/* up Facebook

Aug 11, 2015

நாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது‘சிறகு முளைத்த பெண்’ ஸர்மிளா ஸெய்யிதின் கவிதைத் தொகுப்பு. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம், ஸர்மிளாவின் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும்போதில் பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகளும் கவிதைக்குள் இருப்பதை வெளிப்படுத்தினார்.

ஸர்மிளா ஸெய்யித் இலங்கை மட்டக் களப்பில் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பொன்றை நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டவர். அவரை கவிஞராகவும் நாவலாசிரியராகவும் சூழல் ஆக்கிவைத்திருந்தது. இதன் அடிப்படையில் அவர் ஒரு சமூகச் செயல்பாட்டாளராகவும் உருவானார். இறுக்கமான இஸ்லாமியச் சமூகத்திலிருந்து பேனாவோடும் கவிதைகளோடும் ஒரு பெண் வெளிவருவதைச் சமூகம் அவ்வளவு சுமூகமாக ஏற்றுக்கொள்ளாது. நம் சல்மாவுக்கு நேர்ந்ததும் இதுதான்.

கவிதை நூல் வெளியாகி இருநாட்களின் பின் பிபிசி வானொலி நிலையம்

ஸர்மிளாவை நேர்காணல் செய்தது. இலங்கையில் சுற்றுலாத்தொழிலை மேம்படுத்த பாலியல்தொழிலைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று மாகாண சபையில் ஓர் உறுப்பினர் பேசியிருந்ததை முன்வைத்து, ஸர்மிளாவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை ஏன் அவரிடம் கேட்க வேண்டும் என்பதை ஒரு யூகமாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஈழத்தில் போருக்குப் பின்னான சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரச் சவால்கள் குறித்து ஸர்மிளா ஸெய்யித் ஏற்கெனவே ஆய்வு ஒன்றைச் செய்திருந்தார். இந்தப் பின்னணியில் பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம் குறித்தும், மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களும் அதேவிதமான தொழிலுக்குள் தள்ளப்படும் நிலை குறித்தும் ஸர்மிளா தகவல்களைப் பெற்றிருந்தார். பதிலளித்த ஸர்மிளா, பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக அங்கீகரிப்பதைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். அவ்வாறு செய்தால் அத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கலாம்; ஆனால் எப்படியும் அது பெண்களின் மீதான சுரண்டல்தான், அவர்களுக்கு உடல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை எதிர்காலத்தில் உருவாக்கும் என்றார். ஆனால் ஒலிபரப்பில் அவர் சொன்ன கருத்துகள் முழுமையாக வரவில்லை. இது ஒலிபரப்பாகும்போதே அவருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்தன; தான் பாலியல் தொழிலை ஏற்கவில்லை என்று பலரிடமும் அழுத்தம் திருத்தமாக விளக்கினார். ஆனாலும் நிலைமையைச் சிக்கலாக்க அடிப்படைவாதிகள் ஆர்வம் கொள்ளலாயினர். பின் ஸர்மிளாவை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரை மிரட்டவும் இழிவு செய்யவுமாகத் தங்களின் இறைப்பணியை முன்னெடுத்து வந்தார்கள். ஊர்ப் பெரியவர்களையும் ஜமாத் அமைப்பினரையும் தங்களின் தரத்துக்குக் கீழிறக்குவதில் வெற்றியடைந்ததால், ஏறாவூர் அடிப்படைவாதிகள் துணிந்து களமாடினார்கள். இதன் பொருட்டாக ஸர்மிளா சொந்த ஊரைவிட்டும் மகனுடன் வெளியேறினார்.

