/* up Facebook

Nov 20, 2015

'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்

சிறு புள் மனம்
(கவிதைகள்)
வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம் 
669, கே.பி. சாலை 
நாகர்கோவில் & 629 001
பக்: 360
ரூ. 375

'முன்னெப்போதும் அறிந்திராத ஊரை வசிப்பிடமாக்கும்போது நாம் மாயைகளை உதறுகிறோம். உலகைப் பற்றிய மாயைகளை அல்ல, நம்மைப் பற்றிய மாயைகளை' என்றார் புலம்பெயர்ந்த படைப்பாளிகளுள் ஒருவரான ரஷியக் கவிஞர் ஜோஸப் பிராட்ஸ்கி. அப்படி உதறிய மாயைகளும், அதன் மூலம் உருப்பெற்ற எண்ணத்தடங்களும் வாழ்வின் நிஜங்களுமே திருமாவளவனைக் கவிஞன் ஆக்கின.

பொருந்த இயலாத புலம்பெயர்ந்த மண்ணின் பின்புலத்தில்தான் திருமாவளவனின் எண்ணச் சாயல்கள் கவிதைகளான ரசவாதம் நிகழ்ந்தது. 'சிறு புள் மனம்' எனும் இத்தொகுப்பு, 2000ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது முதல் கவிதை நூல் 'பனிவயல் உழவு' என்பதிலிருந்து தொடங்கி அதன்பின் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் கவிதைகளையும் அண்மையில் எழுதப்பட்ட கவிதைகளையும் உள்ளடக்கியது.

இந்நூலின் தலைப்பு பாரதியின் சிட்டுக்குருவி பற்றிய எண்ணக்கூறுகளை மீட்டினாலும் அவரது களத்திலிருந்து மாறுபட்டு, அதை முற்றுமுழுதாகக் கவிழ்த்துப் புதியதோர் புலத்தை உருவாக்குகிறது. பாரதி கட்டவிழ்க்கும் சிட்டுக்குருவிப் பிம்பத்தை மீட்டு அதன் வெளிப்பாட்டுத் தளத்திலிருந்து வேறுபட்ட ஒரு தளத்தை இத்தொகுப்பிலிருக்கும் கவிதைகள் பாடுபொருளாக்குகின்றன. பாரதியின் சிறுகுருவி தன்னைத் தானே விடுவிக்கும் ஆன்ம பலம் நிறைந்தது. திருமாவளவனின் ' சிறு புள் மனம்' விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் அவலச்சுமையை அடிச்சரடாகக் கொண்டது. அது பறவைகளைப் போல் பெயர்ந்த தேயத்தில் கூடுகட்டிக் களிக்கவில்லை. மாறாக மானுடர்க்கே உரிய நினைவுப் பொதிகளுடன், உறவுகளுடன், பிரிவுகளுடன் நிலம் அதைச்சார்ந்த பண்பாட்டுக் குறியீடுகளுடனும் உணர்வுகளுடனும் புலம்பெயர மறுக்கிறது. புலம் பெயர்ந்தாலும் பெயர்ந்த இடத்தில் அந்நியமாகவே ஒட்டாமல் வாழ்கிறது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது அவை பிறந்த மண்ணுக்கும் புலம்பெயர்ந்த மண்ணுக்கும் இடையே சஞ்சாரம் செய்கின்றன என்பதை அறிய முடிகிறது. புலம்பெயர்ந்த நாட்டில் தன் இருப்பை, சுய அடையாளத்தைத் தேடும் திருமாவளவன் அதனைத் தன் நினைவுகளாலும் போரின் பேரழிவுகளாலும் கழிவிரக்கத்தாலும் புலம் பெயர்ந்த அனுபவத்தாலும் கட்டமைக்க முயல்கிறார். இரு நிலங்களின் நிலக்காட்சிகளிலும் இயற்கையிலும் தன்னை இனங்காண முயல்கிறார். ஆகவே அவரது படைப்புகளைப் புலம்பெயர்ந்த மேற்கின் வாழ்நிலை, பிறந்த மண்ணின் நினைவுகளாய்த் தோன்றும் கழிவிரக்கம், போரின் இருண்ட கொடிய அனுபவம், இயற்கை நிலக்காட்சி இவற்றைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன எனலாம்.

