/* up Facebook

Aug 12, 2015

முடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி


தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் நான் தலைமைப் பொறுப்பேற்றிருந்த மூன்று ஆண்டுகளின் (2002 - 2005) பிரச்சனைகளைப் பற்றியும், ‘பிரதாபங்களைப்’ பற்றியும் இதுவரை ஒன்பது பத்திகள் எழுதி இருக்கிறேன். இது பத்தாவது. பத்து என்பது முத்தாய்ப்பு வைக்கும் சம்பிரதாய எண். அதனால் இதை முடிக்கிறேனா? மூன்று ஆண்டுகாலம் குவிந்த அனுபவங்களில் இதற்குமேல் எழுத ஒன்றும் இல்லையா? நிறையவே இருக்கின்றன; ஒவ்வொரு ஆண்டும் கனமான ஆண்டறிக்கை உருவாக்கி அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அறிக்கையை அரசு மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று ஆணையத்தை உருவாக்கிய ஆணை சொல்கிறது. எந்த ஒரு ஆண்டும் சமர்ப்பிக்கப்படுவதில்லை. சம்பிரதாயத்திற்கேனும், விவாதத்திற்கு இடம் கொடுக்காமல்கூட சமர்ப்பிக்கப்படுவதில்லை. என் பணிக்காலத்தில் மட்டு மல்ல; தொடக்கதிலிருந்து இன்றுவரை அதே நிலைதான். மகளிர் ஆணையத்திற்குத் தமிழக அரசு கொடுக்கும் முக்கியத்துவம், மரியாதை இதுதான்.

ஏன் முடிக்கிறேன் என்ற விஷயத்திற்கு வருகிறேன். தொடரில் இதுவரை வந்த ஒவ்வொரு பத்தியும் தன்னிறைவு கொண்ட ஒரு பகுதி; மற்ற பத்திகளை வாசிக்காமலேயே புரிந்து கொள்ளக்கூடிய தனித்து நிற்கும் பகுதி. ஒவ்வொரு பத்தியும் ஒரு சிறுகதை. மூன்று ஆண்டுகால அனுபவ மூட்டையிலிருந்து (களஞ்சியம் என்றும் சொல்லிக் கொள்ளலாம்). பொறுக்கி எடுக்கக்கூடிய சிறுகதைகள், அந்த வடிவத்திற்குரிய தொடக்கம், முடிவு, ஓரளவு விறுவிறுப்புடன் இருக்கும். புதிய வகையான பிரச்சனைகள் இதற்குமேல் அதிகம் இல்லை. ஒரே வகையான பிரச்சனைகள் குறித்தவை என்பதால் சலிப்பு தட்டலாம். புத்தகமாக எழுதினால், பத்திக்குரிய அளவில் வெட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் எழுதினால், தடையற்றுத் தொடரும் ஓட்டமாக இருந் தால், எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. அந்தத் தருணத்தை எதிர் நோக்கித் தள்ளி வைக்கிறேன்.

இதுவரை. . .

முதல் கதை ‘நீதியைத் தேடி நீண்ட பயணம்’, ஏழை அருந்ததியர் பெண் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு இறந்த, பத்து ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைத்த காவல்நிலைய மரணம்; இரண்டாவது, ‘எந்த நீதி இந்தப் பெண்களை சிறையில் அடைத்தது’ தமிழ்நாட்டில் பெண் கைதிகளின் அவல நிலை குறித்து மகளிர் ஆணையம் ஆய்வுசெய்து அளித்த பரிந்துரைகள், அவை ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறிய வெற்றி குறித்தது. மூன்றாவது, ‘காலம் மறந்த கிராமம்.’ வட தமிழகத்தின் ஒதுக்குப்புற கிராமமொன்றில் காலங்காலமாக நடந்துவந்த சாதி - பாலியல் வன்முறைக் கொடுமைகள் ஆணையத்தின் தலையீட்டால் ஓரளவு முடிவுக்கு வந்த கதை. எட்டாவது, ‘பணியிடத்தில் பாலியல் வன்முறை’, உயர் அதிகாரியால் ஒரு பெண்ணுக்குப் பணியிடத்தில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையும், ஒன்பது ஆண்டுகளின் வைராக்கியம் மிக்க போரட்டத்தின் இறுதியில் அப்பெண்ணுக்கு நீதி கிடைத்த விவரங்களும். மற்ற ஐந்தும் ஆணையம் நடத்திய பொது விசாரணைகள், சமுதாயத்தின் கொடிய அவலங்களைப் பொதுமேடையில் ஏற்றி, நீதி தேடிய நிகழ்வுகள்: பெண் சிசுக் கொலைகள், கருக் கொலைகள் குறித்த ‘பிறப்பும் இருப்பும் இழந்த சிசுக்கள்’, தலித் பெண்கள் இலக்காகும் பாலியல் வன்முறைகள், உழைப்புச் சுரண்டல்கள், உரிமை மறுப்புகள் குறித்த ‘முப்பாரம் சுமப்பவர்கள்’, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், வகுப்பறைக் கயமைகள் தொடர்பான ‘கதியற்ற சிறுமிகளும், கிடைக்காத நீதியும், பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் வன்முறைகளும் வக்கிரங்களும் குறித்த ‘சமூகத்தின் சபிக்கப்பட்டவள்’, சினிமாத் தொழிலில் நிலவும் பாலியல் பாகுபாடுகள் குறித்த ‘பெண்கள் மேக் - அப் கலைஞராகக் கூடாதா’, இவைதான் இதுவரை வெளிவந்த பத்திகள்.

