/* up Facebook

Oct 9, 2015

பண்டிட்குயின் : சாதிய வன்முறையின் எதிர் அழகியல் - யமுனா ராஜேந்திரன்

பூலான்தேவியின் வார்த்தைகளுக்குப் பின் கட்டமைப்படாத சிந்தனைகளையும் சார்புத்தன்மை பெற்றிராத சொற்களையும் மீறி அவள் சொல்லத் தவறிய, சொல்ல வேண்டி உணர்ந்த, அனுபவித்த விவயங்களைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன். பூலான்தேவி கதையைச் சொல்லும் போக்கில் இந்திய சமூகத்துக்கும் இந்தியாவின் கிராமப்புறங்களில் சித்திரவதைப்படும் பெண்களுக்கும் ஒரு செய்தி சொல்ல விரும்பினேன். சாதிய மேலாதிக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கெதிராக போராட வேண்டிய செய்தியைச் சொல்லியிருக்கிறேன். எந்தப் படைப்பும் அது நிலைகொண்டிருக்கும் காலத்தையும் பிரச்சினையின் உக்கிரத்தையும் சொல்லாது விட்டால் அதில் அர்த்தம் ஏதும் இல்லை.
சேகர் கபூர்

பன்டிட் குயின் திரைப்படம் உண்மை மற்றும் புனைவுக்கும் அதன் அடிப்படையில் சினிமா புனைவுக்கும் இடையிலான பிரச்சினையைத் தூண்டிருக்கும் படம். இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அடிப்படையான நிஜமான பிரச்சினைகள் சினிமாவில் முன்வைக்கப்படும்போது அது எதிர்கொள்ளும் அரசியல் தணிக்கைப் பிரச்சினைகள் பற்றிய விவாதத்தைத் தொடக்கியிருக்கும் படம். முதலில் இதை முழுக்க ஒரு சினிமாக் கதையாக கருதிக் கொள்வோம். நிஜப்பெயர்களை மறந்துவிடுவோம். கதை உத்தரப் பிரதேசத்தின் சம்பல்நதிப் பள்ளத்தாக்கின் கிராமங்களுக்கிடையில் நிகழ்கிறது. மேல்சாதி தாக்கர்கள், தலித்சாதி மல்லாக்கள், போலீஸ், பால்ய விவாகம், தலித்சாதி பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை போன்றவற்றைப் படம் சொல்லுகிறது.

இந்தியாவில் இன்றும் நிலவும் நடைமுறைதான் என்ன? பெண்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டதற்காக முகத்திலும் உடலிலும் பச்சை குத்தப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது வரலாறு. தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 44 தலித் பெண்களும் குழந்தைகளும் கூலி உயர்வு கேட்டதற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறு. பத்மினி போன்ற பெண்கள் பலாத்காரப் படுத்தப்படுவதும் போலீஸ் நிலையத்தில் அவர்கள் பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும் மிகமிகச் சமீபத்திய காலத்தில்தான். ஜீவனாம்சம் மறுக்கப்பட்ட ஷபானு உடன்கட்டையேற நிர்ப்பந்திக்கப்பட்டு உயிரோடு கொழுத்தப்பட்ட ரூப்கன்வர் இந்திரா காந்தி இறந்தபோது சூறையாடப்பட்ட சீக்கிய பெண்களின் உடல்கள் பம்பாய் கலவரத்தில் அயோத்தி கலவரத்தில் பலாத்காரப்படுத்தப்பட்ட முஸ்லீம் பெண்களின் வேதனை எல்லாமுமே சமகால இந்திய வரலாறுதான். பூலான்தேவி படம் கதை நிகழ்கின்ற காலத்திலும் பாத்திரங்களிலும் மட்டும் தங்கியிராது பிரச்சினைகளின் வேர்களுக்குப் பின்நோக்கிப் போகின்றது. அவர்களின் அன்றாட வாழ்வுப் பழக்கவழக்கங்களுக்குள் அவர்கள் உரையாடும் சொற்றொடர்களுக்குள் அவர்களின் நிறுவன அமைப்புகளுக்குள் நிலவும் பாலியல் சாதிய வன்முறையை தோலுரிக்கிறது.

