/* up Facebook

Jun 4, 2015

சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் ! உருக்குலைந்து வரும் விவசாயம் நல்லாருந்துச்சுன்னா இந்த ஜனங்க ஏன் இப்படி திசைக்கொருத்தரா ஓடப் போறாங்க!

கலைவாணிக்கு முப்பது வயசு கூட இருக்காது. ஏழை விவசாயக் குடும்பம், அம்மா செத்து, குடிகார அப்பனோட மல்லுக்கட்ட முடியாம, இன்னொரு ஏழைக்கு வாக்கப்பட்டு, சென்னைக்கு குடி வந்து, அங்க ஒரு பணக்கார மாளிகையில குடும்பத்தோட இடுப்பொடியற மாறி வேல பாத்து, அந்த கிழட்டு முதலாளியோட வக்கிர புத்திய எதித்து கேட்டு, இருந்த வேலையும் போக, ஐந்து வயசு புள்ளையோட அடுத்து என்ன பண்ணணும்ங்கிற நிலைமையிலதான் சிங்கப்பூரு தெய்வமாட்டம் வந்துது.

ஏழைன்னாலும் கலைவாணி ஊருல கௌரவமா வாழணும்கிறது ஒரு நியதி. ஏழையா கஷ்டப்பட்டு வாழ்றத விட ஏழைன்னு சொல்லிக்கிறதுதான் நம்ம ஆட்களுக்கு ரொம்ப அவமானம். அதனாலதான் கலைவாணி பட்டணத்துக்கு போய் ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேல பாத்தா. இலவச வீடு திட்டத்துல சேந்து ஒரு இலட்சம் கடன வாங்கி குடிசைக்கு தளம்போட்டா. மகளை இங்கிலீஸ் மீடியத்துல சேக்குறதுக்கு பணம் சேத்து வைச்சா. இதுக்கா அவ அடைஞ்ச துன்பத்த பாத்தீங்கன்னா நம்பவே மாட்டீங்க. இதுல கொஞ்சம் தப்பி விழுந்தா அவங்க ஊர்ல உடனே மருந்து குடிச்சு முடிச்சுக்குவாங்க. கலைவாணி சின்ன வயசுல இருந்தே வாழ்றதுக்கு போராடிக்கிட்டே இருந்தவங்கிறதுன்னால இன்னும் அந்த முடிவுக்கு போகல.

அவளோட வீட்டுக்காரரு ஒரு வாயில்லாப் பூச்சி. மாடு மாதிரி வேல மட்டும் பாப்பாரு. அத வுட்டா ஒரு சின்ன விவரம் கூட விசாரிக்க தெரியாத அப்பாவி. இதுல எதுன்னாலும் கலைவாணிதான் முடிவு செஞ்சாகணும். ஆனா வேலை இல்லாம, ஊருக்குள்ள எப்படி தலை காட்டமுடியும்? வயித்து பிழைப்ப எப்படி ஓட்ட முடியும்?

அவளோட நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுய சாதி நண்பர் ஒருவர், “சிங்கப்பூரில் வீட்டு வேலை இருக்கு”ண்ணு சொன்னாரு. “கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வேலை செய்யலாம்னாலும், கையில் பெண்ணுக்கான விசா மட்டும்தான் இருக்கு”ண்ணு தூண்டில வீசுனாரு. மீனும் சிக்கியிருச்சு. “முதலில் நீங்கள் புறப்பட்டு போங்க, இரண்டு மாசத்துக்குள்ள உங்க வீட்டுக்காரரும் சேந்துக்கலாம். இதுக்காக நீங்கள் பத்து பைசா கூட செலவு வேணாம். பாஸ்போட்டும் விமான டிக்கட்டுக்கான பணமும் ஏற்பாடு செஞ்சா போதும்”னு பேசியிருக்கிறார்.

ஒரு ஏழைக்கு விடிவு காலத்தை கண்ணுல காட்டுறதுக்கு இது போதாதா என்ன? கலைவாணி சம்மதிச்சதும் அவரு மிச்ச ஏற்பாடுகள செஞ்சாறு.

