/* up Facebook

Oct 30, 2015

’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க!’ நடிகை கஸ்தூரி
ஓரிரு தினங்களாக வாட்ஸப், சமூக வலைதளங்கள் என ட்ரெண்டில் இருக்கிறார் நடிகை கஸ்தூரி. காரணம் ‘அன்னையின் தேகங்கள்’ (Bodies Of Mothers) என்ற ஆல்பத்துக்கு அவர் கொடுத்த செமி நியூட் போஸ். 

’’அது மூணு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த ஸ்டில்ஸ். அதை இப்போ ட்ரெண்ட் ஆக்கியிருக்காங்க!’’ என சிரித்துக் கொண்டே பேசுகிறார் கஸ்தூரி.

எப்படி இருக்கீங்க?

ரெண்டு குழந்தைகள், அன்பான கணவன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் முதல் குழந்தை பிறந்தப்போ சில உடல்ரீதியான பிரச்னைகளால் அவஸ்தைப்பட்டேன். ரெண்டு வருஷம் பெரிய பெரிய சோதனைகள். அதிலிருந்து மீண்டு இப்போதான் நிம்மதியா இருக்கேன்!  

என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க.. நடிப்ப விட்டு விலகிட்டீங்களே?

விலகவே இல்ல. நான் இப்பவும் நடிச்சிக்கிட்டு தான் இருக்கேன். ஜப்பான் சார்ந்த ஒரு கல்வி படம், இந்த மாதிரி சில நல்ல படங்கள்ல என்னால முடிஞ்ச நடிப்பை நான் கொடுத்துட்டுதான் இருக்கேன். ஆனா, என்னைப் பத்தி ஏதேதோ தகவல்கள் திடீர்னு பரவிருச்சு. என் கணவர் பேர் கூட யாருக்கும் தெரியலை. ரவிகுமார்னு சொல்றாங்க. ’அது யாரு ரவிகுமார்... உன் ஹஷ்பண்டாமே’னு கேட்டு என் ஹஸ்பண்டே என்னைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. என் பிறந்த நாள் கூட விக்கிபீடியாவுல தப்பா இருக்கு. என்னைப் பத்தி எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளுங்க... ப்ளீஸ்!

இப்போ அந்த புகைப்படம் பத்தி சொல்லுங்களேன்

உண்மைய சொன்னா என் வாழ்க்கைல பெஸ்ட் மொமெண்ட்னு சொல்லலாம். ஒரு பொண்ணுக்கு குழந்தை பிறந்தா அவ அழகெல்லாம் போயிடும், வயித்துல சுருக்கம் விழும். இப்படி பொண்ணுங்களே நிறைய பேர் நினைக்கிறாங்க. அந்த விஷயத்த உடைக்கணும். ஒரு பையனுக்கு அவன் மனைவியைவிட அவன் குழந்தையோட தாயான பெண்ணைத்தான் ரொம்பப் பிடிக்கும். அந்த போட்டோக்கள்ல நிறைய பெண்கள் அவங்க கணவனோட அழகா நிப்பாங்க. அதுல ஒரு உணர்ச்சிப்பூர்வமான பந்தம் இருக்கும். என் தொழில் அடையாளம் நடிகையா இருந்தாலும்.. நான் ஒரு அழகான அம்மா. அம்மா எப்படி இருந்தாலும் அழகுதான்னு சொல்ல நினைச்சு எடுத்த போட்டோஸ்தான் அது. சரும சுருக்கம், முகத்துல இருந்த கருமை அதெல்லாம் மறைக்கிற மேக்கப், போட்டோஸ் இல்லாம எடுத்த போட்டோஸ் அது. நம்ம அழகை நாம ரசிக்கணும். முக்கியமா அந்த போட்டோஸ் எடுத்த ஜேட் அவங்களும் ஒரு தாயா, தன் குழந்தையோட போஸ் கொடுத்திருப்பாங்க. இன்னொன்னு... பொண்ணுங்க தேகம் அழகானது, இயற்கையின் அற்புதங்களில் ஒண்ணு. அதை வன்மையா பார்க்காதீங்க, வன்மத்தோட அணுகாதீங்கனு சொல்றதுக்காக நடந்த போட்டோஷூட்!  

ஜேட்- கஸ்தூரி ஃப்ரண்ட்ஷிப் பத்திச் சொல்லுங்களேன்?

ஜேட் நான் நல்லா இருக்கணும்னு நினைச்ச ஆத்மா. மிகப்பெரிய போட்டோகிராபர். ஆனா, ரொம்ப நல்ல மனுஷி. நீங்க பேசுறதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் ரெண்டு பேரும் பேசினோம். ’நாம என்ன நினைச்சு ஒரு போட்டோ கொடுத்தோம்... என்ன நடந்துருக்குனு பாத்தீங்களா’னு கொஞ்சம் வருத்தமாதான் இருந்துச்சு. எனக்கு கஷ்டத்துல நிறைய ஹெல்ப் பண்ணாங்க. நல்ல தோழி.  

யார் மேல கோபம்?

சத்தியமா விசாரிக்காம நியூஸ் போடுற  சிலர் மேலதான். போன்ல கூப்பிட்டா நான் எடுத்து பதில் சொல்லப் போறேன். எனக்கு தெரிஞ்சு விகடன்ல இருந்து மட்டும்தான் இது பத்தி விசாரிச்சு போன் வந்துருக்கு. சில தலைப்பெல்லாம் அரை நிர்வாணம், ஆடையின்றி, டாப்லெஸ்னு ஏதோ நான் அடல்ட்ஸ் ஒன்லி படத்துல நடிச்ச மாதிரி விஷயத்தை திரிக்குது. என்ன இதெல்லாம்...! மக்களுக்கு நல்ல விஷயத்தைக் கூடவா இப்படிக் கொடுப்பாங்க. ஆனா, மக்கள் முட்டாள் இல்லை. அவங்க போட்டிருக்கிற எல்லா நியூஸுக்கும் கீழ பப்ளிக் அவ்ளோ நல்ல கமென்ட்ஸ் கொடுத்திருக்காங்க. ’எந்த போட்டோவுக்கு எப்படி தலைப்பு வைச்சிருக்கீங்க’னு சிலர் என் சார்பா கோபப்பட்டதைப் படிச்சதும் எனக்கு கண்ணீரே வந்துடுச்சு. அவங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சு வெச்சுருக்காங்க. மக்களை ஏமாத்தவே முடியாதுன்னு அப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்!

சினிமான்னாலே பெண்கள் இப்படித்தான்னு வரையறுத்து வெச்சிட்டாங்களே? கல்யாணம் ஆனாலோ, அல்லது 35 வயச தாண்டினாலோ இண்டஸ்ட்ரில சரியான கேரக்டர்கள் கிடைக்கறது இல்லையே, ரொம்ப அரிதாதானே 36 வயதினிலே நடக்குது?

உண்மைதான். ஹீரோக்கள் 60 வயசுலயும் அழகா ஹீரோயின்களோட டான்ஸ் ஆடுவாங்க. பெண்களைப் பொருத்தவரை அது வேற மாதிரி தான் இருக்கு. ஆனாலும் ஜோதிகா, ஐஸ்வர்யா ராய், அமலா பால் மாதிரி இப்ப கொஞ்சம் முன்னேற்றம் வந்துருக்கு. இது இன்னும் அதிகரிக்கணும். நடிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகணும். பார்க்கலாம்.
- ஷாலினி நியூட்டன் -

நன்றி விகடன்...மேலும்

Oct 28, 2015

நேபாளில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவு


நேபாளில் முதல் தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதியாக இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கொம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் சார்பில் பித்யா பந்தாரி (வயது 54) அவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தென்னாசியா பெண்களை அரசியல் தலைவர்களாகவும், நாட்டுத் தலைவராகவும் உருவாக்கிய அரசியல் மரபைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் தென்னாசியாவில் பெண்களை நாட்டின் தலைவியாக தெரிவு செய்த வரலாறுண்டு.

துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொருமுறையும் அரசியல் தலைவராக இருந்த ஆண் எவரேனும் மரணித்ததால் அவருக்கு பதிலாக அவரின் மகளோ, மனைவியோ தெரிவு செய்யப்படுகின்ற வரலாறே தொடர்ந்துள்ளது. அது இன்று நேபாளிலும் நேர்ந்துள்ளது.

ஆனால் நேபாளில் 1993 இல் கார் விபத்தில் கொல்லப்பட்ட அரசியல் தலைவரான மதன் பந்தாரியின் மரணத்தைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபாடுகொள்ளத் தொடங்கியவர் பித்யா பந்தாரி. ஆகவே ஏனைய பெண் அரசியல் தலைவர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

குறிப்பாக பெண்ணுரிமை, சமத்துவம், ஜனநாயகம், அரசியல் சீர்திருத்தம் போன்ற விடயங்களில் தீவிரமாக உழைத்து வந்தவர்.

...மேலும்

Oct 27, 2015

30 வருட யுத்தத்தில் 85 ஆயிரம் விதவைகள்: 35 ஆயிரம் உதவியற்ற சிறுவர்கள்!- தேசிய பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி


கடந்த 30வருடகால கொடிய யுத்தத்தின் விளைவாக 85ஆயிரம் விதவைகளையும் 35ஆயிரம் அநாதரவான சிறுவர்களையும் பெற்றுள்ளோம்.இதைவிட மிகவும் கொடிய ஆபத்தை எமது இன்றைய உணவுகள் மூலம் எதிர்நோக்க வேண்டி வரும். இதிலிருந்து மீள எமது உணவுப் பழக்க முறைகளை மாற்ற வேண்டும்.

இவ்வாறு தேசிய பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் தலைவியும் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் சர்வதேச ஆர்வலருமான திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

காரைதீவில் மனிதஅபிவிருத்தித் தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தலைமையில் இடம்பெற்ற சர்வதேச கிராமியபெண்கள் தின வைபவத்தின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

நாம் தினமும் ஏதோ ஒருவடிவில் நஞ்சையே உண்கிறோம். எமது உணவுப் பழக்க வழக்கங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

நான் ஜ.நா. அமர்விற்குச் சென்றபோது எமது ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவும் அங்கு வந்திருந்தார்.அங்கு உணவுப் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் ஜனாதிபதி ஏற்று கைச்சாத்திட்டிருந்தார்.
உணவுப்பாதுகாப்பில் நாமனைவரும் பங்குதாரர்களாக மாறவேண்டும். சுத்தமான உணவை உட்கொள்ளவேண்டும்.

அதற்கு சேதனப்பசளைகளை பாவித்து உணவுகளை உற்பத்திசெய்யவேண்டும். அதற்கு நாம் தயாராகவேண்டுமாகவிருந்தால் நிலம் முக்கியம். ஆனால் இலங்கையில் காணிப்பிரச்சினை அதற்கு தடையாகவிருக்கிறது.

காணியற்றவர்களுக்கு காணிகள் வழங்க வேண்டும்!

வடக்கு கிழக்கில் காணியிருந்தும் அதனைப் பயன்படுத்த முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இராணுவ தேவைகள் அல்லது அதிமுக்கிய வலயம் என்று அவை சுவீகரிக்கப்பட்டிருக்கின்றன. அவை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 200 வருடங்களாக காணியற்று பெருந்தோட்டதொழிலாளர்கள் லயன்களிலே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அந்த நிலங்கள் வழங்கப்படவேண்டும்.

நஞ்சை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்!

ஆசியாவில் 64நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் ஆய்வறிக்கையின் படி பன்னாட்டு நிறுவனங்கள் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதனூடாக மக்களுக்கு நஞ்சை மட்டுமல்ல பெரும் செலவையும் ஏற்படுத்தி வருகின்றமை தெரிய வந்துள்ளது.

உலகில் அதிகவருமானமீட்டும் இப்பன்னாட்டு நிறுவனங்கள் நஞ்சையே உருவாக்கிவருகின்றன. நாம் காசைக் கொடுத்து நோயை விலைக்கு வாங்குகின்றோம். தேவையா?

சோடா பிறைட்றைஸ் மிக்சர் பாஸ்ட்பூட் என்பவையெல்லாம் ஒருவகையில் உடல்நலத்திற்கு தீங்கானவையே. அவை தவிர்க்கப்படவேண்டும்.

பாதுகாப்பான உணவு எது?

அடிப்படை வசதிகளான உணவு உடை உறையுள் என்பன அடிப்படைஉரிமைகளுமாகும்.

உணவின்றி பட்டினியால் ஆசியாவில் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஸ் நேபாளம் போன்ற நாடுகளில் மக்கள் மரணிப்பதைக் காண்கின்றோம்.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அந்நிலை இல்லை எனலாம்.நாமனைவரும் உணவு உண்கின்றோம். ஆனால் அவை பாதுகாப்பானதா ? என்பது தொடர்பில் பெரும் சந்தேகமுள்ளது.எமது உணவுகளில் பெரும்பாலும் நஞ்சுள்ளதை நாம் அறிவதில்லை.

அரிசியில் ஆசனிக் நஞ்சு

இலங்கையில் பிரதானமான உணவு சோறு. அதற்கான அரிசியில் ஆசனிக் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேம்பிலுள்ளது ஆசனிக. என்ற இரசாயனப்பொருள். அது மிகவும் நுண்ணிய வீதத்தில்தேவை.

ஆனால் எமது அரிசியில் பன்மடங்கு ஆசனிக் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அது ஒருவகையான நஞ்சு. உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே அரிசியுற்பத்தியின்போது சேதனப்பசளைகளைமட்டும் பயன்படுத்த எமது விவசாயிகள் முன்வரவேண்டும்.

ஆசனிக் மேலீட்டால் அனுராதபுரம் மொனராகலை போன்ற பகுதிகளில் சிறுநீரக நோய் உண்டாகியிருப்பதை அறிவீர்கள். விவசாயத்திற்கு விசிறும் இரசாயன மருந்து நீர்நிலைகளில் கலந்து மனிதனைச்சேரும்போது இத்துர்ப்பாக்கியநிலை தோன்றுகிறது.

மாற்றம் வேண்டும்!

எனவே நாம் எமது வாழ்க்கைக்கோலத்தை மாற்றுவதோடு உணவுப்பழக்கவழக்கங்களையும் மாற்றவேண்டும்.இன்றேல் மனித வர்க்கம் படிப்படியாக அழிய நேரிடும்.

நாம் ஒவ்வொருவரும் எமது உணவில் மாற்றங்களை ஏற்படுத்தி பாதுகாப்பான உணவை உட்கொள்ளும் முறைமையைக் கைக்கொள்ளும்போது ஒட்டுமொத்தமாக நாட்டிலும் மாற்றம்வரும். அப்போதுதான் ஆரோக்கியமான நாடு உருவாகும். என்றார்.

காரைதீவு நிருபர்-
நன்றி - தமிழ் cnn
...மேலும்

Oct 26, 2015

உன் ஆண்மையையும், கவற்சியையும், மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் ஒரேயொரு பெண்ணுக்கு நிரூபிப்பது எவ்வளவு பெரிய சவால்.. - ஈழவாணி


சமூகம் என்பது நம் எல்லோருக்குமாக அமைந்துகிடப்பதும், நாமும் உள்வாங்கப்பட்டதுமே. ஆனால் நாம் சமூகப் பொறுப்புடையவர்களாக நடந்துகொள்கிறோமா.....?  என்று கேட்டால் மிக அருவருக்கத்தக்க பதில்களையே எம்மிடமிருந்து பெற முடிகிறது.  ஒரு நாடு எதிர்காலத்தை மட்டுமல்லாமல் நிகழ் காலத்தின் இளைய சமுதாயத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய கடைப்பாடுடையது, சமூகம் என்பதோ அல்லது நாடு என்பதோ வெறும் கட்டிடங்களினால் அமைக்கப்படுவதல்ல. இன்றைய இளய சமுதாயமே நாட்டின் பெறுமதியுடைய நளைய தூண்கள் என்று வசனங்கள் பேசுவதோடு மட்டும் நின்று விடாது, அவர்கட்கான முன்னேற்ற அபிவிருத்திச் செயற்பாடுகட்கு ஊக்கமும் வழிகாட்டியுமாக இருக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அதேவேளை அதைப் புரிந்து சமூகநலனுடையவர்களாக நடக்க வேண்டியது நம்மனைவருடைய கட்டாய கடமையும் கூட. 

