/* up Facebook

Sep 30, 2015

பெண்ணியம்: ஆணாதிக்கத்திற்கு அப்பால்… - கொற்றவை
ஒடுக்கப்பட்டவர்களை அரசியல்மயப்படுத்துவதென்பது, அவர்களோடு உரையாடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் தமக்கும், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் விடுதலை பெற்றுத்தர தேவைப்படும் அறிவினை வழங்குவது என்பதாகும். இவ்வகையில், ஒடுக்கப்பட்ட இனமான பெண்களுக்கு அவர்களது உரிமைகள் குறித்து அறிவூட்டுவதும், பாலின சமத்துவத்திற்காகப் போராட போதிப்பதும் பெண்ணியம் என்றழைக்கப்படுகிறது. இருப்பினும், தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று உணர்ந்து அதற்கெதிராகப் போராடும் சாதி, இனம், வர்க்கம் போன்ற மற்ற விடுதலை இயக்கங்கள் போல் அல்லாமல், பெண் விடுதலை இயக்கங்கள் நூதனமான ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது: பெண் அடிமைத்தனம் என்பது இயற்கையானது என்று விதைக்கப்பட்டுவிட்ட ஆழமான நம்பிக்கைகளை முதலில் தகர்த்தெரிய வேண்டியுள்ளது.

எதிர்பாலின மற்றும் குடும்ப உறவென்பது மனித வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. இருப்பினும், மாபெரும் சமூக அமைப்பின் அச்சிறிய செயல்பாடானது, ஏற்றத்தாழ்வு நிறைந்ததாகவே உள்ளது. ஆண் பெண் உறவுகளில், பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது, அதனால் பெண்கள் “இரட்டை ஒடுக்குமுறைக்கு” உள்ளாகிறார்கள். ஒன்று குடும்ப மட்டத்தில், மற்றொன்று சமூக மட்டத்தில். இந்த சவாலானது மற்ற விடுதலை இயக்கங்களைக் காட்டிலும் அதிகளவிலான உள் முரண்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆண் பெண் உறவில் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணாதிக்க மனோபாவத்தின் விளைவாக, பெண்களே கூட ஆணாதிக்கத்தை மறுப்பவர்களாக இருக்கின்றனர். பெண்களுக்குள் காணப்படும் இந்த உள் முரண்பாட்டை நாம் “பழகிவிட்ட அடிமைத்தனம்” என்றுசொல்லலாம். சமூகமயமாக்கலில், ஆண்கள் மேலானவர்களாகவும், பெண்கள் கீழானவர்களாகவும் மாற்றப்பட்ட ஒரு நடைமுறையின் மூலம் அடிபணிதலை பெண்மைத் தன்மை என்று கருதும் விதமாக பெண்கள் பழக்கப்படுகின்றனர்.

பாலின ஒடுக்குமுறையை புரிந்துகொள்வதற்கான ஒரு முறையாக ஆணாத்திக்கம் எனும் சித்தாந்தத்தை பெண்ணிய இயக்கங்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தன. 1980களின் இறுதியில் இச்சித்தாந்தத்தில், ஊடறுக்கும் கருத்தாக்கங்கள் (intersectionality theory) எனும் சித்தாந்தம் கவனம் பெற்றது. க்ரென்ஷாவின் கோட்பாடானது பெண்கள் மீதான அமைப்புரீதியான ஒடுக்குமுறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது என்றும், ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையது என்றும், இனம், பாலினம், வர்க்கம், திறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தாக்கத்திற்கு உட்பட்டது என்றும் முன்வைத்தது. இருப்பினும், பெண் ஒடுக்குமுறை குறித்த் இந்த பரந்த அளவிலான ஆய்வுகள் வர்க்க முரண்பாட்டின் பாத்திரத்தை ஒப்புக்கொள்ள பெரும்பாலும் மறுக்கின்றன. ஆனால் வர்க்கப் பார்வையானது இன்றைய அமைப்புச் சூழல் பற்றிய கட்டமைப்பை விளக்குவதுடன் எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயமானது எந்தக் கட்டுமானத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

எந்தவொரு ஒடுக்குமுறை வடிவமும் இரண்டு தளங்களில் நிகழ்கின்றன, ஒன்று கருத்தியல் தளம் மற்றொன்று பொருளாயத தளம். இதனை அடியொட்டி நாம் ஒடுக்குமுறை எனும் பிரச்சினையை ஆய்வு செய்வோமானால் – ஆணாதிக்கம், இனம், மதம், சாதி, திறன், குடியுரிமை, பாலியல் தேர்வு, கலாச்சாரம் போன்றவை – ஒடுக்குமுறைக்கான கருத்தியல் வடிவங்கள் என்பதும், வர்க்க ஒடுக்குமுறை என்பது பொருளாயத அடிப்படையிலானது என்பதும் விளங்கும். இருப்பினும், கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறையிலும் பொருளாயத பின்விளைவுகள் இருக்கும், ஏனென்றால் மேலாதிக்கத்தின் தோற்றுவாயே பொருளாயத அடிப்படையிலானது, அவ்வமைப்பிற்குள் பொதிந்திருக்கும் அதிகார உறவுகளானது மேல்மட்டத்தில் பிரதிபலிக்கின்றது. மேலாதிக்கம், ஆளும் வர்க்கத்தின் பொதுப்படுத்தும் விதிமுறைகளும், அதன் விளைவான ஆளும் வர்க்க அதிகாரத் தொடர்ச்சியும் வாழ்வனுபவத்தின் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

விடுதலைக்கான பெண்ணிய போராட்டமானது ஒடுக்குமுறையை மையப்படுத்தி இருக்கவேண்டுமே ஒழிய, பாலினத்தை மட்டும் மையப்படுத்தி இருக்கக்கூடாது. ஆகவே அது பாலின ஒடுக்குமுறைக்கு அடித்தளமாய் இருக்கும் பொருளாயத நிலைமைகளை புறக்கணிக்கவியலாது. ஆனால், முதன்மை அல்லது அடிப்படை பிரச்சினை என்று அவரவரின் குறைபட்ட பார்வையினால், நாம் குறுகிய அணுகுமுறைகளையே காண முடிகிறது. இந்த முற்சார்பானது ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு தனித்த பிரச்சினையாகக் கருத வழிகோலும், அதன் விளைவாக, பல்வகை ஒடுக்குமுறையினை பிணைக்கும் மூல காரணத்தை அடையாளம் காணத்தவறிவிடும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, தமக்குள்ளாகவும், மற்ற இயக்கங்களோடும் முரண்பாடுகளும், பகைமையும் வளர்ந்து, பெரும்பாலும் அது சுய-விரக்தியில் சென்று முடிகிறது.

பெண் வெறுப்பு குறித்து இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பதால், நான் இந்தக் கேள்வியை கேட்கிறேன்: “தந்தை வழிச் சமூகம், அதாவது ஆணாதிக்க அமைப்பு ஒழிக்கப்பட்டுவிட்டால் இனரீதியான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, மதவாத ஒடுக்குமுறை மற்றும் திறன், பாலியல் தேர்வின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் களையப்பட்டுவிடுமா?”

இல்லை. இல்லவே இல்லை! மேலும், அகவாத கண்ணோட்டத்தினால் சமூகப் பாகுபாட்டின் வேரை நம்மால் அடையாளம் காணவும் முடியாது, அதனால் கருத்தியல்ரீதியான உருமாற்றங்கள் நிகழக் காரணமாய் இருக்கும் அடித்தளத்தை மாற்றியமைக்கும் முயற்சி சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. ஒவ்வொன்றாய் களைவோம் என்று நாம் முடிவெடுத்தால், தன்னளவில் அது பெரும் பின்விளைவுகளையும், முரண்களையும் கொண்டதாகிப் போகும். மேலும், அடித்தளம் மாறாத நிலையில் மேலாதிக்கமானது உருமாறிக்கொண்டே இருக்கும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு அது மேலெழும்.

ஒடுக்குமுறை, மேலாதிக்கத்தின் முகவரமைப்பானது தொன்றுதொட்ட காலம் முதல் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே அதன் வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன. பெண்கள் விஷயத்தில், வரலாற்று ஆய்வுகளின் துணையோடு நாம் பார்க்கையில், மனிதர்கள் குழுக்களாக, கூட்டுச்சமூகமாக வாழ்ந்து வந்தனர் என்பதைக் காணலாம். தந்தையின் இரத்த வம்சா வழி என்பது முக்கியமானதாகக் கருதப்படவில்லை என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “தொன்று தொட்ட காலங்களில் – இன்னும் சில புராதன தாய்வழிச் சமூகங்களில்கூட – கருத்தரிப்பில் ஆணுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றே கருதப்படுகிறது… ” அ

தாய்வழிச் சமூகத்தில் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உயர்நிலையில் இருந்தனர். அவர்களும் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், இனக்குழுவிற்கு தலைமை தாங்குதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். மக்கள் எவ்வித ஒடுக்குமுறைக்கும் உள்ளாகவில்லை. இதனை நாம் புராதன கம்யூனிசம் என்கிறோம். “கம்யூனிச சமூக குடும்ப அமைப்பானது இல்லங்களில் பெண்களின் உயர்நிலையை சுட்டிக்காட்டுகிறது…. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பதை அடையாளம் காண முடியாத நிலையானது பெண்கள் பெற்றிருந்த உயர் மதிப்பை உணர்த்துகிறது…”ஆ

கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” இ

மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், அதனால் போதிக்கப்படும் பெண்ணிய சித்தாந்தம் குறித்தும் நாம் விரிவாகக் காண்போம்.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.

முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:

முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி (பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள்2 ‘மூலதனம்’* ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.

முதலில், நாம் சமூக உறவுகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு பின்னர் தனிப்பட்ட உறவுகளை, அதாவது குடும்ப அளவிலான தனி நபர் உறவுகளை ஆய்வு செய்வோம், ஏனென்றால் இரண்டு உறவுகளிலும் காணப்படும் பிரதான முரண்பாடு: உழைப்புப் பிரிவினை.

வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.

ஓர் உற்பத்தி முறையும், அதன் விளைவான சமூக ஒழுங்கும் மேலாதிக்கமும் பொருளாயத அடிப்படியிலானதாகவும் இருக்கும்பொழுது, பெண்ணிய போராட்டத்தை வெறும் ஆணாதிக்க எதிர்ப்பு என்றோ அல்லது அத்தகைய கருத்தியல் வடிவங்களுக்கு எதிரான போராட்டமாகவோ மட்டும் தொடுப்பதென்பது போதாமை நிறைந்ததாகும். விவாதத்திற்காக, ஆணாதிக்கத்தை ஒழிப்பதன் மூலம், நாம் பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம்,

போரையும், பஞ்சத்தையும் நாம் எப்படி போக்குவோம்?
ஏழ்மையை எப்படி ஒழிப்போம்?
பெண் உடல் பண்டமையமாக்கப்படுவதை எப்படி ஒழிப்போம்?
செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:

1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்)3 என்று வகைப்படுத்துகிறார்.

முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:

“… வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு தோன்றியது; அதே சமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது. ஆகவே, அது பொது விதியாகவே, மிகவும் வலிமையான, பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. அந்த வர்க்கம் அரசன் மூலமாக அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. இவ்வழியிலே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களைப் பெறுகிறது.”4

அரசும் அதன் நிர்வாகக் குழுவான நீதித்துறை மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து அரசு இயந்திரங்களும் ஆளும் வர்க்க நலனுக்காகவே பணி புரியும் என்பதை எங்கல்ஸ் இங்கு தெளிவாக விளக்குகிறார். தொடர் போராட்டங்கள் துண்டு துண்டான சில சீர்திருத்தங்களைப் பெற்று தரலாம். ஆனால், முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நிலவும் வரை நாம் சமத்துவத்தை அடைய முடியாது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தர்க்கமானது பிரித்தாளும் தந்திரத்தை உள்ளடக்கியது, அப்போதுதான் அடிமட்ட கூலி பெறும் கீழ் வர்க்கம் எனும் ஒரு நிரந்தர பின்தங்கிய வர்க்கத்தை அப்படியே வைத்திருக்க முடியும்.

இது பொருளாதார நிர்ணயவாதம் என்றும் ஆணாதிக்கம் மற்றும் ஒடுக்குமுறையின் மற்ற வடிவங்கள் அனைத்தும் வர்க்கப் பகைமை உருவாகும் முன்பே உருவானவை என்றும் வாதிடுவோர் ஏற்றத்தாழ்வில் தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் தொடர்பை நிராகரிக்கின்றனர் என்றே சொல்ல முடியும். பெண்கள், கறுப்பினத்தவர், மாற்றுப் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய அனைவரும் குறைவான (அடிமட்ட) கூலி பெறும் பிரிவினராவர். அதேபோல் கூலி உழைப்பில் ஈடுபடாது வீட்டு உழைப்பில் மட்டுமே முடக்கப்பட்ட இப்பிரிவின் ஒரு பகுதியினர் ஏழ்மையில் மூழ்கி துன்புறுகின்றனர் அல்லது வேலையின்மை காரணமாக பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.

மேற்சொன்ன வாதங்களிலிருந்து, கூட்டுச் சமூக வாழ்விலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், அதன் பின் முதலாளித்துவம் என்று உருமாறி நிற்கும் சமூகத்தின் வளர்ச்சியானது இலாபம், தனிச் சொத்து வடிவிலான செல்வக் குவிப்பு எனும் இலட்சியத்தை கொண்ட ஒரு நவீன அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த அணுகுமுறையைக் கொண்டு நாம் ஆணாதிக்கத்தின் ஆணி வேரை தேடிச் செல்வோமானால், சரக்கு உற்பத்தியின் விதிகளும், உற்பத்தி சாதன உடைமையாளர்களிடம் குவிந்த செல்வத்தின் விளைவான அதிகாரமும் ஆண் பெண் சமத்துவத்தைக் குலைத்தது என்பது விளங்கும். குடும்பம் என்பது சமூகத்தின் பொருளாதார அலகாகிப் போனது, அதில் உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி முறைகளுக்கு ஏதுவானதொரு உழைப்புப் பிரிவினை உருவானது. பொருளுற்பத்தி மற்றும் புதிய உழைப்புச் சக்தியின் உற்பத்தி இரண்டையும் பிரதான செயல்பாடாகக் கொண்ட அதில் பாலின பேதத்தின் அடிப்படையிலான ஒரு உழைப்புப் பிரிவினை உருவானது. “அன்று குடும்பத்தில் நிலவிய உழைப்புப் பிரிவினையின்படி, உணவையும் அதற்குத் தேவையான கருவிகளையும் பெறுவதும் அதன் விளைவாக, அவற்றின் உடைமையாளராக இருப்பதும் ஆணின் பொறுப்பாக இருந்தது…”5 உற்பத்தி சாதனங்கள் பரிபோன நிலையில், பெண் ஆணைச் சார்ந்து வாழும் நிலை உருவானது.

உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில், உற்பத்தியில் ஈடுபடாத சிலர் உற்பத்தி சாதனங்களை அபகரிப்பில் ஈடுபட்டனர், அதன் விளைவாக மூன்றாவது வகையான உழைப்புப் பிரிவினை ஒன்று உருவானது. “இங்கு, இப்போது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு வர்க்கம் முதன் முறையாக உதிக்கிறது, அது உற்பத்தி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதோடு, உற்பத்தியாளரையும் அதன் விதிகளுக்கு கீழ்படியும் நிலைக்குத் தள்ளுகிறது… இரு தரப்பையும் சுரண்டுகிறது”6. இவ்வாறாக, ஆண்கள், அல்லது உற்பத்தி சாதனங்களின் அப்போதைய உடைமையாளர்கள் உற்பத்தி சாதனங்கள் பரிக்கப்பட்டவர்களாக, நிலப்பிரபுத்துவத்தின் கீழ் அடிமை உழைப்பாளிகளாக மாற்றப்பட்டனர், பின்னர் முதலாளித்துவத்தின் கீழ் அவர்கள் கூலி உழைப்பாளிகளாக்கப்பட்டனர். “இவ்வாறாக, முதலாளித்துவ அமைப்பிற்கான பாதையை வழியமைத்துக் கொடுத்த அந்த நடைமுறையானது, உழைப்பாளியிடமிருந்து அவனது உற்பத்தி சாதனங்களை பரித்த நடைமுறையாக அல்லாமல் வேறாக இருக்க முடியாது; ஒருபுறம், வாழ்வாதாரத்திற்கான சமூக வழிமுறைகளும், உற்பத்தி வழிமுறைகளும் மூலதனமாக மாற்றப்பட்டன, மறுபுறம், அப்போதைய உற்பத்தியாளர்கள் கூலி உழைப்பாளிகளாக மாற்றப்பட்டனர்”8

உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களின் இலாப வெறியானது அபகரிப்பு, அடிமைபடுத்துதல் மற்றும் நிறுவனமயமாக்குதல் மூலம் வீட்டில் முடக்கப்பட்டவர்களான பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்வதையும், ஆண்கள் உற்பத்தி சாதன உடைமையாளர்களைச் சார்ந்து வாழும் நிலைமையையும் உருவாக்கியது, இந்த உறவுமுறையானது மேலாதிக்கம் நிறைந்ததாக நிலைபெற்றது. உற்பத்தி உறவுகளிலிருந்து வேறூன்றிய இந்த மேலாதிக்கமானது அனைத்து மனித உறவுகளிலும் பிரதிபலிக்கின்றது.

இதன் அடிப்படையில் நாம் பெண் அடிமைத்தனத்தையும், அதனைப் பிணைக்கும் சமூக கருத்தியல் வகைப்படுத்துதலையும் ஆய்வு செய்வோமெனில் பொருளாதார சூழ்நிலைமைகளும், அதன் தொடர்ச்சியான சமூக ஒழுங்குமே அடிமைபடுத்துதலுக்கான மூலகாரணமாக இருக்கின்றது என்பது மீண்டும் தெளிவாகிறது. இந்த வகைப்படுத்தலானது – உழைப்புச் சக்திகளை பல்வேறு வகைகளில் மதிப்பீடு மற்றும் மதிப்பிறக்கம் செய்வதானது – உழைப்புச் சகதியை மலிவாகக் கைப்பற்றவும், அதன் மூலம் செல்வக் குவிப்பை மேற்கொள்ளவும் வகை செய்கிறது. மேலும், ஆணாதிக்கம் மற்றும் முதலாளித்துவம் என்று வெளிப்படும் அதிகார உறவுகளின் கீழ் – பெண்ணானவள், அவளது உற்பத்தி சக்தியோடு உழைப்புக்கான ஒரு பண்டமாக மதிப்பிறக்கம் செய்யப்படுகிறாள்; அவள் ஒரு உற்பத்தி அலகாக – உழைப்பாளரை பராமரிப்பதன் மூலம் உழைப்புச் சக்தியை புனரமைக்கும் பொறுப்புடைய, குழைந்தைப் பேறு மூலம் புதிய உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்யும் பொறுப்புடைய – உறபத்தி அலகாக மாற்றப்படுகிறாள்.

இவ்வாறாக, மூல காரணத்தை, குறைந்தது ஆணாதிக்கத்தின் வினையூக்கியை நாம் இப்போது ஆய்வு செய்துவிட்டபடியால், “மலிவான கூலிக்காகவும், அவளது மறு உற்பத்தி சக்திக்காகவும் பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தும் அத்தகையதொரு மேலாதிக்கத்தை ஒழித்துக்கட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?”

பதில்: முதலாளித்தும் – உற்பத்தி சாதனங்களை அபகரித்த, செல்வப் பசியோடு நம்மையெல்லாம் அடிமைப்படுத்திய, உற்பத்தி சாதனங்களற்று சார்ந்து வாழும் நிலையை உருவாக்கிய, உழைப்பை அந்நியப்படுத்திய, பாலினம், இனம், தேசம், பாலினத் தேர்வு, மதம் என்று எவ்வித விலக்குமின்றி நம்மையெல்லாம் சுரண்டுகின்ற அந்த பொருளாதார அமைப்பு – தூக்கியெறியப்பட வேண்டும். உற்பத்தி சாதனங்கள் பொதுவுடைமையாக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி முறை உருவாக்கப்பட வேண்டும்.

பெண்ணியத்திற்கு மாற்றாக மார்க்சியத்தை முன்வைப்பதல்ல எமது நோக்கம், இருப்பினும், ஆணாதிக்கத்தை மட்டுமே ஒழித்துக்கட்ட விரும்பும் பூர்ஷுவா பெண்ணியத்தைக் காட்டிலும், மார்க்சிய அணுகுமுறையானது பெற்றுத்தரக் கூடிய விடுதலையானது அனைத்து வர்க்கப் பெண்களையும் உள்ளடக்கியதாகும். பூர்ஷுவா பெண்ணியமானது ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டி, பெண்களின் தலைமையில் தனியுடமை செல்வக் குவிப்பை நிறுவ முனைகிறது. அதனால் அதில் சமத்துவம் கிடையாது. நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில்,

“பெண்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்குவதால் மட்டும் அதிகார சமன்பாடு ஏற்பட்டுவிடாது. பாட்டாளி வர்க்கப் பெண் பாட்டாளி முகாமிலும், பூர்ஷுவா பெண் பூர்ஷுவா முகாமிலும் நிலைகொள்கிறாள். பூர்ஷுவா பெண்கள் இயக்கங்களின் இந்த சோஷலிசப் போக்கினால் நாம் ஏமாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது, பூர்ஷுவா பெண்கள் விடுதலை பெறும் வரையே அவ்வியக்கம் நிலைத்திருக்கும்”9

இருப்பினும், பூர்ஷுவா என்றாம் முதலாளித்துவ வர்க்கம்10 என்றாலும், பூர்ஷுவா பெண்ணிய கருத்தியலானது, அதாவது ஆளும் வர்க்கக் கருத்தியலானது பெரும்பாலும் அனைத்து வர்க்கப் பெண்களையும் அரவணைக்கின்றது. அதனுடைய சுயநல அரசியலை அறியாத தொழிலாளர் வர்க்கப் பெண்கள் அதன் கருத்தியல்களில் மயங்கி தாராளவாத சிந்தனைகளுக்கு இரையாகின்றனர்.

இந்தப் புரிதலிலிருந்தும், மனிதாபிமான அடிப்படையிலான ஒற்றுமை எனும் நிலைப்பாட்டிலிருந்துமே, மார்க்சியர்கள் அனைத்து பெண்ணிய இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

“இந்த இயக்கத்திலும் ஆழமான ஆன்மீக மற்றும் தார்மீக அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. தனது சொந்த பொருளாயத தேவைக் கோருவதோடு மட்டுமன்றி, பூர்ஷுவாப் பெண்கள் ஆன்மீக ஊட்டமளிப்பையும் கோருகின்றனர். தமது தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்…. பூர்ஷுவாப் பெண்கள் மேற்கொள்ளும் பொருளாதார, அறிவார்ந்த மற்றும் தார்மீக முயற்சிகள் முற்றிலும் நியாயமானதே”11

மேலும், கார்ல் மார்க்ஸ் சொல்கிறார்,

“சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் நிலவரங்களது அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதிரிப்பவர்கள் ஆவர். இந்த இயக்கங்கள் யாவற்றிலும் அவர்கள் சொத்துடைமைப் பிரச்சினையை, இதுவரை அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தலைமையான பிரச்சினையாய் முன்னிலைக்குக் கொண்டுவருகிறார்கள்.” 12

முடிவாக, ஆணாதிக்கமானது, பூர்ஷுவாக்கள் வாதம் செய்வதுபோல் பகுதியளவில் சுயாதீனமானது எனினும், இன்றைய வரலாற்று சூழலில், அது முதலாளித்துவத்தால் உட்செறிக்கப்பட்டுவிட்டது. ஒடுக்குமுறை என்பது ஒரு சுரண்டல்வாத இயங்குமுறையாகும், அதனடிப்படையில், பாலினரீதியான ஒடுக்குமுறை முதலாளித்துவத்திலும் காணப்படுகிறது. மலிவான உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதும் மற்றும் அதிக லாபம் ஈட்டுவதுமே அதன் குறிக்கோள். இந்தியச் சூழலில் அது சாதியத்தால் – உழைப்புப் பிரிவினையின் மற்றுமொரு வடிவம் – மேலும் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறாக ஆணாதிக்கமானது முதலாளித்துவதின் முக்கிய அங்கமாகிவிட்டது. எனவே, தனியுடமையின் அடிப்படையிலான உழைப்புச் சுரண்டல் ஒழிக்கப்பட்டு, சோஷலிச முறையிலான உழைப்புப் பிரிவினை நிறுவப்பட்டுவிட்டால் அரசு உதிர்வது போலவே ஆணாதிக்கமும் உலர்ந்து உதிர்ந்து போகும்13. ஏனென்றால், அத்தகையதொரு சமத்துவ நிலைமையில், ஆண் பெண் உறவானது இயல்பானதாக அமையும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திமுறைக்காக குடும்பமானது ஓர் பொருளாதார அலகாக இருக்கும் நிலை அப்போது இருக்காது.

“முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாத்திரங்களாலும், ‘இயல்பானது’ அல்லது ‘இயல்பல்லாதது’ எனும் கருத்தாக்கங்களால் ஆணும் பெண்ணும் இனியும் பிணைக்கப்பட மாட்டார்கள். மாறாக, அவரவரின் தனிப்பட்ட உணர்வுத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு உறவுமுறையை அமைத்துக்கொள்ள அவர்கள் சுதந்திரம் பெற்றவராகத் திகழ்வர்”14

இந்தப் பின்னணியில்தான் மார்க்சியப் பெண்ணியவாதிகள் பெண்ணியப் போராட்டமானது ஆணாதிக்க எதிர்ப்பு என்பது வர்க்கப் போராட்டப் பாதையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. அத்தகைய புரட்சிகர போராட்டங்கள் பின் வரும் போராட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: 1) குடும்பத்திற்குள் சமமான உழைப்புப் பிரிவினை 2) சொத்துரிமை 3) முடிவெடுக்கும் உரிமை 4) உடல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகள் மற்றும் 5) அனைவருக்குமான, சமத்துவ முறையிலான சமூக உழைப்புப் பிரிவினை மற்றும் தனியுடைமை ஒழிப்பு.

பெண்ணின் சுயமும், பெண்ணிய அரசியலும் வெடித்துக் கிளம்பும்போது அது வர்க்க அரசியலால் நங்கூரமிடப்படாமல் போனால், சோஷலிச வர்க்கப் போராட்டத்தோடு உரையாடல் நிகழ்த்தாமல் போனால், பாட்டாளி வர்க்கப் பெண்களின் விடுதலை கேள்விக்குறியாகிப் போகும். அதனால், அனைவரையும் உள்ளடக்கியதாக பெண்ணியம் இருக்க வேண்டுமானால், சோஷலிசமே15 அதன் கலங்கரை விளக்கமாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து உருவாகும் புதியதொரு சோஷலிச சமூகமானது பாலின சமத்துவம் கொண்டதாக மட்டுமின்றி, உழைப்பு சுரண்டலற்ற சமூகமாகவும் இருக்கும். இவ்வாறாக இரட்டை உழைப்பினால் ஏற்படும் முரண்பாடுகளையும் சுமையையும் அது ஒழித்திடும். அத்தகையதொரு வாழ்வானது நிச்சயமாக மேலானதொரு16 வாழ்வாக அமையும்.

