/* up Facebook

Nov 15, 2015

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ணெழுத்து: இருவழிப் பயணம் - வே. ஜெயபூர்ணிமா


2000க்குப் பிறகு தமிழிலக்கியத்தின் முக்கிய வரவாகப் பெண் எழுத்துகளைக் குறிப்பிடலாம். முன்பு குறைவான பெண்களே எழுதிவந்தார்கள். எனினும் 2000ஆம் ஆண்டை ஒட்டியே அதிக அளவில் பெண்கள் எழுதினார்கள். சிறுகதை, நாவல்களைவிட கவிதைகளிலேயே அவர்கள் அதிகமாக வெளிப்பட்டனர். இதேவேளையில் கவிதைகளுக்கு நிகராகப் பெண்களின் வேறு அனுபவங்களும் இக்காலத்தில் தொகுக்கப்பட்டன. இலக்கியத் தளத்திற்கு இணையாக சமூக வரலாற்றுத் தளத்திலும் செயற்பாடுகள் நடந்தால்தான் இலக்கியத் தளத்தில் உருவாகும் தனித்துவம் நிலைபெறும். இதற்கேற்ப புனைவிலக்கியத்தில் உருவாக்கிய அடையாளத்தைப் போலவே இக்காலத்தில் நாடகம், இதழ்கள், தொடர்கள், கட்டுரைகள் போன்ற வடிவங்களிலும் பெண்கள் வெளிப்பட்டனர். கவிஞர்களாக விளங்கிய பெண்கள் பலரே இம்முயற்சிகளிலும் இறங்கியதால் புனைவிற்கும் புனைவு அல்லாத எழுத்திற்கும் இடையே ஓர் இணைப்பு உண்டானது. குறிப்பாகக் கவிதைகளில் கட்டமைக்கப்பட்ட புனைவு சார்ந்த அடையாளங்களை வரலாற்றுரீதியாக நியாயப்படுத்தவும் இவை உதவின.

1989ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தில் ‘சொல்லாத சேதிகள்’ என்ற கவிதைத் தொகுதி ஈழத்தில் இயங்கி வந்த கவிஞர்களின் தொகுப்பாக வெளியானது. இம்முன்னோடிக் கவிதைத் தொகுதி பல பெண்களையும் ஒன்றிணைத்து அதன் கூட்டுச் செயற்பாட்டில்தான் பிறந்தது. இன்றைய கவிதைப் போக்கின் தொடக்கமாக அத்தொகுப்பைக் கொள்ளலாம்.இதற்கு முன்பாகவே 1985ல் கோவையிலிருந்து வெளிச்சம் வெளியீடாக ‘மூன்றாம் உலக விடுதலைக்கவிதைகள்’ என்ற சிறிய தொகுப்பொன்றும் வெளிவந்திருந்தது.

தமிழகத்தில் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு

பெண்களின் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் 2001இல் வெளியான ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ தொகுப்பு அடுத்ததாக வெளியானது. கிருஷாங்கினியும் மாலதி மைத்ரியும் தொகுத்த இத்தொகுப்பு அதுவரையிலும் தமிழில் எழுதிவந்த பெண்களின் கவிதைகளைத் தொகுத்துப் பார்க்கும் வரலாற்று முயற்சியாக இருந்தது. தலித் அடையாள எழுத்தின் தொடர்ச்சியில் பிறந்த பெண் எழுத்து என்ற அடையாளத்தின் செயல்பாடு இதுவாகும். இதில் 52 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன. 2000க்கு முன்பாக எழுதிய பூரணியின் கவிதைகள், பெண் எழுத்துக்களின் முக்கியத்துவம் பேசப்பட்ட காலத்தில்தான் தொகுக்கப்பட்டன.

