/* up Facebook

Jun 27, 2015

36 வயதினிலே


36 வயதினிலே பார்த்துவிட்டீர்களா? கண்டிப்பாக குடும்பத்தோடு கூடியிருந்து பாருங்கள். நேற்றும் இன்றும் என இரண்டு தடவை பார்த்துவிட்டேன். சமூகத்திற்கு ஏற்ற மிகத் தரமான ஒரு படைப்பு!

ஹாய்! ஜோதி அக்கா, இவ்வளவு காலமும் எங்கே இருந்தீர்கள்? ஏழெட்டு வருஷமா உங்களை ரொம்ப ரொம்ப மிஸ்ட் பண்ணிட்டுதே இந்த தமிழ்ச்சினிமா. ஏனோ வந்தார்கள்-வென்றார்கள்-சென்றார்கள் அதன்பின் அவர்கள் எங்கே என்றே தேடும் நிலையில் அல்லாடிக்கொண்டிருக்கும் இன்றைய சினிமாக் காலத்தில் தங்களின் மீள்வரவிற்காய் தங்களுக்கும் அண்ணன் சூர்யாவிற்கும் எங்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய பாராட்டு!

மலையாளப் படமொன்றின் (How old are you?) தழுவலாக இருந்தாலும் அதனைத் தமிழில் நம்பிக்கையோடு கொடுத்த ரோஷன் ஆன்ட்ரூஸ் அவர்களின் துணிச்சல் மெய்சிலிர்க்கத்தக்கது. குத்தாட்டம் இல்லை; குறையாடை இல்லை; ஆபாசமில்லை; அடாவடி இல்லை ஆனாலும் அடிநெஞ்சைத் தொடாமல் தொட்டிருக்கின்றது படம்.

துள்ளித்திரிந்த பள்ளிப்பருவ இளமைக்காலம் கடந்து குடும்பத்தினுள் செல்கின்ற அத்தனை பெண்களும் தமது வாழ்க்கைக் கோலத்தினை குறுகிய வட்டத்தினுள் குறைத்துக்கொள்வது சமூக ஒடுங்குநிலையாகிவிட்டது. இதனை அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் பேசிய பெண்ணியவாதி ஒருவர் சமூக எதார்த்தமென்று குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் ஏற்புடையதன்று. அவர் ஒரு பெண்ணிய வாதியாகவே இருந்துகொண்டு பெண்களின் சமூக ஒடுங்குநிலையை எதார்த்தம் என்று சொல்வது ஆச்சரியமானது.

நடிகர் மம்முட்டியின் அழகன் என்றொரு படம், அதில் புலவர் புலமைப்பித்தனின் அற்புதமான வரிகளிலமைந்த ஒரு பாடல் (சாதி மல்லி பூச்சரமே) ஞாபகத்திற்கு வருகிறது.
"எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீயொரு கைதியா?

"கடுகுபோல் உன்மனம் இருக்ககூடாது. கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்" என்ற வரிகளை தனது அற்புதமான நடிப்பின்மூலம் ஞாபகப்படுத்தியிருக்கின்றார் ஜோதிகா. இந்தப் பாடல் வரிகளின் அருமையை எத்தனைபேர் ஞாபகம் வைத்துள்ளீர்களோ நானறியேன்!

திருமணமாகி ஒழுங்குநிலைக்குள் வருகின்ற ஒரு நல்ல பெண், தனது உள்ளத்தால் ஒருபோதுமே வஞ்சகம் பாராட்டியது கிடையாது. ஆனால் குடும்பம் தொட்டு சமூகத்தின் அத்தனை நிறுவனங்களிலிருந்தும் அவளைநோக்கி எய்யப்படும் கேலிக்கணைகளால் அவள் மனம் மிகவும் வேகுகின்றது. அதிலிருந்து மீண்டெழுவதே அவளின் அடுத்த சூர்யோதயம்!
பகட்டு வாழ்க்கையை நாடிச்செல்லும் நடுத்தரக் குடும்பங்களிலேயே இதுபோன்ற பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அக் குடும்பங்களைச்சேர்ந்த பெண்களுக்கு ஒர் உரமூக்கியாகவும் ஆண்களுக்கு நல்ல சாட்டையடியாகவும் அமைந்திருப்பதை எதிர்காலக் குடும்பத்தலைவன் என்ற நிலையில் அனுபவித்து எழுதுகிறேன். அதனால்தான் குடும்பத்தோடு கூடியிருந்து பாருங்கள் என்று கேட்கிறேன்! எம்மிடையே ஒட்டிநிற்கும் வறட்டுக் கௌரவங்களும் ஈமாக்கினியில் வேகவேண்டிய ஈகோக்களும் தான் மனித முயற்சியின் முட்டாள்தனமான முட்டுக்கட்டையாகின்றன.

இன்று நாம் உண்ணுகின்ற அனைத்திலுமே விஷம் ஏறிநிற்கின்றது. எமது முன்னோர்கண்ட இயற்கைப்பண்புமிக்க உணவு (Organic food) எம்மைவிட்டுத் தூரம் சென்றுவிட்டது. அதனை மக்களுக்கான நல்ல விழிப்புணர்வாக்கியிருக்கின்றது படம். வீட்டுத்தோட்டம் வைத்து இயற்கைப்பண்பு உணவை உண்போம் என்ற கொள்கையில் வந்தாலும் அங்கேயும் செயற்கை உரப்பாவனையும் கிருமி நாஷினி விசிறலுமே விஞ்சிநிற்கின்றன.

எமது முன்னோர்கள் அன்று இயற்கைப்பண்பு உணவை உண்டதனால்தான் எமது இன்றைய தலைமுறை நிமிர்ந்து நிற்கின்றோம். ஆனால் எமது எதிர்கால சந்ததிக்கு-எமது பிள்ளைகளுக்கு நாம் இப்பவே எவ்வளவோ துரோகம் இழைக்கின்றோம் என்பதைச் சிந்திக்கின்றோமா?
இது மட்டுமல்ல இன்னும் நிறைய சிந்திக்கவைக்கின்றது இந்தப்படம். ஒளிப்பதிவு இசை என அனைத்து விடயங்களிலும் அனைவருமே நன்றாக உழைத்துள்ளனர் என்றுதான் சொல்லமுடியும்! கண்டிப்பாக பாருங்கள்.

நன்றி - Artist shan 
...மேலும்

Jun 26, 2015

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!


காமாத்திபுரா....மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி.  ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது,  காமாத்திபுராவுக்கு  தோழி ஒருவருடன்  சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும்,  துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.  அது இங்கே....

"அண்மையில் மும்பை சென்றிருந்தபோது, எனது தோழியுடன் பிரபலமான பீச்சில் இருந்த காபி ஷாப் ஒன்றில் அமர்ந்து கடலழகையும், காபியையும் ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தேன்.  எங்கள் உரையாடல் எங்கெங்கோ சென்று, எப்படியோ காமாத்திபுராவில் வந்து நின்றது.  ஆடம்பரமான இந்த காபி ஷாப்பிலிருந்து காமாத்திபுரா வெகுதூரத்தில் இருக்கும் என நினைத்தேன். ஆனால் மிக அருகில்தான் உள்ளது என்றாள் தோழி.  திடீரென அங்கு செல்லலாம் என எங்களுக்கு தோன்றியது. 