பஞ்சாயத்து கூடியிருக்கிறது. பூலானைப் பலாத்காரப்படுத்திய மேல்சாதி தலைவன் மகன் சொல்கிறான்: ‘பூலான்தேவி என்னைக் கூப்பிட்டாள். அவளுக்கு அரிக்கிறது என்று சொன்னாள்’ என்கிறான். பூலான் ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகிறாள். போலீசுக்கு பூலானைக் காட்டிக்கொடுக்கும் ஸ்ரீராம் மெக்காபோனில் போலீஸ்படை புடைசூழ பேசுகிறான். ‘பூலான் : எங்கே போயிருந்தாலும் வந்துவிடு. என் ‘தடி’ மீது வந்து உட்கார்’. பஞ்சாயத்து, போலீஸ், மேல்சாதி தாக்கர்கள் என இவர்கள் அனைவரும் தமது அமைப்பு மூலமும் சொற்கள் மூலமும் செய்ய விளைவது ஒன்றேதான : பாலியல் வன்முறை.

படத்தில் உடல் சார்ந்த பாலியல் வன்முறை பல்வேறு சந்தர்ப்பங்களில் காட்சி ரூபமாகிறது. பதினொரு வயது சிறுமி பூலான் அவளது 34 வயது கணவனால் பலாத்காரப்படுத்தப்படுகிறாள். திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலர்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். பெமாய் கிராமத்துக்கு மேல்சாதி கொள்ளையர்களால் இழுத்துவரப்பட்டு முழுக் கொள்ளைக்கூட்ட ஆண்களாலும் பலாத்காரப்படுத்தப்படுகிறாள். மேல்சாதிக்காரர்களின் கையாள்களான கொள்ளையர்களால் கடத்தப்பட்டு மலைப்புழுதியில் சூரியன் எரிக்க பலாத்காரப்படுத்தப்படுகிறாள்.

இந்தக் காட்சிகளில் ஒன்றில்கூட ரசனை நோக்கம் இல்லை. சின்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் கேஸ்சேம்பருக்குப் போகிற பெண்களின் நிர்வாணம் எழுப்பும் வேதனையும் கோபமுமே இந்தக் காட்சிகளிலும் எழுகிறது. அருகாமைக் காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. பாலுறவு அநுபவம் காட்டப்படவில்லை. ஆண் உடல்களின் வன்முறைதான் காட்டப்பட்டிருக்கிறது. மொழிசார்ந்த வன்முறையும் சரி உடல் சார்ந்த வன்முறையும் சரி இந்த இரண்டு விதமான பாலியல் வன்முறைகளும் பூலான் எனும் தலித் பெண்ணின் மீது மேல்சாதி ஆதிக்கம் எனும் ஜாதிய வன்முறையின் வழியேதான் நிகழ்கிறது. இங்கே வன்முறை என்பது ஒரு பெண்ணாக அவளது ஆன்மாவை ஆன்மீக பலத்தை முற்றிலும் உடைத்து நொறுக்கும் ஆதிக்கமாக நிகழ்கிறது. இவற்றை எதிர்த்துப் பேசிய ஒரு பெண், செயல்பட்ட ஒரு பெண்ணின் கோபமான எதிர்ப்புணர்வு வாழ்வு, நியாயம் சார்ந்த வன்முறை சினிமாவாகியிருக்கிறது. 11 வயதில் தன்னைப் பலாத்காரப்படுத்திய கணவனை இரத்தம் சொட்டச் சொட்ட அடித்து நிம்மதி கொள்கிறான். தன் உடலை, ஆன்மாவை சிதறடித்த முழுக்கிராமமும் பார்க்க, அக்கிராமத்து ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். உறைந்த இரத்த வெள்ளத்தில் நடுவே அழுகையை நிறுத்திய அமைதியான நிர்வாணக் குழந்தையொன்று நடந்து போகிறது.

