/* up Facebook

Aug 17, 2015

எனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்


அந்த சன்னலைத் திற, நான் கடலைப் பார்க்க வேண்டும்

-- ரொஸாலியா தெ காஸ்த்ரோ

ஸ்பெயின் நாட்டின் வடமெற்குப் பகுதியில் உள்ளது கலீஸியா. அழகிய மலைத்தொடர்களையும், எண்ணற்ற வளைவுகளையும், கடலால் குடைந்தெடுக் கப்பட்ட குறுகிய நீர்க்குகைளையும் கொண்ட கலீஸியாவின் நீண்ட கடற்கரை அட்லாண்டிக் கடலைத் தழுவி நிற்கிறது. சமீபத்தில், ‘Implicadas No Desenvolvemento’ என்ற பெண்ணிய அமைப்பின் விருந்தினனாக கலீசியாவில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. மொழி, இலக்கியம், கலை, அரசியல் குறித்துப் பலருடன் விவாதிக்கவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக இப்பயணம் அமைந்தது.இன்று ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கலீஸியாவில், கலீஸிய நிலம், கலீஸிய மொழி, கலீஸியாவின் தனிப்பட்ட பண்பாட்டுவழக்கங்கள் சார்ந்த ஆழ்ந்த பற்றும் பெருமிதமும் கொண்ட இயக்கங்கள் தீவிரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகின்றன. ஸ்பானிய மொழி மற்றும் பண்பாட்டின்ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இயக்கங்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. கலீசியன், பாஸ்க், ஆண்டலூசியன், கத்தலன், வாலன்சியன், மின்யார்க்கன் போன்ற பல மொழிகளையும் அவை வழங்கி வரும் நிலப்பகுதிகளையும் கொண்டது, இன்று ஒன்றுபட்ட தேசமாக அறியப்படும் ஸ்பெயின். எனினும், மொழி மற்றும் பண்பாட்டு வேறுபாடுகளும் பன்மையும் தேசம் என்ற ஒன்றுபட்ட அடையாளத்திற்கு எதிரானவையாகக் கருதப்பட்டு தேசத்தின் மொழி என்று நிலை நிறுத்தப்படும் ஸ்பானியமொழி உருவான வரலாறு நீண்ட ஒன்று.

ஐபீரிய தீபகற்பத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மொழியான கஸ்திலியன் மொழியே பின் தேசத்தின் மொழியாக, ஸ்பானியமொழியாக உருப்பெற்றது. 15ஆம் நூற்றாண்டில் போர்த்துகல் தனி நாடான பிறகு ஐபீரிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளை ஒன்றுபட்ட அரசாட்சியின் கீழ் கொண்டுவந்தனர் கஸ்தீல் என்னும் பகுதியை ஆண்ட கத்தோலிக்க மன்னர்கள். அன்றிலிருந்து பெருகிய கஸ்தீல் பகுதியின் செல்வாக்கின் காரணமாக, அங்கு பேசப்பட்ட கஸ்தீலிய மொழி ஒன்றிணைக்கப்பட்ட தேசம் முழுவதிற்குமான மொழியாக்கப்பட்டது. தேசம் என்ற கற்பிதத்தை நிலைநிறுத்தும் கருவியாக கஸ்தீலிய மொழி பயன்பட்டு, வட்டாரம் சார்ந்த தன் குறுகிய அடையாளத்தைத் துறந்து தேசம் முழுவதற்குமான மொழியாக, ஸ்பானியமொழியாக நிலைபெற்றது. தேசம் மற்றும் தேசமொழியாக்கத்தின் வன்முறைகளை எதிர்க்கும் போராட்டங்கள், அரசியல் மற்றும் இலக்கியச் செயல்பாடுகளாக ஸ்பெயினின் பல பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இன்றும் ஸ்பானியமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் விதமாக கலீஸிய எழுத்தாளர்கள் பலர் அம்மொழியில் தொடர்ந்து தீவிரமான இலக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஜெனரல் ஃப்ரான்கோவின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு, 1978இல் உருவான ஸ்பானிய அரசியல் சட்டத்தின்படி அந்நாட்டின் மொழிப்பன்மை போற்றப்பட வேண்டிய ஒன்று என்ற கருத்து கோட்பாட்டளவிலான ஒன்றாகவே உள்ளது. யதார்த்தத்தில், அரசு மொழியான ஸ்பானிய (கஸ்தீலியன்) மொழியின் ஆதிக்கத்தின் காரணமாகவும், எல்லாப் பகுதியினரும் கஸ்தீலியன் மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையினாலும் உண்மையில் கலீஸிய மொழியைத் தீவிரமாகப் பயன்படுத்தும் சூழல்களும் தளங்களும் குறைவே. இதன் காரணமாக, ‘மினீஜீறீவீநீணீபீணீs’ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் இயன்றவரை கலீஸிய மொழியைப் பயன்படுத்துகின்றனர். உலகின் மற்ற பகுதிகளின் இலக்கியங்கள், கலைகள், பண்பாடுகள் ஆகியவற்றிற்கும் கலீசிய மொழிச் செயல்பாடுகளுக்கும் இடையே உரையாடல்களை உருவாக்கவும் வலுப்படுத்தவும் முயற்சி செய்துவருகின்றனர். தமிழ்க் கவிஞர்களான சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி, தமிழச்சி ஆகியோரின் கவிதைகள் கலீஸிய மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன கலீஸிய இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர் ரொஸாலியா தெ காஸ்த்ரோ. 1837இலிருந்து 1885 வரையிலான தனது வாழ்வில் ரொஸாலியா தெ காஸ்த்ரோ தன்னை ஒரு சிறந்த கவிஞராகவும் உரைநடையாசிரியராகவும் நிலைநிறுத்திக்கொண்டார். ‘கலீஸியப் பாடல்கள்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பு 1863ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் முன்னுரையில் ரொஸாலியா இவ்வாறு கூறுகிறார்:

