/* up Facebook

Sep 5, 2015

பெண் எழுத்து - கடுகு வாங்கி வந்தவள்: மரணத்துடன் போராட்டம்பூமியில் மனித இருப்புக்கு ஆதாரமான உடல் பற்றிய உணர்வு இல்லாமல் பெரும்பாலானவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். திடீரென நோயினால் பாதிப்பு அடைந்தால், உடல் பற்றிய எண்ணம் தோன்றுகிறது. நோயினால் இறப்பதைவிட, நோய் பற்றிய பயத்தினால் இறக்கிறவர் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. `நோய்க்கு இடம் கொடேல்’ என்ற முதுமொழியானது, நோயினை எப்படி அணுக வேண்டுமென்ற புரிதலை ஏற்படுத்துகின்றது. அறிவியல் வளர்ச்சியின் பகுதியாக மருத்துவத் துறையில் பிரமிக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும், மனித உடல் என்பது இன்னும் மர்மங்களும் புதிர்களும் நிரம்பியதாக உள்ளது. இதுவரை மருந்து கண்டறியப்படாத நோயினால் பாதிக்கப்பட்டவர், அந்நோயிலிருந்து மீண்டெழுந்து நலமடைவதும் நடைபெறுகிறது. கேன்சர் எனப்படும் புற்றுநோய் தாக்கியதாக அறிந்தவுடன் ஏற்படும் மன அதிர்ச்சி அளவற்றது. அந்த மன அதிர்ச்சியைப் பதிவுசெய்யும் இந்த நூல் நோயை எதிர்கொள்ளும் விதம் குறித்துப் பல விஷயங்களைச் சொல்கிறது.

தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைத் திடீரென அறிந்த பி.வி.பாரதி என்ற நடுத்தர வயதுப் பெண் எதிர்கொண்ட உடல், மனப் பிரச்சினைகள், `கடுகினை வாங்கி வந்தவள்’ என்ற தலைப்பில் பதிவாகியுள்ளன. உடலில் கேன்சர் கட்டி உள்ளது என்று கணடறியப்பட்ட நாள் முதலாகப் பாரதி பட்ட துயரங்கள், வாசிப்பினில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நோயிலிருந்து மீண்ட அனுபவம் பற்றிய விவரிப்புகள், ஒருவகையில் நோய் பற்றிய இன்னொரு பக்கத்தினைச் சித்தரிக்கின்றன. கன்னடத்திலிருந்து தமிழாக்கியுள்ள கே.நல்லதம்பி அவசியமான புத்தகத்தினைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

மரணம் என்பது தவிர்க்கவியலாதது; எல்லா வீடுகளிலும் மரணத்தின் நிழல் படர்ந்துள்ளது என்ற புரிதலை உண்டாக்குவதுதான் புத்தரின் கடுகினை யாசித்த பெண்ணின் கதை. பாரதியோ, மருத்துவத்தின் உதவியுடன் நோயிலிருந்து விடுபட்டதைக் கடுகினை வாங்கி வந்தவள் என மாற்றிப் புதிய மொழியில் உரையாடலைத் தொடங்கியுள்ளார். எப்பொழுதும் உடலில் ஏதாவது நோய் இருப்பதாக நம்பி, வைத்தியம் செய்துகொள்ளும் வழக்கமுடைய பாரதி, தனது மார்பில் தோன்றிய கட்டியை அலட்சியப்படுத்துகிறார். அப்புறம் மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொள்ளும் போதும், தனக்குக் கேன்சர் இல்லை என்று மருத்துவர் சொல்ல மாட்டாரா என ஏங்குகின்றார். கேன்சர் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்படுவது முதலாக அனைத்துச் சம்பவங்களையும் உருக்கமான மொழியில் பாரதி விவரித்துள்ளார். நோயாளி என்ற உணர்வைவிட எல்லாவற்றையும் பகடியாக விமர்சித்திருப்பது, நோய் பற்றிய உக்கிரத்தைத் தணிக்கிறது. நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையிலும் நாடகம், திரைப்படம், இசை விழா, புத்தக வெளியீட்டு விழா என ஆர்வத்துடன் பங்கேற்ற பாரதியின் ஆர்வமான செயல்பாடுகள், நோயாளிகள் செல்ல வேண்டிய திசையினைச் சுட்டுகின்றன.

நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையில் நிலவ வேண்டிய உறவு உயிரோட்டமானது. பாரதியை முதன்முதலாகச் சோதித்து, கேன்சர் எனக் கண்டறிந்த மருத்துவர்,

`` உங்களுக்கெல்லாம் எப்ப புத்தி வருமோ, இப்ப கைமீறிப் போன பிறகு எங்ககிட்ட வந்து அழுது புலம்பி எங்க உயிர வாங்கறது..” எனக் கடுமையான குரலில் திட்டுகிறார். அவருடைய வசைமொழி, ஏற்கெனவே நோயினால் பயந்து, வேதனை அடைந்திருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணுக்கு எந்த வகையில் உதவும்? பெங்களூருவில் உள்ள சங்கர மடம் ரங்கதுரை கேன்சர் மருத்துவமனையின் மருத்துவர்  நாத்தின் ஆறுதலான மொழி, நோயிலிருந்து குணமாகலாம் என்ற நம்பிக்கையைப் பாரதிக்குத் தருகிறது. மார்பகம் நீக்கப்பட்ட பிறகு, எட்டு கீமோ, முப்பத்துமூன்று கதிர்வீச்சுச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர் பொறுமையுடன் இருத்தல் அவசியம். உடல் மீண்டும் பழைய நிலையை அடைய ஒரு வருடம் ஆகும் என்ற டாக்டரின் ஆலோசனை பாரதிக்கு உற்சாகம் அளிக்கிறது. நோயிலிருந்து நலமடைய விழையும் பாரதியின் மனத்துணிவு அவருடைய எழுத்தில் வெளிப்பட்டுள்ளது.

புற்று நோய்க்காக மெற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையினால் பாரதியின் தலைமுடி கொத்தாகக் கொட்டியபோது, மனரீதியில் அடைந்த உளைச்சலில் இருந்து மீள்வது பற்றிய விவரிப்பு முக்கியமானது. நோயாளி எனக் கருதி ஒதுக்காமல், எப்பொழுதும் போல இயல்புடன் பழகுகின்ற நண்பர்கள், உறவினர்களை நேசமானவர்கள் எனப் பாரதி கருதுகிறார். நோயினால் அவதிப்படுகின்றவரிடம் எப்படிப் பேச வேண்டுமென்ற பாரதியின் விருப்பம், நம்மில் பலரும் அறியாததது. கேன்சர் என்றாலே குணப்படுத்த முடியாத நோய், உடனே மரணம் என்பதற்கு மாற்றாகத் தன்னையே பகடி செய்துகொண்டுள்ள பாரதியின் எழுத்துகளில் பொதிந்துள்ள வலி, புத்தகத்தின் பக்கங்களில் கசிந்து கொண்டிருக்கிறது. நோய் என்பது மனித வாழ்க்கையில் ஒரு பகுதி என்ற புரிதலுடன், அதை மருத்துவத்தின் உதவியுடன் எவ்வாறு வெல்வது என்ற பாரதியின் அனுபவங்கள் முக்கியமானவை.

கடுகு வாங்கி வந்தவள்: அனுபவக் கதை. பி.வி.பாரதி 
(தமிழில்: கே.நல்லதம்பி) 

நன்றி - தி இந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்