இத்தொகுப்புக்கு அடுத்ததாக ‘பெயல் மணக்கும் பொழுது’ (2007) என்ற தொகுப்பைக் கூறலாம். தமிழில் பெண்ணெழுத்துக்கள் பெருகிவந்த நிலையில் ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பிற்கு அடுத்துச் சமகால ஈழப் பெண்களின் கவிதைகளை அ. மங்கை இப்பெயரில் தொகுத்திருந்தார். தமிழகத்தில் பெண் கவிதைகள் உடல் மொழி சார்ந்ததாகக் கருதப்பட்ட நிலையில் பெண்கள், சமூகத்தின் வேறு பிரச்சினைகள் பற்றியும் எழுதுவார்கள் என்பதற்கான சான்றாக ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகளை அ. மங்கை முன்வைக்க முயன்றார். இதனை அவர் “பெயல் மணக்கும் பொழுது, தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் காட்டும் உலகம் தமிழகச் சூழலில் பெண் கவிஞர்கள் வெளிப்பாடு குறித்துக் கிளம்பும் விவாதங்களின் தளத்திலிருந்து முழுவதும் மாறுபட்டது” என்று கூறுவதன் மூலம் அறியலாம். இதே தொனியையே முன்னுரை எழுதியுள்ள வ. கீதாவும் வெளிப்படுத்துகிறார். அவர் “அன்றும் சரி, இன்றும் சரி தமிழ்நாட்டுப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் துலங்கும் சுயமும் இருப்பும் அவற்றை விரட்டும் அல்லது அமைதிகொள்ளச் செய்யும் தேடல் களம் வரலாறு பாற்பட்டவையாக இருப்பதில்லை. அதிகபட்சமாகப் புறவுலகமானது அகவுலக அகழ்வாராய்ச்சிக்கான களமாக, பின்னணியாக மட்டுமே விளங்குகிறது” என்று குறிப்பிடுகிறார். சமகாலப் பெண் கவிதைகள்மீது பெண்கள் தரப்பிலிருந்தே எழுந்த விமர்சனக்குறிப்பு என்று இவற்றைக் கருதுவது தவறாகாது. அதேவேளையில் வ.கீதாவின் ஆதங்கத்தைப் பெண்களால் கவிதைவழியாகத் தாண்ட முடிந்ததோ இல்லையோ வேறு வடிவங்களில் தாண்ட முயன்றனர் என்பதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். ஏறக்குறைய இதேகாலத்தில் தான் றஞ்சியும் (சுவிஸ்) தேவாவும் (ஜெர்மனி) ஊடறு வெளியீடாக 35 கவிதைகளின் தொகுப்பை ‘மை’ என்ற பெயரில் வெளியிட்டனர். பெண்கள் தங்களுக்கென்று தனிமொழியை உருவாக்கி வந்தபோது கவிஞர்கள் என்ற பொதுச்சொல்லுக்கு மாற்றாக ‘கவிஞைகள்’ என்ற சொல்லைக் கையாண்டனர். இதேகாலத்தில் தமிழகத்தில் ‘கவிதாயினிகள்’ என்ற சொல்லும் கையாளப்பட்டது. தங்களின் அடையாளத்தைத் தனியாகக் காட்ட விரும்பும்போது இத்தகைய புதிய அடையாளச் சொற்கள் எழுதுவதும் இயல்புதாம்.

சங்கப் பெண்பாற் புலவர் பாடல்களின் மீள்பதிப்பு

சமகாலப் பெண்களின் கவிதைகள்மீது ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் எழுந்தபோது வரலாற்று ரீதியாகப் பெண்களின் கவிதை முயற்சிகள் என்னவாக இருந்தன என்று பார்க்கும் போக்கும் எழுந்தது. அதாவது சமகாலப் பெண் கவிஞர்கள் பலரும் கடந்தகாலத்தில் எழுதிய பெண்களின் மரபில்வைத்துத் தங்களை விளக்கினர். அம்மரபின் மீது வலுவாக ஊன்றி நின்றுகொள்ள விரும்பினர். சமகாலப் பெண் கவிதைகளை ஆபாசம் என்று சொல்லியபோது அத்தகு விவாதத்தில் ஔவை, ஆண்டாள் போன்றோரின் கவிதைகள் எடுத்தாளப்பட்டன. இந்நிலையில் முதலில் சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள் (2005) என்ற பெயரிலும் பின்னர் விரிவாக ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்; சங்கப்பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள்வரை’ (2008) என்ற பெயரிலும் தொகுப்பொன்றை ந. முருகேசபாண்டியன் வெளியிட்டார். இத்தொகுப்பில் 41 பெண் கவிஞர்களின் 181 கவிதைகள் இருந்தன. இப்பாடல்கள் ஏற்கனவே சங்க இலக்கியத் தொகுப்பில் இருந்தாலும், பிறரால் ஆங்காங்கு தொகுக்கப்பட்டும் எடுத்தாளப்பட்டும் வந்தாலும் 2000க்குப் பிறகு பெண்ணுறுப்புக்கள் சார்ந்தும் காமம் போன்ற உணர்வு சார்ந்தும் பெண்கள் எழுதியபோது ஏற்பட்ட விவாதங்களின் பின்னணியில்தான் இவை மீள்தொகுப்பைச் சந்தித்தன.