“நீங்க வேலை செய்யுற வீடு தமிழ் குடும்பந்தான், எந்தப் பிரச்சனையும் இல்லை. சிங்கப்பூர் போய் சேருவதற்கான எல்லா செலவையும், சட்டரீதியான ஏற்பாடுகளையும் அவங்களே பாத்துக்குவாங்க”ண்ணு சொன்னாரு. “எத்தனையோ பேரு போக ரெடியா இருக்காங்க ஆனா நாணயமா இருப்பிங்கன்னு தான் உங்கள அனுப்புறேன்”னு நம்பிக்கையூட்டினார்.

மத்தவங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு நல்ல வேலை நம்மள நம்பி ஒப்படைச்சுருக்காங்கண்ணு கலைவாணிக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு. நாமெல்லாம் சீரியல பாத்தே அழுவுற அப்பாவிங்களாச்சே!

சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.

நான்கு மாத சிங்கப்பூர் சிறை வாழ்க்கையை அவளது வார்த்தையிலேயே கேளுங்க.“சிங்கப்பூருல நான் வேலைக்கு போன குடும்பத்துல கணவன் மனைவியோட 18 வயசுல ஒரு பொண்ணு 13 வயசுல ஒரு பொண்ணுன்னு மொத்தம் நாலு பேரு இருந்தாங்க.

அந்த வீட்டுக்குள்ள நொழைஞ்சதுமே தூக்கி வாரி போட்ட முதல் விசயம் ஒரு கால் சட்டையையும், பிரா மாறி ஒரு பனியனையும் கொண்டு வந்து யூனிஃபாமாட்டம் போட்டுக்கன்னு சொன்னதும் உயிரே போச்சு. “இந்தாங்க இதையெல்லாம் நான் போட்டுக்க மாட்டேன். இதெல்லாம் போட்டுதான் ஆகனுன்னா இப்பையே என்னை வண்டி ஏத்தி விட்டுறுங்க நான் போயிர்ரே”ன்னு சொல்லிட்டேன். சரி வேல பாக்குற மாட்டுக்கு சட்டைன்னா என்ன, சேலைன்னா என்னண்ணு விட்டுட்டங்க போல.

அவங்க வீடு இருந்தது ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்துல. எங்க ஏறுனோம் எங்க எறங்குனோம் எத்தனாவது மாடியில இருக்கோம் எதுவும் தெரியாது. ஒரு மாசம் வரைக்கும் காலையில 8 மணிக்கி பூட்டிட்டு போனா ராத்திரி 8 மணிக்கு வந்துதான் திறப்பாங்க. வெளிக்காத்து இல்லாம போன ரெண்டு நாளுலயே மனசு வாடிப்போச்சு. கிராமத்துல சுத்தி சுத்தி பொழங்குனவங்களுக்கு ஒரு கட்டிடத்துக்குள்ளயே அடைஞ்சு கிடக்கணும்னா எப்படி இருக்கும்? சரி, நம்ம வயித்து கஷ்டத்துக்கு ஜெயில்ல இருக்குறதா மனச தேத்திக்கிட்டேன்.

பாத்ரூம தவிர வீட்ட சுத்தி கேமரா இருக்கும் ஒரு நிமிசம் நேரம் சும்மா உக்கார முடியாது. நடந்துகிட்டே இருக்கனும். கொஞ்ச நேரம் அக்கடான்னு உக்காந்தா கேமரா காட்டிக் கொடுக்கும். பாத்ரூம்ல கொஞ்சம் அதிக நேரம் இருந்தாக்கூட வூட்டம்மா கூச்சப்படாம ஏன் எதுக்குன்னு கேப்பாங்க. அந்தக்காலத்துல கங்காணி காலிப்பயலுவ மாறி இப்போ காமராவ அடியாள வச்சுருக்காங்க.

singapore-domestic-worker-abuseஅதுனாலதான் எனக்கும் காமரா இல்லேங்கிறதால பாத்ரூம்தான் எதோ கொஞ்சம் பிடிச்சிருந்துச்சுன்னு சொல்லலாம். அங்கதான பல நாளு மனம் விட்டு அழுதிருக்கேன். கால் கழுவுற தண்ணியோட கண்ணீரும் சேந்து ஓடும்.