எப்படி அல்லது ஏன் காமாத்திபுரா செல்ல வேண்டும் என எனக்கு தெரியவில்லை. அநேகமாக அது காமத்திபுராவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமாக இருக்கலாம் அல்லது எங்களுக்கு நாங்களே எதையாவது நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியாக இருக்கலாம். இந்த எண்ணம் ஏற்பட்ட உடனேயே முதலில் அது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் அடுத்த நிமிடம் நாங்கள் சாலையில் இறங்கி நின்றதை உணர்ந்தோம். பின்னர்,  அவ்வழியாக செல்லும் டாக்ஸி ஒன்றை நிறுத்தி டிரைவரிடம், " காமாத்திபுரா போக வேண்டும்!' என்றதும், அவர் எங்களை ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக பார்த்துவிட்டு,  முடியாது என தலையை அசைத்துவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்தபடியாக வேறொரு டேக்ஸியை நிறுத்தி, போகுமிடத்தை சொன்னதும், சில நொடிகள் ஆச்சர்யம் மேலிட எங்களை பார்த்தவர், எங்கள் முதுகிற்கு பின்னால் தொங்கிய கேமராவை பார்த்துவிட்டு, " நீங்கள் என்ன பத்திரிகையாளர்களா...?' என கேட்டார். " ஆமாம்...ஆமாம்..!" என்று பொய் சொன்னோம். 

உடனே எங்களை டேக்ஸியில் ஏற்றிக்கொண்டார். வானுயர்ந்து நிற்கும் பல மாடி கட்டடங்களை அண்ணாந்து பார்த்தபடியே தெற்கு மும்பை வழியாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.இந்த பளபளப்பும், ஆடம்பரமும் கைகோர்த்து காட்சி தரும் இத்தகையதொரு இடத்தில்தான் காமாத்திபுராவும் மறைந்துகொண்டிருக்கிறது என்ற உண்மை எங்களை வியப்பில் ஆழ்த்தியது. 

நாங்கள் சென்றுகொண்டிருந்த டேக்ஸி, திடீரென ஒரு வளைவில் திரும்பி, சிறிய சாலை ஒன்றில் நுழையவுமே, அந்த வீதியின் வெளிப்புற தோற்றமும், mood  ம் திடீரென மாறியது. அதுதான் காமாத்திபுரா என்பதை உணர்ந்துகொண்டோம். உயர்ந்த கட்டடங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. வெறுமனே பழைய, வர்ணம் உதிர்ந்த, அழுக்கு படிந்த கட்டடங்கள் சாலையின் இருபக்கமும் காட்சியளித்தன. உள்ளே செல்ல செல்ல அந்த வீதி மேலும் குறுகிக்கொண்டே போனது. எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்களாக கிடந்தன. காரின் ஜன்னல் கண்ணாடியை இன்னும் அகலமாக திறந்து பார்த்தபோது, நாங்கள் எதிர்பார்த்ததை கண்டோமா என்பதை எங்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. 

ஒரு இந்தி திரைப்படத்தின் காட்சியை நாங்கள் அங்கு எதிர்பார்த்தோமா? என தெரியவில்லை. வீடுகளில் ஒலித்த பாடல்கள் எங்கள் காதை தொட்டது. கடைகளில் வெற்றிலையும், பூக்களும் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. 

சிகரெட் விற்கும் பெட்டி கடைகளையும், ஒரு சில சிறிய மளிகை கடைகளையும், ஒரு மிகச்சிறிய மொபைல் போன் விற்பனை கடைகளையும் கூட நாங்கள் பார்த்தபடி சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென வீதியின் ஒரு இடத்தில் ஏராளமான ஆண்கள் குரூப் குரூப்பாக பெட்டி கடைகள் முன்பு சிகரெட் பிடித்தபடியே பேசிக்கொண்டு நின்றனர். ஒரு சில ஆண்கள் எங்களது டேக்ஸிக்குள் எட்டி பார்க்கவும் முயன்றனர். நாங்கள் உடனடியாக இருக்கையின் பின்னால் நன்றாக சாய்ந்து இருந்துகொண்டோம். 

அங்கு கண்ட காட்சிகளெல்லாம் எங்களுக்கு ஏதோ இந்தியாவின் அண்டை ஏழை நாடு ஒன்றை பார்ப்பது போன்றே இருந்தது.  வீட்டு பால்கனியில் துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. குழந்தைகள் வீதிகள் ஓடிக்கொண்டிருந்தனர் அல்லது மாடி வீடுகளின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். 

அதன்பிறகுதான் நாங்கள் அவர்களை பார்த்தோம்... அவர்கள் காமாத்திபுரா பெண்கள். சிலர் வீதியின் முனைகளில் அல்லது வீடுகளின் முன்னால் தனியாக நின்றுகொண்டிருந்தனர். சிலர் இரண்டு பேர் அல்லது மூன்று பேராக குழுவாக தங்களுக்குள் அரட்டை அடித்து பேசியபடி நின்றுகொண்டிருந்தனர்.  வழக்கமான ஒரு நாளில் சாதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்கள் போலதான் எங்களுக்கு அது தோன்றியது - அவர்கள் முகங்களை பார்க்கும் வரை! 

முகத்தில் அடர்த்தியாக போடப்பட்ட மேக் அப்பும், உதடுகளில் பூசப்பட்ட சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூச்சும், புருவங்களில் தீட்டப்பட்ட அடர்த்தியான கண் மையுமாக நின்றுகொண்டிருந்த அவர்களை அழைத்து செல்வதற்காக அவ்வப்போது அங்கு வந்து நிற்கும் வாகனங்களில் அவர்கள் ஏறுகின்றனர்.  மேக் அப்பில் அவர்கள் முகம் பளீரென காட்சியளித்தாலும், அந்த கண்களில் இத்தொழிலின் மீதான அவர்களது விருப்பமின்மையையும்,  துயரத்தையும் பார்க்க முடிந்தது. 

இதில் எது எங்களை மிகவும் பாதித்தது என்றால், அவர்களது முகம் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், ஒருவித இறுக்கத்துடன் இருப்பதை பார்த்ததுதான். அநேகமாக ஆண்டு கணக்கில் அடக்கி வைத்திருக்கும் அவர்களது துயரங்கள்தான் அவர்களது முகத்தை அவ்வாறு ஆக்கி இருக்கும். மேலும் அங்கே வாழ்வதற்கான அவர்களுக்கு தெரிந்த ஒரே வழியாகவும் அதுவாக இருக்கலாம்.


ஜனத்திரள் நிரம்பிய அந்த வீதியின் வழியாக எங்களது டேக்சி தொடர்ந்து மெதுவாக ஊர்ந்து சென்றது.   வீதியின் ஒரு முனையில் வந்ததும் ஒரு சில பாழடைந்த கட்டடங்களை பார்த்தோம். ஒருவருக்கு ஒருவர் நெருக்கடியடித்தபடி நின்றுகொண்டிருக்கும் பெண்களால் நிரம்பி வழிந்தது அந்த கட்டடங்கள். உள்ளே நின்றுகொண்டிருக்கும் பெண்களில் சிலர் கதவுகள் வழியாக எட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். சில குழந்தைகளையும் அங்கே பார்க்க முடிந்தது. 