செய்ய முடிந்ததும், முடியாததும்

மூன்று ஆண்டுகள் - ஆணையத்தின் செயல்பாடுகள் விரிந்து, பரந்த காலம்; புதிய முயற்சிகள், பரிசோதனைகள் தொடங்கப்பட்ட காலம்; ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாக, நீரின் ஆழத்தை நோட்டம் பார்க்கும், எல்லைக்கோட்டைக் கொஞ்சம் தள்ளிப் பார்க்கும் துணிவு. தயக்கத்துடன் எடுத்த முயற்சிகள் ஓரளவு பயனளித்தன, பயன் அளவிலும், ஆழத்திலும் வேறுபட்டாலும். மறுபக்கம் - தேடி அலுத்த, எரிச்சலும், ஏமாற்றமும் மிகுந்த, திறவாத கதவுகளைத் தட்டி ஓய்ந்த ஆண்டுகள். பெண்களைப் பலிகொண்ட வன்முறைகள், இதயமற்ற குரூரங்கள், தாக்குதல்கள், மாண்பு மறுப்புகள், அவர்தம் இல்லாமைகள், கதறல்கள், குழந்தைகளைக் காப்பாற்றும் போராட்டங்கள். . . இவை ஒரு சிறு சலனத்தையும் ஏற்படுத்தாத மரத்துப்போன மனங்கள், அதிகாரக் கண்ணோட்டங்கள், சட்டங்களைத் துச்சமாக மதிக்கும் அலட்சியப் போக்குகள் இவற்றை நாள்தோறும் பார்த்து விரக்தி அடைந்த ஆண்டுகளும்தான்.

மூச்சுவிடவும் நேரமின்றி ஓடிக் கொண்டிருந்த ஆண்டுகள். நிறுவன நிர்மாணம், புதிய இயங்கு முறைகள் உருவாக்கம், பாதிக்கப்பட்ட பெண்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சி, பெண்கள் அமைப்புகள், மக்கள் இயக்கங்களுடன் தோழமைத் தொடர்புகளைக் கட்டும் செயல்கள், அரசுத் துறைகளுடன் தொடர்புகளை நிறுவுதல். . . இவை ஆரம்பக் கட்டமைப்புப் பணிகள்.

மகளிர் ஆணையங்கள் தேசிய அளவிலும், மாநிலங்கள் தோறும் நிறுவப்பட்டதின் தேவை என்ன? ஆண் ஆதிக்க - சாதிய அஸ்திவாரத்தில் எழுந்துள்ள இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கு, அதிலும் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், கண்ணியமும், நீதியும், சமத்துவமும் கிடைப்பதற்கான அமைப்பும் சூழலும் கண்ணோட்டமும் முற்றிலும் இல்லை. ஜனநாயக நாட்டில் காணாமல் போய்விட்ட, கிடைக்காத, அருகில் நெருங்கவும் இயலாத நீதி, அது உறையும் நீதிமன்றங்கள்; அவற்றில் குவிந்துகிடக்கும் வழக்குகள், ஏழை சொல் அம்பலம் ஏற வழியேயற்ற நிலை. எண்பதுகளில் இந்தியாவில் தொடங்கியிருந்த மகளிர் இயக்கம் உடனடித் தேவைகளில் ஒன்றாக இனம்கண்ட நிறுவன அமைப்பு ‘மகளிர் ஆணையம்’. பெண்களின் பிரச்சனைகளுக்கும் வழக்குகளுக்கும் ஓரளவேனும் தீர்வு காணக்கூடிய மாற்று நிறுவன ஏற்பாடு. நீதிமன்றங்களுக்கு உரிய முழு அதிகாரம் இல்லையெனினும், அரசு அமைப்புகளின் செவிடாகிவிட்ட காதுகளைத் திருகி இயங்கவைக்கும் ஓரளவு அதிகாரம் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு எளிதாக அணுகி, தங்கள் அவலங்களைக் கொட்டவும், கேட்பாரற்று வீட்டிலும் வெளியிலும் ஆட்டம் போடும் ஆணாத்திக்க அட்டகாசங்களை ஓரளவு தட்டிக் கேட்கவும், முடிந்த அளவு நிவாரணம் பெறவும் உறுதி செய்யும் நிறுவனங்கள். உலகம் முழுதும் பெண்கள் பத்தாண்டு என்ற ஆரவாரம் முழங்கியபோது, தான் மட்டும் சளைத்தது அல்ல என்று காட்டிக் கொள்ள இந்திய அரசு மத்தியிலும் மாநிலங்களிலும் மகளிர் ஆணையங்கள் நிறுவும் சட்டம் கொண்டுவந்தது. மாநிலங்களுக்கு வேறு அதிகாரங்கள் உண்டோ இல்லையோ, சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அதிகாரம் இருக்கிறது. தமிழ் நாட்டில் நிறுவப்பட்ட மகளிர் ஆணையம் எந்த அதிகாரமும் அற்று, அற்பப் பெண்களுக்கென்று சட்டம் எதற்கு, ஒரு அரசாணை போதாதா என்று, 1993ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நாட்டின் மற்ற அனைத்து மாநிலங்களிலும் (மற்ற ஒன்றைத் தவிர) மகளிர் ஆணையங்கள் சட்ட அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டன. அதனாலேயே அவை சிறப்பாக இயங்கின என்பதல்ல.