வீடு சன்னல் டாய்லெட்டு சுத்தமா தொடச்சு வாசனையா வச்சுக்கனும். நெதமும் பெட்சிட்டு, கதவு ஜன்னலு ஸ்க்ரின், தலையணை உரை, மிதியடின்னு ஒரு நாள் பாக்கி விடாம தொவைக்கனும். ஒரு நிமிசம் சும்மா இருந்தா, “என்ன ரெஸ்ட் எடுக்குரியா. வேலையை பாரு”ன்னுவா வூட்டம்மா. வீட்டுல யாரும் இல்லேன்னாலும் ரெஸ்ட் எடுக்க முடியாது. வந்தா நான் என்ன செஞ்சேன்னு காமராவா பாத்து தெரிஞ்சுக்குவாங்க.

எங்க இருந்தாலும் சுத்தி சுத்தி வேல பாக்குறதுல என்ன மிஞ்ச முடியாதுன்னு எங்கூரு இளந்தாரிக சொல்லுவாளுக. அப்பிடி பெயரெடுத்த நானே அங்க ஒரு வாரத்துல ஒடஞ்சு போயிட்டேன். இங்கையாவது நம்மள மனுசின்னு எப்பவாச்சும் முதலாளிமாரு நினைப்பாங்க. அங்க பாத்தீங்கன்னா நம்மள சாவப்பொறந்த மெசின் மாறிதான் நடத்துவாங்க.

நான் சிங்கப்பூர் நாலு மாசத்துல ஒரு உருண்ட சோறு கூட சாப்புடல. அந்த வீட்டுல மூனு நேரமும் ப்ரெட்டுதான். பிரெட்ட துண்டு துண்டா வச்சு நடுவுல ஆம்லேட் இல்ல தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்கா, முட்டகோசு அது மேல ஏதோ டப்பாவுலேருந்து பிசுனாட்டம் ஊத்தி திம்பாங்க பாத்தாலே கொமட்டிக்கிட்டு வரும் என்னால திங்கவே முடியாது. வெறும் பிரெட்ட மட்டும் தின்னுட்டு தண்ணிய ஒன்னுக்கு ரெண்டு செம்பா குடிச்சிட்டு படுத்துருவேன்.

கறி மீனு வாங்கியாந்து ஃப்ரிஜ்ஜு நிறையா வச்சுருவாங்க. அதை அப்பிடியே கழுவிட்டு என்னமோ ஓவன்னு ஒரு அடுப்புல வச்சு சுட்டு அது மேல எதையோ ஊத்தி தின்னுவாங்க. இருவது ஆளு நின்னு வயல்ல நடவு செஞ்சாலும் ஒத்தாளா நின்னு ஆக்கி எறக்கிருவேன். ஆனா இவங்க சமையல செய்ய ரொம்பவே செரம்ப்பட்டேன். அவங்களுக்கு பிடிக்கிறது அவங்க நல்லா சாப்பிட்டடும். ஆனா நம்மள மாறி வேற ஊருக்காரங்க என்ன சாப்பிடுவோம்ணு கூட நினைக்கா மாட்டாங்களா?

அவங்க பேசரதே புரியாது. எல்லாருமே இங்லீஷ்லதான் பேசிக்குவாங்க. என்ன இங்லீஷ்லதான் திட்டுவாங்க. என்ன வேலை சொல்றாங்கன்னு புரியாது. அந்த அம்மாவுக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் ஆனா பழக்க தோசத்துல எல்லாத்தையும் இங்லீஷ்லேயே சொல்லும். புரியலன்னு அதுக்கும் திட்டும். ஸ்டுப்பிடுங்கற வார்த்தையும் அவங்க கொடூரமான மொகத்தையும் பாத்து ஏதோ திட்றாங்கன்னு புரியும். ஊமையப் போல கை சாடையும் கண் சாடையுமா கேட்டு தெரிஞ்சுக்கறதுக்குள்ள போதும்டா சாமி, பிசாசுங்களுக்கு மத்தியில மாட்டிகிட்டோன்னு மட்டும் புரிஞ்சுச்சு.


