/* up Facebook

Jun 8, 2015

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண் உறவு முறைச் செல்வாக்கு! - என்.சரவணன்


(கட்டுரையாசிரியர் “இலங்கை அரசியலில் பெண்களும், பெண்களின் அரசியலும்” எனும் நூலின் ஆசிரியர்.)

நிறைவேற்றப்படவிருக்கும் அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு அறிவித்துள்ளது. மாகாண சபை வேட்பாளர்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தும் வகையில் அதன் முதற்கட்டம் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில பெண்கள் அமைப்புகள் இது ஒரு மைல்கல் என்று அறிவித்திருப்பது அந்த அமைப்புகளின் இடையறா போராட்டத்தின் வெளிப்பாடே. அதே வேளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று சில அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

இலங்கையின் சனத்தொகையில் 52 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அதாவது இலங்கையின் சனத்தொகையில் 48 வீதமான அரசாட்சியில் 94வீத அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 13 பெண்கள் தற்போது அங்கம் வகிக்கிறார்கள். அதாவது மொத்த பாராளுமன்ற அங்கத்தினர் தொகையில் அது 5.8 சதவீதமே.

1931 இல் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு போராட்டத்தின் விளைவாகவே அது வழங்கப்பட்டது.

பெரும்பாலான பெண்களின் பிரதிநிதித்தித்துவம் இதுவரை அந்த பெண்களின் ஆண் உறவு முறை செல்வாக்கினாலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அதற்கு சில சிறப்பேற்பாடுகள் அவசியப்படுகிறது. வழமையான தேர்தல் நடைமுறையும், சமூக ஐதீகங்களும், சில விழுமியங்களும் பெண்களின் பிரதிநிதித்தித்துவத்திற்கு தடையாகவே இருந்து வருகின்றன. எனவே தான் இந்த நிலையை மாற்றுவதற்காக சட்ட ஏற்பாடுகளின் துணையை நாட வேண்டியிருக்கிறது.

பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட முதன்மை நாடுகளில் இலங்கையும் ஓன்று. அதுபோல உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்கிற பேரை இலங்கை தனதாக்கிக்கொண்ட போதும். அவை எதுவும் இலங்கையின் பெண்களின் அரசியல் தலைமைதத்துவத்திலோ, பிரதிநிதித்துவதிலோ மாற்றங்கள் எதனையும் சாதித்ததில்லை.

இதுவரை மொத்தம் 58 பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருக்கிறார்கள். அவர்களில் 41 பேர் அதாவது 70 வீதத்துக்கும் அதிகமானோர் ஆண் உறவுமுறை செல்வாக்கினாலேயே பாராளுமன்றம் நுழைய முடிந்திருக்கிறது என்பது களிப்பூட்டும் செய்தியல்ல. அதிலும் முக்கியமாக தாம் சார்ந்த ஆணின் மரணத்தின் விளைவாகவே பெரும்பாலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி வெளியான "லங்காதீப" எனப்படும் சிங்கள வார இறுதிப் பத்திரிகை "அரசியல்வாதியொருவரின் மனைவியொருவர் - தான், அரசியல்வாதியாகும் மோகம் ஏற்பட்டு விட்டால் அரசியல்வாதிக்கு கடவுளே துணை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்கட்டுரையாளர் தனது கட்டுரையில் "பெண்கள் தாம் தன்னிச்சையாகவே விரும்பி தமது “விதவைத்துவ” பயன்படுத்தலுக்¬கூடாக அரசியலுக்கு வருகின்றனர்: அதற்காக தமது "அரசியல்வாதி கணவர்" பலியாவதிலும் ஆர்வமுடையவர்கள்" என்கின்ற தொனியில் அக்கட்டுரை தொடர்ந்து செல்கின்றது. இந்த வக்கிரமமான கண்ணோட்டம் ஆணாதிக்க கருத்தியல் கொண்ட கண்ணோட்டமே என்பது ஒரு புறமிருக்க "விதவைத்துவ அரசியல்" தொடர்பாக உரையாடல் பெண்களின் அரசியல் உரையாடலில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. கணவரை, தகப்பனை அல்லது சகோதரனின் இழப்பினூடாகவோ, அல்லது செல்வாக்குள்ள அவர்களின் ஆதரவுடனோ இது நிகழ்ந்திருக்கிறது.