புதியதும் பழையதுமான இந்த அனுபவங்களை, உணர்வுகளைப் பாடும் திருமாவளவனின் மொழி அவரைப் பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. திருமாவளவன் கவிதை மொழியின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்ற கருத்தை உடையவர். அதனால் அவரது கவிதைகளில் சொற் தேர்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர். இறுதிவரை சந்தங்களையும் ஒத்திசைவையும் முற்றுமுழுதாக ஒதுக்காமல் படைப்புகளைத் தந்தார். அதனால் மொழியளவில் அவரது படைப்புகளில் மாற்றமில்லை என்றாலும் ஆரம்பகாலக் கவிதைகளை விட அண்மையில் எழுதப்பட்ட கவிதைகள் இறுக்கம் வாய்ந்தவை. சந்தத்தோடு படைக்கப்படும் கவிதைகள் அருகிவிட்ட இக்காலத்தில் அவரது கவிதைகள் தனி இடத்தைக் கோருகின்றன. ஓசை நயம் மிகுந்திருக்கும் இக்கவிதைகள் நிகழ்த்து தன்மையை கொண்டிருக்கின்றன. கவிதைகளின் பாடுபொருளிலும் அதைக் கையாண்டவகையிலும் திருமாவளவனின் படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் புலம்பெயர்ந்த ஜமைக்கா நாட்டு எழுத்தாளர் க்ளாட் மக்கேயை (சிறீணீuபீமீ விநீரிணீஹ்) நினைவுபடுத்துகின்றன.

க்ளாட் மக்கே, அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தபின் எழுதிய கவிதைகள் ஆப்பிரிக்கப் பண்பாட்டுக் கூறுகளுடன் உருவான ஒலிநயத்துடன் ஆங்கில மொழியில் பிறந்த மண்ணின் நினைவுகளையும் ஏக்கத்தையும் பிரதிபலிப்பவை. அதோடு அமெரிக்க வாழ்வை வியந்துகொண்டே அது கையாண்ட இன அடக்குமுறையால் வெறுப்பையும் உமிழும் இருநிலைகளை அவை வெளிப்படுத்துகின்றன. திருமாவளவனின் கவிதைகளும் மேற்கின் இயந்திரத்தனத்தோடு ஒன்றுபட இயலாத, அதே நேரம் அதன் இயற்கை அழகில் ஒருமுகப்படும் இருநிலைகளை முன்வைக்கின்றன. அதுபோலவே பிறந்த மண்ணின் நினைவுகளும் புலப்பெயர்வின் அலைவும் அவர் கவிதைகளின் இயங்குதளமாகின்றன. இந்தவகையான இருமைகளே அவரது கவிதைகளை வரையறுக்கின்றன.

திருமாவளவனின் தொடக்ககாலக் கவிதைகளில் போரின் துயர நினைவுகளும் பிறந்த மண்ணும் வாழ்ந்து பழகிய சூழலும் அதைப் பிரிந்த ஏக்கமுமே மிகுதியாக இடம்பெறுகின்றன. ‘காலடிக்கீழ் பெருநிழலாய்த் தொடரும் போரின்’ அவல நினைவுகளுடன் ஊரின் பசும்நினைவுகளும் விரவுகின்றன ‘ஈரம்’ எனும் கவிதையின் இவ்வரிகளில்:

இன்னும் இருக்கிறது
என் ஊர்
தாழம்பூ மணங் கமழ
இதழ்பரப்பி
றங்குப் பெட்டியுள் பத்திரப்படுத்திய
அம்மாவின் கூறைச் சேலையைப் போல்.

பின், இந்த நினைவுகளே புலம்பெயர்ந்த வாழ்வில் ஒன்றுபட முடியாமல் அவரை அந்நியனாக்குகின்றன. கடந்தகால நினைவுகளின் சாயைகளுடன் நிகழ்கால வாழ்வு அடையாளம் பெறுகிறது. பெரும்பான்மைக் கவிதைகள் பிறந்த நிலத்தை விடஇயலாமலும் பெயர்ந்த நாட்டைப் பாடுபொருளாக்க முடியாமலும் தத்தளிக்கின்றன ஒருவிதக் குழப்பத்துடன்:

வீட்டைச் சுற்றிலும்
முகிழ்த்திருக்கிறது 'டூலிப்' மொட்டுகள்
சொட்டும் துளியென ஒவ்வொன்றும்
இரத்தச் சிவப்பு
கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்ட உறவுகள்
நினைவு.

‘நான் அங்கும் இங்குமில்லான்’ என்ற அக்கவிக்குரல் தன் அடையாளத்தை வரையறுக்க இயலாமல் இரு வெளிகளுக்கிடையே இரண்டு நிலக்காட்சிகளையும் அனுபவங்களையும் எதிரிடையாக வைக்கிறது. நீர், ஆறு, மழை, கண்ணீர், கருமுகில், பனி, கடல் என அதன் அநேக ரூபங்களில் படிமங்களாகின்றன. பிறந்த நிலத்துக்கும் புலம்பெயர்ந்த நாட்டுக்குமிடையே உள்ள உறவு நிலையை இறுக்கமாக, திட்பமாக அல்லாமல் நீரின் வடிவத்தைக் கொண்டு அலைந்து உலைந்து மிதக்கும் திரவமான உறவு எனும் கருத்துநிலையை அவர் கட்டமைக்கிறார். அதாவது, பிறந்த மண்ணிலும் அல்லாமல், பெயர்ந்த நாட்டிலும் அல்லாமல் நீரைக் கொண்டுணர்த்தும் படிமங்களில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார். நீரின் படிமங்களிலும் குறியீடுகளிலும் இரு வேறு உலகங்களை அவர் இணைக்கிறார், பெரு நிலங்களைக் கடக்கிறார்.

