/* up Facebook

Jul 30, 2015

தமிழ்ப் பெண்ணுக்கு சர்வதேச அங்கீகாரம்!


தான் நடித்த முதல் திரைப்படத்துக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்த பெருமிதத்தின் சுவடு துளியும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார் காளீஸ்வரி சீனிவாசன். இவர் நாயகியாக நடித்த ‘தீபன்’ திரைப்படம், இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான ‘தங்கப் பனை’ விருது வென்றிருக்கிறது. நவீன நாடக நடிகையான காளீஸ்வரி, சென்னை ரெட்டேரியைச் சேர்ந்தவர். அப்பா, சீனிவாசன் ராணுவ வீரர். அம்மா சாந்தகுமாரி, பள்ளி ஆசிரியை. நடிப்புக்கும் சினிமாவுக்கும் தொடர்பே இல்லாத நடுத்தரக் குடும்பம்.

கல்லூரி படிப்பை முடித்ததும் காளீஸ்வரிக்கு பி.பி.ஓ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையில் வருமானம் கிடைத்ததே தவிர மனதுக்கு நிறைவில்லை. அப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், அந்த வேலையை விட்டுவிட்டு ‘தியேட்டர் ஒய்’ நாடகக் குழுவில் தொகுப்பாளினி பயிற்சியில் சேர்ந்தார். நாடகக்குழு இயக்குநர் யோக், காளீஸ்வரிக்கு நடிப்பு நன்றாக வருவதாக உற்சாகப்படுத்த, அப்படித்தான் காளீஸ்வரியின் மேடை நாடக வாழ்க்கை தொடங்கியது. அதன் பின்னர் முழுநேர நாடக நடிகையாக மாறியவர் ‘தியேட்டர் ஒய்’ மட்டுமின்றி, கோவில்பட்டி முருகபூபதியின் ‘மணல்மகுடி’ புதுச்சேரி ‘இந்தியநாஷ்ட்ரம்’ போன்றவற்றிலும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதை சொல்லியாகவும் இருக்கிறார்.விழிப்புணர்வு வீதி நாடகங்களில் நடிப்பதும் காளீஸ்வரியின் விருப்பங்களில் ஒன்று.

“கால்செண்டர்ல வேலை பார்த்த எனக்கு, வேறொரு உலகத்தை இந்த நாடகத் துறை அறிமுகப்படுத்தியது. இது முற்றிலும் வேறுபட்ட களம். இங்கு ஆடம்பர வாழ்க்கைக்கு வாய்ப்பில்லை என்றாலும் மனநிறைவுக்குக் குறைவில்லை. நான் இந்தத் துறைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. நாடகங்கள் எனக்குச் சோறு போட்டதுடன், ‘தீபன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தன” என்கிறார் காளீஸ்வரி.

போரில் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து புலம்பெயரும் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகிறது ‘தீபன்’ திரைப்படம்.

“இந்தப் படத்தில் யாழினி என்ற பெண்ணாக நடித்தபோது, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வலியை உணர்ந்தேன். கான் திரைப்பட விழாவில் படம் முடிந்ததும் அனைவரும் நெகிழ்ச்சியில் எழுந்து நின்று கைதட்டி எங்கள் குழுவைப் பாரட்டியதை மறக்க முடியாது. ஃபிரெஞ்ச் மொழியில் இயக்குநர் ஜாக் ஒதியார்து உருவாக்கிய இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றவருக்குத் தன் அம்மா சாந்தகுமாரியிடம் இருந்து பாராட்டு பெற்றது மிகப் பெரிய அங்கீகாரம் என்கிறார்.

“பொதுவாக நடிப்புத் தொழிலுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பெரும்பாலான பெற்றோர் அனுமதிப்பதில்லை. நல்ல வேலையில் இருந்து வெளியே வந்து, அதுவும் மேடை நாடகத்தில் நடிக்கப் போகிறேன் என்றதும் வழக்கம் போல் என்னுடைய வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறித்தான் நடித்து வந்தேன். நான் இந்தத் துறைக்கு வந்த பிறகு ஒருமுறைகூட என் தொழில் குறித்துப் பேசாத என் அம்மா ‘தீபன்’ படத்துக்குக் கிடைத்த விருதுக்குப் பிறகு வாழ்த்தினார்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காளீஸ்வரி. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் மாரி கதாபாத்திரத்தில் நடித்த வினோத், இவரது கணவர். இருவருமே நாடகத் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் காளீஸ்வரியின் கலைப் பயணம் தடங்கலின்றித் தொடர்கிறது.

நன்றி - திஇந்து
...மேலும்

Jul 29, 2015

மரத்தை நேசிக்கும் பெண்கள்


நம் ஊர்களில் பெண்குழந்தை பிறந்தால் அதை கொஞ்சம் கவலையுடந்தான் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் ராஜஸ்தானத்தின் பிப்ளான்ட்ரி கிராமத்தினர் அப்படி இல்லை. பெண் குழந்தைகளைக் கொண்டாடுகிறார்கள். ஒரு பெண் குந்தை பிறந்தால் அதனை சிறப்பிக்கும் வகையில் 111 மரக்கன்றுகளை நட்டு அதனை பாரமரித்து வளர்ப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் கோட்டைகளும்தான். ஆனால் அந்த மாநிலத்தில் உள்ள 'பிப்ளான்ட்ரி' (Piplantri) கிராம மக்கள் இதனை மாற்றியுள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்பு எல்லா கிராமங்களைப் போலவே பிப்ளான்ட்ரியும் இருந்தது. ஆனால் தற்போது அந்த கிராமத்தின் பெயர் நாடெங்கும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. உலக மீடியா பார்வையும் பிப்ளான்ட்ரி கிராமத்தின் மீது விழுந்திருக்கிறது. அதற்கு காரணம்... பெண்களை தெய்வமாக பாவித்து கொண்டிருக்கும் அந்த கிராம மக்கள்தான். பெண் குழந்தை பிறந்ததுமே துரதிர்ஷ்டம் என்று நினைக்காமல், சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். மாமரம், எலுமிச்சை, நெல்லி போன்ற விதவிதமான மரங்களை நடுகிறார்கள். அதுமட்டும் அல்லது கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளையும் வளர்க்கிறார்கள். அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சியாம் சுந்தர் பலிவாலின் (Shyam Sundar Paliwal) மகள் திடீரென இறந்தது விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீளவே அந்த கிராமத்தில் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணியவர் பஞ்சாயத்துக் கூட்டத்தில் கலந்து பேசி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதில், பெண் குழந்தை பிறந்ததும் மரங்களை நட்டு, வளர்க்கவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். முதலில் இதை யாரும் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒன்று இரண்டு பேர் இந்த ஐடியாவை பின்பற்ற தொடங்கியதும். கிராமத்தில் எல்லோரும் இதனை பின்பற்ற ஆரம்பித்தார்கள். மரம் நட்டால் மட்டும் போதாது, அதனை வளர்த்து பெரியதாகும் வரை பொறுப்பாக கவனித்துக்கொள்ளவும் வேண்டும். அதோடு பெண் குழந்தை பிறந்த குடும்பத்துக்கு கிராம பஞ்சாயத்து 10,000 ரூபாயும் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் பங்காக 21,000 ரூபாயும் வசூலித்து மொத்தம் 31,000 ரூபாயை அந்த பெண் குழந்தைப் பெயரில் வங்கியில் பிக்ஸட் டிபாசிட் செய்ய வேண்டும். 20 வருடங்கள் கழித்து அந்த பிக்சட் பணம் வட்டியுடன் சேர்த்து அந்த பெண்ணுக்குக் கிடைக்கும். அது அந்த பெண்ணின் மேற்படிப்பு, மற்றும் கல்யாணம் போன்ற செலவுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதற்காகத்தான் இந்த திட்டம். அதனால் பெண் குழந்தை பிறந்து விட்டதே என்ற கவலை யாருக்கும் இல்லை.

அத்தோடு பிப்ளான்ட்ரி மக்கள் நிற்கவில்லை பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடத்தக்கூடாது, படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது, தாங்கள் நட்டுவைத்த மரங்களை பராமரிக்கவேண்டும் என்ற உறுதிமொழியை எழுத்துப் பூர்வமாக கிராம பஞ்சாயத்து எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். இதை மீறுபவர்களுக்கு மேற்கொண்ட சலுகைகள் கிடையாது. பெண் குழந்தை பெற்றால் மட்டும் அல்ல, கிராமத்தில் யாராவது இறந்து விட்டாலும் 11 மரங்களை நடவேண்டும். இந்த கிராமத்துப் பெண்கள் 'ரக்‌ஷாபந்தன்' தினத்தன்று தாங்கள் வளர்த்த மரங்களைச் சகோதரர்களாக பாவித்து மரங்களுக்கு ராக்கி காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பெண் குழந்தைகள் மற்றும் மரங்களைக் காப்பாற்ற பலிவால் போட்ட திட்டம், பிப்ளான்ட்ரி கிராமத்தை அடியோடு மாற்றிவிட்டது. அந்தக் கிராமத்தின் பிரதான தொழில் மார்பிள் பாறைகளை வெட்டி எடுப்பது. அளவுக்கு மிஞ்சி மார்பிள் பாறைகளை வெட்டி எடுத்ததால் சுற்றுச் சுழல் பாதிப்பு அடைந்ததோடு, குடிக்க தண்ணீருக்கும் கஷ்டமாகிவிட்ட நேரத்தில்தான் பலிவால் எடுத்த இந்த நல்ல முடிவால் தற்போது அந்த கிராமம் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. தண்ணீருக்கும் பஞ்சமில்லை. இந்த சில வருடங்களில் இரண்டரை லட்சம் மரங்களை நட்டிருக்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு முற்றிலும் நீங்கியதோடு, பழ மரங்கள், மூலிகைச் செடிகள் நட்டதால் கிராமத்துக்கு வருமானமும் இரட்டிப்பானது. இப்போது ஊரில் 24 மணி நேர மின்சாரம், சுத்தமான குடிநீர், தெருவிளக்குகள், மருத்துவமணை, பள்ளிக்கூடங்கள் என அந்த கிராமமே செழிப்பாக இருக்கிறது.

அதன் காரணமாக 'நிர்மல் ஆதர்ஸ் கிராமம்' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது. இங்கு மதுவும் தடை செய்யப்பட்டுள்ளது.
-என்.மல்லிகார்ஜுனா

நன்றி - பெண்கள் முகநூலிலிருந்து
...மேலும்

”முடிவுறாத ஒரு போர்: சிறிலங்காவில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும்”- அம்பலப்படுத்தும் யஸ்மின் சூகா


தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகாவின் தலைமையிலான சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பு, சிறிலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்த அறிக்கை ஒன்றை இந்த வாரம் வெளியிடவுள்ளது.

”முடிவுறாத ஒரு போர்: சிறிலங்காவில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும்” (An Unfinished War: Torture and Sexual Violence in Sri Lanka)  என்ற தலைப்பில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

”இன்னமும் முடிவுறாத போர் சித்திரவதை மற்றும் வன்முறைகளில் இருந்து சிறிலங்காவில் தப்பியோர்- 2009 – 2015” என்ற தலைப்பில் ஏற்கனவே இந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகவே புதிய அறிக்கை அமையவுள்ளது.

இந்த அறிக்கை போருக்குப் பிந்திய 180 சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.

இவற்றில் 115 உயிர் தப்பியவர்களின் அல்லது சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 100 வாக்குமூலங்கள் வெள்ளை வான் கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் பெறப்பட்டதாகும்.

இவற்றில், எட்டு சித்திரவதை மற்றும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள், அண்மையில் – ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், இடம்பெற்றவையாகும். மேலும் 14 சம்பவங்கள் 2014ஆம் ஆண்டில் இடம்பெற்றவையாகும்.

இந்த அறிக்கையைத் தயாரித்துள்ள  சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்புக்குத் தலைமை தாங்கும், யஸ்மின் சூகா தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு மனித உரிமை சட்ட நிபுணராவார்.

இவர், 2010ஆம் ஆண்டில் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி பதிவு
...மேலும்

Jul 28, 2015

சிகரம் தொட்ட செரீனா!

டென்னிஸ் வரலாற்றின் தலைசிறந்த வீராங்கனையாகக் கருதப்படும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிப் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார். அமெரிக்காவின் சேகினாவில் ரிச்சர்ட் வில்லியம்ஸ் -ஒராசீன் பிரைஸ் தம்பதியின் இளைய மகளாகப் பிறந்த செரீனாவுக்கு மூன்று வயதிலேயே டென்னிஸ் மீது காதல். அப்போதே தொடங்கியது அவரது டென்னிஸ் பயணம். ஆரம்பத்தில் பெற்றோர் மூலமாக டென்னிஸ் கற்றுக்கொண்ட செரீனா, ஒன்பது வயதில் டென்னிஸ் அகாடமிக்குச் சென்று தன் அக்கா வீனஸ் வில்லியம்ஸுடன் முறையான பயிற்சியில் ஈடுபட்டார்.
 
தடைபோட்ட இன பாகுபாடு
ஒரே ஆண்டில் ஜூனியர் டென்னிஸில் வில்லியம்ஸ் சகோதரிகள் அசைக்க முடியாதவர்களாக உருவெடுத்ததை வெள்ளை யர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெள்ளை டென்னிஸ் வீரர்களின் பெற்றோர்கள், வில்லியம்ஸ் சகோதரிகளை இனப் பாகுபாட்டுடன் குறைத்துப் பேசியபோது அதைத் தாங்க முடியாமல் துடித்தார் அவர்களின் தந்தை ரிச்சர்ட். அதைத் தொடர்ந்து தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வீனஸ்-செரீனா சகோதரிகளை ரிச்சர்ட் அனுமதிக்கவில்லை. அந்தத் தருணத்தில் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் 49 ஆட்டங்களில் ஆடியிருந்த செரீனா 46-ல் வெற்றி கண்டிருந்தார். 10 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். பின்னர் டென்னிஸ் அகாடமியிலிருந்தும் வெளியேறினர். ஆனால் டென்னிஸ் விளையாடுவதை மட்டும் நிறுத்தவில்லை. தொடர்ந்து தந்தையிடம் பயிற்சி பெற்ற செரீனா, 2000-ல் மீண்டும் ஜூனியர் போட்டியில் கலக்க ஆரம்பித்தார். இதன் பிறகு அவர் இனரீதியாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், டென்னிஸில் மட்டும் ஏறுமுகத்தையே பார்த்தார்.
 
வெற்றியின் ஏறுமுகம்
கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த செரீனா, முதல்முறையாக 2002-ல் முதலிடத்துக்கு முன்னேறினார். 2013-ல் 6-வது முறையாக முதலிடத்தைப் பிடித்தபோது, டென்னிஸ் வரலாற்றில் முதலிடத்தைப் பிடித்த மூத்த வீராங்கனை என்ற பெருமையும் அவர் வசமானது. ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், டபிள்யூ.டி.ஏ. டூர் சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் ஆகியவற்றின் தற்போதைய நடப்பு சாம்பியனாக வலம் வந்துகொண்டிருக்கும் செரீனாவை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளும், அவர்களுடைய பயிற்சியாளர்களும்! தற்போது விளையாடிவரும் ஆண், பெண் டென்னிஸ் நட்சத்திரங்களில் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஒற்றையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகியவற்றில் அதிகப் பட்டங்கள் வென்றவர் செரீனாதான். ஒற்றையர் பிரிவில் 21, இரட்டையர் பிரிவில் 13, கலப்பு இரட்டையர் பிரிவில் 2 என மொத்தம் 36 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் இன்று செரீனாவின் வசமிருக்கின்றன.
 