பூலான்தேவியென்றால் ‘பூக்களின் கடவுள்’ என்று பொருள். சம்பல் நதிக் கிராமத்து மக்கள் அவளை வெறி கொண்ட காளிமாதாவாகவே பார்த்தார்கள். பெமாய் கிராமத்தில் அவளது முழு ஆடைகளையும் களைந்து விட்டு கூந்தலைப் பிடித்து உலுக்கிச் சித்தரவதை செய்யும்போது தாக்கர் ஸ்ரீராம் சொல்வான்: ‘ பூலான் தேவியாம் இவள். கீழ்சாதி மக்களின் கடவுளாம் இவள. கீழ்சாதி மக்களின் கடவுளுக்கு இதுதான் கதி‘.

படம் தொடங்கும் மனுஸ்மிருதியிலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்படுகிறது. ‘பெண்களும் கீழ்ஜாதி மக்களும் மிருகங்களும் அடிக்கப்படுவதற்குப் பிறந்தவர்கள்’. படத்தின் இறுதியில் 11 வயது சிறுமி பூலான்தேவி காமராவை நேராகப் பார்த்து (நம்மைப் பார்த்து) சொல்வாள்: ‘நான் பூலான்தேவி, சகோதரியுடன் கலவி செய்பவர்களே – நான்தான் அவள்’

சினிமாவின் இலக்கணத்துள் சினிமா மொழியின் ஆளுமைக்குள் அசலான தீவிரமான படம் பூலான் தேவி. நஸ்ரத் படே அலிகானின் இசை பூலான்தேவியின் கோபத்தையும் ஆவேசத்தையும் உக்கிரத்துடன் மறுபடைப்புச் செய்திருக்கிறது. பூலான் பலாத்காரப்படுத்தப்படும் இடங்களில் வானம் பூமி அதிர்ந்துவிட ஓங்கி ஒலிக்கும் அந்த தீனக்குரல் அந்த வேதனைக்கதறல் நெஞ்சத்தைப் பிளந்துவிடுகிறது. அசோக் மேத்தாவின் காமரா நதியின் சலசலப்பை சம்பல் பள்ளத்தாக்கின் வெம்மையை ஓரிடத்தும் நின்று நிலைக்காது ரசனை காட்டாது பூலானின் கோபமே போன்று வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஜீவனுள்ள ஒளிப்பதிவு.

பூலான்தேவியின் உண்மை வாழ்வுக்கும் சினிமாக்கதைக்கும் உள்ள முரண்பாடு தொடர்பாக எழும் பிரச்னை இதுதான் : ‘நான் விக்ரமோடு அவனின் மேலிருந்து கலவிச் செய்வதான காட்சியொன்று வருகிறது. ஆது மாதிரி நான் நடந்துகொள்ளவில்லை. 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பெமாய் கிராமத்தில் நான் இருக்கவில்லை. பெமாய் கிராமத்தில் நான் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுபடியும் நான் பார்க்கவோ பார்வையாளர்கள் பார்ப்பதையோ நான் விரும்பவில்லை’.

இந்தியப் பெண்ணுக்கு இது அகௌரவமானது. பலாத்காரப்படத்தப்பட்டு விடுவதென்பது இந்தியக் கலாச்சாரத்தில் அப்பெண்ணின் முழு வாழ்வுக்குமான அவச்செயலாக நிகழ்ந்துவிடுகிறது. சமூகம் அவளை மிகக் கேவலமாகவும் நடக்கிறது. பூலான் இப்போது கௌரவமான குடும்பத்துப் பெண். வியாபாரியின் மேல் சாதிக்காரரின் மனைவி, அரசியல் கட்சியைத் துவக்கிவிட்டவர.

சேகர் கபூர், பரூத் தோண்டி, மாலா சென் போன்றவர்களால் வைக்கப்படும் விவாதம் இதுதான் : ‘இப்படத்துக்கான கதைக்கு பூலானிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான தொகையும் வழங்கப்பட்டது. நாங்கள் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவில்லை அந்த வாழ்க்கைக்குப் பின்னிருக்கிற சமூக வரலாற்றை சினிமா இலக்கணத்துக்குள் சினிமா பிரதிக்குள் சொல்லியிருக்கிறோம். பெமாயில் பூலான் இருந்ததற்கான காட்சிகள் உண்டு. அக்காட்சியில் பூலான் எவரையும் கொலை செய்ததாக நாங்கள் காட்டவில்லை. இருவரை முழங்கால்களில் சுடுவதாகத்தான் காட்டியிருக்கிறோம். மேலும் சினிமாவின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமென்பது அபத்தம்’ ‘உண்மைக் கதையின் அடிப்படையிலான படம்’ என்கிற விளம்பரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார் கபூர். காலம் கடந்துவிட்டது.