எனக்கு முன் இரு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆணையத்தின் தலைவர்களாக இயங்கினர். நான் பதவி ஏற்றபொழுது, எனக்கு முன்பான தலைவர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மறைந்த பத்மினி ஜேசுதுரை என்னிடம் உறுதியாகச் சொன்னார், ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் அளிக்கும் சட்ட வரைவு அரசிடம் தயார்நிலையில் உள்ளது. ஒரு சின்னத் தள்ளு தள்ளினால் போதும்; சட்டம் வந்து விடும். அப்பறம் நீங்கள்தான் ‘ராணி’ என்றார். முடிசூடிக் கொள்ளும் ஆசை இல்லை என்றாலும், நிலைமை முன்னேறிவிடும், ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் பதவி ஏற்றேன். மூன்றாண்டுகளும் முட்டி மோதினாலும் நகரவில்லை. என் பதவிக் காலம் முடிந்தவுடனேயே சட்டம் நிறைவேற்றப்பட்டது. ‘இந்த அம்மா கொடுக்கிற தொல்லை போதும்; இன்னம் சட்ட அதிகாரம் கொடுத்து, வம்பை விலைக்கு வாங்குவானேன்’ என்ற நியாயமான ஜாக்கிரதை உணர்வுடன், சட்டம் கொண்டு வருவது தள்ளிப் போடப்பட்டிருக்கலாம்.

தமிழ்நாடு மகளிர் ஆணையம் நமது சராசரிப் பெண்கள் போன்று, நலிந்து, மெலிந்த ஜீவன். சமூகநலத்துறையின் தேவையில்லாத ஒரு அங்கம்; அனைவரும் பகுதி நேர உறுப்பினர்; ஆணையத்திற்கு வர வேண்டிய தேவையே இல்லை. பல உறுப்பினர்கள் எப்பொழுதோ தலை காட்டுவதுடன் நின்றுவிட்டனர். கட்டமைப்போ கேட்கவே வேண்டாம். இரு சிறிய அறைகள், மூன்று நான்கு அலுவலர்கள்; சமூகநலத் துறையிலிருந்து அவ்வப்பொழுது இடமாற்றம் செய்து அனுப்பப்படுபவர்கள். நிதிஒதுக்கீடு ஒரு சிறு பிச்சை. எந்த நிகழ்ச்சியோ, விசாரணையோ நடத்துவதற்கு எந்த நிதி ஆதாரமும் இல்லை. இப்படி இருந்ததுதான் ஆணையம்.

எண்ணிக்கையில்:

ஆணையம் ஆண்டுதோறும் பெறும் மனுக்களின் எண்ணிக்கை ஓரளவு ஆணையத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கொள்ளலாம்.

ஆண்டு - மனுக்களின் எண்ணிக்கை

2001 - 110 (எங்கள் ஆணையக் காலத்திற்கு முன்)

2002 - 295

2003 - 568

2004 - 850

மிகப் பெருமளவிலான இந்த அதிகரிப்புக்குக் காரணம் ஆணையத்தின் இருப்பு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் செய்தி வேகமாகப் பரவியது. மனுக்கள் அக்கறையுடன் பரிசீலிக்கப்படுகின்றன; தீர்வு காண உண்மையான முயற்சி எடுக்கப்படுகிறது; சில பல பிரச்சனைகளில் பெண்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்கிறது. திசையோ தீர்வோ தெரியாது தவிக்கும் மக்களுக்கு ஒரே ஒரு சாதகமான தீர்வே பெரும் நம்பிக்கை அளிக்கவல்லது.

சிவில் சமூக அமைப்புகள்:

எனது மிகப்பெரிய பலம் சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகளின் மிகப் பெரும் ஆதரவு. ஒரு சில சமயங்களில் அதுவே விமர்சனத்திற்கு, தாக்குதலுக்கு இலக்காகவும் மாறியதுண்டு. உண்மையில், எனது பதவிக் காலம் மக்கள் அமைப்புகளுடனான கூட்டமைப்பு என்றே சொல்ல வேண்டும். அவற்றில் பல எனக்குப் பலகாலம் பரிச்சயம் உடையவை; அவற்றின் பல நிகழ்ச்சிகள், விசாரணைகளில் நான் பங்கேற்றிருக்கிறேன்.