ஆரம்பத்துல ஏஜெண்டு என்ன சொன்னாருன்னா, சிங்கப்பூருல தமிழ வெச்சுக்கிட்டே பிழைச்சுரலாம், அரசாங்க மொழியா இருக்குன்னு ஏதோதோ சொன்னாரு. இங்க பாத்தா தமிழ் ஆளுங்களே கூட தமிழ்ல பேச மாட்டாங்க. சரி திட்டறதுக்கு தமிழ் ஒத்து வராதுன்னு, இங்கிலீசுல திட்டுறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.

ஒரு மாசம் கழிச்சு பக்கத்துல இருக்குற பள்ளிக்கூடத்துல போயி சின்ன பொண்ண அழைச்சுட்டு வான்னு அனுப்புனாங்க. கீழ இறங்கி வந்து மக்க மனுசங்கள பாத்ததும் தான் மூச்சே வந்துச்சு. ஒரு மாசம் வூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து, சுவரையும், காமராவையும் பாத்து பாத்து நானே கொஞ்சம் லூசாயிட்டேன்னு வையேன்.

ரெண்டு நாள் கழிச்சு அரைமணி நேரத்துக்கு முன்னாடியே கெளம்பி வெளிய வந்து வேடிக்க பாத்துட்டு பிள்ளைய அழைச்சுட்டு வந்தேன். அன்னைக்கி வீட்டுக்கு வந்ததும் வராத்துமா திட்டுச்சு பாரு அந்தம்மா! இங்லீஷ்சு பேய் படம் மாறி இருந்துச்சு.

அந்த பிள்ளையும் சும்மா சொல்லப்படாது நான் கூட்டிட்டு வரும்போது என் மோகத்தையே பாத்துட்டு வரும். யாருகிட்டயும் பேசுரனா, சிரிக்கிறனா எங்கனா பாக்குறனான்னு வந்ததும் ஒண்ணு விடாம போட்டு கொடுத்துரும். நம்ம கிராமத்துல குழந்தைங்க கொஞ்சம் மிராசுதார் வூடா இருந்தாலும் ஜனங்கன்னு இல்ல, வேலையாளுங்க எல்லாருகிட்டயும் மரியாதையா நடந்துக்குவாங்க. இங்க ஒரு குழந்தை கூட ஏட்டையா மாறி அதிகார தோரணையா வேலை செய்யுறவங்கள நடத்துங்கிறத என்னால ஜீரணிக்கவே முடியல.

அப்ப வூட்டம்மா என்ன திட்றாங்கன்னு புரிஞ்சுக்க முடியாம கட்டையாலேயே ஓங்கி மண்டையில போட்றலாம் போல இருக்கும். இதெல்லாம் பரவாயில்லை அந்த வீட்டுக்கார கம்முனாட்டி நடந்துகிட்டத நெனச்சா இருதயமே நடுங்குது. அம்மணமா பாத்ரூம்ல நின்னுகிட்டு துண்டு கேப்பான். பொண்டாட்டி காரி எடுத்து குடுக்க சொல்லுவா. தெரிஞ்சு பாதி, தெரியாம பாதின்னு நின்னுகிட்டு துண்ட வாங்குவான். அவன் ட்ரெஸ்சு போட்டுருந்தாலும் பாதி நேரம் முழுசா தெரியிரா மாறிதான் போட்ருப்பான். “பேப்பர எடு, ரிமோட்ட எடு, சோபாவுக்கு கீழ நல்லா பெருக்கு”ன்னு நாம அந்த கண்றாவிய பாக்குறா மாறிதான் வேலையும் சொல்லுவான், லூசுப்பய. இதெல்லாம் நம்ம சினிமாவுலதான் பாத்திருப்போம். இப்படியெல்லாம் நிசத்துல நடக்கும்கிறத அங்கதான் தெரிஞ்சுகிட்டேன்.

