/* up Facebook

Aug 16, 2015

வராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை


இன்னும் வராத சேதி (ஊர்வசி), எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை (ஔவை), ஒவ்வா (ஸர்மிளா ஸெய்யித்), யாக்கையின் நீலம் (ப்ரேமா ரேவதி), மகளுக்குச் சொன்ன கதை (சே.பிருந்தா), ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை (கீதா சுகுமாரன்) என ஆறு கவிதைத் தொகுப்புகள். போரால் உருவாகும் வாழ்க்கையிலும், போராகவே போகும் வாழ்க்கையிலும், பெண்ணாக இருத்தலும் வாழ்தலும் குறித்தும், அதனால் வதைபடும் உடல் மற்றும் மனங்கள் குறித்தும், அதனால் உருவாகும் மொழியை உள்வாங்கி வெளிப்பாட்டுப் பிரதேசததில் அதைக் கொண்டுவரும் முயற்சியாகவும் உள்ள தொகுப்புகள்.

இந்தத் தொகுப்புகளில் உள்ள கவிதைகளுள் புகும் முன்பு சம்பிரதாய நாடக அரங்குகளில், பின்னால் ஓவியங்கள் வரையப்பட்ட திரைச்சீலை ஒன்றை நாடகத்தின் தறுவாயைக் குறிக்கக் காட்டுவதுபோல இந்தக் கவிதைகளுக்கான தறுவாயைக் குறிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. பெண்ணுடல் எத்தகையது, அது எவ்வா றெல்லாம் எழுதப்பட்டது, அது காலமும் சரித்திர மும் தொடாத மாறாத ஒற்றை உடலா போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. பெண் ணாக வாழ்தல் என்பது எத்தகைய நிர்ப்பந்தங்கள், குறுகல்கள், விளக்கங்கள், அடக்குமுறைகள், காட்சிகள், காட்சி விளக்கங்கள், காட்சி மறைப்பு கள் இவற்றை உடலுள் செலுத்தி ஒரு மாயக் கயிறுபோலக் கட்டி இழுத்து மொழியின் பாதையில் நடக்க வைக்கிறது என்ற சரித்திரத் தறுவாயும் இக்கவிதைகளைப் படிக்கும்போது அவசியமாகிறது.

புராணப் பெண்கள் நம் வாழ்க்கையுடன் பிணைந்தவர்கள். அன்றாட வாழ்க்கையின் அங்கமாக இருப்பவை பண்பாட்டு நினைவில் உறைந்திருக்கும் புராணங்களில் உள்ள பிம்பங்கள். இந்தப் புராணப் பெண்கள் எப்படித் தங்கள் உடலை உணர்கிறார்கள் என்பதை நோக்கும்போது பெண் உடலைப் பண்பாடு எவ்வளவு கனக்க வைத்திருக் கிறது என்பதும், பெண்கள் தங்கள் உடல் மீதே செலுத்திக்கொண்ட வன்முறையும் தெரியவரும். ‘நற்றிணை’யில் திருமாவுண்ணி பற்றிய பாடல் ஒன்று இருக்கிறது. திருமாவுண்ணியை அவள் காதலன் கைவிட்டுவிடுகிறான். அந்தப் பிரிவு அவளை எவ்வளவு பாதிக்கிறது என்பதை அவனுக்குக் காட்ட அவள் ஒரு மரத்தடியே நின்றுகொண்டு தன் முலை ஒன்றை அறுத்துக்கொள்கிறாள்:

எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்

ஏதிலாளன் கவலை கவற்ற

ஒரு முலை அறுத்த திருமா வுண்ணி

நாச்சியார் திருமொழியில் கண்ணன் மேல் கொண்ட காதல் தீயின் தகிப்பைக் கடக்க, அவன் தன்முன் வந்ததும் தன் முலைகளை வேரோடு பறித்து அவன் மார்பில் எறிவேன் என்கிறாள்:

உள்ளே உருகி நைவேனை

உளளோ இலளோ என்னாத

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்

கோவர்த்தனனைக் கண்டக்கால்

கொள்ளும் பயன் ஒன்றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்

எறிந்து என் அழலைத் தீர்வேனே

சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் தன் முலை ஒன்றைப் பிய்த்தெடுத்து மதுரையை எரிப்பேன் என்று சூளுரைக்கிறாள். பத்தினிப் பெண்டிரில் ஆதிரையும் குறிப்பிடப்படுகிறாள் மணிமேகலையில். அவள் கணவன் ஆதிரையை விட்டுவிலகி கலைத் தொழில் செய்யும் பரத்தையிடம் தன் பணத்தை எல்லாம் இழக்கிறான். பிறகு வாணிபம் செய்ய சில வணிகர்களுடன் கப்பலில் போகிறான். அவன் கப்பல் மூழ்கிவிட்டது என்ற செய்தி வருகிறது. உடனே தீப்பாய்ந்துவிட முடிவு செய்கிறாள். ஆனால் அவள் கணவன் மரிக்கவில்லை; அதனால் தீ அவளை எரிப்பதில்லை. விசாகை தன்னை வேறு வகையில் தண்டித்துக்கொள்கிறாள். குழந்தைப் பருவத்திலிருந்து தர்மதத்தனுடன் வளர்ந்த அவள் அவனை மனதாரக் காதலிக்கிறாள். ஆனால் ஊரில் சிலர் அவள் ரகசியமாக அவனை மணந்துகொண்டிருப்பதாக வம்பு பேச ஆரம்பிக்கின்றனர். தன் நடத்தை பற்றிய இந்த அவதூறைத் தாளாத அவள் உடனே தன் தூய்மையை நிரூபிக்க உலக வாழ்க்கையைத் துறந்து ஒரு மடத்தில் சேர்ந்து காலமெல்லாம் கன்னியாக இருக்கிறாள். விசாகையைப் போலவே இன்னொரு பெண் மருதி. ஆற்றில் குளித்துவிட்டு வரும்போது அவளைப் பார்த்த இளவரசன் காமுறுகிறான். தான் நடத்தை தவறிவிட்டதாகக் கருதும் அவள் பெண் தெய்வத்தை அணுகி முறையிட, தெய்வம் அவள் கற்புடையவள்தான், ஆனாலும் அவள் பொது இடங்களில் சரியான முறையில் உடை உடுத்தவில்லை, சரியான நூல்களைப் படிக்கவில்லை என்கிறது. தன்னை - தன் உடலை - மற்றவர்கள் கொள்ளும் உணர்ச்சிகளுக்காக, அவர்கள் செயல்களுக் காகப் பழித்துக்கொள்ளும்போது பெண் உடல் வெறும் கிளர்ச்சியூட்டும் கருவியாக மட்டுமே நோக்கப்பட்டு தண்டனைக்குரிய ஒன்றாக மாறிவிடுகிறது. பண்டைய காலப் பெண்களின் வாழ்க்கையை நோக்கும்போது, நேரடியாக உடலையும் உடல் சார்ந்த வெளியையும் எதிர்கொள்ள முடியாமல் உடலை விஞ்சும் மனநிலையை எட்ட அவர்கள் கிட்டத்தட்ட உடலை மிதித்துத் துகைத்து வர வேண்டியிருக்கிறது எனலாம். இதற்குச் சில அற்புதங்களின் உதவியும் தேவைப்படுகிறது அவர்களுக்கு.

