/* up Facebook

Nov 14, 2015

பசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி


அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தாத்ரியில் இஸ்லாமியக் குடும்பம் ஒன்று மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும் அதைத் தின்றதாகவும் பரவிய வதந்தியால், அக்குடும்பம் இந்துக்களின் கும்பலொன்றால் தாக்கப்பட்டது; ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வன்முறை மனிதத்தன்மையிலும் கலாச்சாரப்பன்மையிலும் சிறிதேனும் நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் தந்திருக்கும். இந்தத் தாக்குதல் மாட்டுக்கறியை முன்னிட்டு இந்துக்களையும் முஸ்லிம்களையும் அந்நியப்படுத்துகிற மதவாத அரசியலின் ஒரு பகுதி என்று அறிவுச்சமூகத்தினரால் சரியாகவே அடையாளப்படுத்தப்பட்டது. அரசியல், கலாச்சாரத் தளங்களில் இந்து, முஸ்லிம் சமூகங்களை இரு துருவங்களாக்குகிறவகையில் ஒரு பொருண்மையான குறியீடாகப் பசு முன்னிறுத்தப்படுகிற அதே நேரத்தில், இக்குறியீட்டின் கட்டமைப்பு பாலினரீதியாகவும் உள்ளதை நாம் கவனிக்கவேண்டும். இந்து மரபுச் சொல்லாடல்களில் பெண்மைக்கும் பசுவுக்குமான தொடர்பின் இழைகளை ஆராய்ந்துபார்த்தால், பாலினப் பாகுபாட்டைச் சாரமாக, ஆதாரமாகக் கொண்டிருக்கும் இக்குறியீடு இந்து தேசியம் சார்ந்து உருவான, இயங்குகிற விதங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தாத்ரி தாக்குதல் நேர்ந்தவுடன், அதை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கண்டித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ‘பசு ஒரு விலங்கு மட்டும்தான், அது யாருக்கும் தாயாக இருக்கமுடியாது. நான் மாட்டிறைச்சி உண்ண விரும்பினால் அதில் என்ன கெடுதி இருக்கிறது?’ என்று நியாயமான வினாவை எழுப்பினார். இந்துக்களின் தாயாகப் பசுவைத் தொடர்ந்து வியந்தோதும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களின் குரல்களுக்கு மத்தியில் கட்ஜு போன்ற சிலரின் மறுப்புக் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாக்ஷி மஹராஜ் ‘எங்கள் தாயைக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம், அதற்காகக் கொல்லவும் கொல்லப்படவும் தயாராக இருக்கிறோம்’ என்று அறைகூவல் விடுத்தார். ‘பசு எங்கள் பாரத மாதா, உடலால் எங்கள் தாய்’ என்று முழங்கினார். பாரதிய ஜனதாவின் நடுவண் அரசின் மந்திரி கிரிராஜ் சிங், ‘ஒரு மனிதனுக்குத் தன் மனைவியோடு இருக்கும் உறவும் சகோதரியோடு இருக்கும் உறவும் வேறுபட்டது. அத்தகைய வேறுபாடு ஆட்டு மாமிசத்துக்கும் பசு மாமிசத்துக்கும் இடையே இருக்கிறது’ என்று கூறினார். பாலியல் உறவுமுறை ஒன்றின் தகாத தன்மை, விலங்கின் இறைச்சியுணவுக்கு ஏற்றப்படுவது சாதாரண உருவக வெளிப்பாடு அல்ல. மாட்டிறைச்சி உணவு சட்டவகையிலான குற்றம் என்பதைத் தாண்டி, சமுதாய வாழ்க்கைக்கு எதிரான தீயொழுக்கம் என்று அடையாளப்படுத்துகிற உத்தி அது.

இந்துக்களின் தாயாகப் பசுவை முன்னிறுத்துவதும் தகாத உறவோடு மாட்டிறைச்சியை உண்ணுவதை ஒப்பிட்டுக் கண்டிப்பதுமான இத்தகைய பேச்சுகள், இன்றைக்கு பாரதிய ஜனதா நடுவண் அரசாட்சியில் அமர்ந்திருப்பதால் வெளிவருவதாகச் சிலர் எண்ணலாம். ஆனால் இவற்றுக்கான அடித்தளங்கள் காலனியக் காலகட்டத்திலேயே இடப்பட்டிருப்பதை வரலாற்றறிஞர்கள் எடுத்தெழுதியிருக்கிறார்கள் (எடுத்துக்காட்டாக, பாண்டே 1990; ப்ரைடெக் 1980). வடமேற்குப் பகுதியில் பஞ்சாபில் சீக்கிய நாமதாரிகள் 1870-களிலேயே அமிர்தசரஸ் போன்ற இடங்களில் ‘பசுவதையை’ முன்னிட்டு, இஸ்லாமியருக்கும் ஆளும் ஆங்கிலேயருக்கும் எதிராக சீக்கிய முன்னணி ஒன்றை நிறுவ முயன்றனர். சீக்கிய மதச் சீர்திருத்தவாதத்தோடு இணைந்திருந்த மாட்டிறைச்சிக்கு எதிரான அவர்களின் கொள்கையைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் தயானந்த சரஸ்வதியின் இந்து மதச் சீர்திருத்தங்களைப் பேசிய அமைப்பான ஆரிய சமாஜம் கையிலெடுத்துக்கொண்டது. தனது ‘கோகருணாநிதி’ (1880) என்கிற ஆக்கத்தில் பசுத்தாயைக் கொல்வது இந்துக்களுக்கு எதிரான செயல் என்று வாதிட்ட தயானந்த சரஸ்வதி, பசுக்களைப் பாதுகாக்க 1882-ஆம் ஆண்டு கோரட்சண சபைகளை நிறுவினார் (பாபு 2013, 128). மாட்டிறைச்சியை உண்ணுகிற கிறித்துவ பிரிட்டிஷாரையும் இஸ்லாமியரையும் தாக்கி எழுதிய அவர், பசுக்களைக் காப்பாற்றுவதை இந்துக்களின் இன்றியமையாத கடமையாகக் கூறினார் (பாபு 128). பசு தேசத்தின் தாய் என்றும், அதைக் காப்பாற்றுகிற செயற்பாட்டால் தேசம் வலிமை பெறும் என்கிற பரப்புரையை ஆரிய சமாஜம் செய்தது (பாபு 128). தொடக்கத்தில் சீர்திருத்த நோக்கில் விமர்சிக்கப்பட்ட இந்துச் சமூகத்தின் நொய்மை, இந்து தேசியச் சொல்லாடல்களில், காலனியத் தாக்குதலால் தேசத்துக்கு உண்டான ஒரு நிலைமையாக மாற்றம் பெறத் தொடங்கியது. இந்த மாற்றம், ஒரு தளத்தில் பெண்மையின் ‘ஆதரிச நிலை’ என்று கருதப்படும் தாய்மையைக் குறியீட்டு முதலாகக் (symbolic capital) கொண்டது; இத்தோடு இணைந்த இன்னொரு தளத்தில், தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய, பலவீனமான (vulnerable) நிலைமையை உருவகப்படுத்த பொருண்மையான பொருளாகப் பசுவின் உடல் பயன்பட்டது. இந்து