சாதனைகளின் நாயகி
ஓபன் எராவில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மூத்த வீராங்கனை (33 வயது 289 நாட்கள்) என்ற சாதனைக்குரியவரான செரீனா, தொடர்ச்சியாக 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும் 2-வது முறையாக வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன், இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் வெற்றி கண்டிருக்கும் செரீனா, இதற்கு முன்னர் 2002-03 காலகட்டத்தில் இதேபோன்று தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் வென்றிருந்தார். இந்தச் சாதனையை செய்த 5-வது வீராங்கனை செரீனா.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் தற்போது 3-வது இடத்தில் உள்ளார் செரீனா. ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் (24) முதலிடத்திலும், ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் (22) 2-வது இடத்திலும் உள்ளனர். ஓபன் எராவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் ஸ்டெபி கிராஃபுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபனில் வெல்லும் பட்சத்தில் 1988-க்குப் பிறகு (ஸ்டெபி கிராஃப்) காலண்டர் கிராண்ட் ஸ்லாம் (ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெல்வது) வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை செரீனா பெறுவார்.

4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 3-ல் குறைந்தபட்சம் 6 பட்டங்களை வென்ற ஒரே நபர் செரீனாதான். இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இதுவரை தோற்றதே கிடையாது. ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கத்தையும், இரட்டையர் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இதன் மூலம் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் ‘கேரியர் கோல்டன் ஸ்லாம்’ வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். ‘கேரியர் கோல்டன் ஸ்லாம்’ என்பது 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் சாம்பியனாவதாகும். உலகின் 8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. டூர் சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் இதுவரை 5 முறை சாம்பியனாகியிருக்கிறார்.
 
மறுக்கப்படும் அங்கீகாரம்
செரீனா இன்று மகளிர் டென்னிஸ் உலகின் மகத்தான வீராங்கனையாகத் திகழ்ந்தாலும், அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. செரீனா கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இன்றும் அவரது சாதனையை அங்கீகரிக்க மறுக்கிறது வெள்ளையர் ஆதிக்கம் மிகுந்த டென்னிஸ் உலகம். இனரீதியாக மட்டுமல்ல, பாலினரீதியாகக்கூட அவர் மீது விமர்சனக் கணைகள் வீசப்பட்டன. செரீனாவின் வெற்றியைச் சகிக்க முடியாதவர்கள், அவர் ஆண் போல இருக்கிறார், பெண்ணே அல்ல என்று ஆரம்பித்து எத்தனையோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுபோன்ற மனரீதியான தாக்குதல்கள் செரீனாவை வீழ்த்திவிடும் என்று நினைத்தார்கள். அவர் பலமுறை ஊக்கமருந்து சோதனைக்கும், பாலினச் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.

மேற்கத்திய ஊடகங்கள்கூட இனரீதியான பாகுபாட்டோடு அவரை விமர்சிப்பது இன்றும் தொடர்கிறது. விம்பிள்டன் அரையிறுதியில்கூட மரியா ஷரபோவாவுடன் அவர் மோதியபோது, ‘செரீனா உடல் ரீதியாகப் பலம் வாய்ந்தவராக இருக்கலாம். ஆனால் வெள்ளை அழகியான மரியா ஷரபோவாவின் அழகுடன் போட்டியிட முடியாது’ என பிரிட்டிஷ் ஊடகம் கேலி செய்தது. அவரை வீழ்த்த எத்தனையோ சதிகள் ஏவிவிடப்பட்டபோதும் அவற்றையெல்லாம் வீழ்த்தி அசைக்க முடியாத வீராங்கனையாக இருக்கும் செரீனா, இன்று தனது கருப்பினத்துக்கே பெருமையாகத் திகழ்கிறார். 

நன்றி - தஹிந்து 
...மேலும்

Jul 27, 2015

இந்தியாவின் கவுரவம் மகன்களும்தான்!

பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ‘இந்தியாவின் மகள்கள்’ குறித்துப் பேசிவந்திருக்கிறார் மோடி. இதன் சமீபத்தியத் தொடர்ச்சியாக ‘மகள்களுடன் செல்ஃபி’ என்ற புதுமையான யோசனையை அவர் முன்வைத்திருக்கிறார். இது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால், மோடி உட்படப் பலரும் பெண்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவது தந்தைவழிச் சமூகத்தின் ஆதிக்கப் பார்வையை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. கடந்த சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “சகோதர சகோதரிகளே, நாமெல்லாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்த வெளியில் மலம்கழிப்பது குறித்து நமக்கு எப்போதாவது வருத்தம் ஏற்பட்டிருக்கிறதா? நமது தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியம் காப்பதற்கு நமது வீட்டிலே கழிப்பறைகள் கட்டுவதற்கு நம்மால் ஏற்பாடுகள் செய்துகொள்ள முடியாதா?” என்று கேட்டது நம் நெஞ்சை உலுக்குவதாகத்தான் இருக்கிறது. ஆனால், இதற்கிடையில் இன்னொரு கேள்வி நம் மனதில் எழுகிறது. நமது கண்ணியம், கவுரவம் எல்லாம் நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் போகிறது என்றால், நம் சகோதரர்களும் தந்தையர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதாலும் சிறுநீர் கழிப்பதாலும் போகாதா?
 
எதனுடைய நீட்சி?
பெண் நம் உடைமை, நம் குடும்பத்தின் சொத்து, பாரம்பரியத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பவள் என்று சமூகத்திடையே நிலைபெற்றிருக்கும், மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல விஷயம் போன்று தெரியும், கருத்தின் நீட்சிதான் கழிப்பறை விஷயத்திலும் தொனிக்கிறது. தெருவோரங்களில் எந்தக் கூச்சநாச்சமும் இல்லாமல் சிறுநீர் கழிக்கும் ஆண்கள், அவர்கள் அப்படிச் சிறுநீர் கழிக்கும்போது அவர்களைக் கடந்துசெல்லும் பெண்களின் கண்ணியத்தையும் தங்கள் கண்ணியத்தையும் ஒருசேர அவமதிக்கிறார்களே, அது எந்த நாகரிகத்தின் எச்சம்? பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலையினர் போன்றோரெல்லாம் அதிக அளவில் சமூகப் புறக்கணிப்புக் குள்ளாக்கப்படுபவர்கள் என்பதால் அவர்கள் விஷயத்தில் கூடுதலாக அக்கறை காட்டுவது சமூகத்தின் கடமை. ஆனால், அந்த அக்கறையும் ஆதிக்கத்தின் போக்கை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
 
ஆணுக்குக் கண்ணியம் தேவையில்லையா?
கழிப்பறையின் அவசியம் தொடர்பாக வரும் விளம்பரங்கள், வாசகங்கள் போன்றவையெல்லாம் பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் விஷயத்தையே முன்னிறுத்துகின்றன. இதன் விதை குழந்தைப் பருவத்திலேயே வீடுகளில் விதைக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளை அம்மணமாக இருக்க விடுவதும் பெண் குழந்தைகளுக்கு உள்ளாடை, அரசிலை போன்றவற்றைப் போட்டுவிடுவதும் வழக்கம். இதன் காரணமாக, ஆண் குழந்தை தனது அந்தரங்க உறுப்புகளை வெளியில் காட்டலாம் என்ற ஒருவித ஆதிக்க விதையை விதைத்துவிடுகிறோம். பெண் குழந்தைகளோ, பொத்திப்பொத்தி வைக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்! ‘ஆம்பள தடிமாடு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகலாம்’ என்ற கருத்து மிகவும் ஆரம்பத்திலேயே இரண்டு பாலினரிடமும் ஊன்றிவிடுகிறது. இது அப்படியே நீண்டுகொண்டுவந்து தெருவில் சிறுநீர் கழிக்கும் மனப்பான்மையில் கொண்டுவந்து விடுகிறது. இது தொடர்பாக, ‘தி வையர்’ என்ற இணைய இதழில் முக்கியமான கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டுரை, கழிப்பறை விவகாரத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நிலவும், பெண்கள் முகத்தை மூடும் வழக்கத்தைக் குறித்தும் அலசுகிறது. கழிப்பறை தொடர்பான அக்கறைகள் பெரும்பாலும் ஆணாதிக்கப் போக்கை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன என்பதை அந்தக் கட்டுரை துலக்கமாக நிறுவுகிறது.

கழிப்பறை விழிப்புணர்வு தொடர்பாக வித்யா பாலன் தோன்றும் அரசு விளம்பரங்களில் ‘முகத்தை மூடிக்கிறதுல மட்டும் இல்ல கவுரவம்…’ என்று பெண்களைப் பார்த்தே பேசுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் 98% பெண்களிடம் முகத்தை மூடிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. ஆனால், திறந்தவெளியில் மலம் கழிப்போர் எண்ணிக்கையும் ராஜஸ்தானில்தான் அதிகம். இதை மனதில் வைத்துக்கொண்டு ராஜஸ்தானில் வெளியிடப்படும் விளம்பரங்கள் ‘முகத்தை மூடுவதில் அக்கறை காட்டும் பெண்கள் திறந்த வெளியில் மட்டும் மலம் கழிக்கிறார்களே?’ என்ற தொனியில் கேள்வி எழுப்புகின்றன. முகத்தை மூடிக்கொண்டு கையில் சொம்புடன் செல்லும் தனது தாயைப் பார்த்து ஒரு சிறுமி இதே போன்ற தொனியில் கேள்வி கேட்கும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ராஜஸ்தானில் நிறைய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘மகள்களும் மருமகள்களும் வெளியில் செல்லக் கூடாது. உங்கள் வீட்டுக்குள் கழிப்பறை கட்டுங்கள்’ என்ற வாசகம் இடம்பெறும் விளம்பரமும் அதிகம் காட்சிப்படுத்தப்படுகிறது. இதற்கு

மாறாக உத்தரப் பிரதேசத்தில் சில கிராமங்களில் ‘துணிச்சல் மிகுந்த திருவாளர் சாகசக்காரரே, புதரை விட்டுவிட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துங்கள்’ என்ற விழிப்புணர்வு வாசகம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதை ராஜஸ்தானும் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று ‘தி வையர்’ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்புக்காகவும் பெண்களின் கண்ணியத்துக்காகவும் தானே இப்படியெல்லாம் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்படுகிறது; இதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். பாதுகாப்பு, கண்ணியம் ஆகிய நோக்கங்களில் தவறில்லைதான். ஆனால், இதைச் சமன்படுத்துவது போன்று ஆண்கள் கண்ணியமாக இருப்பது குறித்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டு மல்லவா? ஆண்கள் கண்ணியமாக இருக்கும் ஒரு சமூகத்தில்தான் பெண்களும் தங்கள் கண்ணியத்துடன் இருப்பார்கள். இந்தச் செய்தியை சமூகத்தின் மனதில் விதைக்கும்படி பிரச்சாரம் மேற்கொள்வது மிகவும் முக்கியம். 

நன்றி - தஹிந்து
...மேலும்

Jul 26, 2015

எங்களின் சிறகுகள் எமக்குரியவையே! - லறீனா அப்துல் ஹக்அறிமுகம்
இஸ்லாம் என்றதும் அனேகருக்கு நிiனைவில் எழுவது, பெண்ணடிமைத்தனம் தான். இது தொடர்பில் இஸ்லாம் மதம் காலங்காலமாகப் பல்வேறு காரசாரமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருவதை நாம் அறிவோம். குறிப்பாக, இன்று உலகின் பல பாகங்களிலும் மலாலா யூஸுஃபி எனும் முஸ்லிம் சிறுமியை முன்வைத்து, முஸ்லிம் பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பது, மதமா? மத அடிப்படைவாதிகளா என்ற கேள்வி மிக முக்கியமானது. அந்த வகையில், இக்கட்டுரை இஸ்லாத்தில் பெண்களின் கல்வி உரிமை என்ற அம்சம் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டம், நடைமுறையில் உள்ள இடைவெளிகள், அவற்றுக்கான காரணங்கள் என்பன பற்றிய சிறு அலசலாகவே அமைகின்றது. 

பெண்களின் கல்வி உரிமை
இஸ்லாம், 'கல்வியைத் தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண் - பெண் இருபாலார் மீதும் கடமையாகும்' என்று கூறுகின்றது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பெரும் கல்விமான்களாய், ஆசிரியைகளாய் அமைந்த பெண் கல்விமான்கள் பலர் இருந்துவந்துள்ளனர். முஹம்மது நபி அவர்களின் மனைவியர், அவர் காலத்தில் வாழ்ந்த பெண்கள் என கல்வியிலும் மார்க்கப் பணிகளிலும் முஸ்லிம் பெண்கள் முன்னணியில் இருந்துள்ளனர். புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் இமாம் 'ஷாஃபிஈ' யின் ஆசிரியர்களில் ஒரு பெண்மணியும் இருந்துள்ளார். அவ்வாறே, ஆயிஷh அப்துர் றஹ்மான் என்ற பெண்மணி அல்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதி உள்ளார். நவீன இஸ்லாமிய அறிஞர்களான அல்லாமா யூஸூப் அல் கர்ளாவி, ராஷpத் அல் கன்னூஷP ஆகியோரின் மகள்மார் முறையே பல்கலைக்கழகப் பேராசிரியையாய், கலாநிதிப்பட்டம் பெற்றவர்களாய் சமூகக் களத்தில் முன்னோடி முஸ்லிம் பெண்களாய் சமகாலத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஆயிரக்கணக்கான உதாரணங்களை இஸ்லாமிய வரலாறு கொண்டிருக்கின்றது. 

இன்று நம் நாட்டில் ஒப்பீட்டளவிலே முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிகளவு கல்வி கற்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவிலான பெண்கள் உயர்கல்வியைப் பெற்று, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதேநேரம், பெண்களில் மற்றொரு கணிசமான பிரிவினர் உயர்கல்வியைத் தொடரக்கூடிய திறமையும் கொண்டிருந்தும், உயர் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் துர்ப்பாக்கியமான நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இதன் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

அ) திருமண வயது தள்ளிப்போகின்றது, திருமணச் சந்தையில் உயர் கல்வி கற்ற பெண்களுக்கு ஏற்ற வரன்களைத் தேடுவது சிரமம் எனும் பெற்றோரின் அச்சம்

ஆ) கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று வேறுபடுத்தி, கல்வி கற்பது தொடர்பான இஸ்லாத்தின் கூற்றை சில 'முல்லாக்கள்' மார்க்கக் கல்வியையே அது குறிக்கின்றது என்றும் திரிபுபடுத்தி மக்களிடம் பரப்பி வருகின்றமை   

இ) ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில் உயர் கல்வி கற்ற பெண்கள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ள எதிர்மறையான கருத்துநிலையும் மத அடிப்படைவாதிகளின் மனதில் உள்ள தாழ்வுச்சிக்கலும், வீடுகளில் தமக்கான சொகுசுகள் மற்றும் சௌகரியங்கள் பறிபோய்விடுமே என்ற அச்சவுணர்வும் 

ஈ) பெண்களில் ஒருசாராரிடம் இதுதொடர்பில் காணப்படும் ஆர்வமின்மையும் அசட்டை மனப்பாங்கும் 

உ) திருமணத்தின் பின் உயர்கல்வி தடைபடல்
இக்காரணங்கள் தனித்தோ ஒன்றிணைந்தோ முஸ்லிம் பெண்களின் உயர் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாகத் திருமண வாழ்வில் இணையும் பெண்களில் அனேகருக்கு உயர் கல்வி வாய்ப்பு சாத்தியப்படுவதில்லை. வேலைப்பளு, கணவனும் மனைவியும் வீட்டுப் பெறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு இன்மை, ஆண்கள் வீட்டுவேலைகள் செய்வது தொடர்பில் பாரம்பரியமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள சமூக எதிர் மனநிலை, பெண்களின் உயர்கல்வி யினடியாய் அவர்களின் சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பது தொடர்பிலான ஆர்வமோ விருப்பமோ இன்மை முதலான இன்னோரன்ன அம்சங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பெண்களில் அனேகர்; இது பற்றிய விழிப்புணர்வு மழுங்கடிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 'சிறந்த தாய்மார்களை உருவாக்குதல்' என்ற சுலோகத்துடன் (அழவழ) நடத்தப்படும் முஸ்லிம் பெண்கள் மத்ரஸாக்களின் மறைமுகப் பங்கும் இதனோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.   