முதலாவதாக, பூலானின் கலாச்சாரம் சார்ந்த குடும்பப் பெண் அறவியல் பிரச்சினை. இரண்டாவதாக, தனது வழக்கு சம்பந்தமான சட்டப் பிரச்சினை. விடுதலையை நோக்கமாகக் கொண்ட பெண்ணுக்கு பூலான் எழுப்பும் அறவியல் பிரச்சினை அத்தனை முக்கியமானதல்ல என்றே தோன்றும். சீமா பிஸ்வாஸ் பூலானாகவே மாறி பலாத்காரப்படுத்தப்பட்டிருக்கிறார். நிர்வாணமாக கிராமச் சதுக்கத்தில் நடந்திருக்கிறார். இந்திய கலாச்சார அளவு கோல்களின் படி நடிகைகள் எல்லாருமே ஒழுக்கங் கெட்டவர்கள். கொஞ்சம் உடல் தெரிந்தாலும் அவச்செயல் செய்தவர்கள். சனாதனியான காந்தி கூட பலாத்காரப்படுத்தலை எதிர்த்து வாழ்வது அவச்செயல் அல்ல என்றார். ஏனெனில் அவர்கள் விடுதலையை விழைபவர்கள். போராடுபவர்கள். பூலான்தேவியின் பிரச்சினை அவரது அரசியல் நோக்கங்கள் வியாபாரியான மேல்சாதிக் கணவன் குடும்பப் பெண் வடிவம் ஆகியன சார்ந்தது. இந்த அறவியல் பிரச்னை கோடானுகோடி இந்நியப் பெண்கள் தொடர்பான இப்படத்தை வெளியிட முடியாது செய்வது உண்மையில் இந்திய மக்களின் துரதிருஷ்டமே. மேலாக பணம் தான் அடிப்படைப் பிரச்சமை என்பதை அவரது மேல்சாதிக் கணவர் நிரூபிக்கிறார்.

சட்டப்பிரச்சினை சம்பந்தமாகச் சொல்லப்படும் வாதமும் அபத்தமானதே. பூலான்தேவி மீது சுமத்தப்பட்டிருக்கும் 48 குற்றங்கள் இன்னமும் விசாரணையில் இருக்கின்றன. அவைபற்றியோ பெமாய் பற்றியோ இப்படம் எதுவும் இறுதியாகச் சொல்லவில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய விளக்கங்களுக்குள்ளும் இப்படம் போகவில்லை. இப்பிரச்சினைக்குப் பின்னுள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியலையும் பாரதீய ஜனதா கட்சியின் அரசியலையும் தான் இப்போது கேள்விக்குள்ளாக்குகிறார்கள் சேகர் கபூரும் பரூக் தோண்டி போன்றவர்களும்.

தணிக்கைக் குழு, அரசியல்வாதிகள், இந்திய மக்களின் நிஜமான வாழ்வுபற்றிய சினிமா தொடர்பான பிரச்சினை அடுத்தது. இப்படத்தில் இடம்பெறும் மூன்று காட்சிகள்தான் இந்தியத் தணிக்கைக் குழுவின் பிரச்சினை: பெமாயில் 22 பேர் கொல்லப்படும் காட்சி. போலீஸ் நிலையத்திலும் பின்னர் பெமாய் கிராமத்திலும் பூலான் பலாத்காரப்படுத்தப்படும் காட்சிகள். பூலானும் விக்ரமும் தொடர்பான கலவிக் காட்சி. இந்திய, தெலுங்கு, தமிழ் மசாலா சினிமாக்களை எடுத்துக்கொண்டால் ஐம்பது பேரை ஒருவன் கண்மண் தெரியால் சுட்டுக் கொல்வான். தலைவேறு முண்டம் வேறு கை வேறு கால் வேறாக வெட்டிக் கொல்வார்கள். அண்மித்த காட்சிகளில் ஆடைகளை ஒவ்வொன்றாக கிழித்துக் கற்பழிப்பார்கள். ரசனையோடு ஒவ்வோர் உள்ளாடையாகக் கழற்றி பல்வேறு தினுசுகளில் சத்தம் போட்டுக் கொண்டு உறவு கொள்வார்கள். போலீஸ் நிலையத்தில் வில்லன் பெண் போலிஸ் அதிகாரியைப் பலாத்காரம் செய்வான். காமசாஸ்திரா நிலைகளை நாயகனும் நாயகியும் ஆடை அணிந்தபடியிருந்தே நிகழ்த்திக் காட்டுவார்கள். இதையெல்லாம் தணிக்கைக் குழு பெரிதாகக் கண்டுகொள்ளாது. இந்த உரிமைகளுக்காக நடிக நடிகையர் ஊர்வலமும் போவார்கள்.

