/* up Facebook

Jul 23, 2015

பெண்களும் கருத்துவெளியும்... - அப்துல் ஹக் லறீனா


சமூக வலைதளங்களில் நமது பெண்கள் ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடுவது ஒப்பீட்டளாவில் குறைவு என்பதைக் காண்கிறோம். தேடலில் போதாமை, சமூக, அரசியல் விவகாரங்களில் ஆர்வமின்மை என்பன மட்டுமே இதற்கான காரணங்கள் அல்ல. மாறாக, நமது சமூக மனநிலையும், பொதுத் தளத்தில் பெண்களின் கருத்துக்கள் எதிர்கொள்ளப்படும் விதமும்கூட இந்த வகையான மனத்தடைக்கு ஒரு முக்கிய காரணம் தான்.

உதாரணமாக, குடும்பங்களின் ஒருங்கிணைவு சமூகமாகிறது என்ற அடிப்படையில் குடும்பம், ஆண் - பெண் உறவு, சமூகத்தில் பெண்கள் நிலை என்ற ரீதியிலான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் எழுதப்படும்போது அவை இரண்டு விதமாக எதிர்கொள்ளப் படுகின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது:

1. பொதுவான ஒரு கருத்தை எழுதும்போது, அதனை குறித்த கருத்தை எழுதும் பெண்ணோடு தொடர்புபடுத்தி, அது அப்பெண்ணின் நேரடி அனுபவம் என்ற ரீதியில் வியாக்கியானப்படுத்தியும்  குறித்த வகையில் "லேபள்"படுத்தியும் எழுதப்படும் எதிர்வினைகள்.

* "நீ பாதிக்கப்பட்டிருக்கிறாய், அதனால் தான் நீ இப்படி எழுதுகிறாய்", "நீ உன் குடும்பத்தில் உள்ள பிரச்சினைக்கு வெளியில் வடிகால் தேடுகிறாய்", "நீ மேற்கின் மூளைச் சலவைக்கு உட்பட்ட பெண்ணியவாதி" என்ற ரீதியிலான எதிர்வினைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவை ஒருவகையான மன உளைச்சலை ஏற்படுத்தி, அப்பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுவதும் உண்டு. 'இனி அவள் எழுதக்கூடாது; எழுதுவதை எப்படியேனும் நிறுத்திவிட வேண்டும்' என்ற வக்கிரமான எண்ணத்தில் விடுக்கப்படும் ஈனத்தனமான/கோழைத்தனமான தனிமனிதத் தாக்குதல் என்ற வகைக்குள் இது அடங்கும்.  

2. எழுதப்படும் கருத்தின் மையப்புள்ளியை விடுத்து, குறித்த ஒரு பதிவு சொல்ல விழையும் செய்தி, அதன் நோக்கம் என்பவற்றைப் புறந்தள்ளிவிட்டு, எங்கோ ஒரு நுனியைப் பிடித்துக்கொண்டு தொங்குவதும், அதை வைத்துக்கொண்டு மட்டந்தட்ட முனைவதுமான சில அணுகுமுறைகள். இதற்குப் பல்வேறு உதாரணங்களை முன்வைக்கலாம்:

* சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க நடைமுறைகளைக் கண்டித்து எழுதினால், முழு ஆண் சமுதாயத்தையுமே எதிர்த்து நிற்பதாகவும், எப்போதுமே ஆண்களை மட்டுமே குறைசொல்வதாகவும் எடுத்துக்கொள்ளும் அதிமேதாவித்தன முன்முடிவுகள். ஒரு பெண் வழக்கறிஞர்கூட இப்படிப் புத்திசாலித்தனமாக(?!) எடுத்துக்கொண்டு "குமுறிய"தாகக் கேள்விப்பட்டு எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். அவங்க புரிதல் அம்புட்டுத்தான் என்றால் நாம் என்னங்க பண்ண முடியும்? ;) . தவிர,  நாம் பலதரப்பட்ட விஷயங்களையும் எழுதிவரும்போதும் மூச்சுக் காட்டாத இந்தப் புண்ணியவான்கள்/புண்ணியவதிகளுக்கு, பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டிக்கும் பதிவுகள் மட்டுமே மட்டும் கண்ணை உறுத்தி, அதுதான் "எல்லாம்" என்ற விம்பத்தை உருவாக்கிக் கொள்ளும் சிலெக்டிவ் அம்னீஷியா நோய் இருக்கும் என்றால், அதற்கு நம்மிடம் எந்த மருந்தும் இல்லை.

