/* up Facebook

Jul 12, 2015

கீதாஞ்சலியின் கவிதைகள் – மு.புஷ்பராஜன்

img037கீதாஞ்சலி என்ற பெயர் ஒருவரின் மனதில் எதை எழுப்புகிறது என்ற கேள்விக்கு, ரவீந்திரநாத் தாகூரைத்தான் என்று தயக்கமில்லாமல் கூறிவிடலாம். ‘கீதாஞ்சலி’ என்ற கவிதைத் தொகுதி இலக்கியத்திற்கான நோபல் பரிசினை 1913இல் பெற்றுக் கொண்டது யாவரும் அறிந்ததே.  நவீன இந்தியாவின் இலக்கிய மேன்மையை அது உலக அரங்கிற்கும் எடுத்துச் சென்றது. தாகூர் இந்தியாவின் ஆன்மீகப் புதையல்களில் இருந்து, தனது அகவுணர் எழுச்சிகளைக் கீதங்களாக இறைவனுக்கு அஞ்சலியாக்கினார். இந்தப் பாமாலைகளைத் தாகூரே தனது குரலில் வங்க மொழியில் பாடியும் உள்ளார்.

நான் இங்கு தாகூரின் கீதாஞ்சலியைத் தன் பெயராகக் கொண்ட ஓர் இளம் பெண்ணையும் அவரது கவிதைகளையுமே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவின் உத்தரப்பிரதேகத்திலுள்ள ‘மீறுட்டில்’ (Meerut) 12-06-1961இல் பிறந்து, பம்பாயில் 11-08-1977இல் தனது 16வது வயதில், புற்று நோயினால் இறந்துபோன துர்ப்பாக்கியவதி அவள். வெளியுலகத்தினர் யாரும் அப்பொழுது அவளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவளது பெற்றோர், உறவினர்களைத் தவிர, பாடசாலை நண்பர்கள் அறிந்திருந்ததெல்லாம் அவள் தனது நோய் காரணமாகக் கல்வியை இடைநடுவில் நிறுத்திக்கொண்டவள் என்பதுதான்.

கீதாஞ்சலியின் தாய், தனது மகள் தன்னுடைய சிறிய அறையினுள் இருந்து, எழுதுவதையும் வரைவதையும் யன்னல் வழியாகக் கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்ததையும் அறிந்துதான் இருந்தாள். தன் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் மகளின் ஆசைகள்பற்றி, ஒரு தாயினால் என்னதான் சொல்லமுடியும். மௌனமாய் விழி சுரந்த கண்ணீருடன் கடந்து செல்லத்தான் முடிந்திருக்கிறது. நீர் கசிந்த விழியோடு நெடுமூச்செறிந்து செல்லும் தாயைப் பலமுறை கீதாஞ்சலியும் பார்த்து இருக்கின்றாள். தன் மனதுள் அழுவதன்றி அந்த நோய்பட்ட சிறு பறவையால் என்னதான் செய்யமுடியும்? தனிமை அறையும் அவ்வப்போது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்வதும்தான் அவளுக்கு விதிக்கப்பட்ட வாழ்வாக இருந்தது. தனிமையுள் அவளுக்கு இருந்த மானசீகத் தொடர்பாடல் இறைவனுடன் மட்டும்தான். தனது தாய், தந்தை, சகோதரன் எவரும் அறிந்திருக்காமுடியாத தன் நொருங்குண்ட ஆழ்மனத் துயரங்கள் பற்றியெல்லாம் இறைவனுடன்தான் உரையாட முடிந்தது. ஒவ்வொரு கணமும் தன்மீது கவிந்திருந்த மரண தேவதையின் வலிமைக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த அந்த இரக்கத்துக்குரிய இளம் ஆன்மாவிற்கு, இறைவனின் துணைதான் ஆறுதலாக அமைந்திருந்தது. ஆசையாசையாகத் தனது பிறந்த நாளிக்காக வாங்கிய உடையைக்கூட அணிந்துகொள்ள, மரணத்தின் தூதுவனான நோய் அனுமதிக்கவில்லை. பிறந்த நாளிற்கு முன்பு தடுமாறி வீழ்ந்த அவள், வைத்தியசாலைக்கு எழுத்துச் செல்லப்பட்ட பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. கீதாஞ்சலியின் மரணத்தின் பின்னர்தான் அவளது கவிதைகள் கண்டெடுக்கப்பட்டன. அவளது அறையின் மூலையிலுள்ள படுக்கையின் கீழ், புத்தகங்களின் பின்னால், அலுமாரியிலுள்ள விளையாட்டுப் பொருட்களின் பின்னால், பழைய பாவாடையின் பைகளுக்குள் என எங்கெங்கு ஒளித்துவைக்க முடியுமோ அங்கெல்லாம் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