பூலான்தேவி படத்தில் வருகிற இக்காட்சிகளில் ஒன்றில்கூட அண்மித்த காட்சி இல்லை. பெண்ணின் மார்பு நாபி அடிவயிறு மழையில் நனைந்த பின்புறம் மார்புகளின் இடைவெளி (இவையெல்லாம் இப்போது இந்தியப் படங்களில் இருக்கும் சமாச்சாரம்) போன்றவற்றைப் பற்றிய காட்சி ரூபம் இல்லை. பெமாய் பலாத்காரக் காட்சி இருட்டில் அதன் வேதனையுடனும் குரூரத்துடனும் சொல்லப்பட்டிருக்கிறது. குஜ்ஜார் பலாத்காரப்படுத்தும் காட்சியும் பெமாய் கிராமத்தில் பூலான் நிர்வாணமாக அவமானப்படுத்தப்படும் காட்சியும் மேலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. கிளர்ச்சியூட்டும் படியான உடல் வெளிப்பாடுகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

பெமாயில் 22 பேர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி கூட கூடார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாடகமாக ஆக்கிவிடக்கூடாதென ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கிறார்கள் இயக்குனர் சேகர் கபூரும் ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தாவும். அக்காட்சியில் பூலான் வெறிகொண்டு கோபத்துடன் இயங்கும் காட்சி மங்கலாக்கப்பட்டு அதை ஒரு ரசனைமிக்க காட்சியாவதிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான மந்திரத் தன்மையைக் காட்ட விரும்பியதாக குறிப்பிடுகிறார் சேகர். அக்காட்சியில் செயல்படும் ஒரே நபர் ஆக்ரோஷத்துடன் இயங்கும் பூலான்தேவிதான். அதுதவிர அக்காட்சி மங்கலாக்கப்பட்டுவிடுகிறது.

மேலிருந்து பூலான் கலவிகொள்ளும் காட்சி இரண்டு மனங்களின் குதூகலத்தை ஒன்றிணைவை வலியுறுத்தும் வண்ணம் நிகழ்கிறது. அக்காட்சியின் குதூகலமும் உடல் சுதந்திரமும் பூலான் பலாத்காரப்பபடுத்தப்படும் வேதனையான காட்சிகளுடன் ஒப்புநோக்கத்தக்கது. பிரச்சனை இதுதான்: இந்திய வாழ்வுக்கு பெண்ணுக்கு ஆர்கசம் என்று ஒன்று இருப்பதையே தெரிந்துகொள்வது கூடாது. மேலிருந்து பெண் கலவி செய்வது ஒழுக்கப் பிரச்சினை. அவளது பாலியல் கிளர்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவது ஒழுக்கப் பிரச்சினை. தி. ஜானகிராமனின் ‘மரப்பசு’ வின் அம்மணி தனது இறுதி நினைவுகளில் ‘பெண் மேலே இருக்கும்’ உலகம் வேண்டும் என நினைப்பார்கள். இந்தியத் தணிக்கைக்குக் குழுவுக்கு அதை இப்போது சத்தம் போட்டுச் சொல்லவேண்டும் போலிருக்கிறது.