பொண்டாட்டி வேலைக்கு போன பிறகு அசிங்கமான படமெல்லாம் போட்டு பாப்பான். அதையும் வேல பாக்குற நேரத்துல போடுவான். நான் பாக்குறனான்னு ஓரக்கண்ணால நோட்டம் பாப்பான் அந்த படுபாவி. இதுக்குத்தான் தமிழ்நாட்டுல இருந்து வேலைக்கு பொண்ணுங்கள கூட்டிட்டு வாரனுகளோ இந்த பாவிங்கன்னும் தோணும்.


எனக்கு படுக்க கொடுத்த இடம் பெரிய பொண்ணு பொழங்குற ரூம். அந்த பொண்ணு பல நாளு வெளிய போனா ராத்திரிக்கு வராது. அத வெச்சு இந்தாளு ராத்திரி தூங்கும்போது அலமாரில எதையோ தேடறாப்போல ஒரசுரதும் கால மிதிக்கிறதும் அவனோட போக்கு கூடிகிட்டே போச்சு. ஏதோ நடக்கப் போகுது எப்புடியாவது நம்ம ஊருக்கு போயிறனுமின்னு தோனுச்சு. ஆனா எப்படின்னு தெரியாம அழுக மட்டுந்தான் வந்துச்சு. இத ரெண்டு வார்த்தையில ஆறுதலா சொல்லி அழவும் அங்க நமக்கு சனமில்ல. ஃபோனும் இல்லை.

இந்த நாலு மாசத்துல ஊருக்கு பேசணும்னா மாசத்துல ஒரு வாட்டி ஃபோன கொடுத்து வூட்டம்மா பேசச் சொல்லும். அதுலயும் ரெக்கார்ட போட்டுக்கு கொடுக்கும். நாம என்ன செய்யறோம்னு பாக்குறவங்க, என்ன பேசுறோம்ங்கிறதையும் பதிவு செஞ்சு கேப்பாங்களாம். நல்லா இருக்குடி உங்கூரு நாகரீகம்.

யாருகிட்ட சொல்றது எப்புடி தப்பிக்கிறதுன்னு ஒன்னுமே வெளங்கல. என்னை அனுப்புன ஊர்க்கார நண்பருக்கும் இந்த வீட்டு ஓனருக்கும் நேரடி தொடர்பு இல்ல. இவங்களுக்கிடையில ஏஜெண்டு இருந்துருக்கான். ஒரு மாசம் கழிச்சு எஜெண்டு என் சம்பளப் பணத்தை கமிஷனா வாங்க வந்தப்பதான் அதுவும் எனக்கு தெரியும்.

வந்தவரு, “எதுத்து பேசக்கூடாது, சொல்றத கேட்டு பணிவா நடந்துக்கனும், அவங்களா போன் பண்ணி கொடுத்தாதான் பேசனும், நீயா கேக்க கூடாது. செல்போன் வச்சிக்கிட்டு பேச கூடாதுன்னு அக்ரிமெண்ட் போட்டுருக்கு, இந்த பணத்த வச்சுகிட்டு யாருக்கும் தெரியாம காயின் போட்டு உம்மக(ள்) கூட பேசிக்க”ன்னு சொல்லி நம்ம காசுக்கு ஆயிரம் ரூவா கொடுத்துட்டு கெளம்பிட்டாரு. தாசில்தாரு ஐயாவ பாக்கப் போன எப்படி நடந்துக்கணும்னு நம்ம தலையாரி சொல்லித்தர மாறி இருந்துச்சு. ஃபோன்ல பேசக்கூடாதன்னெல்லாம் அக்ரிமெண்ட் போட்டுருக்காணுகண்ணா நான் என்ன மிலிட்டிரியிலயா வேல பாக்குறேன்.

