/* up Facebook

Jul 26, 2015

எங்களின் சிறகுகள் எமக்குரியவையே! - லறீனா அப்துல் ஹக்அறிமுகம்
இஸ்லாம் என்றதும் அனேகருக்கு நிiனைவில் எழுவது, பெண்ணடிமைத்தனம் தான். இது தொடர்பில் இஸ்லாம் மதம் காலங்காலமாகப் பல்வேறு காரசாரமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருவதை நாம் அறிவோம். குறிப்பாக, இன்று உலகின் பல பாகங்களிலும் மலாலா யூஸுஃபி எனும் முஸ்லிம் சிறுமியை முன்வைத்து, முஸ்லிம் பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பது, மதமா? மத அடிப்படைவாதிகளா என்ற கேள்வி மிக முக்கியமானது. அந்த வகையில், இக்கட்டுரை இஸ்லாத்தில் பெண்களின் கல்வி உரிமை என்ற அம்சம் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டம், நடைமுறையில் உள்ள இடைவெளிகள், அவற்றுக்கான காரணங்கள் என்பன பற்றிய சிறு அலசலாகவே அமைகின்றது. 

பெண்களின் கல்வி உரிமை
இஸ்லாம், 'கல்வியைத் தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண் - பெண் இருபாலார் மீதும் கடமையாகும்' என்று கூறுகின்றது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பெரும் கல்விமான்களாய், ஆசிரியைகளாய் அமைந்த பெண் கல்விமான்கள் பலர் இருந்துவந்துள்ளனர். முஹம்மது நபி அவர்களின் மனைவியர், அவர் காலத்தில் வாழ்ந்த பெண்கள் என கல்வியிலும் மார்க்கப் பணிகளிலும் முஸ்லிம் பெண்கள் முன்னணியில் இருந்துள்ளனர். புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் இமாம் 'ஷாஃபிஈ' யின் ஆசிரியர்களில் ஒரு பெண்மணியும் இருந்துள்ளார். அவ்வாறே, ஆயிஷh அப்துர் றஹ்மான் என்ற பெண்மணி அல்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதி உள்ளார். நவீன இஸ்லாமிய அறிஞர்களான அல்லாமா யூஸூப் அல் கர்ளாவி, ராஷpத் அல் கன்னூஷP ஆகியோரின் மகள்மார் முறையே பல்கலைக்கழகப் பேராசிரியையாய், கலாநிதிப்பட்டம் பெற்றவர்களாய் சமூகக் களத்தில் முன்னோடி முஸ்லிம் பெண்களாய் சமகாலத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஆயிரக்கணக்கான உதாரணங்களை இஸ்லாமிய வரலாறு கொண்டிருக்கின்றது. 

இன்று நம் நாட்டில் ஒப்பீட்டளவிலே முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிகளவு கல்வி கற்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவிலான பெண்கள் உயர்கல்வியைப் பெற்று, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதேநேரம், பெண்களில் மற்றொரு கணிசமான பிரிவினர் உயர்கல்வியைத் தொடரக்கூடிய திறமையும் கொண்டிருந்தும், உயர் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் துர்ப்பாக்கியமான நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இதன் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

அ) திருமண வயது தள்ளிப்போகின்றது, திருமணச் சந்தையில் உயர் கல்வி கற்ற பெண்களுக்கு ஏற்ற வரன்களைத் தேடுவது சிரமம் எனும் பெற்றோரின் அச்சம்

ஆ) கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று வேறுபடுத்தி, கல்வி கற்பது தொடர்பான இஸ்லாத்தின் கூற்றை சில 'முல்லாக்கள்' மார்க்கக் கல்வியையே அது குறிக்கின்றது என்றும் திரிபுபடுத்தி மக்களிடம் பரப்பி வருகின்றமை   

இ) ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில் உயர் கல்வி கற்ற பெண்கள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ள எதிர்மறையான கருத்துநிலையும் மத அடிப்படைவாதிகளின் மனதில் உள்ள தாழ்வுச்சிக்கலும், வீடுகளில் தமக்கான சொகுசுகள் மற்றும் சௌகரியங்கள் பறிபோய்விடுமே என்ற அச்சவுணர்வும் 

ஈ) பெண்களில் ஒருசாராரிடம் இதுதொடர்பில் காணப்படும் ஆர்வமின்மையும் அசட்டை மனப்பாங்கும் 

