/* up Facebook

Nov 13, 2015

சுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்மிளா ஸெய்யித்


ஏமன் நாட்டின் வரலாற்றிலிருந்து துடைத் தெறிய முடியாத பெண், தவக்குல் கர்மான். மனித உரிமைகள் செயற்பாட்டாளர். பெண் உரிமைகளுக்கான போராட்டம், சமாதானத்திற்கான பங்களிப்பு போன்ற செயற்பாடுகளுக்காக 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். நோபல் பரிசை வென்ற முதல் அரேபியப் பெண்ணும் இவர்தான். தவக்குல் கர்மான் மனித உரிமைகளுக்கான போராளியாக, உடனடியான அங்கீகாரம் பெற்ற பெண் அல்ல. அவரது சுதந்திரக் கருத்துகள், உயிர் அச்சுறுத்தல் நிரம்பிய போராட்ட வாழ்வு, சிறைவாசம் என்பனவெல்லாம் ஏற்படுத்தித் தராத பிரபல்யத்தையும் அங்கீகாரத்தையும் உடை பற்றிய கருத்து அவருக்கு ஏற்படுத்தித் தந்தது. ஹிஜாப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குத் தவக்குல் கர்மான் இப்படிப் பதிலளித்திருந்தார்: “பண்டையகால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அறிவு வளர வளர அவன் உடைகளை அணியத் தொடங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள நாகரிகத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. உடைகளை மீண்டும் களைவதுதான் பின்னடைவாகும்.”

தவக்குல் கர்மான் என்ற பெண்ணை இஸ்லாமிய உலகு திரும்பிப் பார்த்ததென்றால் அதற்கு இரண்டு காரணங்களே பிரதானமானவை. ஒன்று, அரபுலகப் பெண்கள் அணியும் உடல் முழுவதும் போர்த்திய அபாயா உடையிலும் ஹிஜாபிலும் அவர் இருப்பது. இரண்டு, ஹிஜாப் ஒருபோதும் என்னை முடக்க முடியாது என்ற அவரது உறுதியுரை.

தவக்குல் கர்மான் ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. 2006 டிசம்பர் மாதம் தோஹாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ருக்கையா அல் கஸரா, 2012இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பலஸ்தீன் பெண் வோரூட் சவால்கா உட்பட இன்னும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இஸ்லாமிய உலகு திரும்பிப்பார்த்துக் கொண்டாடுகிற பெண்களில் பெரும்பாலானோர் மதம், சமூகம் சார்ந்து உடல்மீதான கட்டமைப்புகள், உடை மற்றும் உடல்சார்ந்த அரசியல் வரலாற்றுப் பின்னணிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைக்கவோ எதிர்வினையாற்றவோ விரும்பாதவர்கள்; மேலும் உடை சார்ந்த கேள்விகள் ஒரு சமூகத்தின் இரக்கமற்ற தன்மைகள் வெளிப்பட்டு உயிரிழக்கும் நிலைக்கோ இலக்குகளை அடையமுடியாத நிலைக்கோ தள்ளிவிடக்கூடும் என்பதையெல்லாம் உறுதிபடத் தெரிந்த ‘தெளிவான’ பெண்கள்.

பெண், ஆணின் அடைக்கலமாக இருக்க வேண்டியதில்லை என்பதை, சொற்செலவின்றி விவரணமாக்கியவர்கள் பலஸ்தீன விடுதலைக்காகப் போராடுகிற துப்பாக்கி சுமந்த பெண்களும், ஈரானின் இராணுவப் பெண் படையும்! இவர்களின் நேரான பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுகளும் துப்பாக்கிகளும் பெண்களைப் பாதுகாக்கிற கடமையுணர்வு இனியும் உங்களுக்கு வேண்டியதில்லை என்கிற சேதியைக் காறி உமிழாத குறையாகச் சொல்கின்றன.

சமீபகாலமாக அபாயா அணிகிற பெண்கள் தொகை பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வி கற்கின்ற பெண்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இவ்விரண்டும் வெவ்வேறு அரசியல் நோக்கங்களின் விளைவுகள். பெண் உடல்மீதான ஆண்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தங்களை மீட்டு நடமாடும் சுதந்திரத்திற்கான ஒரேயொரு திறவுகோலாகவே அபாயாவும் ஹிஜாபும் இன்றைய பெண்களால் பார்க்கப் படுகின்றன. மதம் - கலாச்சாரம் ஆகிய இரு புள்ளிகளையும் ஒரு தளத்தில் இணைக்கும் உபயோகமற்ற அரசியல் உத்தியை எதிர்கொள்வதற்கான வேறொரு மார்க்கத்தையும் இஸ்லாமியப் பெண்களால் கண்டடைய முடியவில்லை.