மேலும் 12 முதல் 13 வயது வரையிலான சிறுமிகள் சிலரும், பெரிய பெண்களை போன்று மேக் அப் போட்டு, அரைகுறை ஆடையில் நின்றுகொண்டிருந்தனர்.  அவர்கள் தங்களை கவர்ச்சியாக காட்ட முயன்றபோதிலும், அவர்களது உடல் குழந்தைதனத்தையே வெளிப்படுத்தியது. 

சாலைக்கு வெளியே ஒரு பெண், ஏறக்குறைய தனது வயதில் இருமடங்கு உடைய தொப்பை வயிறுடன் காட்சியளித்த நபருடன் பேசிக்கொண்டிருந்தார்.  இறுக்கமான கறுப்பு பனியனும், சிவப்பு நிற டாப்ஸும் அணிந்து நின்ற அந்த பெண்ணின் முகத்தில் அப்பியிருந்த மேக் அப்பை பார்த்தபோது வேதனை கலந்த வேடிக்கையாக இருந்தது. நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த பெண், அந்த நபரை அருகில் உள்ள கட்டடத்தின் உள்ளே அழைத்து சென்றார். 

டேக்ஸியில் பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு, அவர்களை ஏதோ ஒரு காட்சி பொருள் போன்று பார்ப்பது குறித்து திடீரென எங்களுக்கே வெட்கமாக இருந்தது. எங்களிடம் கேமரா தயாராக இருந்தபோதிலும்,  எங்களால் அங்கு ஒரு படத்தை கூட க்ளிக் செய்ய முடியவில்லை.  அப்படி செய்வது ஏதோ ஒரு அநாகரிகமான செயலாக எங்களுக்கு பட்டது.  நாங்கள் அவர்களை புகைப்படம் எடுத்து, அதனை இந்த உலகம் பார்க்கும்படி செய்தால், அது அவர்களது privacy  யை எட்டிபார்ப்பது போன்று மட்டுமல்லாது, அவர்களை மேலும் அவமதிப்பது போலவும் ஆகிவிடும். 

இந்நிலையில் எனது உடல் நோயில் விழுந்தது போன்று நான் உணர்ந்தேன். எனது தைரியத்தை யாரோ ஒருவர் பிடித்து முறுக்கியது போன்று எனது அடிவயிற்றில் ஒரு பய பந்து சுருண்டு எழுந்ததைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனது கண்களின் முன்னால் நான் பார்த்த அந்த காட்சிகள் எனக்கு மிகவும் பயங்கரமாக இருந்தது.  இன்னும் என்னால் நான் பார்த்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து எனது பார்வையை அகற்ற முடியவில்லை. ஏதோ ஒரு அழுகிய புண்ணின் வாடையை நுகர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்ட அதே நேரத்தில், அதனை பார்ப்பதில் ஒரு ஆர்வமும் இருப்பதை உணர்ந்தேன்.

கடைசியில் நாங்கள் எங்கள் இடத்திற்கு திரும்ப முடிவு செய்தோம்.  நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதிகம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  இந்த பயணம் எங்களை மிகவும் உலுக்கி போட்டிருந்தது.  மீண்டும் மரைன் டிரைவ் கடற்கரைக்கு வந்த உடன்,  நடக்க முடிவு செய்தோம்.  ஜில்லென்ற ஃபிரெஷ்ஷான, குளிர்ந்த காற்று எங்கள் முகத்தை தழுவி சென்றது. எங்களுக்கு முன்னால் இருக்கும் பரந்து விரிந்த அந்த கடலை பார்த்தபோது, நாங்கள் எதை பார்த்து வந்தோமோ அதனை மறக்க விரும்பியதாகவே உணர்ந்தேன்."

நன்றி - விகடன்
...மேலும்

Jun 25, 2015

ரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம்


அவர் நேற்றுத்தான் மரணமுற்றது போலிருக்கிறது. திரைப்படத்தில் அவர் கொல்லப்படும் இறுதிக்காட்சி இன்னும் மனதில் நிற்கிறது. நூற்றி முப்பத்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது அற்புதமான ஆளுமை கொண்ட இந்தப் பெண் பிறந்து. அதைப்போலவே அவர் பாசிஸ்ட்டுகளால் கொலை செய்யப்பட்ட அந்த அந்தகார இரவின் பின் என்பத்தி ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன. 1871 ஆம் ஆண்டு  கிழக்கு ஐரோப்பாவிலுள்ள போலந்து நாட்டில் ஸமோஸ்க் நகரில் மார்ச் 5 ஆம் நாள் யூதப் பெற்றோருக்குப் பிற்ந்தார் ரோஸா.

ரோஸாவின் பெற்றோர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மறுமலர்ச்சி யுக மதிப்பீடுகளுடனும் கெதேவின் இலக்கித்துடனும் சேர்ந்து வளர்ந்தவர் ரோஸா. 1873 இல் அவரது குடும்பம் வார்ஸாவுக்குக் குடி பெயர்நதது. அங்குதான் அவரை வாழ்நாள் முழுதும் அலைக்கழித்த இடுப்புவலி அவரைப் பீடித்தது. பள்ளிக் கூட நாட்களிலேயே ரோஸா அரசியலில் பிரவேசித்துவிட்டார். ரஷ்ய் தீவிரவாதிகளினால் பாதிப்புக்குட்பட்ட நரோத்னிக் தழுவிய போலந்து புரொலிடரியட்டில் செயல்பட்டார் ரோஸா. அக்கட்சி போலீசின் வேட்டகைக்குட்பட்ட போது, 1887 இல் பள்ளி இறுதி முடித்திருந்த ரோஸா சூரிச்சுக்குப் பறந்தார். அவ்வாண்டில்தான் அவர் மார்க்ஸ் எங்கெல்ஸைப் படிக்கத் துவங்கினார்.

இங்குதான் அவளது காதலனும் தோழனுமான லியோ ஜோகித்சேவை அவர் சந்தித்தார். தென்றலும் புயலும் மாறி மாறி வீசிய அவர்களது காதல் வாழ்வு 1906-1907 ஆம் ஆண்டுகளில் சந்தோஷங்களுடனும் கொந்தளிப்புகளுடனும் கழிந்தது. 1907 இல் அவர்களுக்கிடையிலான உறவு ஜோகிசத்சேக்கு அவரது ரஷ்யத் தலைமறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னொரு ரஷ்யத் தோழியுடனான உறவின் பின் முறிந்தது. ஆனால் அவர்களது முன்னைய நெருக்கமும் அரசியல் தோழமையும் ரோஸாவின் இறுதி நாட்கள் வரை இருவரையும் இணைத்திருந்தது. 1919 ஆம் ஆண்டு ஸ்பார்ட்டஸிஸ்ட்டுகளின் எழுச்சியைத் தொடரந்து ரோஸாவும் கார்ல் லீப்னெக்ட்டும் கொல்ப்பட்டதின் பின் ரோஸா கொலையுண்ட சூழ்நிலை குறித்த ஆய்வை மேற்கொண்டு அதை வெளியுலகுக்குச் சொன்னவர் ரோஸாவின் காதலனும் தோழனுமான ஜோகித்செதான்.

ரோஸா சூரிச் பல்கலைக் கழகத்தில் கணிதமும் இயற்கை விஞ்ஞானமும் பொருளாதாரமும் கற்றார். அவரது சிறை வாழ்வில் அதிகமும் அவர் இயற்கை விஞ்ஞானம் சம்பந்தமாகத்தான் படித்தார். அவரது மையப்பாடம் பொருளாதாரமாக இருந்தாலும் அவர் தனிமையில் தனது தோழமையாகத் தேர்ந்தது பறவைகள் பற்றிய, தாவரங்கள் பற்றிய புத்தகங்களும் தான்.

