/* up Facebook

Aug 31, 2015

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் – பாத்திமா நளீரா


இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள்விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. நகலான நடைமுறை வாழ்வுதான் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. நிலையான, கருத்தொருமித்த மணவாழ்வு நிலைத்து நிற்க தவமிருந்து பெறும் வரத்துக்குச் சமனாகிவிடுகிறது. ஆண், பெண் என்ற இணைப்பில் கணவன், மனைவி என்ற உறவு எத்தனை வீதமானவை கலங்கமற்று ஜொலிக்கின்றன? எத்தனை வீதமானவை முலாம் பூசப்பட்டுத் தவிக்கின்றன?

அன்பு-அரவணைப்பு-விட்டுக் கொடுத்தல்-புரிந்துணர்வு-காதல் இவைகளெல்லாம் எத்தனை சதவீதமானவை மணவாழ்க்கையில் கையெழுத்து இடுகின்றன என்பதனை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் இவை எல்லாவற்றுக்கும் விடை கொடுத்து வெகுநாட்களாகின்றன. அபபடியானதொரு போலி வாழ்க்கை முறைதான் மணவாழ்வில் பெரும்பாலும் கலக்கப்படுகிறது.

இன்றைய வாழ்வின் முக்கிய இலட்சியமாகவிருப்பது, படிப்பது, வேலை செய்வது,திருமணம் செய்து கொள்வது, ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது எனச் சுருங்கி விட்டது. அதனையும் மீறி பல உள்ளார்ந்த உணர்வுகளைச் சென்றடையும் முன்னரே மனிதனின் இந்த அடிப்படைத் தேவைகளிலேயே காலமும் நேரமும் கரைந்து போய்விடுகிறது. மணவாழ்க்கை இணக்கமாக அமையாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாகிவிடும்.

தனக்காக, தன்குடும்பத்துக்காக உண்மையான அன்புடன் வாழ்வதனை விட்டுவிட்டு பிறரின் மதிப்பு, கௌரவம், புகழுக்காக வாழும் இமிடேஸன் வாழ்க்கைiயும் மணமுறிவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

பெரும்பாலும் மணவாழ்க்கையில் ஏனிந்த உறவு முறிவு? கணவன்- மனைவிக்கு இடையில் ஏனிந்த இடைவெளி? ஒரே படுக்கையில் விரோதிகளாக வாழ்வதனை விடத் தனித்து வாழலாம் என்ற வெறுப்பு உணர்வு எல்லாவற்றிலும் வியாபித்திருக்க என்ன காரணம்?

திருமணத்தில் வெற்றி கண்டவரும் திருமணத்தி;ல் கசப்பினை அனுபவிதத்வர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை உளவியல் அடிப்படையில் நோக்கினால் நட்புக்குத் தேவையான ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர்வங்கள், நோக்கங்கள் ஆகியவை திருமண வெற்றிக்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. மேலும் மத நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பழமையைப் பேணுவது வாழ்வின் தத்துவங்கள். நண்பர்கள்;, குழந்தைகளைப் பராமரித்தல், பொருளாதாரம் ஆகியவற்றில் மனம் ஒத்து இணைக்கமுடையவர்களாக இருக்கின்றனர்..

மகிழ்வற்ற மணவாழ்க்கைகை; கொண்டவர்களிடம் கேட்டால் பெண்களிடமுள்ள ஆர்வம் எதிர்பார்ப்புகள், ஆசைகள், தாம்பத்தியம் பற்றிய எண்ணங்கள் ஆகியன வேறுபட்டிருப்பதே குடும்ப முரண்பாட்டுக்கு காரணங்களாக கூறப்படும்.

சின்னச் சின்ன விடயங்களைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமைக்கு என்ன காரணம்? இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறை கரைந்து போய்விட்டதா? மேலும் குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கான உளவியல் ரீதியான காரணங்களைப் பார்த்தால் ஆண், பெண் இருபாலாருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஓர் ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் மாறுபட்டவை.

நல்ல திருமணங்கள் எப்படித் தோற்றுப் போகும் என்ற கேள்விக்கு எளிதாக ஒரு விளக்கம் வேண்டுமென்றால,; வெளிப்பார்வைக்கு நல்லது போன்று தோன்றிய திருமணத்தின் உள்ளே சில குறிப்பிடத்தக்க குற்றங்களும் குறைபாடுகளும் இருந்திருக்கக் கூடும் என்பதுதான்.

ஒரு மண முறிவு அல்லது மணவிலக்கு (னுiஎழசஉந) நிகழ்கின்ற போது பொருந்தாத திருமணம் முறிந்து விட்டது என்று எண்ணுவதுதான் நடைமுறை வழக்கு. ஆனால், எல்லா விதத்திலும் பொருத்தமாக அமைந்த திருமணம் கூட உடைந்து போகின்றனவே. அது ஏன்? சம்பந்தப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை மீறுவதே இதற்குக் காரணம். இந்த எல்லை மீறிய எதிர்பர்ப்பு மனக்குறையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தலாம்.

மனக்குறைகள் எதனால் ஏற்படுகின்றன என்று பார்த்தால்

1. எதிப்hர்ப்புகள் உயர்ந்து கொண்டே சென்று அதனை எட்டா முடியாத விடயம் என்றாகும் போது…

2. மணம் முடித்த ஆணும் பெண்ணும் சமுதாயத்துக்கு ஒரு தொகுப்பாகத் தென்பட்டாலும் உள்ளுக்குள் தாங்கள் இருவரும் வௌ;வேறு தனித்துவம் உடையவர்கள் என்று எண்ணத் தலைப்படும்போது…

3. மனைவி என்பவள் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டவள் என்ற நினைப்பு ஆண்டாண்டு காலமாக ஆணின் உள்ளத்தில் ஊறியுள்ளது. எவ்வளவுதான் பேச்சாற்றல், விழிப்புணர்வு என்று வந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு பெண்ணுக்குச் சாதகமாகச் சிந்திப்பதற்கு அவரின் மனம் இடம் தராதபோது..

4. தோற்றுப் போகும் திருமணத்தில் பாலுறவு பற்றிய எதிர்பார்ப்புகளும் அடங்குகிறது. ஒருவா மற்றவரின்; உள்ளுணர்வுகளை, உணர்ச்சிகளை அறிந்து வைத்திருக்காத போது…

5. மணம் முடித்த கையுடன் (வேலை நிமித்தம்) அதிக காலம் பிரிந்திருப்பதும் நெறி தவறி வழி மாற இடமுண்டு. விவாகரத்துக்கு இது இடமளிக்கின்றபோது

6. அடுத்ததாக இளவயது திருமணங்களை எடுத்துக் கொள்ளலாம். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாடுகிறார்கள். அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி அந்த எதிர்பார்ப்பு பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியான இந்தக் காரணங்களைத் தொடர்ந்து விவாகரத்துகளும் அதிகரித்து தனித்து வாழும் ஆண், பெண் எண்ணிக்கைகளும் அதிகரித்து பிரச்சினைகளும் அதிகமாகும்.

7. கட்டாயத் திருமணம். கவர்ச்சி கலந்த கண்டதும் காதல். கல்வி, குடும்ப பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள், சந்தேகம் இவைகள் கூட இணைந்த வேகத்தில் பிரிவுக்கு வழியமைக்கின்றன.

பொதுவாக இருபது வயதுக்கு முன் திருமணம் செய்பவர்களின் மணவாழ்க்கை வெற்றி பெறுவது அரிது. அதே போல் முப்பது வயதுக்கு மேல் மணம் புரியும் பெண்களும் 35 வயதுக்கு மேல் மணம் புரியும் ஆண்களும் நீடித்த மகிழ்வான மணவாழ்வு நடத்துவதில்லை என்று மணமுறிவு பற்றிய புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, மணவாழ்வின் வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட வயது சிறப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு மன எழுச்சி முதிர்ச்சியே அடிப்படையாக அமைகிறது.

மண வாழ்க்கை கசப்பதற்கும் முறிவதற்கும் இன்னுமொரு காரணி பொருளாதாரம். மணவாழ்வில் பொருளாதார வசதிகள் அதிகம் பங்கு பெறாத நிலையில் கடன், வேலை இல்லாத் திண்டாட்டம் இவைகளும் சிக்கலை ஏற்படுத்தலாம். அதேநேரம், குடும்பத்துக்காக உழைக்கிறேன் என்ற நாமத்துடன் பணம், பணம் என்று ஓடி ஓடி உழைத்து குடும்பத்தை ஒரு வங்கியாக நினைக்கும் பட்சத்தில் மனைவி, பிள்ளைகள் தூரமாகி பணம் மாத்திரம் அருகில் துயில்கொள்ளும் நிலையே ஏற்படும். கணவனிடம்தான் அன்பு, அரவணைப்பு, ஆறுதல், உடல் ;சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அவனே எட்டாத தூரத்தில் இருக்கும் பட்சத்தில் மனைவியானவளின் எண்ணங்கள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் யாரிடம் போய் சொல்ல முடியும்? அவள் மூன்றாம் நபரின் அன்பை நாடுவதும் வாழ்க்கையின் ஒருவித துரதிர்ஷ்டம்தான். தனிமை,பிரிவு,பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

மேலும் மணவாழ்வு பொருத்தத்தில் கணவனும் மனைவியும் அவர்கள் கற்ற கல்வித்துறையில் சமத்துவத் தன்மையுடன் காணப்பட்டால் மகிழ்சி பெருகும். உயர்ந்த கல்வியும் மணவாழ்வுக்கு மகிழ்சி அளிக்கக்கூடியது.

அடுத்தாக, விவாதங்கள், பொறாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றால் மணவாழ்வில் துன்பமே மிகுதியாக இருக்கிறது. என்று 1500 வரலாறுகளை ஆராய்ந்த அமெரிக்க சமூகப் பணி நிறுவனத்தின் ஆராய்;ச்சி எடுத்துக் காட்டுகிறது. ஒன்பது சத வீதத்தினர் பொறாமையினாலும் முப்பது சத வீதத்தினர் ஒழுக்கமின்மையாலும் நாற்பத்தியொரு சதவீதத்தினர் தூற்றுதலினாலும் தங்கள் மணவாழ்வு முறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக நாட்டம் உள்ளவராக இருந்து மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்சினைகள் பூதாகரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவதும் மணவாழ்வை வெல்லும் வழி.

ஆகவே,அடிப்படையான வாழும் கலையைக் கற்றுக் கொண்டால் மணவாழ்வு இனிமை சேர்க்கும். பொதுவாக பொருத்தமான திருமணமானாலும் பொருந்தாத திருமணமானாலும் நிறைவேறாத ஆசைகளைக் கணக்கில் கொண்டு எடைபோட்டோமேயானால் எந்தத் திருமணமும் ஈடுகொடுக்காது. எல்லோருடைய வாழ்விலும் இன்பங்களும் துன்பங்களும் ஏற்றத் தாழ்வுகளும் கருத்து முரண்பாடுகளும் உள்ளன. அவற்றை ஈடு செய்து கொண்டு போவதுதான் அறிவுடமை.

முதலில் வீடு வீடாக இருக்க வேண்டும். நீதிமன்றமாக மாறக் கூடாது. சட்டங்கள் இயற்றி கணவனோ மனைவியோ வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் மாறக் கூடாது. அதன் முடிவுகள் தீர்ப்புகள் திருத்தப்படாமலேயே மனமுறிவுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஆகவே, அனைத்தினையும் சமாளித்துச் செல்வோம் என்ற எண்ணம் உறுதியாகின்ற போது திருமணங்கள் தோற்றுப் போகமாட்டாது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு


...மேலும்

Aug 30, 2015

பெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதிகளும் - என்.சரவணன்


2015 தேர்தல்
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் கறைபடிந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 40 பெண்களாவது இம்முறை அங்கம் வகிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேட்பாளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகருப்பது, தேசியப் பட்டியலில் உள்ளடக்குவது போன்ற கோரிக்கைகளை நிர்பந்தித்து வந்தார்கள். 
225 பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள். அதாவது இது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதம். அதிக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்த மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 147 பெண்கள் போட்டியிட்டனர். அதேவேளை குறைந்தளவு பெண்கள் போட்டியிட்ட மாவட்டம் பதுளை . அங்கு 3 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டனர்.

சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமாக கொண்ட பெண்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு குறைந்தது 30% வீதத்தினரையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி தொடர்ச்சியாக போராடிப் பார்த்தனர். இம்முறையும் அதனை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை.  இத்தனைக்கும் பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் கொள்கையளவில் இணங்கியிருந்தபோதும் நடைமுறையில் அதனை செய்யவில்லை. பிரஜைகள் முன்னணி போன்ற கட்சி நுவரெலியா மாவட்டத்தில் பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக இறக்கியிருப்பதாக தெரிவித்துக்கொண்ட போதும் அது பிரக்ஞையுடன் மேற்கொள்ளப்படவில்லை. கூடவே பாமர தோட்டப் பெண்களை மோசமாக வழிநடத்தும் கும்பலிடம் அந்த பெண்கள் அகப்பட்டிருந்தார்கள்.

இறுதியில் இம்முறைத் தேர்தலில் 11 பெண்கள் மாத்திரமே தேர்தலில் தெரிவானார்கள். தேசியப்பட்டியலில் இரண்டு ஆசனங்களையும் சேர்த்து சென்ற தடவை போல் இம்முறையும் 13 பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இது மொத்த உறுப்பினர் தொகையில் 5.8% வீதமே. தற்போது இலங்கையின் மாகாணசபைகளில் மொத்தம் 4.1% வீதமும், உள்ளூராட்சி சபைகளில் 2.3 வீதமுமே பெண்களின் பிரதிநிதித்துவமுமே உள்ளது.

