/* up Facebook

Nov 19, 2015

ஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா


தமிழ்ச் சமூகத்தில் காலனியம் மூலம் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஊடுபொருளாக இருந்தவை அச்சுக் கருவியும் ஐரோப்பிய நவீனக்கல்வி முறையுமே ஆகும். இந்த அச்சுப்பரவலாக்கத்தின் அடுத்த பரிமாணமாக தனிநபர்களாலும் நிறுவனங்களாலும் இதழ்கள் தொடங்கப்பெற்றன. இவற்றில் சாதி சார்ந்த இதழ்களும் அடங்கும். பொதுவாக அன்றைக்கு இதழ்கள் யாவும் ஆண்களாலேயே நடத்தப்பட்டிருப்பதில் வியப்பில்லை. பிறகு மெல்ல மெல்லச் சில இதழ்களில் மட்டும் பெண்களுக்கான தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றை ‘ஸ்திரீகளின் பகுதி’, ‘பெண்கள் பகுதி’ என்று பெயரிட்டு அதில் பெண்களும் ஆண்களும் எழுதிவந்தனர். இவற்றிலும் கூட பெண்களைக் காட்டிலும் அதிகமாக ஆண்களே எழுதிவந்துள்ளமையைக் காணமுடிகிறது. இப்பத்திகள் பெரும்பான்மையும் பெண்கல்வி குறித்த பாடல், கும்மி, உரையாடல், நாடகம் என்ற வடிவங்களில் எழுதப்பட்டன. இந்நிலையில் பெண்கள் தலைமையில் வெகுசில இதழ்களே அத்திப் பூத்தாற்போன்று வெளியாயின. அந்த வகையில் கோ. ஸ்வப்பநேஸ்வரி நடத்திய ‘தமிழ் மாது’ இதழ் குறிப்பிடத்தக்கது. 1905ஆம் ஆண்டு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் 24 பக்கங்களில் (Registered, No. M - 508 ) என்ற பதிவெண்ணில் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து (K.P.Press, Triplicane) வெளிவந்துள்ளது. இவ்விதழின் 1905,1906,1907 ஆகிய மூன்றாண்டுத் தொகுப்புகள் பார்வைக்கு முதன்முறையாகக் கிடைத்துள்ளன.

பீ.ஏ. முருகேசம் பிள்ளை (பரங்கிமலை) என்பவர் ‘தமிழ் மாது அபிவிருத்தி’ எனும் தலைப்பில் இவ்விதழின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி 17-12-1907இல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் “சுதேச பாஷைப்” பத்திரிகாபிமானச் செல்வர்காள்! நமது நாடு தமிழ்நாடு. இந்நாட்டிற்குரியது தமிழ்ப்பாஷையேயாகும். இதைப் போன்று இனிதும் சிறந்ததுமாகிய பாஷை வேறொன்று மிராதெனல் திண்ணம். இத்தகைய பாஷைப் புருடர் படிப்பது போன்று பெண்களும் படித்து நல்லறிவுபெற்று விளங்கவேண்டிய நல்லெண்ணம்கொண்டு எழும்பியுள்ள ‘தமிழ் மாது’ எனும் பெரிய பத்திரிக்கை மாதமொரு முறையாகக் கனம். கோ. ஸ்வப்பநேஸ்வரியம்மையார்களால் வெளிகிளம்பி ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் இகபரஞானங்களை நன்கு விளக்கச் செய்து வருகிறது.” என்கிறார். இப்பாராட்டுரையே அக்காலச்சூழலில் இவ்விதழ் பெற்ற சிறப்பிடத்தைக் கூறுகிறது.