பல்கலைக் கழகத்தில் அவரது டாக்டர் பட்டத்துக்காக அவர் சமர்ப்பித்த ஆய்வேடு போலந்தின் தொழில் வளரச்சி சம்பந்தமானதாகும். அவரது பள்ளிக் கூட நாட்களின் நம்பிக்கைகளை அறிவார்ந்த வகையில் அவரது பொருளியல் ஆய்வு உறுதிப்படுத்தியது. போலந்தின் உற்பத்தியானது ரஷ்ய சந்தைக்கும், ரஷ்ய முதலாளித்துவத்துக்காகவும்தான் உற்பத்தி செய்கிறது என்பதை அவர் தனது ஆய்வில் நிறுவினார். இந்தப் பொருளியல் ஆய்வுதான் வாழ்நாள் முழக்கவுமான அவரது அரசியல் நம்பிக்கைகளை வடிவமைத்தது.

ரஷ்ய முதலாளித்துவத்தை எதிர்த்து போலந்து, ரஷ்யத் தொழிலாளர்கள் ஒன்றுபடவேண்டும் என ரோஸா நினைத்தார். பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை தன் வாழ்நாள் முழுக்க அவர் உயரத்ப்பிடித்தார்.

அவரது தேசியவாதத்திற்கான எதிர்ப்பையும் சர்வதேசியத்தையும் அன்றைய வரலாற்று வளரச்சியிலிருந்தும் அவருடைய அனுபவத்திலிருந்தும் பிரிக்கமுடியாது. அவரும் ஜோகித்சேவும் அன்று ஆரம்பித்து நடத்திய தொழிலாளர் குரல் பத்திரிக்கை வந்து கொண்டிருந்த காலத்தில் 60000 தொழிலாளர்கள் திரண்ட பொதுவேலை நிறுத்தம் லோட்ஸ் நகரத்தைக் கலக்கியது. இதன் விளைவாக ரோஸா தலைமை தாங்கிய புராலிடேரியட் கட்சி போலந்து தொழிலாளர் லீக்குடன் இணைந்து போலந்து சோசலிஸ்ட் கட்சி உதயமானது. இங்குதான் சோசலிசமும் தேசியமும் இணைய முடியாது என்ற தனது கோட்பாட்டுக்காக துரோகத்தனமான அனுபவத்தைப் பெற்றார் ரோஸா.

இக்கட்சியின் தலைவர்களில் ஒருவனான பில்சுட்ஸ்க்கி சோசலிசத்தை முற்றிலும் கைகழுவியவராக தேசியம் பேசி முஸோலினியைப்போல பிற்பாடு இருபதுகளில் போலந்தை ஆண்ட சர்வாதிகாரியாக ஆனான். தேசியமும் சர்வாதிகாரமும் இணைந்ததை நேரில் கண்ட ரோஸா இதன்பின்பு இக்கட்சியினின்று வெளியேறி போலந்து லித்துவேனிய சமூக ஜனநாயகக் கட்சியை ஆதரித்தார். இக்கட்சியைத் தான் அவர் தனது வாழ்வின் மிகுதி நாட்களில் ஆதரித்து வந்தார்.

தேசியவாதம் குறித்த எதிர்ப்புக் கொண்ட ரோஸா, பள்ளி நாட்களில் போலந்து மொழிக்கு மாறாக ரஷ்ய மொழி திணிக்கப்பட்போது கொதித்தெழுந்தார். கலாச்சார அடையாளத்தை வற்புத்திய ரோஸா அந்த அடையாளம் பிறப்பையோ இனத்தையோ கொண்டதாக அமையாமல் வர்க்கத்தைக் கொண்டதாக இருப்பதையே விரும்பினார். இவ்வகையில் சர்வதேசியவாதியான ரோஸா சர்வதேசிய தொழிலாளர்களின் வளர்ச்சி பெற்ற இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொள்ள அவாவியபோது அன்று ஐரோப்பாவில் வளரச்சி பெற்ற சோசலிஸ்ட் கட்சியாகவும் மரபார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியாகவும், இரண்டாம் அகிலத்தின் சித்தாந்தமாக முனையாக இருந்த ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியல் சேர்ந்து செயல்பட முனைந்தார்.

தனது டாக்டர் பட்டத்துக்காக ஆய்வைச் சமர்ப்பித்தவுடனேயே ஜெர்மனிக்குப் போகவிரும்பிய அவருக்கு அன்றைய ஜெர்மானியக் குடியேற்றக் கொள்கையின் கெடுபிடி பிரச்சினையாக இருந்துது. இதன் பொருட்டு போலியாக ஒரு செளகர்யக் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்த ரோஸா, குஸ்தாவ் லுவாக் எனும் போலந்திலிருந்து குடியேறிய ஜெர்மானியரை மணந்து கொண்டார். அன்று முதல் அவரது வாசஸ்தலமாகிய ஜெர்மனி இறுதியில் அவரது உயிரையும் எடுத்துக் கொண்ட நகரமாக ஆகியது.

அவரது அரசியல் நடவடிக்கைகள் அவர் காலத்திலேயே பிரசித்தமானது. அவரது மறைவுக்குப்பின் தொகுக்கப்பட்ட ரோஸாவினது தனிப்பட்ட கடிதங்கள பெண்ணிலைவாத வட்டாரங்களில் அவரது வாழ்வு குறித்த அதீதமான தேடலைத் தூண்டிவிட்டது. தனிமனுஷியாக இயற்கை, தாவரங்கள், பிராணிகள் அவற்றின் ஜீவனுள்ள செயல்பாடு என்பன அவரது தனிமைத் துணைகளாக ஆகியிருந்தன. இந்த ஈடுபாடு அவரது பள்ளிக் கூட நாட்களிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் போராட்டம் புரட்சி என்பது, தன்னின் அழிவு, வன்முறை, சாவு, புறஉலகு போன்றவற்றோடு சதா தொடர்புடையது. இந்த அகத் தனிமைக்கும் புறநடவடிக்கைக்குமான பதட்டம் ரோஸாவுக்குள் அவரது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வந்தது.

அவர் இனம் மொழி போன்ற அடையாளங்களை ஒப்பாதது போலவே, பெண் எனும் தனி அடையாளத்தையும் ஒப்புக் கொண்டவரல்ல. இந்த அடையாள மையங்கள் அனைத்தும் முதலாளித்துவத் தன்மை கொண்டதென அவர் நினைத்தார். தனித்த பெண்களின் இயக்கம் என்பதில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டியவராக இல்லை. வர்க்க அடையாளம் கொண்ட ஆண் பெண் உறவு என்பதாக அவரது வாழ்க்கைப் பார்வை அமைந்தது.

காதலர்களும் தோழர்களும்

தனது காதலனும் தோழனுமான ஜோகித்சேவுடன் அவருக்கிருந்த உறவு உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பான காதல்நிறைந்த உறவாகும். அவர் ஜோகித்சேவை மணந்து கொள்ள விரும்பினார். நிறையக் கடிதங்கள் எழுதி மன்றாடினார். குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்பினார். ஆனால் ஜோகித்சே புரட்சிகர நடவடிக்கையும், குடும்ப வாழ்வும் குழந்தைபெறலும் இணைந்து போகமுடியாது என்றார்.