சிறு வயதில் படித்த விடயம், ஏன் நாம்எல்லோரும் அறிந்ததும் கூட. ஒரு ஊரில் வயது முதிர்ந்த மனிதரொருவர் இருந்தார். அவர் மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஒரு சிறுவன் கேலியாகச் சிரித்துவிடடு, “ என்ன தாத்தா நீயோ வயது முதிர்ந்த கிழவனாகி விட்டாய் இந்த மாமரக்கன்றுகள் எப்போது வளர்ந்து காய்த்து கனியாவது நீயுண்ண? என்றான். இதற்கு அந்த முதியவர் இவ்வாறு கூறினார். இன்று எனக்கு கனிகளையும் நிழலையும்; அளித்துக்கொண்டிருக்கும் மரங்களை எல்லாம் நான் நட்டுவைக்கவில்லை, இவையெல்லாவற்றையும் நம் முன்னோர்கள் நமக்காக நாட்டி வைத்திருந்தனர். நான் நாட்டிய இக் கன்றுகள் உனக்காகவும் உன் போன்றவர்களுக்காகவும், நாமும் நாளைய சந்ததிக்காக நல்லவை சிலவற்றையாவது செய்ய வேண்டும், என்றார். இவை சாதாரண உரையாடலாக இருந்தாலும் ஒரு சமூகப் பொறுப்பான கருத்து சிறுவர்களுக்கு கடத்தப்படுவதை உணரலாம்.

சமூகப் பன்புகளை மேம்படுத்தக் கூடிய காலத்தில் அவற்றை சரியான முறையில் செயற்பாட்டோடு இணைக்க வேண்டும். அதற்கான கால நேரங்களை இழந்து விட்டோமெனில் ஈடுசெய்வது கடினமே. பல்வேறு சமூகங்களிலும் இன்றைய இளைஞர்கள் ஓர் அடையாள நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம், அவநம்பிக்கைகளில் அது வெளிப்படுகிறது. இதயங்களில் நன்நெறிகளோ, தார்மீகப் பண்புகளோ இல்லை என்பதை அவர்களில் பெரும்பாலானவர்களின் விரக்தி பிரதிபலிக்கிறது.  எப்பொழுதும் இளைஞர்களையே குற்றம் சாட்டும் சமூகம், தமக்கானதைச் செய்யவில்லையென சமூகத்தையே குற்றம்சுமத்தும் இளைஞர்களுமாக இருக்க, பொறுப்பற்ற சமூகம், பொறுப்பற்ற இளைஞர்கள் என்ற நிலைதான் உருவாகிறதே தவிர இவற்றிற்கு உண்மையில் யார் பொறுப்பு என்பதை அடுத்தவரைக் குற்றம் சாட்டி நிற்கும் எந்தத் தரப்புமே உணருவதாயில்லை.

முனைப்பும் செயற்பாட்டுத் துடிப்பும் கொண்டு இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.  ஆனால் திசைகாட்டியாக வழிவகைகளை அமைத்துக்  கொடுக்கவேண்டிய கடமை சமூகத்தினுடையது  என்பதையும் மறுக்க இயலாது.  சில படித்த விடயங்களை உங்களோடு பகிர ஆவலாயிருக்கிறேன். 

அமெரிக்க அதிபராக இருந்தவரின் மனைவி எபிகெய்ஸ்ஆடம்ஸ். அவருடைய மகன் ஜான் குவின்சியும் பின்னாளில் அமெரிக்க அதிபரானார். தாயார் தன் மகன் ஜானுக்கு 1779 - 80ல் குளிர்கலத்தில் எழுதிய கடிதம் இது. தன் கொள்கையை உறுதிப்பட எடுத்துரைக்கிறார் அத்தாய். 

எனதன்பு ஜான்,                         
                                               
சமுதாயத்திற்கு அணிகலனாக, உன் நாட்டிற்குப் பெருமை தருபவனாக உன் குடும்பத்திற்கு அளப்பரிய சொத்தாகத் திகழும் வகையில் பயனுள்ள அறிவையும், நீதிநெறியையும் பெறுவதற்கேற்ப உன் புரிதல் திறனை மேம்படுத்திக்கொள். எத்துணை தான் கல்வி கற்றிருப்பினும், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவற்றுடன் நீதி, நேர்மை, சத்தியம், கண்ணியம் இவற்றைச் சேர்க்கா விட்டால் உன் கல்வியும் திறமையும் சபைக்கு உதவாதவை தான். நீ சிறுவனாக இருந்த போது உனக்குள் விதைத்த நல்லுபதேசங்களை கடைப்பிடி.  உன் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் இறைவனிடம் பதிலளிக்கக் கடமைப்பட்டவன் நீ என்பதை மறந்துவிடாதே. உன் தாயின் மகிழ்ச்சியையும் உன் நலனையும் பெரிதாக மதிப்பாயானால், உன் தந்தை உரைத்த கட்டளைகளை உறுதியாக பின் பற்ற வேண்டும் என்பேன்;.  ஒழுக்கம் இல்லாத கருணையற்றவனாக வளர்வதைக் காட்டிலும் இளம் வயதிலேயே அகால மரணமடைவதே சாலச் சிறந்தது என்பேன்.

(ஆதாரம்- ரிபெக்காஜேன்னி எழுதிய “கிரேட் லெட்ர்ஸ் இன் அமெரிக்கன் கிஸ்டரி” எனும் நூல்  )

கட்டுப்பாடு என்பது ஒரு குழந்தையின் உற்சாகத்தை சிதைத்து விடாது, ஆனால் கட்டுப்பாடற்ற வாழ்க்கை சமூகத்துள் சீர்குலைவை ஏற்படுத்திவிடும்.

அமெரிக்க அதிபராக இருந்த “ரொனால்ட் ரீகன்” தன் மகனின் திருமணத்தின் போது இவ்வாறு எழுதினார்.

எனதன்பு மைக்,

‘திருமணமா ஐயோ அது ஒரு வேதனை’ என்று கூறுபவர்களும் கிறுக்கர்களும் கூறுகிற நகைச்சுவைகளை எல்லாம் நீ முன்னரே கேள்விப்பட்டிருப்பாய். இப்போது நான் இதன் மறுபக்கத்தைப் பற்றிக் கூறுகிறேன்- இதை ஒருவேளை நீ கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். மனித வாழ்விலேயே மிகவும் அர்;தமுள்ள உறவை நீ துவங்கியிருக்கிறாய்.  அதை நீ எப்படி முடிவு செய்கிறாயோ அப்படி மாற்றிக் கொள்ளலாம்.  சில மனிதர்கள் தமது வாழ்வில் கிசுகிசுக் கதைகளில் கூறப்படும் சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவது தான் தமது ஆண்மைக்கு அழகு என்று நினைக்கிறார்கள். தன் மனைவிக்குத் தெரியாத எதுவும் அவளைப் பாதிக்கப் போவதில்லை என்று அவர்கள் தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆனால் உண்மை என்பது அதற்கும் உள்ளே அடியாழத்தில் இருக்கிறது.  தன் கணவனின் சட்டையில் வேறொரு பெண்ணின் உதட்டுச்சாயக் கறை கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும் , இராத்திரி மூன்று மணிவரை எங்கே சுற்றிக்கொண்டிருந்தீர்கள் என்று மனைவி கேள்வி எழுப்பி கையும் களவுமாகப் பிடிக்காவிட்டாலும் கூட, தன் கணவனின் கூடா உறவு பற்றி அவள் அறிந்தே இருக்கிறாள். அவள் எப்போது அறிய வருகிறாளே அப்போது இந்த அற்புத உறவு மறைந்து விடுகிறது. திருமண வாழ்க்கையை எட்டி உதைத்து கெடுத்துக் கொள்வதில் பெண்களைவிட ஆண்களே அதிகம்.

பௌதீகத்தில்  ஒரு சூத்திரம் உண்டு – ஒரு பாத்திரத்தில் எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவு தான் எடுக்க முடியும், திருமண வாழ்வில் தனக்குச் சொந்தமானவற்றில் பாதியை மட்டுமே போடுகிறவனுக்கு அந்தப் பாதி மட்டும் தான் திரும்பக் கிடைக்கும். வோறு யாரையும் பார்க்கும் போதோ, அல்லது கடந்த கலத்தை நினைக்கும் போதோ சிறந்த கணவனாக இருக்க முடியுமா என்ற கேள்விகள் உனக்குள் எழும் சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நான் உனக்குச் சொல்வது இதுதான், உன் ஆண்மையையும், கவற்சியையும், மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் ஒரேயொரு பெண்ணுக்கு நிரூபிப்பது எவ்வளவு பெரிய சவால் என்று உனக்குப் புரியும். வாழ்கையில் ஏமாற்றித் திரியும் ஒரிரு இழிமகன்களை ஒவ்வொரு மனிதனும் சந்திக்கத்தான் செய்கிறான். அவ்வாறு ஏமாற்றித் திரிவதற்கு ஆண்மை ஒன்றும் தேவையில்லை. ஒரு பெண்ணை – ஒரேயொரு பெண்ணை நேசிக்கவும் நேசிக்கப்படவும் தான் அதிக ஆண்மை தேவை.  தன் கணவனின் குறட்டை ஒலியைச் சகித்துக் கொள்கிற, முகச்சவரம் செய்து கொள்ளாத கணவனை முகம் சுழிக்காமல் ஏற்கிற, நோய்வாய்ப்பட்டபோது தாதியாக இருந்து கவனிக்கிற, அவனுடைய அழுக்கு உள்ளாடைகளை அலசிப்போடுகிற ஒரு பெண்ணை நேசிப்பது, இதைச் செய்துபார் அப்போது புரியும்.  ஓர் இதமான கதகதப்பும், உள்ளுக்குள் ஒலிக்கிற இன்னிசையும்.


உண்மயாகவே நீயொரு பெண்ணை நேசிக்கிறாய் என்றால் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். உங்கள் இருவருக்கும் அறிமுகமான ஒரு பெண்ணை அல்லது உன் காரியதரிசிப் பெண்ணை நீ வாழ்த்திப்பேசும் போது உன் மனைவி மனதில் ‘இவள் காரணமாகத்தான் கணவன் தாமதமாக வீட்டுக்கு வருகிறானோ’ என்ற சந்தேகம் துளியும் வந்திடாத படி நீ நடந்து கொள்ளவேண்டும். வேற்றுப் பெண் ஒருத்தி உன் மனைவியைச் சந்திக்க நேருகிறபோது ‘ஓகோ இவளைத்தான் நிராகரித்து விட்டாரா’என்று உன் மனைவியைப் பற்றிய ஒரு இளக்காரமான எண்ணம் அந்தப்  பெண்ணின் மனதில் வரும்படி நீ நடந்து கொள்ளக்கூடாது.  மகனே மைக், மகிழ்ச்சி அற்ற குடும்பம் என்பது என்ன என்றும், அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நீயே நன்கு அறிவாய். இப்போது அது எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறு அமைப்பதற்கான வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. தான் வீடு திரும்பும்போது தனக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதை விட மகிழ்ச்சி தரும் விடயம் எதுவுமே இருக்க முடியாது.
-அப்பா.  

பொறுப்பு என்பது ஒவ்வொரு தரப்புப்பற்றியும் எல்லோருக்கும் கட்டாயம் இருக்கவேண்டியதே இதைப் பலர் உதாசீனப்படுத்திவிட்டு மற்றவர்களிடம் சாட்டிப்பழியைப் போட்டுக்கொண்டலைகிறார்கள். சமூகப்பொறுப்பு அனைவரின் கடனே. இதை ஆரம்பிக்கவேண்டியது ஒவ்வொரு தனி மனிதனிடமுமிருந்தே.

நன்றி -  பூவரசி
...மேலும்

Oct 24, 2015

சவூதியில் தமிழகப் பெண் கை துண்டிப்பு விவகாரம்:சவூதியில் பணிபுரிந்த கஸ்தூரி முனிரத்னம் என்ற பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியப் பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி முனிரத்னத்திற்கு சரியான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டுமென ஜெயலலிதா கோரியிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கஸ்தூரி முனிரத்னம் தான் வேலைபார்க்கும் வீட்டைவிட்டு தப்பும்போதுதான் கை துண்டிக்கப்பட்டதாக சவூதி காவல்துறை சொல்வதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருப்பதாகவும் கஸ்தூரியை வேலைக்கு வைத்திருந்தவரைக் காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மேலும், கஸ்தூரி முனிரத்னத்திற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதோடு அவரைப் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டுமென்றும் ஜெயலலிதா கோரியிருக்கிறார். கஸ்தூரிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்த விவகாரத்தை சவூதி அரசின் உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கும் அவர் அடைந்த துன்பத்திற்கும் போதுமான இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டுமென்றும் ஜெயலலிதா தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி பிபிசி
...மேலும்

Oct 20, 2015

லேடி சாப்ளின்... "மனோரமா"


`‘தன் சோகம் புதைத்து... நம்மைச் சிரிக்க வைத்தார்!’’
‘ஆச்சி’ மனோரமா... ஆண்கள் சூழ் உலகான திரைத்துறையில் ஐந்து தலைமுறைகளாக நின்று வென்றாடிய ஆளுமை. அவரின் இழப்பில் மொத்த தமிழகமும் மனம் கசிந்தது. மனோரமா பற்றி அறியாத பல தகவல்களை நம்முடன் பகிர்கிறார், கவிஞர் கண்ணதாசன் கம்பெனியில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தவரும், மனோரமா தன் உடன்பிறவா அண்ணனாகக் கொண்டிருந்தவருமான வீரய்யா...