பெண் படைப்பாளிகள் தம் உடலினைப் படைப்பின் மொழியாகப் பதிவுசெய்வது சங்ககாலத்திலேயே தொடங்கியுள்ளது என்பதை இந்நூலில் ந. முருகேச பாண்டியன் கூறுகிறார். சமகாலத் தேவையில்லாமல் இப்படியொரு பதிவை அவர் செய்திருக்க முடியாது. இதேபோல உருவாகிவந்த பெண்ணெழுத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்பொருட்டு ஔவையோடு தொடர்புடையதாகக் கருதப்படும், தகடூர் என்றழைக்கப்படும் தருமபுரியில் அரங்கு ஒன்றினை நடத்தி ‘அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள்’ (2003) தொகுப்பைப் பிரம்மராஜனும் ஆர். சிவகுமாரும் தொகுத்தனர். அதியமானின் ஊராக அறியப்பட்ட தர்மபுரி இங்கு அவ்வையின் மண்ணாகப் பெயர்மாற்றம் பெற்றதைப் பார்க்கிறோம்.

இத்தகைய சூழலில் நவீன இலக்கியவெளிக்கு வெளியே பிறந்த தொகுப்பொன்றையும் இங்கு குறிப்பிடலாம். அது புலமைத்துவத் தளத்திலிருந்து வெளியானது. ஔவை என்ற பெண்பால் புலவரை மட்டுமே எடுத்துக்கொண்டு காலந்தோறும் ஔவை பெயரில் உருவான கவிதைகளை ‘ஔவையார் கவிதைக்களஞ்சியம்‘(2001)என்ற தலைப்பில் ப. சரவணன் தொகுத்தார். கல்விப்புலத் தொனியோடு வந்திருந்தாலும் இத்தொகுப்பாசிரியரையும் சமகாலப் பெண் எழுத்துகளின் வரவு பாதித்திருக்கிறது. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் பலருக்குத் தங்களுடைய முன்னோடிகளான சங்கப்பெண் கவிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது பொதுவாகத் தெரியாது என்று குறைபட்டுக்கொள்ளும் சரவணன் “இன்றைய இளம் கவிஞர்கள் சங்கப் பெண் கவிஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிரம்ப சேதிகள் உள்ளன” என்று குறிப்பிட்டு இவற்றைத் தொகுத்தார். சங்கக் கவிதைகளைப் படித்துமுடித்துவிட்டுதான் சமகாலப் பெண் கவிஞர்கள் எழுதவந்தார்கள் என்று கூற முடியாது. தெரிந்துகொள்ளாமலேயே அதேபோன்ற கவிதை மொழியை எழுதினார்கள் என்றால் அது நவீனப் பெண் கவிஞர்களின் பலம் என்றுதான் கூற முடியும். எப்படியோ சமகாலத்தில் பெண் கவிதைகள் பெருகியதால்தான் சங்கக் கவிதைகள் உள்ளிட்ட நம் மரபிலுதித்த பிற பெண் கவிதைகளைத் தொகுத்துப் பார்த்து அதன் தனித்துவக் கூறுகளைக் கண்டறியும் முயற்சி நடந்தது.