1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5 ஐ இது வரைத் தாண்டியதில்லை.

தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள் பெண்களை நாட்டின் அரச தலைவர்களாக உருவாக்கிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. “சர்வதேச பாராளுமன்ற நிறுவனம்” (IPU -international organization of Parliaments) உலக நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறித்த தர வரிசையை அட்டவணையாக இந்த மாதம் வெளியிட்டுள்ளது. அதன் படி ருவாண்டா அதிக பெண்களை பாராளுமன்றத்தில் கொண்டுள்ளது. மொத்தம் 63.8% பெண்கள் அங்கு பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அந்த அட்டவணையின்படி இலங்கை 5.8%வீதத்தையே கொண்டுள்ளது. ஆகவே இலங்கை 131வது இடத்தில் உள்ளது.

பெண்களின் அரசியல் பிரதிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெண்கள் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டம் தொடர்ந்தும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு தசாப்த்ததிற்குள் இதற்காகவே பல பெண்கள் அமைப்புகள் தோற்றம் பெற்று முனைப்புடன் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்த அமைப்புகள் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சாதாரண பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகள் மத்தியிலும் இயங்கி வந்துள்ளன. அதன் விளைவாக இந்த அமைப்புகளின் கணிசமான கோரிக்கைகளுக்கும் இணங்கினர். குறிப்பாக பல முக்கிய கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தமது வேட்பாளர் பட்டியலில் 25% பெண் பிரதிநிதிகளை உள்ளடக்குவதாக உறுதியளித்தன. ஆனால் அது நடக்கவில்லை. 20வது திருத்தச்சட்டத்திலும் அந்த கோரிக்கையை உள்ளடக்குவதாக தற்போதைய ஆளும்கட்சி ஒப்புக்கொண்டது.

புதிய பாராளுமன்றம் ஆட்சிக்கமர்ந்ததும் 100 நாட்களில் 20 வது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட அதனை உள்ளடக்கியிருந்தன. இனி அது நிகழ்ந்தால் தான் நம்பலாம். 


2015 பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் குறித்து எந்தவொரு உத்தரவாதத்தையும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டணி வழங்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 
“உள்ளூராட்சி மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒதுக்குவதற்கூடாகவும் தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 25%வீத பெண்கலுக்கு இடல் ஒதுக்குவதர்கூடாகவும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது. (3 -உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கை)

மனசாட்சியின் உறுத்தல் எனும் பெயரில் ஜேவிபி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் (பக்கம் - 84) தேசிய அளவில் பெண்களின் அரசியல் பிரதிநித்திவம் பற்றி எதுவும் கூறவில்லை மாறாக அது கிராம மட்டங்களை மாத்திரம் குறிப்பிடுகிறது. 

“ஒவ்வொரு கிராமத்திற்கும் பாராளுமன்றச் சட்டத்தினால் அதிகாரத்தத்துவங்களை உரித்தளிக்கும் பொறுப்புகளைக் கொண்ட ஒரு கிராம சபையை “இந்தியாவின் பஞ்சாயத்து முறை” தாபித்து, அதற்கு சுயவிருப்பத்தில் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு முறைமையை உருவாக்குதல்' அதில் 50% வீதமான பெண்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளீர்த்தல்.”

வடக்கு கிழக்கில் 90,000கும் மேற்பட்ட கணவரை இலனதவர்கள் உள்ளார்கள். யுத்தத்தின் பின்னர் பெண்களின் மீதான இரட்டைச் சுமை அதிகரித்திருக்கிறது. பெண்கள், சிறுவர்கள் மீதான் பாலியல் பிரச்சினைகள் மோசமாகிவருகிறது. தீர்மானமெடுக்கும் அங்கங்கங்களில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு சொல் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில சிறப்புகள்
இம்முறை தேர்தலில் குறிப்பிட்டு கூறக்கூடியவை சில நிகழ்ந்துள்ளன. 1989இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சுமேத ஜயசேன இலங்கையின் வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வரும் பெண்.

30 வருடங்களின் பின்னர் இம்முறை தம்பதிகள் தெரிவாகியுள்ளனர். தயா கமகே (அம்பாறை மாவட்டம்) மற்றும் அவரின் மனைவி அனோமா கமகே. இறுதியாக இதற்கு முன்னர் 1984இல் ஆர்.பி.விஜேசிறியும் அவரின் மனைவி லோகினி விஜேசிரியும் தெரிவாகியிருந்தனர். இதற்கு முன்னர் 1956, 1960, 1970 காலங்களில் இவ்வாறு தம்பதிகள் அங்கம் வகித்த வரலாறு இலங்கை பாராளுமன்றத்துக்கு உண்டு.

இம்முறை அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் தலதா அத்துகோரல. இரத்தினபுரி மாவட்டத்தில் அவர் 1,45,828 எடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.தே.க பட்டியலில் முதன்மை ஸ்தானத்தில் உள்ளார்.

சென்ற தடவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை தோல்வியுற்றார் ரோஸி சேனநாயக்க. பெண்கள்-குழந்தைகள் குறித்த விடயங்களில் அதிகம் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றியவர் ரோஸி. பல பெண்கள் அமைப்புகள் அவரை ஒரு நாயகியாகவே நோக்குகின்றனர். குறிப்பாக பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்த அவரால் தன் சொந்த பாராளுமன்ற கதிரையை காக்க முடியாது போனது. விருப்பு வாக்கு எண்ணுவதில் மோசடி நிகழ்ந்திருப்பதாக முறையீடு செய்திருக்கிறார். பல பெண்கள் அமைப்புகள் அவரை தேசியப் பட்டியலின் மூலமேனும் அங்கத்துவம் வழங்கும் படி மகஜர் கொடுத்ததுடன் போராட்டத்திலும் இறங்க தயாரானார்கள். ஆனால் கட்சியின் கட்டுப்பாடுகளை தான் மதிக்க வேண்டும் என்றும் இதனை விருப்பு குறித்த முறையீட்டை சட்டப்படி செய்கிறேன் வீதிப் போராட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

காலி மாவட்டத்தில் தெரிவான பிரபல நடிகை கீதா குமாரசிங்க தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை தோன்றியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன. அவர் ஏற்கெனவே சுவிஸ்சர்லாந்து பிரஜையாகவும் இருப்பது இந்த சட்ட சிக்கலை கொண்டுவந்துள்ளது. சட்டத்துக்கு அமைய இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி. இனி பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இம்முறை தெரிவாகியிருக்கும் பெண்களில் ஆண் உறவுமுறை அரசியல் செல்வாக்கு பின்னணியுடையோர் 9 பேர். புதிதாக 4 பேர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர். ஏனைய 9 பேரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். ஐ.தே.க சார்பில் தெரிவானோர் 6 பேர். ஐ.சு.ம.மு சார்பில் 5 பேரும், தமிழரசுக் கட்சி சார்பில் இருவரும் தெரிவாகியுள்ளனர். தமிழர்கள் இருவர். ஏனைய 11 பேரும் சிங்களவர்கள்.
(பார்க்க அட்டவணை)

தமிழ் பெண்கள்
நேசம் சரவணமுத்து 1932இல் கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து தேசிய சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தமிழ் பெண். அது மட்டுமல்ல நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண்ணும் அவர் தான். தொடர்ந்து 10ஆண்டுகள் அவர் அங்கம் வகித்தார். அவருக்கு பின்னர் சுமார் அரை நூற்றாண்டு காலம் எந்த ஒரு தமிழ் பெண்ணும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. 1980இல் ரங்கநாயகி பத்மநாதன் அவரது சகோதரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பொத்துவில் தொகுதியிலிருந்து தெரிவானார். அதன் பின்னர் ராஜமனோகரி புலேந்திரனின் அவரது கணவர் 1983ஆம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னர் 1989இல் அவரை ஐ.தே.க வன்னி மாவட்டத்தில் போட்டியிடவைத்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக இரு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி 11 வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

சிவகாமி ஒபயசேகர என்பவர் 1965இல் மீரிகம தொகுதியில் தெரிவாகியிருக்கிறார். ஆனால் அவர் தமிழர் அல்ல. சிவகாமி என்கிற பெயர் தமிழ் அடையாள மயக்கத்தைத் தந்தபோதும் அவர் சிங்கள நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்ட ஒரு மேட்டுக்குடி பெண்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பத்மினி சிதம்பரநாதனும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தங்கேஸ்வரி கதிராமனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தெரிவானார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நடந்த 2010 தேர்தலின் போது கூட்டமைப்பு இவர்கள் இருவருக்கும் வேட்பு பட்டியலில் இடம் கொடுக்கவில்லை. ஆகவே தங்கேஸ்வரி மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்ந்து போட்டியிட்டார். பத்மினி சிதம்பரநாதன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டார். இருவரும் அத்தேர்தலில் தோல்வியுற்றனர். ஆனால் அந்த தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் வெற்றி பெற்றார். விஜயகலாவின் கணவர் மகேஸ்வரன் (பா.உ) 2008ஆம் ஆண்டு துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டவர்.

இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சியின் பெயரில் போட்டியிட்டது. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தலா ஒரு பெண் வீதம் நான்கு பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. அனால் எவரும் தெரிவாகவில்லை. கூட்டமைப்புக்கு கிடைத்த இரு தேசிய பட்டியல் உறுப்பினர்களில் ஒன்றை ஒரு பெண்ணுக்கு வழங்கும்படி நிர்பந்தங்கள் வளர்ந்தன. தேசியப் பட்டியல் குறித்த உட்கட்சி பூசலில் அது சாத்தியமாகுமா என்கிற நிலையே இருந்தது. இறுதியில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையசை் சேர்ந்தவர்... உதவி திட்டமிடல் பணிப்பாளரான இவர். 1980களில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் புளொட் அமைப்பின் தொழற்சங்கப் பொறுப்பாளராக இருந்த வரதன் என்ற சிறீஸ்காந்தராஜாவின் மனைவி. மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்.

மலையகத்திலிருந்தோ, பறங்கி, மலே இனத்திலிருந்தோ இதுவரை எவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இருவர் மட்டுமே தெரிவாகியுள்ளார்கள். 

முஸ்லிம் பெண்கள்
இலங்கையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்களிப்பு வெகு குறைவாகவே இருக்கிறது. 1949 இல் ஆயேஷா ரவுப் கொழும்பு மாநகரசபைக்கு போட்டியிட்டு தெரிவானார். அத்தோடு அவர் 1952 இல் பிரதி மேயராகவும் தெரிவானார். முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் அதிபராகவும் அவர் அதே காலத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அவரின் அதிபர் பணியை மேற்கொள்வதற்காக அரசியலிலிருந்து ஒதுங்கினார்.

அஞ்ஞான் உம்மா 1999 இல் மாகாண சபையின் முதல் முஸ்லிம் பெண்ணாக ஜே.வி.பி சார்பில் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு ஜேவிபியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். விமல் வீரவன்ச குழுவோடு சேர்ந்து ஜேவிபியிலிருந்து வெளியேறினார். பின்னர் 2012 இல் அவர் ஐ.தே.கவில் இணைந்துகொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானதன் பின்னர் 2000 தேர்தலில் போட்டியிட்டு தெரிவானார் பேரியல் அஷ்ரப். பின்னர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் காங்கிரசின் இணைத்தலைவர் பதவியை சில காலம் வகித்தார். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தையும் ஆற்றினர். அதன் பின்னர் சிங்கப்பூருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். இன்றைய நிலையில் உள்ளூராட்சி அங்கங்களுக்கு அப்பால் முஸ்லிம் பெண்களின் வகிபாகம் இல்லாமல் போயுள்ளது.

மலையகப் பெண்கள்
இதுவரை மலையகத்திலிருந்து எந்த ஒரு பெண்ணும் தெரிவானதில்லை. மாகாண சபை உள்ளூராட்சி மட்டத்தில் உறுப்பினர்களைக் காணக் கூடியதாக இருந்தாலும் அது திருப்தியளிக்கக்கூடியதல்ல. மலையகத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பெண்களின் பங்குபற்றல் இருந்தாலும் கூட அரசியல் விழிப்புணர்ச்சியை நோக்கி போதிய அளவு முன்னேறவில்லை.

பெண் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பருவகால கோஷங்களாகிவிட்டுள்ளன. தேர்தல் காலங்களிலும், அரசியல் கோரிக்கைகளாக முனைப்பு பெரும் போதும் அவை பருவ கால வாக்குறுதிகளாக பரிமாணம் பெறுகிறது. அதன் பின்னர் காணாமல் போய்விடுகிறது. இதற்காக போராடும் சிவில் அமைப்புகள் புதிய தந்திரோபாயங்களை வகுப்பது அவசியம்.

அதிகார அசமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, பாலினருக்கோ கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன. பெண்களின் பிரதிநித்துவத்தையும் அப்படித்தான் சரி செய்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து 80 ஆண்டுகளின் பின்பும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. தேர்தலின் பின்னர் ஏற்படும் இந்த போதாமைகளை சரி செய்வதற்காக தேசியப் பட்டியல் முறையை பயன்படுத்தும்படி கெஃபே போன்ற அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.

ஐ.நா வினால் 1979இல் கொணரப்பட்ட “பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கிறது. 1993 இல் பெண்கள் பிரகடனத்தை கொண்டுவந்தது. 2005இலும் பெண்களுக்கான சில சிறப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அனைத்தும் கண் துடைப்பே. இதில் எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதே யதார்த்தம்.