 •  1957-ம் வருஷம் திருச்சியில் மனோரமாவின் நாடகத்தில் அவருடைய நடிப்பு, வசன உச்சரிப்பை எல்லாம் பார்த்து, ‘மெட்ராஸ் வந்தா என்னைப் பாரும்மா... சினிமாவில் வாய்ப்பு தர்றேன்’ என்றார் கவிஞர் கண்ணதாசன். இடையில் மனோரமாவை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், தன் நாடகக் கம்பெனியில் நடிப்பதற்காக சென்னை அழைத்து வர, கண்ணதாசன் தன் தயாரிப்பான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பளித்தார்.
 •  ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் கதாநாயகனாக டி.ஆர்.மகாலிங்கமும், கதாநாயகிகளாக பண்டரி பாய், மைனாவதியும் நடிக்க, நகைச்சுவை வேடத்துக்கு காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக மனோரமா. ‘எனக்கு கதாநாயகி வேஷம் தான் வேணும்’ என்று சொன்ன மனோரமாவை, ‘உனக்கு நகைச்சுவை வேஷம் சரியா இருக்கும்’ என்று சம்மதிக்க வைத்தார் கண்ணதாசன். மனோரமாவின் முதல் ஸீனில், நடிப்பு வந்தால் வசனம் வரவில்லை, வசனம் வந்தால் நடிப்பு வரவில்லை. 10 டேக்குக்கு மேல் போனதும், டைரக்டர் ஜி.ஆர்.நாதன், `மனோரமா வேண்டாம்' என்றார் கவிஞரிடம்! கவிஞரின் ஏற்பாட்டில், நானும் ஓர் உதவி இயக்குநரும் மனோரமா வீட்டுக்கே சென்று பயிற்சி கொடுத்தோம். மறுநாள் ஒரே டேக்கில் அசத்தி கைதட்டல் வாங்கினார் மனோரமா. இதுவரை யாருக்கும் தெரி யாத விஷயம் இது.
 •  ‘அண்ணே, ஒருவேளை நான் கதாநாயகியா நடிச்சிருந்தா, 10 வருஷத்துல காணாம போயிருப்பேன். நான் நடிகையானதுக்கும் நீங்கதான் காரணம், அதையும் மறக்க மாட்டேண்ணே...’ என்று 1,500 படங்கள் நடித்த பின்னரும் நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். என்னையும் என் மனைவியையும், ‘அண்ணே, அண்ணி’ என்று வாய்நிறையக் கூப்பிடுவார். எனக்கே தெரியாமல் என் மனைவி பெயரில் இப்போது நாங்கள் வசிக்கும் ஃபிளாட்டை வாங்கி வைத்திருந்து, எங்களுக்கு வீடு தேவைப்பட்ட நேரத்தில் கொடுத்து உதவினார்.
 •  பக்தி அதிகம். அறுபடை வீடுகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் காலையில் குளித்ததும் சாமி கும்பிட்டுவிட்டு, அம்மா காலைத் தொட்டு வணங்கி விட்டுதான் ஷூட்டிங் கிளம்புவார். கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய நடிகையாக வளர்ந்த பின்னும், மாலையில் நாடகத்தில் நடிப்பார். அதைப் பெருமையாக நினைப்பார். ஏழ்மை நிலையில் இருக்கும் நாடகக் கலைஞர்களின் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்கு, தன் இறுதி நாள் வரை பணம் கொடுத்து உதவி வந்தார். கோபிசாந்தா என்ற தன் பெயரை, திருச்சி நாடகக் கம்பெனியில் ஆர்மோனியக் கலைஞராக இருந்த தியாகராஜர், ‘மனோரமா’ என்று மாற்றிய பின்தான் தனக்குப் பெயரும், புகழும் கிடைத்ததாகக் கூறுவார்.
 •  மன்னார்குடி நாடகக் கம்பெனியில் உடன் நடித்த ஆர்ட்டிஸ்டான ராமநாதனைக் காதலித்து, தன் அம்மாவையும் மீறி திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். மகன் பூபதி பிறந்த சில மாதங்களிலேயே மனோரமாவை விட்டுப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ராமநாதன். அன்பு, கடமை, பொறுப்பு, பாதுகாப்பு என்று எந்த வகையிலும் தனக்குக் கணவராக இல் லாத போதும்... பல ஆண்டுகளுக்குப் பின் அவர் இறந்த செய்தி வந்துசேர்ந்தபோது, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பி அவர் குடும்பத் தினரிடம் 25,000 கொடுக்கச் சொன்னார் மனோரமா. தன் அம்மா எவ்வளவு தடுத்தும் மனது கேட்காமல், ராமநாதனின் இறுதி அஞ்சலிக்குச் சென்றார்.
 •  நடிகர் சிவாஜி கணேசனும், மனோரமாவும் அண்ணன், தங்கையாகவே வாழ்ந்தது அனைவரும் அறிந்தது. தன் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்து, ஷூட்டிங்கில் சிவாஜிக்கு கைப்பட பரிமாறுவார். சிவாஜி மறைந்த பின்னரும், அவர் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே இருந்தார். அதுமட்டுமல்ல, மொத்த திரையுலகத்துக்கும் பிரியமானவர் ஆச்சி.

 •  தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், இந்தி என்று பல மொழிப் படங்களில் நடித்தவர், ‘சின்ன கவுண்டர்’, ‘சின்னத்தம்பி’ படங்களைத்தான் நடித்ததில் தனக்குப் பிடித்த படங்களாகச் சொல்வார். 
 •  பல ஆண்டுகளாக மனோரமாவுக்கு பத்ம விருதுகள் தகையாத நிலையில், 2002-ம் ஆண்டு விருதுப் பட்டியலில் மனோரமாவின் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்தியில் இருக் கும் மனோரமா என்ற நடிகை தவறுதலாக கணக் கில் கொள்ளப்பட்டு, நம் மனோரமாவை நிராகரித்து விட்டனர். அந்த சமயம் பத்ம விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த நடிகர் சோ, மனோரமாவின் புகழை சக குழுவினருக்கு எடுத்துக்கூறி, கடுமையான விவாதங்களை நடத்தி நம் மனோரமாவுக்கு பத்ம விருது கிடைக்கச் செய்தார்.
 •  அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராம ராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்தது மட்டுமல்ல, அனை வருடனும் நல்ல நட்பைக் கொண்டிருந்தார் மனோரமா. இந்திரா காந்தியை மனோரமாவுக்கு மிகவும் பிடிக்கும். அவர் இறந்த சமயத்தில், இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். 
 •  கடந்த சில மாதங் களாக தொடர்ந்து பல மூத்த கலைஞர்களும் மறைந்துகொண்டே இருக்க, வருத்தத்தில் இருந்த ஆச்சி, கே.பாலசந்தர் இறந்தபோது, ‘நம்ம ஆளுங்கள்ல கொஞ்ச பேர் மட்டும்தாண்ணே இருக்காங்க. எனக்கும் உடம்பு ரொம்ப முடியல. அடுத்து நானாகூட இருக்கலாம்’ என்று வாய்விட்டுச் சொல்லிக் கலங்கினார்.  
 •  ஆரம்பத்தில் வறுமை நிலை, சென்னை வந்த பின் அளவில்லாத புகழ், சொத்து சேர்த்தாலும் தனிப் பட்ட வாழ்வில் துயரம், இறுதிநாட்களில் மூட்டுப் பிரச்னையால் ரணம் என... மனோரமா சந்தோஷமாக இருப்பதற்கான எந்தப் பெரிய வாய்ப்பையும் இந்த வாழ்க்கை அவருக்குத் தரவில்லை. இருந்தாலும், நம் பாட்டனில் இருந்து, நம் பிள்ளைகள் வரை சிரிக்க வைத்த, தன் அழியாத காவியங்களால் இனியும் சிரிக்க வைக்கும் லேடி சாப்ளினுக்கு... அஞ்சலி!


நன்றி - விகடன்
...மேலும்

Oct 19, 2015

தமிழினி பற்றிய ஓர் பார்வை

                                                                                                                     

சிவசுப்பிரமணியம் சிவகாமி அல்லது தமிழினி - வெலிக்கடையிலுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஜூன் 26ஆம் திகதி மாற்றப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பெண் அரசியல் பிரிவு பொறுப்பாளரான இவர், ஜூன் 22ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிபதி ரஷ்மி சிங்கப்புலியின் கட்டளைப்படியே மாற்றப்பட்டார்.

பூந்தோட்டம் பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் குறிப்பிட்டகாலம் புனர்வாழ்வுக்கு உள்ளாகிய பின் தமிழினி ஒரு கட்டத்தில் விடுதலை பெறவுள்ளதையே இந்த இடமாற்றம் கட்டியம் கூறுவதாகத் தெரிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கேணல் தரத்திலிருந்த அதிசிரேஷ்ட முக்கிய பெண் உறுப்பினரான 40 வயதுள்ள தமிழினி, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விடுதலை புலிகளின் மகளிர் அணிப் பொறுப்பாளராக தமிழினி இருந்தார். இதன்படி அவர் விடுதலை புலிகளின் ஆண் அரசியல் பொறுப்பாளராகவிருந்த நடேசனுக்கு சமமாக காணப்பட்டார். மாலதி படைப்பிரிவின் தளபதியாகவிருந்த கந்தையா ஞானபூரணி அல்லது விதுஷா மற்றும் சோதியா படைப்பிரிவின் தளபதி கலைச்செல்வி பொன்னுத்துரை அல்லது துர்க்கா ஆகியோருடன் தமிழினி சேர்ந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விடுதலை புலிகளின் முக்கிய பெண் போராளிகளில் அதிமுக்கியத்துவம் பெற்ற மூவரில் ஒருவரானார். 

விதுஷா - தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் 1986 இலும் துர்க்கா 1989 இலும் இணைந்துகொண்டனர். பூந்தோட்டத்துக்கு தமிழினி மாற்றப்பட்டமை அவர் பூரண விடுதலை பெறுவதற்கான சகுனமாக கருதப்படுகிறது. அவர் பூந்தோட்டத்தில் குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பயிற்சி பெறுவார் எனவும் அதன்பின் சுதந்திர பறவைகளின் முன்னாள் உறுப்பினரான இவர், சுதந்திர பறவையாக விடுவிக்கப்படும் சாத்தியம் தெரிகின்றது. 

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களின் விடுதலை  பற்றிய சிக்கலான பிரச்சினையில் அரசாங்கம் பாராட்டும் வகையில் கடைப்பிடிக்கும் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்துவதால் தமிழினி தொடர்பான நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழீழ விடுதலை புலிகளுடன் சேர்ந்திருந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டவர்கள் இனிவரும் காலங்களில் மேலும் மேலும் விடுவிக்கப்படுவர் என்ற நம்பிக்கையின் அடையாளமாக இந்த நிகழ்வு இருக்கக்கூடும் என்பது இதற்கு முக்கியத்துவம் சேர்க்கின்றது. 

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருத்தல், முன்னாள் புலி உறுப்பினர்களை சிறையிடுதல் என்பன முக்கியம் வாய்ந்த பிரச்சினைகளாகி உள்ள நிலையில், புலி இயக்கத்தில் தமிழினியின் பாத்திரம், அவர் பிடிபட்டமை, தடுப்புக்காவல், தொடர்ந்து வந்த இடமாற்றம், எதிர்பார்க்கப்படும் அவரது விடுதலை என்பன தற்போது காணப்படும் நிலைமையை விளக்கிக் கொள்ள செய்துள்ளது. இப்போது காணப்படும் நிலைமையின் மனிதாபிமான பரிமாணத்தை தமிழினியின் நிலைமை எடுத்துக்காட்டுகின்றது. இது நல்ல முறையில் கையாளப்படுவது பிரச்சினைகளை மோதல் வழியிலன்றி ஒத்துழைப்பு வழியில் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை காட்டுவதாக உள்ளது. தமிழினியை விடுதலையின் வாசல்படி அளவுக்கு இட்டுச் சென்றுள்ள நிகழ்ச்சி தொடர்புகளை இக்கட்டுரை ஆசிரியர் தொலைதூரத்திலிருந்த போதும் அறிந்து வைத்துள்ளார். இது சொல்லப்பட வேண்டிய ஒரு கதையாகும். 

பரந்தன் 

சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி 1972, ஏப்ரல் 23இல் பரந்தனில் பிறந்தார்.  இவரது குடும்பம் யாழ்ப்பாண அடியை கொண்டிருந்த போதும் பரந்தனில் குடியேறியது. பின்னர் கிளிநொச்சி, உதயநகரிலுள்ள கனகபுரம் வீதியிலிருந்த ஒரு வீட்டில் வாழ்ந்தனர். தாய், திருமணமாகிய இரண்டு சகோதரிகள் - இவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் ஆவர். சகோதரிகளில் ஒருவர் நோர்வேயில் உள்ளார். மற்றவர் தாயாருடன் கிளிநொச்சியில் வாழ்ந்து வருகின்றார். இவரது இன்னுமொரு சகோதரி விடுதலை புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்தார். இவர் 1998 இல் பரந்தனில் நடந்த சத்ஜய-2 இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். சிவகாமி சுப்பிரமணியம் க.பொ.த. (சா.த) வரை பரந்தன் இந்து கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் க.பொ.த. (உயர்தரம்) படிப்பதற்காக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் சேர்ந்தார். புலி ஆட்சேர்ப்பாளர்கள் பாடசாலைக்கு வந்து நடத்திய பிரசாரத்தினால் கவரப்பட்ட இவர், புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார்.

 இவர் 1991 ஜூலை 27இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முறையாக இணைந்துகொண்டார். யாழ். குடாநாட்டில் கிளாலி மற்றும் நீர்வேலியிலிருந்த  புலிகளின் தளத்தில் இவர் தனது பயிற்சியை பெற்றுக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை இலக்கம் 1736 ஆகும். சிவகாமி தனது இயக்கப் பெயரை தமிழினி என வைத்துக்கொண்டார். இவர் குடாநாட்டின் வலிகாமம் பிரதேசத்தில் பல இடங்களில் கடமையிலிருந்துள்ளார். 

பின்னர் இவர் கிளிநொச்சி, கிளாலி பகுதிகளுக்கு மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் தமிழினி - தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளில் தொழிற்பட்டார். அப்போது அவர் பல சிறு தாக்குதல்களில் பங்குபற்றினார். செப்டெம்பர் 1993இல் ஆனையிறவிலிருந்து முன்னேறிய இராணுவம் கிளாலியை பிடிக்க முயன்ற “யாழ்தேவி“  நடவடிக்கைதான் அவரது முதலாவது பெரிய யுத்த அனுபவமாகியது. பூநகரி, நாகதேவன்துறை முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நவம்பர் 1993 இல் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையிலும் இவர் பங்குபற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூநகரி இராணுவத்திடமிருந்து ரி – 55 யுத்த டாங்கி ஓன்றை கைப்பற்றியது. அப்போது கைப்பற்றப்பட்ட தளபாடங்களை கடத்திக்கொண்டு செல்லும் அணியில் தமிழினி கடமையிலிருந்தார். கைப்பற்றப்பட்ட ரி- 55 டாங்கியை விரைந்து கடத்துவதற்கான பாதையொன்றை காட்டுப் பிரதேசத்திற்கு ஊடாக அவர்கள் அமைக்க வேண்டியிருந்தது. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் தமிழினியுடன் பேசிய பின் தமிழினியால் கவரப்பட்டு தமிழினியை அரசியல் பிரிவுக்குள் உள்வாங்கினர். தமிழினி பெண்களால் நடத்தப்பட்ட ஒரு தும்புத் தொழிற்சாலை மற்றும் விவசாயப் பண்ணை என்பவற்றுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் சஞ்சிகையான சுதந்திர பறவைகளின் ஆசிரியர் பீடத்தின் அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டார். அடேல் பாலசிங்கத்தின் செல்வாக்கினுள் வந்த தமிழினி ஒரு பெண்ணியவாதியானார். 

இராணுவத்தால் 1995 -96 இல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட றிவிரெச நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக வன்னிக்கு இடம்பெயர்ந்தது. தமிழினி தொடர்ந்தும் அரசியல் பிரிவில் வேலை செய்தார். ஆயினும் 1997 - 1998 இல் இராணுவம் வன்னியை கைப்பற்ற ஜெயசிக்குரு நடவடிக்கையை தொடக்கிய பின், தமிழினி யுத்த அலகுகளில் சேரவேண்டியிருந்தது. அவர் மாங்குளம் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது அவர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இவர்களுக்கு சமைத்த உணவு பெற முடியாமல் போனபோது, பல நாட்களாக காட்டுப் பழங்களை சாப்பிட்டு உயிர்வாழ வேண்டியிருந்தது. பாலசிங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரின் மனதில் தமிழினி இடம்பிடித்துக்கொண்டார். இதனால் இவரால் விரைவாக தனது பதவி நிலையை உயர்த்திக்கொள்ள முடிந்தது. காலகதியில் இவர் ஜூன் 2000இல் பெண்கள் பிரிவு அரசியல் தலைவராகினார். இராணுவம் ஆணையிறவை மீண்டும் கைப்பற்றுவதற்காக 2001இல் அக்னி சுவாலை இராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது தமிழினி தாக்குதலில் ஈடுபட வேண்டியிருந்தது. 