இவரது தனிமையும் கவிதை எழுதுவதும் அவரது மரணத்திற்குப் பின்னால் அவைகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் எமிலி டிக்கின்சனை ஞாபகப்படுத்தியது. 1930ஆம் ஆண்டு பிறந்த எமிலி டிக்கின்சன், தனது 18வது வயதிலேயே தனது படிப்பை நிறுத்திக் கொண்டார். இதற்கு இவரது Fragile Emotional State காரணம் என்று கூறப்படுகிறது. தனது அறையிலேயே பெரும்பாலான காலங்களைக் கழித்தவர். ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 1800 கவிதைகள் வரை எழுதியிருக்கின்றார் என்று குறிப்பிடப்படுகிறது. இவரது கவிதை முயற்சி பற்றி அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. அவையாவும் அவரது மரணத்தின் பின்னர், அவரது இளைய சகோதரி லவினியா டிக்கின்சனால்தான் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தனை தொகையான கவிதைகளை எழுதியிருந்தபோதிலும் இவரது வாழ்நாளில் ஏழு கவிதைகள் மட்டுமே பிரசுரமாகியிருப்பதாகக் சொல்லப்படுகின்றது. தனிமை, மரணம் என்பவை இவரது முக்கிய கவிப் பொருளாக இருந்திருக்கின்றன என்பதை அவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ‘இவர் வாழ்நாள் முழவதும் மரணித்துக்கொண்டிருந்தார்’ என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கீதாஞ்சலி தனக்கு விதிக்கப்பட்ட குறுகிய வாழ்நாள் முழுவதும்,  மரணத்தோடும் இறைவனோடும் உரையாடுவதும் மரணத்திற்காகக் காத்திருப்பதும் மரணம் பற்றிய அச்சமும் விரைவில் இறந்துவிட விரும்புவதும் அதிக காலம் வாழும் ஆசையும் ஏன் என்னைக் கைவிட்டீரென வினவுவதும் இந்நோய் வருவதற்கு நான் என்ன பாவம் செய்தேன் எனப் புலம்புவதுமாக அச்சத்திற்கும் கருணைக்கும் இடையில் அல்லாடிக்கொண்டே இருந்தார். ஒரு கவிதையில்;

‘அன்பான இறைவா
இந்த மெழுகின் திரியை அணைத்துவிடு
அன்றேல்
இன்னும் சில ஆண்டுகள் உறுதியாக
ஒளிரவிடு’

 என்கிறார். ஒரு காயம் பட்ட பறவையாக, புயலில் உடைந்த படகாகத் தன்னை உவமித்துக்கொள்கின்றார். மரணத்தை எதிர்நோக்கித் தனித்திருந்த ஆத்மாவின் அவல உணர்வுகளே அவரது கவிதைகள் என்று குறிப்பிடலாம். கீதாஞ்சலியின் கவிதைகளை நூலாக வெளியிட அவள் தாயார் பெரும் விருப்பமுற்றார். மகளின் கவிதைகளை பிறர் அறிந்து  கொள்ளவேண்டும் என்ற தாயின் ஆசையை நிறைவேற்ற எவரும் முன்வரவில்லை. மனமுடைந்த அந்தத் தாய், மகளது கவிதைகளை The Illustrated Weekly of India இற்கு அனுப்பிவைத்தார்.
த இலஸ்றேட் வீக்லி ஒவ் இந்தியா இதழின் கவிதைக்குப் பொறுப்பாக இருந்த Pritish Nandy  என்பவர் கீதாஞ்சலியின் கவிதைகளில் மனம்கசிந்தார். எங்காவது மனித உணர்வின் நரம்புகளைத் தொடும் என்ற நம்பிக்கையில் முழுப் பக்கத்தில் கீதாஞ்சலியின் கவிதைகளைப் பிரசுரித்தார். ஆயிரக்கணக்கான வாசகர்களின் நரம்புகளை அக்கவிதைகள் வருடியிருந்தன என்பதை வந்துசேர்ந்த வாசகர் கடிதங்களின் தொகை பிரதிபலித்தன. கீதாஞ்சலியின் கவிதைகள் பற்றி அவர் கூறுவது கவனத்திற்குரியது. ‘கீதாஞ்சலியின் கவிதைகள் கவிதை என்ற வரம்பிற்கு அமைவாக இருக்கவில்லையென கருதக்கூடும். கீதாஞ்சலி கவிதை மரபைப் பின்பற்றவேண்டுமா என்பது ஒரு கேள்வியே அல்ல. அவளது எளிமையான சொற்பிரயோகமே என்னைக் கவர்கிறது. நேர்மையுடனும் துயரத்துடனும் அவள் தனது கடவுளை நோக்கி எழுப்பும் கேள்விகள்தான் பரவலான வாசக மனங்களைத் தொட்டது. அதுவே அவரின் கவிதையின் அழகு’. என்கிறார்.

மேலும் அவர் ‘பதில் கிடைக்கமுடியாத துயர்மிகுந்த அநேக கேள்விகளைக் கீதாஞ்சலி தன் கவிதைகள் மூலம் எழுப்பியுள்ளார். சிலவேளைகளில் உங்களிடமோ என்னிடமோ அதற்கான பதில் இல்லை. ஏன் இந்த அழகான குழந்தைப்பருவம் திடீரென்று தடுமாறிச் சரிந்துபோனது. எவரையுமே காயப்படுத்தாத ஒருவர்மீது ஏன் இந்தத் தாங்கமுடியாத துயரம் நிகழ்ந்தது. இந்த முழுமையற்ற உலகில் துயரம்தான் இறுதி விதியா  என்ற அவரின் கேள்வியை நாமும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்போது பிரிட்டிஸ் நந்தியின் முன்னுள்ள பிரச்சினை, மிகுதிக் கவிதைகளை என்ன செய்வது என்பதும் யார் இவற்றையெல்லாம் நூலாக வெளியிட முன்வருவார்கள் என்ற கேள்வியும்தான்.