சிறுகதைத் தொகுப்பு

கவிதைத் தொகுப்புக்களைப் போலவே வேறு தொகுப்புகளும் இக்காலத்தில் வெளியாயின. இதுவரையிலும் எழுதப்பட்ட பெண்களின் சிறுகதைகளை ‘மீத மிருக்கும் சொற்கள்’ (2007) என்ற பெயரில் அ.வெண்ணிலா கொணர்ந்தார். படைப்பின்நேர்த்தியைவிடத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண்களின் இடத்தை மதிப்பிட இத்தொகுப்பு பயன்பட்டது. ஏறக் குறைய நூறாண்டு என்ற அளவில் ‘ஒரு படைப்பாளிக் கொரு கதை’யென்று இத்தொகுப்பு அமைந்துள்ளது. பெண்களின் இலக்கியப் பயணத்தில் சிறுகதை முயற்சி களை வரலாற்றுரீதியாக அணுகுவதற்கு இத்தொகுப்பு உதவுகிறது. பின்னர் மௌ.சித்ரலேகா ‘பாலை நண்டுகள்’ என்ற பெயரில் இலங்கைப் பெண் எழுத்தாளிகளின் சிறுகதைகளடங்கிய தொகுப்பைத் தந்தார்.

நாடகங்கள்

சிறுகதைத் தொகுப்பைப் போலவே ‘முடிவில்லாத உரையாடல்’ (2009) என்ற பெயரில் பெண்கள்எழுதியபன்னி ரண்டு நாடகங்களை இ.நந்தமிழ் நங்கை தொகுத்துள்ளார்.

இதுவும் வரலாற்றுரீதியான முயற்சிதான். இக்காலத்தில் வேறுசில நாடகங்களும் பெண்களால் நடத்தப்பட்டன. தமிழில் நடந்துவந்த பெண் அடையாள அரசியலுக்கு இவை உரமூட்டின. பெண்களின் கவிதை மொழி அகவயமானதாகவே இருக்கிறது என்று முன்பு கூறிய வ. கீதா, நாடகவியலாளரான அ.மங்கையோடு சேர்ந்து பெண்களின் சமூக வரலாற்றுப் பயணத்தை நாடகங்களாக எழுதி நிகழ்த்தினார். இந்நாடகங்கள் தமிழக வரலாற்றில் சமூக அரசியல்தளத்தில் செயற்பட்ட பெண்களின் வரலாற்றை வரிசைப்படத் தொகுத்துப் பார்ப்பதாக இருந்தன. இவ்வாறு 2007ஆம் ஆண்டு ‘காலக்கனவு’ என்ற பெண்ணிய வரலாற்று ஆவண நாடகம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டு வரலாற்றில் 18ஆம் நூற்றாண்டு தொடங்கி 1950ஆம் ஆண்டுவரையிலான பெண் செயற்பாட்டாளர்கள் இந்நாடகத்தில் குறிப்பிடப்பட்டனர். பாரதியுகம், காந்தியுகம், கிறித்தவம் தந்த விடுதலை, சுயமரியாதை இயக்கப் பெண்கள், தேவதாசிப் பெண்கள், இடதுசாரிப் பெண்கள் என்று வரிசைப்பட பலரை அடையாளம் காட்டியது இந்நாடகம். இதேபோல தமிழக அரசியலின் ஆண்மையக் குறியீட்டைக் கேள்விக் குட்படுத்தும் ‘ஆண்மையோ ஆண்மை’ நாடகமும் இதே குழுவால் நடத்தப்பட்டது.தமிழ்நாட்டு சமூக அரசியல் வரலாற்றுச் சம்பவங்கள் சிலவற்றைப் பெண் பார்வையில் பார்க்கும் சுடலையம்மா,வாக்குமூலம் போன்ற நாடகங்களும் இக்குழுவினரால் பின்னர் நடத்தப்பட்டன.

