/* up Facebook

Jun 10, 2015

பெண் என்றால் உடல் மட்டுமா?


பெண் உடலை இந்தச் சமூகம் பார்க்கும் விதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது ‘சிவப்பு கண்ணாடி’ நாடகம். புதுச்சேரி பல்கலைக்கழகக் கலாச்சார மையத்தில் அரங்கேறிய இந்த நாடகம், ஜூலை மாதம் நடக்க இருக்கும் திருவனந்தபுரம் நாடக விழாவுக்குத் தேர்வாகியுள்ளது.

இந்த நாடகம் பெண்கள் உடலளவில் ஒடுக்கப்படுவதையும், அவர்களின் பிரச்சினைகளையும் விரிவாகப் பேசியது. வசனங்கள் குறைவாக அமைந்து, பார்வையாளர்களிடம் காட்சிகள் மூலமே கேள்வி எழுப்பியது சிறப்பு.

ஆணும் பெண்ணும் விளையாடுகிறார்கள். பெண்ணுக்கு இணையாகத் தனது திறனை வெளிப்படுத்த முடியாத ஆண் வர்க்கம், ‘தீட்டு’ என்று பெண்களை ஒடுக்கியதையும் பதிவுசெய்திருந்தார்கள். வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்திலும் அன்பு, நம்பிக்கை ஆகியவற்றின் பெயரால் எடுக்கப்படும் வீடியோக்கள், பின்னர் வலைத்தளங்களுக்குச் சென்று உருமாறிப் பெண்களை ஒடுக்கும் ஆயுதமாக மாறிவரும் போக்கையும் சித்தரித்திருந்தனர்.

தெரிந்தவர்கள் மூலமாகவே குழந்தைகள் அதிக அளவு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதையும் விவரமாகப் பதிவுசெய்தனர். கர்ப்பிணிகள் பழைய இதிகாசங்களைத் தேடிச் செல்வது போன்ற காட்சியமைப்புகளின் மூலம் பிரச்சினை பெண்கள் அணியும் உடையில் அல்ல என்பதைத் தெளிவாகப் புரியவைத்த விதம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கும் தொடர்பில்லை என்றாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற நுண்ணிய சங்கிலியால் முழு நாடகத்தையும் இணைத்திருந்தனர்.

நாடகம், ஓவியம், சிற்பம், இசை போன்ற கலை வடிவங்களின் புதிய செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் ‘யாழ் கலை மையம்’ சார்பில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. தொழில் முறை நடிகர்களுடன், சோரப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. நாடகத்தின் முடிவில் மூத்த நாடக விமர்சகர் வெளி ரங்கராஜன், எழுத்தாளர் அரியநாச்சி, யாத்ரா சீனிவாசன் உட்படப் பலர் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினர்.

நிலமும் பெண்ணும்
இந்நாடகத்தை இயக்கிய யாழ் கலை மையத் தலைவர் கோபி, “காலங்காலமாகப் பெண் உடலைச் சமூகம் பார்க்கும் விதத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதுதான் இந்த நாடகத்தின் நோக்கம். பெண் உடல் மற்றும் அவ்வுடலிலிருந்து வெளியேறும் குருதியை உணர்வு என்ற கண்கொண்டு அர்த்தமாக்க வேண்டும் என்ற முனைப்பில் இதை மேடையேற்றினோம்.

நடிகர்கள் பெண் உடல்களை நிலங்களோடு ஒப்பிட்டு, இந்த உலகிலுள்ள அனைத்து நிலங்களின் சாட்சியாக மாறி இயங்கினர். அந்த நிலங்களின் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள், வன்கொடுமைகளைப் போர்க் குற்றத்தோடு ஒப்பிட்டனர். இங்கே பெண்கள் மீது முன் வைக்கப்படும் நன்னடத்தை, கற்பு தொடங்கி உடல் அரசியல் முன்வைத்து நடத்தப்படும் விளையாட்டையும் தெரிவித்தோம். ஒரு குடும்பத்தையோ, ஒரு ஊரையோ குறிப்பிடாமல் பெண்களின் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அதற்கான சிந்திக்கும் தளத்தையும் உருவாக்கினோம்” என்கிறார்.

இதுபோன்ற நாடகங்கள் சிலர் மனங்களிலாவது மாற்றத்தை விதைத்தால் நல்லது.

நன்றி - தி இந்து


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்