கண்ணகி தன் நாட்டில் கற்புடைய பெண்டிர் பற்றிக் கூறுகிறாள். கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்ற தன் கணவனைக் கரையில் நின்று எதிர்நோக்கும் ஒரு பெண் அப்படி அவள் காத்திருக்கும்போது யாரும் அவளைத் தவறான நோக்கோடு பார்க்காமல் இருக்க, தன்னைக் கல்லாக மாற்றிக்கொள்கிறாள். இன்னொரு பெண், கணவன் தொழில் நிமித்தம் வெளியூர் போனபோது இன்னொரு ஆண் அவளைக் காமக் கண்களுடன் நோக்க அவள் தன் கணவன் திரும்பும்வரை தன் முகத்தை ஒரு குரங்கின் முகமாக்கிக் கொள்கிறாள். பாணரான அவ்வையார் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணாக அங்குமிங்கும் தடையின்றிச் செல்ல, தன் இளமையான உடலை முதுமையானதாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் தொடர்ந்து இயங்க அவர் உடலின் இளமையை நீக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அற்புதம் தேவைப்படுகிறது. சிவ பக்தையான புனிதவதி அம்மையாரைத் தெய்வீகக் குணம் கொண்டவளாக அவர் கணவன் கருதுவதால் தாம்பத்திய உறவுக் காக கணவன் உடல்ரீதியாகத் தன்னை அணுக மாட்டான் என்று தெரிந்தவுடன், கணவனுக்குத் தேவைப் படாத தன் உடலை எலும்புக்கூடாக மாற்றிப் பேயுரு கொள்கிறாள். இதற்கும் அற்புதம் தேவைப்படுகிறது.

வெகு எளிதாகப் பெண் உடலைக் களைந்து வீசும் ஒன்றாக மாற்றும் இப்படிப்பட்ட உருமாற்றங்களும் பெண் உடல்மீது திணிக்கப்படும் வன்முறையும் பண்பாட்டு மொழியுடனும் வாழ்க்கை முறையுடனும் பிணைந்துவிடுகின்றன. அற்புதங்கள் சாத்தியமில்லாத போது சாவு தேர்வாகிறது. பெண்ணின் வாழ்க்கையில் இறப்பும் குடும்ப அமைப்பும் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால் குடும்ப அமைப்புடன், அதன் இயக்கத்துடன் பிணைந்த கிணறு, மண்ணெண்ணெய் போன்ற எந்தப் பொருளும் சாவின் குறியீடுகளாக மாறிவிடுகின்றன. சாவை நாடும் பெண்ணின் பிம்பம் மொழியிலும் நடைமுறை வாழ்க்கையிலும் ஓங்கி நிற்கும் ஒன்று. இருபதுகளில் சிஸ்டர் சுப்புலட்சுமியின் விதவைகள் இல்லத்துக்கான அறிவிப்பு வந்தபோது உடனடியாக எல்லோரும் புரிந்துகொள்ளும் படம் ஒன்று அதனுடன் வெளிவந்தது. அந்தப் படம் கிணற்றின் மேல் அமர்ந்து கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் ஒரு பெண்ணின் சித்திரம்.

தற்காலப் பெண்களின் எழுத்துகளைப் பொறுத்தவரை எண்பதுகளின் ஆரம்பத்தில் மெல்லத் தொடங்கி, இறுதி ஆண்டுகளில் வேகமாக எழுந்து, தொண்ணூறுகளிலிருந்து இன்றுவரை பற்பல வகைகளில் கிளைத்து, விரிந்து வரும் பெண் எழுத்துகளில் கவிதை முக்கிய வடிவம் பெற்றது தொண்ணூறுகளில் எனலாம். இரா. மீனாட்சி, கவிதைகள் எழுதியிருந்தாலும், அவை வித்தியாசமானவையாக இருந்தாலும், பெண்கள் எழுதிய கவிதைகள் ஒரு பேரலையாய் வந்தது தொண்ணூறுகளில்தான். அத்தனை தடைகளையும் கட்டுப்பாடுகளையும் முறித்துக்கொண்டு சீறிப் பொங்கி வரும் கடலாய் வந்தன கவிதைகள்.

எண்பது மற்றும் தொண்ணூறுகளின் கவிதைகளை நாம் பார்க்கும் முன்பு இலக்கியப் பத்திரிகையான எழுத்து காலத்திலிருந்து எழுதிய இரா. மீனாட்சியையும் அவர் கவிதைகளையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. காரணம் வித்தியாசமானதொரு வாழ்க்கையை வாழ்ந்தது மட்டுமல்லாமல் சாதாரணக் கவிதைகளிலிருந்தும் வெகுவாக விலகிய கவிதைகளை எழுதியவர் இரா. மீனாட்சி. கடந்த பல ஆண்டுகளாக பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழும் மீனாட்சி 1970இல் ‘நெருஞ்சி’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பின் ‘சுடு பூக்கள்’, ‘தீபாவளிப்பகல்’, ‘மறுபயணம்’, ‘மீனாட்சி கவிதைகள்’, ‘வாசனைப்புல்’, ‘உதயநகர்’ எனப் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுப் பின்னால் வரும் பெண் கவிஞர்களுக்கு ஒரு ராஜபாட்டையைப் போட்டார் எனலாம். 2009இல் வெளிவந்த ‘கொடிவிளக்கு’ கவிதைத் தொகுப்பில் தன் கவிதைகளைப் பற்றிக் கூறும்போது, “இக்கவிதைகள் வாயிலாக உடல்சார்ந்த துன்பங்கள் இன்பங்கள், மனம்சார்ந்த வீழ்ச்சிகள், எழுச்சிகள், சமூகம்சார்ந்த ஏற்புகள் தகர்ப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றிற்கும் அப்பால் நான் எனும் என் உள்முகத் தரிசனத்தில் தணல் தகிக்காத நெருப்பினுள் இலையாகவும், அக்கினிக் குழம்பில் அலர்ந்தெழும் மலராகவும், சந்தன ஓடையின் இருகரை ஓரத்தில் செழிக்கும் வைரப் பொன் நாணலாகவும் வளர்ந்து வருகிறேன்” என்று தன் சுயம் குலையாமல் இருப்பதையும் அதன் விடாத தேடலையும் பற்றிக் கூறுகிறார். அதே தொகுப்பில் “சொல்லாத சொல்” என்ற கவிதையில் பெண்கள் சேர்ந்து தீயாய் நடக்கும் பாதை குறித்து வெகு அழகாகச் சொல்கிறார். தான் ஒரு சுதேசிப் பாதையை, நேசம் மிகுந்த சுதர்மப் பாதையை எட்டியது பற்றிக் கூறுகிறார். பழைய முள்களைக் களைந்து விட்டுப் பின்னால் பார்ப்பதைக் கூறுகிறார்:

கையில் அணையா தீபத்துடன்

பின்னால் திரும்பிப் பார்க்கிறேன்.

மற்றுமொருத்தி

அவளுக்குப் பின் மற்றுமொருத்தி

அவர்களுக்குப் பின்

மேலும் தீ.

புரிகிறதா

எனது சிரிப்பினூடே

சொல்லாத

சொல்லதிர்வுகளின் அர்த்தங்கள்?