____________________

அ. சிமோன் தே பொவ்வா, செக்கண்ட் செக்ஸ், விண்டேஜ், 1997, பக். 39

ஆ, இ. எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், பக். 49
 1. கட்டுரைக்காக சுருக்கப்பட்டுள்ளது, இயற்கையில் கிடைக்கும் கச்சாப் பொருள்களும், உழைப்பும் அதில் அடக்கம், ஆனால் உழைப்பு என்பது சுதந்திரமானது.
 2. மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் இதை விரிவாக விளக்குகிறார்.
 3. https://www.marxists.org/archive/marx/works/1884/origin-family/ch09.htm
 4. 5, 6, எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், முன்னேற்றப் பதிப்பகம் (பக். 55, 162)
  1. கார்ல் மார்க்ஸ், மூலதனம், தொகுதி 1, பக். 668
   1. கிளாரா ஜெட்கின், https://www.marxists.org/archive/zetkin/1896/10/women.htm
   2. எங்கல்ஸின் விளக்கப்படி: பூர்ஷுவாக்கள் என்போர் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆவர். அனைத்து வளர்ந்த நாடுகளிலும், தங்கள் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உற்பத்தி சாதனங்கள், கச்சாப் பொருள்கள் மற்றும் அனைத்து கருவிகளையும் (இயந்திரங்கள், ஆலைகள்) தங்களின் தனியுடமையாகக் கொண்டிருப்பவர்கள்; ‘நவீன வர்க்க முதலாளிகளாக, சமூக உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள் மற்றும் கூலி உழைப்பாளிகளை அமர்த்தி உழைப்பை விலைக்கு வாங்குபவர்கள்…. இந்தப் பொருளில், பூர்ஷுவாக்கள் என்போர் பொருளாதார ரீதியாக ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், அவர்களே அரசு இயந்திரத்தையும், பண்பாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துபவர்கள், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானவர்களாகவும், முரண்பட்டவர்களாகவும் இருப்பவர்கள்…”, டாம் பாட்டம்மோர், மார்க்சியச் சிந்தனை அகராதி, மாயா பிளாக்வெல் பதிப்பு, பக். 36
    1. கிளாரா ஜெட்கின்https://www.marxists.org/archive/zetkin/1896/10/women.htm
    2. கார்ல்ஸ் மார்க்ஸ், எங்கல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் பொருளாதார, தத்துவ குறிப்புக்களின் கையெழுத்துப்படிகள், பிரமோத்தியஸ் வெளியீடு, பக். 243
    3. http://www.worldsocialism.org/spgb/pamphlets/women-and-socialism
    4. எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், முன்னேற்றப் பதிப்பகம், பக். 16
 1. கார்ல்ஸ் மார்க்ஸின் விளக்கத்தின்படி, சோஷலிசம் என்பது கம்யூனிசத்திற்கான பாதையில் ஓர் இடைக்காலக் கட்டம்
 2. இடைக்காலக் கட்டமாக இருப்பதால், மார்க்ஸின் விளக்கப்படி அது, ‘கம்யூனிச சமூகத்தின் ஒரு மேலானதொரு கட்டமாக’, அரசு உதிர்ந்து, உழைப்பு பற்றிய ஒரு முற்றிலும் புதிய அனுகுமுறை நிலவும் ஒரு சமூகமாக, ‘உழைப்புக்கேற்ற கூலி என்பதிலிருந்து தேவைக்கேற்ற கூலி’ எனும் பொன்மொழியை பொன்னேட்டில் பொறித்துக்கொள்ள ஏதுவானதொரு சமூகம். டாம் பாட்டம்மோர், மார்க்சிய சிந்தனை அகராதி, மாயா பிளாக்வெல் பதிப்பகம், பக். 500,501.
நன்றி - http://www.hystericalfeminisms.com/
...மேலும்

Sep 25, 2015

லெக்கின்ஸ் ஆபாச உடையா? முகநூல் முழுவதும் லெக்கின்ஸ் போஸ்ட்... ஆணாதிக்கம் என்று ஒரு பக்கம் கூச்சல், பெண் அடிமை என்று சாடல், தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் ஒரு வரம்பு மீறல் என்ற குற்றச்சாட்டு... டிவி சேனல்களில் விடாது இது பற்றிய சூடான விவாதங்கள்... இது விவாதத்திற்கு உகந்த பிரச்னையோ இல்லையோ,. இன்று இது ஒரு பிரச்னை என்று ஆகிவிட்டபடியால் இதை ஒரு சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது.

கலாசாரக் கேடு

இது ஒரு சிலரின் பார்வை. சரி நம் கலாசாரம்தான் என்ன? 1920– 1960களில் புடவை மட்டுமே நம் பெண்களின் கலாசாரமாக இருந்தது. அந்த புடவையும் முதலில் 9 கஜமாக இருந்தது. 1960க்குப் பிறகு 6 கஜமாக மாறியது. அப்போதும் இந்த மாற்றம் ஒரு கலாசார கேடாகத்தான் பேசப்பட்டது.

ஆனால் அன்று ஊதி பெரிதுபடுத்த ஊடகங்கள் இல்லாமல் போனதால், இந்தச் சண்டைகள் வீட்டினுள் நடைபெற்றன. 1990க்குப் பிறகு புடவையும் மாறி சல்வார் ஆனது. 2000க்கு பிறகு ஜீன்ஸ்...லெக்கின்ஸ்... இன்னும் சொல்லவேண்டுமென்றால் அரை நிக்கர்... இது இளசுகளுக்கு. வீட்டில் மேக்ஸி அல்லது மிடி... ஆக காலத்திற்கு ஏற்றவாறு உடையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பாரம்பரிய பாவாடை தாவணி, இப்போது ஒரு ஃபேஷன் டிசைனர் ஆடையாக மாறிவிட்டது. யார் கண்டது கண்டாங்கி சேலைக்கூட வேறு உருவெடுத்து பாரம்பரிய உடையாக வரலாம்.

உணர்ச்சியை தூண்டுகிறதா?
கேரளாவில் வெகு சில ஆண்டுகள் முன்வரையில் முண்டு மேலே ஒரு சிறு துண்டு. இதுதான் உடை. அதை பார்த்த ஆண்களெல்லாம் வேண்டாத உணர்ச்சியோடுதான் திரிந்தார்களா?

இங்கே நான் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை சொல்கிறேன். நான் ஜெர்மனி சென்றிருந்தபோது, ஒரு நாள் டிராமில் பயணம் செய்தேன்.  திடீரென்று முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஆணும், அதே வயது பெண் ஒருவரும் முத்தமிட்டுக்கொண்டனர். சரி வெறும் பிரெஞ்ச் கிஸ் போல என்று நினைத்தேன். ஆனால் அப்படி இப்படி கமல்தனம் இல்லை. நம் ஊர் டபுள் ஏ சர்ட்டிபிகேட் கிஸ். அதைப் பார்த்து முகம் சிவந்தது நான் மட்டும்தான். அவர்கள் அருகிலேயே ஒரு 15வயது சிறுமி. எதிராக 80 வயது தாத்தா... டிராம் முழுவதும் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் வேறு வேறு நாட்டவர் . யாரும் அவர்களை பார்க்க கூட இல்லை.

இன்னும் சொல்கிறேன். அங்கே அணியப்படும் பெண்கள் உடை... எல்லோரும் எப்போதும் அணிகிறார்கள் என்றும் சொல்லமாட்டேன். ஆனால் வெளியே சென்றால் நிறைய கண்களில்படும். லோகட் மேல் டாப்... உள்ளே முழுவதுமாக தெரியும். பீச்சிற்கு சென்றால்... மாதத்தில் என்றோ ஒரு நாள் அடிக்கும் வெயிலில் தும்ளக்ஸ் (நிர்வாணம்) ஆக ஆண்களும், பெண்களும்... யாரும் நின்று கூட பார்ப்பதில்லை. பார்த்தாலும் யாரும் துணி எடுத்து மறைத்து, "கட்டையில போக... அக்கா தங்கச்சியுடன் பொறக்கலையா... ?" என்று பல்லைக் கடிப்பதில்லை.

நம் ஊரிலும் பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தில் பெண்கள் ரவிக்கை இன்றி திரிந்த காலங்கள் உண்டு. ஆண்களும் ஒரு லங்கோடுடன் திரிந்தனர். ஆக காலத்திற்கேற்ப, தேவைகளுக்கேற்ப உடைகளும் மாறி வந்துள்ளன.

கண்ணியம்

அடுத்து பேசப்படுவது கண்ணியம். அதாவது கண்ணியமான உடை. மற்றவர்களுக்கு 'சே' என்ற உணர்வைக் கொடுக்கக்கூடதாம்.'ரேப்' சிந்தனையை தூண்டக்கூடாதாம். கோயிலில் உள்ள சில சிலைகள் கூட உடையின்றி வெட்ட வெளியில் நிற்கின்றன.

தன் குடும்பம்

மற்றுமொரு விதமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு தந்தையாக, ஒரு அண்ணணாக, ஒரு கணவனாக, இது போன்ற உடை அணிவதை அனுமதிப்பாயா? ஒரு ஆண் மகன் கண்ணியமாக நினைத்தால் தன் குடும்பம் வேறு, அடுத்த பெண்களெல்லாம் வேறு என்று தோன்றுமா? நியாயங்கள் ஒரு தனி குடும்பத்திற்கு என்பது சரியா? அப்போது பிரச்னை எங்கே ஆரம்பமாகிறது. கண்ணியம், கலாசாரமெல்லாம் வெறும் பேச்சுக்கே. பிரச்னை சிந்தனையிலிருக்கிறது.

ஆக அசிங்கம், ஆபாசம்... பார்வையை பொறுத்த விஷயம். சரி... தப்பு சொல்ல ஒருவருக்கும் உரிமை இல்லை. கணவன், தந்தை, அம்மா... யாராயிருந்தாலும் அவர்களுடன் உள்ள ஈக்வேஷன், மரியாதை, கட்டுப்பாடு... இவற்றை பொறுத்து விதிமுறைகள் வழங்கப்படுகின்றன. அவரவர் மனதிற்கு தெரியும் அவர்களுக்கான நியாயமும் தர்மமும்.

செளகர்யம்

பெண்கள் இந்த விவாதங்களில் சொல்லும் காரணம், இந்த டைட் உடை தான் செளகர்யம், பாதுகாப்பானது. இதுவும் அபத்தமே. எல்லா உடையும் பழகிவிட்டால் செளகர்யமே. என் மனதிற்கு பிடித்திருக்கிறது என்று வேண்டுமானாலும் சொல்லலாம், யாரும் கேள்வி கேட்கமுடியாது.

ஆனால் ஒன்றை சொல்ல வேண்டும், குளிருக்கு உடலோடு ஒட்டிய உடை தேவைப்படும். நம் வெயிலுக்கு? காற்றோட்டமான உடையே சிறந்தது. உடல் நலத்தை மனதில் கொண்டு, நம் மனதிற்கு எதை காட்டலாம், எதை காட்டக்கூடாது என்று தோன்றுவதை வைத்து நம் உடையை தேர்வு செய்யலாம். பாரம்பரியம், கலாசாரம், அசிங்கம் என்று பேசி நியாயம் கற்பிக்க வேண்டாம்.
-லதா ரகுநாதன்

நன்றி - விகடன்
...மேலும்

Sep 22, 2015

முஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் – தேவைகளும் தடைகளும் - அ.மார்க்ஸ்


ஆட்சிமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம் பெண்களின் நிலை     

சட்ட, பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்களின் பங்கு குறித்த தரவுகள் இதுவரை முறையாகத் தொகுக்கப்படவில்லை. முதன் முதலாக இந்திய முஸ்லிம்கள் குறித்த தரவுகள் ஓரளவு முழுமையாகத் தொகுக்கப்பட்டது சச்சார் குழு அறிக்கையில்தான். முஸ்லிம்கள் குறித்துப் புனையப்பட்டிருந்த பல பொய்கள் அதன் மூலம் தகர்ந்தன. எனினும் சச்சார் அறிக்கை மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனங்களில் ஒன்று அது முஸ்லிம் பெண்கள் குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்பது.  பேராசிரியைகள் ஸீனத் சவுகத் அலி, ஃபரிதா லம்பே முதலானோர் இதனை அப்போதே கண்டித்தனர்.சச்சார் குழுவில் இருந்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதை புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் சீமா முஸ்தபா சுட்டிக் காட்டினார். இந்திய முஸ்லிம் பெண்களின் நிலையை முஸ்லிம் ஆண்களுடனும், பிற பெண்களுடனும் ஒப்பீட்டுத் தரவுகளை சேகரிக்க சச்சார் குழு தவறியது.

ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையிலேயே நாம் சிலவற்றைச் சொல்ல முடியும். முஸ்லிம் பெண்கள் 1) முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் 2) பிற மதப் பெண்களைக் காட்டிலும் கல்வி மற்றும் ஆற்றல் படுத்தப் படுவதில் பின் தங்கி உள்ளனர் எனச் சொல்வதற்கு விரிவான ஆய்வுகள் தேவை இல்லை. எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டைச் சொல்லலாம். 1990 தொடங்கி அடுத்த 20 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 47 தான். மொத்தம் தேர்வு செய்யப்பட்டவர்களில் வெறும் 2.92 சதந்தான் முஸ்லிம்கள். 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் ஒரு முஸ்லிம் கூடத் தேர்வு செய்யப்படவில்லை. இது மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை. முஸ்லிம் பெண்கள் எனப் பார்த்தால் இந்த 20 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெறும் 9 பேர்கள்தான்.

ஜம்மு காஷ்மீருக்கு அடுத்து முஸ்லிம்கள் மிக அதிகமாக உள்ள அசாமில் 2013ல் தான் உம்மே பர்தினா அடில் என்கிற ஒரு முஸ்லிம் பெண் ஐ.ஏ.எஸ்  தேர்வில் வெற்றி பெற முடிந்தது.  தமிழ் நாட்டில் 1974ல் தான் யாஸ்மின் அகமது என்கிற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடிந்தது. 60 சதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் உள்ள ஜம்மு காஷ்மீரில் 2012ல் தான் முதன் முதலில் ஷெஹ்ரி டி அஸ்கர் என்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார், அதே ஆண்டில்தான் அம்மாநிலத்தில் ருவேதா சலம் என்கிற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார். குஜராத்தில் 2012ல்தான் சாரா ரிஸ்வி என்பவர் முதல் முஸ்லிம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்கிற பெயரைப் பெற்றார். தமிழ்நாட்டில் 2014ல் தான் முதல் ஐ.பி.எஸ் ஆனார்.