அவைதான் மாநிலம் முழுதும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பணிபுரிபவை. நான் பதவி ஏற்றதை மகிழ்ச்சியுடன் வரவேற்று, அனைத்து ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்தன. ‘நம்ம ஆளு ஆணையத் தலைவி’ என்ற செய்தியை எங்கும் பரப்பின. எந்த நிகழ்ச்சியோ, விசாரணையோ நடத்த, நிதி ஒதுக்கீடே இல்லாமல் தவித்த நிலையில், நிதி அளிக்காமல் ஆணையத்தை முடக்கிப்போட்டு விடலாம் என்ற அலட்சியம் நிலவியபொழுது, இந்த அமைப்புகள்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவோ, வேறு நிதி உதவியோ எதிர்பார்க்காமலேயே, தாங்களாகவே அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டன. அலுவலக உதவிப் பணிகளையும் செய்து கொடுத்தன. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆணையத்திற்கு வந்த மனுக்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், இந்த அமைப்புகள் மையம் கொண்டிருந்த மாவட்டங்களில் இருந்துதான் அதிக மனுக்கள் பெறப்பட்டன. தொடர் நடவடிக்கைகளும் அந்த மாவட்டங்களில்தான் சிறப்பாகவும், சில சமயங்களில் வெற்றிகரமாகவும் நடைபெற்றன.

ஆணையத்தில் எனது முதல் நிகழ்ச்சியே பெரும்பாலான மக்கள் / மகளிர் அமைப்புகளுடன் நடத்திய கலந்தாய்வுதான். அதன் அடிப்படையில்தான் மூன்றாண்டு செயல் திட்டமே (ணீரீமீஸீபீணீ) தீட்டப்பட்டது. தமிழ்நாட்டின் பெண்களை வாட்டி எடுக்கும் முக்கிய பிரச்சனைகள் எவை, தீர்வுகள் எத் திசை நோக்கிச் செல்ல வேண்டும், அதற்குத் தேவையான வடிவம் எது போன்ற அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தச் செயல் திட்டம்தான், மக்கள் அமைப்புகள் வடிவமைத்த செயல் திட்டம்தான், மூன்றாண்டுகளும் செயல்படுத்தப்பட்டன.

எத்தகைய மனுக்கள்?

மகளிர் ஆணையம் என்றாலே குடும்ப வன்முறை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறைகள் ஆகியவை மட்டுமே கொண்டு செல்லும் இடம் என்ற எண்ணம் நிலவுகிறது. அத்தகைய குடும்ப உறவுகளில் எழும் மனுக்கள் எங்கள் ஆணையத்தில் பெறப்பட்டாலும், அவை பெரும்பான்மையானவை அல்ல. முதல் ஆண்டு பெற்ற மனுக்களில் எண்ணிக்கையில் அதிகமானவை: துன்புறுத்தல்கள் - 73. சொத்துப் பிரச்சனைகள் - 70, காவல்துறைக்கு எதிரான புகார்கள் - 67, வரதட்சணை - 64, பாலியல் துன்புறுத்தல் - 45, பாலியல் பலாத்காரம் - 42, குடும்ப வன்முறை - 34, பணப் பிரச்சனை - 31, உதவி நாடியவை - 28, இருதார மணம் - 20 மற்ற பல.

இவற்றில் குறிப்பிட வேண்டியவை காவல்துறைக்கு எதிரான பல வகைப்பட்ட புகார்கள் : வழக்குகளைப் பதிவு செய்ய மறுத்தல், குற்றவாளிகளின் பக்கம் சேர்ந்து கொள்ளுதல், சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்து காவலில் வைத்தல், பெண்களின் மீது காவல்துறையே வன்முறையில் ஈடுபடுதல், கொடிய குற்றங்களைக் குறைந்த தண்டனை பெறும் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்தல், குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான ஆதிக்கச் சாதியினரின் குற்றங்களை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் எளிதாகத் தப்பிவிடும் பிரிவுகளில் பதிவு செய்தல், பெண்களைக் கைது செய்யும்பொழுது உச்சநீதிமன்றத்தின் ஞி.ரி.ஙிணீsu நெறிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறுதல், காவல் நிலையத்திலேயே பெண்களைச் சித்திரவதை செய்தல் போன்றவை.

அலுவலக இயங்கு முறைகள்:

பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும், விரைந்து கிடைக்கவும் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டன. பெறப்படும் ஒவ்வொரு மனுவும், நடவடிக்கை எடுப்பதற்கு, தொடர்புடைய துறைத் தலைவர் / இயக்குநருக்கும், மாவட்ட ஆட்சியாளர் / காவல் துறைத் தலைவருக்கும், சட்ட உதவித் தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டன; எவரெல்லாம் (அரசு அலுவலர்கள் முதற்கொண்டு) விசாரிக்கப்பட வேண்டும், எத்தகைய விவரங்கள் பெறப்பட வேண்டும், எவை உடனடி நிவாரணம் அளிக்கப்பட வேண்டும், எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை உடனே அனுப்ப வேண்டும் போன்ற அறிவுரைகள் அளிக்கப்பட்டன. இரு வாரங்களுக்கு ஒருமுறை நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் அதிகாரிக்குத் தெரியப்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, ஆணையம் அதிகாரிகளுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்தின் நகலும் மனுதாரருக்கு அனுப்பப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரியை, கடித நகலுடன் அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தன் பிரச்சனையின் பால் கவனம் செலுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை முதல்முறையாக ஏற்பட்டது; எங்கு செல்ல வேண்டும் என்ற வழியும் தெரிந்தது. அத்துடன், அரசு நிறுவனங்களோ, ஆணையம் போன்ற ஹீuணீsவீ-ரீஷீஸ்t நிறுவனங்களோ, ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டும் என்ற ஜனநாயக இயங்கு முறை எங்கும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்து, அங்கலாய்ப்பதே. உண்மை அறிவதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் வேறு நிறைவேற்றப்பட்டு, பாதி நேரம் பயனற்றும் கிடக்கிறது. இத்தகைய தவிப்புகள் இல்லாமல், ஒவ்வொரு மனுதாரரும், தனது மனுவின் நிலை என்ன என்பதைக் கேட்காமலே தெரிவிக்கும் முறை இது.