தேசியச் சொல்லாடல்களில் இவ்விரண்டையும் இணைத்து, தேசத்துக்கான குறியீடாக ‘பசுத்தாய்’ நிறுவப்பட்டது. ஏற்கெனவே இந்துச் சமயநூல்களில் பசுவோடு இணைந்த தாய்மை குறித்த சொல்லாடல் இதற்கு வழியமைத்துத் தந்தது. அதாவது, காலனியக் காலகட்டத்தின் பசுத்தாய்க் குறியீடு வெறுமையிலிருந்தோ தற்செயலான கற்பனையிலிருந்தோ உருவானதல்ல. இதை விவாதிக்கும் முன்னர், பசுவின் உடலையும் தாய்மையையும் இணைத்துக் காலனியக் காலகட்டத்தில் செய்யப்பட்ட சில பரப்புரைகளைப் பார்க்கலாம்.

ஆரிய சமாஜத்தின் தாக்கத்தால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் பசுவைப் பாதுகாக்கும் சபைகளும் அமைப்புகளும் வட இந்தியாவில் பிரபலமடைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் 1920கள்வரையிலும் பசுவை முன்னிட்டுக் கலவரங்களும் கிளர்ச்சிகளும் வட இந்தியாவில் நடந்தன (ப்ரைடெக் 1980). குறிப்பாக, 1886ஆம் ஆண்டு, பசுக் கிளர்ச்சிகள் பரவிய சூழலில் அலஹாபாத் நீதிமன்றம் ‘இந்தியக் குற்றவியல் சட்டம், பிரிவு 295க்குள் பசு புனிதப்பொருளாக வராது, எனவே பசுக்களை அறுக்கிற இஸ்லாமியர்கள் மத வன்முறையைத் தூண்டுபவர்களாகக் கருதப்படமாட்டார்கள்’ என்று தீர்ப்பளித்தது (பாபு 129). அத்தீர்ப்புக்குப் பின்னர், உடனடியாக அலஹாபாத்தில் பசு பாதுகாப்பு அமைப்புகள் தோன்றின. சில வருடங்களுக்குப் பின்னர் இந்த அமைப்புகள் கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் பிரபலமடைந்தன (பாபு 129). தகவல் தொடர்பும் பிரசுர வசதிகளும் ஏற்பட்டதால் துண்டுப் பிரசுரங்கள், கவிதைகள், போஸ்டர்கள், நாடக நூல்கள் போன்றவற்றின் வாயிலாகப் பசுத்தாயின் புகழ் பரப்பப்பட்டது; காசி போன்ற இடங்களிலிருந்து பசுத்தாய் குறித்த ’கோசேவக்’ போன்ற பத்திரிகைகள் வெளிவந்தன; பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு பசுவின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன; சுற்றுக்கு விடப்பட்டன (குப்தா 2001). மேலும், துண்டுப் பிரசுரங்கள் பசுவை அறுப்பதை தாயைக் கொலைசெய்வதோடு மட்டுமன்றித் தகாத உறவு கொள்வதோடும் ஒப்பிட்டன (பாண்டே 185). அன்றையச் சூழலில் பொதுக்கூட்டங்களில் காட்டப்பட்ட இரண்டு படங்களை விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் சாரு குப்தா (2001, 4296). அவற்றில் ஒன்று, ஒரு பசு இஸ்லாமியக் கசாப்புக்காரர்களால் வெட்டப்பட்டு, ‘இன்றைய நிலை’க்குத் தள்ளப்பட்டதன் படம்; இரண்டாவது, உடலில் இந்துத் தெய்வங்களும் புனிதர்களும் ‘வசிக்கிற’ பசுவின் படம். இரண்டாவது படத்தில் பசுவின் மடியில் கன்றொன்று பால் குடிக்க, ‘இந்து’ என்று பெயரிடப்பட்ட ஒரு பெண் தன் கையில் பாத்திரத்தோடு கன்று பால் குடித்து முடியக் காத்திருக்கிறாள். பசுவின் பின்னால் தர்மராஜ் என்ற பெயரில் கிருஷ்ணன் இருக்கிறான். முன்னாலிருந்து பசுவை, இஸ்லாமியர் என அடையாளப்படுத்தக்கூடிய இராட்சத உருவம் ‘கலியுகம்’ என்கிற வாளோடு அந்தப்பசுவைத் தாக்குகிறது. தாக்குதலுக்கு உள்ளாகிற மென்விலங்காக மட்டும் பசு இத்தகைய காட்சிப்படுத்தல்களில் இடம்கொள்ளவில்லை. தெய்வத்தின் வன் உருவமாகவும் பசு சில படங்களில் சுட்டப்பட்டது. உதாரணமாக, ஒரு படத்தில் சிங்கத்தின் மேலேறிவரும் அஷ்டபுஜதேவி, பசுவொன்றின் தலையை வெட்டிய இரண்டு கசாப்புக் காரர்களைக் கோரமாகத் தாக்குகிறாள். கொல்லப்பட்ட பசு, உயிர்த்துப்பழிவாங்கக் கூடிய தெய்வமாக மாறுவதாக இதைக் கொள்ள முடியும் (குப்தா, 4296).

