/* up Facebook

Nov 6, 2015

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்திருமணம் ஆகாமல் தாயான பெண், அதன் பின்னணி எப்படி இருந்தாலும் இயல்பான வாழ்க்கை நடத்துவது நமது சமூகத்தில் கஷ்டமான காரியம். அப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்வே போராட்டக் களமாகி விடும். அம்மாதிரியான ஒரு பெண்தான், நிருஷா. அலகாபாத்தைச் சேர்ந்த நிருஷா, தனது நிஜக்கதையைச் சொல்கிறார்…

‘‘நான் அலகாபாத் தாரியாபாத் பகுதியில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை. நாங்கள் ஐந்து மகள்கள், ஒரு மகன். ஆறு பேரையும் காப்பாற்றும் பொறுப்பு, அம்மாவின் தோளில் விழுந்தது. அந்தப் பொறுப்பை, சின்ன வயதிலேயே நானும் சேர்ந்து ஏற்றுக்கொண்டேன்.

நான், உள்ளூர் வானொலி நிலையத்துக்கு ‘ஸ்கிரிப்ட்’ எழுதினேன். அதோடு அரங்கங்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்தேன். அப்போதெல்லாம், என்னை வீட்டுக்கு சக நடிகர்கள் தங்கள் வாகனத்தில் கொண்டு வந்து விட்டுச் செல்வார்கள். அதனாலேயே என்னை ஏரியாவாசிகள் ஒரு மாதிரி பேசுவார்கள். ஆனால் அது பற்றியெல்லாம் நான் கவலைப்படும் நிலையில் எங்கள் வீட்டு பொருளாதார நிலை அப்போது இல்லை.

வீட்டின் பணத் தேவை அதிகமாக இருந்தநிலையில், கூடுதல் வருவாய் வாய்ப்புத் தேடி நான் மும்பை செல்லத் தீர்மானித்தேன். 1200 ரூபாயுடன் மும்பை வந்து இறங்கினேன். யாரைப் பார்ப்பது, எங்கே, என்ன வேலை தேடிக்கொள்வது என்ற எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. மூன்றே நாட்களில் கையில் இருந்த காசெல்லாம் கரைந்துவிட்டது. ஒரு வார காலம் சீக்கிய கோவில் ஒன்றில் தங்கியிருந்தேன்.

அதன்பிறகு, கிடைத்த சிறுசிறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினேன். ஒரு வீட்டில் ‘பேயிங் கெஸ்ட்’டாக தங்கிக் கொள்ள அனுமதி கிடைத்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கே தங்க முடியாது. இருந்தபோதும், தூங்குவதற்கு இடம் கிடைத்ததே பெரிது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இந்த நிலையில்தான் நான் அனிலை சந்தித்தேன். அவன் அலகாபாத்தில் நாடகக் குழுவில் என்னுடன் இடம்பெற்றிருந்தவன். மும்பை என்ற பெருநகரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு, அனிலை சந்தித்தது பெரும் ஆறுதலாக இருந்தது. அனில் என்னை நேசிப்பதாகச் சொன்னபோது, எனக்கும் அவன் மேல் விருப்பம் இருப்பதை உணர்ந்தேன்.

ஆனால் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையைக் கூறிய அனில், மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெறும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்தான். எனவே நான் அனிலுடன் தொடர்ந்து நெருங்கிப் பழகுவது என்று தீர்மானித்தேன்.

இதற்கிடையில், டி.வி. நிகழ்ச்சிகளுக்கு ஆடைகளை வழங்கிய ஒரு முன்னணி நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அதில் நான் சிறப்பாகப் பணியாற்றியதால் விரைவிலேயே உதவி ஆடை இயக்குநர் பொறுப்பும் கிடைத்தது. ஆனால் அந்நிறுவனத்தில் எனது வளர்ச்சி ஒரு சீனியரின் கண்ணை உறுத்த, சில மாதங்களிலேயே நான் வேலையை விட்டுத் தூக்கப்பட்டேன்.

மறுபடியும் வேலை இல்லாத நிலை. அனிலும் இன்னும் தனது மனைவியை விவாகரத்துச் செய்யவில்லை. ஒரு மாதிரி மனஅழுத்தமும் சோர்வுமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். பின் ஒருவாறு அதிலிருந்து மீண்டு, மற்றொரு நிறுவனத்தில் கெஞ்சிக் கூத்தாடி வாய்ப்புப் பெற்றேன். அங்கு முத்திரை பதித்ததன் விளைவாக ஓராண்டிலேயே சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது ஒன்று கிடைத்தது.

வேலை பற்றிய கவலை தீர்ந்த நிலையில், எனது தனிப்பட்ட வாழ்க்கைதான் சீராகவில்லை. அனிலுடன் நெருங்கிப் பழகினேன். இதற்கிடையில் அவன் இன்னும் தனது மனைவியுடன்தான் வசிக்கிறான், அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று அறிந்தபோது நான் நொறுங்கிப் போனேன். ஆனால் அனிலோ, தான் மனைவியை சட்டப்படி பிரிந்து வந்துவிடுவேன், நாம் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.