இந்நிலையில் சென்னைக் காவல்துறையின் உயர்நிலை அதிகாரி ஒருவர் தன் துறைசார்ந்த பெண் காவலர் ஒருவருடன் உரையாடிய காமச்சுவைப் பேச்சுகள் ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வெளியாகிப் பரபரப்பை உண்டாக்கின. கொடுமையான முறையில் இழிவுசெய்யக் காத்திருந்த ஏறாவூர் அடிப்படைவாதிகள் கொக்காகக் காத்திருந்து இந்தச் சந்தர்ப்பத்தைக் கொத்திக்கொண்டார்கள். காமச்சுவைப் பேச்சுக்கு இலக்கான அந்தப் பெண் இவள்தான் என ஸர்மிளா ஸெய்யிதின் படத்தைப் பதிவேற்றினார்கள். நாக் கூசும் வகையிலும் பாலியல் உறுப்புகளை வக்கிரமாகக் குறிப்பிட்டும் வசை பாடினார்கள். அவர்கள் இணையதளத் தொழில்நுட்பங்களில் கைதேர்ந்திருப்பதைக் கவனித்தால் சமூகத்தின் கௌரவ அந்தஸ்தைப் பெற்றவர்களாக இருப்பது நிச்சயமெனத் தெரிகிறது. இலங்கை, இந்தியா, மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமோ அவர்களின் செயல்பாட்டுத் தளமாக இருக்கலாம்.

ஸர்மிளா இதைச் சமூகத்தின் பொதுப்பார்வைக்குக் கொண்டுவந்தார். தன் முகநூலில் அடிப்படைவாதிகள் பதிவுகளை மறுபதிவு செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். ஸர்மிளாவுக்கு ஆதரவாக எழுத்துலகமும் ஜனநாயகச் சக்திகளும் திரண்டன.

ஆத்திரமுற்ற ஏறாவூர் அடிப்படைவாதிகள் அல்லாஹ்வின் சக்தியைக் கேலிசெய்யும் வண்ணமாக மார்ச் 28ஆம் நாள் ஒரு கற்பனையுலகைச் சிருஷ்டி செய்தார்கள். அங்கு தனித்துநின்ற ஸர்மிளா ஸெய்யித்தைப் படுகொலை செய்தார்கள்; அவர் கோரமான முறையில் வெட்டுண்டு கிடக்கும் படத்தையும் பூலோகவாசிகள் அறியும்படியாக இணையங்களில் ஏற்றம் செய்தார்கள். அது அவர்களின் ராஜ்யமாக இருந்ததால், அங்கே நம்மால் நுழையவும் முடியவில்லை; ஸர்மிளாவைக் காப்பாற்றவும் முடியாமல் போயிற்று. மதஅடிப்படைவாதிகள் வல்லமை சக்தி குறித்துப் பதற மட்டுமே நம்மால் முடிந்தது. அவ்வுலக போலீஸாரின் விசாரணை நடப்பதாகவும் அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனையில்தான் தெரியவரும் என்றும் கவலைப்பட்டுப் பூலோகத்துக்குச் செய்தி அனுப்பியிருந்தார்கள்..

ஸர்மிளாவின் இடையறாத போராட்டத்துக்குத் தமிழக எழுத்தாளர்களும் ஊடகங்களும் துணையாயிருந்தன; ‘பெண்வெளி: ஸர்மிளா ஸெய்யிதின் படைப்புலகமும் பதற்றங்களும்’ என்ற தலைப்பில் கவிஞர்களும் ஆளுமைகளும் சமய வரம்புகளையும் தாண்டி தங்களின் கண்டன முழக்கத்தை சென்னையில்கூடி எழுப்பியுள்ளார்கள். அடிப்படைவாதிகள் ஏறாவூர்.காம் என்ற இணையதளம் மூலம் ஸர்மிளாவைக் களங்கப்படுத்தவும் அவரின் எழுத்தை முடக்கவும் நினைத்தார்கள்; இப்போது ஏறாவூர்.காம் முடங்கிப்போயுள்ளது. ஆயினும் வெவ்வேறு பெயர்களில் அவர்கள் சாக்கடைப் புழுக்கள்போலப் பெருகி வருகிறார்கள். ‘பொதுபல சேனாவைத் தடைசெய்’ என்று அடுத்த இணைய பிறவி எடுத்துள்ளனர்.