பொதுவெளியில், கூட்டங்களில் பரப்பப்பட்ட இப்படங்கள் காட்சி அனுபவங்களாக மாத்திரம் அல்ல, விளைவுகளை உண்டாக்கக்கூடிய நிகழ்த்துதல்களாகவும் இருந்தன. உத்தரப்பிரதேச ஆஸம்கர் மாநிலத்தில் 1880களில் இறுதியில் பசு பாதுகாப்புக்காக நடந்த ஒரு கூட்டத்தைப் பற்றி சண்ட்ரா பிரைடெக் என்கிற வரலாற்றாய்வாளர் தருகிற வர்ணனை இது (1980, 608-609): ஒரு ஜமீன்தார் நடத்திய கூட்டத்தில் ஐயாயிரத்திலிருந்து ஆறாயிரம் பேர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மண்பாண்டங்களும் அத்யாவசியப் பொருள்களும் கொடுக்கப்பட்டன. கூட்டத்தில் பசுவைப் பாதுகாக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்துக் கடவுள்கள் உடலிலிருக்கும் பசுவின் படமொன்று ஒரு ஸ்டூலில் வைக்கப்பட்டது. படத்தின் பிரதிகள் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன. கூட்டத்தில், ‘பசுவிடமிருந்து அதன் கன்று பால் குடித்தபின்தான்கறக்க வேண்டும்,’ ‘ஒவ்வொரு மனிதரும் பசுவின் பாலைக் குடிப்பதால் பசு உலக அன்னை, எனவே பசுவைக் கொல்லுதல் தாயைக் கொல்வதாகும்’ என்று உரையாற்றப்பட்டது. படத்தில் வாளோடு இருந்த உருவம் இஸ்லாமிய ரோடு அடையாளப்படுத்தக் கூடியதாக இருந்தது. இத்தகையக் கூட்டங்களில் பசுத்தாயின் கொலையைத் தடுக்கச் சபையை நிர்மாணிக்க, விதிகளை வரைய, அதிகாரிகளை நியமிக்க முடிவுசெய்யப்பட்டது. மதச் சடங்கை ஒத்த இத்தகைய நிகழ்வுகளில், பசுவின் படங்கள் பெண் பாலினத்தன்மை கொண்டதேசத்தைக் கட்டமைக்கும்வகையில் செயற்பட்டன. பசுவின் தாக்குதலுக்காளாகும் தன்மையும் அதன் சக்தியும் இந்து தேசத்துடைய பண்புகளாகக் கூட்ட நிகழ்த்துதல்களில் கட்டமைக்கப்பட்டன. இங்கே பசுவின் சக்தி இருவகையில் உருவகிக்கப்படுகிறது. ஒன்று, கடவுள்களைத் தன் உடலில் கொண்டிருப்பதால் பசுவுக்கு உள்ளுறையாகப் புனையப்படுகிற புனித சக்தி; இன்னொன்று பசுவின் பாலின் மூலமாக மனிதர்களுக்குக் கிட்டுவதாகச் சொல்லப்படுகிற உடலாற்றல். இணையானதொரு தளத்தில், பசு சுட்டுகிற இந்து தேசத்தின் ஆன்மீகச் சக்தியைக் குடிகள் பெறுதலும், பசுவின் பால் மூலம் உடல்வலுப்பெறுதலும் குடிகளுக்கு வழிமொழியப்படுகின்றன. தயானந்த சரஸ்வதி, இந்தியர்களின் சக்திக் குறைவும் உடல்நலச் சீர்கேடும் நாட்டில் பால் வளம் குறைந்ததால் ஏற்பட்டது, இதற்குப் பசுவதையே காரணம் என்று வாதிட்டது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது (பாபு 128). பின்னர் 1920களிலிருந்து இந்து மகாசபை போன்ற அமைப்புகளால் பசு - தாய் - இந்து தேசம் என்கிற மதவாதச் சமன்பாடு முன்னெடுக்கப்பட்டது, இன்றுவரை இச்சமன்பாடு இந்துத்வச் சொல்லாடல்களில் ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றைப் புரிந்துகொள்ள இத்தகவல் பின்னணி உதவலாம்.