உ) திருமணத்தின் பின் உயர்கல்வி தடைபடல்
இக்காரணங்கள் தனித்தோ ஒன்றிணைந்தோ முஸ்லிம் பெண்களின் உயர் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாகத் திருமண வாழ்வில் இணையும் பெண்களில் அனேகருக்கு உயர் கல்வி வாய்ப்பு சாத்தியப்படுவதில்லை. வேலைப்பளு, கணவனும் மனைவியும் வீட்டுப் பெறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு இன்மை, ஆண்கள் வீட்டுவேலைகள் செய்வது தொடர்பில் பாரம்பரியமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள சமூக எதிர் மனநிலை, பெண்களின் உயர்கல்வி யினடியாய் அவர்களின் சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பது தொடர்பிலான ஆர்வமோ விருப்பமோ இன்மை முதலான இன்னோரன்ன அம்சங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பெண்களில் அனேகர்; இது பற்றிய விழிப்புணர்வு மழுங்கடிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 'சிறந்த தாய்மார்களை உருவாக்குதல்' என்ற சுலோகத்துடன் (அழவழ) நடத்தப்படும் முஸ்லிம் பெண்கள் மத்ரஸாக்களின் மறைமுகப் பங்கும் இதனோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.   

முடிவுரை
முஸ்லிம் பெண்களின் உயர் கல்வி தொடர்பான இப்பிரச்சினை தீர்க்கப்படுவதில் உள்ள மிக அடிப்படையான அம்சம் சமூக மனநிலை மாற்றமே ஆகும். இந்த சமூக மனப்பாங்கை மாற்றுவதில் பெண்களின் வகிபாகம் (role) மிக முக்கியமானதாகும். 

அந்தவகையில், 'இஸ்லாத்தின் போதனைகளில் பெண்ணின் கல்வி உரிமைக்கு முழு உத்தரவாதம் இருந்தது, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பெண்ணின் கல்வி நிலை மிகுந்த முன்னேற்றத்துடன் காணப்பட்டது' என்ற அம்சத்தை சமூகத்தில் நிலைநிறுத்தும் வகையிலான சுயதேடலையும் அதனடியான தெளிவான அறிவையும் அதிகமதிகம் வளர்த்துக் கொள்வதன் மூலமும் அதனை மிகுந்த அழுத்தத்தோடு சமூகத்தில் பரப்பி விழிப்புணர்வூட்டுவதன் மூலமுமே முஸ்லிம் பெண்கள் இப்பிரச்சினையை மிக வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடியதாய் இருக்கும். ஏனென்றால், மத அடிப்படைவாதிகள் இவை பற்றிய கதையாடலுக்குப் பெரும்பாலும் முக்கியத்துவமளிப்பதில்லை என்பதோடு, அவற்றை இயன்றளவு இருட்டடிப்புச் செய்வதிலும் அதிக முனைப்போடு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பெண்கள், அவர்களின் உரிமைகள் குறித்து மேலெழும் கதையாடல்களை (Discourse), 'இஸ்லாத்துக்கு எதிரான மேலைத்தேய மூளைச் சலவை சிந்தனை' என்ற ரீதியில் முத்திரை (brand) குத்தி, எதிர்மறையான விம்பங்களைக் (image) கட்டியெழுப்புவதன் மூலம் ஒருவகையான சிந்தனை மழுங்கடிப்பை 'முல்லாக்கள்' ஊக்குவிக்கின்றனர். 
இந்த நிலை மாறவேண்டும் எனில், முள்ளை முள்ளால் எடுப்பது போல, இஸ்லாத்தின் அடிப்படைகளையும், இஸ்லாமிய வரலாற்றையும், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பங்களிப்புகளைச் செய்து சாதனைகள் செய்துள்ள முஸ்லிம் பெண் ஆளுமைகளையும் பற்றி முஸ்லிம் பெண்கள் அதிகத் தெளிவுபெறுவதன் மூலம், இஸ்லாத்தின் பெயரால் பெண்களின் கல்வி உரிமை முதலான இன்னபிற அடிப்படை உரிமைகளை மறுதலிக்கும் மத அடிப்படைவாதிகளை மிக வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடியதாய் இருக்கும்.

இஸ்லாம் என்பது முஸ்லிம் பெண்களுக்குமானது. அதனை ஆண்களுக்கு மட்டுமானதாய்க் குறுக்கி, பெண்கள் இரண்டாம் நிலைக்குப் புறந்தள்ளப்படவோ, ஆண்களுக்குச் சாதகமான ஒருதலைப்பட்ச அம்சங்கள் மட்டும் மேலெழுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்ற திடவுறுதியோடு முஸ்லிம் பெண்கள் தம்மைத் தம்மளவிலும் சமூகக் களத்திலும் உறுதியாக நிலைநிறுத்திக்கொள்ள முன்வரல் வேண்டும். 

 நன்றி: "அவள்" சஞ்சிகை 2014, இதழ் 1

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்