முடிவுரை
முஸ்லிம் பெண்களின் உயர் கல்வி தொடர்பான இப்பிரச்சினை தீர்க்கப்படுவதில் உள்ள மிக அடிப்படையான அம்சம் சமூக மனநிலை மாற்றமே ஆகும். இந்த சமூக மனப்பாங்கை மாற்றுவதில் பெண்களின் வகிபாகம் (role) மிக முக்கியமானதாகும். 

அந்தவகையில், 'இஸ்லாத்தின் போதனைகளில் பெண்ணின் கல்வி உரிமைக்கு முழு உத்தரவாதம் இருந்தது, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பெண்ணின் கல்வி நிலை மிகுந்த முன்னேற்றத்துடன் காணப்பட்டது' என்ற அம்சத்தை சமூகத்தில் நிலைநிறுத்தும் வகையிலான சுயதேடலையும் அதனடியான தெளிவான அறிவையும் அதிகமதிகம் வளர்த்துக் கொள்வதன் மூலமும் அதனை மிகுந்த அழுத்தத்தோடு சமூகத்தில் பரப்பி விழிப்புணர்வூட்டுவதன் மூலமுமே முஸ்லிம் பெண்கள் இப்பிரச்சினையை மிக வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடியதாய் இருக்கும். ஏனென்றால், மத அடிப்படைவாதிகள் இவை பற்றிய கதையாடலுக்குப் பெரும்பாலும் முக்கியத்துவமளிப்பதில்லை என்பதோடு, அவற்றை இயன்றளவு இருட்டடிப்புச் செய்வதிலும் அதிக முனைப்போடு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பெண்கள், அவர்களின் உரிமைகள் குறித்து மேலெழும் கதையாடல்களை (Discourse), 'இஸ்லாத்துக்கு எதிரான மேலைத்தேய மூளைச் சலவை சிந்தனை' என்ற ரீதியில் முத்திரை (brand) குத்தி, எதிர்மறையான விம்பங்களைக் (image) கட்டியெழுப்புவதன் மூலம் ஒருவகையான சிந்தனை மழுங்கடிப்பை 'முல்லாக்கள்' ஊக்குவிக்கின்றனர். 
இந்த நிலை மாறவேண்டும் எனில், முள்ளை முள்ளால் எடுப்பது போல, இஸ்லாத்தின் அடிப்படைகளையும், இஸ்லாமிய வரலாற்றையும், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பங்களிப்புகளைச் செய்து சாதனைகள் செய்துள்ள முஸ்லிம் பெண் ஆளுமைகளையும் பற்றி முஸ்லிம் பெண்கள் அதிகத் தெளிவுபெறுவதன் மூலம், இஸ்லாத்தின் பெயரால் பெண்களின் கல்வி உரிமை முதலான இன்னபிற அடிப்படை உரிமைகளை மறுதலிக்கும் மத அடிப்படைவாதிகளை மிக வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடியதாய் இருக்கும்.

இஸ்லாம் என்பது முஸ்லிம் பெண்களுக்குமானது. அதனை ஆண்களுக்கு மட்டுமானதாய்க் குறுக்கி, பெண்கள் இரண்டாம் நிலைக்குப் புறந்தள்ளப்படவோ, ஆண்களுக்குச் சாதகமான ஒருதலைப்பட்ச அம்சங்கள் மட்டும் மேலெழுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்ற திடவுறுதியோடு முஸ்லிம் பெண்கள் தம்மைத் தம்மளவிலும் சமூகக் களத்திலும் உறுதியாக நிலைநிறுத்திக்கொள்ள முன்வரல் வேண்டும். 

 நன்றி: "அவள்" சஞ்சிகை 2014, இதழ் 1
...மேலும்

Jul 25, 2015

"சும்மா இருப்பவள்" ~ லறீனா ஏ. ஹக்


சமூக அமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனக் கட்டமைப்புக்களில் குடும்பமும் ஒன்று.
என்றாலும், சாதாரணச் சமூக உளவியலில் அது ஒரு 'நிறுவனம்' என்பதான விம்பம் ஆழம் பெறவில்லை என்பதே உண்மை. சமூக, கலாசார, சமயம் சார்ந்த கருத்தியல்கள் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பம் மேலெழுந்து ஆழப் பதிந்துள்ளதன் விளைவே இதுவாகும். 

மனித உயிரி ஒரு சமூகப் பிராணி என்ற அளவில், சிறுகுழுவாக, பெருங்குழுமமாக ஒருங்கு சேர்ந்து வாழ்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், குடும்பமும் ஆணும் -பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகச் சிற்றலகாக இருக்கின்றது. 

நம்முடைய சமூக அமைப்பில் கணவன் - மனைவி- குழந்தைகள் இணைந்ததாக, சிலபோது இவர்களோடு மூத்த தலைமுறையினரையும் உள்வாங்கியதாகக் குடும்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவியாக இல்லறத்தில் இணையும் ஆணும் பெண்ணும் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு, பகிர்வு, ஒருவரையொருவர் வலுவூட்டிப் பலப்படுத்திக் கொள்ளல் முதலான இன்னோரன்ன எதிர்பார்ப்புகளோடு ஒன்றிணைகின்றனர். எனினும், இந்த எதிர்பார்ப்புகள் எந்தளவு அடையப்பெறுகின்றன, கணவன் - மனைவி ஆகிய இருவருக்கும் இந்த எதிர்பார்ப்புகளை அடைவதில் சம வாய்ப்பு கிட்டுகின்றதா, பல்வேறுபட்ட ஆற்றல்கள், ஆளுமைத் திறன்களைக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தின் பின்னர் அவற்றை மேலும் வளர்த்துத் தம்மை மேம்படுத்திக் கொள்ளத்தக்க சூழல் நிலவுகின்றதா என்பன போன்ற கேள்விகள் இங்கு மிக முக்கியமானவையாகும்.     

இன்று அறிவியலும் தொழினுட்பமும் மிகவும் வளர்ந்துவிட்டன; மனிதர்கள் மிகவும் பண்பாடடைந்து விட்டார்கள்; எல்லாவிதமான உரிமைகளிலும் சமத்துவமும் சுதந்திரமுமே மேலானவை என்பதான கோஷங்களை நாம் அடிக்கடி செவியுறுகின்றோம். பேச்சிலும் எழுத்திலும் இந்த விழுமிய சுலோகங்களை அடிக்கடி மீட்டிக் கொள்கின்றோம். என்றாலும், இன்றைய நாகரிக உலகினிலே இந்தக் கோஷங்கள் எந்தளவு தூரம் நடைமுறைக்கு வந்துள்ளன என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றோம். 

ஆண்டான் - அடிமை என்ற பண்டைய முறைமையை வெற்றி கொண்டு "எல்லோரும் இந்நாட்டு மன்னரே!" என்று முழங்கும் ஜனநாயக முறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்லிக்கொண்டாலும், அடிமை முறைமை அல்லது சற்று நாகரிகமாகச் சொல்வதானால், சக மனித உயிரி மீது மேலாதிக்கம் செலுத்தி அடக்கும், உழைப்பினைச் சுரண்டும் நடைமுறை பல்வேறு சூட்சுமமான வழிகளில் சமூக அமைப்பெங்கிலும் விரவிக் காணப்படுவதை நாம் கூர்ந்துநோக்கிக் கண்டடைய முடியும். நடைமுறையில் உள்ள குடும்ப நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதே கசப்பான உண்மை ஆகும். இதுபோன்ற பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, செ. கணேசலிங்கன் அவர்கள் தம்முடைய படைப்புக்களில் குடும்ப அமைப்பை உடைத்தல் வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்திச் சொல்வார். 

எனினும், தனிநபர்களின் கூட்டுத் தொகுதியான சமூகத்தில், அதன் உளவியலில் பால்சமத்துவம் மற்றும் வேலைப்பிரிவினை குறித்த சாதகமான மனோபாவம் வேரூன்றி இல்லாத நிலையில் குடும்ப அமைப்பைச் சிதைப்பது என்பது ஒருபோதும் ஒரு நல்ல தீர்வாக அமையப் போவதில்லை. மாறாக, அது மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்து பெண்களின் நிலையை இன்னும் மோசமானதாகவே மாற்றியமைக்கும். இதைவிட, இன்றைய குடும்ப அமைப்பானது அடிப்படையான சில மாற்றங்களை, சீர்திருத்தங்களை வேண்டி நிற்கின்றது என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடாகும். அந்த வகையில், ஒரு குடும்ப அமைப்பு தொடர்பில் எவ்வாறான மனநிலை மாற்றங்கள் தேவையாய் உள்ளன என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆணோ - பெண்ணோ மனித உயிரி என்ற அடிப்படையில் சமமானவர்களே. உடலியல் மற்றும் பண்புசார் நடத்தைகளில் சிற்சில தனித்துவமான வேறுபாடுகள் நிலவுவதை மையமாகக் கொண்டு ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ கொள்வது நாகரிக/அறிவார்ந்த சமூகத்திற்கு ஒருபோதும் ஏற்புடைய கருத்தாகாது. அவரவர் நிலையில் அவரவர் தனித்துவமானவரே என்ற புரிதல் சமூகத்தில் பரவலாக்கப்படல் வேண்டும். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பாடசாலைகள் மற்றும் கலை-இலக்கிய-ஊடகங்கள் பெரும் பங்காற்ற முடியும்.

பொதுவாக, ஆணுக்குப் புற உலகம், பெண்ணுக்கு அக உலகம் என்பதான வேறுபாடுகள் தொன்றுதொட்டு நிலவி வருகின்றமையை நாம் அறிவோம். சங்க காலத்தில் தினைப்புனங்காத்தல் முதலான பணிகளில் பெண்கள் ஈடுபட்டதான குறிப்புகள் உளவே ஆயினும், போர்க்களங்களில் நேரடிப் பங்காற்றுவோராக ஆண்களே சித்திரிக்கப்பட்டுள்ளனர். எனினும், இன்றைய உலகில் வீட்டுக்கு அப்பால் பணியிடங்களில் மட்டுமல்ல முப்படைகளிலும் போர்க்களங்களிலும் கூட பெண்களின் பங்காற்றுகை கணிசமான அளவில் உயர்ந்துள்ளமையை நாம் அறிவோம். 

இருந்த போதிலும், ஒரு வீட்டில் பெண்ணின் நிலை என்ன? அவள் அங்கே என்ன செய்கிறாள்? பொருளாதார ரீதியாக வீட்டுப் பொறுப்பைக் கணவனோடு சமமாகப் பகிர்ந்துகொள்ளும் பெண்ணிடமிருந்து அவளது வீட்டின் அன்றாடப் பணிகளைப் பகிர்ந்துகொள்ள முன்வரும், அப்படிப் பகிர்ந்துகொள்ளல் தமது கடமையே என்று இயல்பாய் உணரும் ஆண்கள் எத்தனை பேர்? வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடி குழந்தைகளை வளர்த்தல் உள்ளிட்டு சகல பணிகளையும் செய்து வரும் பெண்ணின் பணிகளுக்கான பெறுமானம் உரிய வகையில் வழங்கப்பட்டு வருகின்றதா? - இப்படியான கேள்விகளில் அனேகமானவற்றுக்கு எதிர்மறையான பதில்களே நமக்குக் கிடைக்கின்றமை கசப்பான சமூக யதார்த்தமாகும். உதாரணமாக, 

"உங்க வைஃப் என்ன பண்ணுறாங்க?" என்ற கேள்விக்கு, எந்தவிதமான தயக்கமும் இன்றி, 

"ஒண்ணும் பண்ணுறதில்ல, வீட்டுல சும்மா தான் இருக்கா"

என்று சர்வ சாதாரணமான பதிலை நாம் பலமுறை எதிர்கொண்டு கடந்திருப்போம். ஒரு பெண் ஒரு நாளில் சுமார் 15 மணித்தியாலங்கள் உழைப்பைச் செலுத்தித் தனது அன்றாடப் பணிகளை நிறைவு செய்தும், “சும்மா இருப்ப”தாகவே கருதப்பட்டு வருகிறாள். இதற்கான காரணம் என்ன? ஒரு வீட்டில் பெண்ணின் பணிகள் “பெறுமானம்” உள்ளவை என்ற விழிப்புணர்வு சமூக உளவியலில் சரிவரப் பதியவே இல்லை. பணிகளுக்கு "விலை"யை அடிப்படையாக வைத்து மட்டுமே பெறுமானம் வழங்கிப் பழக்கப்பட்டுப்போன நமது "கணக்கியல்சார்பு" மனநிலை,  சேவை அடிப்படையிலான மனித உழைப்புக்கு உரிய மதிப்பளிக்கப் பயிற்றுவிக்கப்படவில்லை. 

மேலும், வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்ணுக்கு உரியது; அவற்றை அவள் செய்தே ஆகவேண்டும்; அதையிட்டு அலட்டிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்று திரும்பத் திரும்ப நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். “ஒரு நல்ல குடும்பப் பெண்” என்பது பற்றிய சட்டகம் அழிக்க முடியாத ஒரே “மாதிரி” (model)யில் உள்ளடங்கப்பட்டு விட்டது. மொழியும் கலாசாரமும் சமயமும் அதுசார்ந்த கலை இலக்கியங்களும்கூட இதனை மீளவும் மீளவும் வலியுறுத்தி, ஆண்களை விடவும் பெண்களின் ஆழ்மனதில் இக்கருத்தியலை ஊன்றிப் பதிய வைத்துள்ளன. உதாரணமாக, பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் முதலான ஊடகங்களை உற்று நோக்கினால், “ஒரு நல்ல மனைவி எப்படிப்பட்டவளாய் இருக்க வேண்டும்?” என்பது பற்றிய அறிவுறுத்தல்கள், பிரசாரங்கள், உபந்நியாசங்கள் மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருவதோடு, ஒரு குடும்பம் அமைதிப் பூங்காவாகத் திகழவும் அங்கே மகிழ்ச்சி நிலைகொள்ளவும் பெண்களே அடிப்படையாக இருக்கிறார்கள் என்பதான மாயை கட்டமைக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். படித்த பெண்களில் அனேகரும்கூட இக்கருத்துக்களைக் கொண்டிருப்பதும் வலியுறுத்துவதும் ஒரு தெளிவான முரணகையாகும். “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” முதலான அறுதப் பழசான பழமொழிகள் இன்றும் தொலைக்காட்சி சீரியல்களில் மீட்டுருவாக்கம் செய்யப்படுவது இதுபோன்ற கருத்துக்களுக்கு மேலும் வலுவூட்டி வருகின்றது.