இதழ்கள்

‘பனிக்குடம்‘ என்ற காலாண்டிதழைக் குட்டி ரேவதி ஆசிரியராக இருந்து வெளியிட்டார். பல்துறைசார்ந்த முகமறியாத பெண்களின் வரலாற்றைப் பதிவு செய்ய இவ்விதழ் முற்பட்டது. பெண் எழுத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி என்று பனிக்குடம் தன்னை அறிவித்துக்கொண்டது. புகைப்படம், ஓவியம், இதழியல் துறை சார்ந்த பெண் ஆளுமைகளைப் பற்றிய அறிமுகமும் நேர்காணல்களும் இதழில் வெளியாயின.இதற்கு முன்பு 1990களில் பெண்களால் நடத்தப்பட்ட சுட்டும் விழிச்சுடர் இதழ் இடதுசாரிக் கருத்துகளின் செல்வாக்குகொண்ட பெண்இதழாக விளங்கியது.

இதேபோல மாலதி மைத்ரி நடத்திய ‘அணங்கு’ இதழும் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமூக அரசியல்வெளி சார்ந்து பெண்பார்வையிலான விமர்சனத்தையும் படைப்பையும் வெளியிட்டது. கவிஞர்களாக இருந்து செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்ட குட்டிரேவதியும் மாலதி மைத்ரியும் இவ்விதழ்களுக்குச் சூட்டிய பெயர்களே படைப்புத் தளத்தில் உருவாக்கிய பெண்மொழிக்கு இணையான சொல்லாடல்களாக இருந்தன. இப்பெயர்கள் எந்தவிதத்திலும் ஆண்களால் சூட முடியாதவை என்பதே இதன் தனித்துவம். ‘முலைகள்’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்த குட்டிரேவதி பெண்களின் உடலமைப்போடு அமைந்த பனிக்குடம் என்ற பெயரைத் தேர்ந்திருந்தார். ஆண்களை வருத்தும் பெண்பால் தெய்வமான அணங்கு பெயரை மாலதி மைத்ரி சூட்டியிருந்தார்.

இதேபோல இக்காலகட்டத்தில் வாஸந்தி, சிவகாமி ஆகியோர் நிலமும் பெண்களும் அரசியலும், பெற்றதும் இழந்ததும் போன்ற தொடர்களை ‘தீராநதி’ இதழில் எழுதினர். அவற்றில் பெண்களின் பார்வையிலிருந்து பல்வேறு பிரச்சினைகள் அலசப்பட்டன. பெண்களுக்கான பிரத்யேகமான அடையாளத்தோடு ‘விடுதலையை எழுதுதல், கொல்வோம் அரசனை’ போன்ற பெயரிலான தொடர்களை முறையே ‘தீராநதி’ இதழிலும் ‘உன்னதம்’ இதழிலும் மாலதி மைத்ரி எழுதினார். நிறைமாத சித்திரங்கள் என்ற தொடரைக் குட்டிரேவதியும் எழுதினார். இதே காலத்தில் மாலதி மைத்ரியின் கட்டுரைகளடங்கிய தொகுப்புகளாக ‘விடுதலையை எழுதுதல்’ (2004), ‘நம் தந்தையரைக் கொல்வதெப்படி’ (2008) போன்ற நூல்களும் வெளியாயின. பனிக்குடம் வெளியீடாகக் குட்டிரேவதியின் ‘உடலின் கதவு, சிவகாமியின் ‘உடலரசியல்’ ஆகிய நூல்களும், பறத்தல் அதன் சுதந்திரம், ஊடறு, கொல் வோம் அரசனை, விடுதலையை எழுதுதல் போன்று இவர்கள் நூல்களுக்கும் தொடர்களுக்கும் சூட்டிவந்த பெயர்களை உற்றுக் கவனித்தால் பெண்களுக்கேயான தனிமொழியொன்று இலக்கியத்தில் மட்டுமல்லாது விமர்சனங்களிலும் வெளிப்பட்டதைப் பார்க்க முடிகிறது. இங்கு தந்தையர், அரசன் என்ற சுட்டல்கள் ஆணாதிக்கத்தின் குறியீடுகளைச் சுட்டுவதாக இருந்ததைப் பார்க்க முடிகிறது. பறத்தல், விடுதலை போன்ற சொற்களையும் அவ்வாறே பார்க்கலாம். மேலும் மாலதி மைத்ரியின் கட்டுரைகளில் ஔவை, நீலி, ஆண்டாள், மணிமேகலை, கண்ணகி, புனிதவதி போன்ற புராண இலக்கிய மாந்தர்களையும் சமகால சுயமரியாதை இயக்கப் பெண்கள், ஈழப்பெண் போராளிகள் மற்றும் வடகிழக்குப் பெண்களின் போராட்டங்கள் போன்றவற்றையும் விவரித்தார். இப்போக்கை ‘பெண்ணிருப்பைப் பற்றியும் பெண்ணுடலைப் பற்றியும் மொழி மற்றும் சமூகக் குடும்ப நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவளுக்கெதிரான கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைத்து அவற்றின் வன்முறைக்கெதிராகக் குரலெழுப்புவதுதான் பெண்ணின் மாற்று அரசியல்’ என்று மாலதி மைத்ரி அடையாளப்படுத்துவதன் மூலம் உணர்ந்துகொள்ளலாம். இவ்வாறு அரசியலும் இலக்கியமும் இணைந்த பெண்களுக்கான சொல்லாடல் மொழி எழுத்துக்களாக விரிந்தன. இவ்வாறான செயல்பாடுகளை மொத்தமாக இணைத்துப் பார்க்கும்போது பெண்ணிய அடையாளத்திற்கென இலக்கியத் தளத்தைப் போலவே தனித்துவமான சமூக அரசியல் பண்பாட்டுச் சொல்லாடல் ஒன்றிற்கான முயற்சி இக்காலத்தில் உருவானதைப் பார்க்க முடிகிறது.