தொண்ணூறுகளில் பெருகத் தொடங்கிய பெண்களின் கவிதைகளுக்குப் பின்புலமாக இரா. மீனாட்சியின் கவிதை களுடன் வேறு கவிதைகளும் இருந்தன. அவைகளின் கவிதை நயம் குறித்தும் கவிதைத் தன்மை குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை எழுதப்பட்டன என்பது சரித்திரம். 1980இல் அரசு மணிமேகலையின் ஒரு ‘வானம்பாடி வாய் திறக்கிறது’ கவிதைத் தொகுப்பும், ரோகிணியின் ‘தேன் முள்ளுகள்’ தொகுப்பும் வெளிவந்தன. அரசு மணிமேலையின் தொகுப்பு புதுக்கவிதை என்று கூறப்படும் கவிதை வகையைச் சேர்ந்தவை என்ற விளக்கத்துடன் வெளியிடப்பட்டது. அரசு மணிமேகலை சென்னை காயிதே மில்லத் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் துணைப் பேராசிரியராக இருந்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர். தந்தை பெரியாரை பெரிதும் மதித்தவர். இந்தத் தொகுப்பின் கவிதைகள் பேச்சு மொழியில் அமைந்த நேரிடைக் கவிதைகள். வெற்று அரசியல் பேசும் தலைவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், சமூகத்தின் பொதுவான அவலங்கள் இவற்றை உடைத்துச் சொல்லும் கவிதைகள். “பெண்டிர் சமத்துவம்” என்ற கவிதையில் பெண்கள் நிலை குறித்துக் கூறும்போது அவர்கள் வேண்டுவது சமத்துவம் மட்டுமே, ஆண்களைப் பின்தள்ளும் அதிகாரம் இல்லை என்ற கருத்தை வெளியிடுகிறார்.

அரசு மணிமேகலையின் கவிதைகள் வெளிவந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு ரோகிணியின் ‘தேன் முள்ளுகள்’ தொகுப்பு வெளிவந்தது. எழுத்தாளர் சுஜாதா மற்றும் கவிஞர் மு. மேத்தாவின் முன்னுரைகளோடு வெளிவந்த ரோகிணியின் கவிதைத் தொகுப்பு தார்மீகக் கோபத்துடன் எழுதப்படும் புதுக்கவிதையாகப் பார்க்கப்பட்டது சுஜாதாவால். சுஜாதா இவர் கோபத்தை அமெரிக்க எழுத்தாளர் எரிகா ஜாங்கின் எழுத்துக்குச் சமமானது என்கிறார். ‘நிறைய கோபித்துக்கொள்ளுங்கள்’ என வாழ்த்துகிறார். மு. மேத்தா இந்தக் கவிதைகளை வெப்பப் பெருமூச்சாகவும் புயலாக மாறும் எரிமூச்சாகவும் பார்க்கிறார். ‘பிரா’ அணியாமல் இருப்பது அல்ல பெண்கள் வேண்டும் சுதந்திரம்; மனத்தால், சிந்தனையால், எண்ணத்தால் விடுதலை பெறுவது பெண்கள் தேவை என்று ரோகிணி தன்னுரையில் கூறுகிறார்.

பெண்ணின் காதல் தேவை பற்றி ஆணின் மனத்தைக் குத்தாமல் சொல்கின்றன சில கவிதைகள். வரதட்சிணை குறித்த கண்டனமும், பல பெண்களுடன் உறவுகொள்ளும் கணவன்மார்களைப் பற்றிய எள்ளலும், அக்னியில் குளித்து வருவதாகக் கூறும் மிரட்டல்களும் இருந்தாலும் வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றிக் கூறும்போது அவர்கள் பெண்மைக்குரியதாக நினைக்கப்படும் தாய்மையைக் குலைத்துக்கொள்ளும் பெண்கள் என்றே கூறுகிறார். ஆயாக்களிடம் குழந்தையை விட்டுச் செல்லும், தாய்மையைப் பால் பவுடர் டப்பாக்களில் சிறையிடும், ஸ்கூட்டருக்காகவும் ஃபிரிட்ஜுக்காகவும் வேலைக்குப் போகும் பெண்கள் என்று கூறுகிறார். 1981இல் எனக்கு எழுதிய கடிதத்தில் “நெருப்பு நூலால் பெண்பூவைக் கட்டாத கவிதைகள்” தன் கவிதைகள் எனப் பல விமர்சகர்கள் கூறுவதாகக் கூறுகிறார்.

இலக்கணத்தின் வரையறைகளை மீறி இருப்பதாலும், சமகாலத்தைப் பற்றிய விமர்சனங்களாக இருப்பதாலும், புதுக் கவிதைப் பாணியில் எழுதப்பட்டிருப்பதாலும், தன் உள்மனத்துச் சிந்தனைகளை வாய் திறந்து கூறும் முயற்சியாகவும் நோக்கப்பட்டதால், பெண்ணின் குரலாக அறியப்பட்ட இருவகைப்பட்ட கவிதை களான மணிமேகலை மற்றும் ரோகிணியின் கவிதைகள் பெண்கள் வாழ்வைச் சுற்றிக் கட்டப்பட்ட மௌனச் சுவர் மேல் வரைந்த சிறு கீறல்கள் என நாம் கொள்ளலாம். பெண்களின் குரல்கள் வெடித்து வருவது பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான். ஆனால் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ரோகிணி போன்ற கவிஞர்களின் வாழ்க்கையில் பெண்கள் நிலை குறித்த அக்கறை மாறாமல் இருந்தது என்பதுதான்.

பெண்கள் குரல்கள் வெடித்துவந்த விதத்தை இனி பார்ப்போம்.

1986இல் யாழ்ப்பாணத்திலிருந்து பெண்கள் ஆய்வுவட்ட வெளியீடாக வந்த ‘சொல்லாத சேதிகள்’ பெண்மொழியை வேறு ஒரு தளத்துக்கு இட்டுச்சென்றது. பெண் என்ற நிலையிலிருந்து எழுதப்பட்ட இக்கவிதைகள் பெண்ணிலைவாதத்தின் அந்தரங்கம் என்பது எல்லோருக்கும் பொதுவான அரசியல் என்ற கருத்தைக் கவிதையாக வெளிப்படுத்தின. நாட்டுக்காகச் செய்யும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபடும் காலம் குறித்தும், ஆண்களுடனான உறவில் பெண்ணின் தேவைகள் மாறிவிட்டன என்பதை உரத்தும் தெளிவாகவும் சொல்லும் இக்கவிதைகள், ஒரு சரித்திரக் காலகட்டத்தின் பெண் குரல்கள். “என்ன செய்வது?/ நான் விடுதலை அடைந்தவள்/ உன்னால்/ அந்த உச்சிக்கு/ வரமுடியாதே!” என்று ஆணிடம் முழங்கும் குரல்கள். இவற்றில் கெஞ்சலோ புலம்பலோ இல்லை. உண்மையைத் திறந்து காட்டும் தைரியமும் நேர்மையுமே உள்ளன.