இப்படத்தில் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் சிலவும் உண்டு. பூலான் தேவி தலைமையேற்றுக் கொண்ட பின்னர் பஜ்ரம்பூரில் கொள்ளையொன்று நடத்தப்படுகிறது. அறிவிப்பு இது: ‘பெண்களும் குழந்தைகளும் பயப்படவேண்டாம். அவர்கள் வீடுகளுக்குள் சென்றுவிடுங்கள். ஏழைகளும் பயப்படத் தேவையில்லை’. நகைக்கடைகள், பட்டுத்துணிக் கடைகள் சூறையாடப் படுகின்றன. போலீஸ் வாகனங்கள் சீறி வருகின்றன. கொள்ளையர்கள் தப்பிக்க ஓடுகிறார்கள். ஒருவன் சுடப்பட்டு இறக்கிறான். பூலான் அமைதியாக நடந்து வருகிறாள். முகத்தில் பெருமிதம். ‘நான்தான் பூலான் தேவி. வாங்கடா, புடிங்கடா நான்தான் பூலான் தேவி’ ஒரு குழந்தை பரட்டைத் தலையுடன் ஓடிவருகிறது. பெண் குழந்தை. பூலான் கொள்ளையடித்த கால் சலங்கையை அக்குழந்தைக்கு அவளின் திருமணப் பரிசாக கொடுக்கிறாள் பூலான். தாய் வந்து குழந்தையை அழைத்துக்கொள்ள காலடி ஓசைகள் கேட்கிறது.

மற்றொரு காட்சி: போலீஸ் நிலையத்தில் நடைபெறும் ஓர் உரையாடல். உரையாடலில் இடம் பெறுபவர்களும் பார்வையாளர்களும் கவனம் கொள்ளாத ஒரு சம்பவம் அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அமானுஷ்யமான பெண்ணின் தீனக்குரலும் கதறலும் கேட்கத் கேட்க அவள் போலீசாரால் அடிக்கப்பட்டு கொண்டிருக்கிறாள். காரணம் தெரியவில்லை. அவள் கோடானுகோடி இந்தியப் பெண்களில் ஒருத்தி. அவள் குரல்தான் அது. பிற இந்திய மசாலா படங்கள் பாலியல் வன்முறையை ரசனை நோக்கில் காட்டும் படங்கள் குறிப்பான வரலாற்றுச் சம்பவங்களையோ குறிப்பிட்ட பிரச்சனைகளையோ குறிப்பிட்ட சாதிகளையோ பற்றி கேள்விக்கு உள்ளாக்காத படங்கள். ஆனால், பூலான்தேவி படம் 1970-80 களில் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் நிகழ்ந்து வந்த மேல்சாதி பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த தலித் பெண்ணொருத்தியின் சமூக வரலாற்றுச் சித்திரம். புனைவுகள் பகைமூட்டம் போன்றவை. அது கண்களையும் சிந்தனையும் மறைக்கும். நிஜத்தை அடிப்படையாகக் கொண்ட குறிப்பான சித்தரிப்புகள் ஆதிக்க வர்க்கங்களை கேள்வி கேட்கும். ஆட்டம் காணவைக்கும். அரசியலைச் சவாலுக்கு அழைக்கும். இதுதான் பூலான்தேவி படம் தணிக்கைக் குழுவின் முன்வைத்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடி.

காலனித்துவ எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்புச் சினிமாவைத் தோற்றுவித்த இலத்தீனமெரிக்க இயக்குனர் கிளாபர் ரோச்சா சொல்வார்: ‘காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அழகியல் வன்முறையின் அழகியல், பசியின் அழகியல்.” மேல்சாதி ஆதிக்கத்தின் பாலியல், சாதி வன்முறை அழகியல்தான் இப்போது நிலவும் அழகியல். இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் அழகியல் அதுதான். தணிக்கைக் குழுவின் அழகியலும் அதுவேதான். அதற்கு எதிரான எதிர் வன்முறை அழகியல்தான் பூலான்தேவி சினிமா முன்வைக்கும் அழகியல். இது பசியினதும் வன்முறையினதும் போராட்டத்தினதும் அழகியல். இதனை உலகெங்குமுள்ள நல்ல விமர்சகர்களும் இடதுசாரிகளும்,பெண்ணிலைவாதிகளும் உணர்ந்திருக்கிறார்கள். இப்படம் பற்றிய பிரச்சனைகளை சிந்திக்கையில் ஏற்படும் முழுமையான ஒரே ஆறுதல் இதுதான்..

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்