கல்கத்தாவில் தேயிலை வியாபாரத்தில் மிகவும் அறியப்பட்ட பெயர் Gordon Fox  ஆகும். அப்போது அவர் பம்பாயில் ஒரு விடுதியறையில் தங்கியிருந்தார். அந்தியின் வர்ணங்களை கடலலைகள் அமைதியாகப் பெற்றுக்கொண்டிருந்த மாலை வேளை, தமது விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். காற்று ஒரு கிழிந்த பத்திரிகைத் துண்டை அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தது. அது த இலஸ்றேட் வீக்லி ஒவ் இந்தியா இதழில் கீதாஞ்சலியின் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டிருந்த பத்திரிகைத் துண்டு. அந்தக் கவிதைகளில் மிகுந்த ஈர்ப்புக்கொண்ட அவர், பிரிட்டிஸ் நந்தியிடம் தொடர்புகொண்டு, கீதாஞ்சலியின் கவிதைகளைப் பற்றி விசாரித்து, அவற்றை நூலுருவாக்கும் விருப்பையும் தெரிவித்தார். அதன்பின்னர் நடைபெற்ற முயற்சிகளின் பின் கீதாஞ்சலியின் 110 கவிதைகள் அடங்கிய அவரது கவிதைத் தொகுப்பு 1982ஆம் ஆண்டு வெளியாகியது. அது படிப்பவர் உள்ளங்களைக் கரைத்துக்கொண்டிருக்கின்றன.Bruce Allsopp  தனது முன்னரையில் ‘கீதாஞ்சலியின் கவிதைகள் அழகானதும் மனதைத் தொடுவதுமானது. சில வேளைகளில் கண்கள் குளமாகியதால் வாசிப்பை நிறுத்தினேன்’ என்றார். கீதாஞ்சலியின் கவிதைகளை கண்ணீர் திரையிடாமல் வாசிப்பது என்பது சாத்தியமற்றதே.

சூரியனின் மகிமை
———————-
பொழுதும் அந்தியும்
சந்திக்கும் ஓவ்வோர் மாலை
மூழ்கும் சூரியன்
யன்னல் அருகில் நான்
மெதுவாக ஒளி கரையும்
நேரமும் நீளும்
அமைதியாய் தனித்து
எனது இதயமும்
ஆன்மாவினுள் மூழ்கும்
சூரியனின் மகிமையை
மறுபடியும்
காண்பேனோ நானறியேன்
000
………………
 
விண்ணப்பம்
 மரணமே நீ யார்
எங்கிருந்து வருகிறாய்
எங்கென்னை எடுத்துச் செல்வாய்
வழி தூரமோ
கடும் இருட்டோ
துணிவுள்ளவளாய் கோரிக்கொள்வேன்
ஆயினும் அச்சமுறுகிறேன்
மரணத்திற்கு அப்பால்
எதுவென அறியாததால்
மரணமே
சில வேளைகளில்
உன்னை எதிர்பார்க்கிறேன்
சில நேரங்களில்
வரக்கூடாதென விழைகிறேன்
நிச்சயமாய் என்னை எடுக்கத்தான் வேண்டுமெனில்
எடுத்துச் செல்வாயானால்
என்மீது இரங்குவாய்
எவராலும் காயப்படுத்தாத
துன்பப்படுத்தாத
இடத்திற்கு எடுத்துச் செல்
ஒரு விண்ணப்பம்
அன்பாயிரு
குழந்தைப் பருவத்தில் தூங்கியதுபோல்
என்னைத் தூங்கவிடு
………………..

இவ்வுலகு தூங்குகையில்
அநேக இரவுகள் விழித்திருக்கிறேன்
அழாமலிருக்கவும் முயல்கிறேன்
கருணையாயிரும் ஆண்டவரே
என்மேல் கருணையாயிரும்
காயம்பட்ட இதயத்தைக்
குணமாக்கியருளும் இறைவா
இத்துயரை நானடைய
என்ன தவறு நான் செய்தேன்?
எங்கே ஓ! எங்கே
அந்த மகிழ்வான நாட்கள் போயின
எங்கே எங்கே ஏன் இறைவா
இனிய மகிழ்வின் நண்பர் போனபின்
தபால்காரன் கொண்டுவரும்
‘உற்சாகமாக இரு’
‘விரைவில் குணமடை’
இது விநோதமானது
ஆம் இது மிக விநோதமானது
ஆயினும்
‘அன்பின் இச்சிறு குறிப்புகளின்’
உற்சாகம்
நலிவுற்ற இதயத்தின் துடிப்பை
நீடிக்க உதவுகிறதது.


நன்றி - தாய்வீடு (கனடா)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்