/* up Facebook

Jun 21, 2015

ஆமா எனக்கு மாசாமாசம் ரத்தம் வரும் இப்ப அதுக்கு என்னாங்கறீங்க??

                              அனிஷா பவனானி.

நான் ஐந்தாவது படிக்கும் போது பள்ளி சுற்றுலாவிற்கு கிளம்பும் சமயம் எனக்கு எதிர்பாராமல் பீரியட் வந்தது. அதை ஒரு டீச்சரிடம் சொன்னதன் பின் பஸ்சில் ஏறி அமர்ந்தேன்.

சென்றடைந்த சுற்றுலா தளம் ஒரு மிகப் பழமையான கோவில். நானும் தோழிகளும் உள்ளே போய் சிற்பங்களின் அழகை ரசித்தவாறு சுத்தி வந்தோம். அப்போ வேகமா என்னிடம் வந்த இன்னொரு டீச்சர் உனக்கு பீரியட் வந்திருக்கான்னு கேட்டார். ஆமாம் என்றதும் அவர் முகம் மாறியது. கோபமா கத்த ஆரம்பித்தார்

"உனக்கு அறிவிருக்கா? ஏன் உனக்குத் தெரியாதா பீரியட் இருக்கும் போது கோவிலுக்குள் வரக் கூடாதுன்னு. உங்கம்மா உனக்கு சொல்லித் தரலயா? நாளைக்கு மொதல்ல உங்கம்மாவ வரச் சொல்லு ஸ்கூலுக்கு அவங்ககிட்ட பேசணும்.."

நான் பயத்தில் வெளிறிப்போனேன். வாழ்க்கையின் மிக மோசமான ஒரு குற்றத்தை செய்துட்டோம் போலிருக்கேன்னு தோனுச்சு. அத்தோடு பஸ்சில் போய் உட்கார்ந்துகிட்டேன். வீடு போய் சேரும் வரை மீதி பயணம் முழுதும் என் கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவில்லை.

நான் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? நாளை டீச்சர் என்ன சொல்வாங்க என்ற குழப்பத்தோடு வீட்டிற்கு போனதும் அம்மாவிடம் படபடப்பாக நடந்ததை சொன்னேன். அதைக் கேட்கும் போதே அம்மா முகத்தில் ஒரு அறுவெறுப்பு படர்ந்தது... சொல்லி முடித்ததும் அம்மா " நீ மொதல்ல ரிலாக்ஸ் ஆகு, நம்ம வீட்டில் இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு இடமில்லை. அந்த டீச்சரோட பேச்சை விட்டுத் தள்ளு அது ஒரு முட்டாள்தனமான மூடநம்பிக்கை. நீ வேலையப் பாரு" என்றார்.

மறுநாள் நான் அந்த டீச்சரை பார்க்கவில்லை. அவரும் அது குறித்து பேசவில்லை, மறந்துவிட்டார். ஆனால் மாதவிலக்கு இருக்கும் போது கோவிலுக்கு போனால் அது மாபெரும் குற்றம் என்கிற மாதிரி அவர் ஏற்படுத்திய பெருத்த அவமானமும், வடுவும்... எப்படி ஒரு மனித ஜீவனால் ஒரு சின்ன குழந்தையிடம் இப்படி நடந்துக்க முடியுது??

பீரியட் வறதினாலேயே நீ ஒரு மோசமான, அருவெறுக்கத்தக்க ஆளா ஆகிட முடியாதுன்னு அம்மா சொன்னாங்க. ஆனா அதை மத்தவங்க ஒத்துக்கற மாதிரி தெரியல. எனக்கு நடந்தது போலவே சம்பவங்கள் சில மாற்றங்களோடு என்னைச் சுற்றி நடப்பதை பார்த்துகிட்டேத் தான் இருந்தேன்.

என் தோழி வீட்டில் பீரியட் வந்த பெண்களை கிச்சனுக்குள்ள விட மாட்டாங்க, சாப்பாட்டைத் தொடக்கூடாது. என்னை ஆசையா ஒரு பூஜைக்கு கூப்பிட்ட அத்தை எனக்கு பீரியட்னு சொன்னதும் நல்ல வேளை நீ வரத் தேவையில்லைன்னு அதிர்ச்சியானாங்க.

இந்த நம்பிக்கையை நினைத்தாலே வெறுப்பா இருக்கு. பெண்கள் இதை குருட்டுத்தனமா நம்பறதும், அந்த வழக்கங்களை காலம் காலமா தொடர்வதும். ஆண்களும் இதுக்கு துணை போவதும் இதை வலியுறுத்தறதும்.

இந்தியப் பெண்களே!!
அடுத்த முறை யாராவது பீரியட் இருக்கும் போது கிச்சனுக்கு போகக் கூடாது, பூஜையறைக்கு, கோவிலுக்கு போகக் கூடாதுன்னு சொன்னா போய் உங்க வேலையப் பாருங்கன்னு சொல்லுங்க. நீங்களே இந்த மாதிரி ஒரு கற்கால வழக்கத்தின் மேல் நம்பிக்கை உள்ளவரா இருந்தா அதை விட அசிங்கம் வேறில்லை.

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு இயற்கையான உடற்கூறு நிகழ்வு. நாம ஒன்னும் அந்தப் புனிதத் தலங்களை நம்ம ரத்தம் சிந்தி அசிங்கப்படுத்தல. நம் உடம்புக்குள்ள வர ரத்தத்தால் அந்த இடத்தோட புனிதம் கெட்டுப் போய்டுதுன்னா முட்டியில் இடிச்சோ, கை விரலை தவறி வெட்டியோ ரத்தம் வறப்பவும் அந்த புனித இடங்களுக்குள் போகாதீங்க. பெண்களோட மாதவிடாய் ரத்தம் மட்டுமே அசுத்தமானதா??

ஒரு பெண்ணா இருப்பதாலேயே நான் ஒரு தகுதியற்றவளா, பலகீனமானவளா, அசுத்தமானவளா நடத்தப்படுவதை என்னால் ஏத்துக்க முடியாது. கடவுள் தன் எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் அன்பு செய்வார்; அது ஏழையா பணமுள்ளதா, ஆணா பெண்ணா, அதுக்கு மாதவிடாய் வருதா இல்லையான்னு பாக்க மாட்டார். இந்தியா போன்ற அர்த்தமற்ற பல நம்பிக்கைகள், தடைகள் உள்ள தேசத்தில் அவற்றை ஒவ்வொன்றாகக் களைய வேண்டும். மாதவிடாய் குறித்து விவாதிப்பதும் எழுதுவதும் அதில் மிக அவசியமானது. அதற்கான சிறந்த சமயமும் இதுவே.

கட்டுரையாளர்: அனிஷா பவனானி.
இவர் ,சில வருடங்களுக்கு முன்னர் தனது 18வது வயதில் எழுதிய கட்டுரை.இது
அனிஷா தற்போது மும்பை சேவியர் கல்லூரியில் சமூக அறிவியல், மனிதம் குறித்து படிக்கிறார்.

நன்றி- தமிழில் 
            அனிதா என் ஜெயராம்.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்