மறுதலையாக, ஒரு நல்ல கணவனின் பண்புகள் பற்றியும், ஒரு குடும்பத்தில் அமைதியும் மகிழ்வும் நிலைகொள்ள அவனின் பங்காற்றுகை எவ்விதம் அமைதல் வேண்டும் என்பது பற்றியும் பரவலாக வலியுறுத்தப்படுவது இல்லை. இங்கே, ‘இருகரங்களும் தட்டினால்தான் ஓசை எழும்” என்ற அடிப்படை விதிகூட கருத்திற் கொள்ளப்படுவது இல்லை. ஆண் - பெண் ஆகிய இருதரப்பும் இணைந்ததே குடும்பம் எனில், அதன் அமைதியில் மகிழ்வில் இருதரப்பினருமே சமபங்கேற்பாளர்கள் என்ற அடிப்படை உண்மை இங்கே இருட்டடிப்புச் செய்யப்படுவதைக் காண்கின்றோம். இது, “கல்லானாலும் கணவன் புல்லானாலும் (ஃபுல்லானாலும்) புருஷன்” என்ற பழைய வாய்ப்பாட்டுக்கே கொண்டு சேர்க்கின்றது என்பதை நம்மில் அனேகர் உணர்வதே இல்லை. கணவன் எப்படியானவனாய் இருந்தபோதிலும் அதனை எப்படியோ சமாளித்துச் சகித்து குடும்பத்தில் அமைதியையும் மகிழ்வையும் நிலைநாட்டுவது பெண்ணின் பொறுப்பு என்று “சுமை” ஒருதலையானதாக விதிக்கப்படுகின்றது. அவ்வாறே, குழந்தைகளின் கல்வி மற்றும் பிற சாதனைகளின்போது தந்தையர் போற்றப்படுவதும், அத்துறைகளில் தோல்வியுறும்போது அல்லது வீழ்ச்சியுறும்போது அதன் காரணகர்த்தாவாகத் தாய்மார் தூற்றப்படுவதும் வெகு சகஜமான சமூக நடைமுறையாக வழங்கி வருகின்றன. இது மிகத் தெளிவான அநீதியாகும் என்பதோடு, விழிப்புணர்வற்ற நிலையுமாகும். இதனை மாற்றியமைப்பது என்பது மிக நீண்டதும் கடினமானதுமான ஒரு பயணம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், குடும்பம் என்பது கணவன் – மனைவி - பிள்ளைகளால் ஆனது என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் பொறுப்புகள் மற்றவரைப் பாதிக்காத வகையிலும் நியாயமான முறையிலும் பகிர்ந்தளிக்கப்படுவது பற்றிய புரிதல் பரவலாக்கபடுதல் மிக முக்கியமானதாகும்.  “இது நம்முடைய வீடு” என்பதால், “அதன் பணிகள் நம் அனைவருக்குமானது” என்ற உணர்வு குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுதல் வேண்டும். 

அவ்வாறே, ஒரு கணவன் மனைவிக்கு வழங்கும் சமத்துவம், மரியாதை, முக்கியத்துவம் என்பன அடுத்த தலைமுறைக்கான முன்மாதிரியாக அமையும் விதத்தில் வடிவமைக்கப்படல் வேண்டும். 

கணவன் – மனைவி ஆகிய இருதரப்பினதும் உள்ளார்ந்த ஆற்றல்கள், உயர் கல்வி என்பவற்றுக்குக் குடும்ப வாழ்வு ஓர் இடையூறாக அமையாமல், பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் முன்கொண்டுசெல்லப்படுவது உறுதிசெய்யப்படல் வேண்டும். இதன் மூலமே சமூகமும் நாடும் வளம்பெற முடியும். 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, ஒத்துழைப்பு, மரியாதையுணர்வின் அடியாகவே இவற்றைச் சாத்தியப்படுத்த முடியும். இவ்விடயம் தொடர்பில் இளைய தலைமுறையினர் மத்தியில் பரவலான கலந்துரையாடல்களும் விழிப்புணர்வுப் பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுதல் இன்றியமையாததாகும்.

 நன்றி: ஆக்காட்டி (மார்ச்-ஏப்ரல் 2015)
...மேலும்

Jul 24, 2015

பால்நிலை வேறுபாடுகள் - சறியா ஹாமீம்


மனித இனம் என்பதற்கு அப்பால் ஆண்-பெண் என்ற பாகுபாடு அம்மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது. காலத்திற்குக் காலம் நோக்குகைகள் வித்தியாசப்பட்டாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு பேணப்பட்டு வருகின்றது. இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுறைச் சமூகங்களில் காண முடிகிறது. இதற்கான காரணம் என்ன என நோக்குவது அறிவுபூர்வமானதாகும்.

ஒரு குழந்தை பிறந்து அது தான் பிறந்த சமூகத்திற்குரியதாக மாறுவது அவசியமானதாகும். அப்பிள்ளையை அச்சமூகத்திற்குரியதாக மாற்றுவது அதாவது சமூகமயமாக்குவது குடும்பத்தின் கடமையாகிறது. இவ்வாறான சமூகமயமாக்கல் செயற்பாட்டின் போதுதான் ஆண், பெண் நடிபங்குகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆண் நடிபங்குகள் என வரையறுத்து வழங்கப்படுபவை பெண் நடிபங்குகளாக வழங்கப்படுபவையோடு ஒப்பிடுகையில் உயர்வானவை எனக் கருதப்படுவதானது பெண்ணிலைவாதச் சிந்தனைக்கு வழிசமைத்துக் கொடுக்கிறது. ஆயினும், உலகில் எல்லாச் சமூகங்களிலும் இவ்வாறுதான் இடம்பெறுகிறது என்றும் கூறிவிட முடியாது. இவ்வாறான சமூகமயமாக்கல் இயல்புகளிடையே பண்பாட்டுக்குப் பண்பாடு காணப்படும் வேறுபாடுகளை  Margaret Mead ன் ஆரம்பகால மானிடவியல் ஆய்வுகள் விளக்குகின்றன. நியூகினிப் பழங்குடியினரான Arapesh  மக்களின் சமூகமயமாக்கலில் ஆண் பெண் இருபாலாரும் மெல்லியல்புகளுடன் வளர்க்கப்படுகின்றனர். கூட்டுவாழ்வும் உதவும் பண்பும் இயல்பாய் வழங்கப்படுகின்றன. Mundugamore  மக்களிடையே ஆண்களும் பெண்களும் வல்லியல்புகளுடன் வளர்க்கப்படுகின்றார்கள். Tschambuli பண்பாட்டில் ஆண்களைவிட பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக, ஆண்களைவிடப் பொறுப்பும் முகாமைத்துவத் திறனும் கொண்டவர்களாகச் சமூகமயப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சமூகமயமாக்கலின் ஊடாகவே ஆண்-பெண் பால்நிலை வேறுபாடுகள் புகுத்தப்படுகின்றன.

பால்நிலை பாத்திரவகைப்பாட்டுக்கான ஏற்பாடுகள் ஒரு பிள்ளை பிறந்தது முதற்கொண்டு நடைபெறுகின்றன. ஆண் உறுதியானவன், பெண் மென்மையானவள் என்ற எண்ணங்கள் பதியவைக்கப்படுகின்றன. ஆண் குழந்தையின் விளையாட்டுப் பொருட்களாக இராணுவ பொம்மைகள், வாகனங்களும் பெண் குழந்தைகளுக்குப் பாவைப் பிள்ளைகளும், சமையல் விளையாட்டுப் பாத்திரங்களும் வழங்கப்பட்டு பால்நிலை வேறுபாடுகள் தெளிவாக வரையறுத்து வழங்கப்படுகின்றன.மேலும் மனவெழுச்சிகளை வெளிப்படுத்துவதிலும் வேறுபாடுகள் வரையறுக்கப்படுகின்றன. ஆண் பிள்ளை அழக்கூடாது, கோபம் ஆணுக்குரியது என்றும் பெண்பிள்ளை பொறுமையாகவும் அதிகம் சிரிக்காமலும் இருக்க வேண்டும் என்றும் அழுகை பெண்களுக்குரியதென்றும் கருத்தேற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை அப்பிள்ளையின் வாழ்நாள் பூராகவும் தொடர்ந்துவிடுகிறது. குடும்பத்தில் தனக்கு மூத்தவரோ, இளையவரோ ஆண்களுக்குப் பணிந்து நடக்கும் பண்பை அக்குழந்தை இயல்பாகவே தன்னுள் பெற்றுக்கொள்கிறது. இதுவே பெண் அடக்குமுறையாக உருவெடுக்கிறது. பெண்ணிலைவாதம் என்ற கருத்துநிலையில் தோற்றத்திற்கு இதுவே முக்கிய அடிப்படைக் காரணமாகும்.

இத்தகைய மரபு ரீதியாக சமூகமயமாக்கல் அவர்களது வளர்ந்தோர் பருவத்தில் மீள்வலியுறுத்தப்படுகின்றது. பெண்கள் குடும்பத்திலுள்ள ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைத் தமது இயல்பாக்கிக் கொள்கின்றனர். பாடசாலைக் காலத்தில் பொறியியல் துறை ஆண்களுக்குத்தான் சரி பெண் பிள்ளைக்கு ஆசிரியர் தொழில் தான் பொருத்தம் என்ற கருத்து ஊட்டப்படுகிறது. திருமணமானபின் பெண்ணின் உரிமைகள் கணவனின் கைக்கு மாறுகிறது. கணவனின் சொற்களுக்குக் கட்டுப்படாவிடின் சமூகம் தன்னை மதிக்காது என்பதால் என்பதால் ஒரு பெண் அதற்கும் கட்டுப்பட்டு வாழ்கிறாள். இவ்விடயத்தில் எல்லா ஆண்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது சரியாகாது. எந்தவொரு விதிக்கும் விதிவிலக்கு உண்டு என்பது இதற்கும் பொருந்தும்.

பால்நிலை வேறுபாடுகளுக்கு ஆண் பெண் உயிரியல் நிலையும் காரணமா என்பது சிந்திக்கற்பாலது. ஆண் -பெண் என இரு இனம் வரும் போதே அங்கு ஏதோ வித்தியாசம் இருக்கும் என்பது தெளிவு. அண்மைக்கால ஆய்வொன்றில் பெண்களைவிட ஆண்கள் கணிதவியல் நுண்ணறிவு கூடியவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதற்காகப் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருவதுதான் பிழையானது. எல்லா ஆண்களும் நுண்ணறிவு கூடியவர்களாக இருந்துவிடுவதில்லை. கணிதத்துறையில் ஆண்களைவிடச் சிறந்து விளங்கும் மாணவிகளையும் நாம் சாதாரணமாகக் காண்கின்றோம். உயிரியல் ரீதியில் ஆண்கள் நுண்ணறிவு கூடியவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர் என ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால், பெண்களும் பிள்ளைப்பேறு எனும் ஆண்களால் முடியாத காரியத்தைச் செய்கிறார்கள்தானே! இவ்வாறு பார்த்தால் உயிரியல் ரீதியில் ஆண்களும் பெண்களும் சமமானவர்களே. ஏனெனில், ஆண்களால் முடியாத விடயத்தைப் பெண்களுக்கும் பெண்களால் முடியாத விடயத்தை ஆண்களுக்கும் கொடுத்துஇயற்கை மனித இனத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உயிரியல் ரீதியில் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற கற்பிதம் நமது சமூகம் ஏற்படுத்திக் கொண்டதேயன்றி வேறில்லை என்பதும் தெளிவாகின்றது.நமது சமூகமயமாக்கல் செயன்முறையும் இதற்கு ஏற்றாற்போல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.

பால்ரீதியான பாகுபாட்டுச் சிந்தனையை ஒழிக்க வேண்டுமாயின் அதற்கான முயற்சி ஒரு பிள்ளை பிறந்தது முதலே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் சமூகமயமாக்கல் செயன்முறையின் அமைப்பொழுங்கு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆண்களும் பெண்களும் படைப்பால் ஒரே மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கருத்தைப் பிள்ளைகளில் ஊட்டிச் செயற்படுகையில் இவ்விலக்கை அடைவது இலகுவானதாகும். 21 ஆம் நூற்றாண்டிலும் ஆதிக்கக் கருத்தியலாகக் கொள்ளப்படும் பெண்ணிலைவாதம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமாயின், இவ்வாறு செய்யப்படுவது இன்றியமையாததாகின்றது.

(நன்றி: 'துயரி' தென்கிழக்குப் பல்கலைக்கழக இதழ் -03, பெப்ரவரி-ஏப்ரல் 2003).
...மேலும்

Jul 23, 2015

பெண்களும் கருத்துவெளியும்... - அப்துல் ஹக் லறீனா


சமூக வலைதளங்களில் நமது பெண்கள் ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடுவது ஒப்பீட்டளாவில் குறைவு என்பதைக் காண்கிறோம். தேடலில் போதாமை, சமூக, அரசியல் விவகாரங்களில் ஆர்வமின்மை என்பன மட்டுமே இதற்கான காரணங்கள் அல்ல. மாறாக, நமது சமூக மனநிலையும், பொதுத் தளத்தில் பெண்களின் கருத்துக்கள் எதிர்கொள்ளப்படும் விதமும்கூட இந்த வகையான மனத்தடைக்கு ஒரு முக்கிய காரணம் தான்.

உதாரணமாக, குடும்பங்களின் ஒருங்கிணைவு சமூகமாகிறது என்ற அடிப்படையில் குடும்பம், ஆண் - பெண் உறவு, சமூகத்தில் பெண்கள் நிலை என்ற ரீதியிலான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் எழுதப்படும்போது அவை இரண்டு விதமாக எதிர்கொள்ளப் படுகின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது:

1. பொதுவான ஒரு கருத்தை எழுதும்போது, அதனை குறித்த கருத்தை எழுதும் பெண்ணோடு தொடர்புபடுத்தி, அது அப்பெண்ணின் நேரடி அனுபவம் என்ற ரீதியில் வியாக்கியானப்படுத்தியும்  குறித்த வகையில் "லேபள்"படுத்தியும் எழுதப்படும் எதிர்வினைகள்.

* "நீ பாதிக்கப்பட்டிருக்கிறாய், அதனால் தான் நீ இப்படி எழுதுகிறாய்", "நீ உன் குடும்பத்தில் உள்ள பிரச்சினைக்கு வெளியில் வடிகால் தேடுகிறாய்", "நீ மேற்கின் மூளைச் சலவைக்கு உட்பட்ட பெண்ணியவாதி" என்ற ரீதியிலான எதிர்வினைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவை ஒருவகையான மன உளைச்சலை ஏற்படுத்தி, அப்பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுவதும் உண்டு. 'இனி அவள் எழுதக்கூடாது; எழுதுவதை எப்படியேனும் நிறுத்திவிட வேண்டும்' என்ற வக்கிரமான எண்ணத்தில் விடுக்கப்படும் ஈனத்தனமான/கோழைத்தனமான தனிமனிதத் தாக்குதல் என்ற வகைக்குள் இது அடங்கும்.  

2. எழுதப்படும் கருத்தின் மையப்புள்ளியை விடுத்து, குறித்த ஒரு பதிவு சொல்ல விழையும் செய்தி, அதன் நோக்கம் என்பவற்றைப் புறந்தள்ளிவிட்டு, எங்கோ ஒரு நுனியைப் பிடித்துக்கொண்டு தொங்குவதும், அதை வைத்துக்கொண்டு மட்டந்தட்ட முனைவதுமான சில அணுகுமுறைகள். இதற்குப் பல்வேறு உதாரணங்களை முன்வைக்கலாம்:

* சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க நடைமுறைகளைக் கண்டித்து எழுதினால், முழு ஆண் சமுதாயத்தையுமே எதிர்த்து நிற்பதாகவும், எப்போதுமே ஆண்களை மட்டுமே குறைசொல்வதாகவும் எடுத்துக்கொள்ளும் அதிமேதாவித்தன முன்முடிவுகள். ஒரு பெண் வழக்கறிஞர்கூட இப்படிப் புத்திசாலித்தனமாக(?!) எடுத்துக்கொண்டு "குமுறிய"தாகக் கேள்விப்பட்டு எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். அவங்க புரிதல் அம்புட்டுத்தான் என்றால் நாம் என்னங்க பண்ண முடியும்? ;) . தவிர,  நாம் பலதரப்பட்ட விஷயங்களையும் எழுதிவரும்போதும் மூச்சுக் காட்டாத இந்தப் புண்ணியவான்கள்/புண்ணியவதிகளுக்கு, பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டிக்கும் பதிவுகள் மட்டுமே மட்டும் கண்ணை உறுத்தி, அதுதான் "எல்லாம்" என்ற விம்பத்தை உருவாக்கிக் கொள்ளும் சிலெக்டிவ் அம்னீஷியா நோய் இருக்கும் என்றால், அதற்கு நம்மிடம் எந்த மருந்தும் இல்லை.