மொழிபெயர்ப்புகள்

இக்காலகட்டத்தில் வெளியான மொழிபெயர்ப்புகளும் கூடப் பெண்களுக்கான தனித்துவமான வெளியைக் கட்டமைக்க உதவின. இந்தவகையில் எழுத்தாளர் அம்பை முயற்சியால் ஸ்பேரோ நிறுவனம் வெளியிட்ட பயணப்படாத பாதைகள், சொல்லாத கதைகள் ஆகிய மொழிபெயர்ப்புகளைத் தொடக்க முயற்சிகளாகக் கருதலாம். (ஜுலை 2001) பல்வேறு பெண் கலைஞர்களின் அனுபவங்களையும் படைப்புகளையும் அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பயிலரங்கப் பதிவுகளே இந்நூல். திரை, சிற்பம், நடனம், அரங்கு, ஓவியம் ஆகிய துறைகளில் செயற்பட்ட பெண் ஆளுமைகளையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் இந்நூல்கள் அடையாளம் காட்டின. தமிழில் இதுவரையில் இப்படியொரு முயற்சி இல்லையென்றவகையில் இன்றும் இம்மொழி பெயர்ப்பு நூல் முன்னோடி நூலாகவே விளங்குகிறது.

இதற்கு அடுத்ததாக பௌத்த பிக்குனிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் மொழிபெயர்ப்பாக வெளியான தேரிகாதை (2007, சந்தியா பதிப்பகம்) என்ற நூல் குறிப்பிடத்தக்கது. 1909ஆம் ஆண்டு ரைஸ் டேவிஸ், பாலிமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த பாடல்களை அ.மங்கை தமிழுக்கு மொழிபெயர்த்தார். தமிழ்ப்பெண் கவிதைக் குரல்களுக்கு அரசியல்முகம் வேண்டுமென்று கூறிவந்த அ. மங்கை, வ. கீதா குழுவின் இன்னுமொரு முயற்சியாகவே இதைக் கூற வேண்டும். பெண் வெளிப்பாட்டு வரலாற்றை அறிவதில் தேரிகாதை முன்வைக்கும் அரசியல் பெண்ணியவாதத்தின் அடிப்படை அம்சங்களைக் காட்டுவதாக உள்ளது என்று கூறும் அ.மங்கை ‘பெண்ணியத்தை இறக்குமதிச் சரக்கென்று விமர்சிக்கும் வாதத்தைத் தகர்ப்பதாகவும் தேரிகாதை அமைகிறது’ என்று தன் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

