/* up Facebook

Aug 27, 2015

பெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்


பெண்ணிய செயற்பாட்டாளரும், ஆரம்பகால ஈழ விடுதலைப் போராளிகளில் ஒருவரும் அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளருமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் வியாழனன்று நம்மெல்லோரையும் விட்டு பிரிந்துவிட்டார். 

நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதியும் வந்தார்.  வாராந்தம் தினக்குரலில் சனிக்கிழமைகளில் வெளிவந்த அவரது நாற்சந்தி என்கிற பத்தி ஆழமான அரசியலைக் கொண்டது.

இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து இரண்டு தசாப்தத்துக்கும் மேல் போராடி வந்தவர். தமிழ் சூழலில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காக போராடிய முன்னோடி என்றே கூறவேண்டும். இலங்கையில் செயற்பட்டுவரும் அனைத்து பெண்கள் நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளில் சாந்தி மிகவும் பிரபல்யமானவர். தென்னிலங்கை சிங்கள அமைப்புகளுடனும் சேர்ந்து இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தவர்.

விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிருந்தார். முதற் தடவையாக ”அகவிழி” என்ற கல்வியியற் சார்ந்த ஒரு தரமான சஞ்சிகையை மதுசூதனனை ஆசிரியராக் கொண்டு வெளியிடப்பட்டதும் விழுது அமைப்பினால் தான்.

90களில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து அளிக்கும் பணியையும் சில காலம் மேற்கொண்டார். அவை சமூகப் பிரச்சினைகளை, குறிப்பாக பெண்களின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சச்சிதானந்தம், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியாக விளங்கிய போதிலும், அந்தத் துறையில் ஈடுபடாது, சமூகப் பணிகளிலேயே கூடுதலாக ஈடுபட்டுவந்தார்.

ஆரம்பத்தில் அன்னையர் முன்னணி, மாதர் மறுமலர்ச்சிப் பேரணி போன்ற பெண்கள் அமைப்புக்களில் செயற்பட்டார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் 1985 ஆம் ஆண்டு அலன் தம்பதிகளை ஈபிஆா்எல்எப் இயக்கம் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்தபோது அவா்களுக்கு மொழி பெயா்ப்பாளராக இருந்தவா் சாந்தி. அவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நல்ல பாண்டித்தியமுடையவர்.


மட்டக்களப்பிலுள்ள மன்று என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகராக விளங்கிய அவர், கிழக்கு மாகாணத்தில் பல சமூக அபிவிருத்திப் பணிகளிலும் தனது கணவர் மனோ ராஜசிங்கத்துடன் சேர்ந்து ஈடுபட்டார்.

”பெண்களின் சுவடுகளில்…”, ”பெண்களும் வெகுஜன ஊடகங்களும்” மற்றும் “வறுமையின் பிரபுக்கள்” போன்ற நூல்கள் அவர் எழுதிய ஆரம்ப நூல்கள்.

யுத்தம் நிகழ்ந்த நெருக்கடியான காலகட்டங்களில் கூட மிகவும் துணிச்சலாக அரசாங்கத்தை எதிர்த்து அரசியல் கருத்துக்களை வெளியிட்டுவந்தவர். சில தடவைகள் அவரது அலுவல்கம் பிளிசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அச்சுறுத்தல்களுக்கும் ஆளானார். மேலும் பல தென்னிலங்கை சிவில் சமூக அமைப்புகளுடனும் சேர்ந்து பணியாற்றியவர்.

1958ஆம் ஆண்டு பிறந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். இவரது கணவர் மனோ ராஜசிங்கம் 2009ஆம் ஆண்டு காலமானார்.

சனிக்கிழமைகளில் தினக்குரல் பத்திரிகையில் சாந்தி எழுதி வந்த வாராந்த பத்தியின் முடிவில் அவர் எப்போதும் இந்த வரிகளுடன் முடிப்பார்.

"அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்"

பெண்ணியம் இணையத்தளத்தின் சார்பாக அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்றோம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்