/* up Facebook

Nov 24, 2015

ஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி


சமீபத்தில் ஒரு குழந்தைக்கு முடியிறக்கிக் காதுகுத்தும் விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. குழந்தைக்கு ஒரு வயது. வேற்றுமையே இல்லாமல் வந்திருந்த ஐம்பது உறவினர்களிடையே அந்தக் குழந்தை பொக்கை வாயில் முளைத்திருந்த ஒன்றிரண்டு பற்களுடன் நிறைய சிரித்துக்கொண்டு, இல்லை, இளித்துக்கொண்டு trapeze artist போல் தாவிக்கொண்டிருந்தது. டான்ஸ் ஆடு என்றால் உடனே ஆடும், பாட்டுப் பாடு என்றால் உடனே ம்ம்ம்... என்று இழுக்கும், தாத்தாவை மிரட்டு என்றால் மிரட்டும். குழந்தைக்கு வேற்று முகமே இல்லையே என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

நாவிதர் வந்தவுடன் குழந்தையைத் தாய்மாமன் மடியில் உட்காரவைத்து முடியிறக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான். குழந்தை அழ ஆரம்பித்தது. சில நொடியில் கதற ஆரம்பித்தது. பிறகு கத்திக்கதறித் தீர்த்துவிட்டது. நடுவில் நிறுத்தவும் முடியவில்லை. முடியிறக்கத்தைப் பாதியில் நிறுத்தவும் முடியாதே! கதறக்கதற, ஒருவர் கைகளைப் பிடித்துக்கொள்ளவும், இன்னொருவர் கால்களைப் பிடித்துக்கொள்ளவும், இன்னொருவர் தலையைப் பிடித்துக்கொள்வதுமாக ஒருபாடாக அந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்தில் முடிந்தது. எனக்குக் கோபமும் வேதனையும் தாங்கவில்லை. இந்தக் குழந்தைகளை மரபு, குடும்ப வழக்கம் என்று இவ்வளவு கொடுமைப்படுத்துகிறோமே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

பிறகு, காது குத்தும் வேலை. நல்ல வேளை, ஷாட்கன் முறையில் சில நொடியில் அதைச் செய்துவிட்டார்கள். குழந்தை தப்பித்துக் கொண்டது. பெற்றோர்களும் தப்பித்துக்கொண்டார்கள். பின்பு கோயிலுக்குப் போனோம். குழந்தையின் பெயருக்கு அர்ச்சனைசெய்து ஒரு பெரிய மாலையை அதன் கழுத்தில் போட்டார்கள். அது மறுபடியும் பயந்துபோய் ‘வீல்’ என்றது. அன்று முழுவதும் அந்தக் குழந்தை யாரிடமும் போகவில்லை, அம்மாவிடமே ஒட்டிக்கொண்டு இருந்தது.

வந்தவர்களில் பலர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது பெரும்பான்மையான குழந்தைகள் இப்படித்தான் பயந்து போய்க் கதறி அழுகிறார்கள் என்று தெரியவந்தது. முப்பது வருடங்கள் முன்பு என் குழந்தைகளுக்கு மூன்று வயதில் முடியிறக்கினோம். அசையாமல் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னதைப் புரிந்துகொண்டு முடியிறக்கிக் கொண்டார்கள். நாம் சொன்னதைப் புரிந்துகொள்ளும், கேட்கும் வயசு. இரண்டாவது குழந்தைக்கு முடியிறக்கும்போது அவள் அப்பா முதலில் மொட்டை அடித்துக்கொண்டார். அவளுக்கு அது ஒரு விளையாட்டாக இருந்ததுபோலும், அவர் மடியில் உட்கார்ந்துகொண்டு தானும் மொட்டை அடித்துக்கொண்டாள். முதல் பெண் சிறிது சிணுங்கினாலும் அழாமல் முடியிறக்கிக்கொண்டாள். இவையெல்லாம் ஞாபகம் வந்தன.