நன்றி - தினக்குரல்


பாராளுமன்றத்துக்கு இதுவரை தெரிவான பெண்களின் பட்டியல்

முதலாவது அரசுப்பேரவை (1931 - 1935)
 • திருமதி அட்லின் மொலமுறே (றுவன்வெல்ல) இடைத்தேர்தல்
 • திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு)      இடைத்தேர்தல்
(திருமதி மொலமுறே சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண் ஆவார்)

இரண்டாவது அரசுப்பேரவை (1936 - 1947)
 • திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு)     

முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)     (1947 - 1952)
 • திருமதி புளோரன்ஸ் சேனநாயக்க (கிரியெல்ல)     
 • திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை) இடைத்தேர்தல்
 • திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கண்டி) இடைத்தேர்தல்

இரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)  (1952 - 1956)
 • திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை)     
 • திருமதி டொரீன் விக்கிரமசிங்க (அக்குரஸ்ஸ)     

மூன்றாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)     (1956 - 1959)
 • திருமதி விவியன் குணவர்தன (கொழும்பு - வடக்கு)     
 • திருமதி குசுமசிறி குணவர்தன (கிரியெல்ல)     
 • திருமதி விமலா விஜேவர்தன (மீரிகம)     
 • திருமதி குசுமா ராஜரத்ன (வெலிமட) இடைத்தேர்தல்

நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (மார்ச் - ஏப்ரல் 1960)
 • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
 • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
 • திருமதி சோமா விக்கிரமநாயக்க (தெஹியோவிட்ட)     


ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (ஜூலை 1960 - 1964)
 • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
 • திருமதி சோமா விக்ரமநாயக்க (தெஹியோவிட்ட)     
 • திருமதி விவியன் குணவர்தன (பொரல்ல) இடைத்தேர்தல்

ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1965 - 1970)
 • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
 • திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம)     
 • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
 • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
 • திருமதி லிற்றீசியா ராஜபக்‍ஷ (தொடங்கஸ்லந்த)      இடைத்தேர்தல்
 • திருமதி மல்லிகா ரத்வத்த (பலாங்கொட) இடைத்தேர்தல்

ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபையும் முதலாவது தேசிய அரசுப்பேரவையும்     (1970 - 1972) / (1972 - 1977)
 • திருமதி குசலா அபயவர்தன (பொரல்ல)     
 • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
 • திருமதி விவியன் குணவர்தன (தெஹிவளை - கல்கிஸ்ஸ)     
 • திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கலகெதர)     
 • திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம)     
 • திருமதி மல்லிகா ரத்தவத்த (பலாங்கொடை)     

இரண்டாவது தேசிய அரசுப்பேரவையும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம்     (1977 - 1978) / (1978 - 1989)
 • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
 • செல்வி ரேணுகா ஹேரத் (வலப்பன)     
 • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
 • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க (வாரியப்பொல)     
 • திருமதி சுனேத்ரா ரணசிங்க (தெஹிவளை)     இடைத்தேர்தல்
 • செல்வி சிறியாணி டேனியல் (ஹேவாஹெட்ட)      நியமனம்
 • திருமதி ரங்கநாயகி பத்மநாதன் (பொத்துவில் - 2வது)      நியமனம்
 • திருமதி தயா சேபாலி சேனாதீர (கரந்தெனிய)      நியமனம்
 • திருமதி லோகினி விஜேசிறி (ஹரிஸ்பத்து - 2 வது)      நியமனம்
 • செல்வி கீர்த்திலதா அபேவிக்கிரம (தெனியாய)      நியமனம்
 • திருமதி சமந்தா கருணாரத்ன (ரம்புக்கன)      நியமனம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம்      1989 - 1994
 • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க* - ஸ்ரீ.ல.சு.க. (கம்பஹா)
 • செல்வி சுமிதா பிரியங்கணி அபேவீர* - ஸ்ரீ.ல.சு.க. (களுத்துறை)     
 • திருமதி சுஜாதா தர்மவர்த்தன* - ஐ.தே.க. (புத்தளம்)     
 • திருமதி ரேணுகா ஹேரத்* - ஐ.தே.க. (நுவரெலிய)     
 • திருமதி சுமேதா ஜீ. ஜயசேன* - ஸ்ரீ.ல.சு.க. (மொனராகல)     
 • திருமதி சந்திரா கருணாரத்ன* - ஐ.தே.க. (பதுளை)     
 • திருமதி சமந்தா கருணாரத்ன* - ஐ.தே.க. (கேகாலை)     
 • திருமதி ஆர். எம். புலேந்திரன்* - ஐ.தே.க. (வன்னி)     
 • திருமதி சுனேத்ரா ரணசிங்க* - ஐ.தே.க. (கொழும்பு)     
 • திருமதி ஹேமா ரத்நாயக்க* - ஸ்ரீ.ல.சு.க. (பதுளை)     
 • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க* - ஐ.தே.க. (குருணாகல)     
 • திருமதி ரூபா சிறியாணி டேனியல்** - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்)     
 • திருமதி தயா அமரகீர்த்தி*** - ஸ்ரீ.ல.சு.க. (காலி)
* 15.02.1989 முதல்
** 13.12.1989 முதல்
*** 22.04.1993 முதல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம்      1994 - 2000
 • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க - பொ.ஐ.மு. (தேசியப்பட்டியல்)
 • திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க* - பொ.ஐ.மு. (கம்பஹா)
 • திருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
 • திருமதி. சுமித்ரா பிரியங்கணி அபயவீர - பொ.ஐ.மு. (களுத்துறை)     
 • திருமதி நிரூபமா ராஜபக்‍ஷ - பொ.ஐ.மு. (ஹம்பாந்தோட்டை)     
 • திருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
 • திருமதி சிறிமணி அதுலத்முதலி - பொ.ஐ.மு. (கொழும்பு)     
 • திருமதி அமரா பத்ரா திசாநாயக்க - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்)     
 • திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. (நுவரெலிய)     
 • திருமதி ஆர். எம். புலேந்திரன் - ஐ.தே.க. (வன்னி)     
 • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல)     
 • திருமதி ஹேமா ரத்நாயக்க - ஐ.தே.க. (பதுளை)     
* 1994 நவம்பர் 12 ஆந் தேதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவிக்குத் தெரிவானார்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம்      2000 - 2001
 • கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
 • கௌரவ பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
 • கௌரவ (திருமதி) பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல)     
 • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல)     
 • திருமதி சுரங்கனி எல்லாவல - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
 • திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருநணாகல்)     
 • திருமதி யுவோன் சிறியாணி பெர்னாண்டோ - பொ.ஐ.மு. (புத்தளம்)     
 • திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
 • திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (தேசியப்பட்டியல்)     


இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம்      2001 - 2004
 • கௌரவ (திருமதி) அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல்)     
 • திருமதி சுமேதா ஜி. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
 • திருமதி பவித்திரா வன்னிஆரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
 • திருமதி பேரியல் அஹ்ரப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல)     
 • திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (கம்பஹா)     
 • திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
 • திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருணாகல்)     
 • திருமதி மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்)     
 • திருமதி மல்லிகா டி மெல் - பொ.ஐ.மு. (மாத்தறை)     
 • திருமதி சித்திரா சிறிமதி மந்திலக்க - ஐ.தே.க. (மஹநுவர)     

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம்      2004 - 2010
 • கௌரவ (திருமதி.) சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு (மொனராகலை)
 • கௌரவ (திருமதி.) பவித்திரா வன்னியாரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி)
 • கௌரவ (திருமதி.) பேரியல் அக்ஷ்ரப் - ஐ.ம.சு.மு ( திகாமடுல்ல)     
 • திருமதி. அமாரா பியசீலி ரத்னாயக்க - ஐ.தே.க. (குருணாகல்)     
 • திருமதி. மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்)     
 • திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
 • திருமதி. சுஜாதா அழகக்கூன் - ஐ.ம.சு.மு (மாத்தளை)     
 • திருமதி. தளதா அத்துகொறளை - ஐ.தே.க. (இரத்தினபுரி)     
 • திருமதி. பத்மினி சிதம்பரநாதன் இ.த.க யாழ்ப்பாணம்)     
 • செல்வி.தங்கேஸ்வரி கதிர்காமன் இ.த.க (மட்டக்களப்பு)     
 • திருமதி. ஏ. டி. அன்ஜான் உம்மா - ஐ.ம.சு.மு (கம்பஹா)     
 • திருமதி. நிரூபமா ராஜபக்ச - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை) (நவம்பர் 25 2005 இலிருந்து)
 • திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. (நுவரெலிய) 30 ஜனவரி 2006 இலிருந்து

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 
 • கௌரவ (திருமதி.) சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு (மொனராகலை)
 • கௌரவ (திருமதி.) பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி)     
 • திருமதி. நிரூபமா ராஜபக்ஷ - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை)     
 • திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
 • திருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க. (இரத்தினபுரி)     
 • திருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு (கம்பஹா)     
 • திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு (திகாமடுல்ல)     
 • திருமதி. ரோஸி சேனாநாயக்க - ஐ.தே.க. (கொழும்பு)     
 • திருமதி. உபேக்ஷா சுவர்ணமாலி - ஐ.தே.க. (கம்பஹா)     
 • திருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க. (யாழ்ப்பாணம்)     
 • திருமதி. மாலினீ பொன்சேக்கா - ஐ.ம.சு.மு
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2015 
 • சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை - கம்பஹா (UPFA)
 • விஜயகலா மகேஸ்வரன் - யாழ்ப்பாணம் (UNP)
 • ஹிருனிக்கா பிரேமச்சந்திர - கொழும்பு (UNP)
 • சுமேத குணவதி ஜயசேன - மொனராகலை (UPFA)
 • கீதா குமாரசிங்க - காலி (UPFA)
 • ரோகினி குமாரி கவிரத்ன - மாத்தளை (UNP)
 • தலதா அத்துகொரலை - இரத்தினபுரி (UNP)
 • பவித்ரா வன்னியாராச்சி  - இரத்தினபுரி (UPFA)
 • துசித்தா விஜேமான்ன - கேகாலை (UNP)
 • சிறியானி விஜேவிக்கிரம - அம்பாறை (UPFA)
 • சந்திராணி பண்டார - அனுராதபுரம் (UPFA)
 • சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா - யாழ்ப்பாணம் (ITAK)
 • அனோமா கமகே - அம்பாறை (UNP)
...மேலும்

Aug 29, 2015

சீ……தனம் – பாத்திமா நளீரா


சீதனம் இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல.. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல.. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக்குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை.
இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்துக்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல.. பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம்.

இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாகப் பொருளாக நகையாக மாற்றமடைந்து தற்போது எதுவுமே வேண்டாமெனக் கூறி (அவசரப்படவேண்டாம்) சிறிதாக ஒரு வீடு அல்லது காணி, நிலம் இப்படி ஏதாவது இருந்தால் போதும் என்ற பவ்வியமான பேச்சு எத்தனை கன்னிகளின் வாழ்க்கைக்குக் கல்லறை கட்டுவிக்கின்றன.ஏனிந்த அவலம்? காலாகாலம் எழுத்துக்கள் எழுப்பும் வினாதான் இது. இந்நிலை மாறவே மாறாதா? மாறலாம். சீதனம் கேட்கும் பெண் இனமே வாயை மூடவேண்டும். மனமாற்றத்துக்கு உள்ளாக வேண்டும். பெண் எடுப்பவர்கள் விலையை நிர்ணயிக்கிறார்கள். பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை ஏலம்போட்டு ஆணுக்கு விற்கிறார்கள். இதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய வியாபாரம். மிச்ச சொச்சம் எல்லாவற்றையும் விற்று மகளுக்காக முதலீடு செய்கிறார்கள். ஆனால,; வருவாய்தான் இல்லை. சீதனத்தின் ஆளுமை பெரும்பாலான குடும்பங்களை கண்ணீர் விடவைக்கிறது. இளம் கன்னியர்களின் வயது முதுமையை நோக்கி அரங்கேறுகிறது.

வசதிபடைத்தவர்களின் சீதனம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல்கள் அவர்களின் ‘டீல்’ வேறு விதமாக இருக்கும். அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் விதத்திலும் வியாபார நோக்கிலும் இப்படிப் பல பரிமாற்றங்கள் நடைபெறலாம்.

ஆனால், நடுத்தர வர்க்கத்தின் நிலை மிகவும் அபாயகரமானது. மதில்மேல் பூனையாக அவர்களின் வாழ்க்கைத்தரம். அழகிருந்தால் கல்வித்தரம் கேட்கிறார்கள். கல்வித்தரம் இருந்தால் நல்ல அழகான மூக்கும் மொழியுமான பெண்ணைக் கேட்கிறார்கள். இரண்டும் இருந்தால் சொந்த வீடு அல்லது காணி… இப்படிக் கேட்கிறார்கள். ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் படிப்பு உயர்தரத்துக்கு ஏற்றமாதிரி சீதனத்தை நிர்ணயிக்கிறார்கள்.

ஆனால், ஆண் குட்டையோ நெட்டையோ கறுப்போ சிவப்போ கல்வி அறிவு குறைந்தவனாக இருந்தாலும் அங்கேயும் ஆண்மகன் என்ற அதிகாரமும் ஆதிக்கமும் தலைதூக்கி நிற்கிறது. ஆனால், பெண் மாத்திரம் அத்தனை அவதாரங்களையும் எடுத்திருக்க வேண்டும். இதனால்தான் மணமாகாத பல பெண்கள் மணமுடிக்கவே வெளிநாட்டுக்கும் உழைக்கப் போகிறார்கள்.