ஆணையம் அனுப்பும் எத்தகைய பிரச்சனைகள் மாநில /மாவட்ட அரசு அமைப்புகளினால் அக்கறையுடன் பரிசீலிக்கப்பட்டன? ஒரு சில மாவட்டங்களில் ஆட்சியரின் தனிப்பட்ட அக்கறையினால், பெண்களின் மனுக்கள் விசாரிக்கப்பட்டன. சில வழக்குகள் ஆலோசனை மையங்கள் மூலமாக தொடர்ந்து கவனிக்கப்பட்டன. பெரும்பாலும் குடும்பப் பிரச்சனைகள், வரதட்சணைக் கொடுமைகள் போன்றவை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டு, ஆணையத்திற்கு நடவடிக்கை அறிக்கை அனுப்பட்டது. ஆனால், அரசு துறைகள், குறிப்பாக காவல்துறை மீதான புகார்கள் கொஞ்சம்கூட கண்டு கொள்ளப்படாமல், கிடப்பில் போடப்பட்டன; தொடர்ந்து நச்சரித்தால், விசாரணை செய்ததாகவும் புகார் ஆதாரமற்றது என்றும் ஒரே பதில்தான் கிடைத்தது.

மாவட்ட விசாரணைகள்

நான் மாவட்டவாரியான விசாரணைகள் ஏற்பாடுசெய்து, தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இவற்றில் வெகுகாலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பெண்களின் பிரச்சனைகளுக்கும், கடினமானவற்றிற்கும் ஓரளவு உடனடித் தீர்வு காணமுடிந்தது. ஒரு மாவட்டத்தி லிருந்து ஆணையம் பெற்ற மனுக்கள் அனைத்தும் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்ட விசாரணைக்கு ஒரு மாதம் முன்னதாகவே மாவட்ட ஆட்சியருக்கு எழுதி, விசாரணை குறித்து, பரவலாக அறிவிப்புகள் செய்யும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து குவிந்தனர். ஆட்சியாளர் தொடங்கி, அனைத்து மாவட்ட அதிகாரிகளும், மகளிர் மனுக்கள் தொடர்பான விவரங்கள், அவர்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத் திட்டங்கள் ஆகிய விவரங்களுடன் விசாரணையில் பங்கேற்க வேண்டுமென்றோம். இத்தகைய மாவட்ட விசாரணைகளில் வியத்தகு தீர்வுகள் உடனடியாகக் கிடைத்தன. ஒரே நேரத்தில் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் ஒன்றாகச் சேர்ந்திருந்ததால், பலகாலம் பிடிக்கும், மற்றவரிடம் தள்ளிவிட்டுத் தப்பித்துக் கொள்ளும், பொறுப்புகள் உதறித் தள்ளப்படும் வழக்கமான அரச அமைப்பின் போக்குகள் தவிர்க்கப் பட்டதுதான் வெற்றிக்கான காரணம் என்று நினைக்கிறேன். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களிடம், ஆணையம் தங்கள் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை உருவானதும், அது நாளடைவில் வலுப்பட்டதும் காரணம். மாவட்டத் தலைமையின் உண்மையான அக்கறை, ஆர்வத்தினைப் பொறுத்தும் விளைவுகள் வேறுபட்டன.

பொது விசாரணைகள்

எனது மூன்று ஆண்டு பணிக் காலத்தின் முக்கிய சாதனைகளாக நான் கருதுவது ஆணையம் நடத்திய பொது விசாரணைகள். பொது விசாரணை என்ற வடிவம் சென்ற நூற்றாண்டின் தொன்னூறுகளில் இருந்து மக்கள் அமைப்புகள் கடைப்பிடித்த, ஜனநாயக வடிவமாக, பாதிக்கப்பட்டோருக்கு நீதி தேடும் வடிவமாக உருவெடுத்திருந்தது. ஒரு குறிப்பிட்ட முக்கிய சமூகப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டோரின் குரல் ஒலிப்பதற்கும், அதிகார அமைப்புகளின் அடைத்த காதுகளைக் கிழிப்பதற்கும், சமூகத்தின் ஆன்மாவை உலுக்குவதற்கும், மீடியாவின் கவனம் திரும்புவதற்கும் இத்தகைய விசாரணைகள் பயன்பட்டன. ஆனால், அதிகார அமைப்புகளோ, ஆணையங்களோ இந்த வடிவத்தைப் பயன்படுத்துவது கிடையாது. எங்கள் ஆணையம் என் பதவிக் காலத்தில் இதை முக்கிய கருவியாகப் பயன்படுத்தியது. இதற்கும் என் சிவில் சமூகப் பின்னணிதான் காரணமாகவும் உந்துகோலாகவும் இருந்தது. பொது விசாரணை நடுவர் மன்றங்கள் கவனமாக அமைக்கப்பட்டன. மதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தலைவராகவும், மக்கள் நலத்தில் ஆர்வமுடைய சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், குறிப்பிட்ட பொருள் குறித்த நிபுணர்கள் கொண்ட நடுவர் மன்றங்களாக அவை அமைந்ததால், அவற்றின் தீர்ப்புகளுக்கும் பரிந்துரைகளுக்கும் அரசினால் உதாசீனம் செய்ய இயலாத தார்மீக வலிமை இருந்தது. மீடியா இப் பொது விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது.