தமிழ்நாட்டில் இது வரை இரண்டே இரண்டு முஸ்லிம் பெண்களுக்குத்தான் சட்டமன்றத்தில் நுழைய வாய்ப்புக் கிடைத்துள்ளது. 1991 – 96 ல் அரவாக்குறிச்சி தொகுதியிலிருந்து மரியமுல் ஆசியா சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2006 – 11 ல் பதர் சயீத் திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். பதர் சயீத் பின்னர் வக்ஃப் வாரியத் தலைவராகவும் ஆக்கப்பட்டார். எந்த முஸ்லிம் பெண்ணும் தமிழகத்தில் அமைச்சராகும் வாய்ப்புப் பெறவில்லை.

நாடாளுமன்றத்திற்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைய 16வது நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் மட்டும்தான் முஸ்லிம்கள். அவர்களில் ஆனந்த் நாக் (காஷ்மீர்) தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற மெஹ்பூபா மஃப்டி மற்றும் பர்தமன் – துர்காபூர் (மே.வ) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தாஸ் சங்கமித்தா ஆகிய இருவர் மட்டும்தான் முஸ்லிம் பெண் எம்.பிக்கள். முஸ்லிம் அல்லாத பெண் எம்பிக்களின் எண்ணிக்கையும் குறைவுதானே எனக் கேட்கலாம். உண்மைதான். மக்கள் தொகையில் பாதி பெண்கள் எனக் கொண்டாலும் சுமார் 270 பெண் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் ஆனால் 61 பெண்கள்தான் உள்ளனர். ஆனால் இந்த வீதத்தில் பார்த்தாலும் கூட எட்டு முஸ்லிம் பெண்களாவது இன்று தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  சென்ற 15 வது நாடாளுமன்றதிலும் கூட மூன்று முஸ்லிம் பெண்கள் மட்டும் தான் இருந்தனர்.

நீதித் துறையில் நிலைமை இதை விட மோசம். இதுவரை உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிதான் இருந்துள்ளார். அவர்தான் முதல் பெண் உச்சநீதிமன்றப் நீதிபதியுங்கூட. பின்னாளில் தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவிதான் அவர். மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் வீதம் 25.2 சதம். ஆனால் நீதித்துறையில் அவர்களின் பங்கு வெறும் 5 சதம். அசாமில் மக்கள்தொகை 30.9 சதம் நீதித் துறையில் பணியாற்றுவோர் 9.4 சதம். ஜம்மு காஷ்மீரில் மக்கள் வீதம் 66.97 சதம் நீதித் துறையில் அவர்கள் 48.3 சதம். இந்திய அளவில் சராசரியாக நீதித் துறையில் பணியாற்றும் முஸ்லிம்கள் 7.8 சதம்தான். இது முஸ்லிம் ஆண்களையும் சேர்த்த கணக்கு. இதில் முஸ்லிம் பெண்கள் என்று பார்த்தால் ஒரு சதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

யோசித்துப் பார்த்தால் இன்று இந்திய அளவில் பெயர் தெரியக் கூடிய முக்கியமான முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு மேலோட்டமான பார்வையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் சில முகங்கள்:

சானியா மிஸ்ரா, டென்னிஸ் வீராங்கனை, இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் சங்கத்தின் (ITPA) துணைத் தலைவர். புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தின் பண்பாட்டுத் தூதுவர் (Brand Ambassador),

நீதியரசர் எம். ஃபாதிமா பீவி, கேரள முஸ்லிம், முதல் உச்ச நீதி மன்ற பெண் நீதிபதி (1989), தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர், தமிழக ஆளுநர் (1997 – 2001),

மெஹ்பூபா மஃப்டி, நாடாளுமன்ற உறுப்பினர், ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்,

டாக்டர் சீனத் ஷௌகத் அலி, பேராசிரியை, எழுத்தாளர், நூலாசிரியர், விஸ்டம் ஃபவுன்டேஷன் நிறுவனர்,

டாக்டர் ஃபரிதா லம்பே, கல்வியாளர், மும்பை நிர்மலா நிகேதன் கல்லூரி முதல்வர்,

நஜ்மா ஹெப்துல்லாஹ், பா.ஜ.க உறுப்பினர்,  மத்திய சிறுபான்மைத் துறை துணை அமைச்சர்,

ஆசீஃபா கான், பா.ஜ.கவின் சிறுபான்மை அணியின் தேசிய செயற்குழு உறுப்பின்ர்,

உஸ்மா நஹீத், அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய (AIMPLB) உறுப்பினர், இக்ரா பெண்கள் பன்னாட்டுக் கூட்டுறவு (IIWA) என்கிற தொண்டு நிறுவனம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்கள் அளித்து சுய தொழில் வாய்ப்பை ஏர்படுத்தி வருபவர்,

சீமா முஸ்தபா, புகழ் மிக்க பத்திரிக்கையாளர்.,

ஷபனா ஆஸ்மி, சமூக ஆர்வலர், நடிகை,

சமீபத்தில் நூறாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி வீராங்கனை நூருன்னிசா இனாயத் கான்,. பிரிட்டனின் ஆகப் பெரிய போர் வீரர் விருதான ஜார்ஜ் க்ராஸ் விருது வழங்கப் பட்டவர். தாய் திப்பு சுல்தான் மரபினர். ரஷ்யாவில் குடி பெயர்ந்து வாழ்ந்த போது நாஜிப் படைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் விமானப் படையில் பெண்களுக்கான துணைப் பிரிவில் சேர்ந்து ஒயர்லெஸ் ஆப்ரேஷன் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு Special Operation Executive  ஆகச் செயல் பட்டவர். நாஸிகளில் பிடியில் இருந்த ஃப்ரான்சில் பணி செய்து கொண்டிருந்தபோது காட்டிக் கொடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் 30 வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

இரண்டு

ஒன்று தெளிவாகிறது. இந்த மூன்று துறைகளிலும் முஸ்லிம்கள் பெரிய அளவில் பின் தங்கியுள்ளனர். இவர்களுள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை மிக மோசம்.

இன்னொரு வகையில் பார்த்தோமானால் மொத்தத்தில் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் நிலை மிகவும் பின் தங்கியுள்ளது. மொத்தப் பெண்களுக்குள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை படு மோசம்.

தொகுத்துச் சொல்வதானால் முஸ்லிம் பெண்களின் நிலை இப்படி ஆனதற்கு இரண்டு காரணங்கள். 1. அவர்கள் பெண்களாக இருப்பது. 2, அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது.

முஸ்லிம் பெண்கள் திறமையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எனினும் அவர்களால் மற்றவர்களுக்குச் சமமாக மேலெழுவதற்குத் தடையாக உள்ள  நெருக்கடிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.அவை: 1. நிதி நெருக்கடிகள் 2. கலாச்சார நெருக்கடிகள் 3. சிறுபான்மையராக இருப்பதால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. நிதி நெருக்கடி: முஸ்லிம் பெண்களைப் பொருத்த மட்டில் நிதி நெருக்கடி அவர்களை இரு வடிவங்களில் பாதிக்கிறது. இந்தியாவிலேயே அதிக வறுமை வயப்பட்ட சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர். வட மாநிலங்கள் பலவற்றில் முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து கொண்டே பின்னல் வேலை செய்வது, பீடி சுற்றுவது முதலான கடும் உடல் உழைப்பைக் கோருவதும் அதிகச் சுரண்டல் நிறைந்ததுமான பணிகளில் உள்ளனர். இவர்களுக்கு இளமையில் படிப்பு என்பது சாத்தியமில்லாமல் உள்ளது.

வசதிகள் இருந்தபோதும் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதில்லை. ஒரு சுதந்திரமான தொழில் முனைவராக அவர்கள் செயல்பட வாய்ப்பு அளிக்கப் படுவதில்லை. ஆண்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்பவர்களாகவும், செயல்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.

2. கலாச்சார நெருக்கடிகள்: முஸ்லிம் பெண்கள் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குரியவர்கள். ஆண்களோடு சேர்ந்து படிப்பது, பணி செய்வது. அரசியலில் ஈடுபடுவது ஆகியவற்றிற்கு ஷரியாவில் இடமில்லை என்கிற கருத்து முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றி இருப்பது முஸ்லிம் பெண்கள் பின் தங்கி இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நோக்கில் அமைந்த ஹதீஸ்கள் அவை மிக்க பலவீனமானவையாக இருந்தாலும் அவற்றுக்கு முதன்மை அளிப்பது, திருக்குரானின் புனித வசனங்களை அவற்றுக்குரிய சூழல்களிலிருந்து பிரித்து விளக்கமளிப்பது ஆகியவற்றின் ஊடாக இந்தக் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் ஆழப் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இன்னும் பலம் மிக்க ஹதீஸ்களின் துணையோடும், இறைமறை வசனங்களை உரிய சூழலுடனுன் பொருத்தியும் இன்று பல மார்க்க அறிஞர்கள் மாற்று விளக்கம் அளிப்பதை கவனத்தில் எடுப்பது முஸ்லிம் சமூகம் தடைகளை மீறி மேம்பாடடையத் துணை புரியும்.

2010ல் தேவ்பந்த் தாருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் அளித்த ஃபட்வாவை இப்படி முஸ்லிம் சமூகத்தைப் பின்னுக்கு இழுப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “பெண்களின் சம்பாத்தியத்தில் குடும்பம் பிழைப்பது ஹராம்” என்பதுதான் அந்த ஃபத்வா. மூன்று மதத் தலைவர்கள் பங்கு பெற்ற ஒரு அமர்வில் விதிக்கப்பட்ட இந்த ஃபத்வா, “பெண்கள் இப்படிப் பணி செய்வதற்கு ஷரியாவில் இடமில்லை. தனியார் துறை ஆனாலும், அரசுத் துறை ஆனாலும் ஹிஜாப் இல்லாமல் பெண்களும் ஆண்களும் உரையாடக் கூடிய நிலைக்கு அனுமதி இல்லை” என உறுதி படக் கூறுகிறது.. ஷியா பிரிவைச் சேர்ந்த மௌலானா கல்பே ஜவ்வாத்தும் இந்த ஃபத்வாவை ஆதரிக்கிறார், பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்க ஷரியாவில் இடமில்லை என்கிறார்.

ஆனால் இதற்கு எதிரான கருத்துக்களும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்து வந்தன. “ஆண்களுக்கும் ஷரியா விதிகள் உள்ளன. ஆண்கள் ஷரியா விதிகளைச் சரியாகப் பின்பற்றினால் பெண்கள் அவர்களோடு பணி செய்வதில் என்ன பிரச்சினை/” என்கிறார் லக்னோ இட்கா மசூதியின் நய்பி இமாம் ரஷீத். தாருல் இஃப்தா ஃபிடங்கி மெஹலின் மஃப்டி மௌலானா காலித் ரஷீதும் தேவ்பந்த் ஃபத்வாவைக் கண்டித்துள்ளார்.

நீண்ட முஸ்லிம் வரலாற்றில் இந்தக் கருத்திற்கு மாறாகப் பெண்கள் பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டு செயல்பட்டதற்குப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்ல இயலும். நபிகளின் முதல் மனைவி கதீஜா அம்மையார் ஒரு பணக்கார வணிகராக முழு நிதிச் சுதந்திரத்துடன் வாழ்ந்தார். நபிகளுக்குப் பின் இஸ்லாமிய அரசியலில் மிக்க தைரியமாகவும் அரசியல் நடவடிக்கைகளில் தேர்ந்தும் செயல்பட்டவர் நபிகளாரின் இன்னொரு மனைவி ஆயிஷா அவர்கள். இத்தகைய வாய்ப்பு அன்றைய இஸ்லாமியச் சமூகத்தில் இருந்தது கருதத்தக்கது. கலீபா உமர் தனது ஆட்சியில் சந்தையை மேற்பார்வை இடும் முக்கிய பொறுப்பை ஷாஃபா பின் அப்துல்லா என்கிற பெண்மணியிடம் அளித்திருந்தார். ஃபாதிமிட் கலீபாக்களின் காலத்தில் (6ம் நூ) யேமன் நகரத்தின் ஆளுநராக இருந்தது அர்வா பின்ட் அஹமத் என்கிற பெண். நம் காலத்தில் முஸ்லிம் நாடுகளில். பெனாசிர் பூட்டொ, கலீடா சியா, ஷேக் ஹசீனா ஆகியோர் நாடாண்டிருகின்றனர்.