நியாயம், அநியாயம், நடந்தது என்ன என்பதுபோன்ற அனைத்துப் புலனறிதலையும் விடுத்து, இந்த விவகாரம் கையாளப்படும் விவரத்தைப் பார்த்தால் மதவாத உலகின் தற்குறித்தனங்கள் நிர்வாணப்பட்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது; அவை மிகப்பெரும் களங்கத்தை அவர்களுக்கே உருவாக்கிக் கொடுக்கின்றன. பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ விவகாரத்தைத் திருச்செங்கோட்டுக் கவரிமான்கள் கையாண்டதற்கும், ஸர்மிளா ஸெய்யிதின் பேட்டியை ஏறாவூர் அடிப்படைவாதிகள் கையாள்வதற்கும் இடையேயுள்ள ஒற்றுமை சமூகத்திற்குச் சவால் விடுகிறது. தத்தமது சாதிக்கும் மதத்திற்கும் முறையே பெருமாள்முருகனும் ஸர்மிளா ஸெய்யிதும் களங்கம் விளைவித்தார்கள் என்பதுதான் அவரவர்களின் குற்றச்சாட்டாகவோ கோபமாகவோ இருக்கிறது. அந்த அவலத்தை நீக்க வந்த பெருந்தகைகள் தங்களை எவ்வகையில் இழிவுசெய்யக் கூடாது என்று முழங்கினார்களோ அதேவிதமாக அவர்கள் தம்மைத்தாமே இழிவுசெய்து கொள்கிறார்கள்.

மாதொருபாகனின் ஆட்சேப வரிகளை அவர்களே ஒன்றுக்குப் பல்லாயிரமாகப் பிரசுரித்தார்கள்; வட்டாரம் முழுக்க விநியோகம் செய்து தங்களின் ‘தன்மானத்தை’ காப்பாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே ஏறாவூர் அடிப்படைவாதிகள் இஸ்லாத்தின் மாண்புக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதாக ஸர்மிளாமீது குற்றம் சுமத்தி, அவர்களே இஸ்லாமிய மாண்பைக் களங்கப்படுத்தினார்கள். இஸ்லாமியப் பண்புகளுக்கு எதிரான அருவருப்பூட்டும் ஆபாசச் சொற்களை அதன் உச்சம்வரை பயன்படுத்தினார்கள். மார்க்கநெறியாளர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்கள் அடிப்படைவாதிகளைக் கண்டிக்கவோ அவர்கள் இஸ்லாத்தை இழிவுசெய்கிறார்கள் என்று எடுத்துரைக்கவோ தயாராயில்லை. பாதகம் புரிந்த ஒரு சிலரும், மௌனம் காத்த வேறு சிலரும் இறைவனின் நல்லடியார்கள் பட்டியலில் தங்களின் பெயரைப் பொறித்துக்கொண்டார்கள். அப்படியும் அடங்க மறுத்த இறைவிசுவாசமோ அல்லது இஸ்லாமியப் பற்றோ ஸர்மிளாவை ஆடை குலைவுற்ற நிலையில் கொலைசெய்து அவர் ‘கற்பழிக்கப்பட்டாரா’ என்பது போலீஸ் விசாரணையின்போதுதான் தெரியவரும் என்றும் பகிரங்கமாய்ப் பேசினார்கள். சும்மாவே திமிர்ந்து எழுந்துநின்ற தங்களின் ஆண்குறித் தினவுக்கு இவ்வாறாகத் தீனி போட்டுக்கொண்டார்கள்.

பெண்ணுக்கு எதிராகத் தாங்கள் புரியும் போருக்கு ஏனையப் பெண்களின் ஆதரவை உடனடியாகப் பெற்றுத்தர போலித்தனமான இறைக் கரிசனங்கள் உதவுகின்றன. சைபர் கிரைம் விஷயத்தில் எதிரிகளை இனம் கண்டு பிடித்துக் கைதுசெய்வது வானில் வலை வீசி நட்சத்திரங்களைப் பிடிப்பதைப் போன்றது. காவல் துறையினர் மேற்கொள்ளப்போகும் சாகசத்தில் அடிப் படைவாதிகள் மிகவே நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ? இவ்வாறாகப் பல சாதகங்கள் அவர்களுக்கு உண்டு.

ஆனால் நீதி இறைவனின் அரியாசனத்திலிருந்து இறங்கிவருவது. அதற்கு நீங்கள் ஒன்றும் கைகாட்டி மரம் வைக்கவேண்டாம். அது தன் பாட்டுக்கு இறங்கும். தன் மொழியால் தீர்ப்பு வழங்கும். இந்த நம்பிக்கையால் ஸர்மிளா அவர்களை நிச்சயம் எதிர்கொள்வார்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்