1990இல் இதே தொனியுடன் திருச்சியிலிருந்து உரத்து வெளிப்பட்ட இன்னொரு குரல் சுபத்ராவுடையது. ‘எந்தன் தோழா’ என்ற கவிதைத் தொகுப்பில் மாணவர் இயக்கத்தில் தன்னுடன் உழைத்த தோழர்களுக்கு இக்கவிதைகள் மூலம் பெண்கள் மனச் சேதிகளைச் சொல்கிறார். 1986 முதல் நண்பர்கள் சிலருடன் சுட்டும் விழிச் சுடர் என்ற பத்திரிகையை நடத்தி, தற்போது திருச்சியில் ஒரு பள்ளியை நிறுவி அதன் இயக்குநராக இருக்கும் சுபத்ராவின் இக்கவிதைத் தொகுப்பு பெண்கள் இயக்கத்தில் பெரிதும் பேசப்பட்ட தொகுப்பாக இருந்தது. “மானுடத்தின் விடுதலைக் குமுறல்” என்று அறிமுகப் படுத்தப்படுகின்றன கவிதைகள். இவ்வுலகத்தை மாற்ற இணைந்து வேலை செய்யும் முன்பு “என் கரங்களின் மீது/ உன் கால்கள் இருந்தால்/ கொஞ்சம் நகர்த்திக்கொள்ளேன்” என்று தொடங்கும் முதல் கவிதையிலிருந்து ஆண்களை முகமூடிகளைக் கழற்றச் சொல்லும் கவிதை, மனிதர்களாய் மாறும்படியும் வீட்டு வேலையில் பங்கெடுக்கும்படியும் அவர்களுக்குச் சொல்லும் அறிவுரை, வன்முறைப் புணர்வு குறித்த எண்ணங்கள், எப்போது எங்கு போனாலும் தொடரும் ஆணின் வக்கிரங்கள் என்ற பெண்கள் வாழ்வின் பல அம்சங்களைத் தொட்டுச் செல்கின்றன கவிதைகள். ஒரு குவளை காப்பி ஆறிப் போனதற்காகத் தன்னை அடிக்க வரும் கணவனிடம் சமூகத்தில் கோபம் காட்ட வேண்டிய பல தருணங்களில் மௌனமாக இருந்துவிட்டு ஆறிப்போன காப்பிக்காகக் கையை ஓங்குவது குறித்துக் கேட்கும் மனைவியின் சொல்லாக வரும் “ஒரு நிமிடம்ஞ்!/ ஓங்கிய கை/ என் கன்னத்தில் பதியுமுன் ஒரு நிமிடம்!” கவிதையும் “‘சீ’ என்று உன்னை உதறித் தள்ள/ செருப்பெடுத்து உன்னைப் பிய்த்தெறிய -தேவையானால்/ அடிவயிற்றில் கத்தியைச் செருகவும்/ எமக்கு பலம் உண்டு ஞ் ஆவேசம் உண்டு” என்ற வரிகளைக் கொண்ட கவிதையும் வெகுவாகப் பேசப்பட்ட கவிதைகள்.

இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1988இல் மிகவும் அமைதியாக மென்குரலில் பெண்களின் வாழ்க்கையின் பேசப்படாத மௌனங்களையும், லகானிடப்பட்ட வெளிப்பாட்டையும் பற்றிப் ‘புதையுண்ட வாழ்க்கை’ என்ற கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்தார் சுகந்தி சுப்பிரமணியன். பெண் உடல் அதிகாரத்துக்குக் கட்டுப்படுவது குறித்து எழுதுகிறார் சுகந்தி. வாழ்க்கையில் காதல், குழந்தைப் பேறு எல்லாமே பொருளாதாரத்தில் குறுக்கப்படுவது குறித்த சில கவிதைகளில் பெண்ணின் இச்சைகள் அன்றாட வாழ்வில் தொலைந்துபோவதைக் கூறுகின்றன. தொலைந்து போகும் விஷயங்களில் நினைவுகளையும் சேர்க்கிறார் சுகந்தி. 2003இல் சுகந்தியின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பாக வந்தது ‘மீண்டெழுதலின் ரகசியம்.’ இதில் பெண்ணின் அன்றாட உலகம் சர்க்கரைக்காக, பச்சை மிளகாய்க்காக, காப்பிப்பொடிக்காக, தக்காளிக்காக அவள் ஏற்படுத்திக்கொள்ளும் பெண் உறவுகள், நிரந்தர வீடு இல்லாத குறைகள், சொற்களாகவும் செயல்களாகவும் குத்தும் முட்கள் என வீட்டினுள் உள்ள பெண்ணின் உலகத்தைக் கண்முன் விரிக்கின்றன கவிதைகள். சுகந்தியின் கவிதைகள் குறித்து சில மாற்றுக் கருத்துகளும் எனக்கு உண்டு. அவை வேறு ஒரு விவாதத் தளத்துக்குரியவை. அவற்றை இங்கு விரிவுபடுத்துவதில் அர்த்தமில்லை.

தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்த கனிமொழியின் கவிதைகள் பெண் வாழ்வில் உள்ள என்றும் மாறாத அடக்குமுறைகளைச் சலிப்புடனும் சோர்வுடனும்

சற்றே கோபத்துடனும் சொல்பவை. பொது வாழ்க்கையில் உள்ள அரசியல், மாநகர வாழ்க்கை, கவிதையில் தேடும் சொற்கள் என்று பல கிளைகளாக விரிகின்றன கவிதைகள், ஒரு பெண்ணின் பார்வையில். எத்தனையோ விஷயங்கள் மாறினாலும் பெண் உடலைச் சமூகத்தில் இருத்தும் விதம் மட்டும் மாறாமல் இருப்பதை “தீண்டாமை” கவிதையில் எள்ளல் தொனியில் கூறியிருக்கிறார். பூஜாரிகள், அவர்கள் உடைகள், தொழும் முறைகள், கோயிலில் நுழைந்துவிட்ட இயந்திரங்கள் என எல்லாம் மாறினாலும் ஒன்று மட்டும் மாறவில்லை என்று கடைசி வரிகளில் கூறுகிறார்:

எந்நாடு போனாலும்

தென்னாடு உடைய சிவனுக்கு

மாத விலக்குள்ள பெண்கள்

மட்டும் ஆவதே இல்லை.

புராணப் பெண்களும் இந்தக் கவிதைகளும் வரையும் திரைச்சீலையைப் பின்னால் இருத்தியும் சமகாலக் கவிஞர்களான குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்ரி, உமா மஹேஸ்வரி, சுகிர்தராணி, இளம்பிறை, மாலதி, க்ருஷாங்கினி, வத்ஸலா, அ வெண்ணிலா, தமிழச்சி, அரங்கமல்லிகா, திலகபாமா, சக்திஜோதி, லீனா மணிமேகலை, பெருந்தேவி ஆகியோரின் கவிதைகளை மனத்தில் இருத்தியும்தான் இந்த ஆறு கவிதைத் தொகுப்புகளையும் படிப்பதும் புரிந்துகொள்வதும் சாத்தியம்.

ஊர்வசியின் ‘இன்னும் வராத சேதி’ கவிதைகள் கீதா சுகுமாரன் தொகுத்தளிப்பவை. அதன் முன்னுரையில் “ஒரு பெண்ணின் நெடிய பகல்களை, முடிவடையாத நள்ளிரவுகளைக் காவி வரும்” முதல் குரலாக ஊர்வசியின் கவிதைகளைப் பார்க்கிறார் பாக்கியநாதன் அகிலன். 1981இல் உள்ளேயிருக்கும் பெண் வெளியே உள்ள அவள் மனம் விரும்பும் ஆணுக்காக எழுதும் கவிதையாக “வேலி” கவிதை இருக்கிறது. உள்ளேயிருந்து அவனிருக்கும் திறந்த வெளியை அவள் பார்த்தாலும் புறத்தையும் அகத்தில் இழுக்கும் கவிதை அது.

ஒட்டடைகள் படிந்த கூரை

பல்லிகள் ஊர்கிற சுவர்கள்

எனத் தொடங்கி, முடிவில்

இரண்டு சிட்டுக் குருவிகளை

இங்கே அனுப்பேன்!

அல்லது இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது...

என்று முடிகிறது கவிதை தாளமுடியாத கனம் ஒன்றைத் தாங்கியபடி.