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது தடை செய்யப்பட்ட இறுக்கமான முஸ்லிம் நாடுகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களில் பணி செய்யத் தடை இல்லை. தாலிபன் ஆட்சியிலும் கூட ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் வைத்தியம் செய்யக் கூடாது என்று மட்டுமே தடுத்திருந்தனர். மலேசியாவில் டோல் கேட்கள் அனித்திலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் பணியாற்றுவதைக் காணலாம். தற்போது சவூதி அரேபியாவின் கல்ஃப் ஒன் இன்டஸ்ட்ரியல் வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ள பாக்டர் நாஹிர் தாஹேர் ஒரு பெண்தான். உலக அளவில் நூறு ஆற்றல் மிக்க பெண்கள் என்கிற பட்டியலில் சுமார் 10 முஸ்லிம் பெண்கள் இடம் பெறுகின்றனர் (2007). எகிப்தின் கமர்ஷியல் இன்டஸ்ட்ரியல் வங்கியின் நிர்வாகப் பணியாளர்களில் 70 சதம் பெண்கள். தலைமை இடத்தில் இடரண்டாவதாக உள்ள சகரர் எல் சலாப் ஒரு பெண். ஷேய்கா லுப்னா அல் காசிமி என்கிற பெண்தான் ஐக்கிய அரபு எம்ரேட்களின் நிதி அமைச்சர். இப்படி நிறையச் சொல்லலாம். எகிப்திய நீதி மன்றங்களில் 31 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

3. சிறுபான்மையினராக இருப்பதால் உருவாகும் நெருக்கடிகள்: சச்சார் குழு அறிக்கையில் முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஒன்று முஸ்லிம் குடியிருப்புகளின் அருகில் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது. வகுப்புக் கலவர வாய்ப்புள்ள பகுதிகளில் முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து பள்ளிகள் தொலைவில் அமையும் போது பிள்ளைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் அவ்வளவு தூரம் செல்வதற்கு அஞ்சிப் படிப்பை நிறுத்திவிடும் போக்கைச் சுட்டிக் காட்டி அந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. பாடத் திட்டங்களில் வரலாற்றுத் திரிபுகள், தினம் சரஸ்வதி துதி பாடச் சொல்லிக் கட்டாயப் படுத்துதல் முதலியன பள்ளிக் கூடங்களை முஸ்லிம் குழந்தைகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடுகின்றன. சமூகத்தில் வேகமாகவும் ஆழமாகவும் பரவும் வெறுப்பு அரசியல் ஆசிரியர்களிடம் ஆழமாக வேரூன்றும்போது அவர்கள் முஸ்லிம் குழந்தைகளை வேறுபடுத்திப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

படித்து முடித்த பின் வேலை தேடும்போதும் முஸ்லிம் அடையாளம் ஒரு பிரச்சினையாகி விடுகிறது, இராணுவம் முதலான துறைகள் முஸ்லிம்களுக்கு இடமில்லாமல் போவது ஒரு எழுதப்படாத விதியாகிறது. சச்சார் அறிக்கை இது குறித்து விரிவாகப் பேசுகிறது. ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையை நடைமுறைப் படுத்தி முஸ்லிம்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்குவது, பெருகி வரும் தனியார் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட சில மேலை நாடுகளில் உள்ளது போல சம வாய்ப்பு ஆணையம் முதலியவற்றை அமைப்பது முதலியன இன்று உடனடித் தேவை ஆகிறது. சமூகத்தில் விரைவாகப் பரவும் வெறுப்பு அரசியலும்.  காவல்துறையும் ஊடகங்களும் கட்டமைக்கும் பயங்கரவாதப் பிம்பமும் முஸ்லிம்கள் அதிகாரம் பெறுவதற்குப் பெருந்தடையாகி விடுகின்றன.

இவை ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்பவைதான் என்றாலும் பெண்களுக்கு இதனால் வரும் பாதிப்புகள் கூடுதல். இதற்கான தீர்வை நாம் அரசியல் களத்தில்தான் தேட வேண்டும்

மூன்று

“ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவாற்றலில் குறைந்தவர்கள் (நகிசுல் அக்ல்). அவர்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே தகுதியானவர்கள் என இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள் இந்தக் கருத்து வலுவாக இயங்குகிறது. முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இது ஆழமாக வேரூன்றி உள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களின் இரண்டாம் பட்சமான நிலையை ஏற்றுக் கொண்டு, தங்கள் உரிமைகளை ஆண்களிடம் கையளித்து விட்டதுதான் முஸ்லிம் பெண்களின் இந்தப் பின் தங்கிய நிலைக்குக் காரணம். பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் ஒரு ஆலிமுடைய கருத்துக்கும் ஒரு ஆலிமாவின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை” என்கிறார் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் உஸ்மா நஹீத்.

“இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அடிப்படை வாதந்தான் மிகுந்துள்ளது என்கிற கருத்தோடுதான் பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன், நேரடியாகப் பார்க்கும் போதுதான் என்னுடைய கருத்து எத்தனை தவறு என்பது விளங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய முற்போக்கான சிந்தனை மாற்றம் வந்துள்ளது இன்றைய இந்திய முஸ்லிம் ஒரு புதிய முஸ்லிமாக உருப்பெற்றுள்ளதை என்னால் உணர முடிந்தது,. தனது குறுங்குழு மனப்பான்மையை ஒழித்த, முற்போக்குச் சிந்தனைகளால் தன்னை வளப்படுத்திக் கொண்ட, நாலும் தெரிந்த, கல்வியில் நட்டம் கொண்ட, தீவிர மதக் கருத்துக்களிலிருந்து விடுபட்ட ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது” என்கிறார் லண்டன் வாசியும், முக்கிய பத்தி எழுத்தாளரும், நூலாசிரியரும், “இந்திய முஸ்லிம்களின் வசந்தம்” எனும் நூலைச் சமீபத்தில் எழுதியுள்ளவருமான ஹஸன் சரூர்.

சச்சார் அறிக்கை முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்து விட்டது என விமர்சிக்கும் சீமா முஸ்தபா, “சாச்சார் அறிக்கையை வாசிக்கும்போது எல்லா இடங்களிலும் காணக் கிடப்பது முஸ்லிம்களின் பின் தங்கிய நிலை மட்டுமல்ல, அந்தப் பின் தங்கிய நிலையிலிருந்து விடுபடத் துடிக்கும் துடிப்பும் தான்” என்கிறார்.

இந்த ஆர்வத்தின் ஆரம்பப் புள்ளியாக நான் 1990 களின் தொடக்கத்தைக் காண்கிறேன். பாபர் மசூதி இடிப்பு, உலக மயத்தின் ஊடாக உருவான திறப்புகள் ஆகியவற்றின் ஊடாக சுய பரிசோதனையுடன் கூடிய, நவீன காலத்துக்குரிய முன்னேற்ற ஆர்வம் ஒன்று இந்திய முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியது. ஓட்டுக்குள் சுருங்கிய ஆமைகளாக இனியும் இருக்க இயலாது என அவர்கள் கிளம்பினர், முதன் முதலாக “முஸ்லிம்களை அதிகாரப் படுத்துதல்” (Muslim Empowerment) என்கிற குரல் எழுந்தது. மாநாடுகள் போடப்பட்டன. அரசியல் சட்ட அவையித் தொடரின் போது ஊத்தி மூடப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அறுபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேலுக்கு வந்தது. முஸ்லிம் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவான இந்த எழுச்சி ஒரு குறிப்பிட அளவு பெண்கள் மத்தியிலும் வெளிப்பட்டது. பெண்கள் வீட்டுக்குள் முடங்கப்பட வேண்டியவர்கள் என்கிற பழைய நம்பிக்கைகளிலிருந்து இந்தப் புதிய முஸ்லிம்கள் விடுபட்டனர். முன்னைக் காட்டிலும் முஸ்லிம் மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம், தாடி வளர்த்தல், ஹிஜாப் அணிதல் ஆகிய அடையாளங்களை உறுதிப் படுத்துதல் என்பன அதிகமாகிய அதே நேரத்தில், புதிய சூழலுக்கு உரிய வகையில் முற்போக்கான அணுகல் முறைகளை இத்துடன் இணைப்பது என்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அடையாள உறுதியாக்கம் அவர்களை பிற சமூகங்களிலிருந்து அந்நியப் படுத்துவதற்கு மாறாக, ஒரு இருபதாண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் பிற சமூகங்களுடன் அவர்களின் உறவு நெருக்கமாவதையும் காண முடிகிறது. இந்தச் சூழல் எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களின் நிலையில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

இந்த மாற்றம் ஏதோ புதிய முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு அளிக்கும் கொடை அல்ல. முஸ்லிம் பெண்களும் இன்று புதிய முஸ்லிம் பெண்களாக உருப் பெறுகின்றனர். “இந்தக் கல்வி அமைப்பு முஸ்லிம் பெண்களைப் புறக்கணித்தாலும், முஸ்லிம் பெண்கள் கல்வியைப் புறக்கணிக்கவில்லை” என்கிறது சச்சார் குழு அறிக்கை. முஸ்லிம் பெண்கள் கல்விக் கூடங்களில் சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார் முஸ்லிம் கல்வியாளர் ஃபரிதா லம்பே எழுதப் படிக்கத் தெரிந்த பெண்களின் வீதம் சில மாநிலங்களில் பிற மதத்தவரைக் காட்டிலும் அதிகமாகக் கூட உள்ளது” என்கிறார் அவர்.

இன்று முஸ்லிம் பெண்களின் நிலை நீதித் துறை ஆகட்டும், நிர்வாகத் துறை ஆகட்டும் எல்லாவற்றிலும் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளது என்பதில் அய்யமில்லை. ஆனால் இப்போது உருவாகியுள்ள இந்தப்  புதிய பிரக்ஞை உரிய பலன்களை முஸ்லிம் பெண்கள் மத்தியில் விரைவில் ஏற்படுத்தும். இதற்குத் தடையாக உள்ளவற்றை நாம் மேலே அலசியுள்ளோம். அவற்றைத் தகர்ப்பதில் நாம் கவனம் குவிக்க வேண்டும்.

என்ன வழி ?

1. முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படல் வேண்டும். வீட்டுக்குள் இருந்து  கடினமான கை வேலைகளின் மூலம் உழைத்துச் சம்பாதிக்கும் நிலைகளிலிருந்து பெண்கள் மீட்கப்பட வேண்டும். அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அதற்குரிய நிதி அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். செசன்யா, வங்க தேசம் முதலான நாடுகளில் “நுண் நிதியம்” (micro finance) என்பது இவ்வகையில் முஸ்லிம் பெண்களின் நிலை மேம்படுவதில் பெரிய பங்காற்றியுள்ளது.  பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கும் வகையில் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படுதல் மட்டுமின்றி நவீனப் படுத்தப்படவும் வேண்டும்.

2. பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும். ஆண்களே வருமானம் மற்றும் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்கிற நிலை போய் பெண்கள் சுயமாகத் திட்டமிட்டுச் செயல்படும் சூழல் குடும்பத்திற்குள் உருவாக்கப்பட வெண்டும். இதற்கு முஸ்லிம் ஆண்கள் மத்தியில் பெரும் மனமாற்றம் ஏற்படல் அவசியம்.

3, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பது போன்ற காலத்திற்குப் பொருந்தாத கட்டுப் பெட்டித் தனமான கருத்துக்களுக்கு நாம் விடை கொடுத்தாக வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள், ஆலிம்கள் மத்தியிலும். மார்க்க அறிஞர்களுக்கு இடையிலும் இது போன்ற நுண்மையான பிரச்சினைகளில் இரு எதிர் எதிர்க் கருத்துக்கள் நிலவுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களைப் பின்னுக்குத் தள்ளும், வீட்டுக்குள் முடக்கும் பழமைவாதிகளின் கருத்துக்கள் பல மிகவும் பலவீனமான ஹத்தீஸ்களின் அடிப்படையில் எழுகின்றன என மார்க்க அறிஞர்கள் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தீர ஆய்வு செய்தும் நபிகள் மற்றும் கலீபாக்களின் வரலாற்றிலிருந்தும் இன்றைய சூழலுக்குத் தக எடுத்துக்காட்டுகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். நபிகளின் காலத்திலோ, இல்லை அதற்குச் சற்றுப் பின்னரோ பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் கிடையாது, அவர்களுக்கு அரசியலில் பங்கில்லை, அவர்கள் புறப் பணிகளில் ஈடுபடக் கூடாது  என்கிற நிலை இல்லை என்பதற்குரிய வரலாற்றுச் சான்றுகளை நாம் மதிக்க வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

4.உலகம் கடந்த இருபதாண்டுகளில் பெரிய அளவில் மாறியுள்ளது. புதிய தொழில்கள், புதிய வாய்ப்புகள், புதிய கல்விகள் எல்லாம் உருவாகியுள்ளன. இவற்றில் நமக்கு உரிய பங்கைப் பெறுவதற்கு இங்கே வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல் தடையாகி விடக் கூடாது. முஸ்லிம் தீவிரவாதம் குறித்த ஊடகப் பிரச்சாரங்கள். அதற்குப் பின்னணியாக  காவல்துறை அவிழ்க்கும் பொய்க் கதைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வும் அத்தகைய நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர் கொள்வதற்கான  அமைப்புகளும் வலுவாக்கப்பட வேண்டும். ரங்கநாத் ஆணையப் பரிதுரைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி - அ.மார்க்ஸ்
...மேலும்

Sep 21, 2015

பெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள்: ஓர் அதிசய கிராமம் (வீடியோ)
டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒன்று, 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில், மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.

அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒன்று,  12 வயதில் ஆணாக மாறுகின்றன. பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண், 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாகிறான். அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு, பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை தோன்றுகிறது.

தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சி 5 வயதில் ஏற்பட தொடங்குகின்றன. உடலில் உள்ள ஹார்மோன்களில் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால் தான் இவ்வாறு நடப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

மேலும், 12 வயதுக்கு முன் வரை சிறுமிகளாக வாழும் இவர்கள், பின்னர் ஆண்களாக மாறியவுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

நன்றி - விகடன்
...மேலும்

Sep 20, 2015

திரை விமர்சனம்: மாயா


இரண்டு கதைகள் திரையில் ஓட ஆரம்பிக்கின்றன. ஒரு கதை, மாநகரின் புறத்தே இருக்கும் ‘மாயவனம்’ என்ற காட்டையும் மனநலக் காப்பகம் ஒன்றின் மர்மங்களையும் பற்றி யது. காப்பகத்தில் கர்ப்பவதியாகச் சேர்க்கப்பட்டு இறந்துபோன ஒரு பெண்ணைப் பற்றி ஆராய்ந்து எழுதப்படும் தொடர்கதையின் கதாசிரியர், அதை வெளியிடும் பத்திரிகை முதலாளி, அவரது மனைவி, அதற்குப் படம் வரையும் ஓவியர் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் வழியே பரபரப்பாக நகர்கிறது அந்தக் கதை.

இரண்டாம் கதையில் கண வரைப் பிரிந்து கைக்குழந்தை யுடன் வாழும் அப்சரா (நயன்தாரா) என்ற பெண் பார்வையாளர் களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறார். கணவன் மீதிருக்கும் மனத்தாங்கல் காரணமாகத் தனித் துப் போராடும் அவருக்குக் கடும் பண நெருக்கடி. இதற்கிடையில் மாயவனம் குறித்து எடுக்கப்பட்ட பேய்ப்படம் ஒன்று வியாபாரம் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. அதை இரவுக் காட்சியில் தனியாளாகப் பார்ப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு என அறிவிக்கிறார் அதன் இயக்குநர். பண நெருக்கடியால் வாடும் அப்சரா அந்தப் படத்தைப் பார்க்க ஒப்புக்கொள்கிறார். அந்தப் படத்தைப் பார்க்கும் போது அவருக்கு ஏற்படும் அமானுஷ்யமான அனுபவங்கள் தாம் மீதிக்கதை. இரண்டு கதைகளையும் இணைக்கும் புள்ளியை மிகத் திறமையாகவும் படைப்பூக்கத் துடனும் உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் அஸ்வின் சரவ ணன். முதல் பாதியில் எழுப்பப் படும் எல்லாக் கேள்விகளுக்கும் நம்பகமான பதில்களைத் தந்து பேய்ப் படம் பார்க்கும் அனுப வத்தை அற்புதமானதாக ஆக்கி விடுகிறது திரைக்கதை.