இந்து தேசியர்களைத் தாண்டி காந்தி போன்ற தலைவர்களின் எழுத்திலும் ‘பசு இந்துக்களின் தாய்’ என்கிற வாதத்தைப் பார்க்கமுடிகிறது. பசுவதைத் தடைச் சட்டம் இயற்றுவதை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமியரின் மனமாற்றம் மூலமாக மட்டுமே பசுவதைத் தடுப்பு சாத்தியம் எனக் கருதினார் அவர். பசுவதைத் தடைச் சட்டம் ‘இந்துக்களற்ற இந்தியர்களின்மேல் திணிக்கப்படும் பலவந்தமாக இருக்கும்’ என்ற கருத்து அவருக்கு இருந்தது. ஆரியசமாஜத்தின் கொள்கையான கோரக்ஷணம் (பசு பாதுகாப்பு) என்கிற சொல் முஸ்லிம்களுக்கு எதிராகவும் வலுச்சண்டையைக் குறிக்கும்முகமாகவும் இருந்ததால், ஆரிய சமாஜ அமைப்புகளிலிருந்து மக்களை அந்நியப்படுத்தவே ’கோ சேவை’ (பசுத் தொண்டு) சங்கத்தை அவர் ஏற்படுத்தினார் என்று கருதுவோருண்டு (பால் 1996, 55); என்றபோதும், ‘இரக்கத்தின் கவிதை’ என்றும் ‘மனிதருக்குக் கீழான உயிர்வகைகளில் ஆகத் தூய்மையானது’ என்றும் பசுவை வர்ணித்த காந்தி, தாய்மையோடு அதை இணைத்து வியந்தோதத் தவறவில்லை (காமத் 2007,125): ‘நம்மைப் பெற்ற தாயைவிடப் பசுத்தாய் பன்மடங்குச் சிறப்பானவள். நம் தாய் நமக்கு ஓரிரு வருடங்கள் பால் கொடுத்துவிட்டு நாம் வளர்ந்தபின் அவளைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். பசுத்தாயோ நம்மிடமிருந்து புல்லையும் தானியங்களையும் தவிர எதுவும் எதிர்பார்ப்பதில்லை” (காமத் 125). “இந்து சமயத்தின் மைய உண்மை பசு பாதுகாப்பு” என்றும், “பசுவைப் பாதுகாக்க இந்துக்கள் உள்ளவரை இந்து சமயம் நிலைத்திருக்கும்” என்றும் கருதினார் காந்தி (காமத் 126). இவற்றிலிருந்து இந்தியத் தேசம் இந்துக்களுடையது மட்டு மல்ல என்பதில் காந்தி உறுதியாக இருந்தார் என்றாலும், இந்துக்களின் கடமை, தர்மம் ஆகியவற்றின் அடிப்படையாகப் பசு-தாய் என்கிற கண்ணி அவர் சிந்தனைகளிலும் இறுக்கமாகவே இருந்ததெனத் தெரிகிறது.

காலனிய வரலாற்றில் வடஇந்தியாவை ஒப்பிடத் தமிழகத்தில் பசுவை மையப்படுத்திய அரசியல் கலகங்களும் கிளர்ச்சிகளும் பெரிய அளவில் நடந்ததாகத் தெரியவில்லை. ஆஷ் என்ற ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தில் ‘கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்ச[ன்]’ என்று ஆங்கிலேய அரசனைச் சுட்டி ஒரு குறிப்பு வருகிறது (சிவசுப்பிரமணியன் 2009, 29). பசுக்களின் பாதுகாப்பும் பசுத்தாயின் அருமையும் இங்கேயும் வியந்தோதப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, காரைக்குடியிலிருந்து வெளிவந்த ‘குமரன்’ இதழில் (09/01/1924) அரு. சோம என்பவர் எழுதிய ‘பசு பரிபாலனம்’ என்கிற கட்டுரை கிலாஃபத் கிளர்ச்சியின் சூழலில் காந்தியால் பசுவதை குறித்து இஸ்லாமியரிடத்தில் ‘மனமாற்றம்’ ஏற்பட்டதெனக் குறிப்பிடுகிறது: ‘முஸ்லிம் மதத்தினர் தங்களுடைய பக்ரீத் பண்டிகையில் நீண்ட நாட்களாகப் பசுவதை புரிந்துவந்தார்கள். ஆனால் இந்நாளிலே நமது நாட்டிலே உற்றிருக்கும் அரசியற் கிளர்ச்சியின் காரணமாகவும், காந்தியடிகளின் அரிய உபதேசத்தின் பயனாகவும் அஃது அறவே ஒழிந்து போனது நமக்கு மகிழ்ச்சியைத் தருவதேயாகும்.’ இஸ்லாமியர்களைப் புகழ்கிற இந்தக் கட்டுரை அதே வீச்சில் மாட்டிறைச்சியைக் குறிப்பிட்டு காலனிய ஆட்சியாளர்களை விமர்சிக்கிறது. கூடவே, பசுவை மனிதகுலத்தின் தாயாகக் காட்டி, அதைக் காப்பாற்றும் கடமையை உபதேசிக்கிறது: ‘இதனை எழுதும்போழ்து எனது எழுதுகோல் நடுங்குகிறது. உள்ளம் துடிக்கிறது. சில மிலேச்சர்கள் ஊன் விழைந்து கிழட்டுப் பசுவினங்களை விலைக்கு வாங்கி வெட்டி அவித்து விலாப்புடைக்கத் தின்கிறார்கள். பசுவினங்களின் சொந்தக்காரர்கள், ‘கிழட்டு வறட்டுப் பசு நமக்கு எதற்கு’ என்று பணத்திற்காசைப்பட்டு விற்று விடுகிறார்கள். அவ்வாறு அடிமாட்டிற்கு விற்கப்படும் பசு, தனது இளம்பிராயத்தில் இனிய பாலை நன்கு பொழிந்து நம்மை வளர்த்ததை உணருகின்றார்களில்லை! தாம் வளர்த்தது என்பதையும் உணருகின்றார்களில்லை! என்னே! காலத்தின் கொடுமை! அந்தோ! பரிதாபம்!! தாம் பரிந்து வளர்த்த பசுக்களை இவ்வாறு கொலையுண்டு போதற்கு விற்கலாமா? பால் சுரந்து நம்முடலைப் பரிபாலித்த நன்றியை மறக்கலாமா?’