சிலரின் வாதம் இதுதான்.. வாழ்நாள் முழுவதும் வைத்து உழைத்துக் குடும்பத்தைச் சுமப்பவர்களுக்கு சீதனம் கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். குடும்ப பாரத்தை ஆண் மட்டுமல்ல.. அதைவிடப் பலமடங்கு பெண் சுமக்கிறாள். அதனால்தான் பாரபட்சமின்றி அவளை ஒரு தியாகத்தின் மறுவடிவாகப் பார்க்கின்றனர். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமாகப் படைக்கப்பட்டுள்ள இந்த வையகத்தில் எந்தக் காலக்கட்டத்திலும் இவர்கள் தனித்து வாழ்ந்திட முடியாது. இறைவனின் நாட்டப்படி ஒருவரை ஒருவர் சார்ந்தே பல தேவைகளும் அபிலாஷைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனித்து நின்று செயற்பட முடியுமென்ற கர்வம் ஆண்களைப் பிடித்தாட்டுவது அறியாமையும் அறிவீனமுமாகும்.

தற்போதுள்ள சீதனப் பிரச்சினையில் ஓரளவு இளைஞர்கள் திருந்தினாலும் பெற்றோரும் உற்றோரும் விடுவதாக இல்லை. திருமணப் பதிவுக்கு முன்பே வீட்டையோ காணியையோ அவர்களது பெயருக்கு எழுதிக் கையெழுத்திட்டால் மாத்திரமே தலையெழுத்து இல்லறத்தில் அழகாக அமையும்.

ஆனால், ஆண் வயது கடந்து சென்றாலும் இளம்பெண்களை மணம் முடிக்கலாம். பொருளாதார பிரச்சினை காரணமாக வயது கடந்த முதிர்கன்னிகள் வீடுவாசல்களை வைத்துக் கொண்டு மணமகன் தேடினாலும் நரைவிழந்த மணமகன் கூட வரம்கொடுப்பது அரிது. என்றாலும் எல்லா ஆண்களையும் குறைசொல்லமுடியாது. சமுதாய சீர்திருத்தம் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொண்டவர்களும் உண்டு. சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்போம் என்ற பெயரில் பெண் வர்க்கத்தைச் சுரண்டியவர்களும் உண்டு.

சீதனப் பிரச்சினையால் ஒரு குடும்பத்தில் எத்தனை விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன? வாயையும் வயிற்றையும் கட்டி சேமிப்பில் ஈடுபட்டு அல்லது கடன் வாங்கி மூத்தவளுக்குச் செய்த மாதிரியே இரண்டாம் மகளுக்கும் செய்ய வேண்டிய கடமை அல்லது கட்டாய நிர்ப்பந்தம் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. கடன்சுமை தாங்காமல் நோயில் விழுந்தவர்களுமுண்டு. தற்கொலை செய்தவர்களும் உண்டு. அவரவர் வசதிக்கு ஏற்ப எதையென்றாலும் கொடுக்கட்டும் கடைசி வரை நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று சொல்லும் நல்ல மனம்படைத்த பெற்றோரும் உள்ளனர். நான் சம்பாதித்து வீடு வாசல் வாங்கி நல்லபடியாக வாழவைக்கிறேன் என்று சொல்லும் ஆண்மகன்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் வாழ்த்துக்கும் போற்றுதலுக்கும் கௌரவத்துக்கும் உரியவர்கள்.

சமுதாயத்தில் சீதனத்துக்கு எதிரான மறுபடிவம்,மறுமலர்ச்சி பத்து சத வீதம் என்றாலும் சீர்கேடுகளும் பிடுங்கித் திண்ணும் வர்க்கமுமே 90 சத வீதம் இருக்கின்றன என்பது மட்டும் நிஜம்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 25-04-2010
...மேலும்

Aug 28, 2015

கேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந்தினி


மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முறைகேட்டில் தொடர்புடைய லலித்மோடிக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் நடந்து முடிந்த மக்களவை ஸ்தம்பித்தது. இது அனைத்து ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. தொலைக்காட்சி ஒன்றில் மக்களவை உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, பத்திரிகையாளர் ஞாநி, காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. தாஸ், பொருளாதார நிபுணர் அருண்குமார். தவே ஆகியோரை வைத்து இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிர் நிலையில் கருத்துள்ள காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் கருத்து சொல்வது, நடுநிலைப் பார்வை வேண்டும் என்பதற்காக ஒரு பத்திரிகையாளரும் மக்களவை முடங்குவதால் நாட்டின் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் பேச ஒரு பொருளாதார நிபுணரும் ஒரு விவாதத்தில் கலந்துகொள்வது அந்த விவாதத்துக்கு மெருகுகூட்டுவதாக அமையும். இவர்களைத் தவிர ஆடிட்டர் பிராபகர் என்பவரும் பேசினார். இந்தத் தலைப்பில் நடந்த விவாதத்தில் ஒரு ஆடிட்டருக்கான வேலை என்ன என்பது குறித்து பார்வையாளருக்கு சந்தேகம் வரலாம். ஆடிட்டராக குறிப்பிடப்பட்டாலும் பாஜக தரப்பில் பேச பாஜகவினர் இல்லை என்பதாலோ என்னவோ பாஜக ஆதரவாளராக அவர் பேசினார்.

பாஜகவைச் சேர்ந்தவர்கள்கூட தங்கள் கட்சி நிலைப்பாட்டை இவ்வளவு தீவிரமாக சொல்லியிருக்க முடியுமா என்கிற வகையில் சுஷ்மா தரப்பின் ‘நியாயங்கள்’ குறித்து ஆடிட்டர் பிரபாகர் பேசினார். ஒரு கட்டத்தில் ஆடிட்டரின் பேச்சிலிருந்து கேள்வி ஒன்றை டி.ராஜாவிடம் கேட்டார் நெறியாளர். அதற்கு “இவர் ஆடிட்டர் என்று சொல்கிறார், இவர் யாரென்றே எனக்குத் தெரியாது. இவர் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று காட்டமாக பதிலளித்தார் டி. ராஜா. ஏனெனில் அத்தனை அபத்தமாக இருந்தது ஆடிட்டர் பிரபாகரின் பேச்சு!

மக்களவையை முடக்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விவாதத்தில், டி.ராஜா போன்ற மூத்த அவை உறுப்பினர் கலந்துகொள்ளும் விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களை பேச அழைப்பதே முறையானதாக இருக்கும். நடுநிலையாகச் செயல்படுவோம் என்று கூறுகிற ஒரு பிரபல ஊடகம் நடத்தும் விவாதத்தில் பாஜகவினர் கலந்துகொள்வதில் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் விவாதங்களில் பேச ஆட்களே இல்லாத ஒரு கட்சியின் பிரதிநிதியாக ஆடிட்டர், பாஜக ஆதரவாளர் என்கிற போர்வையில் தீவிர காழ்ப்பை உமிழும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப் பேச வைப்பதன் பின்னணி என்ன என்கிற கேள்வி எழுகிறது.

சில நாட்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டுள்ள மத அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக ஆதரவாளர் ஒருவர், ராஷ்டிரிய ஸ்வம் சேவக் அமைப்பின் வெறுப்பு பேச்சுக்களைப் வெளிப்படையாகவே பேசினார். அவர் கருத்துக்களில் இருந்த அபத்தங்களை நெறியாளர் சுட்டிக்காட்டியபோதும், அவர் ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களில் உறுதியாக இருந்தார். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் அவர்களிடையே காழ்ப்பை கட்டமைக்க முயல்வது அந்த நபருடைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஊடகம் என்பது நடுநிலையான பார்வையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள் பெரும்பாலானவற்றை கட்சி சார்புள்ளவர்கள் அல்லது கட்சிக்காரர்களே நடத்துவதால், ஊடகம் என்பது நடுநிலையானது என்று சொல்லிக் கொள்ள முடியாது. இது இல்லாமல் சார்பற்றவர்கள் நடத்தும் ஊடகங்கள் நடுநிலைமை என்கிற போர்வையில் ஆளும் கட்சிகளின் கொள்கைத் தூதுவர்களாக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதில் சில அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் முனைப்பாக இருக்கின்றன. ஊடகங்களில் கட்சி சார்பாக பேசுவதற்குக்கூட ஆட்கள் இல்லாத தமிழக பாஜகவை மறைமுகமாக வளர்க்கும் பணியைத்தான் இவர்கள் செய்து வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இடதுசாரி கருத்துக்களுக்கு இடமளிப்பதுபோலவே, வலதுசாரி கருத்துக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது ஊடக அறம். ஆனால் வலதுசாரி கருத்துக்கள் என்ற போர்வையில் மக்களிடையே காழ்ப்பை, வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்களையே மேலே குறிப்பிட்ட பாஜக ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பேசுகிறார்கள். பல நேரங்களில் இவர்கள் பேசுவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாக இருக்கிறது. சாதி வேண்டும் என்கிறார்கள், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சர்வாதிகாரத்துடன் கட்டளையிடுகிறார்கள், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் என்கிறார்கள். ஆனால், ஊடகங்கள் தொடர்ந்து இத்தகையவர்களின் பேச்சுக்களை அனுமதித்துக் கொண்டே இருக்கின்றன.

பல பேர் பலியாகக் காரணமாக இருந்த குண்டுவெடிப்பை நடத்தியவர் என்கிற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் இறுதிச் சடங்கை ஒளிப்பரப்ப மாட்டோம். ஒரு குற்றவாளியை கதாநாயகன் ஆக்குவதாக? என அறம் பேசிய ஊடகங்கள், மத-இன-மொழி-பாலின சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை தொடர்ந்து அனுமதிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? ஊடகங்கள் வரையறை செய்யும் நடுநிலைமை என்பதற்கான பொருள் என்ன? காவிமயமாதல் என்பதா?

நன்றி - இப்போது
...மேலும்

Aug 27, 2015

பெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்


பெண்ணிய செயற்பாட்டாளரும், ஆரம்பகால ஈழ விடுதலைப் போராளிகளில் ஒருவரும் அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளருமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் வியாழனன்று நம்மெல்லோரையும் விட்டு பிரிந்துவிட்டார். 

நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதியும் வந்தார்.  வாராந்தம் தினக்குரலில் சனிக்கிழமைகளில் வெளிவந்த அவரது நாற்சந்தி என்கிற பத்தி ஆழமான அரசியலைக் கொண்டது.

இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து இரண்டு தசாப்தத்துக்கும் மேல் போராடி வந்தவர். தமிழ் சூழலில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காக போராடிய முன்னோடி என்றே கூறவேண்டும். இலங்கையில் செயற்பட்டுவரும் அனைத்து பெண்கள் நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளில் சாந்தி மிகவும் பிரபல்யமானவர். தென்னிலங்கை சிங்கள அமைப்புகளுடனும் சேர்ந்து இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தவர்.

விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிருந்தார். முதற் தடவையாக ”அகவிழி” என்ற கல்வியியற் சார்ந்த ஒரு தரமான சஞ்சிகையை மதுசூதனனை ஆசிரியராக் கொண்டு வெளியிடப்பட்டதும் விழுது அமைப்பினால் தான்.

90களில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து அளிக்கும் பணியையும் சில காலம் மேற்கொண்டார். அவை சமூகப் பிரச்சினைகளை, குறிப்பாக பெண்களின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சச்சிதானந்தம், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியாக விளங்கிய போதிலும், அந்தத் துறையில் ஈடுபடாது, சமூகப் பணிகளிலேயே கூடுதலாக ஈடுபட்டுவந்தார்.

ஆரம்பத்தில் அன்னையர் முன்னணி, மாதர் மறுமலர்ச்சிப் பேரணி போன்ற பெண்கள் அமைப்புக்களில் செயற்பட்டார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் 1985 ஆம் ஆண்டு அலன் தம்பதிகளை ஈபிஆா்எல்எப் இயக்கம் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்தபோது அவா்களுக்கு மொழி பெயா்ப்பாளராக இருந்தவா் சாந்தி. அவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நல்ல பாண்டித்தியமுடையவர்.


மட்டக்களப்பிலுள்ள மன்று என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகராக விளங்கிய அவர், கிழக்கு மாகாணத்தில் பல சமூக அபிவிருத்திப் பணிகளிலும் தனது கணவர் மனோ ராஜசிங்கத்துடன் சேர்ந்து ஈடுபட்டார்.

”பெண்களின் சுவடுகளில்…”, ”பெண்களும் வெகுஜன ஊடகங்களும்” மற்றும் “வறுமையின் பிரபுக்கள்” போன்ற நூல்கள் அவர் எழுதிய ஆரம்ப நூல்கள்.

யுத்தம் நிகழ்ந்த நெருக்கடியான காலகட்டங்களில் கூட மிகவும் துணிச்சலாக அரசாங்கத்தை எதிர்த்து அரசியல் கருத்துக்களை வெளியிட்டுவந்தவர். சில தடவைகள் அவரது அலுவல்கம் பிளிசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அச்சுறுத்தல்களுக்கும் ஆளானார். மேலும் பல தென்னிலங்கை சிவில் சமூக அமைப்புகளுடனும் சேர்ந்து பணியாற்றியவர்.

1958ஆம் ஆண்டு பிறந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். இவரது கணவர் மனோ ராஜசிங்கம் 2009ஆம் ஆண்டு காலமானார்.

சனிக்கிழமைகளில் தினக்குரல் பத்திரிகையில் சாந்தி எழுதி வந்த வாராந்த பத்தியின் முடிவில் அவர் எப்போதும் இந்த வரிகளுடன் முடிப்பார்.

"அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்"

பெண்ணியம் இணையத்தளத்தின் சார்பாக அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்றோம்.

...மேலும்

Aug 26, 2015

பாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க ஒரே சாத்தியம்.காலம் காலமாய் தொடர்ந்து வரும் பாலியல் வன்புணர்வுக்கு அடிப்படைக்காரணமாய் இருப்பது பெண்ணுடல் மீதான அவளின் உரிமையை அவளுக்கு மீட்டுக் கொடுக்க மறுக்கும் ஆணாதிக்கச் சிந்தனையே.