எதற்காகப் பிறந்த முடியைக் களைகிறோம் என்று சிறிது ஆராய்ச்சி செய்ய கணினியில் கூகிள் குருவைத் திறந்தேன். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீனர்கள் எனப் பல சமூகத்தினரிடம் இந்த மரபு இருக்கிறது. ஆனால் ஒரு சமூகம்போல் இன்னொரு சமூகத்தில் இந்த வழக்கம் இல்லை. சிலர் நாற்பது நாட்களில், சிலர் நாலு மாதத்தில், சிலர் ஆண் குழந்தைகளுக்கு மட்டும், சிலர் எப்போது விருப்பமோ / முடியுமோ அப்போது எனப் பல முறைகளில் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல் முறையில் எந்த அடிப்படையும் இல்லை என்று எழுதியிருந்தார்கள். பிறக்கும்போது இருந்த முடியெல்லாம் நான்கு மாதங்களில் உதிர்ந்துவிடுமாம். அந்த நேரத்தில் புதிய மயிர்க்கால்கள் உருவாகி புதிய முடிகள் உற்பத்தியாகுமாம். எவ்வளவு அடர்த்தியான முடி என்பது நம்முடைய மரபணுவைப் பொறுத்திருக்குமாம்.

மொட்டை அடித்துக்கொள்வதற்கு இன்னொரு காரணம் உண்டு. முடியை, நம்மை அழகுபடுத்தும் ஒன்றாக எண்ணுகிறோம். தெய்வத்துக்கு முன்னே முடியிறக்கும்போது நம் அழகையும் அதனால் வரும் அகங்காரத்தையும் கர்வத்தையும் துறக்கிறோம் என்ற காரணமும் உண்டு. மேலும் நரபலி கொடுக்கும் முறையில் சிரச்சேதம் செய்துகொள்ளாமல் மயிரை மாத்திரம் கொடுத்துவிடுவது என்ற மரபும் காரணமாக இருக்கலாம். ஆனால் அறியாத குழந்தைகள்மேல் அதைச் சுமத்துவானேன்? என் உறவினர் பெண்மணி ஒருவர், தன் பையனிடம், “நான் உனக்கு மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னபோது அந்தப் பையன் - அவனுக்குப் பத்து வயதிருக்கும் - சொன்னானாம், ‘‘நீ வேண்டிக்கிட்ருந்தா நீ போய் மொட்டை அடிச்சுக்கோ, நான் எதுக்கு மொட்டை அடிச்சுக்கணும்?’’

மரபு, பழக்கவழக்கமெல்லாம் முட்டாள்தனம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் எவ்வளவோ மாறுதல்களைப் பார்க்கும் நாம் சில நம்பிக்கைகளை மதம், மரபு என்றபெயரில், குடும்பவழக்கம் என்ற பெயரில், பயத்தாலோ அறியாமையாலோ யோசிக்காமலே அறியாக் குழந்தைகள்மேல் சுமத்துகிறோம் என்று தோன்றுகிறது.

மதங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எறும்புபோல் மணலை விட்டுவிட்டு சர்க்கரையை மட்டும் எடுத்துக் கொள்ளும் புத்தியையும் பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்குக் கேள்வி கேட்கும், வித்தியாசமாகச் சிந்திக்கும் சுதந்திரம் வேண்டும். நாம் எழுதினால், பேசினால் பிறர் புண்படுவாரோ, பெரிய கலவரம் ஆகிவிடுமோ, அடித்துக் கொன்று விடுவாரோ என்று பயந்தால் எப்படிச் சமூகம் தன்னைத் தானே திருத்திக் கொள்ளும்? எப்படித் திருத்திக் கொள்ள முடியும்?

(உமா சங்கரி, சமூக ஆய்வாளர். எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மகள்.)

நன்றி - காலச்சுவடு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்