கதாபாத்திரங்களையும் அவர்களுக்கு ஏற்படும் நெருக் கடிக்கான காரணங்களையும் மிகையாக நீட்டிமுழக்காமல் சின்னச் சின்ன காட்சிகள் மூலமே பார்வையாளர்களை நம்ப வைத்துவிடுகிறார். உதாரணத் துக்கு ஓவியர் வசந்த் (ஆரி) தனது முன்னாள் காதலை மறக்க முடியாமல் தவிப்பதும், அவரது முன்னாள் காதலி (ரேஷ்மி மேனன்) அவரைச் சமாதானப்படுத்த முயலு வதும், தனக்குத் திருமண வாழ் வில் ஏற்பட்ட சிக்கலை வசந்திடம் சொல்ல முயல்வதுமான காட்சி கள் சிலவே. என்றாலும் அவை முறிந்துபோன காதல் ஒன்றின் வலியையும் கூண்டில் சிக்கிய திருமண வாழ்வொன்றின் தவிப் பையும் நமக்குள் அழுத்தமாகக் கடத்தி விடுகின்றன.

சின்னச் சின்ன கதாபாத்தி ரங்களும் தமக்கான முழுமை யுடன் வந்துபோகின்றன. தலை யற்ற உருவம் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறது என்னும் படிமம் முதலில் வசனமாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் காட்சியாக அது வரும்போது அந்தக் காட்சியின் வலிமையும் திரைக்கதையின் ஒருங் கிணைப்பும் அசரவைக்கின்றன. இரு வேறு பாதைகளில் பய ணிக்கும் பாத்திரங்களுக்குள் இருக்கும் தொடர்பைத் திரைக் கதை கச்சிதமாக நிறுவுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பிரச் சினையும் மற்றொரு கதாபாத் திரத்துடன் எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதைக் காட்சியமைப்புகளில் ஊடுபா வாகப் பின்னியிருக்கும் விதம் ஆச்சரியப்படுத்துகிறது. இரண் டாம் பாதியில் வரும் சுடுகாட்டுக் காட்சி பார்வையாளர்களை உலுக்கி எடுக்கிறது.

படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. ரூ.5 லட்சத்துக்காக படத்தைப் பார்த்து ஏற்ெகனவே ஒருவர் இறந்துபோன சூழலில் போலீஸின் விசார ணைக்கு உட்பட்ட இயக்குநர், அதை மறந்து உடனடியாக அப்சரா வுக்கு படத்தைக் காட்ட ஒப்புக் கொள்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மாயவனம் பற்றிய இரண்டாம் பாகப் படப்பிடிப்பும் தேவையற்ற திணிப்பாகவே தோன்றுகிறது. நயன்தாரா தன் பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்தி ருக்கிறார். தோற்றத்தை முன்னி றுத்தும் வேடங்களில் பிர காசிக்கும் அவர், முழுக்க முழுக் கக் கதாபாத்திரத்தை முன்னிறுத் தும் வேடத்திலும் ஜொலிக்கி றார். அளவான ஒப்பனை அவரது பாத்திரத்தின் நம்பகத்தன்மை யைக் கூட்டுகிறது.

அப்சராவின் தோழியாக வரும் ஸ்வாதி, ஓவியராக வரும் ஆரி, திரைப்பட இயக்குநரான மைம் கோபி ஆகியோர் வெகு இயல் பாகத் தத்தமது கதாபாத்தி ரங்களைக் கையாள்கிறார்கள். நாமும் மாயவனத்துக்குள் வந்துவிட்டோமோ என்ற உணர் வைத் தந்துவிடுகிறது சத்தியன் சூர்யனின் ஒளிப்பதிவு. காட்சிகளுக்கு ஏற்ற கச்சிதமான பின்னணி இசையைத் தந்திருக் கிறார் ரோன் ஈதன் யோகன்.

பேய்க் கதை என்றாலும் தாய்மையின் தவிப்பே கதையின் அடிநாதம். வஞ்சிக்கப்படும் பெண் களின் கதையே மாயவனமாக விரிகிறது. இத்தகைய கதைக்குப் பெண் பாடலாசிரியர்களையே தேர்வுசெய்தது பாராட்டத்தக்கது. ‘ஆயிரம் ஆயிரம்’, ‘தூங்கா கண்கள்’ ஆகிய பாடல்களை எழுதிய குட்டி ரேவதி, ‘நானே வருவேன்’ பாடலை எழுதிய உமாதேவி இருவரும் கதாபாத்தி ரங்களின் வலியை எளிமையும் உருக்கமுமாகப் பிரதிபலித்தி ருக்கிறார்கள். படத்தின் ஓட்டத் துக்குக் குறுக்கே வராத வண்ணம் பாடல்களை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, சிறந்த நடிப்பு, வலுவான காட்சிகள் ஆகியவற்றுடன் மாயா உண்மையிலேயே வித்தியாசமான பேய்ப் பட அனுபவத்தைத் தருகிறது.

நன்றி - தி இந்து
...மேலும்

Sep 18, 2015

அன்று அனாதை விடுதியில்...இன்று அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனி முதலாளி!
வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அது,   காரணங்களை அடுக்குபவர்கள்  அவசியம் படிக்க வேண்டியது ஜோதி ரெட்டி என்கிற சாதனை பெண்மணியின் கதையை. கண்ணுக்கு எதிரே இருந்த பிரச்னைகளை தாண்டி, கண்ணுக்கு தெரியாமல் தனக்கு முன்பிருந்த ஆயிரம் சவால்களையும் கடந்து, அனாதை இல்லத்தில் தொடங்கிய வாழ்கை இன்று அமெரிக்காவில் ஒரு கம்பெனியை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்.

1970 ஆம் வருடம் ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜோதி ரெட்டி,  குடும்ப சூழ்நிலை காரணமாக தாயில்லா பிள்ளை என்று பொய் சொல்லப்பட்டு, தன் சொந்த தந்தையாலேயே ஒரு அனாதை இல்லத்தில் விடப்பட்டார். அங்கேயே பல வருடங்கள் சொந்த பந்தங்களைக் கூட காணாமல்க் சொல்ல முடியாத தனிமையில் வாடிய போதும், பள்ளிப் படிப்பை கஷ்டப்பட்டு தொடர்ந்திருக்கிறார். விடுமுறை நாட்களில் கூட இல்ல மேற்பார்வையாளரின் வீட்டில் வேலை செய்து, அங்கேயே உண்டு உறங்கியிருக்கிறார் இளம் ஜோதி. பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே வீட்டிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டு, கையோடு திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தப்பட்டார். வேறு வழியின்றி 16 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானதோடு, தினமும் 5 ரூபாய் சம்பளத்திற்கு வயலில் தினக் கூலி வேலை பார்த்து வந்தார்.


1989 ஆம் வருடம், ஜோதியின் வாழ்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நேரு யுவ கேந்திரா சார்பில் கிராம இளைஞர்களுக்காக வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த வகுப்புகளில் பாடம் சொல்லிக் கொடுக்க,  படித்தவர்கள் வேறு யாரும் இல்லாததால் ஜோதி அழைக்கப்பட்டார். அந்த சம்பளமும் குடும்பத்தை பாதுகாக்க போதாததால், இரவு நேரங்களில் தையல் வேலையில் ஈடுப்பட்டார். தட்டச்சும் கற்றுக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த வேலையில் அவர் காட்டிய உத்வேகமும், வித்தியாசமான முயற்சிகளும் அவரை யுவ கேந்திர மண்டல மேற்பார்வையாளராக உயர்த்தியது.

அதன் பிறகு பல வாரங்கள் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக அலைந்தபோதுதான், கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார். சிரத்தை எடுத்து தானும் மேற்கொண்டு படித்தார். திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் முது நிலை பட்டப் படிப்பு வரை படித்து, அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தன் வீட்டிலிருந்து, வேலைப் பார்த்த பள்ளிக்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நேரங்களில் கூட அயராமல், தான் தைத்த துணிகளை பயணம் செய்யும் பேருந்துகளில் விற்பார். தனக்கு கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் கூட, இப்படி வாழ்வில் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற வாய்ப்பளிக்கும் வேலைகளில் ஈடுப்பட்டார்.

அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவு ஜோதிக்கு வரக் காரணம், அங்கிருந்து வந்த அவரின் உறவினர் ஒருவர். அங்கு சென்றால் நல்ல வேலை வாய்புகள் கிடைக்கும் என நம்பினார். இதனால் கணினி கற்க ஆரம்பித்தார். பாஸ்போர்ட், விசாவுக்கு பணம் சேர்க்க துவங்கினார். ஒரு வழியாக பணம் சேர்த்த பின், தன் இரு மகள்களையும் விடுதியில் விட்டுவிட்டு அமெரிக்க சென்றார். வாழ்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற ஆசையோடு பறந்து சென்ற ஜோதியை, அமெரிக்கா உடனடியாக வரவேற்கவில்லை. அங்கு சென்ற பின் சரியான வேலையும், தங்க ஒரு இடமும் கூட கிடைக்காமல் அலைந்தார்.

இறுதியில் 'மூவி டைம்' என்கிற வீடியோ கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்தியர் ஒருவரின் வீட்டில் வாடைகைக்கு தங்கினார். பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஒரு நல்ல அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால் விதி விளையாடியது. விசா பிரச்னையால் அந்த வேலையையும் விட வேண்டி வந்தது. சில நாட்கள் வேலையிழந்து நின்ற பின், சிறு சிறு வேலைகள் பார்த்தார். விசா பிரச்னையால், தான் சந்தித்த மன வேதனையை வேறு யாரும் அனுபவிக்கக்  கூடாது என்று விரும்பினார். அங்கு தோன்றியதுதான் கம்பெனி தொடங்கும் கனவு. அந்த துறையில் மேற்கொண்டு அனுபவம் பெற்றார். பல நாட்கள் மிக கடினமாக உழைத்தார். இன்று ஜோதி ரெட்டி, அரிசோனாவில் இயங்கி வரும் கீ சாப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனர்!

ஒரே நாளில் நடந்த அற்புதமல்ல இந்த சாதனை. இது, பல வருட இடைவிடாத போராட்டமும், வாழ்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே என்று உத்வேகம் கொடுக்கும்  துணிச்சலும் ஈன்ற வெற்றிக் கனி. பல கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்தின் இயக்குனர் ஜோதி, இன்றும் இந்தியா வரும்போதெல்லாம் பல அனாதை இல்லங்களுக்கும், மகளிர் கல்லூரிகளுக்கும் சென்று உரையாற்றுகிறார். கடும் வெயிலில் கூட வெறும் கால்களோடு அன்று நடந்த ஜோதி, இன்று அறை முழுக்க அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காலணிகளில் எதை அணிவது என யோசிக்க பத்து நிமிடம் ஆகும் அளவு உயர்ந்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ஒரு தட்டு நிறைய உணவை தன் கண்ணால் பார்க்க  மாட்டோமா என்று ஏங்கிய ஜோதி,  இன்று பல ஆதரவற்ற மற்றும் அனாதை இல்லங்களின் பசியை தீர்க்க உதவுகிறார். பண உதவியை யார்  வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் தங்கள் நேரத்தை ஒதுக்கி ஆதரவற்ற பிள்ளைகளோடு செலவழிக்க முடிவதே சிறந்த தானம் என்பது இவர் கருத்து. அதனால் அடிக்கடி இந்தியா வந்து தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இயலாதவர்களுக்கு செய்து வருகிறார் ஜோதி ரெட்டி.

சிறு சிறு தடைகளை வென்று, பெரிய பெரிய வெற்றிகளை சுவைக்க துடிக்கும் ஒவ்வொரு இந்தியப் பெண்ணிற்கும் முன்னோடியாக விளங்கும் ஜோதிக்கு ஒரு பெரிய சபாஷ்!

நன்றி- விகடன்
...மேலும்

Sep 17, 2015

இணையத்தளத்தில் உலாவுவதற்கு : கைநூல்

பெண்கள், தொடர்பூடக கூட்டமைப்பு (WMC) வெளியிட்டுள்ள மிகவும் பிரயோசனம் மிக்க வெளியீடு இது.
இணையத்தளத்தில் உலாவூவதற்கு ஆர்வம் காட்டும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கைநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு மிகவம் பொருத்தமானது. இலவசமாக கிடைக்கக் கூடியதாகவுள்ள பிரபலமான இணையப் பக்கங்கள் குறித்த அடிப்படைகளை இந்த நூல் விளக்குகின்றது. உலகளாவிய ரீதியில் பெண்களின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு ஊக்கமளித்தலே எமது நோக்கமாகும். இணையத்தில் மேலும் பால்நிலை சமத்துவமான எண்ணக்கருவை கட்டியெழுப்புவதற்கு இது உதவும். பல விளக்கங்கள், புகைப்படங்களுடன் எவ்வாறு இலவசமான வலைப்பதிவு அல்லது இணைய பக்கத்தை ஆரம்பிப்பது மின்னஞ்சல்களுக்கு சௌகரியமாக பதிலளிப்பது மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வலையமைப்பை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பான விளக்கங்களை இந்த நூல் தருகின்றது. உங்களுடைய முயற்சிகளுக்கு சிறந்த பயனுள்ள கைநூலாக இது அமையும் என நாம் நம்புகின்றோம். வாழ்த்துகள்!

