/* up Facebook

Jul 17, 2015

கண்ட அவலத்தை சவாலாக்கிய சிந்துரா: சானிட்டரி நாப்கின் சேவையில் தீவிரம்வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் சிந்துரா, இந்தியாவில் அனைத்துப் பெண்களுக்கும் நாப்கின்கள் வழங்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கிறார். அதற்காக, தன்னால் இயன்றதைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

அமெரிக்காவின் பாஸ்டன் மாகாணத்தில் தன் பெற்றோர்களுடன் வசிக்கும் 17 வயதுப் பெண் சிந்துரா. ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் ஹைதராபாத் வரும் சிந்துரா ஐந்து சமூக நலவாழ்வு மையங்களில் தன்னார்வலர். இந்த வருடமும் வந்த அவரின் வாழ்க்கையை திருப்பதியில் நடந்த சம்பவமொன்று மாற்றியிருக்கிறது.

இது குறித்து சிந்துரா கூறும்போது, "இந்தியாவில் மாதவிடாய் என்பது பேசப்படக்கூடாத விஷயமாய் இருக்கிறது; சானிட்டரி நாப்கின்களை எல்லா இளம்பெண்களாலும் பயன்படுத்த முடிவதில்லை இந்த நிலைகள் மாற வேண்டும்.

நான் திருப்பதி வரும்போதெல்லாம், மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடங்களுக்குச் செல்வது வழக்கம். ஒரு வாரம் தொடர்ந்து செல்லும் போதுதான், சில விஷயங்களைப் பார்க்க முடிந்தது. மாதவிடாய் சமயங்களில் பெரும்பாலான பெண்களை அங்கே காணமுடிவதில்லை. துணிகளுக்கு நடுவே உமியை வைத்துப் பயன்படுத்தியே பழக்கப்பட்ட அவர்கள், கழிப்பறையிலேயே அதிக நேரத்தைக் கழிக்கின்றனர்.

சுகாதாரமற்ற, உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் அப்பெண்களை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்னிடம் கைவசம் இருந்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு நாப்கின்களை வாங்கிக் கொடுத்தேன்.

நிறையப் பள்ளிச் சிறுமிகள், மாதவிடாய்க் காலங்களில் பள்ளிக்குச் செல்வதில்லை. பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதி இல்லாததே இதற்குக் காரணம். அடிக்கடி பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை, அவர்களைக் கடைசியில் படிப்பையே நிறுத்தும்படி செய்துவிடுகிறது” என்றார்.

சிந்துராவின் ஆர்வத்தைப் பார்த்து இம்முயற்சியில் அவரின் உறவினரும் கைகோத்திருக்கிறார். சொந்தமாக நிறுவனமொன்றை நடத்திவரும் அவரும் சிந்துராவின் இலக்குக்கு உறுதுணையாக இருக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருவர் பலராக, நண்பர்கள், உறவினர்கள் என இவ்விலக்கு விரவிப் பரவ, விடுதிகளில் இருக்கும் 500 பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க முடிந்திருக்கிறது.

இது குறித்து மேலும் பேசிய சிந்துரா, "இந்தியாவில் பல பெண்கள் நல வாழ்வு மையங்கள் கடுமையான நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் மாதாந்திரப் பட்டியலில் கடைசி இடத்தில்தான் நாப்கின் பாக்கெட்டுகள் இருக்கின்றன. மாதவிடாய்க் காலங்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நிச்சயம் மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. இன்னும் சமூகத்தில் பல குடும்பங்கள் மாதவிடாய்க் காலங்களில் பெண்களை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. மற்றவர்களைத் தொடவிடுவதில்லை. வழக்கமான மாதாந்திர இயற்கைச் செயல்முறையாக மட்டுமே மாதவிடாய் கருதப்பட வேண்டும்.

சமூகத்தில் பெரும்பாலோனார், இளைஞர்களின் சமுதாயம் சார்ந்த செயல்களில் தீவிரம் இருப்பதில்லை என எண்ணுகின்றனர். இளைஞர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். யாரையும் சாராமல், குடும்பப் பாரம் எதுவுமில்லாமல் இருக்கும் காலகட்டத்தில், அவரவர் இலக்கு நோக்கி எவ்விதத் தடையும் இல்லாமல் பயணிக்க முடியும். இந்த இலக்கிலும் என்னுடன் பல இளைஞர்கள் பயணிப்பர்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி - தி இந்து


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்