/* up Facebook

Nov 18, 2015

அஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வம் - விலாசினி


இந்த வருடத் தொடக்கத்தில் சமூக வலை தளங்களில் மனோரமா இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. அவர் அந்தச் சமயத்தில் உடல் சுகவீனமாகவே இருந்தார். ஆனால் அந்த வதந்திக்குப் பதிலளிக்கும் வகையில், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகவும் பேட்டியளித்தார். அது போன்ற ஒரு வதந்தியாகத் தான் அக்டோபர் 11 அன்று காலையில் அவர் மரணச் செய்தியைப் படித்தபோது நினைத்தேன். ஆனால் ஒரு சில நிமிடங்களிலேயே தகவல் உண்மையென்று அறிந்தபோது பதற்றமடைந்தேன். எல்லா பிரபலங்களின் மரணமும் மனதைக் கனக்கச் செய்வதில்லை. ஆனால் மனோரமா வெறும் பிரபலமாக மட்டும் இல்லை, அதனால்தான் அவரை அன்போடு அனைவரும் ‘ஆச்சி’ என்றழைத்தனர். பத்துப் படங்கள் நடித்தவுடனேயே ஏதோ ஒரு ‘ஸ்டார்’ஐ பெயரொட்டாக இணைத்துக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் ஆயிரத்து முன்னூறு படங்களுக்கு மேல் நடித்திருந்த மனோரமா வெறும் ‘ஆச்சி’யாகத்தான் இருந்தார்.

மற்ற துறைகளைவிடவும் திரைத்துறை, ஆணாதிக்கப் போக்கு மிக்கது. இங்கும் பெண் சாதனையாளர்கள் உண்டு. ஆனால் இத்துறையில் அவர்களின் காலம் மிகக்குறுகியது. ஒருபுறம் புகழின் உச்சியிலிருந்த நடிகைகளின் ஆயுள் அதிகபட்சமாகப் பத்து, பதினைந்தாண்டுகளைத் தாண்டியதில்லை. மறுபுறம் முப்பது ஆண்டுகளாக ஏதோ ஒரு படத்தில் ஏதோ ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று இன்னும் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளின் பெயர்கூட நமக்குத் தெரியாது. ஆனால் சுமார் அறுபதாண்டுகளாக மனோரமா பெயர்பெற்ற நடிகையாகத்தான் திகழ்ந்தார். மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ முதல் இத்தலைமுறைப் படமான ‘அருந்ததி’வரை அவரின் காத்திரமான கதாபாத்திரங்கள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். அவர் நடித்த படங்களின் பட்டியலிலிருந்து ஓடவே ஓடாத, கேள்வியே பட்டிராத படங்களைத் தேடிப்பார்த்தால் அதிலும்கூட அவரின் நடிப்பு நிச்சயம் தனித்துவமாக, மிளிரக்கூடியதாகவே இருக்கும்.

சினிமாவின் தாக்கமும், அதன்மீதான ஈடுபாடும் மிகையதிகமாகக் கொண்ட தமிழ்ச்சமூகத்தில் நம்மில் எத்தனைபேர் ஆயிரம் திரைப்படங்களாவது பார்த்திருப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் நாம் வாழும் காலத்தில் நம் கண்முன் ஒரு சகாப்தமாக ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை செய்திருக்கிறார் ஆச்சி. 1987ஆம் வருடம் கின்னஸ் சாதனையில் ஆயிரம் படங்கள் நடித்ததற்காக இடம்பிடித்தவர். இன்றுவரை வேறெவராலும் இச்சாதனை முறியடிக்கப்படாததாகத்தான் இருக்கிறது. 1987இலிருந்து 2015இல் அவர் இறப்பதுவரை மேலும் முன்னூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் என்று தெரிகிறது. தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் நடித்தவர் என்ற பெருமையும், தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் வேலை பார்த்தவர் என்ற பெருமையும் நாம் அறிந்ததே. அவர் ஹிந்தியில் நடித்ததும் நமக்குத் தெரியும். ஆனால் பலருக்குத் தெரியாத மற்றொரு சுவாரசியமான தகவல் அவர் சிங்கள மொழியில் நடித்ததுதான். அதுவும் தன் முதல்படமாக ஒரு சிங்கள மொழி திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்ததை அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். (தி ஹிந்து, ஆங்கிலம், 2009)