பெண் உடல் மீது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவள் அனுமதி இல்லாமலேயே அத்துமீறலாம் என்ற நம்பிக்கையையும், மூளைச்சல்வையையும் கொடுத்திருக்கும் சமூகப் பொதுப்புத்தியே பாலியல் வன்புணர்வுகளுக்கான மூல காரணம் ஆகும்.

இச்சிந்தனை பாலியல் வன்புணர்வு செய்தி கேட்டதுமே பதறிப்போய் எங்கே தீர்வுக்கான சிந்தனை வலுபெற்று, பெண்ணுடல் மீதான தனது சட்டாம்பிள்ளைத்தனமான் ஆக்கிரமிப்பு உரிமை பறிபோய்விடுமோ எனக் கலங்கி, மடை மாற்ற "உபதேசங்களை" பெண்ணுக்கு அளிக்கத் தொடங்கி விடுகிறது.

ஆடை எப்படி அணிய வேண்டும் என்ற உபதேசம், எந்த நேரத்தில் மட்டும் பெண் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம், எந்தெந்த இடத்துக்கு மட்டும் செல்ல வேண்டும் என்ற உபதேசம், யார் கூட வந்தால் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம், பலாத்காரத்தின் போது அந்த காமுகனை "அண்ணா"- என அழைக்க வேண்டுமென்ற உபதேசம் இன்னும் எத்தனையெத்தனையோ உபதேசங்களைச் சொல்லி இதனால் மட்டுமே பாலியல் வன்புணர்விலிருந்து பெண் தப்ப முடியும் என்று பயங்கரவாதத்தை சமூகத்தில் பரப்பி தனது ஆதிக்க வெறியை காப்பாற்றிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது.

வேறொரு கோணத்தில் அடிப்படைச் சங்கதிகளை பொறுமையாய் அனுகுவதையும், தீர்வுக்காய் உழைபதையும் மறுத்து விட்டு, " ஆண் குறியை அறுக்க வேண்டும்", தூக்கில் போட வேண்டும் என்ற கும்பல் கலாச்சாரக் கூச்சல்களும் இச்சங்கதி தீர்வினை நோக்கி பயணப்படாமல் தடுக்கின்றன. தனிமனித கொலைகள், சிந்தனையை வேரறுத்ததாய் சரித்திரத்தில் எங்கும் இல்லை.இது போன்ற கோசங்கள் தன்னை ஒழுக்கமானவனாய் காட்டிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கோசங்களே ஒழிய உண்மையில் இதுவும் மடைமாற்றச் சிந்தனையே.

இன்னொரு கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண் கற்புடையவள்தானா என்ற கேள்வியினை முன் வைத்து இரண்டாம் "கற்பழிப்பினை" நிகழ்த்துகிறது. இந்தப் பெண் அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு, அந்த நபருடன் சென்றிருக்கிறாரே....அப்படியானால் அவர்கள் இருவருக்குமான தொடர்பு எந்த வகையினதாக இருக்கும் என்று அற்புத ஆராய்ச்சியினையைத் தொடங்கிவைக்கிறது இந்த ஆணாதிக்கச் சிந்தனை.

ஆக, சீதையை ராமன் தீக்குளிக்கச் செய்து "கற்பினை" நிரூபிக்கச் சொன்ன மாதிரி இத்தனை "ராமன்"களுக்கும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தான் ஏற்கெனவே கற்புடையவள் தான் என்று முதற்கண் நிரூபித்தாகவேண்டும்.

இப்படியொரு கற்புக் கேள்வியை ஆணாதிக்க சிந்தனை எழுப்புவதற்குக் காரணம், ஒருவேளை அவள் "ஒழுக்கக் கேடு"டன் இருப்பாரேயானால் அவள் வன்புணர்வு செய்யப்படுவதில் எந்தத்தவறும் இல்லை என்று இந்த சமூகத்தில் படித்தவர்களும், அறிவுஜீவிகளும் கூட நம்பிக்கொண்டிருப்பதே ஆகும்.

ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட அவள் அனுமதி இல்லாமல் அவர் உடல் மீது அத்துமீறும் உரிமை எந்த ஆண்மகனுக்கும் இல்லை என்ற எளிய உண்மை விளங்காததால்-அல்லது விளங்கிக் கொள்ள மறுப்பதால்தான் பாதிக்கப்பட்ட பெண் கற்புடையவள்தானா? ஆம் எனில் அது எத்தனை சதவீதத்திலான கற்பு என்ற அபத்த ஆராய்ச்சிகளில் இறங்கச் சொல்கிறது.

பெண் உடை, போதிய பாதுகாப்பு உணர்வுடன் இடங்களுக்குச் செல்லுதல் ஆகிய சங்கதிகள் குறித்து பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு உண்டு. அதை அவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். இவை குறித்து அவற்றுகான தீர்ப்புக்களை எழுதவேண்டிய வேலை ஆணாதிக்க சிந்தனைக்கு அவசியம் இல்லை.

இதை விடுத்து நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியங்கள் உண்டு.
காமம் என்பது வெறுமனே மகிழ்வு எடுக்கும் சங்கதி அல்ல. மகிழ்வு கொடுத்து மகிழ்வு எடுக்கும் சங்கதி ஆகும் என்ற அடிப்படைத் தெளிதலை ஆண் குழதைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வன்புணர்வு என்பது காமம் அல்ல ரத்தம் வர காயப்படுத்துவது எப்படியோ அது போன்ற வன்முறை மட்டுமே என்று ஆண்கள் அனைவருக்கும் குழந்தையிலிருந்தே சொல்லிக் கொடுங்கள்.பெண் உடல் மீதான உரிமை பெண்ணிக்கே ஆனது. அவள் அனுமதியில்லாமல் அவள் உடல் மீது அத்துமீறும் உரிமை இவ்வுலகில் எந்த ஆண்குறிக்கும் இல்லை என்ற புரிதலைச் சொல்லிக் கொடுங்கள்.

இவையே பாதுகாப்பான உலகினை பெண்களுக்கு உறுதிப்படுத்தி, வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே சாத்தியம்.

நன்றி - Ilangovan Balakrishnan முகநூலிலிருந்து.


...மேலும்

Aug 25, 2015

ஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் படம்-வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்-6;அடெல் என்ற இளம் பெண்ணின் தனிமையை, அவளின் மென்மையான உணர்வுகளை, அவளின் காமம் சார்ந்த ஆசைகளை, அவளுக்கும் இன்னொரு பெண்ணிற்கும் இடையேயான காதலை, ஏமாற்றத்தை, பிரிவை ரத்தமும் சதையுமாக நம் முன் வைக்கிறது ப்ளூ இஸ் த வார்மஸ்ட் கலர் என்ற பிரெஞ்ச் திரைப்படம்.

படத்தின் கதையைப் பார்ப்போம் .பிரான்ஸ் தேசத்தின் ஓர் அழகிய நகரில் பெற்றோருடன் வசித்து வருகிறாள் பதினாறு வயதே ஆன அடெல்,  பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சீனியர் மாணவனுடன் காதல் ஏற்பட்டு அவனுடன் பாலுறவு வரை சென்று அந்தக்  காதலில் திருப்தியடையாமல் அவனைவிட்டு பிரிந்து தனிமையில் வாடுகிறாள் .தன்னுடன் படிக்கும் சக மாணவியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதை வெளிப்படுத்தும்போது நிராகரிப்புக்கு ஆளாகிறாள். அவளுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்ற ஒரே ஒரு நண்பன் மட்டும் இருக்கிறான். வீடு ,பள்ளி ,தனிமை என்று அடெலின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. 

ஒரு நாள் நீல நிற தலை முடியை கொண்ட எம்மா என்ற பெண்ணை ஏதேச்சையாக சாலையில் பார்க்கிறாள். அந்த முதல் பார்வையிலேயே அடெலுக்கு எம்மாவின் மீது பெரிய ஈர்ப்பு உண்டாகிறது. இரவில் எம்மாவுடன் பாலுறவில் லயிப்பதைப் போல சுய இன்பம் காண்கிறாள்.

முன்பின் தெரியாத எம்மா வால் அடெலின் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகிறது. ஒரு லெஸ்பியன் பாரில் எம்மாவை மறுபடியும் சந்திக்கும் அடெல் அவளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்கிறாள். அவளின் கனவு,காதல், கட்டுக்கடங்காத காமத்தை எம்மா பூர்த்தி செய்கிறாள். ஆரம்பத்தில் காமத்தை மட்டுமே எம்மாவிடம் பகிர்ந்து கொண்ட அடெல் தன் வாழ்க்கையில் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத பல விசயங்களையும,அன்பையும் எம்மாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். எம்மாவிற்கும் அடெலுக்கும் இடையேயான உறவு தெரிய வர அடெலை லெஸ்பியன் என்று பள்ளியில் படிக்கும் சக மாணவிகள் அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எம்மாவுடனான உறவை அடெல் தொடர்கிறாள்.

காலங்கள் ஓடுகிறது .எம்மாவும் அடெலும் ஒரே வீட்டில் கணவன் மனைவியைப் போல வாழ்ந்துவருகிறார்கள். அடெல் தன் விருப்பமான நர்சரி பள்ளியின் ஆசிரியை ஆகிவிடுகிறாள். எம்மாவிற்கும் அடெலுக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்படும் விதமாக எம்மா தன்னுடைய பழைய காதலியை ஒரு விருந்தில் சந்திக்கிறாள். எம்மாவும் அவளின் பழைய காதலியும் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் அடெலின் மனதுக்குள் ஒரு வித பயம் பற்றிக்கொள்கிறது. முன்பு போல் எம்மா அடெலுடன்
அதிக நேரம் இருப்பதில்லை. மீண்டும் தனிமைப்படுத்தப்படும் அடெல் தனிமையிலிருந்து விடுபட தன்னுடன் பணியாற்றும் ஒருவனை நாடி செல்கிறாள். இந்த விசயம் எம்மாவிற்கு தெரிய வர அடெலை விபச்சாரி என்று அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்திவிடுகிறாள்.

பள்ளியில் குழந்தைகளுக்கு  பாடம் சொல்லிக்கொடுத்தாலும் ,அவர்களுடன் சேர்ந்து விளையாடினாலும் எம்மாவின் மீதான ஏக்கம்,அவளை பிரிந்து வாழும். தனிமைத்துயரம் அடெலை வாட்டி எடுக்கிறது. இனிமேல் எம்மாவுடன் சேரவேமுடியாது என்ற எதார்த்தத்தையும்  தனக்கென்று யாருமே இல்லாத தனிமையையும், தன் நிலையையும் புரிந்து கொள்கிறாள் அடெல். 

இனி வரும் காலத்தை ,வாழ்க்கையை.  எம்மா இல்லாத வெறுமையை எப்படி அடெல் எதிர்கொள்ளப் போகிறாள் என்ற மர்மத்தை சொல்லும் விதமாக  வெதுவெதுப்பான நீல நிற உடையணிந்த அடெல்  தன்னந்தனியாக சாலையில் நடந்து செல்வதுடன் படம் நிறைவடைகிறது. அடெல் எம்மாவிடம் மட்டும்தான் சுதந்திரமாக உணர்கிறாள் .மனம்விட்டு வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுகிறாள் .உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையடைகிறாள் .இந்த உலகில் அவள் வாழ்வதற்கு எம்மாவை தவிர யாருமே தேவையில்லை.

எம்மாவும் அடெலிடம் நல்லபடியாக ,அன்பாக நடந்து கொண்டாலும் இருவருக்கிடையில் ஏற்படுகின்ற பிரிவு ,எம்மா வேறு பெண்ணுடன் கொள்கின்ற உறவு, ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான காமம் சார்ந்த உறவின் நிலையற்ற தன்மையை ,சிக்கலை ஆழமாக  நமக்கு உணர்த்துகிறது வெளிப்படையான நீண்ட நேர லெஸ்பியன் காட்சிகளும் , செக்ஸ் சம்பந்தமான பெரும்பாலான உரையாடல்களும் பிரான்ஸ் தேசத்தின் கலை சுதந்திரத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது

ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையிலான லெஸ்பியன் உறவு காதலாக மலர்வதை பார்வையாளன்  உணர்ந்து  அங்கீகரிக்கும்படி படமாக்கியிருப்பது. சிறப்பானது  இந்தப் படத்தைப பார்க்கும் பெண் என்ன நினைக்கிறாள் என்பதே எனக்கு முக்கியம் என்று சொன்ன 30 வயதே ஆன ஜூலி மோரா என்ற பெண் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குனர் கேச்சிசேவுக்கும் எம்மா ,அடெலாக  வாழ்ந்து காட்டிய  இரு நடிகைகளுக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதன்மையான விருது பகிர்ந்து  கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சக்திவேல்

நன்றி - விகடன்
...மேலும்

Aug 20, 2015

சக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின் நிழல்நவீன நாடகம் என்பது கதையைச் சொல்வதல்ல. பல்வேறு கதைகளை ஒன்று சேர்த்த கதையாடலாக அது உருப்பெறுகிறது. பல்வேறு கதைகள். பல்வேறு காலங்கள். பல்வேறு அதிர்வுகள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டாலும் சில விஷயங்கள் மாறுவதே இல்லை. பெண்கள் நடத்தப்படும் விதம் அவற்றில் ஒன்று. போர்கள் நடத்தப்படும் விதம் இன்னொன்று. ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகங்களில் இந்த இரு படிமங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு அசைவும் நம் மன அரங்கில் புதுப் புது அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அண்மையில் சென்னையில் அரங்கேறிய சக்திக் கூத்தும் அப்படிப்பட்ட ஒரு நாடகம்தான்.