*வெளிப்படையாகவே தமது சொந்த வாழ்வில் இடம்பெறும் நிகழ்வுகளின் அடியாக ஒரு கருத்தை வலியுறுத்த முனையும் போது, அக்கருத்தை விட்டுவிட்டு சம்பவ விபரிப்பினைக் குதர்க்கமாகக் குறைகாண்பது. "இதையெல்லாம் ஒரு பெண் பப்ளிக்கில் பேசலாமா?" என்று தொடங்கி சூஃபி சுல்தான்களாய்த் தம்மைக் காட்டிக்கொள்ள முனைவது இன்னொரு ஸ்டைல்.

எடுத்துக்காட்டாக, பிரசவம் என்பது எவ்வாறு ஒரு ஜீவ மரணப்போராட்டம் என்பதைத் தெளிவுபடுத்தி, தாய்மையைப் போற்றவேண்டியதன் அவசியத்தை அழுத்திச் சொல்லும் ஒரு பதிவில், தன்னை ஓர் ஊடகவியலாளனாய்க் கருதிக் கொண்டிருக்கும் ஒரு "புத்திஜீவி"(!?)க்கு, பதிவின் மையக் கருத்து புலப்படுவதற்குப் பதிலாக "வோட்டர் பேக்" உடைந்தது என்ற ஒரேயொரு விஷயம்தான் பூதாகரமாகவும்  பதிவினது முக்கிய புள்ளியாகவும் தெரிகின்றது, அதைத்தான் அவர் பிறரோடு, குறிப்பாகப் பெண்ணின் உறவினர்களிடம் உரையாடும்போது மையப்படுத்திப் பேச எடுத்துக்கொள்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரி அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களை வைத்துக்கொண்டு நம் பத்திரிகைகள் இயங்கினால் அவற்றின் கதி என்ன என்பதை நினைத்து ஒருகணம் புல்லரித்துப் போகவேண்டியதுதான். அதற்குமேல் அதையிட்டுச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறாக, பலமுனைத் தாக்குதல்களையும் எதிர்கொண்டு பொதுச் சமூகக் கருத்தியல் தளத்தில் தாக்குப்பிடிப்பது என்பது எல்லாப் பெண்களாலும் சாத்தியப்படுமா என்ற கேள்வி முக்கியமானது. ஆகவே, இந்த நிலையை மாற்றுவதற்கும், சமூக மனப்பாங்கைக் காத்திரமாகக் கட்டமைப்பதற்கும், உரையாடலிலும் ஜனநாயகப் பண்பிலும் நம்பிக்கை உள்ள அனைவரும் தம்மளவிலான முன்னெடுப்புகளை மேற்கொள்வது நம் எல்லோர் முன்பும் உள்ள கடமையாகும்.

எனவே, நம் சமூகத்தில் பெண், பெண்ணின் உடல், அதன் இயக்கம், அதன் இயல்புகள் என்பன பற்றிய ஆரோக்கியமான பார்வைகள் பரவலாக்கப்படல் வேண்டும்.  அவளை ஒரு சதைப் பிண்டமாக, அலங்காரப் பண்டமாக, உடைமைகொள்ளும் பண்டமாக நோக்கும் மனநிலை உள்ளார்ந்து மாறாத வரை, இந்த வகையான நெருக்கடிகளைப் பெண்கள் பொதுத்தளத்தில் எதிர்கொள்ளவே நேரும். இந்த நிலையினை மாற்றுவது தொடர்பில், மனிதநேயமும் சமூகப்பற்றும், ஜனநாயகப் பண்பும், நல்ல பண்பாடும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

நன்றி - லறீனா (முகநூலிலிருந்து)
...மேலும்

இருட்டிய அறையில் உரசப்படும் பெண்களின் உடல்கள்: சோனாகாட்சி ஒரு பெண்ணடிமை பூமி


10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை தொழில் மூலதனமாக்கி கொல்கத்தாவின் சோனாகாட்சியில் நடந்து வருகிறது பாலியல் தொழில் காடு, மலைகளில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் சிந்தனைகளில் அகப்படும், ஆலோசிக்கப்படாத ஒரு அரைவேக்காடு தீர்வு.

அது இந்த கணனி யுகத்திலும் தொடர்வதுதான் எப்படி?

சோனாகாட்சியில் பாலியல் ஊழியர்களாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் இந்த தொழிலை விரும்பி தேர்ந்தெடுத்ததாக சொல்லவில்லை.

குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் காட்டும் அக்கறையை, பாலியல் தொழிலாளர்களை மீட்பதிலும் அரசு காட்டுவது மனிதநேயமே.

சோனாகாட்சியில் சிக்கிக்கொண்ட ஒரு இளம்பெண்ணின் வார்த்தையை கேளுங்கள். ”தினமும் புதிது புதிதாக பெண்களை பிடித்து வருகின்றனர். நாங்கள் தப்பிக்க முடியாமல தவிக்கின்றோம்.

எங்களுக்கு வெளியில் மக்கள் வாழ்கிறார்கள், ஒரு உலகம் இருக்கிறது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை காரணம் எங்களை மீட்க யாருமே இல்லை”

அவர்கள் ஒவ்வொருவருக்குமே சோனாகாட்சிக்கு வருவதுக்கு காரணமாக, சினிமா சம்பவம் போன்ற பின்னணி கதையும் உண்டு.

வலுக்கட்டாயமாக விற்கப்பட்டவர்கள், வறுமையால் வேறுவழி தெரியாமல் தரகர்களின் சூழ்ச்சியில் வந்து மாட்டிக்கொண்டவர்கள். காலப்போக்கில் அந்த சூழலுக்கு தங்களை சமாதானப்படுத்திக் கொண்டாலும் காலம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்ற காயங்கள், அவர்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் தெரிகிறது.

வயிற்றுக்காக மொத்த உடலை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய அறைகளில் சுருங்கிய இவர்களது உலகம். ஒரு கூண்டுக்கிளி வாழ்க்கை.

எந்த பெண்ணுமே இந்த தொழிலை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அனுபவப்பட்ட ஒரு ஊழியர் சொல்வதிலிருந்து, தொழிலான பிறகு பாலியல் கூட சித்ரவதை என்பது தெரிகிறது.

எவ்வளவு துன்பங்கள் துரத்தினாலும் அதுக்காக, அடைக்கலம் புகும் இடம் இதுவல்ல. இந்த வாழ்க்கை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல, என்பது மட்டுமே சரியான தீர்வு.

யாருடைய மிருக உணர்ச்சிகளுக்காக இந்த பெண்கள் கைதிகளாக காத்துக் கிடக்கிறார்கள். இதை காம உணர்ச்சிக்கான பரிகாரம், பாலியல் பலாத்காரத்துக்கு ஒரு மாற்றாகும் என்று கூறுவதும் தவறுதான்.இங்கு ஊழியம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, பிள்ளைகளின் வாழ்க்கையையும் நாசமாக்கி விடுகின்றனர்.

ஒரு பெண் ஊழியர் தன் மகளை பள்ளியில் சேர்க்கிறார் இனி நீ அம்மாவை அங்கு போய் பார்க்கக் கூடாது என்பது பள்ளி விதிக்கும் கட்டுப்பாடு.

இன்னொரு ஊழியருடைய மகள் கலங்குகிறார், நான் எந்த தப்பும் செய்யவில்லை என் அம்மாவை காரணமாக்கி என்னை எல்லோரும் அவமதிக்கின்றனர்.

பாலியல் ஊழியரான எங்களை ஒதுக்கும் இந்த சமூகம் இங்கு விருந்தினராக வரும் ஆண்களை குற்றவாளிகளாக பார்ப்பதில்லை. இது இன்னொரு பெண்ணின் ஆதங்கம்.

சோனாகாட்சியில் உள்ள 10 ஆயிரம் பெண் பாலியல் ஊழியர்களை மீட்பதுதான் பெண்ணுரிமை பேசும் மகளிர் அமைப்புகளின் முதல் கடமையாக இருக்க முடியும்.

கசாப்பு கடைகளில் இறைச்சியை விலையாக்க, அவற்றின் உயிர்கள் போவதை பொருட்படுத்துவதில்லை. அதுபோல, ஒரு பெண்ணுடைய சகல திறமைகளும் இருட்டடைப்பு செய்யப்பட்டு உடல் மட்டுமே உரச பயன்படுத்தப்படுகிறது.

சுனாமி பேரழிவில் மரணத்துக்கே மரியாதை அற்றுப் போனது போல, பெண்மை இங்குதான் தலைகுனிந்து தவிக்கிறது.

பெண்மை ஒரு தேனருவி, அது எல்லா காலத்திலும் எல்லோராலும் குளிக்கப்படும் நீரருவி அல்ல.

சோனகாட்சியை நடத்துபவர்களும், அதன் வாடிக்கையாளர்களும், அதை தடுக்க மனமில்லாத அரசும் இதை புரிந்துகொள்ளட்டும்.

...மேலும்

Jul 22, 2015

இறுதி யுத்தத்தின் போது கணவனையும் தனது காலையும் இழந்தவருக்கு உதவி வழங்கல்!இறுதி யுத்தத்தின் போது கணவனையும் தனது காலையும் இழந்தவருக்கு உதவி வழங்கியது, உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள் இழந்தவர்கள் மற்றும் உதவிகளற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான தொழில் உதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக பேருதவி புரிந்து வருகின்ற உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் வாழ்வாதாரப் பயனாளியாகத் தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் பொன்னகர் மத்தி, முருகண்டியைச் சேர்ந்த திருமதி. கலைச்செல்வன் சசிகலா என்கின்ற சகோதரி வாழ்வாதாரமின்றி தனது இரு குழந்தைகளோடு மிகவும் துயரங்களுடன் தவித்து வந்தார்.

ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் காரணமாக தனது கணவனான கலைச்செல்வனையும் இழந்ததோடு எறிகணைத் தாக்குதலினால் தனது இடுப்பிற்குக் கீழ் வலது கால் முழுவதையும் இழந்து மிகவும் வறுமையோடும், துயரங்களோடும் வாழ்ந்து வருகின்ற சசிகலா என்கின்ற சகோதரி தனது அன்றாட வாழ்வதார தேவைகளுக்கு மிகவும் வசதியற்ற நிலையிலும்...

வேறு எந்த உறவுகளின் உதவிகளுமின்றி தனியொரு பெண்ணாக ஆண் துணையுமின்றி ஒற்றைக் காலோடு தனது இரு சிறிய குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலையிலும் அதிலும் இரண்டாவது மகனான காவியன் (வயது 6) நிரந்தர சுகவீனமுற்று (Mentally impaired baby) தொடர்ந்து சிகிச்சையளிக்க முடியாத நிலையிலும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திடம் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இவரது உதவி வேண்டுகையினை ஆதாரபூர்வமாக ஏற்றுக் கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது, அவருக்கான வாழ்வாதார நிதியாக அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நல்லின பசு மாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி உதவியுள்ளது.

பசு மாடுகள் வளர்ப்பதன் மூலமாக வருகின்ற வருமானத்தில் தனது குடும்பத்தையும் காப்பாற்றுவதோடு தனது சுகவீனமுற்ற மகனுக்கு மேற்கொண்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளையும் ஓரளவேனும் பூர்த்தி செய்ய முடியும் என்று முழு நம்பிக்கையினைத் தெரிவித்ததோடு உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கும் உதவிகள் நல்கிய உறவுகளுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட சகோதரிக்கான உதவியை ஆணையத்தின் சார்பாக வழங்கிய சமூகசேவை பணியாளர் திரு. வி. விமல்ராஜ் அவர்களுக்கும் உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையங்கள் ஊடாக தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

நன்றி   பதிவு

...மேலும்

Jul 21, 2015

இது கூத்தல்ல நிஜம்..! - சந்துரு தெய்வீகன்ஆடிக் காற்று பாணன்குளத்தில்பட்டுத் தெறித்ததோ இல்லையோ பார்வையாளர்களின் எண்ணங்களை பட்டமாய் பறக்கவைத்த ஆற்றுகையே “இது கூத்தல்ல நிஜம்”. செயற்றிறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் சமகாலத்தின் தேவையொன்றினை பக்குவமாய் பறைசாற்றிய பொழுது நேற்று மாலை ஏழு மணிராணி என்கின்ற ஒரு தற்காலத்து சாதாரண தாய் ஒருத்தியின் கதையை காவியத் தலைவி பாஞ்சாலியுடன் தொடர்புபடுத்தி மக்கள் அனைவரும் பார்த்து உணரவேண்டிய விதமாய் அரங்கிற்கு படைத்த முறைமை அற்புதம். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளின் வடிவங்களையும் விளைவுகளையும் தோலுரித்துக்காட்டும் நவீன அளிக்கை இது.
 
தினப் பத்திரிகைகளில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் நடந்தேறும் நெஞ்சம் பொறுக்காச் செய்திகளை பார்த்து கையாலாகப் பிறவித் துன்பத்தினை அனுபவிக்கும் நமக்கு கோடைமழையாய் ஒரு விழிப்புணர்வும் கலந்துரையாடலும் எல்லோரையும் ஒரு கணம் சிந்திக்கவைத்தது. கதைபற்றி நான் சொல்லித் தெரிவதற்கில்லை. நீங்களும் நானும் கண்டும்காணமலும் சென்ற தருணங்களை மறுமுறை மீட்டித்தான் பாருங்களேன். எங்கள் மண்ணில் எங்கெல்லாம் தேவை உணரப்படுகிறதோ அங்கெல்லாம் ராணி பயணிக்க வேண்டியவள். ராணியின் வரவு எத்தனையோ பெருமூச்செறியும் பெண்களின் வாழ்வில் நேர்ப்பாங்கான மாற்றத்தினை ஏற்படுத்தப்போகிறது என்பது மறுக்கப்படமுடியாத உண்மை.
 
ராணியின் கோபத்தை தணிக்க அவள் உதிர்த்த வார்த்தைகள் “...எல்லாவற்றையும் போட்டு கொடும்பாவி எரிக்க வேணும்…” என்கின்றபோது ராணியின் முகத்தில் தோன்றும் இயலாமை எமது தாய் மண்ணில் வாழும் எத்தனையோ பெண் தலைமைதாங்கும் குடும்பங்களையும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் புடம்போட்டுக்காட்டின. வாழ்வின் வசந்தத்திற்காய் ஏங்கும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் தொடர்பில் நாலுபேர் கூடிக் கலந்தாலோசித்து புள்ளிவிபரம் வெளியிட்டால் மாத்திரம் போதாது. செயலில் காட்டிட ஒரு செயற்றிறன் அரங்க இயக்கமும் தேவை.
மாற்றம் ஒன்றே மாறாதது! பெண்கள் வலுவூட்டல் செயற்பாட்டாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் செயற்பாட்டாளர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அடங்கலாக போருக்குப் பின்னரான நிகழ்ச்சி நிரலோடு வாழும் நாமெல்லாம் ஆற்றுகையைக்கண்டு ஆளுக்கொரு பரிந்துரையாளர்களாக மாறவும், நேர்ப்பாங்கான மாற்றத்தினை எமது சமூக மட்டத்தில் ஏற்படுத்தத் திடம்கொள்ளவைக்கும் ஒரு குறியீட்டு, கலந்துரையாடல் அளிக்கையாக “இது கூத்தல்ல நிஜம்” எமது மண்ணில் உலாவர இருக்கிறது.
 
கிராமத்தில் இடம்பெறும் ஆற்றுகையின்போது பெண்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் ஆற்றுகை தொடர்பில் வரவேற்கப்பட வேண்டியவை. இது விடயமாக ஆண்களுக்கும் அளப்பரிய பங்கு உண்டு என்பதனை உணரப்பண்ணவேண்டும். ஏலவே பார்வையாளர்கள் கருத்துரைத்த முக்கிய விடயங்கள் கவணத்தில் கொள்ளப்படவேண்டியவை. மற்றும் ஒரு கிராமத்து ஆற்றுகையின் சுவாரசியமான விடயங்களோடு உங்களை மறுபடியும் சந்திப்பேன். ராணிகளின் விடயத்தில் ரகளைகள் வருவது சகஜம் என்பதற்காக அரங்கம் ஓயப்போவதில்லை. அவர்களுடன் இணைந்து என் பேனாவும் தூங்கப்போவதில்லை.
 
