/* up Facebook

Oct 26, 2015

உன் ஆண்மையையும், கவற்சியையும், மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் ஒரேயொரு பெண்ணுக்கு நிரூபிப்பது எவ்வளவு பெரிய சவால்.. - ஈழவாணி


சமூகம் என்பது நம் எல்லோருக்குமாக அமைந்துகிடப்பதும், நாமும் உள்வாங்கப்பட்டதுமே. ஆனால் நாம் சமூகப் பொறுப்புடையவர்களாக நடந்துகொள்கிறோமா.....?  என்று கேட்டால் மிக அருவருக்கத்தக்க பதில்களையே எம்மிடமிருந்து பெற முடிகிறது.  ஒரு நாடு எதிர்காலத்தை மட்டுமல்லாமல் நிகழ் காலத்தின் இளைய சமுதாயத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய கடைப்பாடுடையது, சமூகம் என்பதோ அல்லது நாடு என்பதோ வெறும் கட்டிடங்களினால் அமைக்கப்படுவதல்ல. இன்றைய இளய சமுதாயமே நாட்டின் பெறுமதியுடைய நளைய தூண்கள் என்று வசனங்கள் பேசுவதோடு மட்டும் நின்று விடாது, அவர்கட்கான முன்னேற்ற அபிவிருத்திச் செயற்பாடுகட்கு ஊக்கமும் வழிகாட்டியுமாக இருக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அதேவேளை அதைப் புரிந்து சமூகநலனுடையவர்களாக நடக்க வேண்டியது நம்மனைவருடைய கட்டாய கடமையும் கூட. 

சிறு வயதில் படித்த விடயம், ஏன் நாம்எல்லோரும் அறிந்ததும் கூட. ஒரு ஊரில் வயது முதிர்ந்த மனிதரொருவர் இருந்தார். அவர் மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஒரு சிறுவன் கேலியாகச் சிரித்துவிடடு, “ என்ன தாத்தா நீயோ வயது முதிர்ந்த கிழவனாகி விட்டாய் இந்த மாமரக்கன்றுகள் எப்போது வளர்ந்து காய்த்து கனியாவது நீயுண்ண? என்றான். இதற்கு அந்த முதியவர் இவ்வாறு கூறினார். இன்று எனக்கு கனிகளையும் நிழலையும்; அளித்துக்கொண்டிருக்கும் மரங்களை எல்லாம் நான் நட்டுவைக்கவில்லை, இவையெல்லாவற்றையும் நம் முன்னோர்கள் நமக்காக நாட்டி வைத்திருந்தனர். நான் நாட்டிய இக் கன்றுகள் உனக்காகவும் உன் போன்றவர்களுக்காகவும், நாமும் நாளைய சந்ததிக்காக நல்லவை சிலவற்றையாவது செய்ய வேண்டும், என்றார். இவை சாதாரண உரையாடலாக இருந்தாலும் ஒரு சமூகப் பொறுப்பான கருத்து சிறுவர்களுக்கு கடத்தப்படுவதை உணரலாம்.

சமூகப் பன்புகளை மேம்படுத்தக் கூடிய காலத்தில் அவற்றை சரியான முறையில் செயற்பாட்டோடு இணைக்க வேண்டும். அதற்கான கால நேரங்களை இழந்து விட்டோமெனில் ஈடுசெய்வது கடினமே. பல்வேறு சமூகங்களிலும் இன்றைய இளைஞர்கள் ஓர் அடையாள நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம், அவநம்பிக்கைகளில் அது வெளிப்படுகிறது. இதயங்களில் நன்நெறிகளோ, தார்மீகப் பண்புகளோ இல்லை என்பதை அவர்களில் பெரும்பாலானவர்களின் விரக்தி பிரதிபலிக்கிறது.  எப்பொழுதும் இளைஞர்களையே குற்றம் சாட்டும் சமூகம், தமக்கானதைச் செய்யவில்லையென சமூகத்தையே குற்றம்சுமத்தும் இளைஞர்களுமாக இருக்க, பொறுப்பற்ற சமூகம், பொறுப்பற்ற இளைஞர்கள் என்ற நிலைதான் உருவாகிறதே தவிர இவற்றிற்கு உண்மையில் யார் பொறுப்பு என்பதை அடுத்தவரைக் குற்றம் சாட்டி நிற்கும் எந்தத் தரப்புமே உணருவதாயில்லை.

