/* up Facebook

Jul 25, 2015

"சும்மா இருப்பவள்" ~ லறீனா ஏ. ஹக்


சமூக அமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனக் கட்டமைப்புக்களில் குடும்பமும் ஒன்று.
என்றாலும், சாதாரணச் சமூக உளவியலில் அது ஒரு 'நிறுவனம்' என்பதான விம்பம் ஆழம் பெறவில்லை என்பதே உண்மை. சமூக, கலாசார, சமயம் சார்ந்த கருத்தியல்கள் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பம் மேலெழுந்து ஆழப் பதிந்துள்ளதன் விளைவே இதுவாகும். 

மனித உயிரி ஒரு சமூகப் பிராணி என்ற அளவில், சிறுகுழுவாக, பெருங்குழுமமாக ஒருங்கு சேர்ந்து வாழ்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், குடும்பமும் ஆணும் -பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகச் சிற்றலகாக இருக்கின்றது. 

நம்முடைய சமூக அமைப்பில் கணவன் - மனைவி- குழந்தைகள் இணைந்ததாக, சிலபோது இவர்களோடு மூத்த தலைமுறையினரையும் உள்வாங்கியதாகக் குடும்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவியாக இல்லறத்தில் இணையும் ஆணும் பெண்ணும் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு, பகிர்வு, ஒருவரையொருவர் வலுவூட்டிப் பலப்படுத்திக் கொள்ளல் முதலான இன்னோரன்ன எதிர்பார்ப்புகளோடு ஒன்றிணைகின்றனர். எனினும், இந்த எதிர்பார்ப்புகள் எந்தளவு அடையப்பெறுகின்றன, கணவன் - மனைவி ஆகிய இருவருக்கும் இந்த எதிர்பார்ப்புகளை அடைவதில் சம வாய்ப்பு கிட்டுகின்றதா, பல்வேறுபட்ட ஆற்றல்கள், ஆளுமைத் திறன்களைக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தின் பின்னர் அவற்றை மேலும் வளர்த்துத் தம்மை மேம்படுத்திக் கொள்ளத்தக்க சூழல் நிலவுகின்றதா என்பன போன்ற கேள்விகள் இங்கு மிக முக்கியமானவையாகும்.     

இன்று அறிவியலும் தொழினுட்பமும் மிகவும் வளர்ந்துவிட்டன; மனிதர்கள் மிகவும் பண்பாடடைந்து விட்டார்கள்; எல்லாவிதமான உரிமைகளிலும் சமத்துவமும் சுதந்திரமுமே மேலானவை என்பதான கோஷங்களை நாம் அடிக்கடி செவியுறுகின்றோம். பேச்சிலும் எழுத்திலும் இந்த விழுமிய சுலோகங்களை அடிக்கடி மீட்டிக் கொள்கின்றோம். என்றாலும், இன்றைய நாகரிக உலகினிலே இந்தக் கோஷங்கள் எந்தளவு தூரம் நடைமுறைக்கு வந்துள்ளன என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றோம். 

ஆண்டான் - அடிமை என்ற பண்டைய முறைமையை வெற்றி கொண்டு "எல்லோரும் இந்நாட்டு மன்னரே!" என்று முழங்கும் ஜனநாயக முறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்லிக்கொண்டாலும், அடிமை முறைமை அல்லது சற்று நாகரிகமாகச் சொல்வதானால், சக மனித உயிரி மீது மேலாதிக்கம் செலுத்தி அடக்கும், உழைப்பினைச் சுரண்டும் நடைமுறை பல்வேறு சூட்சுமமான வழிகளில் சமூக அமைப்பெங்கிலும் விரவிக் காணப்படுவதை நாம் கூர்ந்துநோக்கிக் கண்டடைய முடியும். நடைமுறையில் உள்ள குடும்ப நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதே கசப்பான உண்மை ஆகும். இதுபோன்ற பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, செ. கணேசலிங்கன் அவர்கள் தம்முடைய படைப்புக்களில் குடும்ப அமைப்பை உடைத்தல் வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்திச் சொல்வார். 

எனினும், தனிநபர்களின் கூட்டுத் தொகுதியான சமூகத்தில், அதன் உளவியலில் பால்சமத்துவம் மற்றும் வேலைப்பிரிவினை குறித்த சாதகமான மனோபாவம் வேரூன்றி இல்லாத நிலையில் குடும்ப அமைப்பைச் சிதைப்பது என்பது ஒருபோதும் ஒரு நல்ல தீர்வாக அமையப் போவதில்லை. மாறாக, அது மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்து பெண்களின் நிலையை இன்னும் மோசமானதாகவே மாற்றியமைக்கும். இதைவிட, இன்றைய குடும்ப அமைப்பானது அடிப்படையான சில மாற்றங்களை, சீர்திருத்தங்களை வேண்டி நிற்கின்றது என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடாகும். அந்த வகையில், ஒரு குடும்ப அமைப்பு தொடர்பில் எவ்வாறான மனநிலை மாற்றங்கள் தேவையாய் உள்ளன என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆணோ - பெண்ணோ மனித உயிரி என்ற அடிப்படையில் சமமானவர்களே. உடலியல் மற்றும் பண்புசார் நடத்தைகளில் சிற்சில தனித்துவமான வேறுபாடுகள் நிலவுவதை மையமாகக் கொண்டு ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ கொள்வது நாகரிக/அறிவார்ந்த சமூகத்திற்கு ஒருபோதும் ஏற்புடைய கருத்தாகாது. அவரவர் நிலையில் அவரவர் தனித்துவமானவரே என்ற புரிதல் சமூகத்தில் பரவலாக்கப்படல் வேண்டும். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பாடசாலைகள் மற்றும் கலை-இலக்கிய-ஊடகங்கள் பெரும் பங்காற்ற முடியும்.