நன்றிகளுடன்…
சந்துரு


...மேலும்

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..! - அகிலா கண்ணதாசன்


வலிகள் மிகுந்த தங்கள் வாழ்க்கையில் அன்பைத் தூவி, வெற்றுப் பாதையை வெற்றிச் சாதனையாக்கிய திருநங்கைகள் நால்வரைப் பற்றி..

செல்வி (பிஸியோதெரபிஸ்ட், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை):

"இந்த மனுஷன் இப்படிப் போட்டு என்னை சாகடிக்கிறானே?"

அழுது கொண்டே தன் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறார் அப்துலின் மனைவி. உடல்நலம் சரியில்லாமல் படுத்திருக்கும் அப்துலின் முகத்தில் எள்ளும் கொள்ளும், வெடிக்கிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை. அரசு மருத்துவமனைக்கே உரிய பயமும், பதற்றமும், அவசரமும் அங்கே விரவிக் கிடக்கிறது. காலையிலே ரவுண்ட்ஸ் வந்த பிசியோதெரபிஸ்ட் செல்வி இதைப் பார்த்து, என்ன என்று கேட்கிறார்.

அவரைப் பார்த்தவுடனே உடைந்து விசும்பத் துவங்குகிறார் அப்துலின் மனைவி. "விடிகாலைல 3 மணில இருந்து, ஒரு நிமிஷம் கூடத் தூங்காம இந்தாளுக்குப் பக்கத்திலேயே நின்னுட்டு இருக்கேன்."

அடுத்த 20 நிமிடங்களில் அந்த இடமே மாறுகிறது. மூச்சை இழுத்து விடுமாறு அப்துலிடம் கூறும் செல்வி, அவரின் காலைத் தேய்த்துவிட்டவாறே, இருவரிடமும் வாழ்க்கை, விட்டுக்கொடுத்தல்,அன்பு, அக்கறை பற்றிப் பேசத் தொடங்குகிறார்.

சில நிமிடங்களில் தூய வெள்ளை நிறக் கோட்டுடன் கம்பீரமாய் செல்வி அடுத்த் நோயாளியை நோக்கி நகர்ந்த போது, அப்துலின் மனைவியின் கண்கள் காய்ந்து, முகத்தில் புன்னகை பளிச்சிடுகிறது. புன்னகைத்த செவிலியரைப் பார்த்து சினேகமாய்த் தலையசைக்கும் செல்வி, மருத்துவர்களுக்கு, புன்னகையுடனே வணக்கம் சொல்கிறார்.

டீன் ஏஜ் பையனாக சென்னை வந்த செல்வி, திருநங்கையாகி, அலுவலர், உடற்பயிற்சியாளர், முதலிய வேலைகளைச் செய்து, இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்டாக இருக்கிறார். சொந்தமாக வைத்திருக்கும் கிளினிக்குக்கு வருபவர்களுக்கு இலவசமாக ஆலோசனையும் கூறுகிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சென்னை வந்த செல்வியின் வாழ்க்கை படிப்பு, நண்பர்கள், ஒற்றை அறை, காதல், திருமணம், துரோகம், வலி, தற்கொலை முயற்சி, வேலை எனக் காலத்தின் ஓட்டத்தில் பல அத்தியாயங்களைக் கடந்து, அவரை கே.பாலசந்தரின் நாயகியாகவே மாற்றியிருக்கிறது.

ஓல்கா (திருநங்கைகளுக்கான போராளி):

கான்வென்ட்டில் படிப்பு. உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனேகமாய் எல்லா விதமான மனிதர்களையும் சந்தித்து, அலுவலக உதவியாளர் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆலோசகர் வரை பணிபுரிந்தவர் ஓல்கா. தனியாளாய் நின்ற தன் அம்மாவால் வளர்க்கப்பட்டார்.

பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட குழந்தையான, ஓல்கா சிறு வயது சம்பவம் ஒன்றை நினைவுகூர்கிறார். "அப்போது பையன்கள் எல்லாம் ஒன்றாக நீச்சல் அடிப்பதற்காகச் செல்வோம். ஆனால் நான் சட்டை அணிந்து கொண்டுதான் செல்வேன். அப்போதே மற்ற பையன்கள் மாதிரி நாம் இல்லை என்றுதான் தோன்றும். அப்போதெல்லாம் புத்தகங்களே எனக்குத் துணை. நாளாக நாளாக பெண்ணாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வலுப்பெற்றது.

ஓர் ஆண் பெண்மையாக உணர்ந்தால் அவன் ஒதுக்கப்பட வேண்டும்; அதுவே ஒரு பெண் ஆணைப் போல நடந்துகொண்டால் அவள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் இடத்தில்தான் பிரச்சினை தொடங்குகிறது."

வளர்ந்ததும் மருத்துவரையும், அறுவை சிகிச்சை நிபுணரையும் சந்தித்த ஓல்கா, தன் அம்மாவின் ஒப்புதலோடு, பெண்ணாக மாறினார். 87 சதவீத மதிப்பெண்களோடு பள்ளியை விட்டு வெளியே வந்தார். மருத்துவக் கனவுகளோடு காத்திருந்தவருக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. பல இடங்களில் முயன்று, கடைசியாக தொலைதூரக்கல்வி மூலம் கல்வி பயின்றார்.

தனக்கு ஏற்பட்ட நிலை, இப்போது எந்தத் திருநங்கைக்கும் வந்துவிடக்கூடாது என்று போராடி வருகிறார் ஓல்கா. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இருக்கும் ஓல்கா, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஆணாதிக்கத்தை ஒழித்தாலே திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்கிறார்.

இளம் வயதிலேயே திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய முறையான ஒதுக்கீடுகள் குறித்த கொள்கை மாற்றங்களைப் பற்றித் தீவிரமாகப் பேசும் ஓல்கா, திருநங்கைகளுக்கான பாகுபாடு எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதையே இலக்காகக் கொண்டிருக்கிறார்.

ஓல்கா (படம்: கே.பிச்சுமணி) | வலது: எஸ்தர் பாரதி (படம்: பி.ஜோதி ராமலிங்கம்)

எஸ்தர் பாரதி (மத போதகர்):

ஒரு பிளாஸ்டிக் கவரில் எஸ்தர் பாரதியின் விலைமதிப்பற்ற உடைமை ஒன்று பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வெண்ணிற அங்கிதான் அது. அதை அணிந்தவுடனே பாரதியின் முகத்தில் கம்பீரம் ஒளிர்கிறது.

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய மறு பிரவேச திருச்சபையின் முதல் போதகராக பொறுப்பேற்றுச் சாதனை படைத்தவர் பாரதி. தன் வேலையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் பயணித்தவருக்கு, உலகத்தையே சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. சென்ற இடங்களிலெல்லாம் வெறும் போதனையை மட்டுமே அளிக்காமல், திருநங்கைகளுக்கு விழிப்புணர்வை ஊட்டினார்.

"நான் கிராமத்தில் போதகராக இருந்தபோது, என்னைக் கடந்து செல்லும் மக்கள் வணக்கம் செலுத்திவிட்டுத்தான் செல்வர். திருநங்கை நண்பர்களை அழைத்துச் சென்றபோதும் கூட அப்பழக்கம் மாறவில்லை. அன்றைக்குத்தான் என்னைத் தத்து எடுத்துக்கொண்ட மதத்திலேயே முழுவதுமாய் அடைக்கலம் புகுந்தேன்.

என்னுடைய வாழ்க்கைப் பயணம் அத்தனை எளிதாக இருந்ததில்லை. ஏன் இப்பொழுதும் இருப்பதில்லை. ஆனாலும் இதுதான் என் பாதை என்பதில் தெளிவாக இருக்கிறேன் " என்கிறார் பாரதி.

வட சென்னையில் ஒற்றை அறை கொண்ட வீட்டில்தான் பாரதியின் வாசம். இன்னும்கூட நல்ல வீட்டில் அவரால் வாழ முடியும். ஆனால் திருநங்கை என்னும் அடையாளம், அவருக்கு எங்கும் வீடு கிடைக்க விடவில்லை.

பிரியா பாபு (எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர்):

திருநங்கைகள் சமூகத்தின் இலக்கிய முகங்களில் முக்கியமானவர் பிரியா பாபு. திருநங்கைகள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். இவரின் 'மூன்றாம் பாலின் முகம்' நூல் சென்னை, மதுரை, கோவையிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் பிறந்தவரான பிரியா பாபு, 1970-களிலேயே சென்னை வந்துவிட்டார். வந்தவருக்கு வழக்கமாய் திருநங்கைகளுக்கு ஏற்படும் நிலையே நேர்ந்திருக்கிறது. பெரும்பாலான திருநங்கைகள் பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழிலையே செய்து கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கண்டு மனமுடைந்த பிரியா, தற்செயலாக சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' நாவலைப் படித்தார். நாவலின் ஆதர்ச கதாபாத்திரமான சுயம்புவாகவே மாறிய பிரியா, வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டார்.

மும்பைக்குச் சென்று, சமூக சேவையாளராக தனது வேலையை ஆரம்பித்தவர், பாபு என்பவரைச் சந்தித்து, காதலித்து மணமும் செய்துகொண்டார்.

தமிழ்நாட்டையும் தாண்டி விரிவடைந்தது அவரின் பணி. திருநங்கைகளுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் மனு பிரியாவுடையது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினியுடன் இணைந்து இதைச் செய்தார்.

வேலையைத் தாண்டி, பிரியா பாபுவுக்கு கலைகள் எப்போதும் கைவந்த கலை. திருநங்கைகள் சமூகம் சார்ந்து ஏராளமான விழிப்புணர்வு தரும் ஆவணப்படங்களை எடுத்தவர், தற்போது பழங்கால இலக்கியங்கள், பாடல்கள், கல்வெட்டுகளில் திருநங்கைகளைப் பற்றிக் காணப்படும் சரித்திர ஆதாரங்களை ஆவணப்படக் கதையாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

சென்னையில் குடியிருக்க வீடு தேடித்தேடி அலுத்துப்போனவர், ஒரு வருடம் முன்னர் மதுரைக்கே குடிபெயர்ந்திருக்கிறார். அவருக்கான திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, குரல் கம்முகிறது.

"நானும் பாபுவும், திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பின்னர், பிரிந்துவிட்டோம். பாபுவின் குடும்பம், அவரின் குழந்தைக்கு ஆசைப்பட்டது. திருநங்கை என்பதால் என்னால் குழந்தை பெற்றுத்தர முடியாது என்று கூறிவிட்டனர்.

அதிலிருந்து மீண்டு வந்து இதோ உங்கள் முன் நிற்கிறேன்!" என்பவரின் முகத்தில் நம்பிக்கையின் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Jul 20, 2015

'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்! - அன்னா எம். வெட்டிகாட்


பாகுபலி படத்தை பார்த்து வியந்து, ரசித்து, சிலாகித்த நமக்கு கோப உணர்வு மட்டும் வராதது ஏன்? கோபம் ஏன் வரவேண்டும் எனக் கேட்கிறீர்களா? நாயகன் - நாயகிக்கு இடையேயான காமத்தின் வெளிப்பாடு இப்படத்தில் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் விதமே கோபத்துக்கான காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் அப்படி ஒரு கோபம் வரவில்லை.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் - தமன்னா பாட்டியா நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் வசூலை வாரிக்கட்டிக் கொண்டிருக்கும் பாகுபலியில் உள்ள காட்சிதான் அது.

அவந்திகா, துணிச்சல்மிகு போராளி. ஒரு நாள் ஏரிக்கரையில் அவள் கண் அயர அவளுக்குத் தெரியாமலேயே அவளது மெல்லிய கைகளில் ஓர் அந்நியன் ஓவியம் வரைந்து செல்கிறான். தனக்குத் தெரியாமல் தன் கையில் ஓவியம் வரைந்தது யார் எனக் கண்டுபிடிக்க அவந்திகா எத்தனிக்கிறாள். தோழியுடன் சேர்ந்து வியூகம் வகுத்து வில், அம்புடன் மரத்தின் மீது ஏறிக் காத்திருக்கும் அவள் மீது பாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான் அந்த அந்நியன். பின்னர் மீண்டும் அவள் மீது ஓர் ஓவியம் தீட்டுகிறான்.

இரண்டாவது முறையாக தனக்குத் தெரியாமலேயே நேர்ந்த அந்த சம்பவத்தால் வெகுண்டெழும் அவந்திகா, அந்நியனைத் தேடிச் செல்கிறாள். அவனைச் சந்திக்கிறாள். அந்த முதல் சந்திப்பு எப்படியெல்லாம் மாறுகிறது தெரியுமா?

இச்சையை வெளிப்படுத்தும் ஒரு நடனம். அவந்திகாவை இடுப்பை பிடித்து வலுக்கட்டாயமாக இழுக்கிறான். அவளது கட்டிய கூந்தலை கலைக்கிறான். அவள் உடுத்தியிருந்த போராளிக்கான உடையை மெல்ல மெல்ல அவிழ்க்கிறான். அவளது பெண்மை புலப்படும் அளவுக்கு அவளது உடைகளை செதுக்குகிறான். இயற்கையாக கிடைக்கும் சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்குச் சாயம் பூசுகிறான். அவளை பெண்மை செய்கிறான். தன் உருமாற்றத்தை அவள் காணும்படிச் செய்கிறான். கண்ணாடியாக மாறிய நீர் வழிந்தோடலில் அவந்திகா ஜொலிக்கிறாள். நாணம் ததும்ப அவந்திகா அவன் கைகளில் தஞ்சமாகிறாள். அவன் இறுக்கத்தில் அயர்ந்து போகிறாள்.

அன்புடையீர், இப்படித்தான் ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள் ஒரு விலங்கைப் போல். (பாராட்டுகள்!)

பாகுபலி, கண்களுக்கு விருந்து படைக்கும் பிரம்மாண்ட படைப்பு என்பதில் ஐயமில்லை. இப்படத்தில் இதிகாசப் படைப்புகளிலில் இருந்து எடுத்தாளப்பட்ட குறிப்புகள் செரிந்து கிடக்கிறது. இப்படத்தின் வீச்சு அதிகம். ஆனால், அதுவே இப்போது ஆபத்தாக இருக்கிறது. அவந்திகா அவிழ்க்கப்பட்ட விதம் யாரையும் நெருடவில்லை என்பது அபாயகரமானது. அப்படியென்றால் இதை பெரும்பாலானோர் ஆதரிக்கின்றனர் என்பதற்கு அடையாளம். ஒரு நாகரிகமற்ற, சற்றும் அறிவுசாராத, கற்பனைவளம் அற்ற, ஜனரஞ்சகமாக இல்லாத ஒரு படைப்பில் இத்தகைய காட்சி இருந்திருந்தால் அதன் வீச்சு குறைவுதான். ஆனால், அனைவரும் போற்றும் பிரம்மாண்ட படைப்பில் இத்தகைய காட்சி இடம் பெற்றிருப்பது என்ன மாதிரியான கருத்தை எடுத்துச் செல்லும்.

ஓர் ஆபாசமான காம வெளிப்பாட்டை அது பகிரங்கமான காமம் என்பதை உணர முடியாத அளவுக்கு கண்கவர் பின்புலனிலும் மெல்லிசையிலும் மறைத்திருக்கின்றனர். 'குதர்க்கமாக குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்து', 'உனக்கு உன்னதமான காதல் உணர்வே இல்லை', 'விடு, ரிலாக்ஸ்... இது வெறும் திரைப்படம்தான்' என்றெல்லாம் சிலர் எதிர்வினையாற்றக் கூடும்.