*வெளிப்படையாகவே தமது சொந்த வாழ்வில் இடம்பெறும் நிகழ்வுகளின் அடியாக ஒரு கருத்தை வலியுறுத்த முனையும் போது, அக்கருத்தை விட்டுவிட்டு சம்பவ விபரிப்பினைக் குதர்க்கமாகக் குறைகாண்பது. "இதையெல்லாம் ஒரு பெண் பப்ளிக்கில் பேசலாமா?" என்று தொடங்கி சூஃபி சுல்தான்களாய்த் தம்மைக் காட்டிக்கொள்ள முனைவது இன்னொரு ஸ்டைல்.

எடுத்துக்காட்டாக, பிரசவம் என்பது எவ்வாறு ஒரு ஜீவ மரணப்போராட்டம் என்பதைத் தெளிவுபடுத்தி, தாய்மையைப் போற்றவேண்டியதன் அவசியத்தை அழுத்திச் சொல்லும் ஒரு பதிவில், தன்னை ஓர் ஊடகவியலாளனாய்க் கருதிக் கொண்டிருக்கும் ஒரு "புத்திஜீவி"(!?)க்கு, பதிவின் மையக் கருத்து புலப்படுவதற்குப் பதிலாக "வோட்டர் பேக்" உடைந்தது என்ற ஒரேயொரு விஷயம்தான் பூதாகரமாகவும்  பதிவினது முக்கிய புள்ளியாகவும் தெரிகின்றது, அதைத்தான் அவர் பிறரோடு, குறிப்பாகப் பெண்ணின் உறவினர்களிடம் உரையாடும்போது மையப்படுத்திப் பேச எடுத்துக்கொள்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரி அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களை வைத்துக்கொண்டு நம் பத்திரிகைகள் இயங்கினால் அவற்றின் கதி என்ன என்பதை நினைத்து ஒருகணம் புல்லரித்துப் போகவேண்டியதுதான். அதற்குமேல் அதையிட்டுச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறாக, பலமுனைத் தாக்குதல்களையும் எதிர்கொண்டு பொதுச் சமூகக் கருத்தியல் தளத்தில் தாக்குப்பிடிப்பது என்பது எல்லாப் பெண்களாலும் சாத்தியப்படுமா என்ற கேள்வி முக்கியமானது. ஆகவே, இந்த நிலையை மாற்றுவதற்கும், சமூக மனப்பாங்கைக் காத்திரமாகக் கட்டமைப்பதற்கும், உரையாடலிலும் ஜனநாயகப் பண்பிலும் நம்பிக்கை உள்ள அனைவரும் தம்மளவிலான முன்னெடுப்புகளை மேற்கொள்வது நம் எல்லோர் முன்பும் உள்ள கடமையாகும்.

எனவே, நம் சமூகத்தில் பெண், பெண்ணின் உடல், அதன் இயக்கம், அதன் இயல்புகள் என்பன பற்றிய ஆரோக்கியமான பார்வைகள் பரவலாக்கப்படல் வேண்டும்.  அவளை ஒரு சதைப் பிண்டமாக, அலங்காரப் பண்டமாக, உடைமைகொள்ளும் பண்டமாக நோக்கும் மனநிலை உள்ளார்ந்து மாறாத வரை, இந்த வகையான நெருக்கடிகளைப் பெண்கள் பொதுத்தளத்தில் எதிர்கொள்ளவே நேரும். இந்த நிலையினை மாற்றுவது தொடர்பில், மனிதநேயமும் சமூகப்பற்றும், ஜனநாயகப் பண்பும், நல்ல பண்பாடும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

நன்றி - லறீனா (முகநூலிலிருந்து)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்