தாய்மையோடான பசு காலனியக் காலகட்டத்தில் முக்கியமான பண்பாட்டுக் குறியீடாக ஊக்குவிக்கப்பட்டதை மேலே கூறியவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்துக்கள் பலரும் மாட்டிறைச்சி புசித்த நடைமுறை யதார்த்தத்தையும் தாண்டி இது நிகழ்ந்திருக்கிறது. பெண்மையின் ஆதரிசமாக வியந்தோதப்படுகிற தாய்மைநிலையோடு பசு எவ்வாறு இந்துப் பண்பாட்டுச் சொல்லாடல்களில் உயரிய இடத்துக்கு வந்து சேர்ந்தது, பிற விலங்குகளுக்கு இல்லாத எந்தப் பண்பாட்டு முகாந்திரங்கள் இதற்கு இருந்தன என்பது ஆய்வுக்குரியது. பசுவின் பால் மட்டுமல்லாமல் எருமையின்பாலும் மனிதர்களுக்கு உணவாவதால், பசு-தாய்மைப் பிணைப்புக்கு அதன் பால் உணவாவது மட்டும் அடிப்படையல்ல என்று தோன்றுகிறது.

வேதகாலத்தில் ஆரியர்கள் தயக்கமில்லாமல் மாட்டிறைச்சி உண்டதைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். வேள்வியில் மட்டுமல்ல, வேள்விக்கு வெளியிலும் நீத்தார் சடங்குகள், திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற குடும்ப நிகழ்வுகளில் மாட்டிறைச்சி உண்ணப்பட்டிருக்கிறது. சதபத பிராமணம் போன்ற வேதப் பகுதிகள் பசு உள்ளிட்ட கால்நடைகளைப் பார்ப்பனர்கள் உட்பட பலரும் உண்டதற்குச் சான்றுகளைத்தருகின்றன (கோரம் 2000; ஜா 2002). வேதத்தில் பெண் பாலினச்சுட்டோடு சில இடங்களில் வருகிற அக்ன்யா (Aghnya) என்கிற சொல்லைக் குறிப்பிட்டு ‘கொல்லப்படாதது பசு’ என்கிற கருத்தைச் சில இந்துத்வர்கள் வலியுறுத்துகிறார்கள். குழப்பமான இச்சொல்லைப் பற்றி விவாதங்கள் சம்ஸ்கிருத அறிஞர்கள் மத்தியில் நடந்திருக்கிறது. ‘கொல்லப்படாதது’ என்பதை இடக்கரடக்கலாகப் பொருள் கொள்ளக்கூடிய சாத்தியமும் உண்டு (பார்க்க: அல்ஸ்டார்ப் 2010, 72-73). அதாவது, வேள்வியில் இடப்படுகிற பலிப் பசு உண்மையில் கொல்லப்படுவதில்லை என்பதுபோல. மேலும், பொதுவாக வேள்விபற்றிய வேதக் குறிப்புகளில் ‘கொல்லுதல்’ என்கிற வினைச்சொல் அப்படியே பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் நோக்கத்தக்கது. வேள்வியில் அவிர்ப்பலியாகத் தரப்படுகிற பசு கொல்லப்படுவதாக எண்ணப்படுவதில்லை என்பதற்குத் தமிழிலிருந்தே சான்று தரமுடியும். வில்லிபுத்தூரார், நல்லாப் பிள்ளை உள்ளிட்ட பலரது தமிழ் மகா பாரத நூல்களைத் தழுவி, த. சண்முகக் கவிராயரால் எழுதப்பட்ட ‘ஸ்ரீமஹாபாரத வசனம்’ நூலில், அநுஸாஸன பருவத்தில் ‘உமாமகேச ஸம்வாதமுரைத்த சருக்கம்’ என்று ஒருபகுதி வருகிறது. அதில், கடைத்தேற்றுகிற தருமம் எது என்று பார்வதி கேட்க, சிவன் ‘கொல்லா விரதமே எல்லா தருமத்திற்கும் மேலானது’ என்று பல பக்கங்களுக்கு விளக்குகிறார். கலப்பை பிடித்து உழுகிறபோது ஜீவன்கள் கொல்லப்படுவது, விளக்கேற்றி வைத்தால் விட்டில்பூச்சிகள் அதில் வந்து மாய்வது போன்றவை கொல்லும் பாவத்தைச் சேர்க்காது என்கிற ஈசுவரன், வேத வேள்வியைப்பற்றிக் கூறுகிறார்: ‘வேத விதிப்படி யாகங்கள் பண்ணும்போது பசுக்கள் முதலியவற்றை அவிர்ப்பாகங் கொடுக்க, அதை அவர்கள் உண்டுகளிக்குங் காரணத்தினால் கொல்லாவிரதத்திற்குண்டான பலன் கிடைக்கும்; குற்றமில்லை. இதற்குத் திருட்டாந்தமாக ஒரு கதையுண்டு. பூர்வம் முறை நெறிமாறாமல் செங்கோல் செலுத்திவந்த அந்தித்தேவனென்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் நூறுகோடி பசுக்களைக் கொன்று எக்ஞம் கண்டு மேலான பேறடைந்தான். இன்னும் அந்தப் பசுக்களினுடைய இனங்கள், நான் வருகின்றேன், நான் வருகின்றேன் என்று யாக முன்னிலையில் உடலையொறுத்து உயிர்விடுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன... யாக முன்னிலையில் பசுபந்தனாதிகள் பண்ணி யாகஞ் செய்தால் அவர்களுக்குக் கொலைபாதகம் பொருந்தாது. அந்தப் பழியை மந்திர தேவதைகள் ஏற்றுக்கொள்வார்கள்’ (1969, 292-93).

