/* up Facebook

Oct 27, 2015

30 வருட யுத்தத்தில் 85 ஆயிரம் விதவைகள்: 35 ஆயிரம் உதவியற்ற சிறுவர்கள்!- தேசிய பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி


கடந்த 30வருடகால கொடிய யுத்தத்தின் விளைவாக 85ஆயிரம் விதவைகளையும் 35ஆயிரம் அநாதரவான சிறுவர்களையும் பெற்றுள்ளோம்.இதைவிட மிகவும் கொடிய ஆபத்தை எமது இன்றைய உணவுகள் மூலம் எதிர்நோக்க வேண்டி வரும். இதிலிருந்து மீள எமது உணவுப் பழக்க முறைகளை மாற்ற வேண்டும்.

இவ்வாறு தேசிய பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் தலைவியும் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் சர்வதேச ஆர்வலருமான திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

காரைதீவில் மனிதஅபிவிருத்தித் தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தலைமையில் இடம்பெற்ற சர்வதேச கிராமியபெண்கள் தின வைபவத்தின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

நாம் தினமும் ஏதோ ஒருவடிவில் நஞ்சையே உண்கிறோம். எமது உணவுப் பழக்க வழக்கங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

நான் ஜ.நா. அமர்விற்குச் சென்றபோது எமது ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவும் அங்கு வந்திருந்தார்.அங்கு உணவுப் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் ஜனாதிபதி ஏற்று கைச்சாத்திட்டிருந்தார்.
உணவுப்பாதுகாப்பில் நாமனைவரும் பங்குதாரர்களாக மாறவேண்டும். சுத்தமான உணவை உட்கொள்ளவேண்டும்.

அதற்கு சேதனப்பசளைகளை பாவித்து உணவுகளை உற்பத்திசெய்யவேண்டும். அதற்கு நாம் தயாராகவேண்டுமாகவிருந்தால் நிலம் முக்கியம். ஆனால் இலங்கையில் காணிப்பிரச்சினை அதற்கு தடையாகவிருக்கிறது.

காணியற்றவர்களுக்கு காணிகள் வழங்க வேண்டும்!

வடக்கு கிழக்கில் காணியிருந்தும் அதனைப் பயன்படுத்த முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இராணுவ தேவைகள் அல்லது அதிமுக்கிய வலயம் என்று அவை சுவீகரிக்கப்பட்டிருக்கின்றன. அவை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 200 வருடங்களாக காணியற்று பெருந்தோட்டதொழிலாளர்கள் லயன்களிலே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அந்த நிலங்கள் வழங்கப்படவேண்டும்.

நஞ்சை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்!

ஆசியாவில் 64நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் ஆய்வறிக்கையின் படி பன்னாட்டு நிறுவனங்கள் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதனூடாக மக்களுக்கு நஞ்சை மட்டுமல்ல பெரும் செலவையும் ஏற்படுத்தி வருகின்றமை தெரிய வந்துள்ளது.

உலகில் அதிகவருமானமீட்டும் இப்பன்னாட்டு நிறுவனங்கள் நஞ்சையே உருவாக்கிவருகின்றன. நாம் காசைக் கொடுத்து நோயை விலைக்கு வாங்குகின்றோம். தேவையா?

சோடா பிறைட்றைஸ் மிக்சர் பாஸ்ட்பூட் என்பவையெல்லாம் ஒருவகையில் உடல்நலத்திற்கு தீங்கானவையே. அவை தவிர்க்கப்படவேண்டும்.

பாதுகாப்பான உணவு எது?

அடிப்படை வசதிகளான உணவு உடை உறையுள் என்பன அடிப்படைஉரிமைகளுமாகும்.

உணவின்றி பட்டினியால் ஆசியாவில் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஸ் நேபாளம் போன்ற நாடுகளில் மக்கள் மரணிப்பதைக் காண்கின்றோம்.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அந்நிலை இல்லை எனலாம்.நாமனைவரும் உணவு உண்கின்றோம். ஆனால் அவை பாதுகாப்பானதா ? என்பது தொடர்பில் பெரும் சந்தேகமுள்ளது.எமது உணவுகளில் பெரும்பாலும் நஞ்சுள்ளதை நாம் அறிவதில்லை.

அரிசியில் ஆசனிக் நஞ்சு

இலங்கையில் பிரதானமான உணவு சோறு. அதற்கான அரிசியில் ஆசனிக் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேம்பிலுள்ளது ஆசனிக. என்ற இரசாயனப்பொருள். அது மிகவும் நுண்ணிய வீதத்தில்தேவை.

ஆனால் எமது அரிசியில் பன்மடங்கு ஆசனிக் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அது ஒருவகையான நஞ்சு. உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே அரிசியுற்பத்தியின்போது சேதனப்பசளைகளைமட்டும் பயன்படுத்த எமது விவசாயிகள் முன்வரவேண்டும்.

ஆசனிக் மேலீட்டால் அனுராதபுரம் மொனராகலை போன்ற பகுதிகளில் சிறுநீரக நோய் உண்டாகியிருப்பதை அறிவீர்கள். விவசாயத்திற்கு விசிறும் இரசாயன மருந்து நீர்நிலைகளில் கலந்து மனிதனைச்சேரும்போது இத்துர்ப்பாக்கியநிலை தோன்றுகிறது.

மாற்றம் வேண்டும்!

எனவே நாம் எமது வாழ்க்கைக்கோலத்தை மாற்றுவதோடு உணவுப்பழக்கவழக்கங்களையும் மாற்றவேண்டும்.இன்றேல் மனித வர்க்கம் படிப்படியாக அழிய நேரிடும்.

நாம் ஒவ்வொருவரும் எமது உணவில் மாற்றங்களை ஏற்படுத்தி பாதுகாப்பான உணவை உட்கொள்ளும் முறைமையைக் கைக்கொள்ளும்போது ஒட்டுமொத்தமாக நாட்டிலும் மாற்றம்வரும். அப்போதுதான் ஆரோக்கியமான நாடு உருவாகும். என்றார்.

காரைதீவு நிருபர்-
நன்றி - தமிழ் cnn

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்