1982இல் எழுதப்பட்ட “அவர்களுடைய இரவு” கவிதை, ஒருவன் இரவில் இழுத்துப்போகப்படும் காட்சியையும் அது ஒருத்தி மனத்தில் ஏற்படுத்தும் பாதிப்பையும் படிக்கும்போது ஒருவித பதைபதைப்பு ஏற்படுகிறது. பின்னர் 1983இல் எழுதப்பட்ட “காத்திருப்பு எதற்கு?” கவிதை அந்தப் பதைபதைப்பை நெகிழ்ச்சியாக்குகிறது. காலம் என்பது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப நகராத உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைத் தள்ளிப்போட முடியாது ஒரு நல்ல தருணத்தை எதிர்பார்த்து என்பதைக் கூறும் கவிதை. இரவுக்குள் எதுவும் நடந்துவிடலாம், நாம் இப்போதே, இந்த அதிகாலையின் ஆழ்ந்த அமைதியில் இணைவோம் என்று ஒரு பெண் கூறும் கவிதை. அதே பெண் மக்களின் மீட்சிக்காக அவன் வெளியே இருக்கும்போது அவள் மட்டும் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்றொரு கடிதக் கவிதையில் கேட்கிறாள். 1984இல் எழுதும் கவிதை ஒரு சிறையதிகாரிக்கு அனுப்பப்படும் விண்ணப்பம். அதில் அதிகபட்சக் கோரிக்கை எதுவும் இல்லை; தாழ்மையான விண்ணப்பம். அடைக்கப்படும் இடத்தில் ஒரு சிறு சாளரத்தைக் கோருவது. இரண்டு கையகலத் துவாரம்; தப்பிச் செல்ல அல்ல. குருவியையும் மேகத்தையும் பார்க்க. 1985இல் ஒரே ஓர் இரவு வீட்டுக்கு வரும் போராளியைப் பற்றிய கவிதை. மிகக் குறைந்த வேளையில் பயம் நிரம்பிய கணங்களில் ஏற்படும் நெருக்கமும் பிரிவும் பற்றியது.

தொடர்ந்து ஊர்வசியின் கவிதைப் பெண் உள்ளுக்குள்ளிருந்து குமுறுகிறாள். மனத்திற்கினியவனைப் பிரிந்து இருக்கிறாள். அவள் மட்டுமல்ல; அவள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சன்னல் கம்பியில் முகம் பதித்து வெளியே பார்த்தபடிதான் இருக்கிறாள். பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் 1998இல் “மனசும் மதிலும்” கவிதையில் பெண்கள் காத்திருக்கிறார்கள் இன்னமும். அவர்கள் தேவைகள் அதிகமில்லை:

ஜடாயுவை வீழ்த்தும் வல்லமை கொண்ட

புஷ்பக விமானங்கள் வேண்டாம் எமக்கு

எனினும் திறந்து மூடும் சாளரம் கொண்ட

ஒரு பேருந்தாவது?

தொடர்ந்து நினைவுகள் வெருட்டுகின்றன, “ஒரு புரியாத புத்தகத்தைத்/ தலைகீழாய் படிக்க விரும்புகிற/ குழந்தையின் முகம்போல.” மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் 2008இல் வரும் கவிதைகளில் ஒரு சரித்திர சோகம் இருக்கிறது. கனவுகளைப் புதைத்துவிட்டு மகனிடம் அவன் வளர்ந்த பிறகு, பெண் என்பவள் யார் என்று கூறக் காத்திருக்கும் தாயின் சோகம். 2014இல் எழுதப்படும் கவிதைகள் உச்சகட்ட விரக்தியின் கவிதைகள். சுருக்கங்கள் விழுந்த உடலுடன், யாருடனும் நட்பு கொள்ளாத வானமாக ஒருத்தி. தகிக்கும் வெயிலில் “மின்சாரக் கம்பிகளில் சிட்டுக் குருவிகள்/ ஊறுகாய் நினைவுகளுடன்” சூனியத்தையும் இறப்பையும் சுட்டும் இந்த 2014இன் கவிதைகள் சரித்திரம் அழித்துப் போட்ட வாழ்க்கைகளின் சோகத்தைக் கூறுபவை. தொலைத்த சுயம் பற்றியும் இதனின்றும் வேண்டும் விடுதலை பற்றியும் கூறுவது கடைசிக் கவிதை “வெற்று நாட்கள்”.

தினம் தினமாய்த் தேய்ந்துவிட்ட

வெற்று நாட்களில் நான் எதுவாக இருந்தேன்?. . .

இனி நானும் பறப்பேன்

ஒரு மரக்கிளை போதும்

இடையிடையே ஓய்வெடுக்க

ஔவையின் ‘எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை’ கவிதைகள் காதல் குறித்துப் பேசுபவை. கடந்துபோன நாட்களின் காதலை, அந்தக் காதல் அமைந்த சூழலை, அது உருவாக்கிய எல்லைகளை, பின் அந்த எல்லைகளைக் கடத்தலை மீள்பார்வை பார்த்து இப்போதுள்ள வாழ்க்கையைப் பற்றிப் பேசும் கவிதைகள். முன்னுரையில் வ. கீதா, இலங்கையில் வாழவேண்டிய நிர்ப்பந்தச் சூழலில் ஔவை எழுதியதைக் குறிப்பிட்டு, “அவர் எழுதிய தருணங்களும், எழுதாத, எழுத இயலாத தருணங்களும்” தற்போதைய கவிதைகளின் வாசிப்புக்கு முக்கியமானவை என்கிறார்.

பல காத்திருப்புகளைக் கூறுகின்றன முதல் பகுதிக் கவிதைகள். காதலிப்பவன்தான் தன் விடுதலை என்று கூறினாலும், அவள் காலடியில் விழும் பெண்ணில்லை. அன்பைத் தேடினால் பூவாக மலரும் பெண். பெண்ணாக இருப்பது அவளுக்குத் தடையல்ல; அதுவே அவள் வழி. அவள், சிறகு முளைக்கும் காற்றில் பறக்கலாம் என்ற நம்பிக்கையுடன் காதலுக்காய்த் துயர் சுமப்பவள். கடலுடன் கலந்து தன்னை அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் நதி போன்றவள். இரண்டாம் பகுதி கவிதைகளில் 1984இல் உரிமைகளைக் கோர வீறு கொண்டெழுவோம் எனத் தொடங்கி பல நிகழ்வுகளை, விடைபெறும் விடை தரும் தருணங்களை விவரித்த பின் அவள் பிறந்த மண்ணின் எல்லையைக் கடக்கிறாள். அது ஒன்றும் ஓர் ஆனந்த கணம் அல்ல. இருப்பு நிச்சயமற்றுப் போய்விட்ட கணம்.