“துதிகள், கண்ணீர்கள், அரற்றல்கள், பெருமூச்சுக்கள், அந்திப்பொழுதுகள், ஊர்வலங்கள், நிலத்தோற்றங்கள், புல்வெளிகள், தேவதாரு மரத்தோட்டங்கள், ஏக்கங்கள், கடற்கரைகள், பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும், அவற்றின் வடிவம் நிறம் என்ற அனைத்தும் கவிதைக்கேற்ற கருப்பொருள்கள். இவற்றின் எதிரொலிகளும் குரல்களும், அவை முணுமுணுக்கும் வதந்திகளும் என்னை நெகிழச் செய்திருக்கின்றன. அவற்றை இந்த எளிய நூலில் பாடத் துணிந்திருக்கிறேன். இதன் மூலம், ஒரு வழியாக, நேர்த்தியாகக் கூற இயலவில்லை எனினும், நம்மைக் காரணமின்றியும் அறிந்து கொள்ளாமலும் வெறுப்பவர்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: எங்கள் நிலம் போற்றுதலுக்குரியது. வேறெங்கோ, கல்வியறிவு அதிகம் வழங்கும் இடங்களில் அமர்ந்துகொண்டு அவர்கள் தூற்றி ஏளனம் செய்வதற்கான மொழி நமது மொழியல்ல (இது கடுமையானதாகத் தோன்றும் எனினும் சொல்லியாக வேண்டியிருக்கிறது). அவர்கள் அப்படிச் செய்வது பண்பாடின்மையையும், அறியாமையையும், ஒரு மாகாணம் இன்னொரு மாகாணத்தின் மீது நிகழ்த்தக்கூடிய, மன்னிக்க இயலாத அநீதிகளையும் மட்டுமே பறைசாற்றுகிறது...”

பெண் விழைவுகள், எதிர்பார்ப்புகள், பெண்ணுடலின் பெருமிதங்கள் ஆகியவை குறித்தும், இவை அனைத்தையும் ஆணுலகம் எதிர்கொள்ளும் விதம், அதன் வன்முறைகள், அதனால் சிதையும் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் ஆகியவை குறித்து வெளிப்படையாகவும் கனிவாகவும் எழுதப்பட்டவை ரொஸாலியாவின் கவிதைகள் என்று எழுதுகிறார், அக்கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் எரின் மோர்.

செடிகள் பிறந்த பொழுதில் பிறந்தேன் நான்,

பூக்களின் மாதத்தில் பிறந்தேன் நான்,

மிருதுவான ஒரு அதிகாலையில்,

ஏப்ரல் மாத அதிகாலையில்.

எனவேதான் எனக்கு ரொஸி என்று பெயர்,

சோகப் புன்னகை புரியும் ரோஜாமலர்.

மற்றவர்க்கு முட்களுடன்,

உனக்கு முட்களின்றி.

உன்னை என்று நேசிக்கத்தொடங்கினேனோ, நன்றிகெட்டவனே,

அன்றே எல்லாம் முடிந்துபோனது எனக்கு

....