முனைப்பும் செயற்பாட்டுத் துடிப்பும் கொண்டு இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.  ஆனால் திசைகாட்டியாக வழிவகைகளை அமைத்துக்  கொடுக்கவேண்டிய கடமை சமூகத்தினுடையது  என்பதையும் மறுக்க இயலாது.  சில படித்த விடயங்களை உங்களோடு பகிர ஆவலாயிருக்கிறேன். 

அமெரிக்க அதிபராக இருந்தவரின் மனைவி எபிகெய்ஸ்ஆடம்ஸ். அவருடைய மகன் ஜான் குவின்சியும் பின்னாளில் அமெரிக்க அதிபரானார். தாயார் தன் மகன் ஜானுக்கு 1779 - 80ல் குளிர்கலத்தில் எழுதிய கடிதம் இது. தன் கொள்கையை உறுதிப்பட எடுத்துரைக்கிறார் அத்தாய். 

எனதன்பு ஜான்,                         
                                               
சமுதாயத்திற்கு அணிகலனாக, உன் நாட்டிற்குப் பெருமை தருபவனாக உன் குடும்பத்திற்கு அளப்பரிய சொத்தாகத் திகழும் வகையில் பயனுள்ள அறிவையும், நீதிநெறியையும் பெறுவதற்கேற்ப உன் புரிதல் திறனை மேம்படுத்திக்கொள். எத்துணை தான் கல்வி கற்றிருப்பினும், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவற்றுடன் நீதி, நேர்மை, சத்தியம், கண்ணியம் இவற்றைச் சேர்க்கா விட்டால் உன் கல்வியும் திறமையும் சபைக்கு உதவாதவை தான். நீ சிறுவனாக இருந்த போது உனக்குள் விதைத்த நல்லுபதேசங்களை கடைப்பிடி.  உன் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் இறைவனிடம் பதிலளிக்கக் கடமைப்பட்டவன் நீ என்பதை மறந்துவிடாதே. உன் தாயின் மகிழ்ச்சியையும் உன் நலனையும் பெரிதாக மதிப்பாயானால், உன் தந்தை உரைத்த கட்டளைகளை உறுதியாக பின் பற்ற வேண்டும் என்பேன்;.  ஒழுக்கம் இல்லாத கருணையற்றவனாக வளர்வதைக் காட்டிலும் இளம் வயதிலேயே அகால மரணமடைவதே சாலச் சிறந்தது என்பேன்.

(ஆதாரம்- ரிபெக்காஜேன்னி எழுதிய “கிரேட் லெட்ர்ஸ் இன் அமெரிக்கன் கிஸ்டரி” எனும் நூல்  )

கட்டுப்பாடு என்பது ஒரு குழந்தையின் உற்சாகத்தை சிதைத்து விடாது, ஆனால் கட்டுப்பாடற்ற வாழ்க்கை சமூகத்துள் சீர்குலைவை ஏற்படுத்திவிடும்.

அமெரிக்க அதிபராக இருந்த “ரொனால்ட் ரீகன்” தன் மகனின் திருமணத்தின் போது இவ்வாறு எழுதினார்.

எனதன்பு மைக்,

‘திருமணமா ஐயோ அது ஒரு வேதனை’ என்று கூறுபவர்களும் கிறுக்கர்களும் கூறுகிற நகைச்சுவைகளை எல்லாம் நீ முன்னரே கேள்விப்பட்டிருப்பாய். இப்போது நான் இதன் மறுபக்கத்தைப் பற்றிக் கூறுகிறேன்- இதை ஒருவேளை நீ கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். மனித வாழ்விலேயே மிகவும் அர்;தமுள்ள உறவை நீ துவங்கியிருக்கிறாய்.  அதை நீ எப்படி முடிவு செய்கிறாயோ அப்படி மாற்றிக் கொள்ளலாம்.  சில மனிதர்கள் தமது வாழ்வில் கிசுகிசுக் கதைகளில் கூறப்படும் சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவது தான் தமது ஆண்மைக்கு அழகு என்று நினைக்கிறார்கள். தன் மனைவிக்குத் தெரியாத எதுவும் அவளைப் பாதிக்கப் போவதில்லை என்று அவர்கள் தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆனால் உண்மை என்பது அதற்கும் உள்ளே அடியாழத்தில் இருக்கிறது.  தன் கணவனின் சட்டையில் வேறொரு பெண்ணின் உதட்டுச்சாயக் கறை கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும் , இராத்திரி மூன்று மணிவரை எங்கே சுற்றிக்கொண்டிருந்தீர்கள் என்று மனைவி கேள்வி எழுப்பி கையும் களவுமாகப் பிடிக்காவிட்டாலும் கூட, தன் கணவனின் கூடா உறவு பற்றி அவள் அறிந்தே இருக்கிறாள். அவள் எப்போது அறிய வருகிறாளே அப்போது இந்த அற்புத உறவு மறைந்து விடுகிறது. திருமண வாழ்க்கையை எட்டி உதைத்து கெடுத்துக் கொள்வதில் பெண்களைவிட ஆண்களே அதிகம்.