பொதுவாக, ஆணுக்குப் புற உலகம், பெண்ணுக்கு அக உலகம் என்பதான வேறுபாடுகள் தொன்றுதொட்டு நிலவி வருகின்றமையை நாம் அறிவோம். சங்க காலத்தில் தினைப்புனங்காத்தல் முதலான பணிகளில் பெண்கள் ஈடுபட்டதான குறிப்புகள் உளவே ஆயினும், போர்க்களங்களில் நேரடிப் பங்காற்றுவோராக ஆண்களே சித்திரிக்கப்பட்டுள்ளனர். எனினும், இன்றைய உலகில் வீட்டுக்கு அப்பால் பணியிடங்களில் மட்டுமல்ல முப்படைகளிலும் போர்க்களங்களிலும் கூட பெண்களின் பங்காற்றுகை கணிசமான அளவில் உயர்ந்துள்ளமையை நாம் அறிவோம். 

இருந்த போதிலும், ஒரு வீட்டில் பெண்ணின் நிலை என்ன? அவள் அங்கே என்ன செய்கிறாள்? பொருளாதார ரீதியாக வீட்டுப் பொறுப்பைக் கணவனோடு சமமாகப் பகிர்ந்துகொள்ளும் பெண்ணிடமிருந்து அவளது வீட்டின் அன்றாடப் பணிகளைப் பகிர்ந்துகொள்ள முன்வரும், அப்படிப் பகிர்ந்துகொள்ளல் தமது கடமையே என்று இயல்பாய் உணரும் ஆண்கள் எத்தனை பேர்? வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடி குழந்தைகளை வளர்த்தல் உள்ளிட்டு சகல பணிகளையும் செய்து வரும் பெண்ணின் பணிகளுக்கான பெறுமானம் உரிய வகையில் வழங்கப்பட்டு வருகின்றதா? - இப்படியான கேள்விகளில் அனேகமானவற்றுக்கு எதிர்மறையான பதில்களே நமக்குக் கிடைக்கின்றமை கசப்பான சமூக யதார்த்தமாகும். உதாரணமாக, 

"உங்க வைஃப் என்ன பண்ணுறாங்க?" என்ற கேள்விக்கு, எந்தவிதமான தயக்கமும் இன்றி, 

"ஒண்ணும் பண்ணுறதில்ல, வீட்டுல சும்மா தான் இருக்கா"

என்று சர்வ சாதாரணமான பதிலை நாம் பலமுறை எதிர்கொண்டு கடந்திருப்போம். ஒரு பெண் ஒரு நாளில் சுமார் 15 மணித்தியாலங்கள் உழைப்பைச் செலுத்தித் தனது அன்றாடப் பணிகளை நிறைவு செய்தும், “சும்மா இருப்ப”தாகவே கருதப்பட்டு வருகிறாள். இதற்கான காரணம் என்ன? ஒரு வீட்டில் பெண்ணின் பணிகள் “பெறுமானம்” உள்ளவை என்ற விழிப்புணர்வு சமூக உளவியலில் சரிவரப் பதியவே இல்லை. பணிகளுக்கு "விலை"யை அடிப்படையாக வைத்து மட்டுமே பெறுமானம் வழங்கிப் பழக்கப்பட்டுப்போன நமது "கணக்கியல்சார்பு" மனநிலை,  சேவை அடிப்படையிலான மனித உழைப்புக்கு உரிய மதிப்பளிக்கப் பயிற்றுவிக்கப்படவில்லை. 

மேலும், வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்ணுக்கு உரியது; அவற்றை அவள் செய்தே ஆகவேண்டும்; அதையிட்டு அலட்டிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்று திரும்பத் திரும்ப நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். “ஒரு நல்ல குடும்பப் பெண்” என்பது பற்றிய சட்டகம் அழிக்க முடியாத ஒரே “மாதிரி” (model)யில் உள்ளடங்கப்பட்டு விட்டது. மொழியும் கலாசாரமும் சமயமும் அதுசார்ந்த கலை இலக்கியங்களும்கூட இதனை மீளவும் மீளவும் வலியுறுத்தி, ஆண்களை விடவும் பெண்களின் ஆழ்மனதில் இக்கருத்தியலை ஊன்றிப் பதிய வைத்துள்ளன. உதாரணமாக, பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் முதலான ஊடகங்களை உற்று நோக்கினால், “ஒரு நல்ல மனைவி எப்படிப்பட்டவளாய் இருக்க வேண்டும்?” என்பது பற்றிய அறிவுறுத்தல்கள், பிரசாரங்கள், உபந்நியாசங்கள் மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருவதோடு, ஒரு குடும்பம் அமைதிப் பூங்காவாகத் திகழவும் அங்கே மகிழ்ச்சி நிலைகொள்ளவும் பெண்களே அடிப்படையாக இருக்கிறார்கள் என்பதான மாயை கட்டமைக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். படித்த பெண்களில் அனேகரும்கூட இக்கருத்துக்களைக் கொண்டிருப்பதும் வலியுறுத்துவதும் ஒரு தெளிவான முரணகையாகும். “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” முதலான அறுதப் பழசான பழமொழிகள் இன்றும் தொலைக்காட்சி சீரியல்களில் மீட்டுருவாக்கம் செய்யப்படுவது இதுபோன்ற கருத்துக்களுக்கு மேலும் வலுவூட்டி வருகின்றது.