கிளிநொச்சி

ஒஸ்லோ அனுசரணையுடன் பெப்ரவரி 2002 இல் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டபோது தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஒரு நிரந்தர அரசியல் செயலகத்தை அமைத்துக்கொண்டனர். தமிழினி தீவிர பெண்ணியவாதியாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பினுள் சமத்துவத்துக்காக போராடி சில வெற்றிகளை பெற்றுக்கொண்டார். முன்பு பெண்கள் அரசியல் பிரிவு பிரதான அரசியல் பிரிவின் ஒரு பகுதியாகவே இருந்தது. தமிழினி - பெண்கள் அரசியல் பிரிவின் சுயாதீனத்தை போராடிப் பெற்றுக்கொண்டார். அத்துடன், இவர் அந்தஸ்தின் அடையாளங்களான டபிள்கெப் தொடரணி வாகனங்கள், மெய்ப் பாதுகாவலர்கள் என்பவற்றையும் பெற்றுக்கொண்டார்.

 யுத்த நிறுத்த காலம் தமிழினி பல வகையிலும் தனது பார்வையை விசாலித்துக்கொள்ள உதவியது. அவர் பெண்கள் உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பில் நடந்த கருத்தரங்குகளில் பங்குபெறுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் அணிக்கு தலைமை தாங்கிச் சென்றார். அவர் 2003 மற்றும் 2005இல் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுக்களிலும் உறுப்பினராக இருந்தார். 

ஐரோப்பாவிலிருந்தபோது தமிழினி பல புலம்பெயர்ந்தோர் குழுக்களுடன் தொடர்புகொண்டிருந்தார். அவர் பல கூட்டங்களில் பேசினார். அவரது பேச்சு சபையோரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில்தான் தமிழினிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்குமிடையில் காதலுணர்வு மலர்ந்தது. இவரை இனி நான் 'கே' என குறிப்பிடுவேன். பிரபாகரன் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை சோடியாக்கி திருமணம் செய்துவைத்தபோது தமிழினி திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.  அவர்களிடையே பரஸ்பர கவர்ச்சியும் குறைந்தபட்சம் சிறிது காதலும் காணப்பட்டது. கேயும் வன்னிக்கும் வந்துவிட்டார். அவர் கிளிநொச்சியில் சில காலம் வாழ்ந்தார். இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் வெடித்தது. அது கடுமையாயிற்று. மெதுவாக நிதானமாக இராணுவம் முன்னேறியது. தமிழீழ விடுதலை புலிகள் பின்வாங்கினர். 

இறுதியாக முல்லைத்தீவில் கடலை அண்டிய முள்ளிவாய்க்கால் எனும் ஒடுங்கிய நிலப்பரப்பில் புலிகள் அடைக்கப்பட்டனர். புலிகளின் வட பிரதேச தளபதியான தீபன் கொல்லப்பட்ட 2009 ஏப்ரல் 4 – 5இல் நடந்த ஆனந்தபுரம் சண்டையின் போது யுத்தத்தின் முடிவு எப்படி அமையும் என்பது தெளிவாயிற்று. பெண் தளபதியான விதுஷாவும் துர்க்காவும் இந்த போரில்தான் கொல்லப்பட்டனர். தமிழினியும் இந்த யுத்தத்தில் பங்கேற்றார். போரில் இறந்ததாக கருதப்பட்ட இவர் உயிரோடு இருப்பது பின்னர் தெரியவந்தது. தனது நெருங்கிய தோழியர்களான விதுஷா, துர்க்கா ஆகியோரின் மரணத்தினால் தமிழினி நொடிந்து போனார். தோல்வி நிச்சயம் என்பதனை அவர் கண்டுகொண்ட போதிலும் இயக்கத்தின் மீதான விசுவாசம் காரணமாக முற்றுகையிடப்பட்டிருந்த புதுமாத்தளனில் தங்கியிருந்தார். 

வவுனியா

 2009 மே நடுப்பகுதியில் யுத்தம் முடிவை நெருங்கிவிட்டபோது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று சரணடைய விரும்பியவர்களை போகவிட வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு ஏற்பட்டது. தமிழினையும் அவரது சகோதரியையும் கூட மே 15 இவ்வாறே செய்தனர். தமிழினி அவரது ஆயுதம், சீருடை, அடையாள அட்டை மற்றும் சயனைட் குப்பி ஆகியவற்றை எறிந்து விட்டு தனது குடும்பத்தினருடன், பெருந்திரளாக அரசாங்க பகுதிக்கு சென்றுகொண்டிருந்த மக்களுடன் கலந்துகொண்டனர். அவர்கள் புலிகள் அல்லாத பொதுமக்கள் என ஏற்கப்பட்டு 2009 மே 20இல் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் இவர்கள் நலன்புரி முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால், மிகவும் பிரபலமான தமிழினி, முகாமிலிருந்தவர்களினால் விரைவில் இனங்காணப்பட்டார். அதிகாரிகளுக்கு ரகசிய தகவலும் வழங்கப்பட்டது.

 தமிழினி 2009 மே 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸ் புலனாய்வு பிரிவினராலும் தேசிய மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினராலும் விசாரிக்கப்பட்டார். இவர் பின்னர் 2009 ஜூன் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் பிரதான நீதவான் நிசாந்த ஹப்புவாராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளுடன் இருந்த போது இவரது நடவடிக்கைகள் பற்றி ஆரம்பக்கட்ட அறிக்கையொன்றை அதிகாரிகள் சமர்ப்பித்தனர். 

இவரை மேலும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்ட போது 2009 ஜூலை 17ஆம் திகதி மீண்டும் நீதிமன்றம் கொண்டு வரும்படி பிரதான நீதவான் கட்டளை பிறப்பித்தார். இதனால் மேலும் இரண்டு வார அவகாசம் கொடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் அரசியல் பொறுப்பாளருக்கு நியாயமான பாதுகாப்பை உறுதி செய்வதில் நீதிமன்றத்தினால் பாராட்டும் வகையில் காட்டப்பட்ட ஈடுபாடும் அக்கறையும் தமிழினியின் அனுபவத்தில் முக்கிய அம்சமாகும். 

தமிழினி நன்கு நடத்தப்படுகின்றாரா, தடுத்து வைப்பதற்கான தேவை உண்மையில் காணப்படுகின்றதா என்பவற்றை நீதிமன்றம் நிச்சயப்படுத்துவதில் உறுதியாக இருந்தது. கொழும்பு பிரதான முன்னாள் நீதவான் ஹப்புவாராச்சி அவசர கால சட்டத்தின் கீழ் தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி 2009 ஓகஸ்ட் 5ஆம் திகதி நேரில் குற்றப்புலனாய்வு பிரிவின் தலைமையகத்திற்கு சென்று நிலைமையை அவதானித்த பின்னரே தடுத்துவைக்க மேலும் காலம் வழங்கினார். இவரும் தற்போதைய கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலியும் அதிகாரிகளுக்கு விசாரணையை முடிப்பதற்கு குறுகிய காலமே வழங்கினார்கள். இவ்வாறு செய்தமையினாலேயே நீண்ட காலமாக பொலிஸ் தடுப்பில் வைத்திருக்கும் போக்கை கட்டுப்படுத்தினர். 

விசாரணைகள் முடிந்து தமிழினியின் கோவை சட்டமா அதிபரின் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் அவர் பாதுகாப்பு தடுப்பில் வைக்கப்பட்டார். முன்னைய பல வழக்குகள் போல தமிழினியின் வழக்கும் கிடப்பிலிடப்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் குறுகிய தவணைகளை தொடர்ந்து வழங்கியது. அவர் ஒரு டசினுக்கு மேற்பட்ட தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்து இழுத்தடித்தது. இதற்கு பாதுகாப்பு நிறுவனத்திற்கு திடமான நோக்கம் இல்லாது இருந்தமையே காரணமாகும். 

புலன் விசாரணைகள் 

தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றிய விசாரணைகளை மேற்பார்வை செய்ய வந்த பாதுகாப்பு அமைச்சு, இவர்கள் தொடர்பில் இரண்டு கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது. ஒவ்வொரு வழக்கும் அதன் இயல்புகளுக்கு ஏற்ப தனியாக ஆராயப்பட்டது. இவை இதனடிப்படையில் வன்மை, மென்மை என வகைப்படுத்தப்பட்டன. தமது வன்முறை தொடர்பில் மன வருத்தம் இல்லாதோர், கரும்புலி தற்கொலை சத்திய பிரமாணம் எடுத்தோர், கொடூரமான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டோர் ஆகியோர் வன்மை என கருதப்பட்டனர். 

நேரடியாக போரில் மட்டும் பங்குபற்றியோர் மென்மை என கருதப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களில் 1235 பேர் வன்மை என வகைப்படுத்தப்பட்டனர். இவர்கள் பூஸா உட்பட மூன்று வெவ்வேறு தடுப்பு நிலையங்களில் வைக்கப்பட்டனர். 11,989 பேர் மென்மை என வகைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு மையங்கள் 18இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு தொகுதி தொகுதியாக வெவ்வேறு கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர். மென்மை வகையினர் மேலும் மேலும் விடுவிக்கப்படும் போது நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன. புனர்வாழ்வு அமைச்சின் தகவல்படி, மருதமடு, வெலிகந்தை, கண்டல்காடு, பூந்தோட்டம் ஆகிய இடங்களில் நான்கு பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தற்போது 635 பேர் உள்ளனர். தமிழினியின் விசேடமான வழக்கு - பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நூதனமான சங்கடத்தை தோற்றுவித்தது. 

தமிழினி தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இருக்கவில்லை. கொழும்பில் அல்லது தென் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எந்த தாக்குதலிலும் அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அத்துடன், தமிழினி - தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு அரசியல் பொறுப்பாளர் என பிரபலமாக இருந்தவர். அவர், தடுப்பிலுள்ள முன்னாள் பெண் புலிகளுள் அதியுயர் தரத்தினராக உள்ள போதிலும் இராணுவ போராளி என்பதைவிட கூடுதலாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்றே அறியப்பட்டவர். 

இந்த பின்னணியில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமிழினியை இலக்கு வைத்து தண்டிக்க வேண்டிய தேவை அல்லது நிர்ப்பந்தம் இருக்கவில்லை. அவர், உயர்தர சிரேஷ்ட தரத்தினராயினும் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரிகளில் சிலரே அவரை நீதிமன்றில் குற்றஞ்சாட்டி நீண்டகால மறியல் தண்டனை விதிக்கப்படுவதை விரும்பினர். பயங்கரமான பொதுமக்கள் படுகொலை, சிரேஷ்ட அரசியல் தலைவர் படுகொலை அல்லது ஏராளமாக இறப்புகளுக்கு காரணமாக வெடிபொருட்கள் பயன்படுத்திய தாக்குதல் என்பவற்றில் தமிழினி பங்குபெற்றிருந்தால் நிலைமை வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால், இந்தவகையில் அவரது கைகள் சுத்தமானதாக இருந்தன. இதனால் இவரை நீதிமன்றில் நிறுத்தி குற்றவாளியாக நிறுவுவதில் பேரார்வம் காணப்படவில்லை. இருப்பினும் இவரை தடுப்பிலிருந்து விடுவிப்பதிலும் ஒரு தடையுள்ளது. 

இங்கு தமிழினியின் கடந்த காலம் பிரச்சினையில்லை. ஆனால், அவரது எதிர்கால போக்கு எப்படியமையும் என்பதே பிரச்சினை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளில் உயர்தரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார். இவர் தனது விடுதலையின் பின் என்ன செய்யக்கூடும்?  அரசுக்கு எதிரான பிரசாரத்தில் புலி ஆதரவு தமிழ் புலம்பெயர்ந்தோரினால் அல்லது புலிகளினால் இவர் பயன்படுத்தப்படுவாரா?  இவர் வெளிநாட்டுக்கு சென்றால் அங்கு உள்நோக்கம் கொண்டவர்களால் அவர் பிரசாரக் கருவியாக பயன்படுத்தப்படுவாரா? இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளில் உள்ள கடும் போக்காளர்கள் இவரை தம்முடன் சேர்த்துக்கொண்டு மோதல் அரசியலை வளர்க்க முற்படுவார்களா? 

அதிகாரிகள் 

மறுபுறத்தில் தமிழினியை காலவரையறையின்றி தடுப்பில் வைத்திருக்க முடியாது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் பூரணமாக உணர்த்தியிருந்தனர். ஏற்கனவே, நீதிமன்றில் தமிழினி தொடர்ந்து பலமுறை ஆஜர் செய்யப்பட்டமை அரசாங்கம் குறித்து பாதகமாக கருத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. தமிழினி மீது வழக்கு தாக்கல் செய்து நீண்ட கால சிறைத்தண்டனை பெற்றுக்கொடுப்பதும் பொருத்தமானதாக இருக்கவில்லை. ஏனெனில் அரசியல் பிரிவு பொறுப்பாளருக்கு கடும் தண்டனை வழங்குவது அரசாங்கம் பற்றி மோசமான கருத்தை உருவாக்கும். 

அத்துடன், தமிழினி தனது கடந்தகால தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக பேசிய முறையும் அவரது பரிதவிப்பும் அவர் பற்றிய பெரும் அனுதாபத்தை தோற்றுவித்திருந்தது. இவர் தண்டிக்கப்பட வேண்டுமென விரும்பியோர் ஒரு சிலரே காணப்பட்டனர். தமிழினி பற்றி அதிகாரிகள் பெரும் கவலையோடிருந்தனர். 'என்னை நம்புங்கள், அவரை நீண்ட காலம் தடுத்து வைக்கும் எண்ணமோ விருப்பமோ எமக்கு இல்லை. நாம் தமிழினியை விடுவிக்க விரும்புகிறோம். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கவுள்ளது என்பதே எமது கவலையாக உள்ளது. இவர் தனது விடுதலையின் பின் பாதகமான நடவடிக்கையில் ஈடுபடமாட்டார் என நாம் எப்படி நிச்சயப்படுத்த முடியும்?' என ஒரு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

 இது தமிழினியின் பாதுகாப்பு நிறுவனம் எதிர்கொண்ட பிரச்சினையாக இருந்தது. இருப்பினும் இந்த பிரச்சினை இயந்திரத்தால் வரும் கடவுள் (Deus ex machina) என்ற முறையில் தீர்க்கப்பட்டது. இதில், தீர்க்க முடியாததுபோல தோன்றும் ஒரு பிரச்சினைக்கு திடீரென தீர்வு கிடைக்கும். இது எதிர்பாராத ஒரு நிகழ்வு, பாத்திரம் அல்லது பொருளின் உதவியால் சாத்தியமாவதாக இருக்கும். புராதன கிரேக்க நாடகங்களில் மேடையில் கடவுளாக நடிப்போர் ஒரு பாரந்தூக்கியால் மேடையிலிருந்து உயர்த்தப்படுவர். அல்லது ஆகாயத்திலிருந்து இடையில் இறக்கப்படுவர். இதுவே, இயந்திரத்தினால் வரும் கடவுள் என்ற சொற்றொடரின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. தமிழினியின் நவீன சோக நாடகத்தில் இயந்திரத்தால் வரும் கடவுள் யாராக அல்லது எதுவாக இருக்கப் போகின்றது? 