பௌதீகத்தில்  ஒரு சூத்திரம் உண்டு – ஒரு பாத்திரத்தில் எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவு தான் எடுக்க முடியும், திருமண வாழ்வில் தனக்குச் சொந்தமானவற்றில் பாதியை மட்டுமே போடுகிறவனுக்கு அந்தப் பாதி மட்டும் தான் திரும்பக் கிடைக்கும். வோறு யாரையும் பார்க்கும் போதோ, அல்லது கடந்த கலத்தை நினைக்கும் போதோ சிறந்த கணவனாக இருக்க முடியுமா என்ற கேள்விகள் உனக்குள் எழும் சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நான் உனக்குச் சொல்வது இதுதான், உன் ஆண்மையையும், கவற்சியையும், மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் ஒரேயொரு பெண்ணுக்கு நிரூபிப்பது எவ்வளவு பெரிய சவால் என்று உனக்குப் புரியும். வாழ்கையில் ஏமாற்றித் திரியும் ஒரிரு இழிமகன்களை ஒவ்வொரு மனிதனும் சந்திக்கத்தான் செய்கிறான். அவ்வாறு ஏமாற்றித் திரிவதற்கு ஆண்மை ஒன்றும் தேவையில்லை. ஒரு பெண்ணை – ஒரேயொரு பெண்ணை நேசிக்கவும் நேசிக்கப்படவும் தான் அதிக ஆண்மை தேவை.  தன் கணவனின் குறட்டை ஒலியைச் சகித்துக் கொள்கிற, முகச்சவரம் செய்து கொள்ளாத கணவனை முகம் சுழிக்காமல் ஏற்கிற, நோய்வாய்ப்பட்டபோது தாதியாக இருந்து கவனிக்கிற, அவனுடைய அழுக்கு உள்ளாடைகளை அலசிப்போடுகிற ஒரு பெண்ணை நேசிப்பது, இதைச் செய்துபார் அப்போது புரியும்.  ஓர் இதமான கதகதப்பும், உள்ளுக்குள் ஒலிக்கிற இன்னிசையும்.


உண்மயாகவே நீயொரு பெண்ணை நேசிக்கிறாய் என்றால் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். உங்கள் இருவருக்கும் அறிமுகமான ஒரு பெண்ணை அல்லது உன் காரியதரிசிப் பெண்ணை நீ வாழ்த்திப்பேசும் போது உன் மனைவி மனதில் ‘இவள் காரணமாகத்தான் கணவன் தாமதமாக வீட்டுக்கு வருகிறானோ’ என்ற சந்தேகம் துளியும் வந்திடாத படி நீ நடந்து கொள்ளவேண்டும். வேற்றுப் பெண் ஒருத்தி உன் மனைவியைச் சந்திக்க நேருகிறபோது ‘ஓகோ இவளைத்தான் நிராகரித்து விட்டாரா’என்று உன் மனைவியைப் பற்றிய ஒரு இளக்காரமான எண்ணம் அந்தப்  பெண்ணின் மனதில் வரும்படி நீ நடந்து கொள்ளக்கூடாது.  மகனே மைக், மகிழ்ச்சி அற்ற குடும்பம் என்பது என்ன என்றும், அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நீயே நன்கு அறிவாய். இப்போது அது எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறு அமைப்பதற்கான வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. தான் வீடு திரும்பும்போது தனக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதை விட மகிழ்ச்சி தரும் விடயம் எதுவுமே இருக்க முடியாது.
-அப்பா.  

பொறுப்பு என்பது ஒவ்வொரு தரப்புப்பற்றியும் எல்லோருக்கும் கட்டாயம் இருக்கவேண்டியதே இதைப் பலர் உதாசீனப்படுத்திவிட்டு மற்றவர்களிடம் சாட்டிப்பழியைப் போட்டுக்கொண்டலைகிறார்கள். சமூகப்பொறுப்பு அனைவரின் கடனே. இதை ஆரம்பிக்கவேண்டியது ஒவ்வொரு தனி மனிதனிடமுமிருந்தே.

நன்றி -  பூவரசி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்