கிட்டதட்ட நம்மள வித்துட்டாய்ங்கென்னு மட்டும் புரிஞ்சுது. இந்த நெலமையில யாருகிட்ட உதவி கேப்பேன். இனிமே நம்ம பிள்ளைய போயி பாக்க முடியாது போலருக்கேன்னு தோணும் போது தான் பிள்ளைய பாத்தே ஆகனுமுன்னு மனசு கெடந்து துடிச்சுது. பிள்ள நெனப்பு வந்தப்புறம் பத்து நாள் வரைக்கும் ஒரு பீசு ரொட்டி துண்டு கூட என்னால சாபிட முடியல. வந்த இடத்துல பிசாசுங்களுகிட்ட மாட்டிகிட்டோம் எப்படி தப்பிக்கிறதுன்னு நெனச்சேன்.

ஏஜெண்டு குடுத்த அந்த காசுலேருந்து திருட்டு தனமா ஸ்கூலுக்கு வரும்போது என்னோட மாமா பையனுக்கு ஒரு போன் போட்டேன். அவன் கொஞ்சம் படிச்சவன். எப்படியாவது உதவ முடியுமா, இன்னும் ஒரு மாசம் இங்க இருந்தேன்னா நான் வேற மாறி மாறிருவேன். இல்ல செத்துருவேன்னு அழுதுட்டேன். “அவங்க போன் நம்பர் தா முயற்சி செய்றேன்”னு சொன்னான். அத ஏழு கடல், ஏழு மலை தாண்டி எப்படியோ விசாரிச்சு சொன்னேன்.

“குழந்தைக்கி உடம்பு சரியில்லாம ரொம்பவும் சீரியசா இருக்கு ஆஸ்பத்திரியில சேந்துருக்கு உடனே அனுப்புங்க”ன்னு சொல்லி தந்தி குடுத்தான். அதுக்கு அவங்க மசியல. பிறகு போன் செஞ்சு, “குழந்தை நெலமை கவலையா இருக்கு, அம்மா பக்கத்துல இருக்கனும்ன்னு டாக்டர் சொல்றாங்க, இப்பையும் நீங்க அனுப்பலன்னா சட்டபடிதான் போகுற மாறி இருக்கும், ஒரு 15 நாள் லீவு குடுத்து அனுப்புங்க, அது போதும்”னு சொன்னதும் அந்தம்மா ஒத்துகிச்சு.

ஊருக்கு அனுப்புறதுன்னு முடிவு செஞ்சதும் மூணு நாளைக்கு என்னை தூங்கவே விடலை, “அலமாரிய சுத்தம் பண்ணு, பொழங்காத அழகு பாத்திரத்தை தொடச்சு வை”ன்னு வேலை குடுத்துகிட்டே இருந்துச்சு. எது செய்ய சொன்னாலும் பரவாயில்ல உசிரோட பிள்ளைய பாத்தா போதுன்னு தொனுச்சு.

ஏற்கனவே ஏஜெண்டு ஒரு மாச சம்பளத்த வாங்கிட்டு போயிட்டான். மீதி ரெண்டு மாச சம்பளத்தை இந்த வூட்டம்மாவே வச்சுகிச்சு. கேட்டா, “சிங்கப்பூர் வந்ததுக்கு சட்டபடியான செலவு 65 ஆயிரம் ஆச்சு. நீ வேலை பாத்த சம்பளம் இதுக்கே சரியாப் போச்சு. இனிமே வேலை பாத்தாதான் உனக்கு காசுன்னு ஒரு பைசா காசு கையில கொடுக்கல. ஜெயில்ல இருந்து வெளிய போறவ காசோட போகனுன்னா நினைக்கப் போறேன்?

நான் கிளம்பி வர்ரேன்னு எங்க வீட்டுக்கு கூட தகவல் சொல்லாம ஏர்போட்டுக்குள்ள விட்டுட்டு, கையில மூணு டிக்கெட்ட குடுத்துட்டு 15 நாள்ல திரும்பி வந்துருன்னு சொல்லிய கையோட அந்தம்மா பாட்டுக்கு போயிருச்சு.