அவரது கவிதை வெளிப்பாடு உணர்வுக்கும் நினைவுக்கும் அனுபவத்துக்கும் இடையில் உராய்வு கொள்வதால் அவற்றில் காலம் பின்னோக்கியே நகர்கிறது அல்லது அது 'சன்னலினூடு நீளக்கிடக்கிறது'. முன்னோக்கிச் செல்லும் காலத்தில் அவருடைய இருப்பு இல்லை, அக்காலத்தை அடுத்த தலைமுறையினுடையதாக அவர் கருதுகிறார். புலம்பெயர் வாழ்வின் அடுத்த தலைமுறையினரின் காலமாகவே, அவர்களுடையதாகவே 'நிலம்' என்ற படைப்பில் எதிர்காலம் விரிவுகொள்கிறது:

கதவை மூடிக் கணப்பியை முடுக்கி
வெளியை வேடிக்கை பார்க்கிறேன்
பருவம் அறிந்து
முற்றத்துத் தோட்டத்தில்
‘டூலிப்ஸ்’ முகிழ்களைப் புதைக்கிறாள்
என் மகள்
இது அவளது நிலம்.

புலம்பெயர்ந்த நகரவாழ்வு திருமாவளவனுக்குச் சிறை அனுபவமாகவே இறுகுகிறது. நகரத்துடன் அதன் நவீனத்துடன் நவீன மனிதர்களுடன் அவருக்கு உறவு ஏதுமில்லை. அதனால் மரங்களும் பறவைகளும் அணில்களுமே அவருடன் உரையாடுகின்றன; உறவாடுகின்றன. அவற்றுடன் இணையும் துயர்மிகு கவிக்குரல் ஆறுதல் அடைகிறது. ஆனால் அது தற்காலிக ஆறுதல் மட்டுமே; அதனால்தான் அவரது கவிக்குரல் மீண்டும் தனிமைச் சிறைக்குள் அடைபட்டுப் போகிறது. உடனுறையும் மானுடரிடம் நம்பிக்கைகொள்ளாமல் விலகி நிற்கிறது; எள்ளி நகையாடுகிறது.

‘நோயில் பத்து’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள கவிதைகளை இங்கு குறிப்பிட வேண்டும். எண்ணிக்கை அளவில் மிகக் குறைந்தவை இவையென்றாலும் திருமாளவளவன் எனும் கவிஞர் தனக்கேயான குரலைக் கண்டடைவது இவற்றில்தான். அவரது மொழி திட்பமாகவும் செறிவாகவும் வெளிப்பட்டுப் படிமங்களும் குறியீடுகளும் இயல்பாகச் ‘சதுரங்கப் பலகையென விரிந்துகிடக்கிறது வாழ்வு’ போன்ற வரிகளில் கூடி வருகின்றன. நோயின், இருண்மையின், இன்மையின், குறியீடாகப் பூனை உருவகம் கொள்கிறது. அவருடைய பேத்தி பொன்னி, ஒளியின், புதுமையின், இயற்கையின், வாழ்வின் குறியீடாக அமைகிறாள்:

திடீரென ஒரு குதிரை வீரனை
ஒற்றைப் பாய்ச்சலில் முன்னிறுத்தி 
எச்சரித்துக் காத்திருக்கிறது பூனை
ஆளியை முடுக்கி விளக்கில் ஒளியேற்றி
ஏன் இருட்டில் இருக்கிறீர்கள்
என்கிறாள் பொன்னி.

இறுதியாக, வட அமெரிக்காவின் தெற்காசியப் புலம்பெயர் இலக்கியத் துறையில் ஆங்கில மொழிப் படைப்புகள் மட்டுமே இடம்பெறுகின்றன, பிறமொழிப் படைப்புகளோ அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளோ நானறிந்தவரையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மிகுந்த நுண்ணுர்வுடன் குறுநில வாழ்வனுபவங்களும் பார்வையும் புலம்பெயர்வாழ்வுடன் இணைந்து வெளிவரும் பிறமொழிப் படைப்புகளையும் கணிப்பில்கொள்ள வேண்டிய காலம் வெகுதூரமில்லை என்பதைச் ‘சிறு புள் மனம்’ நிறுவுகிறது.

நன்றி - காலச்சுவடு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்