(30.06.2012 ஆம் திகதி வெளியான டெய்லி மிரர் பத்திரிகைக்காக டி.பி.எஸ்.ஜெயராஜ்  எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது) 

 தமிழில்:  ந. கிருஷ்ணராசா 

நன்றி - தமிழ்மிரர்
...மேலும்

Oct 18, 2015

" அவள்-ஆடை-ரத்தம் " என்கிற கட்டுரையின் சுருக்கிய பதிவு ...


...
மச்சான் ... அந்த பொண்ணு பாருடா ஏதோ குனிஞ்சு படுத்துட்டே இருக்கு வயித்த புடிச்சுட்டு !!!
ஏ ஆமா டா வயிறு வலியா இருக்கும் போலருக்கு டா !!!
ஆமா டா வா போய் கேப்போம் !!!
சுலேகா என்ன ஆச்சு ??
ஏய் உங்க வேலைய பாத்துட்டு போங்க டா !!! (பக்கத்திலிருந்த தோழிகளிடமிருந்து)
ஏய் என்னபா .. என்ன ஆச்சுனு தானே கேட்டோம் .... சரி வாடா நம்ம போலாம் ..
வகுப்பு முடிந்தது ...
அனைத்து மாணவர்களும் வகுப்பரை விட்டு சென்றுவிட்டனர் ...
சுலேகா மற்றும் அவள் இரண்டு தோழிகளும் வகுப்பரையில் இருந்தனர் !!!
.. டேய் மச்சான் இது என்னா னு பாத்தே ஆகனும் ( ஒளிந்திருந்து எட்டி பார்க்கின்றனர் )
ஒரு தோழி முன்னே செல்ல ...
ஏய் யாரும் இல்ல டி ... சீக்ரம் வாங்க ..
சுலேகாவுக்கு பின்னே மற்றொரு தோழி சென்றால் ..அவள் பின்னுடலை மறைத்துக்கொண்டே ..
டேய் மச்சான் ... யாரோ என்னமோ பன்னிட்டாங்க டா அவள ...
ட்ரஸெல்லாம் ரத்தமா இருக்கு டா !!!
டேய் பெண்ச் ல கூட ரத்தம் டா .... வா ஓடிடலாம் ..... நாம எதயும் பாக்கல ...
சுலேகாவுக்கு வயிற்று வலி ... மற்றும் அவள் உடலிலிருந்து ரத்தம் வெளியேறியது ....
இந்த காட்சிகளை வைத்து நான் சிலவற்றையும் .... இதன் பின் வேறொரு காட்சியில் சிலவற்றையும் விளக்க முனைகிறேன் !!!
அப்போது தான் நான் வீட்டுக்கு போனேன் ...
அய்யோ அம்மா என்கிற புலம்பல் சத்தம் ... அம்மாவின் குரல் ...
பயந்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தால் ... தரை எல்லாம் ரத்தம் !!!
பயந்து போய் ... என்ன ஆச்சு என பதட்டத்துடன் கேட்க !!!
ஒன்னும் இல்ல .. என்ன தொடாத ... நீ ரூம விட்டு வெளிய போ ... என குரல்
ரூமை விட்டு வெளியே வந்துவிட்டு ... பக்கத்து வீட்டு ஆண்டியை அழைத்து வருகிறேன்... அம்மாவுக்கு ஏதோ ஆயிட்சு சீக்ரம் வாங்களேன் ப்லீஸ் !!!!
அவர் உள்ளே போய் 10 நொடிகளில் வெளியே வந்தார் !!!
பின்பு .. 20 நிமிடம் கழித்து அம்மா கதவை திரக்க தரை சுத்தமாக இருந்தது
...என்ன ஆச்சு மா ...
ஒன்னும் ஆகல நீ உன் வேலைய பாரு ... இது உனக்கு தேவையில்லாத விசயம் ... என குரல்
பொதுவாக " மாதவிடாய் " (அ) மாச மாச ரத்த போக்கு .... என்பதை பற்றி யாருமே சரியாக , முழுமையாக படிப்பது இல்லை !!!
அதை பற்றியது கல்வியில் இருந்தாலும் .... மதம் , கலாச்சாரம் என்று மனித உடலின் அறிவியல் பற்றி கூட அறிய தடை இட்டுவிடுகிறது சமூகம் !!!
மாதவிடாய் ... என்பது ஏதோ பெண்களுக்கு இருக்கும் பெரும் பாரம் எனவும் !!!
இது இருப்பதால் பெண்கள் பலமற்றவர்கள் .. எனவும் ஒரு கண்ணோட்டம் எல்லோரிடமும் காணப்படுகிறது !!!
அதே போல் ... மாதவிடாய் ரத்தம் பற்றிய தவறான புரிதல் தான் 95 % மக்கள் புரிந்து வைத்துள்ளனர் என்கிறது கருத்துகனிப்புகள் !!!
மாதவிடாய் ரத்தம் பற்றிய தவறான புரிதல்... பெண்களிடமும் பரவலாக காணப்படுகிறது !!!
ஆம் .... மாதவிடாய் காலத்தில் வெளிவரும் ரத்தம் என்பது .... தூய்மையற்றது எனவும் .. நோய்களை உண்டாக்கும் எனவும் கருதப்படுகிறது !!!
ரத்தம் ... பெண்ணின் வேகினா வழியில் வெளிவருவதால் .. இந்த ரத்தம் மிக அசுத்தமானது என்கிற மனகனக்கும் உள்ளது !!
ஆனால் .... உண்மை முற்றிலும் புறம்பானது !!!
மாதவிடாயின் போது வெளிவரும் ரத்தம் என்பது ... மனித உடலை கிழித்தால் வருகிற ரத்தம் எந்த அளவு தூய்மையானதோ ... அதே அளவு தூய்மையானதே ஆகும் !!!
இது பெரும்பாலான மக்களுக்கு தெரியவே தெரியாது !!!
தெரிவிக்கவும் அறிவியலுக்கு பூட்டு போட மதவாதிகளும் , பழமைவாதிகளும் உறுதுணையாய் உள்ளனர் ..
முதலில் மாதவிடாயின் போது வெளிவரும் ரத்தம் .... எதனால் வருகிறது என்பது பற்றிய அடிப்படை கல்வி இருந்தாலே இது புரிந்துவிடும் !!!
பெண் என்பவள் ஒரு பருவம் அடையும்போது ... அவளின் உடல் மாதம் மாதம் ... வேறொரு உயிரை உருவாக்கும் செயலில் தன்னிச்சையாக செயல்படுகிறது !!!
அதற்கான ரத்தத்தை பெண்ணுடல் யூடிரஸில் சேமிக்கிறது ...
இந்த ரத்தம் ... உருவாகும் உயிருக்கு முக்கிய காரணமாக உள்ளது !!!
இது ஒவ்வொரு மாதமும் நடக்கிறது ...
அப்போது .. ஆணின் விந்தனு கிடைக்கப்பெற்றால் ... இந்த ரத்த்தினாலான முட்டையில் .... ஒரு விந்தனுவும் ஒரு வோவமும் இனைந்து .... கரு ஒன்று உருவாகும் !!!
அப்படி விந்தனு கிடைக்காத பட்சத்தில் இந்த முட்டை தன்னிச்சையாக உடைந்து . ... பெண்ணின் வேகினா வழியாக வெளியேறுகிறது !!!
இது தான் மாத மாதம் பெண்களுக்கு நடக்கிறது !!!
ஒருவேளை கரு உருவானால் .. இந்த ரத்தம் தான் அக்குழந்தைக்கு கவசமாய் செயல்படுகிறது !!!
அவ்வளவு ஆரோக்கியமான ரத்தத்தை நாம் என்னவோ அசுத்தமானது என்றே இதுவரையிலும் கருதி வருகிறோம் !!!
மாதவிடாய் மீதுள்ள மூடத்தனமும் ... அந்த ரத்தத்தின் மேலுள்ள அறுவெறுப்பும் எவ்வளவு தொழில்நுட்ப யுகத்தை மனிதர்கள் அடைந்த போதிலும் ... அப்படியே உள்ளது !!!
அங்கு பள்ளியில் ... மாதவிடாய் பற்றிய புரிதலை இக்கல்வியும் அளிக்கவில்லை .... அதை பற்றிய அறிவை பெற்றோர்களும் அளிக்கவில்லை !!!
மேலும் மாதவிடாய் என்பது ஏதோ அறுவெறுப்பான விசயம் ... அந்த ரத்தம் அசிங்கம் .. என்கிற பார்வை எல்லோரிடத்திலும் இருப்பது வருத்தமே !!!
முறையான கல்வியும் ... சரியான விளக்கமும் குழந்தைகளுக்கு தராமல் இருப்பது .... இந்த வழக்கத்தை .... இன்னும் 100 நூற்றாண்டுகளுக்கும் கொண்டு செல்லும் !!!
மேலும் மாதவிடாய் என்பது பலவீனமானது ... அது வரும்போது பெண்கள் அனைவரும் பலம் இழப்பார்கள் என்கிற புரட்டும் இன்றும் நிலுவையில் தான் உள்ளது !!!
எல்லா பெண்களுக்குமே ... மாதவிடாயின் போது வலி ஏற்படுவதில்லை !!!
ஊட்டச்சத்து குறைவுள்ளவர்களுக்கு மட்டுமே வயிறு வலி ஏற்படுகிறது !!!
மாதவிடாய் காலத்தில் துப்பாக்கி ஏந்தி போராடிய விடுதலை புலிகளும் உண்டு ... ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதல் பரிசு வென்றவர்களும் உண்டு !!!
மாதவிடாய் மீதுள்ள அறுவெறுப்பு தன்மையை போக்க ... முதலில் மாதவிடாய் ரத்தம் பற்றிய அறிவையும் ... அப்போது பெண்கள் பலமற்றவர்கள் ஆகிறார்களா ... என்கிற அறிவையும் நாம் பார்க்க வேண்டும் !!!
மாதவிடாய் ... என்பது தனக்கு பலகுறைவானதல்ல ...
மாதவிடாய் ரத்தம் ... கேவளமானதல்ல ..... எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ...
மாதவிடாய் ரத்தம் ஒரு பொருட்டே அல்ல என சொல்லவும் ...
2015 ஆகஸ்ட் லண்டன் மேரத்தானில் ...
நேப்கின்னே அணியாமல் கிரன் காந்தி என்கிற பெண் ... தடைகளை உடைத்து ஓடினார் !!!
பல ஆண்டுகளுக்கு முன் ப்ரான்ஸ் நாட்டில் ... பெண்கள் 8 பேர் தங்கள் கால் சட்டையில் சிகப்பு சாயம் பூசிக்கொண்டு ரோட்டில் நடந்தனர் .... என் ரத்தம் உங்களை ஒன்றுமே செய்ய போவதில்லை என கூற ..
சென்ற ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கால்சட்டைகளில் சிகப்பு பெயின்ட் ஊற்றிக்கொண்டும் ... நாப்கின்களை கல்லூரி வளாகத்தில் தொங்க விட்டும் போராட்டம் செய்தனர் .... என் ரத்தம் வியர்வை போன்றது .. என கூற !!!
ஒரு பெண் நடந்து சென்றுக்கொண்டிருக்கிறார் ... அவருக்கு திடிரென ரத்த போக்கு ஏற்படுகிறது .... அதை இச்சமூகம் அவளை அறுவெறுப்பானவளாக பார்த்து ... தீட்டாக்குகிறது !!!
அதுவே ... ஒரு ஆணுக்கு அடிபட்டு ரத்தம் வழிந்து கரையோடு உள்ளதென்றால் ... அவனை இச்சமூகம் அறுவெறுப்பானவனாக பார்க்குமா என்ன ??
பெண் என்பவளின் உடல் மேல் புகுத்தப்பட்டுள்ள ஆணாதிக்க கற்பிதங்களில் இதுவும் ஒன்று ....
அவளின் ரத்தம் அறுவெறுப்பானதாகவும் .. ஆபாசமாகவும் ... செய்யப்பட்டிருப்பதிலிருக்கும் முரணை பகுத்தறிவோம் !!!


நன்றி - தமிழ்வாணனின் முகநூல் பதிவு வழியாக
...மேலும்

Oct 14, 2015

நாமும் விருதைத் திரும்ப அளிக்கலாமா?நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டதையும், தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாகச் சொல்லி ஒருவரைக் கொன்றதையும் கண்டிக்கும் விதமாய் எழுத்தாளர் நயன்தாரா சேகல் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப அளிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் பிரதமர் மற்றும் மத்திய அரசின் மீதான தன் கண்டனங்களைத் தெரிவிக்க விரும்புகிறார். ஏற்கெனவே இதுபோல் நடந்துள்ளது. சார்த்தர் தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை மறுத்தார்.

நோபல் பரிசு என்பது அரசியல்ரீதியாக முடிவு செய்யப்படுகிற ஒன்று. அமெரிக்காவின் சரவதேச உறவுநிலைகள்தான் ஒவ்வொரு வருடமும் யாருக்கு அது வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆனால், சாகித்ய அகாடமி விருது அப்படி அல்ல. அரசு நேரடியாக அவ்விருதின் தேர்வில் தலையிடுவதில்லை. தமிழை எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி… இப்போதும் சரி, இடதுசாரிகளின் செல்வாக்குதான் சாகித்ய அகாடமியில் வலுவாக உள்ளது. அதற்காக இடதுசாரிப் படைப்பாளிகள்தான் தேர்வாகிறார்கள் என்றில்லை. நாஞ்சில் நாடன் நல்ல உதாரணம். அதனால், சாகித்ய அகாடமி விருதை ஒருவர் அரசின் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் வண்ணம் திருப்பி அளிப்பது அபத்தமான, பொருத்தமற்ற செயல்.

ஆனால், இதற்கு ஒரு குறியீட்டுத்தனமான முக்கியத்து வம் உள்ளதுதான். ஒரு எழுத்தாளர் தேசிய விருதைத் திரும்ப அளிக்கும்போது அவர் பேசும் பிரச்சினை ஊடகங்களில் சட்டென கவனம் பெறுகிறது. சேகலைத் தொடர்ந்து பிற எழுத்தாளர்களும் தம் விருதுகளைத் திரும்பக் கொடுக்கலாமா?

சேகலுக்கும் பிற மாநில, வட்டார எழுத்தாளர்களுக்கும் வர்க்க ரீதியான முக்கிய வேறுபாடு உண்டு. சேகல் ஒரு எலைட்டிஸ்ட். ஆங்கிலத்தில் நாவல் எழுதுபவர். அவர் நேருவின் மகளின் மகள். பெரும் பணக்காரர். ஆனால், மாநில மொழி எழுத்தாளர்கள் பலரின் நிலை பரிதாபமானது. நான் இவ்வருடம் ஷில்லாங்கில் யுவபுரஸ்கார் விருது வாங்குவதற்குச் சென்றிருந்தபோது, பிற மாநில எழுத்தாளர்களைச் சந்தித்தேன். எல்லாரும் மத்திய வர்க்கம். எழுதி எந்தக் கவனமும் கிடைக்காதவர்கள். சாகித்ய அகாடமி தரும் சிறு வெளிச்சமும் பணமும் அவர்களுக்கு முக்கியம். விருது சரி, பணத்தையும் திரும்பக் கொடுப்பதென்றால் அவர்கள் எங்கு போவார்கள்?