எங்கள் ஆணையம் நடத்திய பொது விசாரணைகளின் தரம், எடுக்கப்பட்ட கவனம், விளைவித்த சலனம் ஆகியவற்றைக் கண்டு வியந்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர், அனைத்து மாநில மகளிர் ஆணையத் தலைவர்களின் மாநாட்டில் நாங்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் குறித்து என்னை விளக்க வைத்து, அவற்றை முன்மாதிரியாகக் கொள்ளப் பரிந்துரைத்தார்.

மேலே குறிப்பிட்ட ஐந்து பொது விசாரணைகள் தவிர மற்ற சிலவும் செய்யப்பட்டன. மதுரையில் ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள்’, சென்னையில் ‘பெண் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை’, ‘பள்ளிகளில் பெண் குழந்தைகள் உரிமை மறுப்புகள்’ ஆகிய மூன்றும் இவற்றில் அடங்கும்.

இப் பொதுவிசாரணைகள் பெண்களின் மீதான அநீதிகள், வன்முறை களின்பால் கவனம் ஈர்க்கும் வலிமை மிக்க வடிவமாக உருவெடுத்த தன் பின்னணியை ஏற்கெனவே ஒரு பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். சட்ட அதிகாரம் ஏதுமற்ற ஆணையம், அரசின் உயர் பதவியில் இருப்பவர்களிலிருந்து அனைவரையும் விசாரணை மன்றத்தில் பதில் சொல்ல வைத்தது எவ்வாறு? எனது முதல் பொது விசாரணை, பதவி ஏற்ற மூன்று மாதங்களில் நடந்த பெண் சிசுக் கொலை, கருக் கொலைகள் குறித்தது. அதை நடத்தவிடாமல் அரசு தடுக்க முயன்று, அரசு அதிகாரிகள் பங்கேற்கக் கூடாது என்று ஆணை இட்டிருந்தது. அந்த அனுபவம் தந்த கசப்பான படிப்பினை ஒரு உத்தியைச் சிந்திக்க வைத்தது. தேசிய மகளிர் ஆணையத்தின் துணையுடன் அனைத்துப் பொது விசாரணைகளையும் நடத்துவது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது. அதற்குப் பின் நடந்த அனைத்துப் பொது விசாரணைகளும் முழுவதும் எங்கள் ஆணையத்தினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டாலும், இரு ஆணையங்களின் பெயரில் நடந்தன. குற்றவாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தேசிய மகளிர் ஆணையத்தின் சம்மன் அனுப்பப்பட்டு, அனைவரும் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. விருதுநகரில் நடந்த தலித் பெண்கள் தொடர்பான பொதுவிசாரணையிலும், மதுரையில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்ததிலும், பாதிக்கப்பட்டவர்கள், பார்வையாளர்கள் எண்ணிக்கையை விஞ்சி மாநில ஞிநிறி முதற்கொண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் குழுமியிருந்தனர். பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. அதிகார வர்க்கத்தின் கடும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்கள், துணிந்து, அவர்களது குமுறல்களைக் கொட்ட முடிந்தது. மறைக்கப்பட்ட பல உண்மைகள் திரை கிழித்து, வெடித்து வெளிவந்தன.

அனைத்துப் பொது விசாரணைகளிலும் பரிந்துரைகள் குறிப்பிட்ட வழக்குகளுக்கு அப்பால் சென்று, பொதுவான பலவும் அளிக்கப்பட்டன. சட்டத் திருத்தங்கள், அரசின் கொள்கை மாற்றங்கள், அதிகாரிகளின் கடப்பாடுகள் தொடர்பான அத்தகைய பரிந்துரைகள்மேல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பது சிறு பிள்ளைத்தனமானதுதான். என் பணிக் காலம் முடிவடைவதற்குமுன் தேசிய மகளிர் ஆணையமும் எங்கள் ஆணையமும் இணைந்து, பரிந்துரைகளுக்கான நடவடிக்கை அறிக்கை வேண்டுமென்று அரசிடம் வற்புறுத்தினோம். ஜனவரி 2015இல், என் பணிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது, தலைமைச் செயலரின் தலைமையில், அனைத்துத் துறை செயலர், இயக்குநர்கள் குழுமிய கூட்டத்தில், இரு ஆணையத் தலைவர்களிடமும் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. அனைத்துப் பரிந்துரை களும் கவனத்துடன் பரிசீலிக்கப்படுகின்றன என்ற பொத்தாம்பொதுவான விளக்கத்துடன், ஒரு சிலவற்றின் பால் சில நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

தாக்கம்

இத்தகைய பல தரப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, ஆணையத்தில் பெறப்பட்ட மனுக்களில் ஒரு கணிசமான எண்ணிக்கைக்கு, முழுமையாக இல்லாவிடினும், ஓரளவு தீர்வுகாண முடிந்தது. ஆனால், பல தீர்வும் இன்றி, ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு அதற்குமேல் எடுக்கக்கூடிய நடவடிக்கை ஏதும் இல்லாததால், மூடப்பட்டன. ஒரு பெண்ணின் தவிப்பும் வேதனையும் கண்ணீரும் ஒரு ‘கோப்பாக’ மாறி, மீட்க முடியாத, ஆழமான அலுவலகக் கிணற்றுக்குள் தள்ளப்பட்டது. அவற்றின் விவரங்கள்.