...இறுதியாக

பாதங்களில் ஒட்டியிருந்த செம்மண்ணையும்

தட்டியாயிற்று

செம் மண்ணும் போயிற்று

எம் மண்ணும் போயிற்று

போ

அவள் செய்யக் கூடியதெல்லாம் பச்சிளம் குழந்தையான மகளிடம் காலத்தை வெல்லும்படிக் கூறுவதுதான். ஆயினும் மனிதத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை அவள். மீதமாக உள்ளதுபோல் வாழ்க்கை தோன்றினாலும் நோவாவின் படகு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நம்பிக்கைதான் போரில் சமரிட்டு மடிந்த பெண்களுக்கு அஞ்சலியாக எழுகிறது. மன்ணின் புதல்விகளாக மடிந்த பெண்கள்:

...படுகுழிக்குள் மறைக்கப்பட்டீர்

மறைக்கப்பட்டவை

உடல்கள் மட்டும் தான்

உண்மைகள் அழியாது - தோழிகளே

சென்று வாருங்கள்

காதலில் தொடங்கி காத்திருப்பில் நீண்டு இயலாமைகளையும் கொச்சைப்படும் உறவுகளையும் அரசியலையும் அதில் வீழ்ந்த பெண்களையும் பற்றிக் கூறி அவர்களுக்கு விடைதருவதில் முடியும் ஔவையின் கவிதைகள் விட்டுவிட்டு எழுதப்பட்ட டயரிக் குறிப்புகள்போல அமைகின்றன. 80களிலிருந்து 2013வரை உள்ள காலவெளியைக் கடக்க முயலும் துடுப்புகள் உடைந்த படகுகள்போல, நகரும்போதே தயங்கியபடி தேங்கும் கவிதைகள்; தேங்கியபடியே கால வெளியைக் கடக்கும் கவிதைகள்.

ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள் முற்றிலும் வேறு தளத்திலிருந்து வருபவை. ‘சிறகு முளைத்த பெண்’, ‘உம்மத்’ நாவலுக்குப் பின் வருகிறது ‘ஓவ்வா’. கவிதைப் பெண்ணுக்கு வாழ்க்கையும் அது விதிக்கும் வழிகளும் ஒவ்வாததாக இருக்க அவள் உடலை வனைந்து கொள்ளும் விதமும் அதன் பறத்தலும் மற்றவர்களுக்கு ஒவ்வாமையாகப் போகின்றன. அவள் தன்னைக் கனவுகளை வரைபவள், அடிவானிலிருந்து வந்தவள், சூரியனின் பூச்சரம், இரவைப் பூட்டுகின்ற சாவி, இறக்கைகளுடன் புறப்படும் சிறகு முளைத்த பெண்ணாகப் பார்த்தாலும் மற்றவர்கள் - அவள் உம்மா கூட- அவளைப் பார்ப்பது பெண்ணாகத்தான். மற்றவர்

களுக்கு அவள் முர்தத் (இஸ்லாத்தை விட்டு நீங்குதல்) ஆனவள், இப்லீசுவின் சிநேகிதி, பஸஹு (ஆணிடமிருந்து விவாக ரத்து கோருவது) செய்திருப்பவள்.

உடலையே துறந்தவளாகவும் அதைக் களைந்தெறிந்தவளாகவும் உடலற்ற ஒளியாகவும் சுவையாகவும் அசைவப் பேயாகவும் கண்ணாடி சீசாவில் அடைபட மறுக்கும் ஆவியாகவும் தன்னை வனைந்துகொள்ளும் கவிதைப் பெண்ணுக்கும் உடல் அடையாளங்கள் உள்ளன. தினமும் சுஹுது செய்யும் அடையாளங்கள் அவள் நெற்றியில் உள்ளன. அவள் கண்ணுக்கு மையிட்டுக்கொள்கிறாள்; உதடுகளுக்கு விரும்பும் பூச்சைப் பூசிக்கொள்கிறாள்; தின்பண்டங்களை விரும்பி உண்கிறாள்; சிற்றிதழ்களைப் படிக்கிறாள். அகன்ற தோள்களையும் கூர்ந்த கண்களை யும் வலிய கரங்களையும் சாதாரணமாகப் பெண்கள் காதலிக்கும்போது ஆண் ஒருவனின் மூக்கால் ஈர்க்கப் படுகிறாள். துறக்கப்பட்ட யசோதரையின் வலியை உணர்ந்தவள் அவள்; ஆதாமுடன் சம தண்டனை அடைந்த ஏவாளையும். சொர்க்கத்திலும் பிண்டமாக் கப்படும் பெண்கள் பற்றி அறிந்தவள். ஏறாவூரின் பாங்கொலி முழக்கங்களைச் செவியுற்றவள்; அதிகாலைக் காலடியோசைகளைக் கேட்டவள். விரலிடுக்கில் வழிந்தோடிய மாம்பழங்களையும் மணம் வீசும் பலாச்சுளைகளையும் விரும்புபவள். அவள் துறப்பது இதுதான் பெண்ணுடல் என்று விளக்கப்படுத்தப்பட்ட உடலைத்தான். அவள் மீட்டெடுக்க விரும்புவது தன் சுயத்துடன் அவள் தன்னுடையது என்று கருதும் உடலையும்தான். மற்றவர்கள் ஏற்க மறுக்கும் தன் உடலைத் தன்னுடையது, தனக்கானது தன் வசத்தில் இருப்பது என்று நிலைநாட்டிக் கொள்கிறாள் தொடர்ந்து.

இது எனதே உடல்

என் அலங்காரம்

என் அணிகலன்

என் ஆடை

என் காலணி

என் நறுமணம்

என் மொழி

என் மதம்

என் காதல்

நான் வசிக்கும் வீடு

நான் நடக்கும் சாலை

நான் படிக்கும் புத்தகம்

எனதாகவே இருக்கும்படி

நான் விரும்புவதாக இருக்கும்படி

வாழ்வேன்

இறுதி மில்லி வினாடி வரையும்

நான் வாழ்வேன்

ப்ரேமா ரேவதியின் ‘யாக்கையின் நீலம்’ எழுதுவதன் வாயிலான அரசியல் செயல்பாடு. வாழ்வின் பலவித இருப்புகளைத் தொடும் கவிதைகள். யாரையும் சார்ந்திராத வாழ்க்கையின் தனிமை, காதல், இச்சை, சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களின் ஒடுக்குமுறை, பண்பாடு என்ற பெயரில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய அநீதிகள், வாழ்வில் கலந்துபோன கோபதாபங்கள், காழ்ப்புணர்வு, மனத்தை லேசாக்கும் நட்பு, இசை இவ்வாறு பலவற்றைக் காட்சிப்படுத்தும் கவிதைகள்.

பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் கவிதைகளில் முதல் பகுதி “வன்மத்துள்ளும் அதன் அற்ப வட்டங்களுக்கு அப்பாலும்”. மனிதர்கள் கட்டும் வீட்டில் கனவைச் சுருட்டி ஒளித்துவைக்கக் காற்றோட்டமான இடுக்குகள் இல்லாமல் அலையும் மீனவப் பெண், “அம்மா வேணும்” எனும் சிறுவன், மலைக் கிராமத்தை விட்டு நீங்க மறுக்கும் பிஞ்சரிபாய் வீசும் தானியங்களுக்கு வரும் ஓராயிரம் பறவைகள், வன்புணர்வுக்கும் வன்முறைக்கும் எதிராக வெளியாக மாறும் உடல்கள், நினைக்காத தருணத்தில் செயல்படும் சிறகுகள், தீக்குளித்த நண்பனின் நினைவில் ஓர் ஒப்பாரி என யதார்த்தத்திலும் மீறிப் பறப்பதிலும் எனச் சிதறப்பட்ட கவிதைகள் இப்பகுதியில். “அழையாமலே வந்து குடையாய் நின்றது கானகம்” பகுதியில் ஹைகூ போன்ற கவிதைகள் சில வரிகளில் சில காட்சிகளை வரைய முற்படுகின்றன.