அபாயா பெண்களுக்குப் பொருத்தமற்ற உடையென்றோ அணியக் கூடாத உடையென்றோ கூறிவிட முடியாது. நோபல் பரிசு பெறவும் ஒலிம்பிக்கில் ஓடி சாதனை நிகழ்த்தவும் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடவும் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடவும் இந்த உடை தடையாக இருக்கவில்லை. ஆனால் இந்த உடை அரசியல் திட்டமிட்டதாகவும் பல்வேறு வன்முறை வடிவங்களை எடுப்பதாகவும் உள்ளது. இன்றைய இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்டுள்ள மிக ஆபத்தான வன்முறையின் கரங்கள் இங்குதான் ஒளிந்திருக்கின்றன. உணவு உட்கொள்ளும்போது தலையை மூடியிருக்கவில்லை என்ற காரணத்திற்காக நான்கு வயதுக் குழந்தையைத் தந்தை கொன்ற சம்பவம் மிக ஆபத்தான சமிக்ஞை. அக்டோபர் 03, 2015 உத்தரபிரதேசம் பரேலியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் சூத்திரதாரியான ஜாபர் ஹுஸைன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச்சொல்லி, துரதிஷ்டவசமாக ஒரு கொலையை நியாயப்படுத்த முற்படுவதென்பது இஸ்லாமிய உலகு உணர்ச்சியின்மையால் நிரம்பியிருப்பதைக் காட்டுகிறது. ஜாபர் ஹுஸைன் மனப்பிறழ்வு உள்ளவரெனில், இலங்கை, இந்தியாவில் பல தந்தையரும் ஆண்களும் மனநலக் காப்பங்களுக்கு அவசரமாக அனுப்பப்படவேண்டியவர்கள் என்பது பேரதிர்ச்சியான உண்மை.

மதவெறியின் வெற்றியினால் படுமோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் சிறுமிகளே. இன்றைய இஸ்லாமியச் சூழலில் வளரும் குழந்தைகளை, குறிப்பாகச் சிறுமிகளின் குழந்தைப் பருவத்தை மதம் ஆக்கிரமித்திருக்கிறது. தினசரி வாழ்வின் பெரும்பகுதியைச் சிந்தனைப் பள்ளிகளே ஏப்பமிடுகின்றன. பச்சிளம் பருவத்திலேயே குழந்தைகளின் பிஞ்சுடலை அபாயாவுக்குள் செருகி, மதத்தைக் குறித்த தெளிவற்றவர்களாக, கேள்விகள் கேட்க முடியாதவர்களாக, கேள்விகளுக்கு இறைவனின் பெயரைக் கூறி அச்சுறுத்தப்படுகின்றவர்களாக, சுவர்க்கம் புகுவதுபற்றி மட்டுமே கவலைகொள்ளத் தக்கவர்களாக வளர்க்கப்படுகின்றனர். மலிந்துவிட்ட சிந்தனைப் பள்ளிகள், மதரஸாக்களிடம் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, சமாதானம் போன்ற தூரநோக்குடனான பாடத் திட்டங்கள் எதுவும் இல்லை. பதிலாகப் பாலைவனக் கலாச்சாரத்தைத் திணிக்கின்ற குறுகிய அரசியல் நோக்கம் மட்டுமே உள்ளது.

வீட்டுத்திண்ணைகளைக் கடப்பதற்குக்கூடச் சுதந்திரமில்லாதிருந்த பெண்கள் அபாயாவைச் சுதந்திரத்தின் மந்திரக் கோலாகப் பாவித்துக்கொண்டிருப்பதும், இஸ்லாம் வலியுறுத்தியிருக்கும் பெண்களுக்கான ஆடையின் வடிவமே அபாயா, புர்கா, பாஷியா என்பதுமான போக்கும் வலுத்துக்கொண்டே வருகின்றன. உடை பற்றிய மதிப்பீடுகள் மிக மோசமான அருவருப்பூட்டும் பொருள்கோடல்களுக்குள் சிக்கி நிற்கின்றன. பாலியல் வன்முறைகள், பெண்களுக்கெதிரான அனைத்து அநீதி களுக்கும் அவர்களது உடையே காரணம் என்று சொல்லத்தக்க ஆண்கள் மலிந்துவிட்டனர். இயக்கச் சிந்தனைகள் பலவற்றின் தாக்கங்களினால் சுயசிந்தனை