ஜோகித்சேவின் இன்னொரு பெண் உறவின் பின் ரோஸா தன்னைவிடவும் மிக இளவயதினனான கோயட்சேவுடன் உறவு கொண்டிருந்தார். கோயிட்ஷே ரோஸாவின் தோழி கிளாரா ஜெத்கினின் மகன். இந்த உறவு கிளாரா ஜெட்கினுக்குத் தெரியவந்தபோது ரோஸாவுக்கும் அவருக்கும் இடையில் பகைமை மூண்டது. கிளாரா ஒரு போலி என விமர்சித்தார் ரோஸா. கிளாராவுக்கு விருப்பமில்லாததினாலேயே அவர்கள் உறவு தொடரவில்லை. அதற்குப் பின்பாக ஹான்ஸ் திபன்பாக்குடன் ரோஸா கொண்டிருந்த உறவு உணரச்சிவசமானதல்லாததாகியது. அறிவுபூர்வமான நிதானமான அரசியல் தவிர்ந்த உறவாக அது இருந்தது. ஆயினும் கோயிட்சே போரில் இறந்த வேளையில் கிளாராவும் ரோஸாவும் சேர்ந்தே துக்கம் அடைந்தார்கள்.

ரோஸாவின் அரசியல் உலகும் கோட்பாட்டுலகும் விரிந்ததாயினும் அவரது உள் உலகம் தனிமையால் நிறைந்தது. தேர்ந்தெடுத்த நண்பர்களையே அவர் கொண்டிருந்தார். அவரது நட்புக்கும் அவரோடான அரசியல் ரீதியிலான உடன்பாட்டுக்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. அரசியல் எதிரிகளிடம் அவர் நட்பு வைத்த்¢ருக்கிறார் தீவிரமாக அரசியல் உடன்பாடு கொண்டவர்களை தனிப்பட்ட உளவியல் காரணங்களினால் வெறுத்த வந்திருக்கிறார் அரசியல் எதிரியான காவுட்ஸ்க்கியோடு அவர் நட்பு பாராட்டினார். அரசியல் உடன்பயணயான த்ரோத்ஸ்கியுடன் விரோதம் பாராட்டினர். தனிநபர் எனும் அளவில் மிகுந்த பிடிவாதம் கொண்டவர் ரோஸா. சாதாரணமாக ஆட்ளை நிராகரிக்கத் தயங்காதவர். அவர் பூமியிடமும் பறவையிடமும் தீராத அன்பு பாராட்டியவர்.

அவரது நண்பர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள். அவர் மிக நெருக்கமாக கடிதத்தொடர்பு கொண்டவர்க்ள சாஞ்ச்சா லீப்னெக்ட், லூயிஸா காவுட்ஸ்க்கி ஜோகித்ஸே போன்றவர்களாவர். அவருடயை கடிதங்களில் அவர் தன்து கோட்பாடுகள் பற்றி விவாதிப்பதி;லலை. தன்னைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்பான தனி உலகத்தையே வேண்டினார். அவர் நண்பர்களையும் சரி எதிரிகளையும் சரி எடுத்த எடுப்பில் தீர்மானித்துவிடுவார். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பவர்கள் சொல்கிறபடி அவர் நிரம்பவும் சிக்கலானவராகவும், சீக்கிரம் கோபப் படக்கூடியவராகவும் இருந்தார்.

அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய சிநேகிதிகள், ரோஸாவை அரசியலை அடிப்படை வாழ்வாகக் கொள்ளாத, குடும்ப வாழ்வுக்கு ஏங்கிய பெண்ணாக, கடுமையான அரசியல் கொண்ட அரசியல்ஜீவி அல்லாத பெண்ணாகச் சித்தரித்தார்கள். ஆனால் அவரது உறவுகள் அனைத்தும அரசியலின் வழியில் அவர் கண்டடைந்தவைதான். இன்னும் அவரது படிப்பு, இயல்பான ஈடுபாடுகள், ஆய்வுகள், அவரின் சர்வதேசியம், அவரது இயற்கை நேசிப்பு போன்றவற்றுக்கிடையில் அரசியல் பெண், அரசியல் அல்லாத குடும்பப் பெண் என்று கூறு போடமுடியாது என்கிறார் அவரது வரலாற்றை எழுதிய நெட்டல்.

ரோஸா எனும் பெண்ணின் காதல், கோபம், அவரை இறுதியில் சந்தித்த மரணம் என்பது வரை அரசியலை அவரது வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் பிரிக்கவே முடியாது.

ரோஸாவின் அரசியல்
ரோஸாவின் நாற்பத்தி எட்டாண்டு கால வாழ்வென்பது ஐரோப்பிய புரட்சிகர அரசியலுடன் மட்டுமல்லாது மூன்றாம் உலக நாடுகளின் விமோசனத்திலும் அக்கறை கொண்டு வாழ்ந்த முழமையான வாழ்வு. அவருடைய The Accumulation of Capita எனும் புத்தகம் மூன்றாம் உலக நாடுகளுக்கு விரிவு பெறும் மூலதனம் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய அவரது ஆய்வாகும். ருஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி தோன்றுவதற்கு இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பு, 1882 ஆம் ஆண்டு தோன்றிய போலந்து புராலிடேரியன் கட்சியின் உறுப்பினர் அவர். போலந்து ரஷ்யா ஜெர்மனி போன்ற நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் நேரடியாகப் பங்கு பற்றியவர் அவர். கார்ல் மார்க்சிலிருந்து தொடங்கும் யூத இனத்தின் இடதுசாரி மரபில் வந்தவர் அவர்.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேதைகள் புரட்சியாளர்கள் அனைவருடனும் சமதையாக நின்று விவாதித்த புரட்சிகரப் பெண்மணி அவர். லெனின் பிற்பட்ட விவசாயிகளின் நாட்டிலிருந்து, அச்சூழலிலிருந்து தனது கோட்பாட்டை வளர்த்தெடுத்தார். ரோஸா ஐரோப்பாவிலேயே பிரம்மாண்டமானதும் வளர்ச்சியுற்றதுமான தொழிலாளி வர்க்கப் போராட்ட அனுபவங்களினூடே தனது பரட்சிக் கோட்பாட்டை உருவாக்கியவர். லெனின், த்ரோஸ்த்க்கி, கார்ல் காவுட்ஸ்க்கி, அகஸ்டோ பெபல், மெஹ்ரிங், கார்ல் லீப்னெக்ட், பெர்ன்ஸ்டீன், கிளாரா ஜெத்கின், ரோஸாவின் காதலரும் புரட்சியாளருமான லியோ ஜோகிஸ்க்கி போன்றவர்கள் ரோஸாவின் சமகாலத்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளும் புரட்சிகரக் குழக்களும் இன்று வரை பேசிவரும் பல்வேறு ஸ்தாபன மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் இந்த மேதைகளுக்கிடையில் எழுந்தது.