‘தமிழ் மாது’ இதழின் பெயரை ஆங்கிலத்தில் Tamil Women என்று மொழிபெயர்க்க முடியும். அவ்விதழ்பற்றி இதுவரை கூடுதல் தகவலேதும் கிடைத்திராத நிலையில் இதழியல் ஆய்வாளர்கள் சிலர் Tamil Women என்பதை ‘தமிழ் பெண்’ என்று நேரடியாக மொழியாக்கம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இப்பெயரைக் குறிப்பிடநேரும் பலரும் தங்கள் கட்டுரைகளில் இவ்வாறே கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக தலித் இதழ்களின் பட்டியலில் இவ்விதழின் பெயர் ‘தமிழ்ப்பெண்’ என்றே இடம் பெற்றுவருகிறது. ஆனால் அது தமிழ்ப்பெண் அல்ல, ‘தமிழ் மாது’ என்று எழுதுவதே சரியானதாகும். அதேபோல தலித் இதழ்கள்பற்றி இதுவரை எழுதப்பட்ட எல்லா பதிவுகளிலும் இவ்விதழ் தொடங்கப்பட்ட ஆண்டு 1907 என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் ‘தமிழ்மாது’ இதழ் 1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மாது இதழில் அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெவ்வேறு வகையான இதழ்கள், நூல்கள் பற்றிய அறிமுகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘சுதேசி’ ஸ்ரீமத் சங்கரலிங்கம் பிள்ளை B.A, FL, (சென்னை), ‘ஸர்வஜன மித்திரன்’ ஸ்ரீ வேதமூர்த்தி முதலியார் (பாளையங் கோட்டை), ‘சிங்கை ஜனகமித்திரன்’ சரவணமுத்துபிள்ளை (சிங்கப்பூர்) என்கிற வரிசையில் 1905 டிசம்பர் இதழில் சுப்பிரமணிய பாரதியார் நடத்திய ‘சக்கிரவர்த்தினி’ இதழ் பற்றியும் (தொகுதி-1, பகுதி-9), 1907 ஜூன் இதழில் அயோத்திதாசர் நடத்திய ‘ஒருபைசா தமிழன்’ இதழ் பற்றியும் (தொகுதி-3, பகுதி- 3) விளம்பரம் வந்துள்ளது. ‘தமிழ் மாது’விற்கு (1905) பிறகு 1907ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘ஒருபைசா தமிழன்’ இதழில் ஸ்வப்பநேஸ்வரி பெண்கல்வி குறித்தும், ஒடுக்கப்பட்டோர் குறித்தும் தொடர்ந்து எழுதினார். ‘தமிழ் மாது’ இதழுக்கும் ‘தமிழன்’ இதழுக்கும் பரஸ்பரம் நட்பு இருந்ததை அறியமுடிகிறது. அவர் இதழில் எழுதிய பகுதிக்குப் பெயர் Ladies Column என்பதாகும். ‘தமிழன்’ இதழில் எழுதிய பெண் இவர் ஒருவராகத்தான் இருக்கிறார். இதழில் இவரின் பெயர் சகோதரி, ஸ்வப்பநேஸ்வரி என்று மாறிமாறி இடம்பெற்று வந்தது. ஸ்வப்பநேஸ்வரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரென்றும், தாழ்த்தப்பட்டோரை ஆதரித்த வேறு வகுப்பினர் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இதனைத் ‘தமிழ் மாது’ இதழின் வழி தெளிவுபடுத்த முடியவில்லை. அயோத்திதாசர் நடத்திய பௌத்தக் கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அயோத்திதாசரின் பௌத்தமதக் கருத்துக்களோடு இணைந்து செயல்பட்ட இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவராகவே இருக்கலாம் என்று அனுமானிக்கத் தோன்றுகிறது; எனினும் இது மேலாய்வுக்குரியது.

‘தமிழ்மாது’ 1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1907ஆம் ஆண்டுவரை மாதமொருமுறையாக வெளிவந்துகொண்டிருக்கையில் அதில் நடைபெற இருக்கும் சிறுமாற்றம்பற்றிய அறிவிப்பொன்றைப் பார்க்கமுடிகிறது. 1907 டிசம்பர் மாத முதல், இவ்விதழ் ‘சுதேசபோஷினி’ எனும் புதுப்பெயரில் வெளிவரப்போகிறது என்று அந்த அறிவிப்பு சொன்னது. ‘சுதேசபோஷினி’ பத்திரிக்கை இருமுறையாக பிரசுரிக்கப்படும் என்றும் தமிழ் மாதுவின் பத்திராதிபரே இவ்விதழின் ஆசிரியர் என்றும் அறிவிப்பு வெளியானது. இப்பத்திரிக்கை 1907ஆம் வருட டிசம்பர் 15 முதல் இதழ் வெளிவரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்பத்திரிகையினுள் ஆங்கிலபாஷாபிமானிகள் மற்றும் ஆடவர்களுக்கு வேண்டிய விஷயங்கள், இல்வாழ்க்கைக்குரிய விஷயங்கள், பெண்கல்வியின் பயன், தேசாபிமானத்தை விளக்கும் சாதனம் போன்றவை பெண்களுக்காக வெளியிடப்படயிருப்பதால் ஆடவ மடந்தையர் இருதரப்பினருமே இப்பத்திரிக்கையை ஆதரிக்க வேண்டி பத்திரிகாபிமானிகளாவார் என்றும் அறிவிப்பு செய்துள்ளனர். பத்திரிக்கைக்கு முன்பணம் அனுப்புகிறவர்களுக்கு இலவசமாக பல பரிசுப் பொருட்கள் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டன. கம்பளி நூலினால் செய்யப்பட்ட படம், கழுத்துப்பட்டை, குழந்தைகளுக்கான குல்லா மற்றும் சித்திரம் வரைந்த கைக்குட்டை ஆகியவை இலவசமாகக் கொடுக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தனர். எனினும் இவ்விதழ்பற்றி ‘தமிழ் மாது’ இதழின் இத்தகைய அறிவிப்பும் விளம்பரமும் கிடைக்கிறதே தவிர சுதேசபோஷினி இதழே நேரடியாகக் கிடைக்கப்பெறவில்லை. சுதேசபோஷினி இதழும் கிடைக்குமானால் பெண்களுக்காக இரண்டு இதழ்களை ஸ்வப்பநேஸ்வரி நடத்தினார் என்றும் கூறமுடியும்.

