/* up Facebook

Jun 27, 2015

36 வயதினிலே


36 வயதினிலே பார்த்துவிட்டீர்களா? கண்டிப்பாக குடும்பத்தோடு கூடியிருந்து பாருங்கள். நேற்றும் இன்றும் என இரண்டு தடவை பார்த்துவிட்டேன். சமூகத்திற்கு ஏற்ற மிகத் தரமான ஒரு படைப்பு!

ஹாய்! ஜோதி அக்கா, இவ்வளவு காலமும் எங்கே இருந்தீர்கள்? ஏழெட்டு வருஷமா உங்களை ரொம்ப ரொம்ப மிஸ்ட் பண்ணிட்டுதே இந்த தமிழ்ச்சினிமா. ஏனோ வந்தார்கள்-வென்றார்கள்-சென்றார்கள் அதன்பின் அவர்கள் எங்கே என்றே தேடும் நிலையில் அல்லாடிக்கொண்டிருக்கும் இன்றைய சினிமாக் காலத்தில் தங்களின் மீள்வரவிற்காய் தங்களுக்கும் அண்ணன் சூர்யாவிற்கும் எங்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய பாராட்டு!

மலையாளப் படமொன்றின் (How old are you?) தழுவலாக இருந்தாலும் அதனைத் தமிழில் நம்பிக்கையோடு கொடுத்த ரோஷன் ஆன்ட்ரூஸ் அவர்களின் துணிச்சல் மெய்சிலிர்க்கத்தக்கது. குத்தாட்டம் இல்லை; குறையாடை இல்லை; ஆபாசமில்லை; அடாவடி இல்லை ஆனாலும் அடிநெஞ்சைத் தொடாமல் தொட்டிருக்கின்றது படம்.

துள்ளித்திரிந்த பள்ளிப்பருவ இளமைக்காலம் கடந்து குடும்பத்தினுள் செல்கின்ற அத்தனை பெண்களும் தமது வாழ்க்கைக் கோலத்தினை குறுகிய வட்டத்தினுள் குறைத்துக்கொள்வது சமூக ஒடுங்குநிலையாகிவிட்டது. இதனை அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் பேசிய பெண்ணியவாதி ஒருவர் சமூக எதார்த்தமென்று குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் ஏற்புடையதன்று. அவர் ஒரு பெண்ணிய வாதியாகவே இருந்துகொண்டு பெண்களின் சமூக ஒடுங்குநிலையை எதார்த்தம் என்று சொல்வது ஆச்சரியமானது.

நடிகர் மம்முட்டியின் அழகன் என்றொரு படம், அதில் புலவர் புலமைப்பித்தனின் அற்புதமான வரிகளிலமைந்த ஒரு பாடல் (சாதி மல்லி பூச்சரமே) ஞாபகத்திற்கு வருகிறது.
"எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீயொரு கைதியா?

"கடுகுபோல் உன்மனம் இருக்ககூடாது. கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்" என்ற வரிகளை தனது அற்புதமான நடிப்பின்மூலம் ஞாபகப்படுத்தியிருக்கின்றார் ஜோதிகா. இந்தப் பாடல் வரிகளின் அருமையை எத்தனைபேர் ஞாபகம் வைத்துள்ளீர்களோ நானறியேன்!

திருமணமாகி ஒழுங்குநிலைக்குள் வருகின்ற ஒரு நல்ல பெண், தனது உள்ளத்தால் ஒருபோதுமே வஞ்சகம் பாராட்டியது கிடையாது. ஆனால் குடும்பம் தொட்டு சமூகத்தின் அத்தனை நிறுவனங்களிலிருந்தும் அவளைநோக்கி எய்யப்படும் கேலிக்கணைகளால் அவள் மனம் மிகவும் வேகுகின்றது. அதிலிருந்து மீண்டெழுவதே அவளின் அடுத்த சூர்யோதயம்!
பகட்டு வாழ்க்கையை நாடிச்செல்லும் நடுத்தரக் குடும்பங்களிலேயே இதுபோன்ற பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அக் குடும்பங்களைச்சேர்ந்த பெண்களுக்கு ஒர் உரமூக்கியாகவும் ஆண்களுக்கு நல்ல சாட்டையடியாகவும் அமைந்திருப்பதை எதிர்காலக் குடும்பத்தலைவன் என்ற நிலையில் அனுபவித்து எழுதுகிறேன். அதனால்தான் குடும்பத்தோடு கூடியிருந்து பாருங்கள் என்று கேட்கிறேன்! எம்மிடையே ஒட்டிநிற்கும் வறட்டுக் கௌரவங்களும் ஈமாக்கினியில் வேகவேண்டிய ஈகோக்களும் தான் மனித முயற்சியின் முட்டாள்தனமான முட்டுக்கட்டையாகின்றன.

இன்று நாம் உண்ணுகின்ற அனைத்திலுமே விஷம் ஏறிநிற்கின்றது. எமது முன்னோர்கண்ட இயற்கைப்பண்புமிக்க உணவு (Organic food) எம்மைவிட்டுத் தூரம் சென்றுவிட்டது. அதனை மக்களுக்கான நல்ல விழிப்புணர்வாக்கியிருக்கின்றது படம். வீட்டுத்தோட்டம் வைத்து இயற்கைப்பண்பு உணவை உண்போம் என்ற கொள்கையில் வந்தாலும் அங்கேயும் செயற்கை உரப்பாவனையும் கிருமி நாஷினி விசிறலுமே விஞ்சிநிற்கின்றன.

எமது முன்னோர்கள் அன்று இயற்கைப்பண்பு உணவை உண்டதனால்தான் எமது இன்றைய தலைமுறை நிமிர்ந்து நிற்கின்றோம். ஆனால் எமது எதிர்கால சந்ததிக்கு-எமது பிள்ளைகளுக்கு நாம் இப்பவே எவ்வளவோ துரோகம் இழைக்கின்றோம் என்பதைச் சிந்திக்கின்றோமா?
இது மட்டுமல்ல இன்னும் நிறைய சிந்திக்கவைக்கின்றது இந்தப்படம். ஒளிப்பதிவு இசை என அனைத்து விடயங்களிலும் அனைவருமே நன்றாக உழைத்துள்ளனர் என்றுதான் சொல்லமுடியும்! கண்டிப்பாக பாருங்கள்.

நன்றி - Artist shan 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்