பசு வேள்விப்பொருளாக இருந்ததை, தின்னப்பட்ட தைப் பேசுகிறபோது, தொடக்கக்கால வேதப் பண்பாட்டிலேயே (1500 BCE) பசுவுக்குத் தனிப்பட்ட இடம் தரப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடவேண்டும். மார்வின் ஹாரிஸ் போன்றவர்கள் முன்வைக்கிற பொருளாதாரக் காரணங்களுக்கு அப்பால், பண்பாட்டு மதிப்பீடு பெற்றிருந்த குறியீடாகப் பசு அக்காலத்தில் இருந்தது என்கிறார் ப்ராங்க் கோரம் (2000) என்கிற சமயத்துறை ஆய்வாளர். வேள்விகளில் பசுவும் பசுவிடமிருந்து கிடைக்கும் நெய் போன்றவையும் அவிர்ப் பலியாகக் கொடுக்கப்பட்டன என்பதற்கு மேலாக பிரபஞ்சத்தின் முழுமையோடு பசு அடையாளப்படுத்தப்பட்டது. அதர்வ வேதத்தில் (10.10.1) ‘எல்லா வற்றையும் உருவாக்குவதாக எல்லாவற்றையும் உட்கொண்டிருப்பதாக’ பசு காட்டப்படுகிறது. பிரபஞ்சத்துக்கும் பசுவுக்குமிடையேயான நுட்பமான மெய்யியல் சார்ந்த உறவை ரிக்வேதமும் பல இடங்களில் சுட்டுகிறது. இந்தச் சொல்லாடல்களில் பிரபஞ்சத்தோடு பசுவுக்கு இருந்த உறவு பின்னாட்களில் அது வழிபடக்கூடிய நிலையை அடையக் காரணமாக இருந்தது என்கிறார் கோரம் (2000, 187). வேதங்களில் தேவர்களின் தாயாகிய அதிதியோடும் பூமியோடும் பிரபஞ்ச நீர்களோடும் தாய்மையோடும் பேச்சு மற்றும் கவிதையோடும் பசு ஒப்பிடப்பட்டதை வரலாற்றாய்வாளர் டி.என். ஜா’வும் குறிப்பிடுகிறார்; என்றாலும் அவற்றை வெறும் கவித்துவ வர்ணனைகள் என்று அவர் தள்ளிவிடுகிறார் (2002, 38). எதற்காக மற்ற விலங்குகளோடு ஒப்பிடப் பசுவுக்கு மட்டும் இத்தனை கவித்துவ வர்ணனைகள், கவனிப்பு தரப்படவேண்டும் என்பதற்கு அவர் நூலில் பதில் இல்லை.

பசு பெற்றிருந்த இந்தத் தனித்துவம் அதை மக்கள் உண்ணுவதற்குத் தடையாக இருந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. வேதத்தில் சாண்டோக்கிய உபநிடதம் போன்ற பகுதிகளில் கொல்லாமை கொஞ்சம் பேசப்படுகிறது. ஆனால் சிரமண சமயங்களான சமணமும் பௌத்தமும் வேதவேள்விகளில் உயிர்ப்பலிகளுக்கு எதிரான வலுத்த நிலைப்பாட்டை எடுத்த பின்பே பசுவை உண்ணுதல் பாவம் என்கிற கருத்து தோன்ற ஆரம்பித்தது. மகாபாரத ஆக்கம் முடிந்த நான்காம் நூற்றாண்டு வாக்கில் இக்கருத்து திடம் பெற்றிருக்கிறது (கோரம், 189). அதாவது, சமயப் பண்பாட்டில் தனித்துவச் சிறப்போடும் வாழ் முறையில் இயல்பான உணவாகவும் இருந்த பசுவை, புனிதக் குறியீடாக மாற்றி உணவுத் தளத்திலிருந்து அப்புறப்படுத்தும் சொல்லாடல்கள், சமண, பௌத்தத் தாக்கங்களால் உருப்பெற்று, இதிகாசக் காலத்துக்குப் பிறகு பரவின; பின்னர் வைணவத்தில்கண்ணன் வழிபாடு போன்றவற்றால் மேலாண்மை பெற்றன என்று கூறலாம். இந்தச் சொல்லாடல்கள் எந்த அளவுக்கு உணவுத் தேர்வு நடைமுறையில் பாதிப்பைச் செலுத்தின, யாரையெல்லாம் பாதித்தன என்பவை தனி ஆய்வுக்குரியவை.