ப்ரஸன்னாவின் நாடகங்கள் மரபு நாடகங்களின் எல்லைகளை மட்டுமல்ல, நவீன நாடகங்களின் ஆகிவந்த எல்லைகளையும் மீறுகின்றன. இவரது நாடகங்கள், உள்ளடக்கத்தின் தீவிரம், சிக்கல், உட்சரடுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வடிவத்தைக் கொண்டவை. எனவே இவை தமிழ் மேடையில் அதிகம் அறிமுகமாகியிராத வடிவத்தை இயல்பாகவே கைக்கொள்கின்றன.

சிக்கலை அதன் பன்முகத்தன்மையுடன் பிரதிபலிக்க முனையும் கலைஞர் அதற்கேற்ற வடிவத்தையே கைக்கொள்ள முடியும். இதைப் புரிந்துகொண்டால் ப்ரஸன்னாவின் நாடக வடிவத்தையும் புரிந்துகொள்ளலாம். செந்தமிழில் பேசும் பாத்திரங்கள் ஏன் திடீரென்று கொச்சை மொழியிலும் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள்? வரலாற்றின் வெளியில் சஞ்சரிக்கும் காட்சிகளுக்கு இடையே நடிகர் பார்வையாளர்களைப் பார்த்து ஏன் பேசுகிறார்? அதுவும் தனது ஒப்பனை பற்றி? பாரதியாரின் கவிதைகளுக்கிடையே முத்துஸ்வாமி தீட்சிதரின் கீர்த்தனை யும் நவீன கவிதைகளும் ஒலிப்பது ஏன்? வசனங்களில் புராணிகமும் சமகாலத் தன்மையும் கலந்து வருவது ஏன்?

பாஞ்சாலி எழுப்பும் கேள்விகள்

எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலை ப்ரஸன்னாவின் நாடகம் தந்துவிடாது. நாடகப் பிரதி எழுப்பும் வலுவான கேள்விகளைப் பின்தொடர்ந்து சென்றால் இந்தக் கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கலாம். அப்படித் தேடிச் செல்லும்போது ப்ரஸன்னாவின் நாடகம் நம் மனதில் மேலும் வலுவுடன் உருக்கொள்வதை உணரலாம். வெவ்வேறு கூறுகளுக்கிடையில் இருக்கும் உள்ளார்ந்த தொடர்பை உணரலாம். வாய் மூடி இருக்கும் சபையையும், சப்பைக்கட்டு தர்மம் பேசும் பீஷ்மனையும், மகத்தான சக்தி படைத்தும் மௌனமாக இருக்கும் தன் தன் கணவர்களையும் பார்த்து துவாபர யுகத்துப் பாஞ்சாலி எழுப்பும் கேள்விகள் இன்றைய முள்ளிவாய்க்காலில் எதிரொலிப்பதைக் கேட்கலாம். மாபெரும் அநீதி, மாபெரும் மவுனம், கேட்பாரற்ற புலம்பல். இந்த மூன்றும் வரலாற்றின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் பெண்களுக்கும் அப்பாவி மக்களுக்குமான யதார்த்தங்களாக அமைந்திருப்பதை முகத்தில் அறைந்து சொல்கிறது நாடகம்.

சூதாடுவதற்கான அழைப்பை ஏற்று பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் வரும் வழியில் சூரிய அஸ்தமனக் காட்சியைப் பாரதியார் வர்ணிக்கிறார். ரோஹிணியின் உணர்ச்சிகரமான கண்களும் மொழிகளின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் உடல் மொழியும் பொருத்தமான பாவங்களுடன் வெளிப்படும் உச்சரிப்பும் சேர்ந்து இந்தக் காட்சியை அற்புதமான கவிதையாக்குகின்றன. பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியை வரலாற்றுப் பிரவாகத்தின் பின்னணியில் வைத்துக் காட்டும் நாடகத்தில் இப்படி ஒரு காட்சி. அழகான இந்தக் காட்சியை நாடகத்தின் விரிவான பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது வேறொரு பரிமாணம் எடுக்கிறது. சூரிய அஸ்தமனத்தைக் கண்டு ரசிக்கும் திரௌபதியால் பிறகு ஒருபோதும் எந்த சூரிய அஸ்தமனத்தைக் கண்டும் ரசித்திருக்க முடியாது.

போர் அழிக்கும் வாழ்வு

ஹஸ்தினாபுரத்து நிகழ்வுகள் அவள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடுகின்றன. போரில் மடியும், துயருறும் மக்களின் வாழ்க்கையும் இப்படித்தானே? தன்முனைப்பு, அதிகாரம், மண்ணாசை ஆகியவற்றின் பலிகடாக்கள் வரலாறெங்கும் எத்தனை கோடி? அவர்களும் சூரிய உதயத்தையும் அஸ்தனமத்தையும் பார்த்து ரசித்திருப்பார்கள் அல்லவா? கடலலைகளில் கால் நனைத்து மகிழ்ந்திருப்பர்கள் அல்லவா? அவர்களுக்குத் துளியும் சம்பந்தமற்ற போர் அவர்கள் வாழ்வை அழித்துவிடுகிறது அல்லது சீர்செய்ய முடியாதபடி கலைத்துவிடுகிறது. எந்தக் குற்றமும் செய்யாத பாஞ்சலியின் சோகம் வரலாற்றின் மீது பெரும் நிழலெனப் படர்கிறது. சக்திக் கூத்தினூடே நிகழும் மாயம் இது.

இயக்குநரின் கற்பனைகளுக்கும் பார்வைகளுக்கும் உயிர்கொடுப்பவர்கள் நடிகர்கள். ரோஹிணியும் ரேவதி குமாரும் பிரதியின் நுட்பங்களை நன்கு உள்வாங்கி உயிர்ப்போடு வெளிப்படுத்தினார்கள். கணந்தோறும் மாறும் ரோஹிணியின் முக பாவங்களும் காட்சியின் உணர்வுக்கேற்பப் பல வித அவதாரங்கள் எடுக்கும் உடல் மொழியும் பிரமிக்கவைத்தன. சூரிய அஸ்தமனத்தைக் கண்டு பரவசத்தில் ஆழும் உணர்வும், பீஷ்மரைக் கேள்வி கேட்கும் ரௌத்திரமும் கொத்துக் கொத்தாக மனிதர்கள் மடிவதை உணர்த்தும் பதைப்பும் அவர் முகத்திலும் குரலிலும் அற்புதமாக வெளிப்பட்டன. ரேவதி குமாரின் நளினமான நடன அசைவுகளும் பாவம் நிறைந்த இனிமையான குரலும் நாடக அனுபவத்துக்குச் செழுமை சேர்த்தன. மணிகண்டனின் இசை, ரவீந்திரனின் ஒளி அமைப்பு ஆகியவையும் சேர்ந்து இந்த அனுபவத்தை மறக்க முடியாததாக ஆக்கின.

ப்ரஸன்னா காட்டும் பாஞ்சாலி வெறும் பெண் அல்ல. அவள் சக்தி. அவளது வாழ்வின் மிக முக்கியமான தருணம் மனித குலம் என்றென்றைக்கும் மறக்க இயலாத சோகம். வரலாறு நெடுகிலும் பெண்களும் அப்பாவிப் பொதுமக்களும் நாதியற்ற அகதிகளும் பட்டுவரும் வேதனைகளின் படிமம் பாஞ்சாலி. அந்த வேதனைகளுக்குக் காரணமான அநீதிக்கு எதிரான வீறார்ந்த குரலும் அவள்தான். அநீதியை ஏற்க மறுக்கும் போராட்டத்தின் குரல். எத்தனை யுகமானாலும் அநீதிக்குப் பிராயச்சித்தம் கோரும் தகிப்பின் சுடர். பல்வேறு கலை வடிவங்கள், வெவ்வேறு இலக்கியப் பிரதிகள் இவற்றினூடே இத்தகைய பன்முக அனுபவங்களைச் சாத்தியப்படுத்திய ப்ரஸன்னாவின் சக்திக் கூத்து மறக்க முடியாத அனுபவமாக விளங்குகிறது.

நன்றி - தி இந்து
...மேலும்

Aug 19, 2015

தாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்


தமிழ்ப் பண்பாட்டில் தாலி பழங்காலந் தொட்டு வழக்கில் உள்ளதா என்பது குறித்து பல விவாதங்கள் தமிழில் நடந்துள்ளன. மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பண்பாட்டில் தாலி பிற்காலத்தில் குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிற்கு வந்தது என்றும், அதற்குமுன் அது வழக்கில் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கு மாறாக ம.பொ.சி. சங்ககாலத்திலிருந்து தாலி வழக்கிலிருந்தது என்றும், தாலி தமிழனின் தனித்த பண்பாட்டு அடையாளம் என்றும் வாதிட்டார். வெறும் இலக்கியச்சான்றுகளை மட்டும் சான்றாதாரங்களாகக் கொள் ளாமல் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் சார்ந்த மெய்ம்மைகளையும் குறுக்கு நோக்கீடு செய்து புதிய வெளிச்சம் பாய்ப்பது இன்றியமையாதது.

தற்கால வழக்கில் தாலி என்பது திருமண நிகழ்வின் மையமான ஒரு கூறாக உள்ளது. மணமானவள் என்பதைக் குறிக்கும் அடையாளமாகப் பெண்ணிற்கு அது அமைந்துள்ளது. தாலி மீது ஏற்றப்பட்டுள்ள புனிதம் வாழ்க்கையின் அனைத்துப் பரப்புகளிலும் வேர்விட்டுள்ளது. மங்கல நாண், திருமாங்கல்யம், திருமாங்கல்ய தாரணம், மங்கலப்பூட்டு என அதன் பெயரும் புனிதமூட்டப்பட்டு வழங்கப்படுகின்றது. மங்கலச் சின்னமாகக் கருதப்படும் தாலி, கணவனின் இருப்புவரை மட்டுமே பெண்ணிற்குச் சொந்தமானது. அதாவது தாலி என்பது திருமண மானவள் என்பதை அடையாளப்படுத்தும் சின்னம் மட்டுமல்ல, அது கணவனின் இருப்பை உறுதிசெய்யும் அடை யாளமாகவும் இருக்கின்றது. கணவன் உயிருடன் இருக்கும்போது தாலியைக் கழற்றக் கூடாது என்பது அழுத்தமான மரபு. கோயில்களுக்குச் சென்று தாலிக்கயிற்றை மாற்றுபவர்கள் அம்மன் கழுத்தில்கிடக்கும் தாலியை எடுத்துப் போட்டுக்கொண்டு பின் தன்தாலியைக் கழற்றி மாற்றிப் போடுதல் உண்டு. கருக்குவேல் அய்யனார் கோயிலில் புது தாலிக் கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்ட பிறகுதான் பழைய கயிற்றைக் கழற்றுகிறார்கள். தாலியை வெளியில் போடக்கூடாது. அது கணவனுக்கு மட்டும்தான் தெரியவேண்டும் என்பதற்கு அரிச்சந்திரன்- சந்திரமதி கதை சான்று. தாலி கழன்று வீழ்வது அல்லது அதற்கு ஏற்படும் சேதம் என்பது கணவனின் இழப்பு அல்லது கணவனுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்னுணர்த்தும் அடையாளம் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. தாலி பாக்கியத்திற்காகவும் தாலி நிலைப்பதற்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் நோன்புகளும் வழிபாடுகளும் அதன் இன்றியமையாமையை விளக்கும். தாலி கணவனுக்குச் சமமானது. இதனால்தான் ‘தாரம் போனபின் தூரம்’ என்ற பழமொழி வழங்கப்படுகிறது. தாலியை இழந்தவள் அமங்கலமாகக் கருதப்படுகின்றாள். அவளுக்குச் சடங்கியல் சூழல்களில் வழங்கப்படும் உரிமை தாலியை வைத்தே முடிவு செய்யப்படுகின்றது.

சில சடங்கியல் சூழல்களில் தாலியைக் கழற்ற அனுதிக்கப்படுகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மருங்கூர் ஊராட்சிக்குட்பட்ட மல்லப்பாடி என்ற கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை சித்திரை மாதம் பத்துநாட்கள் திருவிழா நடத்தப்படுகின்றது. இக்கோயிலின் பூசாரி காப்பு கட்டியது முதல் திருவிழா முடியும்வரை வீட்டுக்குச் செல்லாமல் மாரியம்மன் கோயிலிலேயே தங்குவார். காப்பு கட்டும் அன்று அவர் தன் மனைவியின் கழுத்திலுள்ள தாலியைக் கழற்றிவிடுவார். திருவிழா முடிந்து வீட்டிற்குத் திரும்பிவந்து தாலியை மீண்டும் மனைவியின் கழுத்தில் கட்டுவார். இதுபோன்ற வழக்கம் தஞ்சாவூரின் சில பகுதிகளிலும் உள்ளது. மாரியம்மனுக்குப் பூசை செய்யும்போது பூசாரிக்குப் பெண்பந்தம் இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாக இது செய்யப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

தமிழகத்தில் சாதி,மத வேறுபாடின்றி அனைவரிடமும் தாலிகட்டும் வழக்கம் உள்ளது. ஆனால் எல்லாரிடமும் ஒரேமாதிரியான தாலி வழக்கில் இல்லை. சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு வடிவத்திலான தாலியைப் பயன்படுத்துகின்றன. தாலியின் வடிவமைப்பைக் கொண்டே ஒருவர் சார்ந்திருக்கும் சாதியக் குழுவை அடையாளங்காண இயலும். ஆலிலைத் தாலி, பொட்டுத்தாலி, சிறகுத்தாலி, நாகவல்லிப்பொட்டு, வட்டத்தாலி, சிறுதாலி. பெருந்தாலி, பஞ்சாரத்தாலி, நாணல்தாலி, மண்டைத்தாலி, பார்ப்பாரத்தாலி எனத் தாலியின் வகைகளும் வடிவங்களும் பல உள்ளன. ஆலிலைத் தாலி தமிழகத்திலும் கேரளத்திலும் பரவலாக உள்ளது. இத்தாலியில் தாங்கள் விரும்பும் தெய்வங்களின் உருவங்களைப் பொறித்துக்கொள்வர். கிறித்தவர்கள் ஆலிலைத் தாலியில் சிலுவை, புறா, விவிலியம், திராட்சைபோன்ற உருவங்களைப் பொறித்துக்கொள்கின்றனர். தாலிகட்டும் முறைகளிலும் சாதிக்குச் சாதி வேறுபாடுகள் உள்ளன. சாதிகளைத் தாலியை அடிப்படையாகக் கொண்டு அறுத்துக்கட்டும் சாதி, அறுத்துக்கட்டாத சாதி எனப் பகுப்பதும் வழக்கில் உள்ளது. அறுத்துக்கட்டும் சாதிகளில் மணமுறிவு அல்லது கணவனின் இறப்பு ஆகிய சூழல்களில் மறுமணம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. சில சாதிகளில் கணவனின் இறப்புக்குப் பின் மனைவியைக் கணவனின் அண்ணன் அல்லது தம்பிக்கு முதல் மனைவி அல்லது இரண்டாவது மனைவியாக்குவதுமுண்டு. குழந்தைகள் இருப்பின் அவர்களையும் இப்புதிய உறவில் இணைத்துவிடுவர். இதனைச் ‘சேர்த்துவைத்தல்’ என்கின்றனர். குழந்தைகளைப் பராமரித்தல், கணவனை இழந்த மனைவி மற்றும் சொத்துப் பாதுகாப்புபோன்ற காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்படுகின்றது. இவ்வழக்கத்தின் வெளிப்பாடே அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி என்ற பழமொழி ஆகும். சாதிய உட்பிரிவுகளைச் சிறுதாலி, பெருந்தாலி எனப் பிரித்து அடையாளப்படுத்துவதும் உண்டு.