எத்தன மணிக்கி பிளைட்டு கெளம்புது, எங்கன நிக்குது, எதுக்கு மூணு டிக்கட்டு குடுத்தாங்க எதுவும் புரியல. கேட்டு தெரிஞ்சுக்குற மாதிரி எந்த மூஞ்சியும் கண்ணுல அகப்படல. பித்துக்குளி மாதிரி ஒரே எடத்துல நின்னுகிட்டு இருந்தேன். தெய்வமாட்டம் ஒரு மகராசன் வந்தாரு. பட்டுக்கோட்டையாம். துபாய்க்கி போறாறாம். உதவி செஞ்சாரு.

“பத்து நிமிசம் தான் இருக்கு பிளைட்டு கெளம்ப. அது சி கேட்டுல நிக்குது. நீங்க இன்னும் ஏ கேட்டுல நிக்கிறிங்களே”ன்னு சொன்னதும் உள்ள உயிரும் போச்சு. “எம்பின்னாடியே ஓடிவாங்க”ன்னு சொல்லிகிட்டே ஓடுனாரு. முன்ன பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும் நான் ஏர்போட்ட கண்டேனா? ஃபிளைட்ட கண்டனா? பின்னாடியே ஓடுனேன்.

செக்கிங்கு நடக்கும் போது பட்டுக்கோட்டையாரு சொன்னாரு, “மலேசியாவுல, கொழும்புல நிக்கும் போது வெளிய எங்கயும் எழுந்துருச்சு போயிராதிங்க. போனிங்க அங்கேயே கெடக்க வேண்டியதுதான்.”

“என்னா சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியலயே, இது நம்மூருக்கு போற டிக்கெட்டு இல்லையா”ன்னேன்.

“இந்தியாதான் போறிங்க. ஆனா மூணு பிளைட்டு மூணு நாடு மாறி போறீங்க. அப்படிதான் டிக்கட்டு வச்சுருக்கிங்க”ன்னு சொன்னதும், முடிஞ்சது சோலி ஊருக்கு போயி பிள்ளைய பாத்தா மாறிதான்னு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். “அழுதுகிட்டு நின்னியன்னா பிளைட்டு போயிரும் சாமிய வேண்டிகிட்டு போயி ஏறுங்க”ன்னு அனுப்பி வச்சாரு. நாந்தான் பிளைட்டுக்கே கடைசி ஆளு, ஏறுன அடுத்த நிமிசமே புறப்பட்டுருச்சு.

காசு கம்மின்னு இப்படி சுத்தல்ல டிக்கெட்டு எடுத்து குடுத்துருக்கு அந்த மூதேவின்னு ஊருக்கு வந்துதான் தெரிஞ்சுகிட்டேன்.

விமானத்துல அழுதுகிட்டே இருந்தத பாத்துட்டு திருவாரூக்காரரு ஒருத்தரு என்ன ஏதுன்னு விசாரிச்சாரு. அப்பாடா இங்கேயும் ஒரு தெய்வம் இருக்குன்னு நிம்மதி மூச்சு விட்டுட்டு விசயத்த சொன்னேன். “நானும் திருச்சிதாங்க போறேன். கவலை படாதிங்க நான் உங்கள பத்திரமா அழைச்சிட்டு போறேன்”னாரு. சாமி கைவிடலன்னு தோணுச்சு. ஆனா அவரும் ஆதாயத்துக்குதான் என்ன விசாரிச்சாருங்கிறது அடுத்த பத்து நிமிசத்துக்குள்ள தெரிஞ்சு போச்சு.

மூணு பவுனு நகைய குடுத்து, “கழுத்துல போட்டுக்கங்க திருச்சில வந்து வாங்கிக்கறேன். ஆம்பளைங்க நகை எடுத்துட்டு வரக்கூடாது”ன்னாரு. அவரு தயவு இல்லாம ஊருக்கு போக முடியாது. வேற யாரும் தமிழும் கெடையாது. எது சொன்னாலும் செஞ்சுதான் ஆகனும். வாங்கி போட்டுகிட்டு விமானம் மாறி ஏறும் போது அவரு கூடவே இருந்தேன்.