மறுதலையாக, ஒரு நல்ல கணவனின் பண்புகள் பற்றியும், ஒரு குடும்பத்தில் அமைதியும் மகிழ்வும் நிலைகொள்ள அவனின் பங்காற்றுகை எவ்விதம் அமைதல் வேண்டும் என்பது பற்றியும் பரவலாக வலியுறுத்தப்படுவது இல்லை. இங்கே, ‘இருகரங்களும் தட்டினால்தான் ஓசை எழும்” என்ற அடிப்படை விதிகூட கருத்திற் கொள்ளப்படுவது இல்லை. ஆண் - பெண் ஆகிய இருதரப்பும் இணைந்ததே குடும்பம் எனில், அதன் அமைதியில் மகிழ்வில் இருதரப்பினருமே சமபங்கேற்பாளர்கள் என்ற அடிப்படை உண்மை இங்கே இருட்டடிப்புச் செய்யப்படுவதைக் காண்கின்றோம். இது, “கல்லானாலும் கணவன் புல்லானாலும் (ஃபுல்லானாலும்) புருஷன்” என்ற பழைய வாய்ப்பாட்டுக்கே கொண்டு சேர்க்கின்றது என்பதை நம்மில் அனேகர் உணர்வதே இல்லை. கணவன் எப்படியானவனாய் இருந்தபோதிலும் அதனை எப்படியோ சமாளித்துச் சகித்து குடும்பத்தில் அமைதியையும் மகிழ்வையும் நிலைநாட்டுவது பெண்ணின் பொறுப்பு என்று “சுமை” ஒருதலையானதாக விதிக்கப்படுகின்றது. அவ்வாறே, குழந்தைகளின் கல்வி மற்றும் பிற சாதனைகளின்போது தந்தையர் போற்றப்படுவதும், அத்துறைகளில் தோல்வியுறும்போது அல்லது வீழ்ச்சியுறும்போது அதன் காரணகர்த்தாவாகத் தாய்மார் தூற்றப்படுவதும் வெகு சகஜமான சமூக நடைமுறையாக வழங்கி வருகின்றன. இது மிகத் தெளிவான அநீதியாகும் என்பதோடு, விழிப்புணர்வற்ற நிலையுமாகும். இதனை மாற்றியமைப்பது என்பது மிக நீண்டதும் கடினமானதுமான ஒரு பயணம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், குடும்பம் என்பது கணவன் – மனைவி - பிள்ளைகளால் ஆனது என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் பொறுப்புகள் மற்றவரைப் பாதிக்காத வகையிலும் நியாயமான முறையிலும் பகிர்ந்தளிக்கப்படுவது பற்றிய புரிதல் பரவலாக்கபடுதல் மிக முக்கியமானதாகும்.  “இது நம்முடைய வீடு” என்பதால், “அதன் பணிகள் நம் அனைவருக்குமானது” என்ற உணர்வு குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுதல் வேண்டும். 

அவ்வாறே, ஒரு கணவன் மனைவிக்கு வழங்கும் சமத்துவம், மரியாதை, முக்கியத்துவம் என்பன அடுத்த தலைமுறைக்கான முன்மாதிரியாக அமையும் விதத்தில் வடிவமைக்கப்படல் வேண்டும். 

கணவன் – மனைவி ஆகிய இருதரப்பினதும் உள்ளார்ந்த ஆற்றல்கள், உயர் கல்வி என்பவற்றுக்குக் குடும்ப வாழ்வு ஓர் இடையூறாக அமையாமல், பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் முன்கொண்டுசெல்லப்படுவது உறுதிசெய்யப்படல் வேண்டும். இதன் மூலமே சமூகமும் நாடும் வளம்பெற முடியும். 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, ஒத்துழைப்பு, மரியாதையுணர்வின் அடியாகவே இவற்றைச் சாத்தியப்படுத்த முடியும். இவ்விடயம் தொடர்பில் இளைய தலைமுறையினர் மத்தியில் பரவலான கலந்துரையாடல்களும் விழிப்புணர்வுப் பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுதல் இன்றியமையாததாகும்.

 நன்றி: ஆக்காட்டி (மார்ச்-ஏப்ரல் 2015)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்