அந்த நிகழ்வில் ஒரே ஒரு எழுத்தாளர் மட்டும்தான் பங்கு பெறவில்லை. அவர் ஆங்கில நாவலுக்காகப் பரிசு பெற்ற கௌஷிக் பாரு. அவர் வெளிநாட்டில் ஏதோ வேலையாக இருந்ததால் தன் அம்மாவை அனுப்பியிருந்தார். பொதுவாக, ஆங்கில இந்திய எழுத்தாளர்களுக்கு இது போன்ற விருதுகளெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், மாநில மொழி எழுத்தாளர்கள் அந்த அளவுக்கு வசதி இல்லாதவர்கள்.

ஐந்து பக்கெட் தண்ணீர்
துணிச்சலாகச் செயல்பட ஒன்று உங்களிடம் ஒன்றுமே இருக்கக் கூடாது. அல்லது நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும். ஆங்கில இந்திய எழுத்தாளர்களைப் போலன்றி நம் மாநில மொழி எழுத்தாளர்கள் மத்திய வர்க்கத்தினர். அவர்களின் முதல் கவலையே இன்று ஐந்து பக்கெட் தண்ணீர் கிடைக்குமா என்பதாகத்தான் இருக்கும். அவர்களால் செய்ய முடிவதென்ன? அவர்கள் சமூக அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து எழுதலாம், மீடியாவில் பேசலாம், நேரடியான போராட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

நயன்தாரா சேகலின் தர்க்கத்தின்படியே யோசித்தால் இந்த அரசாங்கம் நமக்கு வழங்கும் மின்சாரம், தண்ணீர், பொதுப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதி எனப் பல விஷயங்களை நாம் கைவிட வேண்டிவரும். அரசுச் சாலை களில் நடக்கக் கூடாது. அரசு மானியங்களை வாங்கக் கூடாது என்று இதை நீட்டித்துக்கொண்டே போகலாம்.

சேகலின் முடிவின் முக்கியமான தர்க்கப் பிழை, அவர் நரேந்திர மோடியையும் அரசு எந்திரத்தையும் ஒன்றென நினைத்துக் குழப்பிக்கொள்வதுதான். மோடியை எதிர்த்துப் போராட அவர் டெல்லியின் தெருக்களில் நடக்கும் இடதுசாரிப் போராட்டங்களில் கலந்துகொள்ளலாம். எழுதலாம். கூட்டங்களில் பேசலாம். இது போன்ற போராட்டங்களை நடத்தும் குழுக்களுக்குத் தன் சொத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுக்கலாம். சுதந்திரப் போராட்டத்தின்போது பெரும் முதலாளிகள் தம் சொத்துக்களை காந்திக்கு அளித்திருக்கிறார்கள்.

இன்னொரு சந்தேகம். அமெரிக்க ஏகாதிபத் தியத்தை எதிர்க்கிற ஒருவர் கோக் குடிக்கலாமா? அமெரிக்க பிராண்ட் சட்டைகள், ஜீன்ஸ் அணியலாமா? ஹாலிவுட் படங்கள் பார்க்கலாமா? ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள் அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடலாமா?

 ஆர். அபிலாஷ், யுவபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர்.நன்றி - தி இந்து


...மேலும்

Oct 12, 2015

பாலியல் ரீதியாக சாதகமாக நடப்பவர்களுக்கே வீடு கட்ட நிதி என்கிறார்கள்: குமுறும் பெண்கள்!


கொழும்பு: பாலியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக நடப்பவர்களுக்கே வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர் என்று தமிழ் பெண்கள் புகார் தெரிவித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர் தம்பு சேதுபதி கூறி உள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தர இந்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி 3 ஆண்டுகளில் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. இது தவிர, இத்திட்டத்தின் கீழ், போரினால் சேதமடைந்த தங்களது வீடுகளை பயனாளிகள் பழுது பார்த்துக்கொள்ளவும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீடுகளை பழுது பார்க்க நிதி ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. 'பாலியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கே வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்' என்று  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர் தம்பு சேதுபதி  கூறியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும் அதில், கடந்த 2 மாதங்களாக இதுபோன்ற புகார்கள் பெண்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்னையின் தன்மை கருதி கொழும்பில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்துக்கு புகார்களை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றும் தம்பு சேதுபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

குறிப்பாக, போரினால் இடம் பெயர்ந்த மூலன்கவில் என்னும் இடத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளிநொச்சி கிளையில் அளித்த புகாரில், தான் பாலியல் ரீதியாக அதிகாரிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டால்தான் வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி செய்யப்படும் என்று கூறியதாக, குற்றம் சாட்டி உள்ளார் தம்பு சேதுபதி.

இந்த குற்றச்சாட்டு குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை இந்திய தூதரக அதிகாரிகள் கொழும்பில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற எந்த செயலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி - விகடன்
...மேலும்

பெண், கல்வி, கடவுள், கோயில், மனோரமா........"நாங்க ஊருல இருந்த எல்லாக்கோயிலையும் பள்ளிக்கூடமா மாத்திட்டோம்"

பொது வெளி என்பதே ஆண் வெளி யாகவும் அதை வெகு இயல்பான ஒன்றாக கட்டிக்காத்துக் கொண்டு, ஜம்பமடித்துக் கொள்ளும் இந்து ஜாதிய சமூகத்தில் பெண்ணாக பிறந்து, மக்கள் முன்பு வீதிக்கொட்டகைகளிலும், இயக்கப் பிரச்சார நாடகங்களிலும் நடிக்க துவங்கி ஆண்மைக் கொடிக் கட்டிப் பறக்கும் திரையுலகில் ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக காலூன்றி கதாநாயகன, காமெடியன் போன்ற ஆண்களுக்கு இணையாக தன் ஆளுமையை நிறுவியவர் மனோரமா அம்மா. அவரை ஒரு முறை' தினமணி' மார்ச் மகளிர் மலருக்கு பேட்டியெடுத்தார்கள்.

இறுதிக் கேள்வியாய் ... "நீங்கள் வாங்கிய விருதுகளில் உங்களது மனதிற்குப் பிடித்த சிறந்த விருது எது?"

மனோரமா: "சிதம்பரத்திற்கு பக்கத்திலுள்ள 'பூந்தோட்டம்' என்கிற கிராமத்திற்கு ஒரு முறை ஷூட்டிங்கிற்காக போய்த்தங்கியிருந்தோம். காலையில் எழுந்துக் குளித்து முழுகி வழக்கம் போல், பக்கத்திலிருக்கும் ஏதாவதொருக் கோயிலுக்கு சென்று சாமிக் கும்பிடலாமென்று, இரண்டு மூன்று மணி நேரமாய் ஊரச்சுத்தி சுத்தி வ்ர்றோம் நானும் எங்களது குழுவினரும். ஊர்ல ஒருக் கோயிலைக் காணல...

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறப் பழமொழிக் கொண்ட தமிழ்நாட்டுல என்னக் கும்பிட ஒருக் கோயில் இல்லாத இந்த ஊரு என்ன ஊரு.. என அலுப்பும் ஆச்சிரியத்தோடும் அந்த ஊரின் தலைவரை அணுகி விசாரித்தோம்.

"அம்மா நீங்க எதிர்பார்க்கிறா மாதிரிதான் எங்க ஊரும் இருந்தது. ஆனா இப்ப இல்ல. நாப்பது வருசத்துக்கு முன்னாடி, அப்ப ஈவெரா பெரியார் ஒரு முறை எங்கக் கிராமத்துக்கு வந்தாரு. ஒங்க கிராமத்துல இத்தன கோயிலிருக்குதே எத்தனப் பள்ளிக்கூடமிருக்கு எவ்வளவு தற்குறியாவும் கைநாட்டுப்பசங்களாவும் திரியிரிங்க, பொம்பளை்ங்களை புள்ளைப் பெக்குற மிஷினாட்டம் வச்சிக்கினுக்கீறிங்க, அவளை படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் படிக்கவச்சி காப்பாத்திக்குவான்னு அன்னைக்கி அவரு பேசின பேச்சில நாங்க ஊருல இருந்த எல்லாக்கோயிலையும் பள்ளிக்கூடாமா மாத்திட்டோம். அதுமட்டுமில்ல இன்னைக்கு வீட்டுக்கு ஒரு பிள்ளையை டீச்சருக்கு படிக்க வைக்கிறோம். அதுவும் பொம்பளைப் புள்ளைங்கள" என அந்தப் பெரியவர் சொல்ல அசந்துப் போனேன். அப்படிப் பட்ட மாமனிதர் 'பெரியார் விருதை' பெரியார் திடலில் பெற்றதை பெரும் பேறாக கருதுகிறேன்"

நன்றி

கறுப்பு நீலகண்டன் (முகப்புத்தகத்திலிருந்து)
...மேலும்

Oct 9, 2015

பண்டிட்குயின் : சாதிய வன்முறையின் எதிர் அழகியல் - யமுனா ராஜேந்திரன்

பூலான்தேவியின் வார்த்தைகளுக்குப் பின் கட்டமைப்படாத சிந்தனைகளையும் சார்புத்தன்மை பெற்றிராத சொற்களையும் மீறி அவள் சொல்லத் தவறிய, சொல்ல வேண்டி உணர்ந்த, அனுபவித்த விவயங்களைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன். பூலான்தேவி கதையைச் சொல்லும் போக்கில் இந்திய சமூகத்துக்கும் இந்தியாவின் கிராமப்புறங்களில் சித்திரவதைப்படும் பெண்களுக்கும் ஒரு செய்தி சொல்ல விரும்பினேன். சாதிய மேலாதிக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கெதிராக போராட வேண்டிய செய்தியைச் சொல்லியிருக்கிறேன். எந்தப் படைப்பும் அது நிலைகொண்டிருக்கும் காலத்தையும் பிரச்சினையின் உக்கிரத்தையும் சொல்லாது விட்டால் அதில் அர்த்தம் ஏதும் இல்லை.
சேகர் கபூர்

பன்டிட் குயின் திரைப்படம் உண்மை மற்றும் புனைவுக்கும் அதன் அடிப்படையில் சினிமா புனைவுக்கும் இடையிலான பிரச்சினையைத் தூண்டிருக்கும் படம். இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அடிப்படையான நிஜமான பிரச்சினைகள் சினிமாவில் முன்வைக்கப்படும்போது அது எதிர்கொள்ளும் அரசியல் தணிக்கைப் பிரச்சினைகள் பற்றிய விவாதத்தைத் தொடக்கியிருக்கும் படம். முதலில் இதை முழுக்க ஒரு சினிமாக் கதையாக கருதிக் கொள்வோம். நிஜப்பெயர்களை மறந்துவிடுவோம். கதை உத்தரப் பிரதேசத்தின் சம்பல்நதிப் பள்ளத்தாக்கின் கிராமங்களுக்கிடையில் நிகழ்கிறது. மேல்சாதி தாக்கர்கள், தலித்சாதி மல்லாக்கள், போலீஸ், பால்ய விவாகம், தலித்சாதி பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை போன்றவற்றைப் படம் சொல்லுகிறது.

இந்தியாவில் இன்றும் நிலவும் நடைமுறைதான் என்ன? பெண்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டதற்காக முகத்திலும் உடலிலும் பச்சை குத்தப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது வரலாறு. தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 44 தலித் பெண்களும் குழந்தைகளும் கூலி உயர்வு கேட்டதற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறு. பத்மினி போன்ற பெண்கள் பலாத்காரப் படுத்தப்படுவதும் போலீஸ் நிலையத்தில் அவர்கள் பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும் மிகமிகச் சமீபத்திய காலத்தில்தான். ஜீவனாம்சம் மறுக்கப்பட்ட ஷபானு உடன்கட்டையேற நிர்ப்பந்திக்கப்பட்டு உயிரோடு கொழுத்தப்பட்ட ரூப்கன்வர் இந்திரா காந்தி இறந்தபோது சூறையாடப்பட்ட சீக்கிய பெண்களின் உடல்கள் பம்பாய் கலவரத்தில் அயோத்தி கலவரத்தில் பலாத்காரப்படுத்தப்பட்ட முஸ்லீம் பெண்களின் வேதனை எல்லாமுமே சமகால இந்திய வரலாறுதான். பூலான்தேவி படம் கதை நிகழ்கின்ற காலத்திலும் பாத்திரங்களிலும் மட்டும் தங்கியிராது பிரச்சினைகளின் வேர்களுக்குப் பின்நோக்கிப் போகின்றது. அவர்களின் அன்றாட வாழ்வுப் பழக்கவழக்கங்களுக்குள் அவர்கள் உரையாடும் சொற்றொடர்களுக்குள் அவர்களின் நிறுவன அமைப்புகளுக்குள் நிலவும் பாலியல் சாதிய வன்முறையை தோலுரிக்கிறது.

பஞ்சாயத்து கூடியிருக்கிறது. பூலானைப் பலாத்காரப்படுத்திய மேல்சாதி தலைவன் மகன் சொல்கிறான்: ‘பூலான்தேவி என்னைக் கூப்பிட்டாள். அவளுக்கு அரிக்கிறது என்று சொன்னாள்’ என்கிறான். பூலான் ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகிறாள். போலீசுக்கு பூலானைக் காட்டிக்கொடுக்கும் ஸ்ரீராம் மெக்காபோனில் போலீஸ்படை புடைசூழ பேசுகிறான். ‘பூலான் : எங்கே போயிருந்தாலும் வந்துவிடு. என் ‘தடி’ மீது வந்து உட்கார்’. பஞ்சாயத்து, போலீஸ், மேல்சாதி தாக்கர்கள் என இவர்கள் அனைவரும் தமது அமைப்பு மூலமும் சொற்கள் மூலமும் செய்ய விளைவது ஒன்றேதான : பாலியல் வன்முறை.

படத்தில் உடல் சார்ந்த பாலியல் வன்முறை பல்வேறு சந்தர்ப்பங்களில் காட்சி ரூபமாகிறது. பதினொரு வயது சிறுமி பூலான் அவளது 34 வயது கணவனால் பலாத்காரப்படுத்தப்படுகிறாள். திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலர்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். பெமாய் கிராமத்துக்கு மேல்சாதி கொள்ளையர்களால் இழுத்துவரப்பட்டு முழுக் கொள்ளைக்கூட்ட ஆண்களாலும் பலாத்காரப்படுத்தப்படுகிறாள். மேல்சாதிக்காரர்களின் கையாள்களான கொள்ளையர்களால் கடத்தப்பட்டு மலைப்புழுதியில் சூரியன் எரிக்க பலாத்காரப்படுத்தப்படுகிறாள்.