என் இதயத்தை அனுப்புகிறேன்

அதன் திறவுகோலுடன்.

என்னிடம் தர இதைவிடச் சிறந்ததெதுவுமில்லை.

வேறெதையும் கேட்காதே நீ என்னிடத்தில்.

எனினும், பெண்களின் உலகை அகம், உணர்வுகள், உறவுகள் என்ற வட்டத்திற்குள் அடக்காமல், பொருளாதார நெருக்கடிகள், உழைப்பு, கல்வி, வறுமை ஆகியவற்றைக் கலீஸியப் பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களையும் கவிதைகளாகத் தீட்டியுள்ளார் ரொஸாலியா. புற உலகில் செயல்படும் வாய்ப்புகள் மிகக் குறைவான சூழ்நிலையில், வாழ்வின் மிக அடிப்படையான தேவைகளைத் தேடிக்கொள்வதற்குக் கூடப் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்ததையும், உணவு உடை உறைவிடம் ஆகியவற்றை உறுதிசெய்துகொள்ள ஒரு பெண் கணவன் ஒருவனைத் தேடிப்பெற்றிருக்க வேண்டியிருந்த சூழ்நிலைகளையும் ரொஸாலியாவின் கவிதைகள் துல்லியமாகச் சித்திரிக்கின்றன:

ஆசீர்வதிக்கப்பட்ட புனித அந்தோனியாரே,

எனக்கு ஒரு ஆணைத் தாரும்,

அவன் என்னைக் கொல்வானேனும்,

என்னை வெறுப்பவனேனும்.

ஓ! புனித அந்தோனியாரே,

எனக்கு ஒரு சிறிய ஆணைத் தாரும்,

ஒரு சோளப்பருக்கை அளவு

சிறிய ஆணையேனும்....

ஆண்துணையற்ற பெண்,

உயிரற்ற உடல்,

ஆசீர்வதிக்கப்பட்டவரே,

தானியம் பரிமாறப்படாத விருந்து!

....

வரதட்சணையாகத் தர என்னிடம்

ஒரு இரும்புக் கரண்டி,

பூக்கும் மரங்கள் நான்கு.

ஏற்கனவே பல் முளைத்துவிட்ட

சின்னத் தம்பி ஒருவன்,

இனி பாலேதும் தராத,

பழைமை வாய்ந்த பசுவொன்று...

ஆசீர்வதிக்கப்பட்ட புனித அந்தோனியாரே,

எனக்கு ஒரு ஆணைத் தாரும்,

அவன் என்னைக் கொல்வானேனும்,

என்னை வெறுப்பவனேனும்.

ரொஸாலியாவின் இன்னொரு கவிதை, கட்டாயப் படைத்துறைப் பணியில் சேர்க்கப்பட்டு கலீஸியாவை விட்டு வெகு தொலைவில் சென்றிருக்கும் இளைஞன் தன் காதலிக்கு எழுதும் கடிதத்தின் வடிவில் இருக்கிறது:

என் கண்ணின் இனிய ஒளியே,

ஷிங்கோவிலிருந்து வந்த நாளிலிருந்து

தங்கியிருக்கும் இந்த ஊரில்

நான் உயிரோடிருக்கிறேன்

என்பதை அறிந்துகொள்வாய்.

இறைவனின் அருளாலும்,

ஆசிர்வதிக்கப்பட்ட மதச்சீருடையின் அருளாலும்,

ஜேசன் பயந்தது போல் அவனுடைய வீரம்

சேவலின் ஆர்ப்பரிப்பைப் போன்றது -

நாங்கள் கடலில் மூழ்கவில்லை

என்பதை அறிந்துகொள்வாய்.

இங்கு வந்திறங்கியதும்

மற்ற கட்டாயவீரர்களைப் போலவே

எனக்கும் மஞ்சள் - நீல உடை அணிவித்தார்கள்.

பின் நாங்கள் எல்லோரும் -

இருபத்தைந்துபேருக்கும் மேல் -

தெருக்களில் வலம் வந்தோம்,

வியந்து பாராட்டுதலுக்குரிய கம்பீரத்துடன்,

அத்துணை வெண்மையாய்

அத்துணை தூய்மையாய்...

...

என் இனிய ரோஸ்,

உன்னால் இதைப் படிக்க முடிந்தால்

நானெழுதும் இந்தக் கோடுகளில்

ஒன்றை நீ அறிந்துகொள்வாய்.