தாய்மையோடு பசுவை இணைத்தவகையில், ரிக் வேதத்தின் பிரபஞ்ச உருவாக்கப் புராணம் தத்து வார்த்த முக்கியத்துவம் கொண்டது. ‘இந்திரன், குழப்பகளேபரத்திலிருந்த ஆதி நீர்களில்/நீர்களிலிருந்து பிரபஞ்ச ஒழுங்கொன்றைக் (rta) கட்ட முயல்கிறான். இந்த நீர்கள் ஒரு குகைக்குள் விருத்திரனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திரன் விருத்திரனைக் கொல்கிறான். நீர்கள் பசுக்களின் கனைப்பொலிகளோடு தாழ்ந்து சரிந்தவண்ணம் சமுத்திரத்தை நோக்கி இறங்குகின்றன. இப்பசுக்கள் சூலுற்றது போல்வன. அவை கன்றை, சூரியனை ஒளியை / வாத்சல்யத்தைப் பெற்றெடுக்கின்றன. இவ்வாறாக நீர், ஒளி, வெப்பம் பிறப்பிக்கப்படுகின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றன. உயிர்களின் உருவாக்கம் முழுமையடைகிறது. உலகம் அதனிடத்தில் வைக்கப்படுகிறது. வானமெனும் மேற்கூரை பரப்பப்படுகிறது’ (சுருக்கித் தந்திருக்கிறேன், பார்க்க: கோரம் 190). ஒழுங்கற்ற நீர்கள் பெண்மைத்தன்மையோடு மட்டுமல்ல, சூலுற்றதாகவும் சொல்லப்படுகின்றன இப்புராணத்தில். அதாவது, ரிக்வேதத்தின் இந்த ஆதிப்புராணத்திலேயே பெண்மை அதன் வளமையோடு, இனப்பெருக்கக் கடமை வினையோடு தாய்மைநிலையில்தான் காட்டப்படுகிறது. மேலும், இப்புராணத்தில் நீர்கள் மட்டுமே பசுவாக அடையாளம் கொள்ளவில்லை, இந்திரன் ‘வலுவான காளை’ என்றே உவமிக்கப்படுகிறான். பசு (பெண்மை) இந்திரனின் (ஆண்மை) வித்தைப் பெறுவதாக இதைப் பொருட்கொள்ளலாம். வித்தை வாங்கிக்கொள்ளும் பாத்திரமாக (receptacle), அதே நேரத்தில் படைப்புச் சக்தியாக, இடமாக (generative force and space) பெண்மை குறிக்கப்படுகிறது. ஒளியோடும் வெப்பமோடும் பிறக்கிற சூரியன் பசு-பெண்-தாயிடமிருந்து பிறக்கிற கன்றாகிறது. இங்கே ஆண்மை ஒழுங்கற்ற, ஒழுங்குக்கு முன்பிருக்கிற பெண்மையை ஒழுங்குக்கு உட்படுத்தி ஆள்வதாகக் காட்டப்படுகிறது. பாம்பாக உருவகப்படுத்தப்படும் விருத்திரன் எனும் அபாய சக்தியிலிருந்து பெண்மையை விடுவிக்கும் ரட்சகனாக ஆண்மை செயற்படுகிறது. பிரபஞ்சம் உருவாகும் வழியில், பெண்மையின் உள்ளுறை ஆற்றல் ஆண்மையாலேயே விடுவிக்கப்படுவதாக, வெளிவருவதாகச் சுட்டப்படுகிறது. இப்புராணத்தில் பசு-பெண்மை, இடம் என்கிற பரிமாணத்தின் உள்ளாற்றல் கொண்டிருப்பதையும், காலம் என்கிற பரிமாணத்தின் தொடக்கப் புள்ளியாக இருப்பதையும் காண்கிறோம். பெண்மை உருவகப்படுத்தும் இடத்துக்கும் காலத்துக்கும் மேல் செயற்படும் உரிமை, இவற்றை நிர்வகிக்கும் உரிமையுள்ளதாக ஆண்மை கட்டமைக்கப்பட்டுவிடுகிறது.

ரிக்வேதத்தின் இந்த ஆதிப் புராணத்திலேயே, பசுவைத் தாய்மையோடு காண்கிறோம் என்பது நோக்கத்தக்கது. விஷ்ணு புராணம் போன்ற பின்னாளைய நூல்களிலும் பசு-தாய்மை தொடர்பு தொடர்கிறது. மேலும், சிரமண மரபுகள் வைதீகத்தின் அவிர்ப்பலி, உணவுத்தேர்வு போன்றவற்றின் சொல்லாடல்களில் தாக்கம் செலுத்தியதுபோலவே, வைதீக மரபின் பசுத்தாய்க் குறியீடு சிரமண மரபுகளுக்கும் சென்று சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இதற்கோர் எடுத்துக்காட்டு தமிழ்க் காப்பிய, பௌத்த நூலான மணிமேகலை விவரிக்கிற, கொடை, தாய்மை, வளமை ஆகியவற்றை இயம்புகிற ஆபுத்திரனின் கதை. தாயால் கைவிடப்பட்ட ஆபுத்திரனைப் பசுவொன்று பால் கொடுத்து வளர்க்கிறது. பின்னர் பிராமணர்களால் எடுத்து வளர்க்கப்படுகிறான். ஒருசமயம் வைதீக வேள்விக்காகக் கட்டப்பட்டிருக்கிற ஒரு பசுவைக் கருணையோடு ஆபுத்திரன் விடுவிக்க, அவனைத் தாக்கிய பிராமணர்களைப் பசு தன் கொம்புகளால் தாக்கிவிட்டு வனத்துக்குள் ஓடிவிடுகிறது. பின்னர் அள்ளஅள்ள உணவு குறையாத பாத்திரம் பெண் தெய்வத்தால் அவனுக்குக் கிடைக்கிறது. பாத்திரம் உபயோகமற்றுப் போனபின், பசுப்பொய்கையில் அதைப் போட்டுவிட்டு அவன் உயிர்விடுகிறான். கன்று ஈனும் முன்னமே பால் சுரந்து மக்களைக் காக்கும் பசு வயிற்றிலிருந்து சாவகத் தீவில் ஆபுத்திரன் மீண்டும் பிறக்கிறான். சிரமண மரபுகளில் பசு-தாய்மை பெற்றிருக்கிற முக்கியத்துவத்துக்கு ஆபுத்திரனின் கதை ஓர் உதாரணம். மேலும் விரிவான ஆய்வுக்குரியது இக்கதை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தயானந்த சரஸ்வதி இந்து மதத்தை மறுசீரமைக்க வேதங்களையே ஆதாரமாகக் கொண்டார். உருவ வழிபாட்டை, சடங்குகளை மறுத்த அவர் அப்பாலைத்தன்மையோடாக ஆரிய, இந்துக் கடவுளை முன்வைத்தார். இக்கடவுளிடமிருந்து வேதங்கள் பிறந்ததென்று நம்பினார். ஆங்கில ஆட்சி மறைந்து வேதத்தின் பொற்காலம் ‘ஆரிய வர்த்தத்தில்’ மீண்டும் வரவேண்டும் என்பது அவரது ஆதரிசமாக, விருப்பமாக இருந்தது. வேத மரபுகளை வியந்தோதிய தயானந்த சரஸ்வதி போன்ற இந்து சீர்திருத்தவாதிகளின் வழியில் இந்து தேசியச் சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட்டபோது, இச்சொல்லாடல்களில் வேதங்களில் தனியிடம் பெற்ற, பின் காலப்போக்கில் திடப்பட்ட பசுத்தாய்க் குறியீடு முன்வரிசைக்கு வந்ததில் வியப்பில்லை. இக்குறியீட்டின் காலனியக் கதையாடலில், ஆரியர்களென குறிக்கப்படுகிற இந்துக்கள் இந்திரனின் வழித்தோன்றல்களாகவும், மற்றவர்கள் எதிரியான விருத்திரனுடைய உருவங்களாகவும் சுட்டப்பட்டார்கள்; பசுத்தாய், எதிரிகளின் பிடியில் நொய்மையுற்றுத் துன்புறுகிற, ஆனால் உள்ளார்ந்த ஆற்றலோடான, விடுவிக்கப்படவேண்டிய அன்னைத் தேசமாக உருவகப்படுத்தப்பட்டது. பிற்காலனிய காலகட்டத்தில், இன்றும் இந்து அடையாள அரசியலில் பசுத்தாய்க் குறியீடு முன்வைக்கப்பட்டு, தேசத்துக்கு ‘நம்பகமான’ சுயங்களும், ‘எதிரிகளான’ மற்றமைகளும் கட்டமைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