தாலிகட்டும் முறையில் சில பொதுவான வழக்கங்களை யும் தனித்த மரபுகளையும் காணமுடிகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சில பதிவுகள் இங்குத் தரப்படுகின்றன. “பிராமணரிடம் பெண்ணின் தந்தையார் நாற்காலி (அ) விதைக் கூடைமீது அமர்ந்து பெண்ணைத் தன் மடியில் உட்காரவைத்து, மாப்பிள்ளையின் சகோதரி அவர்களுக்குப் பின்னால் நின்று விளக்குப் பிடிக்க, மணமகன் மேற்குமுகமாக நின்ற கோலத்தில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார். மாப்பிள்ளை தாலிக்கயிற்றில் ஒரு முடிச்சு மட்டும்தான் போடுகின்றார். பெண்ணின் நாத்தனார் மற்ற இரண்டு முடிச்சுகளைப் போடுகின்ற வழக்கம் உள்ளது.

கருணீகர் இனத்திலும் மணப்பெண்ணை அவள் தந்தையார் மடியில் உட்காரவைத்து, நாத்தனார் விளக்கு பிடிக்க, நுகத்தடியின் துவாரத்தில் மாங்கல்யத்தை மூன்றுமுறை நுழையவிட்டு எடுத்தல் என்ற வழக்கம் உள்ளது. ஆச்சாரிகள் இனத்தில் எதிரெதிரே உட்கார்ந்திருக்கும் மணமக்களுக்கிடையில் திரைபிடிக்க நாத்தனார் பெண்ணின் பின்னால் நின்று நாத்தி விளக்கு பிடிக்க, மணமகன் திரைமறைவிலிருந்து தாலிகட்டி மூன்று முடிச்சு போடுகின்றார். அதன் பிறகு பங்குனி முகூர்த்தம் என்ற பெயரில் மணமக்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும்நிலையில் திரைபோடாமலேயே மணமகன் மணமகள் கழுத்தில் நாகவல்லிப் பொட்டு என்ற தாலியைக் கட்டி மூன்றுமுடிச்சு போடுவார்.

குயவர் இனத்தில் பொட்டுத்தாலி என்ற தாலியை மணமகன் மணமகள் கழுத்தில் அணிந்து மூன்று முடிச்சு போடுகின்றார். மணமகனின் சகோதரி பின்னால்நின்று காமாட்சி அம்மன் விளக்கு வைத்திருப்பார். மாலையில் நாகவல்லி முகூர்த்தம் என்ற பெயரில் நாகவல்லிப் பொட்டு என்ற தாலியை இரண்டாவதாக மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி மூன்றுமுடிச்சு போடுகின்றார்.

சலவைத் தொழிலாளர் இனத்தில் மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையில் திரைபோட்டு நாத்தனார் பெண்ணுக்குப் பின்னால் நின்று விளக்கு பிடிக்க மாப்பிள்ளை, பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி மூன்றுமுடிச்சு போடுகின்றார். தொண்டைமண்டல சைவவேளாளர், தேசிகர், வீரசைவப் பண்டாரம், பேரி செட்டியார், வாணியச் செட்டியார், சேனைத் தலைவர், செங்குந்தர், வன்னியர், யாதவர், ஆதிதிராவிடர் ஆகிய பத்து சாதியினரிடமும் மணமேடையில் மணமக்கள் அமர்ந்த நிலையிலிருக்க, மணப்பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி மூன்று முடிச்சு போடுதல், மணமகனின் சகோதரி பின்னால்நின்று காமாட்சி விளக்கு பிடித்தல் என்ற பொதுவான வழக்கம் காணப்படுகின்றது.”(அ.இராசேந்திரன், 2006: 73-74).

தாலியைக் கோக்க மஞ்சள், கருப்பு, சிவப்பு, வெள்ளைநிறக் கயிற்றில்

ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. கயிற்றின் நிறவேறுபாட்டிற்கும் சாதியக் குழுக்களுக்கும் தொடர்

புண்டு. “சங்கரன்கோயில் அருகிலுள்ள முடுக்குமீண்டான் பட்டியில் வாழும் செம்பநாட்டு மறவரிடையே கருப்புக் கயிற்றினைத் தாலியாக அணியும் பழக்கம் இருந்ததாகவும், இப்போது எல்லோரும் மஞ்சள் கயிற்றினையே பயன்படுத்துவதாகவும் குறிக்கப்படுகின்றது. இப்போதும் கொண்டையம் கோட்டை மறவர்களிடம் இப்பழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. சைவச் செட்டி மார்களும், பிள்ளைமார்களும் ஏழு நூல் இழையில் தாலியைக் கோர்த்துக் கட்டுவர். மஞ்சள் கயிற்றைத் தாலியாகப் பயன்படுத்தும் வேறுசில சாதிகளில் விதவைகள் கருப்புக் கயிற்றை அணிவர். மேலும் உருமா கட்டும் பழக்கம் ஒன்று கொண்டையம் கோட்டையாரிடம் உள்ளது. அதாவது தங்கத்திலான பட்டையான ஒன்றை மணமகளின் நெற்றியில் தாய்மாமன் கட்டுவார். அதை அப்பெண் பத்திரமாகப் பெட்டியில் வைத்துக்கொள்வாள். செம்பநாட்டு மறவர் இதைப் ‘பட்டம் கட்டுதல்’ என்கின்றனர். கிறித்தவ உடையார்களிடமும் இப்பழக்கம் உள்ளது. கிறித்தவப் பறையர், பள்ளர்களிடையே பட்டம் கட்டுதல் என்ற பெயரில் நாத்திமார், மாமியார் போன்றோர் நெற்றியில் கட்டுவர். இதனை நாத்திப் பட்டம், மாமிப்பட்டம் என்று கூறுவர். கடலூர் மாவட்டத்திலுள்ள கிறித்தவப் பறையர்களிடையே முதலில் வெள்ளை நூலில் தாலி கட்டப்படும். தாலி பெருக்கிப் போடும் அன்றுதான் வேறு மஞ்சள் கயிற்றில் அது மாற்றப்படும்” (அ.நிர்மலா, தமிழகப் பெண்களும் தாலி பற்றிய வழக்காறுகளும்- ஆய்வறிக்கை 2005:21-22). வாழைக்குத் தாலிகட்டுதல், தென்னைக்குத் தாலிகட்டுதல், வீட்டுத் தூணுக்குத் தாலிகட்டுதல், அரசமரத்துக்குத்

தாலி கட்டுதல், கழுதைக்குத் தாலிகட்டுதல் என வெவ்வேறு நோக்கங்களுக்காகத் தாலிகட்டும் மரபுகளும் உள்ளன.

கிறித்தவர்களைத் தவிர்த்து ஏனைய பிரிவினரிடம் தாலிகட்டும் நிகழ்வு கோயிலில்தான் நிகழ வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெரும்பாலும் தாலிகட்டுதல் மணமகள் இல்லத்தில் நிகழும். சில சாதியினரிடம் மணமகன் இல்லத்தில் நிகழும். பெரும்பான்மையான திராவிடப் பழங்குடியினரின் திருமணம் வீட்டில் நிகழ்கின்றது. தாலிகட்டிய பின்னர் குலதெய்வ வழிபாடு செய்வதே வழக்கமாகவுள்ளது. தாலிகட்டும்போது மணமகனுக்கு அவனது சகோதரி உறவுடைய பெண் அருகிலிருந்து உதவுவது பெரும்பான்மை வழக்கமாக உள்ளது. “மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலிகட்டும் வழக்கமுடைய சாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணைசெய்கின்றாள். ஒன்றிரண்டு சாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையிலுள்ள சந்து அல்லது முடக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலிகட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்து தாலிகட்டிய வழக்கத்தின் எச்சப்பாடாகும்”(தொ.பரமசிவன்,2001:50). முன்பு அனுப்பர் சமூகத்தாரின் திருமணங்களில் மாப்பிள்ளையின் பங்காளிகள் சென்று மணப்பெண்ணைக் குண்டுகட்டாகக் கட்டித் தூக்கிவந்து மணமேடையில் அமர்த்துவதுண்டு என செங்கோ வரதராசன் பதிவு செய்துள்ளார் (1988:101). பெண்ணைக் கவர்ந்து வந்து மணம் செய்வது பழங்குடிமக்களிடமும் காணப்பட்ட வழக்கமாகவுள்ளது. பல ஜமீன்தார்கள் தங்களுக்குப் பிடித்த பெண்களைக் கடத்திவந்து அந்தப் புரத்தில் சேர்த்த பதிவுகளும் உள்ளன. அரசர்களும் இளவரசர்களும் வேட்டைக்குச் செல்லும் போது இவ்வாறு பெண்களைக் கவர்ந்து சென்ற கதைகள் பல வழக்கிலுள்ளன.

குடும்பம் என்னும் நிறுவனத்தைத் தக்கவைக்கும் இன்றியமையாத ஒழுகலாறே திருமணமாகும். தற்காலத்தில் தாலி திருமணத்தின் தவிர்க்க முடியாத கூறாக உள்ளது. எனவே தாலி என்ற கூறைத் தனியாகப் பிரித்துப் பார்ப்பது பொருத்தமுடையதாக இருக்காது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் தாலி எத்தகைய இடத்தைப் பெறுகின்றது என்பதைப் பகுப்பாய்வதன் மூலமே தாலி தொடர்பான வெவ்வேறு மரபுகளையும் வேறுபாடுகளையும் புரிந்துகொள்ள இயலும். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வழக்கிலிருந்த - வழக்கிலிருக்கும் தாலி தொடர்பான மரபுகள் மேலே தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. இங்குச் சுட்டப்பட்ட வழக்கங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளன என்று சுருக்கிவிட இயலாது. இறப்புச் சடங்கில் நிகழ்த்தப்படும் தாலியறுப்புச் சடங்கும் சாதிக்குச் சாதி, பகுதிக்குப் பகுதி வேறுபடுகின்றன. விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கையர்கள் நிகழ்த்தும் தாலியறுப்புச் சடங்கு, சில பெருந்தெய்வக் கோயில்களில் நிகழ்த்தப்படும் திருக்கல்யாணச் சடங்கு போன்றவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இவ்வா றாகத் தாலி என்பது திருமணம், வழிபாடு, இறப்பு ஆகிய மூன்று தளங்களில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது என்பதை மேலே தரப்பட்டுள்ள தரவுகள் உணர்த்துகின்றன. அதே வேளையில் தாலிக்கு ஏதோ ஒரு தொன்மைத்தன்மை உள்ளது என்பதையும் ஊகிக்க முடிகின்றது. தாலியின் படிநிலை வளர்ச்சியை அடையாளங்காண்பதின் மூலம் அதன் தற்காலச் செயற்பாடுகளைப் புரிந்துகொள்ள இயலும்.