பெண்ணெழுத்துக்களின் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் கவிதைகளும் தன் வரலாற்று நூல்களும்தான் தமிழில் கூடுதலாக வெளியாயின. பிற சூழல்களில் என்ன நடக்கின்றன என்பதைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு தங்களுடைய தனித்து வத்தையும் போதாமைகளையும் புரிந்துகொள்ள இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் பயன்படும். மலையாளத்திலிருந்து நளினி ஜமீலாவின் ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதம் (2007), சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ஆமென் (2009), சி.கே.ஜானு (2003), பேபி ஆல்தரின் ‘விடியலை நோக்கி’ (2007), பெங்களூர் நாகரத்தினமா வாழ்வும் பணியும் (2012), நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் (2009) ஆகியன தமிழுக்கு வந்த முக்கியமான சுயசரிதை மற்றும் வாழ்க்கைச்சரித நூல்களாகும். அயல்மாநிலங்களின் பெண்ணெழுத்துக்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் நஞ்சுண்டன் மொழிபெயர்ப்பில் கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட ‘அக்கா’ (2007) என்ற நூல், இதேபோன்று சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியான மலையாளப் பெண் கவிதைகளின் தொகுப்பான ‘பெண் வழிகள்’ (2005) என்ற நூல், குவளைக்கண்ணன் என்றறியப்பட்ட ரவியின் மொழிபெயர்ப்பில் ‘எங்கே அந்தப் பாடல்கள்’ (2010) என்ற தலைப்பில் ஆப்பிரிக்க பெண் கவிஞர்களின் கவிதை நூல் போன்றவை வெளியாகியிருக்கின்றன. மகாஸ்வேதாதேவி எழுதிய ‘அம்மா’ நாவல் வெளியானது. இதேபோல முதலில் ‘கட்டிலில் கிடக்கும் மரணம்’ என்ற தலைப்பிலும் வேறுசில புதிய கதைகளோடும் இரண்டாவதாக ‘சோளிகே பீச்சே ஹே’ என்ற தலைப்பிலும் பல்வேறு நாட்டைச் சார்ந்த பெண்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்து ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.

இதேபோல கடந்த பதினைந்து ஆண்டுகளில்தமிழ்த் துறை ஆய்வுப்புலங்களிலும் பெண்ணெழுத்து முக்கிய ஆய்வுப்பொருளாக மாறியுள்ளது. மு. வளர்மதியின் ‘சுயமரியாதை இயக்கப் பெண்கள்’ (2002), சே. சீனிவாசனின் பத்தொன்பதாம் நூற்றாண்டு இதழ்களில் பெண், தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடல் என்றமைந்த ‘பெண்: மொழி - வெளி’ போன்ற நூல்களை இப்பண்பு கொண்டவையாகக் கூறலாம்.

இவ்வாறு கடந்த பத்தாண்டுகளில் இலக்கியத் தளத்தில் எழுச்சி பெற்றுவந்த பெண்ணெழுத்துக்களையும் அடையாளச் சொல்லாடல்களையும் வலுப்படுத்துவதற்கான ஆதாரங்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால சமூக வரலாற்று நிகழ்வுகளிலிருந்து தேடித் திரட்டித் தரப்பட்டன. இத்தகைய சமூக வரலாற்றுப் பதிவுகள் இலக்கியத் தளத்தை உறுதிப்படுத்த உதவியதைப் போலவே இலக்கியத்தளமும் அத்தகைய தேடலை உந்தித் தள்ளியிருக்கின்றது. இக்கட்டுரையில் தகவல் விடுபடல்கள் இருக்கலாம். ஆனால் 2000த்துக்குப் பிறகு தமிழில் பெண்கள்சார்ந்து வெளியான புனைவல்லாத எழுத்துக்களின் பயணத்தைப் புரிந்துகொள்ள ஓரளவு இது உதவக்கூடும்.

வே. ஜெயபூர்ணிமா, திருவாசகத்திலும் அ. வெண்ணிலாவின் கவிதைகளிலும் 
ஆய்வுகள் மேற்கொண்டவர். தற்போது மதுரைக் கல்லூரி ஒன்றில் 
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

நன்றி - காலச்சுவடு - 191

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்