ஒளி ததும்பும் சதுரம்

துயரங்களின் அறையில்

திறக்கும் ஜன்னல்

மேற்பரப்பில் தளும்பல்

இடையே மீன் கூட்டம்

அடியில் குளத்தின் வாசம்

திடீரென பெய்த மழையில்

ஊறிச் சொட்டும் இலை

இன்பம் திகட்டும் உடல்

இந்தப் பகுதியின் இறுதிக் கவிதை மனத்தில் ஒலிக்கும் சொற்களைக் கலவை ஓவியம்போல வடிவாக்கும் ஒன்று.

பெருமரம். காலம். சாட்சி. அழகு. பிரம்மாண்டம்.

எனத் தொடங்கி

வெள்ளம். ஓட்டம். அகாலம். பெருமரம்

என்று முடிகிறது. இடையே நிறங்கள், தொடுகை, வெளி, இருப்பு இவைகளை ஒட்டிய பல சொற்கள். பெருமரத்திலிருந்து தொடங்கி பெருமரத்தில் முடியும் வட்டத்தை வரைய முயலும் கவிதை. “இருளின் பழகிய வாஞ்சையுடன் அச்சுறுத்தும் தனி உலகம், மீண்டும்” பகுதியும் “கருத்துகள் கால் பதிக்காத கனவுகளின் மாய உலகில் மட்டுமே உயிர்பெறும் அந்தப் பட்சி” பகுதியும் உடலை வெளியாக்கி விரித்தும் அதை யதார்த்தத்தில் கிடத்தியும் காதல் மற்றும் தனிமை குறித்துப் பேசும் கவிதைகளைக் கொண்டவை.

யதார்த்த உலகத்தின் அன்றாடத் தன்மையுள்ள விஷயங்களையும் மாய வெளிகளில் உலவும் உடலையும், கண்ணில் பட்டபடி போகும் அழகுகளையும், மன ஆழத்துக் கோபங்களையும் தாபங்களையும் வேறு வேறு வகைகளில் கவிதைகள் சொல்லிப் போவதால் சிதறுபட்ட தன்மையில் கவிதைகள் உள்ளவைபோல ஓர் உணர்வு ஏற்படுகிறது. திடீர் திடீரென்று சுருதி மாறுவதைக் கேட்கும் அலைக்கழிப்பு உணர்வுக்கு உள்ளாக்கப்படும்போது இது கவிஞர் வலிந்து உருவாக்கும் ஒன்றா அல்லது தற்செயலாக நேர்ந்ததா என்ற கேள்வி தோன்றிக்கொண்டே இருந்தது.

1999இல் கவிதை எழுத வந்த இன்னொரு கவிஞர் சே. பிருந்தா. வாழ்க்கையில் நாம் கண்டுகொள்ளத் தவறி நம் கையிலிருந்து வழுக்கிப் போய்விடும் கணங்களைக் கவிதையாக்குபவர் பிருந்தா. ‘மழை பற்றிய பகிர்தல்கள்’ (1999) என்ற கவிதைத் தொகுப்பு மிகவும் மென்மையாக இழப்பு பற்றியும் காதல் பற்றியும் பெண்ணாக இருப்பது பற்றியும் மழை மெல்ல நம்மை இதமாக நனைக்கும் மொழியில் கூறியது. 2009இல் ‘வீடு முழுக்க வானம்’ எழுதும்போது வழக்கமான மென்மையான மொழியில் ஆரம்பித்தாலும் பத்து ஆண்டுகளில் வாழ்க்கையின் பல காதங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்பது கவிதைகளில் தெரிகிறது.

மூன்றாம் தொகுப்பான ‘மகளுக்குச் சொன்ன கதை’ தொகுப்பில் பிருந்தாவின் உலகம் மாறிப்போகிறது. தனிமையும், வேதனையும், மன அழுத்தமும், இடையிடையே வரும் உற்சாகங்களும் கவிதையாகின்றன இந்த முறை. விடையில்லாத கேள்விகளும், மனத்துக்கு உகந்த விடைகளைத் தராத கேள்விகளும் எழுகின்றன. அந்தவகையில் அவர் வாழ்க்கைக்கும் கவிதைகளுக்கும் மிகவும் நெருக்கம் இருப்பது கவிதையில் தெரிகிறது.

என் அன்பை

உனக்குத்

தெரிவிக்க முடியாமலே போகிறது -

கைகளற்றவர்களின் ரேகைகள்

எதைச் சொல்லும்?

என்ற கவிதையில் வாழ்க்கையின் இயலாமை பெருத்த வேதனையாய் வந்து தாக்குகிறது. அதேபோல் சூரியனுடன் கடற்கரைக்குப் போகும் பெண்:

ஒரு தனிமைப் பெண்ணும்

மாலை நேரச் சூரியனும்

கடற்கரைக்குப் போனார்கள்

யாருக்கு அதிக தனிமை

என்று பேச்சு வந்தது

யார்தான் தனியாயில்லை

என்று முடிவானது

இரண்டு வரிகளில் பெரும் சோகத்தைக் கூற முடிகிறது பிருந்தாவால்:

பேசியது வலிக்கிறது

பேசாதது அதனினினும்

“அன்பின் அலை(க்கழிப்பு)கள்” கவிதையில் அலைபேசியில் அன்பைப் பகிர்வதைப் பற்றிய அலைபேசி உரையாடல்கள் பற்றிக் கூறும்போது நகர வாழ்க்கையின் இயக்கத்தையும் அதில் ஒளிந்திருக்கும் தனிமையையும் உணர முடிகிறது சில வரிகளில்:

...அத்தனை எளிதில்லை - ஒரு

அலைபேசி அழைப்பைப் பற்றிக் கொண்டு

அன்பின் வழி நடத்தல்

அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றல்

பசித்த கொடிய மிருகத்தை

புன்னகைக்க வற்புறுத்துதல்

பிருந்தாவின் உலகம் மிகவும் மென்மையான உணர்வுகளையும் அவற்றைத் தொடர்ந்து குத்தியபடி இருக்கும் நிகழ்வுகளையும் அடக்கிய வலிமையான உலகம். தனக்குள் மிக ஆழப் புதையும்போது அது ஒன்று, மிகப் பெரிய உலகில் ஆயிரம் அடுக்கு இதழ்களை விரிக்கும் பூவாகத் தன் எல்லைகளைக் கடந்து போகலாம் அல்லது தன் சேற்றிலேயே புதைபட்டு முகிழும் ஒற்றை அடுக்கு மலராகலாம். அதிலும் மணம் இருக்கும் அழகு இருக்கும். ஆனால் அதன் வாழ்வின் வட்டம் குறுகியது. முதலாவது பிருந்தாவின் கவிதைகளில் இன்னும் நிகழவில்லை.

கீதா சுகுமாரன் கவிதைகள் முற்றிலும் வேறு மாதிரிக் கவிதைகள். இதுவரை கவிதைகள் புகாத வாயில்களினுள் அனாயாசமாக நுழைகிறார் ‘ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை’ (2014) தொகுப்பில். முற்றிலும் மாறுபட்ட பிம்பங்களுடன், திடீரென வெடித்து எதிர்பாராமல் வந்து மேலே விழும் கவிதைச் சொற்களையும் அவற்றில் புதைந்த மௌனத்தையும் கொண்டவை அவர் கவிதைகள். அடக்கி வாசித்தல் என்று இசையில் சொல்வார்கள். மொழியில் அதைச் செய்கிறார் கீதா. எந்தவிதச் சிரமமும் இல்லாமல் இயல்பாகச் செய்கிறார். ஒரு சொல் கூட மிகுதியாக அவர் எழுதுவதில்லை. மொழிமேல் அசாத்திய ஆளுகை இருந்தால்தான் இது சாத்தியப்படும். அது இருப்பதாலேயே அவர் உருவாக்கும் கவிதைவெளி காலங்களைக் கலந்துபோட்டு, அதை ஒரு ரப்பர் துண்டுபோல மனம் விரும்பிய திசையில் இழுக்கும் ஓர் அற்புத வெளியாக இருக்கிறது.