ஆசியாவின் தலைவிதி இது என்று சில ஆங்கில ஊடகங்கள் கடந்த காலங்களில் கூறின. குறிப்பாக தென்னாசியாவில் இந்த நிலைமை மோசமாகவே நீடித்து வருவது நாம் அறிந்ததே.

1994 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருந்த போது உலகப் பிரசித்தி பெற்ற பி.பி.சி. செய்திச் சேவையில் வாசிக்கப்பட்ட செய்திக் கட்டுரையில் "Battle of the Widows" (விதவைகளின் போராட்டம்) என்று குறிப்பிட்டிருந்தது.

அத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரில் முக்கிய பிரதான தேசியக் கட்சிகளுக்கிடையிலேயே பலத்த போட்டி நிலவியது. ஐ.தே.க. பொ.ஜ.ஐ.மு. ஆகிய அக் கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களாக முறையே ஸ்ரீமா திசாநாயக்க - சந்திரிகா குமாரணதுங்க ஆகிய இருவரும் காணப்பட்டனர். இத் தேர்தலில் இவர்கள் இருவருமே “விதவைத்துவ” அடையாளப் படுத்தப்பட்டவர்கள். இதனைக் குறிப்பிட்டே பி.பி.சி. சேவை "விதவைகளின் போராட்டம்" எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் "விதவைத்துவம்" மட்டும் ஆட்சியதிகாரம் செலுத்தக் கூடிய தகுதியாக இருக்க முடியாது என்பதை சமகால “பெண் அரசியல்” முன்னெடுப்புகள் உறுதிசெய்து வருகின்றன.

இலங்கை அரசியலில் “விதவைத்துவத்தின்” செல்வாக்கை இக் கட்டுரையில் உள்ள அட்டவணை தெளிவாக உணர்த்தும்.
இந்த அட்டவணையில் காணப்படும் சிலர் ஒன்றுக்கு மேற்தடவைகள் அங்கம் வகித்திருக்கிறார்கள்.
சிலர் ஒருவருக்கு மேற்பட்ட நெருங்கிய ஆண் உறவு முறை செல்வாக்குக்கு ஆளாகியிருக்கின்றனர்.
பாராளுமன்றத்தக்கான முதல் பிரவேசமே ஆண் உறவு முறைச் செல்வாக்கினாலேயே நடந்தது. 1931 இல் திரு.ஜோன் ஹென்றி மீதெனிய அதிகாரம் என்ற அரசாங்க சபை உறுப்பினரின் மரணத்தைத் தொடர்ந்தே அவரது மகள் எட்லின் மொலமூரே இடைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டார்.

இடதுசாரிப் பெண்களின் அரசியற் பிரவேசத்திற்கு ஆண் உறவு முறைச் செல்வாக்கு ஒரு ஊக்கியாக இருந்த போதும் அது மட்டுமே காரணமாக இருக்கவில்லை. என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாகச் சொல்லப் போனால் இடதுசாரிக் கட்சிகளுக்கூடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த பெண்கள் எவருமே "விதவைத்துவத்தையோ" அல்லது ஆண் உறவுமுறை செல்வாக்கையோ பயன்படுத்தியிருக்கவில்லை. அப்பெண்களின் தீவிர அரசியல் செயற்பாடுகளும், பயிற்சிகளும் அவர்களின் அரசியல் ஆளுமையை வளர்த்திருந்தன.

புளோரன்ஸ் சேனநாயக்க, குசும் சிறி குணவர்தன, டொரின் விக்கிரமசிங்க, விவியன் குணவர்தன, சோமா விக்கிரமநாயக்க போன்றவர்கள் அந்த வரிசையில் முக்கியமானவர்கள். இன்னும் சொல்லப் போனால் தங்கள் கணவர் உயிருடன் இருக்கும் போதே அரசியலுக்கு இவர்கள் நுழைந்தனர்.

ஆண் உறவு முறை செல்வாக்கை பெண்கள் "பயன்படுத்தினார்கள்" என்று வாதிடுவோரும் உண்டு. ஆனால் ஆண் உறவு முறைச் செல்வாக்கு பெரும்பாலும் பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஆதாரங்களையே அதிகம் காண முடிகிறது. அந்தந்த காட்சிகளில் இருந்த ஆண் தலைமை இந்த பெண்களை அரசியலில் திணித்தார்கள் என்றே கூறவேண்டும். அந்த பெண்களின் நெருங்கிய ஆண் உறவின் அனுதாபத்தையோ, அல்லது செல்வாக்கையோ இந்த ஆண் தலைமை சாதகமாக்கிக்கொண்டு இந்த பெண்களை களத்தில் இறக்கியதை வரலாறு நெடுகிலும் காணலாம்.