பெண்கள் கல்வியறிவு பெற்று குடும்ப வாழ்க்கை சார்ந்த அறக் கருத்துக்களைப் பெறவேண்டும் என்பதை எடுத்துக்கூறும் விதமாகவே தமிழ் மாதுவின் பெரும்பாலான கட்டுரைகள் அமைந்துள்ளன. பெண்கல்வி, விதவைத்திருமணம், குழந்தைமண எதிர்ப்பு, இந்து விதவைகளுக்கோர் அறிக்கை, மணம் புரிந்துள்ள மங்கையர்க்கு நற்போதனை, பெண்கல்வியின் பெருமையும் அஃதில்லாச் சிறுமையும், பிள்ளை வளர்ப்பு, கற்பாபரணம் என்ற தலைப்புகளே இவ்விதழின் உள்ளடக்கத்தைக் காட்டுகின்றன. அது மட்டும் அல்லாமல் அறசாட்சி, ஓர்விவாஹம், நாணம், ஒரு காதலியின் கல்வி, உலகப்பற்று, காலட்சேபம், சிறுவர்களுக்குபயோகமாகும் சம்பாஷனை பலவித அபிப்பிராயம், ஜீவியத்தில் நித்தியானந்தம், நளாயினி (கற்புடைமை), பார்ஸிநாடகம், சீவகாருணியம், பௌத்த பூகோள சாஸ்திரச்சுருக்கம், சுதேசியம் போன்ற பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகளைப் பலரும் எழுதிவந்துள்ளனர். எம். நல்லையா அருளானந்தம், ராதா, T.N.S. இராகவாச்சாரி, வி. கோபாலகிருஷ்ணய்யர், எஸ். வைத்திலிங்கம் பிள்ளை, வே. முத்துமாலை மூர்த்தி P.V.N.S. சிலோன் ச. சிவஞானகந்தரன் (யாழ்ப்பாணம்), கா. சிவசங்கரனார், வி. சாமிநாதன், பால்யசிவம் போன்றோர் இதழில் எழுதிய கட்டுரை ஆசிரியர்களாவர்.

ஸ்வப்பநேஸ்வரி, ஸர்வஜன சகோதரி என்று இருபெயர்களில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவ்விசயங்களைப் பார்க்கும்போது இவ்விருவரும் ஒருவரே என்ற அனுமானம் தோன்றலாகிறது. ஸ்வப்பநேஸ்வரியே அப்புனைப்பெயரில் எழுதியிருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது. இவ்விதழில் தொண்ணூறு சதவிகிதப் பதிவுகள் பெண்கல்வி குறித்தே பேசுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் பட்டுப் பாவாடைகள், நகை ஆபரணங்கள் போட்டு அழகு காண்கிறார்கள். அதைப் போல் பெற்றோர்கள் அவளைக் கற்கவைத்து அவள் பேசும் கல்வியின் அழகையும் கண்டு ரசிக்க வேண்டும். கல்வி கற்றபின்னர்தான் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும். கல்வி கற்காமல் அவளுக்கு திருமணம் நடத்தி வைக்கக்கூடாது என்று ஓரிடத்தில் எழுதுகிறார் ஸ்வப்பநேஸ்வரி.

பெண்கல்வி குறித்து பெயரில்லாத கும்மிப்பாடலொன்று இதழில் தொடராக வெளிவந்துள்ளது. அதிலுள்ள சிலவரிகளை மட்டும் உதாரணத்திற்கு இங்கு காண்போம்.

அன்னம்படைத்த ஒருவனுக்கே - தினம்
அன்னம்படைக்கும் ஒருத்தியையே
சொர்னம் படைத்தபெண் கல்விக்கும்மி சொலத்
துதித்துக் கும்மியடியுங்கடி - நீங்கள்
மதித்துக்கும்மியடியங்கடி. (1)
சீதைசிறந்ததுங் கல்வியினால் - நளன்
தேவிசிறந்ததுங் கல்வியினால்
மாதர் சிறப்பதுங் கல்வியினாலொன்று
வணங்கிக்கும்மியடியுங்கடி - நீங்கள்
இணங்கிக்கும்மியடியுங்கடி. (8)

கல்வியறிவு இருந்தால்தான் இவ்வையகத்தில் பெண்ணொருத்தி சிறந்து விளங்குவாள் என்பதற்கு சீதை, நளாயினி போன்ற புராணமாந்தர்களை எடுத்துக்காட்டுகின்றார்.

பெண்கள் தனித்தோ அல்லது குழுவாகவோ சேர்ந்து இதழ்கள் நடத்துவதென்பது அன்றைய காலத்தில் ஒரு பெரும் விஷயம். அக்கால அரசியலையும் சமூக அமைப்பையும் புரிந்துகொண்டு, கல்வி மற்றும் பகுத்தறிவு துணைவுடனும் பொருளாதார வசதிகளுடனும் இதழ்கள் நடத்தியிருப்பது அசாத்தியமான ஒன்று. அதனை தமிழ்மாதுவின் ஆசிரியர் கோ. ஸ்வப்பநேஸ்வரி செய்திருப்பது அளப்பரியது.

நன்றி - காலச்சுவடு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்