/* up Facebook

Aug 28, 2015

கேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந்தினி


மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முறைகேட்டில் தொடர்புடைய லலித்மோடிக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் நடந்து முடிந்த மக்களவை ஸ்தம்பித்தது. இது அனைத்து ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. தொலைக்காட்சி ஒன்றில் மக்களவை உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, பத்திரிகையாளர் ஞாநி, காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. தாஸ், பொருளாதார நிபுணர் அருண்குமார். தவே ஆகியோரை வைத்து இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிர் நிலையில் கருத்துள்ள காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் கருத்து சொல்வது, நடுநிலைப் பார்வை வேண்டும் என்பதற்காக ஒரு பத்திரிகையாளரும் மக்களவை முடங்குவதால் நாட்டின் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் பேச ஒரு பொருளாதார நிபுணரும் ஒரு விவாதத்தில் கலந்துகொள்வது அந்த விவாதத்துக்கு மெருகுகூட்டுவதாக அமையும். இவர்களைத் தவிர ஆடிட்டர் பிராபகர் என்பவரும் பேசினார். இந்தத் தலைப்பில் நடந்த விவாதத்தில் ஒரு ஆடிட்டருக்கான வேலை என்ன என்பது குறித்து பார்வையாளருக்கு சந்தேகம் வரலாம். ஆடிட்டராக குறிப்பிடப்பட்டாலும் பாஜக தரப்பில் பேச பாஜகவினர் இல்லை என்பதாலோ என்னவோ பாஜக ஆதரவாளராக அவர் பேசினார்.

பாஜகவைச் சேர்ந்தவர்கள்கூட தங்கள் கட்சி நிலைப்பாட்டை இவ்வளவு தீவிரமாக சொல்லியிருக்க முடியுமா என்கிற வகையில் சுஷ்மா தரப்பின் ‘நியாயங்கள்’ குறித்து ஆடிட்டர் பிரபாகர் பேசினார். ஒரு கட்டத்தில் ஆடிட்டரின் பேச்சிலிருந்து கேள்வி ஒன்றை டி.ராஜாவிடம் கேட்டார் நெறியாளர். அதற்கு “இவர் ஆடிட்டர் என்று சொல்கிறார், இவர் யாரென்றே எனக்குத் தெரியாது. இவர் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று காட்டமாக பதிலளித்தார் டி. ராஜா. ஏனெனில் அத்தனை அபத்தமாக இருந்தது ஆடிட்டர் பிரபாகரின் பேச்சு!

மக்களவையை முடக்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விவாதத்தில், டி.ராஜா போன்ற மூத்த அவை உறுப்பினர் கலந்துகொள்ளும் விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களை பேச அழைப்பதே முறையானதாக இருக்கும். நடுநிலையாகச் செயல்படுவோம் என்று கூறுகிற ஒரு பிரபல ஊடகம் நடத்தும் விவாதத்தில் பாஜகவினர் கலந்துகொள்வதில் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் விவாதங்களில் பேச ஆட்களே இல்லாத ஒரு கட்சியின் பிரதிநிதியாக ஆடிட்டர், பாஜக ஆதரவாளர் என்கிற போர்வையில் தீவிர காழ்ப்பை உமிழும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப் பேச வைப்பதன் பின்னணி என்ன என்கிற கேள்வி எழுகிறது.

சில நாட்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டுள்ள மத அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக ஆதரவாளர் ஒருவர், ராஷ்டிரிய ஸ்வம் சேவக் அமைப்பின் வெறுப்பு பேச்சுக்களைப் வெளிப்படையாகவே பேசினார். அவர் கருத்துக்களில் இருந்த அபத்தங்களை நெறியாளர் சுட்டிக்காட்டியபோதும், அவர் ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களில் உறுதியாக இருந்தார். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் அவர்களிடையே காழ்ப்பை கட்டமைக்க முயல்வது அந்த நபருடைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஊடகம் என்பது நடுநிலையான பார்வையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள் பெரும்பாலானவற்றை கட்சி சார்புள்ளவர்கள் அல்லது கட்சிக்காரர்களே நடத்துவதால், ஊடகம் என்பது நடுநிலையானது என்று சொல்லிக் கொள்ள முடியாது. இது இல்லாமல் சார்பற்றவர்கள் நடத்தும் ஊடகங்கள் நடுநிலைமை என்கிற போர்வையில் ஆளும் கட்சிகளின் கொள்கைத் தூதுவர்களாக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதில் சில அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் முனைப்பாக இருக்கின்றன. ஊடகங்களில் கட்சி சார்பாக பேசுவதற்குக்கூட ஆட்கள் இல்லாத தமிழக பாஜகவை மறைமுகமாக வளர்க்கும் பணியைத்தான் இவர்கள் செய்து வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இடதுசாரி கருத்துக்களுக்கு இடமளிப்பதுபோலவே, வலதுசாரி கருத்துக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது ஊடக அறம். ஆனால் வலதுசாரி கருத்துக்கள் என்ற போர்வையில் மக்களிடையே காழ்ப்பை, வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்களையே மேலே குறிப்பிட்ட பாஜக ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பேசுகிறார்கள். பல நேரங்களில் இவர்கள் பேசுவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாக இருக்கிறது. சாதி வேண்டும் என்கிறார்கள், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சர்வாதிகாரத்துடன் கட்டளையிடுகிறார்கள், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் என்கிறார்கள். ஆனால், ஊடகங்கள் தொடர்ந்து இத்தகையவர்களின் பேச்சுக்களை அனுமதித்துக் கொண்டே இருக்கின்றன.

பல பேர் பலியாகக் காரணமாக இருந்த குண்டுவெடிப்பை நடத்தியவர் என்கிற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் இறுதிச் சடங்கை ஒளிப்பரப்ப மாட்டோம். ஒரு குற்றவாளியை கதாநாயகன் ஆக்குவதாக? என அறம் பேசிய ஊடகங்கள், மத-இன-மொழி-பாலின சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை தொடர்ந்து அனுமதிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? ஊடகங்கள் வரையறை செய்யும் நடுநிலைமை என்பதற்கான பொருள் என்ன? காவிமயமாதல் என்பதா?

நன்றி - இப்போது

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்