/* up Facebook

Aug 14, 2015

நெரிக்கப்படுகிறதா பெண்களின் குரல்வளை?


பெண்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அவர்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு விடிவே இல்லை என்பதற்குச் சமீபத்திய உதாரணம் ரிஜு பாஃப்னாவுக்கு ஏற்பட்ட அனுபவம். ரிஜு பாஃப்னா, ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி. இவருக்கு மத்தியப் பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தில் பணிபுரிந்த ஒருவர் தொடர்ந்து அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கிறார். உடனே காவல் நிலையத்தில் இது குறித்து ரிஜு பாஃப்னா புகார் செய்தார். அதையடுத்து அந்த அலுவலர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் இதற்குப் பிறகுதான் பெரும் பிரச்சினையைத் தான் எதிர்கொண்டதாக ரிஜு குறிப்பிடுகிறார். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் தன் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யச் சென்றார். அப்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக் கிறார். அது கடந்த வாரத்தில் பலரால் பார்க்கப்பட்டும் பகிர்ந்துகொள்ளப்பட்டும் வைரலாகிவிட்டது.

“என்ன நடந்தது என்று நீதிமன்றத்தில் நான் சொல்லிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு வழக்கறிஞர் எனக்குப் பக்கத்தில் நின்று நான் பேசுவதை ஒட்டுக் கேட்டார். அதைப் பார்த்ததும் நான், ‘நான் அடுத்தவர்கள் முன்னிலையில் இந்த விஷயத்தைப் பேச முடியாது’ என்று சொன்னேன். உடனே அந்த வழக்கறிஞருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘என்னைப் பார்த்து வெளியே போகச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்? நீ வெளியேதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இந்த நீதிமன்றத்தில் எங்களை அதிகாரம் செய்ய முடியாது’ என்று சொன்னார். நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அல்ல, ஒரு பெண்ணாகத்தான் இதைக் கேட்கிறேன் என்று எடுத்துச் சொல்லியும் பலனில்லை. பெரும் வாக்குவாதங்களுக்குப் பிறகே அவரை வெளியேற்ற முடிந்தது. இவ்வளவு நடக்கும்போதும் அங்கிருந்த நீதிபதி எந்தக் கருத்தும் சொல்லாமல் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தார். நான் பேசி முடித்த பிறகு, ‘நீ இள வயது பெண்ணாக இருப்பதால்தான் நீதிமன்றத்தின் நடைமுறை குறித்து எதுவும் தெரியவில்லை. ஆட்சிப் பணிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால்தான் இதுபோன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உனக்கு அனுபவம் அதிகமாகும்போது இவையெல்லாம் தேவையற்றவை என்று உனக்குப் புரியும்’ என்று சொன்னார்” என்று தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரிஜு, இதுபோன்ற அணுகுமுறைகளால்தான் பெண்கள் பாலியல் குற்றங்களை வெளியே சொல்லத் தயங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“என்னிடம் தவறாக நடந்துகொண்டவர், இதற்கு முன் இதுபோன்று எத்தனையோ குற்றங்களைச் செய்திருக்கலாம். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிமன்றத்தின் இந்த நடைமுறைக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம். பெண்கள் நம் நாட்டுச் சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பெண்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் விசாகா நெறிமுறையைப் பரிந்துரைத்திருக்கிறது. பெண்கள் நீதிமன்றத்துக்கு வரும்போது அவர்களுக்குப் பாகுபாடில்லாத அணுகுமுறை தேவைப்படுகிறது. நான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விதம் என்னை அவமானப்படுத்துவதாக இருந்தது” என்று சொல்லியிருக்கும் ரிஜுவின் வார்த்தைகள், ஒட்டுமொத்த பெண்களின் வலியைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.

ரிஜுவின் வார்த்தைகளில் இருக்கும் உண்மையையும் வேதனையையும் தனிப்பட்ட ஒரு பெண்ணின் புலம்பலாகப் புறக்கணித்துவிட முடியாது. ஒரு பெண், பாலியல்ரீதியாகத் தான் அனுபவித்த சித்ரவதைக்கு நீதி கேட்டுத்தான் நீதிமன்றப் படிகளை மிதிக்கிறாள். அனைவர் முன்னிலையிலும் வாக்குமூலம் தரச் சொல்லி அங்கேயும் இன்னொரு சித்ரவதையை அனுபவிக்கச் சொல்வது நியாயமா? (சில வழக்குகளில் தனியறையில் வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பெறப்பட்டதை மறுக்க முடியாது). பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் பெண்களின் குரல்வளையை ஒடுக்க இதுபோன்ற நடைமுறைகளே போதும். பாதிக்கப்படுகிற பெண்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்களின் அடையாளங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் சட்டத்தைச் செயல்படுத்தக்கூடிய இடமாக இருக்கிற நீதிமன்றங்களில் மட்டும் பெண்கள் தங்களைப் பகிரங்கப்படுத்திக்கொள்ள வேண்டுமா?

“இப்படியெல்லாம் தயங்காமல், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராகத் துணிந்து செயல்பட வேண்டும். வெளிப்படையாகப் பேச வேண்டும்” என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் பாலியல் வன்கொடுமைகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்களை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையே வேறு. ஏற்கனவே உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களை மேலும் மேலும் பலவீனமாக்கும் நடைமுறைகளைவிட அவர்களுக்கு ஆதரவும் நம்பிக்கையும் தருகிற வகையில் வழக்குகளின் விசாரணை அமைய வேண்டும். அப்போதுதான் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளைப் பற்றித் துணிந்து வெளியே சொல்ல முடியும். அவற்றிலிருந்து மீள முடியும்.

நன்றி - தி இந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்