ஆனால், அவந்திகா அவிழ்க்கப்பட்ட விதத்தை அப்படியே கண்டும்காணாமல் செல்ல முடியாது. பாலுறவுகளில் ஒருமித்த சம்மதம் வேண்டும் என்பதையே புரிந்துகொள்ளாத சமூகத்தில் இத்தகைய அபத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

பாகுபலியின் இச்சையாட்டம் சொல்வதெல்லாம் இதுவே, "ஒரு பெண்ணுக்கு தெரியாமல் அவளைச் சீண்டுவது சரியே, அவள் விரும்பாவிட்டாலும் அவள் மீது நீ ஆதிக்கம் செலுத்தலாம். ஏனென்றால், பாலுறவில் அது இயல்பானது"

அவந்திகா - பாகுபலியின் இச்சை ஆட்டத்தை ரசித்தவரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் மனமாற்றத்துக்கு நான் உதவுகிறேன். அதற்கு அனுமதியுங்கள்.

அந்தக் காட்சியில் தமன்னாவுடன் ஆட்டம் போட்டது பிரபாஸாக இல்லாமல் வில்லன் நடிகர் சக்திகபூராக இருந்திருந்தால்கூட அந்தச் செயல்கள் உங்களை வருந்தவைத்திருக்குமா?

அதேபோல் தனு வெட்ஸ் மனு என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு காட்சியிருக்கிறது. மதுபோதையில் தன்னிலை மறந்த தனு, மனுவை முத்தமிடுகிறார். இதைப் பார்த்து யாருக்கும் அருவருப்பு வரவில்லை என்றால் நீங்கள் ஒரு சிறு பரிசோதனையை மேற்கொள்ளலாம். உங்கள் காதலியோ அல்லது உங்கள் மகளோ அயர்ந்து தூங்கும்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவளது அறைக்குள் நுழைந்து அவளை முத்தமிடுவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என யோசித்துப் பாருங்கள்.

மேற்கூறியதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் திரைப்படங்களில் மட்டும் இத்தகைய காட்சிகள் சர்வசாதாரணமாக உருவகப்படுத்தப்பட ஏன் அனுமதிக்கிறீர்கள்?

இந்தக் கேள்வி பழமைவாதம் நிறைந்த இந்திய சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. நம் சமூகத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இத்தகைய விஷயங்கள் குறித்து நேரடியாக பேசுவதில்லை. இங்கு பாலின பாகுபாடு இன்னமும் அதிகமாகவே உள்ளது. எனவே, நிறைய இளைஞர்கள் காதல், பாலுணர்வு போன்ற விஷயங்களுக்கு தங்களுக்கு யோசனை வழங்கும் ஊடாகவே திரைப்படங்களைப் பார்க்கின்றனர்.

அப்படி ஒரு கண்ணோட்டத்தில் இருக்கும் இளைஞன் கிக் படத்தில் சல்மான் கான், கதாநாயகி ஜேக்குலினின் பாவாடையை அவளுக்குத் தெரியாமலேயே தூக்குவதையும், அதற்கும் ஜேக்குலின் முதலில் லேசான கோபமும் பின்னர் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடுவதையும் பார்த்தால் என்ன தோன்றும். பெண்கள் இத்தகைய அத்துமீறல்களை விரும்புகின்றனர் என்றே நினைத்துக் கொள்ள வைக்கும். இதை வெறும் சீண்டல்கள் என்றே ஓர் இளைஞன் எடுத்துக் கொள்வான்.

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம், அவளுக்குத் தெரியாமல் நீங்கள் அவளைச் சீண்டினால் அதை அவள் மறுக்கிறாள் என்றே அர்த்தம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவள் அதை மறுக்கிறாள் என்றே அர்த்தம். அவள் முடியாது என்று வார்த்தையால் மறுத்தாலும் அது மறுப்பே. இல்லை அவள் உடல்பளுவுடன் உங்களை புறந்தள்ளினாலும் அது மறுப்பே. அவள் ஆம் என்ற வார்த்தையால் தெரிவிக்காதவரை அவள் மறுக்கிறாள் என்றே அர்த்தமாகும். இத்தனை மறுப்புக்கும் மீறி நீங்கள் அவளை அடைந்தால் அது வெறும் பலாத்காரம்.

உடலறவு தவிர்த்து மற்ற சீண்டல்கள் அனைத்தும் ஏற்புடையதே என பலரால் கருதப்படுகிறது. இதனாலேயே அன்னயும் ரசூலும் மலையாளப் படத்தில் அன்னாவுக்கு தெரியாமல் அவளது கூந்தலில் ரசூல் கைநுழைக்கும் செய்கை யாராலும் ஆபாசம் எனக் கருதப்படவில்லை.

இதன் காரணமாகவே அவந்திகா பாகுபலியால் பலாத்காரம் செய்யப்பட்டதும், எந்த விதமான கோபத்தையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை.

தமிழில்: பாரதி ஆனந்த்

நன்றி - திஹிந்து
...மேலும்

Jul 19, 2015

நம்பர் 1 மலாலா யூசுஃப்ஸை


பெண் குழந்தைகள் பிறந்தாலே முகம் சுளிக்கும் சமூகத்தில் வாழ்ந்த கவிஞர் ஜியாவுதீன், 1997-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்த தன் மகளுக்குச் சூட்டிய பெயர் மலாலா யூசுஃப்ஸை. இதில் யூசுஃப்ஸை என்பது பரம்பரைப் பெயர். 'மலாலா’ 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்கானின் 'ஜோன் ஆஃப் ஆர்க்’. போர்க்களத்தில் வீராவேசமாகச் செயல்பட்டு தோட்டாவுக்குப் பலியானவள். அந்தப் பெயரின் உட்பொருள் 'துன்பத்தால் தாக்கப்பட்டவள்’. ஆகவே, குழந்தையின் தாத்தாவுக்குப் பெயர் பிடிக்கவில்லை. 

அவர் மட்டும் 'மலாலா... இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியானவள்’ என, குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் வாழ்த்தினார். ஆனால், 'மலாலா’வின் நேற்றைய வாழ்க்கை துன்பங்களால் தாக்கப்பட்டதாகவே இருந்தது!

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு. காடு, மலை, அருவி, ஏரிகள் நிறைந்த நந்தவன பூமி. புத்தரும் புத்த மதமும் உலவிய பிரதேசம். '17 முறை படையெடுப்பு’ புகழ் கஜினி முகமதுவின் 11-ம் நூற்றாண்டுப் படையெடுப்பால் இங்கே இஸ்லாம் பரப்பப்பட்டது. சென்ற நூற்றாண்டு வரை அமைதிப் பள்ளத்தாக்காக, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப் பூமியாகத்தான் இருந்தது... தாலிபான்கள் தங்கள் இடது காலை எடுத்து வைக்கும் வரை!

ஸ்வாட்டின் பெருநகரமான மிங்கோராவில் பிறந்த மலாலாவுக்கு பால்ய கால சந்தோஷங்களுக்குக் குறைவில்லை. சேவல் வேட்டை, மொட்டைமாடி கிரிக்கெட், அத்தி, பிளம்ஸ், பீச்... என பறவைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பழங்கள் உண்ணும் பரவசம்.

இன்றும் பெண் என்பவள் திருமணத்துக்கு முன்னும் பின்னும் சமையலறையில் வாழப் பிறந்தவள்... அவள் உலகம் பர்தாவுக்குள் தொடங்கி அதனுள்ளேயே முடிந்துபோவது என்பன போன்ற சீழ்பிடித்த பழைமைவாதக் கொள்கைகள்கொண்டதுதான் மலாலா பிறந்த பாஷ்டூன் இனமும். (பாகிஸ்தானின் இரண்டாவது மிகப் பெரிய இனம்). ஆனால், ஜியாவுதீன் தன் மகளுக்கு பர்தாவுக்குப் பதில் சிறகுகள் வாங்கித் தந்தார். அவரும் தூய்மையான இஸ்லாமியரே. ஆனால், தேவையற்ற, முரணான சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்தார். பள்ளி நடத்த வேண்டும், பெரும்பான்மையானவர்களுக்குக் கல்வியறிவு அளிக்க வேண்டும் என்பது ஜியாவுதீனின் கனவு. நண்பருடன் சேர்ந்து கடன் வாங்கி 'குஷால்’ என்ற பெயரில் பள்ளி ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். அதைப் பதிவுசெய்யக்கூட பணம் இல்லை. அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சம் கோபமூட்டியது. ஆகவே, தனியார் பள்ளி கூட்டமைப்பில் இணைந்தார். அவரது நேர்மையும் சமூகக் கோபங்களும் மேலும் மேலும் துன்பங்களைத்தான் கொடுத்தன. மனம் தளராத ஜியாவுதீன், தன் மகளையும் போராட்டக் குணத்துடனேயே வளர்த்தார்.

மலாலாவின் அம்மா தூர்பெக்காய். சிறுவயதில் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றபோது, வகுப்பில் அவர் மட்டுமே பெண் குழந்தை. தன் வயதுச் சிறுமிகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்க, தனக்கும் பள்ளி வேண்டாம் என அறியாமையால், புத்தகங்களை விற்று, அதில் பெப்பர்மின்ட் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு படிப்பைக் கைவிட்டவர். ஆனால், இப்போது 'கல்வியே தன் மகளின் வாழ்க்கையை இனிமையாக்கும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் தூர்பெக்காய்.

தவழும் வயதிலேயே மலாலா பள்ளியில்தான் வளர்ந்தாள். பேசப் பயிலும் பருவத்தில் வகுப்பில் பாடம் கவனித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு தந்தையின் பள்ளிதான் எல்லாம். பெருவிருப்பத்துடன் கல்வி கற்றாள். சிறுபிள்ளைத்தனங்களுக்கும் குறைவில்லை. எட்டு வயசு மலாலாவிடம் இருந்த ஒரே விளையாட்டுப் பொருள், பொம்மைக் கைப்பேசி. அது ஒருநாள் காணாமல்போனது. பக்கத்து வீட்டுச் சிறுமி சபீனா அதேபோல் ஒரு பொம்மையை வைத்திருக்க, மலாலாவுக்குச் சந்தேகம்; கோபம். பதிலுக்கு சபீனாவின் பொம்மைகள், காதணி, நெக்லெஸ் என ஒவ்வொன்றாகத் திருட ஆரம்பித்த மலாலா, ஒருநாள் பிடிபட்டாள். 'இப்படித் திருடி எங்களை அவமானப்படுத்துகிறாயா?’ - அம்மாவின் கேள்வி சுட்டெரித்தது. 'அப்பாவிடம் சொல்லிவிடாதீர்கள்’ என அழுது அரற்றியபடியே மலாலா மன்னிப்பு கேட்டாள்.

ஜியாவுதீனின் காதுகளுக்கும் விஷயம் போனது. அப்பா உஷ்ணமாகவில்லை. 'தவறு செய்ய சுதந்திரம் இல்லையென்றால், அந்தச் சுதந்திரம் தேவையற்றது’ என காந்தி சொல்லியிருக்கிறார். 'தவறை உணரும்போது, அதில் இருந்து கற்றுக்கொள்வதுதான் முக்கியமானது.’ மலாலாவின் மனதில் ஆழப்பதிந்த வார்த்தைகள் இவை! மதிப்பற்ற அழகுப் பொருட்களுக்காக நான் ஏன் எனது விலைமதிப்பற்ற ஆளுமையைத் தொலைக்க வேண்டும்? தன் அற்ப ஆசைகளை அப்போதே விட்டு விலகினாள் மலாலா. வகுப்பில் முதல் மாணவியாக இருக்க வேண்டும். நிறைய புதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும். தந்தைபோல அரசியலில் அறிவையும் பேச்சாற்றலையும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என மலாலாவுக்கு ஏகப்பட்ட லட்சியங்கள். தந்தை உற்சாகப்படுத்தினார். 'மகளே... நீ உன் கனவுகளைப் பின்தொடர்ந்து செல். நான் உன் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன்’!

'என் போன்ற சிறுமிகள் ஒவ்வொருவருக்குமே இதுபோல் கனவுகள் இருக்கும்தானே. ஆனால், பல சிறுமிகள் பள்ளியின் வாசனையையே இதுவரை உணர்ந்தது இல்லை. நேற்று வரை என் சக மாணவியாக இருந்த 10 வயது சிறுமியை இன்று அரைக் கிழவன் ஒருவனிடம் விற்றுவிடுகிறார்கள். இரு குடும்பங்களின் பழைய பகையைத் தீர்க்க, ஒரு குடும்பத்தின் பெண்ணைப் பலிகடாவாக்கி, கேவலமான ஒருவனுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கிறார்கள். வேற்று இன ஆணுடன் அன்புவைத்த ஒரு சகோதரி, திடீரென இறந்துபோகிறாள். இது குடும்பத்தினரே செய்யும் கொலைதான். இந்த இழிநிலைகள் என்றைக்குமே மாறாதா? இதையெல்லாம் தட்டிக்கேட்கவே முடியாதா?’ - மலாலா மனதில் அடுக்கடுக்காகக் கேள்விகள்!


'ஷக்கலக்க பூம்பூம்’ என்ற டி.வி தொடரில், சிறுவன் சஞ்சு தனது மாயப் பென்சில் கொண்டு வரையும் ஓவியங்கள் உயிர்பெறும். அதன் மூலம் அநியாயங்களைத் தட்டிக்கேட்பான். அயோக்கியர்களை ஓடஓட விரட்டுவான். மலாலா, அந்த மாய பென்சில் தனக்கும் வேண்டும், தானும் சஞ்சுவாக மாற வேண்டும் என ஐந்து வேளை தொழுகையிலும் இறைவனிடம் வேண்டினாள். தொழுகை முடிந்து மேஜை டிராயரை நம்பிக்கையுடன் இழுத்தும் பார்த்தாள். மாய பென்சில் இல்லை. இன்னொரு முறை தன் நகரத்தில் குப்பைமேட்டில் உழலும் குழந்தைகளுக்காக வேண்டியும், இந்த உலகத்தைக் குறைகளற்றதாக மாற்றக் கோரியும் கடவுளுக்குக் கடிதம் எழுதினாள். ஆங்... கடவுளின் முகவரி என்ன? தெரியவில்லை. கடிதத்தை ஒரு மரச்சட்டத்தில் கட்டி, ஓடும் நதியினில் மிதக்கவிட்டாள். 'நிச்சயம் இதைக் கடவுள் கண்டெடுத்துவிடுவார்’!

தந்தையின் பள்ளி விரிவடைந்து, மூன்று கட்டடங்களில் இயங்க ஆரம்பித்தது. தனது சமூக ஆர்வமிக்க செயல்களினால், பேச்சுக்களினால் ஜியாவுதீனும் ஊரறிந்த புள்ளி ஆனார். 'உலக அமைதிக் குழு’ என ஓர் இயக்கம் ஆரம்பித்து அதன் தலைவராகவும் இயங்கினார். 9/11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு காட்சிகள் மாறின. ஒசாமா பின்லேடன் 'சூப்பர் ஹீரோ’ அந்தஸ்து பெற்றார். தாலிபான்கள் மீது பாகிஸ்தான் மக்களுக்கு ஈர்ப்பு உண்டானது. உலக அமைதியை விரும்பிய புத்தர் மீது குண்டுகள் பொழிந்த தாலிபான்களின் விஷ நிழல், 2007-ம் ஆண்டு ஸ்வாட் பள்ளத்தாக்கின் மீதும் படர்ந்தது. மக்கள், அவ்வப்போது சிறிய, பெரிய நிலநடுக்கங்களால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது உண்டு. ஆனால், அனைத்தையும்விட பெரிய அழிவு சக்தியாக அங்கே தாலிபான்கள் நுழைந்தனர். அப்போது மலாலாவுக்கு வயது 10.