ஒரிரு வழக்குகளும் முடிவுகளும்

1) இது சரியான முடிவுதானா? - ஒரு இரவில், தொலைபேசி வழியாகவே முடிந்த கதை

திருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து உள்ளூர் தலித் தலைவர் ஒருவர் ஒரு சனிக்கிழமை இரவு என்னிடம் தொலைபேசியில் சொல்கிறார்: 18 வயது, எழுத்தறிவற்ற, விவசாயக் கூலித் தொழிலாளியான தலித் இளம்பெண், நடுத்தர வர்க்க, இஸ்லாமிய, திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான ஒருவனுடன் உறவுகொண்டு, 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு, அவளை மணந்து கொள்வதாக ஜமாத் முன் ஒப்புக்கொள்கிறான். ஆனால், அவனது சகோதரன் தலையிட்டு, காவல்துறையின் ஆதரவுடன், பெண்ணுக்கு ரூ.50,000 கொடுத்து, விஷயத்தை ‘முடித்து விடலாம்’ என்கிறான். சம்பந்தப்பட்ட அனைவரும் மகளிர் காவல் நிலையத்தில் கூடியிருக்கின்றனர். அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். அவனது மனைவியும் காவல்நிலையத்திற்கு வந்து, அந்தத் திருமணம் நடந்தால், தான் தற்கொலை செய்துகொள்வேன் என்கிறாள். இரு வாரங்களுக்கு முன்பாக, அவன் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். அரசு மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் சிகிச்சைபெற்று வெளி வந்திருக்கிறான்.

இரவு எட்டு மணிக்கு நான் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தொலைபேசியில் பேசுகிறேன். பெண் காவலர், ஆணையத் தலைவரின் தலையீட்டால் பயந்து போய், நான் சொல்வதைச் செய்வதாக ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், தீர்வு என்ன? பெண்ணின் தந்தை பணத்தை வாங்கிக் கொண்டு விஷயத்தை முடித்து விடலாம் என்கிறார். நான் ஒவ்வொருவரிடமும் - பாதிக்கப்பட்ட தலித் பெண், அவளது தந்தை, குற்றவாளி ஆண், அவனது மனைவி, தலித் தலைவர், இரு பெண் காவலர், ஒரு இன்ஸ்பெக்டர், மற்றொரு காவல்துறையினர் - மாறி, மாறிப் பேசுகிறேன். இரு பெண்களும், விக்கி விக்கி அழுகிறார்கள். என்ன சொல்வது? காலை 4.00 மணி வரை தொடர்கிறது. (2002ஆம் ஆண்டு. mobile phone என்னிடம் இல்லை.)

திடீரென்று இரு பெண்களும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்கிறார்கள். மனைவி தன் கணவனின் மறு மணத்திற்கு ஒப்புதல் அளிக்கிறாள். அவன் தற்கொலை செய்து கொண்டால், தன் குழந்தைகளுக்குத் தந்தை இல்லாமல் போய் விடும்; ஆகவே, அவன் உயிருடன் இருந்தால் போதும் என்கிறாள். தலித் பெண் தொகையை வாங்கிக் கொண்டு தான் சென்று விடுவதாகச் சொல்கிறாள்.

மூன்று நாட்கள் கழித்து எனக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. தலித் பெண் இஸ்லாத்திற்கு மதம் மாறுகிறாள். மதம் மாற்றுத் தடை சட்டத்திற்கேற்ப, மாஜிஸ்ட்ரேட் முன்பாகத் திருமணம் பதிவு செய்யப்படுகிறது. ஜமாத் முன்பு திருமணம் நடைபெறுகிறது.

வழக்கு முழுதும் தொலைபேசி மூலமாக மட்டுமே நடந்தது. எந்த மனுவும், கோப்பும் இல்லை. பின்பு தலித் தலைவர் கடிதம் எழுதினார். பல மாதங்களுக்குப் பின் நான் திருச்சி மாவட்ட விசாரணைக்குச் சென்றபோது, அந்தக் காவல் நிலையப் பெண் இன்ஸ்பெக்டர் முழு கோப்பையையும் என்னிடம் அளித்தார்.

குழப்பமான அந்தப் பிரச்சனைக்கு இதுதான் நியாயமான தீர்வா?

2) வாழ்வுக்கு ஆதாரம் எங்கே?

தொலைபேசி மூலம் எனக்குச் செய்தி வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் 18 வயதுகூட நிரம்பாதவர்களாகத் தென்படும் தமிழ்நாட்டு கிராமப்புறத்து இளம் பெண்கள் 41 பேர் குஜராத்தில் இறால் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக புரோக்கர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குஜராத்தில் கடுமையான சுரண்டல்களுக்கு உள்ளாவதற் கும், கிரிமினல்களிடம் சிக்கிக் கொள்வதற்கும், பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆணையம் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்.