நானெழுதுவேன் உனக்கொரு கடிதத்தை,

ஒரு பறவையின் இறக்கைகளில்,

அவன் எழுதும் கடிதங்களை வாசிப்பதற்கெனவே படிக்கக் கற்றுக் கொள்வ தாய்க் கூறியிருக்கிறாள் காதலி. அவன் எழுதுவனவற்றை அவள் எப்படியேனும் அறிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை நாடியைப் பற்றிக்கொண்டு முதல் கடிதத்தை எழுதுகிறான் அவன். கட்டாய படைப்பணி, புலம் பெயர்தல், கல்வி பெறுவதில் இருக்கும் தடை, பிரிவு தரும் துயர், படைச்சீருடையின் வண்ணத்தை ரசிக்க வைக்கும் வறுமை, கடலில் மூழ்கா திருத்தலில் ஏற்படும் நன்றியுணர்வு, இவை அனைத்துடன் கூடவே படைப்பணியில் புதிதாய்ச் சேர்ந்துள்ளதால் ஆண்மையும் இளமையும் கொள்ளும் துள்ளல் - இவை எல்லாம் குவிந்து நிற்கும் ஒரு சிக்கலான நிலையை வியக்கவைக்கும் எளிமையுடன் சொல்லிவிடுகிறார் ரொஸாலியா.

கலீஸிய மொழி மற்றும் இலக்கியத்திற்கு அறிமுகம் பெறும் எவரும் முதலில் எதிர்கொள்ளும் ஆளுமையாக இருக்கிறார் ரொஸாலியா. இலக்கியத்திற்கேற்ற, கல்விக்கேற்ற செறிவான மொழியல்ல கலீஸிய மொழி என்ற கருத்தைத் தன் எழுத்துக்களில் தீவிரமாக எதிர்த்திருக்கிறார். கலீஸியா நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ற மாகாணமல்ல, கலீஸியமக்கள் சிறந்த இலக்கியத்தையும் வளர்ச்சியையும் படைக்கும் ஆற்றல் கொண்டிராத எளியர்கள் என்ற கருத்துகளையும் கற்பிதங்களையும் தகர்ப்பது தன் பணி என்று ஏற்றுக்கொண்டவர் கவிஞர் ரொஸாலியா. அப்பணியை நிறைவேற்ற ரொஸாலியா கலீஸிய பேச்சுவழக்கின் எளிய நடையையும், கிராமப்புற மற்றும் கத்தோலிக்க சமயப்பாடல்களின் சந்தத்திலும், எளியர்கள் என்று கருதப்பட்ட மக்களைக் கவிதை மாந்தர்களாகக் கொண்டும் எழுதினார்.

என் சமீபத்தியப் பயணத்தின்போது எனக்குப் பரிசளிக்கப்பட்ட ரொசாலியாவின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் வாசிப்பால் உந்தப்பட்டு இந்தப் பதிவை எழுதியுள்ளேன். குறிப்பிட்ட மொழிசார்ந்த அரசியலை முன்வைத்தும், அம்மொழியில் இலக்கியம் படைப்பதும் வேற்றுமொழித் திணிப்பை எதிர்த்து அம்மொழியில் பேசுவதும் எழுதுவதும் புரட்சிகரமான செயல்பாடுகள் என்ற சூழ்நிலையிலும் எழுதப்பட்டவை ரொஸாலியாவின் படைப்புகள். அவர் வியக்க வைக்கும் விதத்தில் மொழியைக் கையாண்டு புதிய சொற்களை உருவாக்கியுள்ளார் என்றும், கலீஸிய மொழியின் ஓசையும் இசையும் அவரது ஆளுமையால் கவிதையில் துல்லியமாக இடம் கொள்கின்றன என்றும் அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் எரின் மோர் எழுதுகிறார். அத்தகையக் கவிஞரை மொழிபெயர்ப்பு என்ற செயல்பாட்டிற்கு, அதுவும் வேறொரு மொழியினூடாக, உட்படுத்துவது அர்த்தமற்றதோ என்று தோன்றுகிறது. எனினும், ஒரு சிறந்த படைப்பாளி குறித்துச் சிறிதளவேனும் அறிந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பு: ஹெலனாமிகெலெஸ் - கார்பய்யேரா தொகுத்துள்ள ‘A Companion to Galician Culture’ (Tamesis, Woodbride 2014) என்ற நூலும், எரின் மோரின் மொழிபெயர்ப்புகளடங்கிய ‘Rosalia de Castro: Galician Songs’ (Small Stations Press, 2013) என்ற நூலும் எனக்குப் பயனுள்ளவையாக இருந்தன.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்