1). சட்டபூர்வமான வழியிலான சீர்திருத்தவாதம், புரட்சிகர மாற்றம் இவற்றுக்கிடையிலான பிரச்சினைகள. 2). புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் பொதுவேலை நிறுத்தத்தின் முக்கியத்துவம், தன்னெழுச்சி பற்றிய முக்கியத்துவம் போன்ற பிரச்சினைகள். 3). ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தை, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான யுத்தத்தை, எதிர்ப்பு போராட்டமாக மாற்றுவதன் அவசியம், அச்சூழலில் சமாதான இயக்கங்களின் தேவை போன்றவை குறித்த பிரச்சினைகள். 4). புரட்சிகரக் கட்சிக்கும் வர்க்கத்துக்கும், கட்சிக்கும் மக்களுக்கும் இருக்கவேண்டிய உயிரூக்கமுள்ள தொடர்பு, கட்சிக்குள்ளும் வெளியிலும் ஜனநாயக மத்தியத்துவத்தைப் பேணுவதில் உள்ள பிரச்சினைகள். 5). ஏகாதிபத்தியத்தின் கீழும், முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழும், தேசியப் பிரச்சினை அணுகப்படக்கூடியதான வரையறை. 6). கட்சியில் அதிகாரத்துவமும் அதிகாரத்தில் இருக்கும் கட்சியில் அதிகாரவர்க்கமும் உருவாகி விடக்கூடியதான ஆபத்து குறித்த எச்சரிக்கை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்த அதி முக்கியத்துவம். 7). புரட்சிகரக் கட்சி தொடர்ந்த வர்க்கப் போராட்டத்துக்கு மாற்றாக தொழிற்சங்கவாதத்தை முன்வைக்கும் போக்குக்கு எதிரான போராட்டம். 8). சமகால ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் அதற்கான அவர்களது பொருளாதார வேர்கள் பற்றியதும், கார்ல் மார்க்ஸின் முலதனம் இரண்டாவது பாகத்தில் தீர்க்கப்படாததான கோட்பாட்டுப் பிரச்சினைகள் பற்றியதும் தொடர்ச்சியானதுமான The Accumlation of Capital : A contribution to economic explanation of imperialism புத்தகத்தில் வைக்கப்படும் வாதங்கள் என மிக முக்கியமான பிரச்சினைகளை ரோஸா தனது அரசியல் வாழ்வில் விவாதிக்க நமக்கு முன் விட்டுச் சென்றிருக்கிறார்.

பெர்ன்ஸ்டீன் மற்றும் கார்ல் காவுட்ஸ்க்கியின் சீர்திருத்தவாதம் பற்றியும், தொழிற்சங்கவாதம் பற்றியும், யுத்தத்திற்கு ஆதரவானதும் பற்றிய அவர்களது நிலைபாட்டுக்கெதிரானதுமான சளையாத போராட்டம் ரோஸாவினுடையது. ரோஸாவின் சிந்தனை செயல் சித்தாந்தம் ஆகியவற்றின் செயல்மையம் சர்வதேசீயம்தான். பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை, தேசம் இனம்மொழி போன்றவற்றால் பிரிக்கப்படமுடியாத, இடைநிறுத்தப்படமுடியாத ஜீவநதியோட்டம் போன்றது அவரது சர்வதேசீயம். இந்த பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமைகிற கட்சி, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகத்தால் உத்தரவாதப்படுத்தப்படும் சோசலிச சமூகம், இதுவே அவரது இறுதி இலட்சியம்.

இந்த நிகழ்வுப் போக்கில் அவர் பாட்டாளி வர்க்கத்தின் புத்திபூர்வமான பங்கெடுப்பை, தன்னெழுச்சியை, செயலை, பங்கெடுப்பை எந்த அரசியல் நிகழ்வின் புரட்சித் தன்மைக்கான முதல் நிபந்தனையாக ஆக்கினார். பாட்டாளி வர்க்கத்தின் பெயரால் அவர்களுக்காக முடிவெடுக்கிற கட்டளையிடுகிற அமைப்பாக கட்சி இருப்பதை, தொழிற்சங்கம் இருப்பதை அவர் மறுதளித்தார்.

சீர்திருத்தம் பொதுவேலை நிறுத்தம் ஏகாதிபத்தியம்:

சட்டச்சீர்திருத்த நடவடிக்கைக்கான போராட்டங்கள் புரட்சிக்கான போராட்டங்களிலிருந்து பிரிக்கமுடியாதவை. சீர்திருத்தமும் புரட்சியும் இரு துருவங்கள். ஒவ்வொரு வர்க்கச் சட்டமும் புரட்சியின் விளைவே. புரட்சியின் இறுதி லட்சியத்திலிருந்து பிரிக்கப்படும் சீர்திருத்தவாத நடவடிக்கைகள், இருக்கும் அமைப்பைத் தொடர்ந்து காக்கும் சமரசத்திற்கே இட்டுச் செல்லும். சீர்திருத்தங்கள் நீண்ட கால புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்றோ, புரட்சி சீர்திருத்தங்களின் சுருக்கப்பட்ட வடிவம் என்றோ சொல்வது வரலாற்றுக்கு முரணானது எனச் சொல்லும் எட்வர்ட் பெர்ன்ஸ்டீனது சீர்திரத்தவாதத்திற்கெதிரான ரோஸாவின் போராட்டம் பற்றிய பிரசுரம் : Social Reform or Social Revolution.

அரசியல் மற்றும் பொருளாதார  ரீதியிலான பொதுவேலை நிறுத்தம் என்பது தொழிலாளிவர்க்க அதிகாரத்திற்கு புரட்சகர நடவடிக்கையில் மையமானது எனக் கண்டார் ரோஸா. பொது வேலைநிறுத்தங்களில், பொருளாதார நோக்கங்களை அரசியல் நோக்கங்களிலிருந்து பிரிப்பதோ அரசியல் நோக்கங்களை பொருளாதாரக் கோரிக்கைளிலிருந்து பிரிப்பதோ ரோஸாவுக்கு உடன்பாடானதல்ல. பொருளாதாரப் போராட்டங்கள் நீண்ட கால நோக்கில் அரசியல் போராட்டத்துக்கான களத்தைத் தயாரிக்கும் அதே போதில் அரசியல் போராட்டங்கள் பொருளாதார அதிகாரத்துக்கான தொழிலாளி வர்க்கத்தின் பங்கெடுப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுவேலை நிறுத்தங்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஆன்மீக பலத்தை உயர்த்துவதோடு தனிமைத் துயரை விரட்டி கூட்டு மனப்பான்மையைத் தருகிறது என்கிறார் ரோஸா. Mass Strike  எனும் குறுநூல் பொது வேலை நிறுத்தம் தொடர்பான அவரது பிரசுரமாகும்.

1914 இல் தொடங்கிய முதல் உலகப் போர்க் காலகட்டத்தில் சோசலிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்புக்குள்ளும், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான இச்சண்டையில் ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஒரு போக்கு ஜெர்மன் ஜனநாயகக் கட்சிக்குள்ளும் எழுந்தது. காலனியாதிபத்தியத்தை எதிர்த்தாலும் காலனிய நாடுகளில் ஏகாதிபத்தியம் சீர்திரத்தம் செய்தது என்றும், அங்குள்ள பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் வாழ்வை மேம்படுத்தியது என்று சொன்னது 1907 ஆம் ஆண்டு கூடிய ஸ்ட்ருட்காட் இன்டர்நேஷனலின் கூட்டம். கார்ல் காவுட்ஸ்க்கி போன்றோர் ஏகாதிபத்தியம் முதலாளித்தவலத்தின் தவிர்க்கவியலா வளர்ச்சி அல்ல என்று வாதிட்டனர். சோசலிஸ்ட் இன்டர்நேஷனலில் இருந்த சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரிப் பிரிவை இவர் பிரதிநிதித்துவப் படுத்தினார். ரோஸா யுத்தத்திற்கு எதிரான நிலைபாட்டை மேற்கொண்டார். சோசலிசம் அல்லது காட்டமிராண்டித்தனம் இதுதான் நமக்கு முன்னுள்ள தேர்வு என்றார் அவர்.