‘அக வெளிகள்’, ‘மூத்தோள்’, ‘கடத்தல்’ என்ற மூன்று பகுதிகளில் புராண வெளிகளையும் தற்கால வெளிகளையும் வெகு இயல்பாக இணைக்கிறார். பாதி கிழிந்த சிவப்புச் சீலையுடன் நிற்கும் தமயந்தியும் பேயுருக்கொண்ட காரைக்கால் அம்மையாரும் சீதையிடம் உரையாடும் நல்லதங்காளும் நம் அன்றாட வாழ்க்கையில் இருப்பவர்கள்போல வருகிறார்கள் கவிதைகளில். பெண் இருப்புடன், சங்க காலப் பெண்கள், வன்முறைக்குட்படுத்தப்பட்ட பின் தெய்வங்களாக்கப்பட்டவர்களுடன் நிர்பயா என்று காலத்தை முடிச் சிட்டு விடுவது கீதாவின் கவிதை.

புராணப் பெண்களுக்கும் நம்மைப்போலக் கேள்விகள் உள்ளன. ஆறு மாதங்கள் உறங்கும் கும்பகர்ணனை மணந்து, உறங்கியே வாழ்க்கையைக் கழித்த அவனுக்குக் காப்பியத்தில் இடம் கிடைக்கும்; “ஆனால் நான் யார்?” என்று கேட்கிறாள் அவன் மனைவி. தன் புதல்வனைத் தேர்க்காலிட்டவனின் மனைவிக்கும் கேள்விகள் உள்ளன.

என் அனுமதியின்றி

புதல்வனைத் தேர்க்காலிட்டவனே

உனது வெற்றிகளை

ஈடுசெய்ய

தேர்களும் இல்லை

புதல்வர்களும் இல்லை

கொலையென்றானபின்

மகனும்

கன்றும் ஒன்றுதான்

தாயென்றான பின்

நானும் பசுவும் ஒரே நிறம்

எனது மணிதான் எங்கே?

அவர்களில் சில பெண்களுக்கு சில பெண்ணியக் குறும்புகளும் தெரியும். தோற்றால் நீ பெண்ணாகி பசலை பாய்ந்த நுதலுடன் கைவளை கழன்றுவிழ எனக்காகக் காத்திருக்க வேண்டும் என்று நாடனிடம் பந்தயம் வைக்கிறாள் ஆதிமந்தி. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து வந்தபின் காத்திருக்கும் ஊர்மிளையைத் தவிர்த்து, விட்ட தூக்கத்தைப் பிடிக்கப் போகிறான் லக்ஷ்மணன். ஊர்மிளை அவன் இல்லாத பட்டாபிஷேக ஓவியம் வரைந்து அதன் பின்னணியில் சலனமற்று ஓடும் சரயு ஆற்றையும் வரைகிறாள்.

புராணப் பெண்களை உள்ளிழுக்கும் கவிதைகளை நாம் படிக்கும்போதே, முற்றும் எதிர்பாராத தருணத்தில், அஸ்பரகஸ் கூட்டு செய்யும் பெண் வருகிறாள். பனியைத் தழுவி தேகம் எரிகிறாள் ஒருத்தி. சரிகளுக்கும் பிழைகளுக்கும் இடையே நீளும் சாம்பல் வெளியில் நம்பிக்கைகளைப் பற்றியபடி நிற்கிறாள் இன்னொருத்தி. வளியாகி, முகிலாகி, செம்பெயலாகி அண்டங்களைக் கடக்கும் பெண். எஸ்ரா பவண்டையும் ஸில்வியா ப்ளாத்தையும் படிக்கும் பெண். சுருண்டு நீளும் தொலைபேசிக் கம்பிகளில் ஒட்டிக்கிடக்கும் பெருஞ்சீற்றங்களை உணரும் பெண். காதல் கத்தியாய் தன் உடலில் இறங்குவதைச் சொல்லும் பெண். கனவிலி, முகமிலி, பெயரிலிப் பெண்கள் எனப் பல அக வெளிகள் நமக்குப் புலனாகின்றன.

“கடத்தல்” பகுதியில் உள்ள சிறு கவிதைகள்இரண்டு நகர்ப்புறத்தை யும், வாழ்க்கையில் ஏற்படும் பெயர்வுகளையும் மிகவும் எளிதாகச் சொல்லிப்போகின்றன.

செவ்வக அலுவலகக் கட்டிடங்கள்

கசியும் ஒளி

சூரியன் என நம்பி

சாளரக் கண்ணாடியில்

மோதி இறப்பது

குருட்டுப் பறவை மட்டுமல்ல

“பெயர்வு” கவிதை நான்கே வரிகளில் தான் சொல்ல வந்ததைக் கூறிப் போகிறது.

பிடுங்கப்பட்ட கொடியில்

வாடவோ விரியவோ

தெரிவற்று

இறுகும் முகை

பெண்மொழியில் கீதாவுக்கு அக்கறை இருக்கிறதா, அதுகுறித்த கவலை உண்டா என்றால் கட்டாயம் உண்டு என்று தோன்றுகிறது. அதை அவர் சொற்களால் கட்டப்பட்டதாய், பதியப்பட்டதாய்ப் பார்க்கவில்லை. பெண் மொழி என்பது சொற்களே அற்றது, அது எங்கும் எல்லாமுமாகி நிறைந்திருப்பதோடு, அது ஒலித்துக்கொண்டே இருக்கும் ஓசை எனக் கூறும் கவிதை, பெண் கவிதை மொழி பற்றிய புரிதலையே மாற்றி, அதை விரியும் பல திசைகளில் இட்டுச் செல்கிறது. அந்த வகையில் “பெண் மொழி” கவிதை இந்தக் கட்டுரைக்கு நல்ல முத்தாய்ப்பாக அமைகிறது:

மொழியைப் பதியவென்று
மலைசூழ் இடமோ
கடல்புறமோ
ஒரு துளி வாட்காவோ
சிலிர்க்குமிசையோ
அல்லது
குறைந்தபட்சம் ஒரு
மேசை நாற்காலியோ
எதுவுமில்லையென்றாலும்
தெருவோரத்தில் அழும் பிள்ளையில்
விசிறி எறியப்பட்ட கிழங்கின் சதையில்
கழிப்பறை; சுத்தம் செய்யும்
அமிலத்தில்
அகாலத்தில்
எங்கும் எதனோடும்
எதனையும் தகர்த்தெழும்
சேறு பூசி உதிரம் நிறைத்து
கொதிக்கும் உலை
உலோகமும் வேரும் கல்லும் தோலும்
மணத்து
எல்லா நாவுகளையும்
விழுங்கிப் பிளிரும்
ஆதிகுகை முன்னோளின்
ஓசை
காதுகள் கூடத் தேவையிரா.

இந்த ஆறு கவிதைத் தொகுப்புகளில் வரும் மொழி புதுப் புனல்கள் உள்ள மொழி. இவை பாயும் வெளிகளில் பல்வேறு கவிதைகள் விதையூன்றப்படும். அவைகளில் சில ஆண்களுடையதாகக் கூட இருக்கும். காரணம் பெண் மொழிதான் பொது மொழி. எல்லோருக்குமான மொழி.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்