இந்தக் காட்சிகளில் ஒன்றில்கூட ரசனை நோக்கம் இல்லை. சின்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் கேஸ்சேம்பருக்குப் போகிற பெண்களின் நிர்வாணம் எழுப்பும் வேதனையும் கோபமுமே இந்தக் காட்சிகளிலும் எழுகிறது. அருகாமைக் காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. பாலுறவு அநுபவம் காட்டப்படவில்லை. ஆண் உடல்களின் வன்முறைதான் காட்டப்பட்டிருக்கிறது. மொழிசார்ந்த வன்முறையும் சரி உடல் சார்ந்த வன்முறையும் சரி இந்த இரண்டு விதமான பாலியல் வன்முறைகளும் பூலான் எனும் தலித் பெண்ணின் மீது மேல்சாதி ஆதிக்கம் எனும் ஜாதிய வன்முறையின் வழியேதான் நிகழ்கிறது. இங்கே வன்முறை என்பது ஒரு பெண்ணாக அவளது ஆன்மாவை ஆன்மீக பலத்தை முற்றிலும் உடைத்து நொறுக்கும் ஆதிக்கமாக நிகழ்கிறது. இவற்றை எதிர்த்துப் பேசிய ஒரு பெண், செயல்பட்ட ஒரு பெண்ணின் கோபமான எதிர்ப்புணர்வு வாழ்வு, நியாயம் சார்ந்த வன்முறை சினிமாவாகியிருக்கிறது. 11 வயதில் தன்னைப் பலாத்காரப்படுத்திய கணவனை இரத்தம் சொட்டச் சொட்ட அடித்து நிம்மதி கொள்கிறான். தன் உடலை, ஆன்மாவை சிதறடித்த முழுக்கிராமமும் பார்க்க, அக்கிராமத்து ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். உறைந்த இரத்த வெள்ளத்தில் நடுவே அழுகையை நிறுத்திய அமைதியான நிர்வாணக் குழந்தையொன்று நடந்து போகிறது.

பூலான்தேவியென்றால் ‘பூக்களின் கடவுள்’ என்று பொருள். சம்பல் நதிக் கிராமத்து மக்கள் அவளை வெறி கொண்ட காளிமாதாவாகவே பார்த்தார்கள். பெமாய் கிராமத்தில் அவளது முழு ஆடைகளையும் களைந்து விட்டு கூந்தலைப் பிடித்து உலுக்கிச் சித்தரவதை செய்யும்போது தாக்கர் ஸ்ரீராம் சொல்வான்: ‘ பூலான் தேவியாம் இவள். கீழ்சாதி மக்களின் கடவுளாம் இவள. கீழ்சாதி மக்களின் கடவுளுக்கு இதுதான் கதி‘.

படம் தொடங்கும் மனுஸ்மிருதியிலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்படுகிறது. ‘பெண்களும் கீழ்ஜாதி மக்களும் மிருகங்களும் அடிக்கப்படுவதற்குப் பிறந்தவர்கள்’. படத்தின் இறுதியில் 11 வயது சிறுமி பூலான்தேவி காமராவை நேராகப் பார்த்து (நம்மைப் பார்த்து) சொல்வாள்: ‘நான் பூலான்தேவி, சகோதரியுடன் கலவி செய்பவர்களே – நான்தான் அவள்’

சினிமாவின் இலக்கணத்துள் சினிமா மொழியின் ஆளுமைக்குள் அசலான தீவிரமான படம் பூலான் தேவி. நஸ்ரத் படே அலிகானின் இசை பூலான்தேவியின் கோபத்தையும் ஆவேசத்தையும் உக்கிரத்துடன் மறுபடைப்புச் செய்திருக்கிறது. பூலான் பலாத்காரப்படுத்தப்படும் இடங்களில் வானம் பூமி அதிர்ந்துவிட ஓங்கி ஒலிக்கும் அந்த தீனக்குரல் அந்த வேதனைக்கதறல் நெஞ்சத்தைப் பிளந்துவிடுகிறது. அசோக் மேத்தாவின் காமரா நதியின் சலசலப்பை சம்பல் பள்ளத்தாக்கின் வெம்மையை ஓரிடத்தும் நின்று நிலைக்காது ரசனை காட்டாது பூலானின் கோபமே போன்று வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஜீவனுள்ள ஒளிப்பதிவு.

பூலான்தேவியின் உண்மை வாழ்வுக்கும் சினிமாக்கதைக்கும் உள்ள முரண்பாடு தொடர்பாக எழும் பிரச்னை இதுதான் : ‘நான் விக்ரமோடு அவனின் மேலிருந்து கலவிச் செய்வதான காட்சியொன்று வருகிறது. ஆது மாதிரி நான் நடந்துகொள்ளவில்லை. 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பெமாய் கிராமத்தில் நான் இருக்கவில்லை. பெமாய் கிராமத்தில் நான் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுபடியும் நான் பார்க்கவோ பார்வையாளர்கள் பார்ப்பதையோ நான் விரும்பவில்லை’.

இந்தியப் பெண்ணுக்கு இது அகௌரவமானது. பலாத்காரப்படத்தப்பட்டு விடுவதென்பது இந்தியக் கலாச்சாரத்தில் அப்பெண்ணின் முழு வாழ்வுக்குமான அவச்செயலாக நிகழ்ந்துவிடுகிறது. சமூகம் அவளை மிகக் கேவலமாகவும் நடக்கிறது. பூலான் இப்போது கௌரவமான குடும்பத்துப் பெண். வியாபாரியின் மேல் சாதிக்காரரின் மனைவி, அரசியல் கட்சியைத் துவக்கிவிட்டவர.

சேகர் கபூர், பரூத் தோண்டி, மாலா சென் போன்றவர்களால் வைக்கப்படும் விவாதம் இதுதான் : ‘இப்படத்துக்கான கதைக்கு பூலானிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான தொகையும் வழங்கப்பட்டது. நாங்கள் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவில்லை அந்த வாழ்க்கைக்குப் பின்னிருக்கிற சமூக வரலாற்றை சினிமா இலக்கணத்துக்குள் சினிமா பிரதிக்குள் சொல்லியிருக்கிறோம். பெமாயில் பூலான் இருந்ததற்கான காட்சிகள் உண்டு. அக்காட்சியில் பூலான் எவரையும் கொலை செய்ததாக நாங்கள் காட்டவில்லை. இருவரை முழங்கால்களில் சுடுவதாகத்தான் காட்டியிருக்கிறோம். மேலும் சினிமாவின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமென்பது அபத்தம்’ ‘உண்மைக் கதையின் அடிப்படையிலான படம்’ என்கிற விளம்பரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார் கபூர். காலம் கடந்துவிட்டது.

முதலாவதாக, பூலானின் கலாச்சாரம் சார்ந்த குடும்பப் பெண் அறவியல் பிரச்சினை. இரண்டாவதாக, தனது வழக்கு சம்பந்தமான சட்டப் பிரச்சினை. விடுதலையை நோக்கமாகக் கொண்ட பெண்ணுக்கு பூலான் எழுப்பும் அறவியல் பிரச்சினை அத்தனை முக்கியமானதல்ல என்றே தோன்றும். சீமா பிஸ்வாஸ் பூலானாகவே மாறி பலாத்காரப்படுத்தப்பட்டிருக்கிறார். நிர்வாணமாக கிராமச் சதுக்கத்தில் நடந்திருக்கிறார். இந்திய கலாச்சார அளவு கோல்களின் படி நடிகைகள் எல்லாருமே ஒழுக்கங் கெட்டவர்கள். கொஞ்சம் உடல் தெரிந்தாலும் அவச்செயல் செய்தவர்கள். சனாதனியான காந்தி கூட பலாத்காரப்படுத்தலை எதிர்த்து வாழ்வது அவச்செயல் அல்ல என்றார். ஏனெனில் அவர்கள் விடுதலையை விழைபவர்கள். போராடுபவர்கள். பூலான்தேவியின் பிரச்சினை அவரது அரசியல் நோக்கங்கள் வியாபாரியான மேல்சாதிக் கணவன் குடும்பப் பெண் வடிவம் ஆகியன சார்ந்தது. இந்த அறவியல் பிரச்னை கோடானுகோடி இந்நியப் பெண்கள் தொடர்பான இப்படத்தை வெளியிட முடியாது செய்வது உண்மையில் இந்திய மக்களின் துரதிருஷ்டமே. மேலாக பணம் தான் அடிப்படைப் பிரச்சமை என்பதை அவரது மேல்சாதிக் கணவர் நிரூபிக்கிறார்.

சட்டப்பிரச்சினை சம்பந்தமாகச் சொல்லப்படும் வாதமும் அபத்தமானதே. பூலான்தேவி மீது சுமத்தப்பட்டிருக்கும் 48 குற்றங்கள் இன்னமும் விசாரணையில் இருக்கின்றன. அவைபற்றியோ பெமாய் பற்றியோ இப்படம் எதுவும் இறுதியாகச் சொல்லவில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய விளக்கங்களுக்குள்ளும் இப்படம் போகவில்லை. இப்பிரச்சினைக்குப் பின்னுள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியலையும் பாரதீய ஜனதா கட்சியின் அரசியலையும் தான் இப்போது கேள்விக்குள்ளாக்குகிறார்கள் சேகர் கபூரும் பரூக் தோண்டி போன்றவர்களும்.

தணிக்கைக் குழு, அரசியல்வாதிகள், இந்திய மக்களின் நிஜமான வாழ்வுபற்றிய சினிமா தொடர்பான பிரச்சினை அடுத்தது. இப்படத்தில் இடம்பெறும் மூன்று காட்சிகள்தான் இந்தியத் தணிக்கைக் குழுவின் பிரச்சினை: பெமாயில் 22 பேர் கொல்லப்படும் காட்சி. போலீஸ் நிலையத்திலும் பின்னர் பெமாய் கிராமத்திலும் பூலான் பலாத்காரப்படுத்தப்படும் காட்சிகள். பூலானும் விக்ரமும் தொடர்பான கலவிக் காட்சி. இந்திய, தெலுங்கு, தமிழ் மசாலா சினிமாக்களை எடுத்துக்கொண்டால் ஐம்பது பேரை ஒருவன் கண்மண் தெரியால் சுட்டுக் கொல்வான். தலைவேறு முண்டம் வேறு கை வேறு கால் வேறாக வெட்டிக் கொல்வார்கள். அண்மித்த காட்சிகளில் ஆடைகளை ஒவ்வொன்றாக கிழித்துக் கற்பழிப்பார்கள். ரசனையோடு ஒவ்வோர் உள்ளாடையாகக் கழற்றி பல்வேறு தினுசுகளில் சத்தம் போட்டுக் கொண்டு உறவு கொள்வார்கள். போலீஸ் நிலையத்தில் வில்லன் பெண் போலிஸ் அதிகாரியைப் பலாத்காரம் செய்வான். காமசாஸ்திரா நிலைகளை நாயகனும் நாயகியும் ஆடை அணிந்தபடியிருந்தே நிகழ்த்திக் காட்டுவார்கள். இதையெல்லாம் தணிக்கைக் குழு பெரிதாகக் கண்டுகொள்ளாது. இந்த உரிமைகளுக்காக நடிக நடிகையர் ஊர்வலமும் போவார்கள்.

பூலான்தேவி படத்தில் வருகிற இக்காட்சிகளில் ஒன்றில்கூட அண்மித்த காட்சி இல்லை. பெண்ணின் மார்பு நாபி அடிவயிறு மழையில் நனைந்த பின்புறம் மார்புகளின் இடைவெளி (இவையெல்லாம் இப்போது இந்தியப் படங்களில் இருக்கும் சமாச்சாரம்) போன்றவற்றைப் பற்றிய காட்சி ரூபம் இல்லை. பெமாய் பலாத்காரக் காட்சி இருட்டில் அதன் வேதனையுடனும் குரூரத்துடனும் சொல்லப்பட்டிருக்கிறது. குஜ்ஜார் பலாத்காரப்படுத்தும் காட்சியும் பெமாய் கிராமத்தில் பூலான் நிர்வாணமாக அவமானப்படுத்தப்படும் காட்சியும் மேலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. கிளர்ச்சியூட்டும் படியான உடல் வெளிப்பாடுகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

பெமாயில் 22 பேர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி கூட கூடார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாடகமாக ஆக்கிவிடக்கூடாதென ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கிறார்கள் இயக்குனர் சேகர் கபூரும் ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தாவும். அக்காட்சியில் பூலான் வெறிகொண்டு கோபத்துடன் இயங்கும் காட்சி மங்கலாக்கப்பட்டு அதை ஒரு ரசனைமிக்க காட்சியாவதிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான மந்திரத் தன்மையைக் காட்ட விரும்பியதாக குறிப்பிடுகிறார் சேகர். அக்காட்சியில் செயல்படும் ஒரே நபர் ஆக்ரோஷத்துடன் இயங்கும் பூலான்தேவிதான். அதுதவிர அக்காட்சி மங்கலாக்கப்பட்டுவிடுகிறது.

மேலிருந்து பூலான் கலவிகொள்ளும் காட்சி இரண்டு மனங்களின் குதூகலத்தை ஒன்றிணைவை வலியுறுத்தும் வண்ணம் நிகழ்கிறது. அக்காட்சியின் குதூகலமும் உடல் சுதந்திரமும் பூலான் பலாத்காரப்பபடுத்தப்படும் வேதனையான காட்சிகளுடன் ஒப்புநோக்கத்தக்கது. பிரச்சனை இதுதான்: இந்திய வாழ்வுக்கு பெண்ணுக்கு ஆர்கசம் என்று ஒன்று இருப்பதையே தெரிந்துகொள்வது கூடாது. மேலிருந்து பெண் கலவி செய்வது ஒழுக்கப் பிரச்சினை. அவளது பாலியல் கிளர்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவது ஒழுக்கப் பிரச்சினை. தி. ஜானகிராமனின் ‘மரப்பசு’ வின் அம்மணி தனது இறுதி நினைவுகளில் ‘பெண் மேலே இருக்கும்’ உலகம் வேண்டும் என நினைப்பார்கள். இந்தியத் தணிக்கைக்குக் குழுவுக்கு அதை இப்போது சத்தம் போட்டுச் சொல்லவேண்டும் போலிருக்கிறது.

இப்படத்தில் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் சிலவும் உண்டு. பூலான் தேவி தலைமையேற்றுக் கொண்ட பின்னர் பஜ்ரம்பூரில் கொள்ளையொன்று நடத்தப்படுகிறது. அறிவிப்பு இது: ‘பெண்களும் குழந்தைகளும் பயப்படவேண்டாம். அவர்கள் வீடுகளுக்குள் சென்றுவிடுங்கள். ஏழைகளும் பயப்படத் தேவையில்லை’. நகைக்கடைகள், பட்டுத்துணிக் கடைகள் சூறையாடப் படுகின்றன. போலீஸ் வாகனங்கள் சீறி வருகின்றன. கொள்ளையர்கள் தப்பிக்க ஓடுகிறார்கள். ஒருவன் சுடப்பட்டு இறக்கிறான். பூலான் அமைதியாக நடந்து வருகிறாள். முகத்தில் பெருமிதம். ‘நான்தான் பூலான் தேவி. வாங்கடா, புடிங்கடா நான்தான் பூலான் தேவி’ ஒரு குழந்தை பரட்டைத் தலையுடன் ஓடிவருகிறது. பெண் குழந்தை. பூலான் கொள்ளையடித்த கால் சலங்கையை அக்குழந்தைக்கு அவளின் திருமணப் பரிசாக கொடுக்கிறாள் பூலான். தாய் வந்து குழந்தையை அழைத்துக்கொள்ள காலடி ஓசைகள் கேட்கிறது.