பசுத்தாய்க் குறியீடு இந்துக்களற்ற மற்ற மதத்தினருக்கு, குறிப்பாக இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதல்ல. பெண்களும் எச்சரிக்கையோடு பார்க்க வேண்டிய குறியீடு அது. பெண் பாலியலையும் துணைக்கான தேர்வையும் கட்டுப்படுத்தக்கூடியது அது. பெண்களையும் பசுக்களையும் இணைத்துப்பேசி சில வன்முறைகளை இந்துத்வ அடிப்படைவாதிகள் நடத்தியிருக்கிறார்கள். ஓர் உதாரணம்: சென்ற ஆண்டு (2014) மங்களூரில் தன் கடையில் வேலை செய்த பெண்ணை வீட்டில் விடப்போன இஸ்லாமியர் ஒருவர் பஜ்ரங்தள் தொண்டர்களால் தாக்கப்பட்டார். அவர் ‘காதல் ஜிஹாத்’ செய்தார் என்று குற்றஞ்சாட்டியது பஜ்ரங்தள். அப்போது மூத்த வழக்கறிஞரும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்களில் ஒருவருமான ஜக்தீஷ் ஷெனவா, ‘எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. ஆனால் அவர்கள் எங்கள் பசுக்களையும் பெண்களையும் விட்டுவிடவேண்டும் அல்லது எங்கள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கவேண்டும்’ என்று அறைகூவல் விடுத்தார். பெண்களின் இனப்பெருக்கப் பொருளியலை, ஆணாளுகைக்குள் வைத்துக்கொள்கிற சொல்லாடலின் வகைமாதிரி இது. ரிக்வேதத்தின் ஆதிபுராணக் கருத்தியலோடு தொடர்ச்சியில் இருப்பது இது. எனவே, பசுத்தாய்க் குறியீட்டைத் தொடர்ந்துகட்டுடைப்பதும், கேள்வி கேட்பதும் பெண்களின் நலன்களுக்கு உகந்ததாகவே இருக்கும். இன்றைக்கு இன்றியமையாத பெண்ணிய அரசியற் செயற்பாடும் இது என்பதுஉறுதி.

நூல்/கட்டுரைத் தரவுகள்: ஆங்கிலம்:

Alsdorf, Ludwig. The History of Vegetarianism and Cow-Veneration in India. Trans. Bal Patil. New York: Routledge, 2010.

Bapu, Prabhu. Hindu Mahasabha in Colonial North India, 1915-1930: Constructing Nation and History. New York: Routledge, 2013.

Freitag, Sandria B. “Sacred Symbol as Mobilizing Ideology: The North Indian Search for a ‘Hindu’ Community.” Comparative Studies in Society and History, 22.4 (1980): 597-625.

Gupta, Charu. “The Icon of Mother in Late Colonial North India: ‘Bharat Mata’, ‘Matri Bhasha’ and ‘Gau Mata.” Economic and Political Weekly, 36. 45 (2001): 4291-4299.

Jha, D.N. The Myth of the Holy Cow. New York: Verso, 2002.

Kamath, M.V. Gandhi: A Spiritual Journey. Mumbai: Indus Source Books, 2007.

Korom, Frank J. “Holy Cow! The Apotheosis of Zebu, or Why the Cow Is Sacred in Hinduism.” Asian Folklore Studies, 59. 2 (2000): 181-203.

Pal, Amar Nath. “The Sacred Cow in India : A Reappraisal.” Indian Anthropologist, 26. 2 (1996): 53-62,

Pandey, Gyanendra. The Construction of Communalism in Colonial North India. New Delhi: Oxford University Press, 1990.

தமிழ்:

த. சண்முகக் கவிராயர். ஸ்ரீ மஹாபாரத வசன காவியம். சென்னை: இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ், 1969.

ஆ. சிவசுப்பிரமணியன். ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும். நாகர்கோவில்: காலச்சுவடு, 2009.

(மற்றும் நாளிதழ்கள், செய்திக் குறிப்புகள்)

நன்றி - காலச்சுவடு - 191

1 comments:

Sekar Govindasasamy said...

For pondering

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்