தமிழ்நாட்டு அணிகலன்கள் குறித்து விரிவாக ஆய்வுசெய்த சாத்தான்குளம் அ. இராகவன் 100க்கும் மேற்பட்ட கழுத்தணிகள் உள்ளன என்றும், அவற்றுள் 59 அணிகலன்கள் பற்றி விளக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இராகவன் விளக்கியுள்ள அணி கலன்களுள் தாலியும் அடங்கும். இன்று அணிந்துவரும் திருமண அணியன்று தாலி எனக் குறிப்பிடும் அவர் ஐம்படைத் தாலி, தாலிக்கொழுந்து, சிறுநெற்றாலி, பன்னிரைத்தாலி, பன்மணித்தாலி, புலிப்பல்தாலி, புலிநகத்தாலி, பொன்றாலி, பின்றாலி, மணத்தாலி எனப் பத்து வகையான தாலிகளைக் குறிப்பிடுகின்றார் (தமிழ்நநட்டு அணிகலன்கள் 1970: 210-212). இவற்றுள் ஒன்று கூட திருமணத்தின்போது கட்டப்படும் தாலியைக் குறிக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. சங்கஇலக்கியத்தில் ஆண்களும் அணியும் அணிகலனாகத் தாலி காட்டப்பட்டுள்ளது (அகம்.54:18). இப்பாடலில் புலிப்பல் தாலி அணிந்த வீரன் ஒருவனைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறு.161ஆவது பாடல் புலிப்பல் தாலி அணிந்த தலைவன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. போர்வீரன் ஒருவன் தன் மரபுவழியான அணிகலன்களைக் களைந்து போர்க்கருவிகளையும் போர் அணிகலன்களையும் அணிந்த நிலையை புறம்.77 ஆவது பாடல் வருணிக்கின்றது. அத்தகைய வீரன் தாலியை(ஐம்படை) இன்னும் களையவில்லை என்று அப்பாடல் குறிப்பிடுகின்றது. புலிப்பல் தாலி அணிந்த சிறுவர்களைப்புறம்.374ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. புலிப்பல் தாலி அணிந்த பெண்கள் பற்றியும் குறிப்பு உள்ளது. உடன்போக்கு சென்ற தலைவியைச் சுரத்திடைத் தேடிச்சென்ற செவிலித்தாய் தன் ஆற்றாமையை வழியில் கண்ட மானிடம் புலம்புவதாக அமைந்த அகம்.7ஆவது பாடல் திருமணத்திற்கு முன்பு புலிப்பல்தாலி அணிந்திருந்த தலைவிபற்றிக் குறிப்பிடுகின்றது. இப்பாடல்களில் குறிக்கப்படும் புலிப்பல் தாலி ஆண்,பெண் என இருபாலருக்கும் உரிய அணிகலன் என்பது தெளிவு. குறிஞ்சி, முல்லை சார்ந்த மாந்தர்களே புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்றும் அறியமுடிகின்றது. வீரத்தின் சின்னமாகப் புலிப்பல் தாலியை அணிந்து கொண்டனர் என்று தொ.பரமசிவன் (பண்பபட்டு அசைவுகள் 2001:52) குறிப்பிடுவது போன்று பொருள்கொள்ளாமல் சிறுவர்களும் பெண்களும் புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்ற குறிப்புகளையும் கவனத்தில்கொண்டால் அது ஒரு குலக்குறிச் சின்னமாக இருக்கலாம் எனக் கருதும் வாய்ப்புள்ளது. எனவே புலிப்பல் தாலி திருமணத்தோடு தொடர்புடையது அல்ல எனத் தெளியலாம்.

அகநானூற்றின் 86 மற்றும் 136ஆகிய இருபாடல்கள் சங்ககாலத் திருமணமுறையை விரிவாக விளக்குகின்றன. இவ்விரு பாடல்களிலும் திருமணத்தின்போது செய்யப்பட்ட சடங்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் தாலிபற்றிய குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “திருமணத்தின்பொழுது மணமக்களுக்குத் தாலிகட்டும் வழக்கம் இருந்திருக்குமாயின், இவ்விரு பாக்களில் ஒன்றிலேனும் நீராட்டு, விருந்து முதலியனவற்றைக் கூறும் புலவர், தாலிகட்டும் சடங்கினைக் குறியாதிருத்தல் கூடுமோ?” என்று மா.இராசமாணிக்கனார் கேள்வி எழுப்பியுள்ளார் (தமிழர் திருமணத்தில் தாலி 1955:13). வதுவை மணத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என உறுதிப்படுத்த இவ்விரு பாடல்களும் உறுதியான சான்றுகள் என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்களில் தாலி என்பதற்கு அணிகலன் மட்டுமல்லாது வேறு பொருள்களும் (சோழி) உள்ளன என்பதற்கு ஐங்குறுநூறு 166ஆவது பாடல் சான்றாக அமைகின்றது.

சங்ககாலத் திருமணமுறையில் சமயத்திற்கு இடமில்லை. அச்சடங்கு குழுக்களுக்குரிய குலச்சடங்காகவே அமைந்திருந்தது. குறவர், வேட்டுவர், உமணர், ஆயர், மறவர்போன்ற இனக்குழுக்களின் திருமணமுறைகளில் வேறுபாடுகள் இருந்தனவா என்பதை அறிய அகச் சான்றுகள் காணப்பெறவில்லை. திருமணநிகழ்வைப்பற்றிப் பேசும் இரண்டு பாடல்களுமே (அகம்.86,136) மருதத்திணை சார்ந்தவை. இருபாடல்களும் தலைவி ஊடலுற்ற சூழலில் தலைவன் தமக்கு நிகழ்ந்த திருமண நிகழ்வை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன. முதுமங்கல பெண்டிர் மணநீராட்ட மகனைப் பெற்றெடுத்த மகளீர் நால்வர் சூழ்ந்து வாழ்த்தி நெல்லும் மலரும் தலையில் சொரிந்து இல்லக்கிழத்தியாக்கினர் எனக் குறிப்பிடுகின்றன. மணநிகழ்வு பெண்களால் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை நிகழ்த்திய பெண்களை அகம்.86ஆம் பாடல் ‘வால்இழை மகளிர்’ என்றும், அகம். 136ஆம் பாடல் ‘வதுவை மண்ணிய மகளிர்’ என்றும் குறிப்பிடுகின்றன. வாழ்வரசிகளே திருமணத்தை நடத்திவைத்துள்ளனர். பெண்கள் திருமணத்துக்குப்பின் அணியும் அணிகலன்கள் தனியாக இருந்துள்ளன என்பதை ‘வால்இழை மகளிர்’ என்ற குறிப்பும் அகம்136 ஆம் பாடலில் காணப்படும் ‘வெண்நூல் சூட்டி’ என்ற குறிப்பும் உணர்த்துகின்றன. வதுவை மணம் கண்ட பெண்களை அடையாளம்காண அவர்களது அணிகலன்களே பயன்பட்டன.

திருமணமாகாத பெண்களை அடையாளங்காணச் சில அணி கலன்கள் வழக்கில் இருந்தன என்பதை உறுதிப்படுத்த பல சான்றுகள் உள்ளன. திருமணத்திற்குமுன் சிலம்புகழி நோன்பு செய்வது குறித்துப் பல பாடல்களில் பதிவாகியுள்ளன. உடன்போக்கு போகியத் தலைவியைத் தேடிவரும் நற்றாய் அல்லது செவிலித்தாய் சிலம்பு கழியாது சென்றுவிட்டாளே என வருந்துவதாக அமைந்துள்ளன (அகம்.315:8, 321:15, 369:25, 385:17, ஐங்கு.399:1-2, நற்.279:9). மணமாகாத பெண்கள் காலில் சிலம்பு அணிவர் என்பதை இக்குறிப்புகள் உறுதிசெய்கின்றன. சிலம்புக்கழிச் சடங்கு பெண்வீட்டில் நிகழ்த்தப்பட்டப் பின்னரே வதுவை மணம் நிகழும் என்பதும் இக்குறிப்புகளால் அறியப்படுகின்றது. வதுவை மணத்தை விளக்கும் அகம்; 86, 136 ஆகிய பாடல்களில் சிலம்புக்கழிதல் பற்றிய குறிப்புகள் இல்லை. பாலைத் திணைப் பாடல்களில்தான் சிலம்புக்கழிதல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவ்வாறாயின் சிலம்புக்கழிதல் சடங்கு குறிஞ்சி, முல்லை, பாலைத் திணை சார்ந்த மரபாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. பெண்கள் காலில் அணியும் சிலம்பு குலக்குறிச் சின்னமாக இருக்கலாம். பெண்கள் திருமணத்தின் காரணமாக எக்குலத்தோடு இணைக்கப்படுகின்றனரோ அக்குலத்தின் குலக்குறிச் சின்னத்தை ஏற்று அக்குலத்துக்குரியவராக மாறவேண்டும். இதன் காரணமாகவே சிலம்புக்கழி சடங்கு செய்யப்படுகின்றது. உடன்போக்கு செல்லும் தலைவி சிலம்பைக் கழற்றிவிட்டுச் சென்ற குறிப்பும் உள்ளது. “நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நல் மணம் கழிக” (ஐங்.399) என்னும் பாடல்வரிகள் பெண்ணின் பிறந்த வீட்டுக் குலக்குறிச் சின்னமாகிய சிலம்பைக் களைந்து வதுவை மணம் செய்வதைத் தெளிவாக்கியுள்ளது. திருமணச்சடங்கில் பெண்ணிற்கு அணியப்பட்ட அணிகலன் யாது என்பது குறித்த தெளிவான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. வால்இழை மகளீர்(அகம்.86). வெண்நூல்(அகம்.136) ஆகிய குறிப்புகள் திருமணமானப் பெண்கள் அணிபவை என்பதை உணர்த்துகின்றன. இருப்பினும் இவை எவ்வகையான அணிகலன் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை. கைம்பெண்கள் அணிகலன்களைத் துறந்தனர்(புறம்.261:18) என்ற செய்தி பரவலாக உள்ளது. ‘ஈகை அரிய இழைஅணி மகளிரொடு’(புறம்.127: 7-8) என்ற குறிப்பு மங்கல அணியைக் குறிக்கின்றது என்ற கருத்து உள்ளது (தமிழர் திருமணம் ம.பொ.சி.1990:22). இக்குறிப்புகள் திருமணமான பெண்களோடு தொடர்புடைய அணிகலன்கள் குறித்தவை. ஆனால் அவை தாலியைக் குறிக்கவில்லை என்ற கருத்தும் வலுவாக உள்ளது.

பழந்தமிழ் மரபில் தாலிகட்டும் வழக்கம் இல்லை என்ற கருத்தையும் அதற்குச் சமயத் தொடர்பில்லை என்பதற்கும் மேற்குறித்த சான்றுகள் போதுமானவை. சங்ககாலம் தொட்டுத் தமிழர்களிடம் சமணம், பௌத்தம், வைதீகம், சைவம், வைணவம் போன்ற சமயங்கள் தம்மை நிலைநிறுத்தக் கடுமையாகப் போராடி வந்துள்ளன. இச்சமயங்களுக்குள் பூசல்களும் மன்னர்களின் ஆதரவைப் பெறுவதற்கான போட்டிகளும் தொடர்ந்து இருந்துள்ளன.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி நிறுவப்பட்டதும் சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்கிழந்தன. பல்லவர்கள் வைதீகச் சமயத்திற்குப் பெரும் ஆதரவு தந்தனர். சைவம், வைணவம் ஆகிய சமயங்களும் வைதீகத்திற்கு ஈடாக வளர்ந்தன. பல கோயில்கள் கட்டப்பட்டன. இச்சமயங்கள் அரசு ஆதரவுடன் நிறுவனங்களாக மலர்ந்தன. இதனைத் தொடர்ந்து தோன்றிய பக்தி இயக்கம் தெய்வங்களையும் சமய நம்பிக்கைகளையும் வெகுசனப்படுத்தின. சமய நிறுவனங்கள் அரசின் நிருவாக அமைப் பிலும் சமுதாய வாழ்விலும் நெருக்கமான பிணைப்பைப் பெற்றன. மனிதனின் இன்பத் துன்பங்களுக்குப் பிறவிப் பயன், ஊழ், தெய்வக்குற்றம், பாவம். புண்ணியம் போன்றவையே காரணம் எனக் கற்பிக்கப்பட்டன. உலகத்தை இறைவனே இயக்குகின்றான், எனவே அவனை வழிபடுவதன் மூலம் மனிதன் தனது துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தன. இதற் கேற்றாற்போல் அவற்றின் தத்துவங்களும் புராணங்களும் அமைந்தன. வளமை, பாதுகாப்பு, தீமையை மாற்றுவித்தல், வெற்றி போன்ற வற்றை வழிபாடுகளின்மூலம் பெற முடியும் என்பதை முன்வைத்துப் புராதன மந்திரச் சடங்குகளைச் சமயமயமாக்கிக் கொண்டன. இதன் நீட்சியாக வாழ்க்கை வட்டச் சடங்குகளையும் சமய நம்பிக்கைகளோடு இணைத்துக் கொண்டன.

இந்த வளர்ச்சிப்போக்கில் திருமணத்தை அடையாளப்படுத்தும் அணிகலனாகவும் குலக்குறிச் சின்னமாகவும் இருந்த மணநாண் புனிதத் தன்மைபெற்ற தாலியாக புதுப்பொலிவு பெற்றது. இனக் குழுக்களின் சமூகச் சடங்காக இருந்த திருமணநிகழ்வு சமயங்களோடு இணைக்கப்பட்டுச் சமயச் சடங்கியல் இயல்புகளைப் பெற்றது. பழந்தமிழகத்தில் திருமணச் சடங்குகள் சமூகச்சடங்குகளாகவே (community rituals) இருந்தன என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தற்காலத்திலும் திருமணநிகழ்வில் சமயச் சடங்குகளுக்கப்பால் சமூகச் சடங்குகளும் பெருமளவில் இடம்பெறுவதைக் காணலாம். ஆனால் முகூர்த்தம் சமய மரபுகளால் செல்வாக்கு பெற்றிருப்பதைக் காணலாம். சமூகச்சடங்குகளில் சமய மரபுகளையும் நம்பிக்கைகளையும் சமயங்கள் இணைத்தமையால் குலக்குறிச் சின்னங்களைக் கொண்டு குழுக்களை அடையாளம் காண்பதற்குப் பதிலாகக் குல தெய்வத் தைக் கொண்டு அடையாளங்காணும் போக்கு தோன்றியிருக்க வேண்டும். திருமணச் சடங்கு களின் வழியாகச் சமயங்கள் வாழ் வியலில் அதிகாரம் செலுத்தத் தாலியைப் புனிதச் சின்னமாக மாற்றிக் கொண்டது. வாழ்க்கைவட்டச் சடங்குகளில் சமயம் செய்த குறுக்கீடுகளின் விளைவே திருமணத்தை அடையாளப்படுத்தும் தாலி எனலாம்.

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்