பாராளுமன்ற அரசியலுக்கு இவ்வாறு பிரவேசித்த பெண்கள் பலர் நாளடைவில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டு இதே முதலாளித்தவ-ஆணாதிக்க ஒடுக்குமுறை யந்திரத்தை பாதுகாத்து வருவதை நடைமுறையில் காண முடிகிறது. இன்று இடதுசாரி இயக்கங்களைச் சாராத பெண்களே அல்லது பெண்ணியம், பெண்கள் நலன் என்பவற்றில் அதிகம் அக்கறை குறைந்த பெண்களே பிரதிநிதித்துவம் வகிக்கின்ற நிலையில் அது மேலும் சாத்தியமாகிறது. எனவே பெண்கள் பெண்களின் நிலையை பிரதிநித்துவப்படுத்தப்படுத்தும் சாதகமான அரசியல் சூழல் கூட தற்போதைய அரசியல் அமைப்பு முறைக்குள் இல்லை. இதற்கொரு ஒரு உதாரணமாகத 94 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் திருமதி ரேணுகா ஹேரத்தின் உரையை குறிப்பிடுவது பொருந்தும்.

"இந்த நாட்டில், ஏன் வீட்டில் கூட பிரதானமானவர் ஆண்தான். வீட்டுக் குடியிருப்பாளர் பட்டியலிலும் கூட ஆணைத்தான் முதலில் குறிக்கின்றோம். எனவே நாம் நமது நாட்டின் தலைவராக ஆணொருவரையே தேர்ந்தெடுத்தல் வேண்டும்." (ராவய 27-11-94)

இதனைச் சொன்னவர் நாட்டில் பெண்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பிலிருந்த முக்கிய பொறுப்பு வாய்ந்தவரின் அறிக்கை என்பதனால் மிகவும் கவனிக்கத்தக்கதாகிறது. தம்மை ஒடுக்குகிற சக்தியை இனங்காண்பது மட்டுமல்லாது தாமும் சேர்ந்து தம்மையே ஒடுக்குகின்ற அவல நிலையையே இங்கு காண்கின்றோம். வர்க்க நலன் சார்ந்த தேசிய அரசியல் எவ்வாறு ஒடுக்கப்படும் பிரிவினரை கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படுத்துகிறது என்பதை இங்கு தெளிவாகக் காண்கின்றோம். 
இப்போது பல பெண்கள் அமைப்புகள் பல்வேறு போராட்ட வடிவங்களுக்கு ஊடாக பெண்களின் பிரதிநித்தித்துவத்தை வலியுறுத்தி அரசியல் அதிகார மட்டங்களிலும், சிவில் சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். சில அமைப்புகள் பெண்களைத் தனியாகக் கொண்ட வேட்பாளர்களையும் கூட தேர்தல்களில் களமிறக்கி ஒரு முன்மாதியான பயிற்சிக் களத்தை அறிமுகப்படுத்தியிருந்தன. அதிகாரத்தில்  பெண்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துவிட்டால் பெண்களின் நலன்கள் அனைத்தும் கிட்டிவிடும் என்று உறுதிகூறத்தேவையில்லை. ஆனால் நிச்சயம் பெண்களின் நலனில் கணிசமான மாற்றத்தை இது நிச்சயம் ஏற்படுத்தும்.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண் உறவு முறை செல்வாக்கை மாற்றியாக வேண்டுமெனில் முதலில் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாக வேண்டும். அவ்வகை இட ஒதுக்கீடுகள் உலகில் கணிசமான வெற்றியைத் தந்திருக்கின்றன.
இந்தக் கட்டுரையில் கையாளப்பட்டுள்ள விதவை என்கிற சொல் ஏற்புடையது அல்ல. அந்த அரசியலை குறிப்பாக உணர்த்துவதற்காகவே அதனை அடைப்புக்குள் குறிக்கப்பட்டுள்ளது. கணவரை இழந்த பெண்களை விதவை என்று சுட்டும் வழக்கு மனைவியை இழந்த ஆண்களை ஆண்களை தபுதாரன் என்று அழைப்பதில்லை. மேலும் “விதவை என்கிற சொல்லுக்குள் தொற்று நிற்கின்ற உள்ளடக்கம் மோசமான பல ஆணாதிக்க அரசியல் கூறுகள் பலவற்றை கொண்டது என்பது நாமறிந்ததே.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்