திருச்சியில வந்து சோதனை செய்யும் போது அத்தன கேள்வி கேக்குறாங்க. “எத்த பவுணு. எதுக்கு கழுத்த மறைச்சு மறைச்சு வச்சிங்க, நகை வாங்கின பில்லு காமிங்க, சிங்கப்பூர் போயி எத்தன மாசம் ஆச்சு, எதுக்கு திரும்பி வர்ரீங்க, அதுக்கு உண்டான ஆதாரத்த காட்டுங்க”ன்னு என்னமோ நாந்தான் பெரிய கடத்தல்காரி மாறி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஏதோ மாட்டப்போறோம் புடிச்சு உள்ள வக்கெ போறாய்ங்கன்னு கதி கலங்கிருச்சு. இப்படியெல்லாம் கேள்வி கேப்பாங்கன்னு அந்த திருவாரூக்காரரு சொல்லியாவது இருந்துருக்கலாம்.

ஏழைங்க கஸ்டத்தையும் காலச் சூழ்நிலையையும் எப்டியெல்லாம் பயன்படுத்துராங்க பாருங்க!

திருவாரூரு பையனை அழைக்க காரோட குடும்பமே வந்துருந்தாங்க. நகைய சொமந்து வந்த நன்றி கடனுக்கும், பொட்டப்புள்ளன்னு பரிதாபபட்டும் கார்லேயே எங்க கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற டவுணு வரைக்கும் கொண்டு வந்து விட்டாங்க. சிங்கப்பூர் போகும் போது ஆயிரம் ரூபா கொண்டு போனேன். இப்ப என்ன மிச்சம்? சிங்கப்பூர்ல ஏஜெண்டு கொடுத்த ஆயிரம் ரூபாயல ஒண்ணு ரெண்டு ஃபோன் பேசுன காசு போக உள்ள மிச்சம் இருந்துச்சு.

விடியக்கால நாலு மணி எங்க கிராமத்துக்கு பஸ்சு கிடையாது இருந்த காசுக்கு ஒரு ஆட்டோ புடிச்சு ஊரு வந்து சேந்தேன். செவத்துல அடிச்ச பந்தாட்டொம் இருந்த எடத்துக்கே திரும்பி வந்துட்டேன். இனி சிங்கப்பூருக்கு போறதுக்கு கடனா வாங்குன 15,000 ரூபாய எப்படியாவது அடைச்சாகணும்.

இனி பட்டினி கிடந்து செத்தாலும் கிராமத்துலேயே இருக்கணும்ணு முடிவு பண்ணிட்டேன். இத தெரிஞ்சுக்கத்தான் சிங்கப்பூர் போனேன்னு வையேன்!
–    சரசம்மா


நன்றி - வினவு

1 comments:

Ram said...

சிங்கப்பூரில் கொஞ்சம் ஆச்சிரியமாகத்தான் இருக்கறது
இங்கு வீட்டு வேலை பாா்ப்பதற்க்கு தமிழகத்தின் பல பகுதியை சோ்ந்த பெண்கள் வருகறாா்கள் மாத சம்பளம் 16,000 க்கும் மேல் பலா் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு தாயகம் திரும்புகின்றனா் வாரம் ஒரு முறை கண்டிப்பாக விடுமுறை உ்ண்டு முதலாளிகள் தவறு செய்தால் சிங்கப்பூர் அரசின் கடுமையான தண்டனை உண்டு சிலா் இங்கு ஆண் நண்பா்களை தேடிக்கொள்கின்றனா் விடுமுறை தினங்களில் அவர்களுடன் சுற்றுகின்றனா் இதனாலும் பிரச்சனைகள் வருகிறது மற்ற சில செயல்களாலும் பிரச்சனைகள் உண்டாக்கி கொள்கின்றனா்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்