மற்றொரு காட்சி: போலீஸ் நிலையத்தில் நடைபெறும் ஓர் உரையாடல். உரையாடலில் இடம் பெறுபவர்களும் பார்வையாளர்களும் கவனம் கொள்ளாத ஒரு சம்பவம் அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அமானுஷ்யமான பெண்ணின் தீனக்குரலும் கதறலும் கேட்கத் கேட்க அவள் போலீசாரால் அடிக்கப்பட்டு கொண்டிருக்கிறாள். காரணம் தெரியவில்லை. அவள் கோடானுகோடி இந்தியப் பெண்களில் ஒருத்தி. அவள் குரல்தான் அது. பிற இந்திய மசாலா படங்கள் பாலியல் வன்முறையை ரசனை நோக்கில் காட்டும் படங்கள் குறிப்பான வரலாற்றுச் சம்பவங்களையோ குறிப்பிட்ட பிரச்சனைகளையோ குறிப்பிட்ட சாதிகளையோ பற்றி கேள்விக்கு உள்ளாக்காத படங்கள். ஆனால், பூலான்தேவி படம் 1970-80 களில் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் நிகழ்ந்து வந்த மேல்சாதி பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த தலித் பெண்ணொருத்தியின் சமூக வரலாற்றுச் சித்திரம். புனைவுகள் பகைமூட்டம் போன்றவை. அது கண்களையும் சிந்தனையும் மறைக்கும். நிஜத்தை அடிப்படையாகக் கொண்ட குறிப்பான சித்தரிப்புகள் ஆதிக்க வர்க்கங்களை கேள்வி கேட்கும். ஆட்டம் காணவைக்கும். அரசியலைச் சவாலுக்கு அழைக்கும். இதுதான் பூலான்தேவி படம் தணிக்கைக் குழுவின் முன்வைத்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடி.

காலனித்துவ எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்புச் சினிமாவைத் தோற்றுவித்த இலத்தீனமெரிக்க இயக்குனர் கிளாபர் ரோச்சா சொல்வார்: ‘காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அழகியல் வன்முறையின் அழகியல், பசியின் அழகியல்.” மேல்சாதி ஆதிக்கத்தின் பாலியல், சாதி வன்முறை அழகியல்தான் இப்போது நிலவும் அழகியல். இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் அழகியல் அதுதான். தணிக்கைக் குழுவின் அழகியலும் அதுவேதான். அதற்கு எதிரான எதிர் வன்முறை அழகியல்தான் பூலான்தேவி சினிமா முன்வைக்கும் அழகியல். இது பசியினதும் வன்முறையினதும் போராட்டத்தினதும் அழகியல். இதனை உலகெங்குமுள்ள நல்ல விமர்சகர்களும் இடதுசாரிகளும்,பெண்ணிலைவாதிகளும் உணர்ந்திருக்கிறார்கள். இப்படம் பற்றிய பிரச்சனைகளை சிந்திக்கையில் ஏற்படும் முழுமையான ஒரே ஆறுதல் இதுதான்..

...மேலும்

Oct 8, 2015

பெண்விடுதலையும் மானுட விடுதலையின் ஓர் அம்சமே!பெண்விடுதலையை வெண்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மட்டும்போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இது ஒரு சமூகக் குறைபாடே. இதற்குப் பாத்திரமானவர்களும், பாதிப்படைவர்களும் பெண்கள் மாத்திரமல்ல. எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச்சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும், பல துறைசார்ந்தவர்களும், நிறுவனங்களும் அடங்கும். ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் என பல தரப்பட்டவர்களின் பங்களிப்பும் அவசியம்.
வாசற்கதவு திறந்திருக்கிறது ஆனால் இங்கே யாருமே வருகிறார்களில்லை. பெண்விடுதலையை மீட்டெடுக்க! இதுதான் இன்றைய பெண்ணிய செயற்பாட்டு நிலை என்றால் அது தவறான கூற்றாகாது. பெண்ணுரிமை அமைப்புக்கள் புற்றீசல்போல் உருவான அளவுக்கு அவற்றின் செயற்பாடுகள் துரிதமாக எடுத்துச் செல்ல முடியாமைக்குப் பரவலான முயலாமையை முதற்காரணமாகக் கூறமுடியும். அடுத்த அம்சமாக இத்தேக்கத்திற்கான காரணம் ஆண்கள் உள்வாங்காத அல்லது முழுமையாக ஈர்க்கப் படாமையும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியமையையும் குறிப்பிடலாம்.
பெண்ணுரிமை இயக்கங்களின் மலர்தலுக்குப் பின் பெண்கள் வாழ்நிலையிலும் சில மலர்வுகள் ஏற்பட்டுத்தானுள்ளன. கல்வி, வேலைவாய்பு, வாழ்க்கைத்தரம் என்பவற்றின் உயர்வோடு, புதிய தலை முறை பெண்களிடையே பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளமை சாதகமான பலாபலன்கள். ஆனால் தொலை நோக்குடன் பெண்விடுதலை நடவடிக்கைகளைத் திட்டமிடாமல் போனதால் சில எதிர்வினைகளும் ஏற்பட்டிருக்கின்றன. பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தமும், நஞ்சும் தோன்றினபோல் பெண்டுணுரிமை இயக்கங்களின் செயற்பாடுகளினாலும் நன்மை, தீமை இரண்டுமே ஏற்பட்டுள்ளன என்பார்.
உலகமயமாதலில் எல்லாமே மேற்கத்தைய நாடுகளிலிருந்து இறக்குமதியாவது போல் பெண்ணியச் சிந்தனைகளும் அச்சொட்டாக எதுவித மாற்றமுமின்றி இங்கும் இறக்குமதியாகி செயலுருவம் பெற முயன்றமையே இப்பின்னடைவுக்கும், தேக்க நிலைக்கும் காரணமென சிலர் கூறுவர். இதை மறுத்து நிற்கும் வேறு சிலர் இது வெறும் ஆணாதிக்கக் கூற்று என்று வாதிடுகின்றனர்.
இன்று உலகில் மிகப்பரவலாக பெண்ணுரிமை வாதமும், அதன் சட்டதிட்டங்களும் விவாதிக்கப்படுகின்றன. பால்நிலைச் சமத்துவம் பற்றிய கருத்தாடல்கள் பரவலாகி வருகின்றமை ஆரோக்கியமான சூழ்நிலை தான். ஏனெனில் பல்நிலைச் சமத்துவம் என்பதை ஏற்றுக்கொள்ளல் என்பது இன்னமும் இறுக்கமாகவே நிற்கின்றது. பெண்கள் வாழ்வில் நிதர்சனமாகவுள்ள அடிமைத்தனமும், சமத்துவமின்மையும் ஆண்களால் மட்டுமன்றி இன்னமும் கூட பல பெண்களாலும் புரிந்து கொள்ளப்படாமை வேதனைக்குரியது. பெண்களின் வாழ்வைப் பின்தள்ளுகின்ற கசப்பான உண்மைகள், அவற்றில் உள்ளிருக்கும் அவலமான துன்பங்கள் மட்டுமன்றி, பெண்ணின் மதிக்கப் படவேண்டிய மகோன்னதங்கள், பெறுமதிகள் என்பவற்றையுமே உணர விடாதபடி மரபு, பண்பாடு, வழமை, சடங்கு சம்பிரதாயங்கள், மதம்சார்ந்த அழுத்தங்கள் திரையிட்டு மூடிநிற்கின்றன.
பொதுவாக இருந்து வருகின்ற தற்போதைய பெண்களின் நிலைமையை மாற்றியமமைக்க விரும்பாமலும், புதிய வீச்சான பார்வைகளை, மதிப்பீடுகளை, செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கி நிற்கின்றபோக்கும் பரவலாக அவதானிக்கப்படுகின்றது. பாமரர்கள் மத்தியில் மாத்திரமன்றி படித்தமேலோர் வட்டத்திலும் கூட பெண்விடுதலை பற்றி சுமூகமாக ஆராய முடியாத நிலை இருக்கின்றது. பெண்ணியச் சிந்தனைகள் பற்றிய கருத்தியல் ரீதியிலான புரிதலுக்கும், தெளிவடைதலுக்கும் தயார் இல்லாத மந்தத் தனமும், ஆர்வமின்மையும் மாத்திரமன்றி இன்னும் சிலர் மத்தியில் வெறுப்பும், பரிகசிப்பும் கூட அவதானிக்கப்படுகிறது. இத்தனைக்கும் மத்தியில் எதரிர்நீச்சல் போட்டுத் தான் பெண்களின் திறமை, ஆற்றல், வெளிப்பாடு, ஆளுமை விருத்தி, பால் சமத்துவம் மற்றும் சுதந்திரம் முதலானவை வெளிப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான சிரமமான விளைவுகளுக்கான காரணி எதிரும் புதிருமாக ஆணாதிக்கவாதிகளிடமும், பெண்ணிநிலை வாதிகளிடமும் இருக்கின்றன. ஆண்வர்க்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து, பெண்வர்க்கம் தமது விடுதலைக்குக் குரல் கொடுக்கின்றது. நியாயத்திற்காகக் குரல் கொடுக்கின்ற பெண்கள் தமது நிலையைச் சமூகத்தில் மேம்படுத்துவதை விடுத்து ஆணினத்துடன் மோதிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இல்லறத்தில் ஒருமித்து ஒத்த கருத்தை எட்ட வேண்டியவர்கள். இரு துருவமாக நின்றால் எதுவும் சீராடையப்போவதில்லை. பதிலாக மோதல்களும், பூசல்களும் வலுத்து எதிரான அம்சங்கள்தான் வலுவடையும். இதுவே இன்றைய நிதர்சனம்.
ஒரு குடும்பத்தில் ஆண், பெண் இருவருக்குமிடையே புரிதலும், பகிர்தலும் இருந்துவிட்டால் சுதந்திரத்தின் பாதைகள் தானாகவே திறக்கும். இதை ஏற்றுக்கொண்டு குடும்பத்திலும், சமூகத்திலும் இருபாலரும் தமக்குரிய பொறுப்புக்களை உதறித் தள்ளாமல் அதேசமயம் சுயமாக இருக்கும் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணின் கல்வியும், பொருளாதார நிலைமையும் மேம்படுதல் முதலில் அவசியமானது. பெண்ணுக்குரிய சொத்துடமையும், அங்கீகாரம் பெறவேண்டியது முக்கியம். சீதனம் என்கிற அரக்கனின் அசூரத் தனமும் களையப்பட வேண்டும். இவ்விடயங்களில் பெண்களுக்கு எதிரான செயற்பாட்டில் பெண்களே செயற்படுகின்ற அவலநிலை முதலில் மாற்றம் காணவேண்டும். நிஐக் குற்றவாளியானது ஆணாதிக்கமே அன்றி, ஆண்வர்க்கம் அல்ல என்ற தெளிவும், புரிதலும் புதிய திட்டவடிவங்களின் அம்சங்களில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

பெண்ணின் உரிய இடம் நிலைநிறுத்தப்பட்ட வேண்டுமாயின் முதலில் பெண்களின் ஆர்வமும், பங்களிப்பும் புரிதலைத் தொடர்ந்து ஏற்பட வேண்டும். சரியானவற்றை, அவசியமானவற்றை நடைமுறைக்குச் சாத்தியமான வழிகளை இனம் கண்டு செயற்படுவதன் மூலம் பெண்விடுதலையை எட்டுவதில் இணைந்து படிப்படியாக முன்னேறி சவால்களை முறியடித்து உரிய இலக்கை எட்ட முடியும்.
சிறப்பான பெண்ணிய ஆய்வுகளும், விவாதங்களும் வினைத்திறனான செயற்பாடுகளும், பல்கலைக்கழக மற்றும் மேலோர் வட்டப் படிதாண்டி, பரவலாகி, தீங்குறு பிரிவினர் மத்தியில் கொண்டு செல்லப்படுதல் காலத்தின் தேவையாகும். ஊடகங்களாலும், கலை இலக்கியங்களாலும் சாமனியர்களை அணுகும் அதேவேளை நேரில் சென்று அழைப்புக்களைப் பரவலாக ஏற்படுத்தி செயலாக்கம் பெறுவது முக்கியமாகும். இச்செயற்பாட்டில் ஆண்களையும் இணைத்துச் செயற்படவேண்டும். காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு இசைவாக்கம் பெற்றுவிட்ட சில மரபுப் பூச்சாண்டிகளும், பண்பாட்டுப் போலிகளும் மறுதலிக்கப்பட வேண்டும். இவ்விலக்கை எட்டுவது இலேசுப்பட்ட காரியமல்ல. துறைமுக அலை (சுனாமி) கணப்பொழுதில் அழித்தது போல் இவற்றைச் சடுதியில் ஏற்படுத்தி விட முடியாது.
பொதுவாகவே இசைவாக்கமுற்று அதன் அடிப்படையில் செயற்படும் ஒரு சமூகத்தில் புதிய மாற்றங்கள் இலகுவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதிலும் எதிர்த்து நிற்கும் போது எதிர்ப்புணர்வும், பிரதி அனுகூலமும் ஏற்படும் சாத்தியமும் உள்ளதால் நிதானமான இணைந்த போராட்ட முறைகளே முனைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். கொல்லன் பட்டறையில் ஊசி விற்பது இலேசுப்பட்ட காரியமல்ல. பெண்ணிய முன்னெடுப்புக்கள் மழையில் உப்பு வித்தது போல் மாறிவிடாமல், கால நேர மனநிலையை அறிந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எதிரியுடன் ஆயுதம் தூக்குவது போன்ற காரியங்கள் இங்கு பலனளிக்காது என்பதை பெண்ணிலை வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். தேசத்தைப் பிரித்தெடுத்தால் அது வெற்றி. ஆனால் தேகத்தைப் பிரித்தெடுத்தால் அது குடும்பத்தில் தோல்விதான்! பிரிதலை விட இங்கே புரிதலும், புரியவைத்தலுமே அவசியமாகிறது.
பெண்விடுதலையை வென்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மட்டும் போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இரு ஒரு சமூகக் குறைபாடே. இதற்குப் பாத்திரமானவர்களும், பாதிப்படைவர்களும் பெண்கள் மாத்திரமல்ல. உதாரணமாக சகோதரிகளுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய இளைஞர்களின் வாழ்வும் பாதிக்கப்படுகின்றதல்லவா? எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச் சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும்,பலதுறை சார்ந்தவர்களும், நிறுவனங்களும் அடங்கும். ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்களின் பங்களிப்பும் அவசியம்.
எனவே பெண்களுடைய பிரச்சினைகள் என்பது அவர்களது மாத்திரமல்ல அவை சமூகத்தின் பொதுப்பிரச்சினை. சமூக மேம்பாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஈடுபாட்டுடன் பங்காற்றினால் தான் பெண்விடுதலையை எட்டமுடியும். இதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம். பால் நிலைச் சமத்துவ வழிகாட்டல் பற்றிய பிரக்ஞை எல்லா மட்டத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். செயலூக்கம் பெற வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் தொடங்கி, பாடசாலையிலும் சமத்துவம் பேனப்படுதலும், போதிக்கப்படுதலும் அவசியமான செயற்பாடாக வேண்டும். பாடத்திட்டங்களிலுள்ள அலகுகளில் ஆணாதிக்க சிந்தனைகள், இனவாதச் சிந்தனைகள் போலவே அகற்றப்பட வேண்டும். குடும்பத்திலும் பண்பாடு, கலாச்சாரம் என்பவை மாறாவிதிகள் அல்ல என்ற புரிதல் ஏற்படுத்தப்படல் வேண்டும். நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். அடிப்படை அம்சங்கள் சிதைவுறாமலே!
எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களே பெண்களுக்கு மாறாகப் பெண்விடுதலையை மறுத்துச் செயற்படுகின்றமையைக் களையப்பட வேண்டியது அவசரமாதும், அவசியமானதுமான செயற்பாடாகும். சமூகத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படும் போது பெண் விடுதலையையும் எட்டப்பட்டு விடும். பால் பேதமற்ற மனித நேயமே இன்று தேவைப் படுகின்றது. பால் மோதல் அல்ல! 
Quelle - Erimalai
நன்றி- கயல்விழியின் முகநூலிலிருந்து..

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்