/* up Facebook

Aug 26, 2015

பாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க ஒரே சாத்தியம்.காலம் காலமாய் தொடர்ந்து வரும் பாலியல் வன்புணர்வுக்கு அடிப்படைக்காரணமாய் இருப்பது பெண்ணுடல் மீதான அவளின் உரிமையை அவளுக்கு மீட்டுக் கொடுக்க மறுக்கும் ஆணாதிக்கச் சிந்தனையே.

பெண் உடல் மீது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவள் அனுமதி இல்லாமலேயே அத்துமீறலாம் என்ற நம்பிக்கையையும், மூளைச்சல்வையையும் கொடுத்திருக்கும் சமூகப் பொதுப்புத்தியே பாலியல் வன்புணர்வுகளுக்கான மூல காரணம் ஆகும்.

இச்சிந்தனை பாலியல் வன்புணர்வு செய்தி கேட்டதுமே பதறிப்போய் எங்கே தீர்வுக்கான சிந்தனை வலுபெற்று, பெண்ணுடல் மீதான தனது சட்டாம்பிள்ளைத்தனமான் ஆக்கிரமிப்பு உரிமை பறிபோய்விடுமோ எனக் கலங்கி, மடை மாற்ற "உபதேசங்களை" பெண்ணுக்கு அளிக்கத் தொடங்கி விடுகிறது.

ஆடை எப்படி அணிய வேண்டும் என்ற உபதேசம், எந்த நேரத்தில் மட்டும் பெண் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம், எந்தெந்த இடத்துக்கு மட்டும் செல்ல வேண்டும் என்ற உபதேசம், யார் கூட வந்தால் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம், பலாத்காரத்தின் போது அந்த காமுகனை "அண்ணா"- என அழைக்க வேண்டுமென்ற உபதேசம் இன்னும் எத்தனையெத்தனையோ உபதேசங்களைச் சொல்லி இதனால் மட்டுமே பாலியல் வன்புணர்விலிருந்து பெண் தப்ப முடியும் என்று பயங்கரவாதத்தை சமூகத்தில் பரப்பி தனது ஆதிக்க வெறியை காப்பாற்றிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது.

வேறொரு கோணத்தில் அடிப்படைச் சங்கதிகளை பொறுமையாய் அனுகுவதையும், தீர்வுக்காய் உழைபதையும் மறுத்து விட்டு, " ஆண் குறியை அறுக்க வேண்டும்", தூக்கில் போட வேண்டும் என்ற கும்பல் கலாச்சாரக் கூச்சல்களும் இச்சங்கதி தீர்வினை நோக்கி பயணப்படாமல் தடுக்கின்றன. தனிமனித கொலைகள், சிந்தனையை வேரறுத்ததாய் சரித்திரத்தில் எங்கும் இல்லை.இது போன்ற கோசங்கள் தன்னை ஒழுக்கமானவனாய் காட்டிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கோசங்களே ஒழிய உண்மையில் இதுவும் மடைமாற்றச் சிந்தனையே.

இன்னொரு கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண் கற்புடையவள்தானா என்ற கேள்வியினை முன் வைத்து இரண்டாம் "கற்பழிப்பினை" நிகழ்த்துகிறது. இந்தப் பெண் அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு, அந்த நபருடன் சென்றிருக்கிறாரே....அப்படியானால் அவர்கள் இருவருக்குமான தொடர்பு எந்த வகையினதாக இருக்கும் என்று அற்புத ஆராய்ச்சியினையைத் தொடங்கிவைக்கிறது இந்த ஆணாதிக்கச் சிந்தனை.

ஆக, சீதையை ராமன் தீக்குளிக்கச் செய்து "கற்பினை" நிரூபிக்கச் சொன்ன மாதிரி இத்தனை "ராமன்"களுக்கும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தான் ஏற்கெனவே கற்புடையவள் தான் என்று முதற்கண் நிரூபித்தாகவேண்டும்.

இப்படியொரு கற்புக் கேள்வியை ஆணாதிக்க சிந்தனை எழுப்புவதற்குக் காரணம், ஒருவேளை அவள் "ஒழுக்கக் கேடு"டன் இருப்பாரேயானால் அவள் வன்புணர்வு செய்யப்படுவதில் எந்தத்தவறும் இல்லை என்று இந்த சமூகத்தில் படித்தவர்களும், அறிவுஜீவிகளும் கூட நம்பிக்கொண்டிருப்பதே ஆகும்.

ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட அவள் அனுமதி இல்லாமல் அவர் உடல் மீது அத்துமீறும் உரிமை எந்த ஆண்மகனுக்கும் இல்லை என்ற எளிய உண்மை விளங்காததால்-அல்லது விளங்கிக் கொள்ள மறுப்பதால்தான் பாதிக்கப்பட்ட பெண் கற்புடையவள்தானா? ஆம் எனில் அது எத்தனை சதவீதத்திலான கற்பு என்ற அபத்த ஆராய்ச்சிகளில் இறங்கச் சொல்கிறது.

பெண் உடை, போதிய பாதுகாப்பு உணர்வுடன் இடங்களுக்குச் செல்லுதல் ஆகிய சங்கதிகள் குறித்து பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு உண்டு. அதை அவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். இவை குறித்து அவற்றுகான தீர்ப்புக்களை எழுதவேண்டிய வேலை ஆணாதிக்க சிந்தனைக்கு அவசியம் இல்லை.

இதை விடுத்து நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியங்கள் உண்டு.
காமம் என்பது வெறுமனே மகிழ்வு எடுக்கும் சங்கதி அல்ல. மகிழ்வு கொடுத்து மகிழ்வு எடுக்கும் சங்கதி ஆகும் என்ற அடிப்படைத் தெளிதலை ஆண் குழதைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வன்புணர்வு என்பது காமம் அல்ல ரத்தம் வர காயப்படுத்துவது எப்படியோ அது போன்ற வன்முறை மட்டுமே என்று ஆண்கள் அனைவருக்கும் குழந்தையிலிருந்தே சொல்லிக் கொடுங்கள்.பெண் உடல் மீதான உரிமை பெண்ணிக்கே ஆனது. அவள் அனுமதியில்லாமல் அவள் உடல் மீது அத்துமீறும் உரிமை இவ்வுலகில் எந்த ஆண்குறிக்கும் இல்லை என்ற புரிதலைச் சொல்லிக் கொடுங்கள்.

இவையே பாதுகாப்பான உலகினை பெண்களுக்கு உறுதிப்படுத்தி, வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே சாத்தியம்.

நன்றி - Ilangovan Balakrishnan முகநூலிலிருந்து.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்