நான் உடனே, சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநரைத் தொலைபேசியில் அழைத்து, தகுந்த நடவடிக்கை உடனே எடுக்க வேண்டினேன். அவர் உடனே ரெயில்வே காவல் துறையிடம் சொல்லி, அந்தப் பெண்கள் ரெயிலில் ஏறுவதற்கு முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்று மகிழ்ச்சி அடையலாமா?

மறுநாள் செய்தித் தாள்களில் அந்தப் பெண்கள் முகத்தை மறைத்துக் கொண்டு அழும் காட்சி வெளி வந்தது. சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் என்னிடம் சொன்னார். அனைத்துப் பெண்களும் சில தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குஜராத் செல்லாமல் தடுக்கப்பட்டபோது, தங்களை ஊருக்குத் திரும்ப அனுப்ப வேண்டாமென்று கேட்டு அழுதனர். அவர்களது கிராமங்களில் பிழைப்பதற்கே வழியில்லை. பெற்றோர்கள் புரோக்கருக்கான பணத்தைக் கடன் வாங்கி இவர்களை அனுப்பி உள்ளனர். திரும்பிப் போனால், வசவுகளுக்கு ஆளாக வேண்டி இருக்கும். எனினும் அனைவரும் அவரவர்கள் ஊருக்கு டிக்கட் வாங்கிக் கொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். புரோக்கர் தப்பி ஓடிவிட்டான்.

ஆணையத்திலிருந்து முதலில் அனைத்து மீடியாவிற்கும் எழுதினோம்; பெண்களைப் புகைப்படம் எடுத்து, பத்திரிகைகளில் பிரசுரித்தது தவறு. பெண்களின் வேதனைகளையும் தவிப்புகளையும் கதியின்மையையும் பரபரப்புச் செய்தியாக்க வேண்டாம். அந்தப் பெண்களின் மாவட்ட ஆட்சியாளர்களுக்குக் கடிதம் எழுதினோம், அந்தப் பெண்களுக்கு வேலையோ, மற்ற வாழ்வாதாரமோ கிடைக்க வழிசெய்ய வேண்டும். பெண்களைப் படு குழியிலிருந்து அப்போதைக்குக் காப்பாற்றிவிட்டோம். மீண்டும் மற்றொரு படுகுழியில் விழுவதைத் தடுக்க இயலுமா? வறண்டு, வாழ்வற்றுவிட்ட கிராமங்களில் இந்தப் பெண்கள் பிழைப்பதற்கு வழி ஏது? அதனை உத்திரவாதம் செய்யும் மந்திரம் எங்கே?

இப்படி எத்தனையோ, உணர்வுகளை உலுக்கும், விடையற்ற கேள்விகளில் புரட்டி எடுக்கும் பல அனுபவங்கள். ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண்ணின் கண்ணீர், அமுக்கப்பட்ட விம்மல், அழியும் வாழ்க்கை.

கூட்டிக் கழித்தால்...

மூன்று ஆண்டுகளின் Balance Sheet கணக்குக் கொடுக்க முடியாது. எண்களில் அடங்காத கணக்கு அது.

மகளிர் ஆணையங்கள் பயனளிப்பவையா? முழுமையான சட்ட அதிகாரம் கொடுத்தால், அதன்பின் அரசியல் உறுதி இருந்தால், தேவையான கட்டமைப்புகள் நிறுவப்பட்டால், போதிய நிதி ஆதாரம் அளிக்கப்பட்டால், அரசின் அதிகார வர்க்கத்தின் தலையீடு இல்லாதிருந்தால், ஆணையத் தலைவரும் உறுப்பினர்களும் ஆழ்ந்த சமூக ஈடுபாடும், ஒடுக்கப்பட்ட மக்கள், மகளிரின் விடுதலையிலும், சமத்துவத்திலும், ஜனநாயகப் பண்புகளிலும் அசையா நம்பிக்கை கொண்டு அரசு மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாதவர்களாகவும் இருந்தால்... ஆணையங்கள் நிச்சயம் பயனளிக்கும். ஆனால், எத்தனை ‘ஆல்கள்’’(‘ifs’)? அவை நிறைவேறட்டும். பார்ப்போம்.

மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள் என்ற இந்தப் பத்தி ஜூலை 2013 காலச்சுவடு இதழில் தொடங்கி, இந்த இதழுடன் முடிவடைகிறது. இதனை வெளியிட்ட காலச்சுவடுக்கும், கண்ணன் அவர்களுக்கும் என் நன்றி. அனைத்துக் கட்டுரைகளும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும், ஆணையத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவரும், நெருங்கிய நண்பருமான சுதா ராமலிங்கம் அவர்களின் பார்வைக்குப் பின்தான் அனுப்பப்பட்டன. அவருக்கு நன்றி. இதனை எழுத வேண்டுமென்று வேண்டி, எழுதத் தொடங்குவதற்கு முன் மறைந்த சுந்தர ராமசாமி அவர்களுக்கு என்

அஞ்சலி. இந்தப் பத்தி வாசிக்கப்பட்டதா, கேள்விகளை எழுப்பியதா என்பது தெரியவில்லை. எனக்குள் இருக்கும் இந்தக் கேள்வியுடன் முடிக்கிறேன்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்