அனைத்துக் கலாச்சார வளர்ச்சியின் வீழ்ச்சி, அழிவு, கொலை, கல்லறை, இதுவே ஏகாதிபத்தியம் என்றார் Junious எனும் புனைபெயரில் இக்காலகட்டத்தில் ரோஸா எழுதிய பிரசுரம் : Junius Pamphlet.

கட்சியும் வர்க்கமும்

பரந்து பட்ட தொழிலாளர்களின் பிரக்ஞைபூர்வமான பங்கெப்பு என்பதனை சோசலிசத்தைச் சாதிப்பதற்கான மிக அவசியமான முன்நிபந்தனையாகக் கண்டார் ரோஸா. லெனினும் ரோஸாவும் கலந்துரையாடலில் ஈடுபட்ட முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. ரோஸாவின் பார்வையில் தொழிலாளிவர்க்க இயக்க அனுபவங்களிலிருந்து படிப்பினை பெற்று, அதைப் பொதுமைப்படுத்துவதன் மூலமே புரட்சிகரக் கோட்பாடு உருவாகவேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் பிரக்ஞைபூர்வமான ஆர்வம் பிரக்ஞைபூர்வமான பங்கெடுப்பு இது இரண்டும் சோசலிசத்தைக் கட்டமைக்க முக்கியம் என்கிறார் ரோஸா. தொழிலாளி வர்க்கத்தை சோசலிசத்திற்கு படிப்பிப்பது என்பது அவர்களிடம் உரையாற்றுவது பிரசுரங்களை விநியோகிப்பது அல்ல என்கிறார் அவர். செயல்மட்டுமே மக்களைக் கல்வி மயப்படுத்தும் என்கிறார் ரோஸா.

மிகச்சிறப்பான மத்தியக்குழு இழைக்கும் தவறுகளிலிருந்து பாடம் கற்பதைவிட, புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்திலிருந்து பாடம் பெறுவது அதி சாராம்சமானது என்கிறார் ரோஸா.

ரோஸா லக்ஸம்பர்க்கின் இந்த நிலைபாட்டுக்கான வேர்களை நாம் அன்று நிலவிய ஜெர்மன் சூழலிருந்துதான் விளங்கிக் கொள்ள முடியும். அகஸ்தோ பெபல், கார்ல் காவுட்ஸ்க்கி, எட்வர்ட் பெர்ன்ஸ்டீன், ஹில்பர்டிங் போன்றோர் பிரதிநிதித்துப் படுத்திய ஜெர்மன் பாராளுமன்றப் பாதை, கட்சியினதும் தலைமையினதும் கட்டளையில்லாமல் தொழிலாளி வர்க்கத்ததால் ஏதும் செய்யமுடியாது என்னும் அவர்களது நிலைபாடாக இறுகிப்போயிருந்தது. ரோஸா ஏற்கனவே செயலாற்றிய போலந்து சோசலிஸ்ட் கட்சி நிலைபாடு இது. இனவாத அமைப்பு அது. சமூக அடிப்படையற்று போலந்து தேசிய விடுதலை பேசியது அது. தேசியப் போராட்டத்திலிருந்து முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் விலகியிருந்தனர். தொழிலாளி வர்கக்த்திற்கு அப்படிப்பட்ட ஆர்வம் ஏதும் அப்பொழுது இருக்கவில்லை.

இந்த இரண்டு இயக்கங்களும் அடிமட்ட வர்க்க சக்திகளைப் பற்றியோ தொழிலாளி வர்க்கத்தின் பங்கெடுப்புக்குள்ள முக்கியத்துவம் பற்றியோ உணரவில்லை. முற்றிலும் மறுக்கப்படும் ஒரு விஷயத்தை அழுத்திப் பேச ஆரம்பிக்கும் போது, அதில் சம்பந்தப்பட்டவருக்கு முழு வாழ்வினதும் பிரச்சினையாக அதுவே ஆகிவிடுவதை நாம் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். வர்க்கப் பார்வை புறக்கணிக்கப்படும் போது அதுவே சம்பந்தப்பட்டவர்க்கு முழு முதல் பிரச்சினை. பெண்நிலை நோக்கு, சூழலியல் நோக்கு, விளிம்புநிலை மக்கள் போன்ற நோக்குகளில் சம்பந்தப்பட்டவர்க்கு அச்சமயத்தில் அதுவே அவர்தம் முழு வாழ்வினதும் பிரச்சினையாகிறது. தொழிலாளி வர்க்கத்தின் பிரக்ஞைபூர்வமான பங்களிப்பு புறக்கணிக்கப்படும் சூழலில், ரோஸாவுக்கு அதுவே அவரது முழு இயக்கத்துக்குமான பிரச்சினையாக ஆகிறது. ரோஸாவின் தொழிலாளி வர்க்கப் பங்கெடுப்பு பற்றிய நிலைபாடு இவ்வாறுதான் உருவாகிறது. கட்சி அமைப்பை இரண்டாம் பட்சமாக இதனால்தான் அவரால் பாரக்கமுடிகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் தன்னெழுச்சி என்பது ரோஸாவுக்கு திரிபுவாதத்திற்கெதிரான உடனடிப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டது. இங்கு அவருக்கு அதுவே முதலாவதாகவும் ஆகிறது.

பாஸ்டில் சிறையுடைப்பும், 1905 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியும் தன்னெழுச்சியானவைதான். யாரும் அதைத் தலைமை தாங்கி நடத்தவில்லை. ரஷ்யாவில் தோன்றிய 1917 பிப்ரவரி எழுச்சி தன்னெழுச்சிதான். ஆனால் இம்முறை அதிக அளவிலான சோசலிஸ்ட்டுகள் உள்ளிட்ட தன்னெழுச்சி. பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வெற்றியடையும் வரையிலான ஏற்ற இறக்க நிகழ்வுகளில் போல்ஷ்விக் கட்சியின் வழிகாட்டுதல் இருந்தது. இத்தகைய புரட்சிகரக் கட்சி புரட்சியின் ஆரம்ப எழுச்சியில் இருந்து அதன் இறுதிக்கட்டம் வரை தேவைதான். ரோஸா உடனடியில் அதிகாரவர்க்க மத்தியத்துவத்தினிடையில் வேலை செய்ய வேண்டி இருந்ததால்தான் தொழிலாளி வர்க்கத் தன்னெழுச்சியை மையப்படுத்த வேண்டியவரானார். லெனின், த்ரோஸ்த்க்கி, பிளக்கனோவ் போன்ற ரஷ்யத் தலைவர்கள் இக்காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு வெளியிலேயே இருந்தனர். அமைப்பென்று ஏதும் இல்லை. பொருளாதாரவாதத்தையும் தொழிற்சங்க வாதத்தையும் விமர்சிப்பதினூடே, லெனின் தனது ஆய்வைத் தொடங்குகிறார். வர்க்க எழுச்சியானது பிரக்ஞைபூர்வமான ஸ்தாபனத்தினால் ;வழிகாட்டப்படவேண்டியதின் தேவையை அப்போது லெனின் உணர்கிறார்.