மலாலாவுக்கு பர்தா பிடிக்காது. ஒருமுறை தூர்பெக்காய் தன் மகளுடன் கடைவீதிக்குப் போகும்போது, 'முகத்தை மூடிக்கொள். அவர்கள் உன்னைப் பார்க்கிறார்கள்’ என நடுக்கத்துடன் எச்சரித்தார். மலாலா பயப்படவில்லை. 'பரவாயில்லை. நானும் அவர்களைப் பார்க்கிறேன்’. அவள் மனத்தில் தந்தை சொன்ன வார்த்தைகள் எப்போதும் இருந்தன. 'பர்தா வெறும் துணியில் இல்லை. அது இதயத்தில் உள்ளது’!

தாலிபான்கள் பள்ளிகளைக் குண்டுவீசித் தகர்க்கும், இடித்துத் தரைமட்டமாக்கும் செய்திகள் அதிகரித்தன. ஜியாவுதீனின் பள்ளிகளுக்கும் மிரட்டல்கள் வந்தன. ஒன்று,  தாலிபான்களின் அடிமையாக ஒடுங்கி வாழ வேண்டும் அல்லது, சாகத் துணிந்து அவர்களை எதிர்க்க வேண்டும். அவர் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். ஸ்வாட்டில் தாலிபான்களின் அட்டூழியங்கள் குறித்து ஊடகங்களிடம் பேச ஆரம்பித்தார். அதில் பி.பி.சி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் உண்டு. பெண்கள் சார்பாகப் பேசுவதற்கு, தனது 11 வயது மகள் மலாலாவை முன் நிறுத்தினார். அவளும் அழுத்தமாகப் பேசினாள். 'கல்வி என் அடிப்படை உரிமை. அதைப் பறிக்க தாலிபான்கள் யார்? பள்ளி செல்வதும் படிப்பதும் வீட்டுப்பாடங்கள் எழுதுவதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது எங்கள் எதிர்காலம். தாலிபான்களால் எங்கள் புத்தகங்களை, பேனாக்களைப் பறிக்க முடியும். ஆனால், எங்கள் சிந்தனையைத் தடுக்கவே முடியாது. உலகில் உள்ள அனைவரும் முஸ்லிம்களாக மாற விரும்பினால், முதலில் அவர்கள் தங்களை நல்ல முஸல்மான்களாக மாற்றிக்கொள்ளட்டும்!’

2008-ம் ஆண்டு நிலைமை மிகவும் மோசமானது. தாலிபான் எதிர்ப்பாளர்கள், சந்தேகப் பட்டியலில் உள்ளவர்கள், கணுக்கால் தெரியும்படி உடை அணிந்த பெண்கள், இப்படிப் பலரும் கொல்லப்பட்டு சதுக்கம் ஒன்றில் வீசப்பட்டார்கள். அது 'ரத்தச் சதுக்கம்’ என்ற பெயர்பெற்றது. ஜியாவுதீனின் உயிருக்கும் குறிவைக்கப்பட்டதாகத் தகவல். தூர்பெக்காய் வீட்டின் பின்புறத்தில், தாலிபான்கள் வந்தால் தன் கணவர் தப்பித்து ஓட, எப்போதும் ஓர் ஏணியைத் தயாராக வைத்திருந்தார். மலாலா ஒரு சுரங்கப்பாதை தோண்ட முடியுமா எனத் திட்டமிட்டுக்கொண்டிருந்தாள். தலையணைக்குக் கீழ் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு தூங்கினார்கள். வீட்டுக்கு அருகிலேயே வெடிக்கும் குண்டுச் சத்தங்கள் உயிரை உலுக்கின. 'நானும் மனுஷிதானே. எனக்கும் பயம் இருந்தது. ஆனால், அது தைரியத்தைவிட குறைவாகவே இருந்தது.’ மலாலாவின் தம்பிகள் இருவரும் கையில் மரக்கிளையைத் துப்பாக்கிபோல பிடித்துக்கொண்டு 'ராணுவம்-தாலிபான்’ விளையாட்டை ஆட ஆரம்பித்திருந்தனர்.

பி.பி.சி - பிரதிநிதியான அப்துல் ஹைகாக்கர், ''தாலிபான்களுக்குக் கீழ் வாழும் வாழ்க்கை’ குறித்த நாட்குறிப்புகளை யாராவது எழுதுவார்களா?’ என ஜியாவுதீனிடம் கேட்டார். விஷயம் கேள்விப்பட்ட மலாலா, 'நானே எழுதுகிறேன்’ என முன்வந்தாள். முதல் கட்டுரை, 2009-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி அன்று பி.பி.சி உருது இணையதளத்தில் வெளிவந்தது. மலாலாவின் பாதுகாப்பு கருதி புனைப்பெயரில். குல்மக்காய். சோளமலர் என அர்த்தம். 'ஒவ்வோர் அடிக்கும் பயத்துடன் திரும்பிப் பார்த்துக்கொண்டேதான் பள்ளி செல்கிறேன். யாராவது என் முகத்தில் அமிலம் வீசிவிடுவார்களோ என, பயமாக இருக்கிறது. அன்று ஒருவனைக் கடக்கும்போது, 'உன்னைக் கொல்லப்போகிறேன்’ என்றான். திடுக்கிட்டுத் திரும்பினேன். அவன் போனில் பேசிக்கொண்டிருந்தான்.’ ஸ்வாட்டின் மோசமான சூழலைத் தோலுரித்த மலாலாவின் எழுத்துக்கள், கொஞ்சம் கொஞ்சமாக, சர்வதேசக் கவனம் பெற ஆரம்பித்தன.

அந்த ஜனவரியில் பனிக்கால விடுமுறைக்காக பள்ளியின் இறுதி மணி ஒலித்தது. மார்ச்சில் தேர்வுகளுக்காக மீண்டும் பள்ளி திறக்கப்படுமா? அதுவரை தாலிபான்கள் கட்டடத்தை விட்டுவைத்திருப்பார்களா? நினைக்க நினைக்க, மலாலாவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பாகிஸ்தானின் ராணுவம் அனுப்பப்பட்டும் தாலிபான்களின் கை ஓங்கியது. ஸ்வாட்டைவிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பித்தனர். மலாலாவின் குடும்பத்தினரும். வீட்டில் வளர்த்த கோழிக்குஞ்சு களை என்ன செய்ய? நிறைய நீரும் கொஞ்சம் சோளமும் வைத்துவிட்டு, மலாலா ஒரு காரில் நெருக்கிப்பிடித்து உட்கார்ந்துகொண்டாள். அவளது புத்தகப் பையைக்கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. வழியெங்கும் கவலை தோய்ந்த முகங்கள். ராணுவச் சோதனைச் சாவடிகள். கடுமையான பயணத்துக்குப் பின் அவளது அம்மாவின் பூர்வீகக் கிராமத்தை அடைந்தனர். அங்கே கொஞ்சம் நாள். பின் பெஷாவர். மூன்று மாதங்கள் நாடோடிப் பயணம்!

2009-ம் ஆண்டு ஜூலை 24. 'ஸ்வாட்டில் தாலிபான்களை அகற்றிவிட்டோம். மக்கள் பள்ளத்தாக்குக்குத் திரும்பலாம்’ என பிரதமர் கிலானி அறிவித்தார். படபடக்கும் நெஞ்சுடன் மலாலா குடும்பத்தினர் மிங்கோராவை அடைந்தனர். வழியெங்கும் போரின் சிதிலங்கள். நல்லவேளை, வீடு தரைமட்டமாகவில்லை. குஷால் பள்ளியும் தப்பியிருந்தது. கோழிக்குஞ்சு களின் எலும்புகள் கிடைத்தன. மிங்கோராவும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் குஷால் பள்ளி மணி ஒலித்தபோது மலாலாவின் முகத்தில் பழைய புன்னகை. தன் தோட்டத்தில் மாங்கொட்டை ஒன்றைப் புதைத்துவைத்தாள். 'எதிர்காலத்தில் இதன் பழங்களை நான் உண்பேன்’!

இஸ்லாமாபாத் செல்வது, கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவது, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பது... என மலாலாவின் பணிகள் தொடர்ந்தன. பாகிஸ்தானியர்கள் மத்தியில் மலாலா பிரபலமடைந்தாள். யுனிசெஃப் நடத்திய சிறுவர்களுக்கான சட்டசபைத் தேர்தலில், சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள் மலாலா. 'தாலிபானால் அழிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் கட்டப்பட வேண்டும்’ என தனது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினாள். 2011-ம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் முதல் தேசிய அமைதிப் பரிசுக்காக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டாள். இனி வருடம்தோறும் மலாலாவின் பெயரிலேயே இந்த விருது வழங்கப்படும் என விழாவில் அறிவிக்கப்பட, ஜியாவுதீனுக்கு முகம் வாடிப்போனது. 'இறந்தவர்களின் பெயரில்தான் விருதுகளை வழங்குவார்கள். என் மகளின் பெயரில் ஏன்?’ ஏதோ ஒன்று உறுத்தியது!

ஆம்... மலாலாவைக் கொல்ல தாலிபான்கள் தீவிரமாகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். அது குறித்து காவல் நிலையத்தில் இருந்துகூட எச்சரிக்கை வந்தது. தன் நெருங்கிய போராளி நண்பர்கள் கொல்லப்பட்டதற்கோ, அடுத்த குறி தான்தான் என்பதற்கோகூட பதறாத ஜியாவுதீன், இப்போது தைரியம் இழந்தார். 'நாம் தலைமறைவாகிவிடுவோமா?’ மலாலா பதறவில்லை. 'எப்படியும் இறக்கத்தான்போகிறோம். அது போராடி இறப்பதாகவே இருக்கட்டும்.’

2012-ம் ஆண்டு அக்டோபர் 9. பள்ளியில் 'பாகிஸ்தான் சுதந்திர வரலாறு’ பரீட்சையை எழுதிவிட்டு, தன் தோழிகளுடன் பேருந்தில் நெருக்கிப் பிடித்து அமர்ந்து திரும்பிக்கொண்டிருந்தாள். இரண்டு இளைஞர்கள் பேருந்தை மறித்தனர். ஒருவன் உள்ளே ஏறினான். 'உங்களில் யார் மலாலா?’ மிரட்சியில் பதில் சொல்லாத அந்த பர்தா தோழிகள், முகத்தைக் காட்டிக்கொண்டிருந்த மலாலாவைப் பார்த்தனர். அவன் துப்பாக்கி ஒன்றை எடுத்து மூன்று முறை சுட்டான். முதல் தோட்டா மலாலாவின் இடது கண் வழியே பாய்ந்து இடது தோளுக்குச் சென்றது. அதில் அவள் பதறிச் சரிந்ததால், அடுத்த இரண்டு தோட்டாக்கள் மற்ற இரு தோழிகளைத் தாக்கின. தன் நாட்டைக் கடைசியாகப் பார்த்த விழிகளுடன், ரத்த வெள்ளத்தில் மயங்கினாள் மலாலா!

ஸ்வாட் சென்ட்ரல் மருத்துவமனை. விஷயம் கேள்விப்பட்டு ஜியாவுதீன் வருவதற்கு முன்பாகவே மீடியா அங்கே குவிந்திருந்தது. மகளைக் கண்டு ஏதேதோ புலம்பினார். 'மலாலாவுக்காக துவா செய்யுங்கள்’ என மீடியாவிடம் கெஞ்சினார். ஸ்வாட்டில் சிகிச்சைக்குப் போதிய வசதிகள் இல்லாததால், மலாலாவை ராணுவ ஹெலிகாப்டரில் பெஷாவர் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கே ஐந்து மணி நேரம் அறுவைசிகிச்சை. தோட்டா மூளையைச் சேதப்படுத்தாததால், உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் மூளை வீங்கத் தொடங்கியது. அதன் அழுத்தத்தைக் குறைக்க, மண்டை ஓட்டில் கொஞ்சம் வெட்டியெடுத்து, வயிற்றுப் பகுதியில் பத்திரப்படுத்தினர். இடது தோள்பட்டையில் இருந்து தோட்டாவை நீக்கினர். தற்காலிகமாக ஆபத்து நீங்கியது என்றாலும் எதுவும் சொல்வதற்கு இல்லை எனும் நிலைமை. உலகமே மலாலாவுக்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது. சேனல்கள் எங்கும் மலாலா முகம். ஒபாமா முதல் பான் கீ மூன் வரை கண்டன அறிக்கைவிட, தாலிபனும் அறிக்கைவிட்டது. 'மதச்சார்பின்மையைப் பரப்பியதால், மேற்கத்திய நாகரிகத்தை பாஷ்டூனிய மண்ணில் வளர்த்ததால் மலாலாவுக்குக் குறிவைத்தோம்.’ மலாலா பிழைக்காவிட்டால் பாகிஸ்தானில் மாபெரும் அரசியல் மாற்றம் உண்டாகும் எனப் பயந்த அரசு, சிகிச்சைக்கு என அவளை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு, மலாலா தனி விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டாள். 'பாகிஸ்தானின் மகள் மலாலா’வைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தம். சுடப்பட்டு ஒரு வாரம் கழித்து மலாலா கண் விழித்தாள். அவளுக்காக உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து அட்டைகள் குவிந்தன. அவளது இடதுபக்க முகம் செயல் இழந்திருந்தது. சில அறுவைசிகிச்சைகள் நிகழ்ந்தன. வயிற்றுப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட மண்டை ஓட்டுத்துண்டு அகற்றப்பட்டு, பதிலாக துளையிட்டப்பட்ட இடத்தில் டைட்டானியத் தகடும் பொருத்தப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மலாலாவின் முகத்தில் மறுபிறவிப் புன்னகை.

சிகிச்சைக்காகவும் தாலிபான்களின் மிரட்டல் தொடர்வதாலும் மலாலா குடும்பம் பர்மிங்ஹாமிலேயே தங்கவேண்டிய நிலை. அவள் அங்கேயே பள்ளிக்குச் செல்லத் தொடங்கினாள். எப்போது ஸ்வாட்டுக்குத் திரும்புவோம் என அவளுக்குள் ஏக்கம் நிறைந்திருக்க, மலாலா அமெரிக்காவின் கைக்கூலி, வெளிநாட்டுக்குக் குடும்பத்துடன் தப்பியோட மலாலா நடத்திய நாடகம் என்று எல்லாம் விமர்சனங்களைச் சிலர் கிளப்பினர். ஆனால், மலாலா தன் போராட்டப் பாதையை மாற்றிக்கொள்ளவில்லை. கல்விக்காக ஏங்கும் உலகச் சிறார்களின் ஒட்டுமொத்தக் குரலாக மலாலாவின் குரல், இப்போது ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சபைகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 2014-ம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசு, 17 வயது மலாலாவுக்கும், குழந்தைத் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடிவரும் இந்தியரான கைலாஷ் சத்யார்த்திக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. அங்கு மலாலா பேசிய வார்த்தைகள்... (வீடியோ :
www.youtube.com/watch?v=MOqIotJrFVM

'இது, என் முதல் அடி; இறுதி அடி அல்ல. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்லும் வரை நான் என் போராட்டத்தை நிறுத்தப்போவதாக இல்லை’! 

* 2013-ம் ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட 'உலகின் முக்கியமான 100 மனிதர்களில்’ மலாலாவும் இடம்பெற்றிருந்தார்.
பர்கா அவெஞ்சர்!

*  மலாலாவை ஆதர்சமாகக்கொண்டு, ஜியா என்ற கார்ட்டூன் சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் கல்விக்காகவும் அநியாயத்துக்கு எதிராகவும் போராடும் Burka Avenger என்ற அந்த சீரியல், பாகிஸ்தானில் செம ஹிட்.
நோபல்!

*  அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, முதல் பாகிஸ்தானியப் பெண்; முதல் பாஷ்டூன்; மிக இளையவள் என்ற பெருமைகள் மலாலாவுக்கு உண்டு. அவர் பெற்றிருக்கும் சர்வதேச விருதுகளின் பட்டியல் மிக நீளம். 2013-ம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலாவின் 16-வது பிறந்த நாளை 'விணீறீணீறீணீ ஞிணீஹ்’ என ஐ.நா அறிவித்தது.

நன்றி - விகடன்

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்