இழந்துவிட்ட இவர்கள் கேள்வி கேட்பதை மறந்தவோர் சமூகம். கேள்வி கேட்பதே தவறென்று கூறக்கூடியவர்களாகவும் இவர்கள் இருப்பது மற்றுமொரு துயரம். ஆண்களை நோக்கிக் கேள்வி எழுப்பாத பெண்களும், சுயமதிப்பீடுகள், சுயவிமர்சனங்கள், நெகிழ்வுப்போக்கற்ற ஆண்களுமே ஆரோக்கியமான சமூகத்தின் கூறுகளாகப் பார்க்கப்படுவதைவிடவும் ஓர் இருண்ட காலம் இருக்க முடியாது.

குறைந்தபட்ச சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்குடனேயே அபாயா போர்த்திய பெண்கள் அதிகரித்துவருகிறார்கள் என்பதை இன்னும் பலவழிகளில் நிரூபணப்படுத்த முடியும். பெண்கள் தங்களது அடைக்கலம் என்பதாக எண்ணும் ஆண்களின் அரசியல் போன்றதுதான் பெண்களின் இந்த அரசியலும். தங்களைக் கட்டுப்படுத்தும் ஆண்களின் பார்வை தொட முடியாத தூரத்தை அடைந்த அடுத்த கணமே ஹிஜாபைக் களைந்து தோற்பைகளில் சுருட்டிவைக்கிற பெண்களும், அபாயாவைக் களைந்து சுருட்டி மடித்துவைத்துவிட்டு உள்ளே அணிந்துள்ள ஆடைகளுடன் சாவகாசமாகப் பயணிக்கிற பெண்களையும் தினசரி கடக்கிறோம். இவர்கள் யாரை, எதற்காக ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்கிற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கிறதோ இல்லையோ, இவர்களால் அபாயா உற்பத்திக் கம்பெனிகள், அபாயா வியாபாரிகள், அபாயா பிரச்சாரம் செய்கிற மௌலவிகளுக்கெல்லாம் அமோக லாபம்.முன்பெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு அபாயாவாக வீடு இருந்தது. அன்று வீடு நகர முடியா அபாயா; இன்றோ அபாயா நகரும் வீடாகியுள்ளது. எப்படியோ அடைக்கப்பட்டிருந்த பெண்கள் நகரும் பெண்களாகச் சுதந்திரமடைய அபாயா வழி செய்திருக்கிறது. அபாயாவோ, நிர்வாணநிலையோ எதுவெனினும் சமூகத்தின் பார்வைகள் மாறாதவரை எந்தவொரு மாற்றத்தையும் உண்டுபண்ணப்போவதில்லை. இவை எல்லாமும் வலியவர்களுக்கும் எளியவர்களுக்குமிடையான அரசியல் நாடகங்கள் மட்டுமே. இந்த அரசியல் நாடகத்தில் ஆண்களைவிடவும் வென்றவர்களாக அபாயா அணிகிற பெண்களே உள்ளனர். ஆண்களால் கூடாரம் போன்று அறிமுகப்படுத்தப்பட்ட அபாயாவைச் செதுக்கிச் செம்மைப்படுத்தி, அலங்காரம் செய்து, வண்ணத் துணிகளால் அழகுபடுத்தித் தங்களுக்கேற்றாற்போல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஜீன்ஸ் அணிவது, ஆண்கள்போல உடையணிவது போன்றவை தடுக்கப்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் அபாயாவுக்குள் அவற்றை அணிந்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள். ஆணின் துணையின்றிப் பயணம் செய்வது ஹராமாக்கப்பட்ட பெண்கள், அபாயாக்கள் அணிந்தவர்களாக ஆண்கள் எட்டாத தூரங்களை எட்டி மகிழ்கிறார்கள். வீட்டுக் கூரையின் பொத்தல்கள் வழியாக வானத்தின் நீலத்தை ரசித்த பெண்களுக்கு அபாயா பொக்கிஷ மாகியிருக்கிறது. ஆகவேதான் அபாயா பெண்கள் அதனைக் கேள்விக்குட்படுத்துவதில்லை, எதிர்வினையாற்றுவதுமில்லை. ஆண்களை ஏமாற்றுவதற்கான மேலாடையாக இருக்கிற அபாயா அவர்களை இடைஞ்சல் செய்வதாகவும் இல்லை.

ஒரு பெண் அபாயா அணிகிறாள் என்றால், அவளைச் சார்ந்த ஆண்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பதே உண்மை.

நன்றி - காலச்சுவடு - 191

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்