...மேலும்

Sep 11, 2015

சாந்தி அனுஷா சச்சிதானந்தம்; ஒரு புத்திஜீவியின் நினைவுப்பரவல்1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெருவெற்றி பெற்றதையடுத்து அவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டில் தோன்றிய நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் சாந்தி சச்சிதானந்தமும் அவரது கணவர் மனோவும் கலந்துகொண்ட போது அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு ஆசனங்களைக் கைப்பற்றிய ஜெயவர்தன முதலில் செய்த கைங்கரியம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக காடைத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டதேயாகும். சுதந்திரக் கட்சிக்கு அத்தேர்தலில் வெறுமனே 8 ஆசனங்களே கிடைத்தன. இடதுசாரி இயக்கம் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் எதிரணியினரைப் பழிவாங்குவதற்காக பொலிஸாருக்கு இருவாரங்கள் விடுமுறை வழங்கப்போவதில்லை என்று கூட ஜெயவர்தன தேர்தல் பிரசார காலத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறைகளின் அடுத்தகட்டமாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தை நோக்கி நாடாளுமன்றத்தில், “உங்களுக்குப் போர் வேண்டுமென்றால் நாம் அதை உங்களுக்குத் தருவோம், உங்களுக்கு சமாதானம் வேண்டுமென்றால் அதையும் உங்களுக்குத் தருவோம்” என்று ஜெயவர்தன சவால் விடுத்தார். அவரின் இத்தகைய பேச்சுகளே பிறகு 1983 ஜூலை வரை தமிழர்களுக்கு எதிராக நாடுபூராகவும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு காடையர்களுக்கு உந்துதல் அளித்தது. காடையக் கும்பல்கள் தமிழர்களின் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் அடையாளம் கண்டு தேடித்தேடி கொள்ளையடித்தன, கொலைகளைச் செய்தன, தீ வைத்தன.

இத்தகைய அனர்த்தத்தனமான சூழ்நிலையில்தான் சாந்தியையும் மனோவையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இருவருமே சிறந்த புத்திஜீவிகள், நாட்டின் முற்போக்குப் புத்திஜீவிகள் வர்க்கத்தின் ஒரு அங்கமாக அவர்கள் விளங்கினார்கள். வன்முறைகளில் அவர்களது வீடும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இருவரும் தங்கள் குழந்தைகளுடன் யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் செல்ல வேண்டியேற்பட்டது. பிறகு நிலைமை ஓரளவு சுமுகமானதும் கொழும்பு திரும்பிய சாந்தியும் மனோவும் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் அடிக்கடி கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

சாந்தி வாழ்வூக்க உறுதியும் சுறுசுறுப்பும் கொண்ட ஒரு பெண்மணி. மனித உரிமைகளுக்காகவும் சகலரதும் கௌரவத்துக்காகவும் குரல்கொடுத்துப் போராடிய ஒரு பெண்மணி. புத்திஜீவிகளுடன் மிக எளிதாகவே அன்புரிமையுடன் பழகும் சுபாவம் கொண்டவர். அவரது அறிவும் புத்தி ஜீவித்துவ விவேகமும் பெருமகிழ்ச்சி தருபவை. மிகவும் அமைதியானதொரு வாழ்வை முன்னெடுத்த அவர் அர்ப்பணிப்புச் சிந்தை கொண்டவர். வடக்கு கிழக்கில் உள்ள சமூக இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். விழுது அமைப்பு சாந்தியின் உருவாக்கமே. சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்துவதையும் வடக்கு கிழக்கில் சமூகங்கள் மத்தியில் அறிவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் மக்கள் சேவையையும் இலட்சியமாகக் கொண்டது அந்த அமைப்பு.

விழுது அமைப்பு பற்றிய விளக்கக் குறிப்பில் சாந்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “ஒழுங்கான ஆட்சிமுறை இல்லாமல் இருப்பதே இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளின் அடிப்படையாகும். அதிகாரங்களை மத்தியில் குவித்திருக்கும் அரசு உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்திருந்தது. அரசியல் உயர்மட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்றன. சிவில் சமூகம் ஊக்கமற்றுக் கிடக்கிறது. நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணங்கள் இவையேயாகும். நல்லாட்சி ஏற்படுத்தப்படாவிட்டால், எந்தளவுதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் நாட்டை மீட்டெடுக்க முடியாது. இரண்டரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக போர் நீடித்த ஒரு நாட்டில் இராணுவமயமாக்கல் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. சிவில் சமூகத்தினால் சுதந்திரமாகப் பேச முடியவில்லை. இத்தகைய பின்புலத்திலே, இளைஞர்கள், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்கள் ஊடாக உள்ளூராட்சி அமைப்புகள், தனியார்துறை மற்றும் ஊடகத்துறை ஊடாக சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றவேண்டியது மிகமிக அவசியமானது என்று விழுது கருதுகிறது”.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாந்தி கூடுதல் அக்கறை காட்டினார். அந்த மாவட்டத்தில் ஒரு தடவை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். பெண்களின் இயக்கங்களில் சாந்தி எப்போதுமே முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டார். பெண்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதுமே போராடினார். ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்ட சகாக்களுடன் இணைந்து சாந்தி முன்னெடுத்த அரும்பணிகளை பின்வருமாறு விளக்கலாம்.

விதவைகள் சாசனம்

போரின் காரணமாக கணவர்மாரை இழந்து விதவைகளானோரினதும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களினதும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த சாந்தி பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களின் ஈடுபாட்டுடன் விதவைகளுக்கான சாசனம் ஒன்றை வரைந்தார். வடக்கு கிழக்கில் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள் தலைமையில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 85 ஆயிரமாகும். மகளிர் விவகார அமைச்சு, வடக்கு – கிழக்கு, வடமேல் மாகாண சபைகள், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு அந்த விதவைகள் சாசன பிரதிகள் கையளிக்கப்பட்டன.

போஷாக்குத் திட்டம்

ஒரு கோப்பை உணவு (One dish meal என்ற பெயரில் போஷாக்கு ஆலோசகரான திருமதி விசாகா திலகரத்னவுடன் சேர்ந்து போஷாக்குத் திட்டத்தை சாந்தி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மூதூர், புத்தளம் மற்றும் வேறு சில பகுதிகளில் ‘சஞ்சீவி’ சேதன உணவு கொட்டகைகள் நிறுவப்பட்டன. தெற்காசிய நாடுகளில் வகைமாதிரி உணவு என்று அங்கீகரிக்கப்பட்ட இதை விளங்கிக் கொள்வதற்காக உலக வங்கி பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இந்தியாவில் இருந்து ஒரு குழுவினரை இலங்கைக்கு அழைத்துவந்தது. (2015 ஆகஸ்ட் 29 கொழும்பு ரெலிகிராபில் விசாகா இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.) போர் பற்றிய பெண்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், வவுனியா, மொனராகலை, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடாவில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மத்தியஸ்த சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்

கல்வி வட்டம்/ வாசகர் வட்டத்தின் ஊடாக மத்தியஸ்த சபை கோட்பாட்டை அறிமுகப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் மத்தியஸ்த சபைகளில் பங்கேற்கும் பெண்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கு மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு உதவுவதில் சாந்தி பெரும்பணியாற்றினார். நாடு பூராகவும் 2012ஆம் ஆண்டில் சராசரியாக 5 சதவீத பெண்களே மத்தியஸ்த சபைகளில் பங்கேற்றார்கள்.

பயிற்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் கருத்தோவியக் கைநூலொன்றை தமிழ் மொழியில் தயாரித்த சாந்தி, பெண்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி சபைகளை அணுகுவதற்கு உதவி செய்தார். உதாரணமாக, இத்தகைய அணுகுமுறை மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருமால்புரம் கிராமத்தில் மின்சார இணைப்பைப் பெறக்கூடியதாக இருந்தது. இவ்வாறாக வலுவூட்டப்பட்ட பெண்களினால் 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தங்களின் தேவைகளுக்காக சுமார் 70 இலட்சம் ரூபாவைத் சேகரிக்கக்கூடியதாக இருந்தது.

உள்ளூராட்சி முறையில் ஆலோசனைக்குழு நியமனம்

சில உள்ளூராட்சி சபைகள் பெண்களின் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் “வாக்குகளால் பேசுவோம்” என்ற தலைப்பில் தமிழில் விவரணத் தொகுப்பு ஒன்றைத் தயாரிப்பதில் சாந்தி பெரும் பங்காற்றினார். இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்தல்களில் வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கையை கணிசமானளவுக்கு அதிகரிக்கக்கூடியதாக இருந்தது.

அரசியல் பங்கேற்பு

பெண்கள் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் வாக்குகளால் பேசுவோம் அமைப்புகள் பலவற்றுடன் ஒன்றிணைந்து சாந்தி அரசியலில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பிரசாரம், ஒழுங்கமைப்பு மற்றும் விளம்பரம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் பெண்களுக்கு பயிற்சியளித்தார். அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமுடைய பெண்களின் பெயர்ப்பட்டியல்கள் சகல அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

பெண்களின் 100 கோடி எழுச்சி

2012ஆம் ஆண்டு சாந்தி தனது அமைப்பின் மூலமாக பெண்களின் 100 கோடி எழுச்சி (One Billion Rising of Women) என்ற திட்டத்தை முன்னெடுத்தார். இதன் ஒரு அங்கமாக சாந்தியும் அவரது சகோதரி செல்வியும் பாடிய பாடல் யூரியூப்பில் வெளியிடப்பட்டது.

இந்தச் செயற்றிட்டங்கள் சகலவற்றுக்கும் மேலதிகமாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த No Run Tell திட்டமொன்றையும் சாந்தி அறிமுகப்படுத்தினார்.

பல வருடங்களாக நானும் எனது குடும்பத்தவர்களும் சாந்தியுடன் நடத்திய சம்பாஷனைகளையும் கலந்துகொண்ட பல இரவு விருந்துபசாரங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். சாந்தி எப்போதுமே தனது கருத்துகளை தெளிவாக விளக்கிக் கூறுவதில் பிரமிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்தார். சிங்களவர்கள் மத்தியில் அவர் வாழ்ந்தார். ஆனால், முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணாகவே அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். விடுதலைப் புலிகளுடனும் தமிழ்த் தேசியவாத இயக்கத்தின் பழைய தலைமுறையினருடனும் சாந்திக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. காலப்போக்கில் அவரின் புத்திஜீவித்துவ ஆர்வம் ஆன்மீகப் பரிமாணங்கள் பலவற்றையும் எடுத்தது. பற்றுறுதியுடனும் உற்சாகத்துடனும் சாந்தி அவற்றை கைக்கொண்டார். அவரது ஆன்மீக பயணமும் தியானமும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரின் வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் அவரை உறுதி குலையவிடாமல் வைத்திருந்தன.

கலாநிதி குமார் ரூபசிங்க

நன்றி -  மாற்றம்
...மேலும்

Sep 9, 2015

சக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் - தர்மினி


பிரசன்னா இராமசாமியின் சக்திக்கூத்து பாரிஸில் 3 நாட்களுக்கு நடைபெறப்போகின்றது என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்து ஆர்வமிகுதியோடு காத்திருந்தேன். இவர் 24 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். தமிழ்-உருது மற்றும் ஆங்கிலத்திலும் முழுநீளநாடகங்களோடு நாடகவாசிப்பு-பயிற்றுவித்தல் என நாடகம் தொடர்பான ஈடுபாட்டோடு வாழும் பிரசன்னா இராமசாமியை நாடகத்தோடு இணைந்த பெயராய் தான் அறிந்திருந்தேன்.யுத்தம் அதனால் குழந்தைகளும் பெண்களும் படும் துயரங்கள்-பிரிந்து சென்ற தாய்நிலம்-புதிய வாழ்வு எனப் போர் விளைவித்த இரு பக்கங்களும் பேசப்படும் படைப்புகளை உருவாக்குகிறார். நாடகங்களின் உள்ளீடுகள் பெரும்பாலும் கவிதைகள் கிரேக்க-தமிழ்க்காவியங்களின் சில பகுதிகளை உள்வாங்கியவை. செவ்வியல் பிரதிகளைத் தற்போதைய வாழ்வின் துயரங்களும் மகிழ்வுகளும் பிரதிபலிக்கும் விதமாக அன்றைய – இன்றைய கதைகளைப் பிணைத்தும் விலத்தியும் செய்யும் படைப்புகள் மனிதநேயமும் கலைநேர்த்தியும் மிக்கவை.இசையையும் நடனத்தையும் இவர் கையாளும் விதம் சுவாரசியமானது. இரசனைக்குரியது. அழகியல் கொண்ட அரசியலால் எம்மனங்களை அசைத்துவிடுகிறார் பிரசன்னா இராமசாமி.

கடந்த யூன் மாதம் 26ம் திகதி மாலை 8.30க்கு எதிர்பார்ப்போடு நாடக அரங்குக்கு சென்றேன்.வாசலில் நின்று நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார் பிரசன்னா இராமசாமி. அடையாளங்கண்டு அரவணைத்தார்.பேஸ்புக்கிற்கு நன்றி. அரங்கினுள் நுழைந்து இருக்கை தேடி அமர்ந்த போது அரங்கின் சூழ்நிலையே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். வாசுகனின் ஓவியங்கள் அரங்கில் தொங்கிக் கொண்டிருந்தன.அவை சக்திக்கூத்திற்கு எம்மைத் தயார்ப்படுத்தும் மனநிலையைத் தருவதற்கான ஆயத்தமாக இருந்தன.நாடகம் நடக்கும் நிலப்பரப்பைவிட பார்வையாளர்களின் இருப்பிடம் சிறியதாகவிருந்தது.50பேர் அமரக்கூடிய அரங்கது.மூன்றாவது நாளான அன்று சக்திக்கூத்து ஆரம்பமாகும் போது ஒரு இருக்கை கூட வெறுமையாயில்லை. தமிழ்மொழி பேசுவோர் மட்டுமின்றி பிரெஞ்ச் மொழி பேசுவோரும் அங்கே எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

மேடை என்ற அமைப்பின்றி பார்வையாளருக்குச் சமமாக நிலத்தில் ஆற்றுகை நடைபெற்றது. பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமான இடைவெளி மிகக்குறைவு.கலைஞர்கள் மனசுக்கு நெருக்கமான மனநிலையைத் தந்தனர். உடல் முழுவதும் துணி சுற்றிய பெண்ணுடல் நிலத்தில் புரண்டபடி அரங்கமெங்கும் அலைந்தது.பேரொளி தொடர்ந்த அவ்வுருவம் ரோகிணி. ஆரம்பமே பார்வையாளர்களது புலன்களைக்குவியச் செய்தது.ரேவதி குமாரின் ஆலாபனை இசையலைகளாய் அப்பெண்ணுருவைத் தொடர்ந்தன. மெதுமெதுவாய் உடல் சுற்றப்பட்ட துணியிலிருந்து விடுபட்டு எழுந்த உடல் வேகமெடுத்து ஓடி-துள்ளி-சுழன்று-பொங்கி அதிர்ந்தது. ஆற்றுகையின் இறுதி நிமிடம் வரை ரோகிணியின் சக்தியின் அளவு சற்றும் குறையவில்லை.அவ்வரங்கை விட்டு ஒரு செக்கனும் அவர் விலகவுமில்லை.ஏறத்தாழ 85 நிமிடங்கள் நாடகம் இடைவேளையற்று நடைபெற்றது.