திரைத்துறையில் சாதனை புரிந்ததற்கு இணையாகவும், இன்னும் அதிகமாகவும் அவர் மற்றுமொரு சாதனையையும் சத்தமில்லாமல் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதைப் பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் அவரைக் குறித்த பிரமிப்பு பன்மடங்காகிறது. தன் வாழ்நாளில் இதுவரை ஆறாயிரம் நாடகமேடைகளில் தோன்றியிருக்கிறார். அதாவது ஒரு வாரத்திற்கு இரண்டு மேடைகள் என்கிற வீதம் வைத்துக்கொண்டால் சுமார் அறுபதாண்டுகள் அவர் நாடக உலகத்திலும் சாதனை புரிந்திருக்கிறார். திரைத்துறைக்கு வந்த பின்பு அவரது மேடை நாடகப் பிரசன்னம் குறைந்திருக்கலாம். ஆனால் மொத்தமாகப் பார்த்தால் நடிக்க ஆரம்பித்த தன் பன்னிரண்டாவது வயதுமுதல் ஆறாயிரம் மேடைகளில் தோன்றியிருப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. இதுதவிர விளம்பரங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், பின்னணிப் பாடல்கள் என்று தான் விரும்பிய துறையில் வெறும் வேலைபார்த்தவராக இல்லாமல் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்து சென்றிருக்கிறார். தன் தொழிலில் அர்ப்பணிப்பு மிகுந்தவராக இருந்த அதே வேளையில், தன் அன்பான குடும்பத்திற்காகவும் வேண்டியதைச் செய்தவராகத்தான் இருந்திருக்கிறார். குடும்பம், வேலை என்று இரண்டையும் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தவர் ‘ஆச்சி’.

தமிழ், இந்திய, உலக சினிமாக்களில் எந்த முன்னுதாரணமுமின்றித் தானே ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார். அவரை வெறும் நகைச்சுவை நடிகையாகக் குறுக்கிப் பார்க்க முடியாது. எண்ணற்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியவர். சேரியில் வாழும் பெண் என்றாலும், சகல வசதி வாய்ப்புகள் பெற்ற உயர் குடும்பத்துப் பெண் என்றாலும் அவரால் வித்தியாசம் காட்ட முடிந்தது. அப்பாத்திரத்திற்கான நம்பகத்தன்மையை அவர் நடிப்பின்மூலம் வழங்க முடிந்தது. அத்தகையவொரு குணச்சித்திர நடிகையாவார்.

எத்தனையோ கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தாலும் தான் ஒரு மாற்று பாலினப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. அந்தக் கனவு கடைசிவரை நிறைவேறவில்லை என்பதில் அவருக்கு வருத்தமிருந்திருக்கலாம். தன்னுடைய பெருமைமிக்க வாழ்க்கையில் சிறுபான்மையினராக, இன்னும் சமூகத்தால் முழுதாக அங்கீகரிக்கப்படாதவர்களாக இருக்கும் திருநங்கைகளின்மீது பரிவும், அன்பும் கொண்டவராகவே வெளிப்படுத்திய அவரது ஆசை நிறைவேறாது

போயிருக்கலாம். ஆனால் அப்படியான அவரின் ஆசையை வெளிப்படுத்தியது வழி, அவர்களுக்கான மரியாதையைச் செய்துவிட்டே சென்றிருக்கிறார். திருநங்கைகள் பற்றிய கேலிக்கும் கிண்டலுக்கும் மோசமான சித்திரிப்புகளுக்கும் பெயர்போன தமிழ் சினிமா இனியாவது அவர்களை மரியாதையுடனும் மனிதாபிமானத்துடனும் நடத்துவது தான் தமிழ்த் துறைக்கு உலக அளவில் பெருமைசேர்த்த ஆச்சிக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்