நாட்கள் நகர்ந்தன. அனிலுடனான நெருக்கத்தில் நான் கருவுற்றேன். எப்போது என்னை திருமணம் செய்துகொள்வாய் என்ற கேள்விக்கு அனில் தொடர்ந்து மழுப்பலான பதில்களையே கூறிக்கொண்டிருந்தான்.

நான் எப்போதும் என்னை தைரியமானவள், அச்சமற்றவள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தைரியத்துக்கு இப்போது ஒரு பெரும் சோதனை. அனில் கருவைக் கலைத்துவிடும்படி சொல்ல, நான் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்தேன். அதன்பிறகு அனிலுக்கும் எனக்கும் இடையே பிரச்சினைதான். தொடர் சண்டை, சச்சரவு.

எனது பெற்றோரும் என்னை ஏற்க மறுத்துவிட்ட நேரத்தில் ஒரு கர்ப்பிணியாய் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். பிரசவத்துக்குக் கூட நானே தனியாக ஆஸ்பத்திரிக்குச் சென்று சேர்ந்தேன். என்னையும், நான் பெற்ற குழந்தையையும் பார்க்க ஒரு ஜீவன் கூட வரவில்லை.

குழந்தை பெற்ற பதினைந்தாவது நாளில் நான் வேலைக்குக் கிளம்பிவிட்டேன். கைக்குழந்தையையும் வேலைபார்க்கும் இடத்துக்கு கொண்டு சென்றேன். ஸ்டூடியோ, வெளிப்புறப் படப்பிடிப்புகள் எல்லாவற்றிலும் என் குழந்தை என்னுடன் இருக்கும். வேலைப் பரபரப்புக்கு இடையிலும் அதைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அந்தக் கஷ்டத்தை எல்லாம் மீறி, தாய்மை தந்த நிறைவு எனக்குள் இருந்தது.

அனில் அப்போதும் என்னுடன் தொடர்பில்தான் இருந்தான். ஆனால் அப்பாவுக்கு உரிய எந்தக் கடமையையும் செய்யவில்லை. சட்டப்படி நான் அவன் மனைவி ஆவேன் என்ற துளியளவு நம்பிக்கையும் காலப்போக்கில் காலாவதி ஆகிவிட்டது.

மகன் மனாலை வளர்ப்பதில் தனியாக எனது போராட்டம் தொடர்ந்தது. நான் மனாலை பள்ளியில் சேர்க்க விண்ணப்பித்தபோது ‘தந்தையின் பெயர்’ என்ற இடத்தை நிரப்பாமல் விட்டேன். அதன் காரணமாகவே என் மகனுக்கு இடம் கொடுக்க மறுத்தது அப்பள்ளி. திருமணமாகாமல் பெற்ற குழந்தைக்கு இடம் கொடுக்கச் சொல்லி சட்டம் சொல்கிறது. ஆனால் சில மனங்கள் இன்னும் மாறவில்லையே? இது தொடர்பாக நான் நடத்திய சட்டப் போராட்டத்தில் எனக்கு வெற்றி. என்னிடம் மன்னிப்புக் கோரி மகனை சேர்த்துக்கொண்டது அப் பள்ளிக்கூடம்.

இதே மாதிரியான பிரச்சினைதான் என் மகனுக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோதும் ஏற்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் எனது விண்ணப்பத்தைப் பெற்ற பெண்மணி, அப்பா பெயர் குறிப்பிடாததால் விண்ணப்பத்தை மேலே அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதையும் விட, ‘உன் மகன் பிறந்த விதமே தப்பு’ என்று அவர் கூறியது தான் எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

வீட்டுக்குத் திரும்பும் வழியில், ‘நான் பிறந்தது தப்பாம்மா?’ என்று மனால் கேட்டுக்கொண்டே இருந்தது என்னைப் பெரிதும் வருத்தியது. அதுபற்றி நான் வலைப்பக்கத்தில் எழுத, எனக்கு ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன. பாஸ்போர்ட் அலுவலகமும் என்னிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியது.

ஆனால் மனாலிடம் தன்னைப் பற்றி ஏற்பட்டிருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கத்தான் நான் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அவன் இப்போது தெளிவாகிவிட்டான். என்னைப் பற்றி புரிந்துகொண்டிருக்கிறான். நாங்கள் தனியே வசித்தாலும், வாழ்க்கை நதி ஓடை போல போய்க்கொண்டிருக்கிறது

நான் ஒன்றும் உலகத்தைப் புரட்டிப் போட்டுவிடவில்லை. ஆனால் எனது வாழ்க்கைக்கான நியாயமான விஷயத்துக்காக நான் உறுதியோடு நின்று போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். சமூகம் என்ன நினைக்கும் என்று கருதாமல் எனக்குரிய கவுரவத்தை மீட்டிருக்கிறேன். நாம் நம்மை மதித்தால்தான் உலகம் நம்மை மதிக்கும் என்ற பெரிய பாடத்தை நான் இந்த வாழ்க்கை மூலம் கற்றிருக்கிறேன்’’ என்று கூறும் நிருஷாவின் முகத்தில் நிம்மதி நிலவுகிறது.

நன்றி - லங்காசிறி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்