‘நான் திரௌபதி’ என்ற சுயஅறிமுகத்தோடு அறிமுகமாகும் அப்பெண் பாத்திரம் கேட்கிறார். நான் திரௌபதி பாத்திரம் ஏற்கிறேன். உங்களுக்குத் தெரியும் எனக்கு நீளமான கூந்தலில்லை.இந்த விக் தேவையா? எனக் கையிலிருந்த நீளத் தலைமுடியைக் காட்டிக் கேட்டுவிட்டு ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிடுகிறார்.


நெல்லை மணிகண்டனின் தப்பு மற்றும் உறுமியின் இசை அதிர்வுகள் ரோகிணியின் குரலுக்கும் கூத்திற்கும் இசைந்து நாடகத்தின் தொனியை உயிர்பாக்கியது. நெல்லை மணிகண்டனது இசைக்கருவிகள் மட்டுமே அங்கிருந்தவை. தப்பும் உறுமியும் முன்னும் பின்னுமாக உபயோகிக்கப்பட்டது கூத்தின் உணர்நிலையை உச்சம் நோக்கி எடுத்துச்சென்றன. ரேவதி குமாரின் ஆலாபனைகளும் பாடலும் என்னை அதிகம் கவரவில்லை. எனக்கு அந்த இரசனையில்லாமலிருக்கலாம். ரோகிணியின் நடையும் ஆடலும் கவிதை வரிகளைப் பாடிய குரலும் கம்பீரமும் பெரும்பங்கான தனியொருவரது நடிப்பென்ற சலிப்பைத் தரவேயில்லை. அவ்வரங்கிலிருந்த தூணைக் கூடத் தன் அரங்காடலுக்கு ஒரு கருவியாக உபயோகித்தார் ரோகிணி.கோபமும் வேகமும் கொண்ட பெண்ணாக யுத்தத்தின் விளைவுகளை விபரித்தார். போர் பெண்களையும் குழந்தைகளை ஏதுமறியாதவர்களை என்னசெய்கிறது? அவர்களது குரல் எவ்விதமாய் ஒலிக்கிறது? சக்திக்கூத்து சமகாலம், கிரேக்கக் காவியப் பாத்திரம், திரௌபதி எனப் பாடல்களும் வசனங்களும் அதிர்வுகளுமாய் பெண்களின் துயரத்தைப் பிரவாகித்தது.பீஷ்மராக உருவகப்படுத்தியிருந்த விளக்குமாறும் பலரது கவனத்தையும் கவர்ந்தது.அந்த அரசமுடியை எள்ளிநகையாடும் வடிவமாகத்தெரிந்தது.

திரைப்படங்களில் எம்மைக் கவர்ந்த ரோகிணியின் நடிப்பும் குரலும் இன்னும் அதிகமதிகமாய் இங்கு வெளிப்பட்டது. நான் எந்தவொரு சினிமாவிலும் பார்த்திராத ரோகிணியின் திறமையை இங்கு கண்டேன். அவர் சக்தி வடிவாயிருந்தார். நெல்லை மணிகண்டனும் ரேவதி குமாரும் அவரைச் சன்னதங்கொள்ளச் செய்யும் இசைகளை வழங்கியபடி தம் பங்கை வழங்கினர்.ஒரு அலை போலவும் காற்றுப்போலவும் அவ்வப்போது பாடியபடியே சுழன்று கொண்டிருந்தார் ரேவதி குமார். இவர்கள் மூவரோடு இசைந்த ஒளிச்சேர்க்கைகளை ஒரு    மூலையிலிருந்து ஓவியர் வாசுகன் வழங்கினார்.ஸ்பீக்கர் , மைக் என எதுவுமற்று மூவரும் தம் இயற்கையான இசையை- பேச்சை- பாடலை உணர்வுகள் வழியாக உரத்தும் பலத்தும் கலையாக்கினர். அவர்களோடு பாரிஸில் வாழும் கலைஞர்கள் நான்கு பேர் சிறு பங்களிப்பொன்றையும் அழகாக வெளிப்படுத்தினர்.

பாரதியார் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் பாடல்கள் சேரன், அவ்வை, திருமாவளவன்,சுகுமாறன், அகிலன் ஆகியோரின் கவிதைகளும் அத்துடன் பிரசன்னா இராமசாமியின் வசனங்களும்  எனப் பெண்ணுடலை முன்வைத்து நடக்கும் பாலியல் வன்முறையைப் பேசின.ரோகிணியின் உச்சரிப்பில் அவையெல்லாம் வேறொரு வடிவங்கொண்டனவாய் எம் மனமும் உடலும் அதிரும் வண்ணமாயின.

‘ மகாராஜாவுக்கு மகளாய்ப் பிறந்து ஐந்து மகாராஜாக்களுக்கு மனைவியாக வாழ்ந்த திரௌபதிக்கே துகில் களையும் ஆணுலகம் பெண்களையும் முதியவர்களையும் அது மட்டுமின்றிக் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்வது கடினமா?’ பாலியல் வன்கொடுமை செய்வது கடினமா?’என்ற தொனிபட யுத்தத்துக்காளான நாடுகளிலும் நம் சமூகத்திலும் பெண்மீதான பாலியல் வன்முறைகளையும் திரௌபதியின் அந்தரித்த நிலையையும் கலையாக்கி அவர்கள் பெண்ணென்ற உடல் கொண்ட காரணத்தால் வன்முறைக்காளாவதை ஆவேசமும் கோபமும் கொண்ட பெண்சக்தியாய் அவ்வரங்கில் பறையும் உறுமியும் அதிர அதிர நிலம் நடுங்கக் கூத்தாடிய சக்தியின் சொரூபமாய் தன் உடலாலும் குரலாலும் ரோகிணி கூத்தாடினார்.

என் விழிகளைத் துடைக்கும் போது யாராவது கவனிக்கின்றார்களோ என்ற வெட்கத்தில் அக்கம்பக்கம் திரும்ப இயக்குனரான பிரசன்னா இராமசாமி தன் கண்களிலிருந்து நீர்வழிய அதைத் துடைத்தபடியிருந்ததையும் அவதானித்தேன். பெண்ணுடல் மீதான போரின் விளைவுகள் மற்றும் ஆணுலகின் அதிகாரத்தைக் கேள்வி கேட்ட கலையொன்றை உடல் நடுக்கத்துடனும் உள்ளச்சிலிர்ப்புடனும் அனுபவித்த அன்றைய அரங்காடல் கலையின் தரிசனத்தைத் தந்தது.
நன்றி - ஆக்காட்டி
...மேலும்

Sep 8, 2015

பாலியல் அடிமை என்பதுதான் பெண்ணின் அடையாளமா?சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி கார்த்திகா, காதலிக்கவில்லை என்று தொடர்ந்து கேலிக்குள்ளாகி தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கேலி செய்தவர்கள் சக வயதில் உள்ள சக பள்ளி மாணவ, மாணவிகளுமே. இந்தக் கேலிப் பேச்சுக் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கார்த்திகா புகார் தெரிவித்தும் அவர்கள் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தில் யார் குற்றவாளி என்று கேட்டு, நேரடி பதிலை பெறுவதைவிட இதன் சமூகப் பின்னணிகளை ஆராய்வது அவசியமெனத் தோன்றுகிறது.

ஒரு பெண்ணின் உருவம் எப்படி இருக்க வேண்டும்?

காய்கறிச் சந்தையில் போய் ‘நல்ல பழுத்த தக்காளியாப் பார்த்துக் கொடுங்க’ என்பதுபோல் ஒரு பெண்ணின் உருவம் இந்த உயரத்தில், இந்த எடையில், இந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறை செய்கிறது. கருப்பாக இருக்கக் கூடாது,உயரமாகவும் இருக்கக் கூடாது, குள்ளமாகவும் இருக்கக் கூடாது, குண்டாகவும் இருக்கக் கூடாது, ஒல்லியாகவும் இருக்கக் கூடாது என்று பெண்ணின் உருவத்தை செதுக்குகிறது சமூகம். தொன்மைகாலம் தொட்டே பருத்த, திரண்ட மார்பகங்களும், கொடி போன்ற இடையும் பெண்ணுக்கான உருவ இலக்கணங்களாகச் சொல்லப்பட்டு இலக்கியங்களும் சிற்பங்களும் வடிக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் புலவர்கள், சிற்பிகளின் பாலியல் கற்பனைகளே தவிர, மனித உடலமைப்பின் படி சாத்தியமற்றவை. அறிவின் கண்ணோட்டத்தில் பார்த்தால் மார்பகங்கள் திரண்டு இருக்க முடியாது, தளர்வாகத்தான் இருக்கும். சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை, தோள் சேலை அணியாத பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தால் இதுபுரியும். மார்பகங்கள் தெரியும் அந்தப் பெண்களின் புகைப்படங்களில் விரசம் இருக்காது. கற்சிலைகளில் விரசம் இருக்கும். விரசம் ஏற்படுத்தத்தான் கற்சிலைகள் படைக்கப்பட்டன என்று பகுத்தறிகிற அறிவும் நமக்கில்லை.

எது விரசம்?


 கற்பனையான உதாரணங்களைத் தேடும் ஆண்கள்!

ஆனால் நமது ஆண்மய சமூகம் காலம்காலமாக கற்பனையான உதாரணங்களைத்தான் பெண்களிடத்தில் திணிக்கிறது, தேடுகிறது. தொல் இலக்கியங்களின், சிற்பங்களில் நீட்சியாக இன்றைய வெகுஜென ஊடகங்களும் அதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. குறிப்பாக சினிமாக்கள் போகப் பொருளாகவும் ஆணுக்கு சேவை செய்யும் பாலியல் அடிமைகளாகவும் பெண்களைத் தொடர்ந்து கட்டமைப்பதில் பெரும்பங்காற்றி வருகின்றன. ஆணின் பாலியல் இச்சைகளை தீர்ப்பதன் பொருட்டே ஒல்லி – குண்டு, ஆணுக்கேற்ற உயரம் என பெண்களின் உருவம் குறித்து சினிமாக்கள் மீண்டும் மீண்டும் பாடம் எடுக்கின்றன. ஒரு பெண் இந்த வயதில் பருவமடைய வேண்டும் என்பது தொடங்கி இந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாடம் எடுப்பது தொடர்கிறது.

நுகர்வு ஏற்படுத்தும் தாக்கம்

மிக அதிகமாக சினிமாவை நுகரும் நம் சமூகமும் சினிமா உருவாக்கிய பெண் குறித்த பொது பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. நாயகனின் மனம் கவர்ந்த நாயகிபோல தாங்களும் மாறவேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய இளம் பெண்களுக்கு ஏற்படுகிறது. சினிமாவின் நீட்சியாக உள்ள இணையம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த பிம்பத்தின் அடிப்படையிலேயே பெண்ணை அணுகுகின்றன. சினிமா நடிகைகளுக்கு மட்டும்தான் வில்போன்ற திருத்தப்பட்ட புருவம் இருந்தது. இன்றைக்கு 10 வயது சிறுமியும் புருவம் திருத்திக் கொள்ள விரும்புகிறார். ஆண்களை ஈர்க்கிற விதமாக பெண்ணின் முகம் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் வில்போன்று வளைந்த புருவத்தை பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற திணிப்பு குறித்து பெண்களும்கூட அறிவதில்லை. முகத்திலுள்ள பூனை முடியை நீக்குவதற்கும் முகத்தின் இயல்பில் இருக்கக்கூடிய மேடுபள்ளங்களும் மூடி மழுமழுமென முகம் பொலிவுறும் களிம்புகள் விற்கப்படுகின்றன. இத்தகைய பொருட்களின் உற்பத்தி என்பதே பெண்களை பாலியல் நுகர்வுக்கானவளாக மாற்றுவதற்கே என்பதை பெண்கள் உணரவேண்டும்.

மறுப்பதும் எதிர்ப்பதும் கேலிக்குரியது

சமூகமும் சமூகத்தை வடிவமைக்கும் ஊடகங்களும் முன்னிறுத்தும் ‘பெண்ணை’ மறுப்பது எதிர்ப்பது கேலிக்குரியதாகிறது. இதன் ஒரு உதாரண விளைவே பத்தாம் வகுப்பு மாணவி கார்த்திகாவின் தற்கொலைக்குக் காரணமான நிகழ்வும். காதலிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமும் உரிமையுமாகும். அதை ஏன் மற்ற மாணவிகள் கார்த்திகா மீது திணித்தார்கள்? உதாரணப் பெண்ணுக்குரிய குணங்களிடமிருந்து வேறுபட்டு நின்ற கார்த்திகாவை மனவுளைச்சலுக்கு ஆளாக்கியது இந்த மாணவிகளா? அல்லது இந்த மாணவிகளிடம் சமூகம் கட்டமைத்திருக்கும் பெண் பற்றிய பிம்பமா? பெண் பற்றிய கற்பனை பிம்பத்தை ஊடகங்கள் எப்போது மாற்றிக் கொள்ளும்?

நன்றி - நந்தினி - ippodhu.com
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்