரு நண்பனையோ, எதிரியையோ தாழ்வாக சொல்வதற்கும் இதைத்தான் சொல்கிறார்கள். பொது போக்குவரத்துசாதனங்களை பயன்படுத்தும் வேளைகளிலும்,  ரெலிபோன் உரையாடல்களிலும், விளையாடிக்கொண்டு இருக்கும்போதும், ஏன் யுத்தகளத்திலும் கூட ஆணைகள் வழங்கப்படும்போதும் கூட  அடைமொழியாக இவ்வித சொல்லாடல்கள் மிக சாதாரணமாக அள்ளி வீசப்பட்டன.

  இது இவ்வாறிருக்க நாங்கள் யாரும் இதை இதற்கு முதல் கேட்காதது போலவும். ஏதோ இப்போதான் எல்லோருக்கும் தெரியவந்திருப்பது போலவும், இனித்தான் இதைப்பாவிக்கப்போகிறார்கள் போலவும் பதறியடிப்பதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதென்பது சிம்புவை திருப்பி வசைபாடுவதால் மட்டும் சாத்தியப்படாது. மாறாக எமது ஆணாதிக்க சமுகத்தை நோக்கிய எமது தொடர் போராட்டங்களே அதனை சாத்தியமாக்கும். எது எப்படி இருந்தாலும் இந்த சிம்பு போன்றவர்களை கண்டிக்க பெண்களை மனிதர்களாக மதிக்கும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆகவே இதை கண்டிக்கவோ, எதிர்த்து எழுதவோ கூடாது என்பது அல்ல எனது கருத்து.

ஆனால் இக்கண்டனங்களை வெளிப்படுத்துபவர்கள் எமது சமூகத்தில் ஏலவே இருக்கும் குழந்தைகள் செய்யும் குற்றங்களுக்கெல்லாம் பெற்று வளர்த்த தாய்மார்தான் காரணம் எனும் மிக மோசமான கருத்தை  கொண்டிருக்க முடியாது. பொதுவாக ஆண்கள் கெடுவதே பெண்களால்தான் என்கின்ற கருத்து அன்று தொட்டு இன்றுவரை நிலவிவருகிறது. "இந்திரன் கெட்டதும் பெண்ணாலே? சந்திரன் கெட்டதும் பெண்ணாலே".   "ஆதாம் கெட்டதும் ஏவாளால்தான்" ........ இவற்றை எல்லாம் ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது கொற்றவையின் கட்டுரை.   கொற்றவையின் கோபம் நியாயமானது மட்டுமல்ல அவசியமானதும்கூட. ஆனால் அந்த கோபம் குறித்த  நபர்களை தாண்டி அவர்கள் சார்ந்த பெண்கள் மீது பாய்வது ஒருபோதும் ஏற்புடையதல்ல. அந்தவகையில் காலாகாலமாக கடைப்பிடித்துவரும் "பெண்கள்தான் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் காரணம்" என்கின்ற ஆணாதிக்க கருத்தியலுக்கே கொற்றவையின் எழுத்துக்கள் நியாயம் வழங்க முற்படுகின்றன. இந்த அவசரமும் சிம்பு சார்ந்த தனிநபர்கள் மீதான சுட்டுதல்களும்  சிம்புவின் செயலுக்கு நிகரான வன்மம் பொருந்தியது.

கொற்றவை  எவ்வாறு சிம்புவின் தாய்மார் மீதும், சகோதரிகள் மீதும் இதற்கான குற்றத்தை சுமத்த முடியும். அவர்களும் இச்சமூகத்தில் எம்போன்ற ஒரு பெண்கள்தானே?  அவர்கள் மட்டும் இதற்கு எவ்வாறு குற்றவாளி ஆக்கப்பட முடியும்? என்னைப்பொறுத்தவரை அப்பெண்களும் எம்மைப்போன்று ஆத்திரமும், வேதனையும் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் கொற்றவை  எழுதிய பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட  இந்தக்கட்டுரை அவர்களை மிக மோசமான முறையில் கூனி குறுக வைத்திருக்கும். அந்தவகையில் ஆணாதிக்க சமூகத்தின் தேவையை நீங்கள் நிறைவேற்றியிருக்கின்றீர்கள். இன்னொருபுறம் இந்த ஆண்களின் செயற்பாட்டுக்கான குற்றவாளிகளாக தாய்மாரையும், சகோதரிகளையும் நிறுத்தியிருப்பதினூடாக இந்த ஆணாதிக்க சமூகத்தை காப்பாற்ற முனைகிறீர்கள். அதிலும் இந்த வயது வந்த இளைஞர்களது செயற்பாட்டுக்கு எவ்வாறு அந்தப்பெண்கள் பொறுப்பேற்க முடியும்?  இவ்வாறான பெண்களை அசிங்கப்படுத்தும், வன்முறைகளுக்கு எமது கேடுகெட்ட சமூகம்தான் முற்றுமுழுதான காரணம். நாம் இப்போதும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் எமது மொழியும் சமயங்களும், சாதிப்படிமுறைகளும், பெண்ணடிமைத்தன கலாச்சார பண்பாடுகளுமே காரணமாகும். இவைகளை போட்டுடைக்காதவரைக்கும் பெண்களுக்கு விமோசனம் இல்லை. 

1 comments:

kr das said...

CORRECT COMMENT.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்