அன்றிலிருந்த நிலைமை லெனினது கட்சிக் கட்டமைப்பு மேலிருந்து கீழான கட்டமைப்புதான். லெனினது கட்சி பற்றிய இக்கோட்பாடு மாறாத தன்மை படைத்ததல்ல. கட்சி ஜனநாயக மயப்படுத்தப்பட வேண்டும், தொழிலாளி வர்க்கம் தன்னுணர்ச்சி பூர்வமாக தன்னெழுச்சியான புரட்சிகர வர்க்கம் என்கிற நிலைபாட்டுக்கு லெனின் பிற்பாடு வந்து சேர்கிறார்.

கட்சி பற்றிய லெனினது முக்கியமான பிரசுரம் செய்ய வேண்டியது என்ன? என்பதாகும். இப்புத்தகம் அன்று நிலவிய பொருளாதாரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், கட்சியின் கட்டமைப்பு மற்றும் அதன் பாத்திரம் பற்றிப் பேசும் நூலாகும். லெனின் இந்நூலில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கட்சிக்குள் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசுகிறார். தனது பண்ணிரண்டு ஆண்டுகள் தொகுப்புக்கான முன்னுரையில், செய்ய வேண்டியது என்ன எனும் தனது நூல் தவறான முறையில் வியாக்கயானப்படுத்தப்படுத்தப்படுவதை வேதனையோடு விமர்சித்த லெனின், இப்புத்தகம் ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் வரலாறு பற்றிய ஞானமுள்ள ஒருவரது குறிப்புகளுடன் அல்லாது வேறு மொழிகளில் பிரசுரிக்கப்படுவது விரும்பத்தக்கதல்ல என்றும் கூறுகிறார்.

லெனினது கட்சி பற்றிய கோட்பாடு, அக்காலத்தில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தினிடையில், தொழிலாளிவர்க்கம் வளர்ச்சி பெற்றிருந்த சூழலில், அதிமையப்படுத்தப்பட்ட பாதி ராணுவக்கட்டமைப்பு பற்றிய கட்டைமைப்புக் கோட்பாடுதான். அதன் வரலாற்று முக்கியத்துவத்தை மீறி அதைப் பொதுமைப்படுத்ததுது சரியானது அல்ல. மேலும் மட்டுமீறிய மையத்துவ அழுத்தம் லெனினால் கட்சிக்கு கொடுக்கப்பட்டதை அக்காலகட்ட ரஷ்யப் பிண்ணனியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இந்த இருவரது வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்ளாமல், ரோஸாவையும் லெனினையும் இரு எதிரெதிர் துருவங்களில் நிறுத்துபவர்கள் வரலாற்றுக்குருடர்கள் அன்றி வேறில்லை.

அதிமத்தியத்துவம் விளைவித்த சேதங்களை ஸ்டாலினியத்திலிருந்து, கிழக்கு ஐரோப்பிக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளிலிருந்து இன்றளவும் நம் நாடுகளில் நிலவி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், புரட்சிகர விடுதலை அமைப்புகள் என்று சொல்லிக் கொள்பவை வரை, நாம் அதனது மானுட விரோதத்தன்மையை பாரத்துக் கொண்டதான் இருக்கிறோம்.

ரோஸா வலியுறுத்திய பிரக்ஞையுள்ள தொழிலாளர்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கெடுப்பு மட்டுமே சித்தாந்தம் வழிகாட்டக் கூடிய தலைமையயை புரட்சிகரத் தலைமையாக மாற்றும்.

ரோஸாவுக்கும் லெனினுக்கும் நடந்த இந்த விவாதங்களுக்கு அடிப்படையாக அமைந்த புத்தகங்கள் பனி;வருவன. காரல் மார்க்ஸ் எங்கெல்சின் : The class struggle in France லெனினுடைய What is to be done மற்றும் One step forward two step backward. ரோஸாவின் The programme of the Communist party of germany: Spartacist மற்றும் Speech to the foundation congress of the german communist party  போன்றனவாகும்.

தேசிய இனப்பிரச்சினை

ரோஸாவின் பெயர் அதிகமாகப் பிரஸ்தாபிக்கப்படும் இன்னொரு பிரச்சினை தேசிய இன விடுதலை தொடர்பானதாகும். இப்பிரச்சினையிலும் ரோஸாவுக்கும் லெனினுக்கும் இடையில் விவாதம் மூண்டது. பிரச்சினை போலந்தின் விடுதலை தொடர்பானதாக எழுந்தது. போலந்து எனும் நாடு ரஷ்யன்-ஜெர்மன்-ஆஸ்ட்ரியன் பேரரசுகளால் பிரிக்கப்பட்ட ஒரு நாடு. ரோஸா போலந்து தொழிலாளர் கட்சியின் தரைவராயிருந்தவர். 1896 ஆம் ஆண்டு ஆவர் போலந்து பிரச்சினையை ஆய்வு செய்து The Industrial development of Poland  எனும் புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் தேசியம் சம்பந்தமாக அவர் எடுத்த நிலைபாட்டை அவர் தனது மரணம் வரை கொண்டிருந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நிலைபாடு இதுதான் : முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரையறைதான் தேசிய அரசு என்பது. ஆகவே சோசலிஸ்ட்டுகளின் கடமை  முடியாட்சிக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ நிலவுரிமை ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடவேண்டும். முதலாளித்துவம் வளர்ந்து கொண்டுவந்த காலகட்டத்தில் ஐரோப்பிய தேசியங்கள் பற்றிய மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நிலைபாடு இதுதான். அவர்களது முதல் எதிரி ஜார் பேரரசும் ஹாப்ஸ்பர்க் பேரரசும்தான். இதற்கு எதிரான அனைத்தையும் அவர்கள் வரவேற்றார்கள். இதன் ஆதரவுடன் வரும் அனைத்தையும், அது தேசிய இயக்கமாயினும் அவர்கள அதை எதிர்த்தார்கள். ஜாரிஸ்ட் ரஷ்யாவுக்கு எதிராக, போலந்து தேசிய விடுதலைக்காக புரட்சிகர ஜெர்மனியை ஆயதமேந்த அறைகூவல் விடுத்தனர் இவர்கள். ஜாரிஸத்தின் வீழ்ச்சியும் ஹாப்ஸ்பர்க் பேரரசின் வீழ்ச்சியும் இதனால் துரிதப்படும் என்று நம்பினர். ஆனால் இதே காரணங்களுக்காக ஸ்லாவியர்கள் குரோசியர்கள் ஸெர்பியர்கள் போன்றோரின் தேசிய விடுதலையை எதிர்த்தனர். இவை ஜாரையும் ஹாப்ஸ்பர்க் முடியாட்சியையும் வலுப்படுத்தும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

இவ்வாறு முடியாட்சியை வீழ்த்துவது எனும் கண்ணோட்டத்திலிருந்துதான் மார்க்சும் எங்கெல்சும் தம் காலத்திய தேசிய இனப்பிரச்சினையைப் பார்த்தார்கள். தேசிய இனப் பிரச்சினையில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அக்கறை என்பது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவோடு வரையிடப்பட்டது. ஆசிய ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க முதலாளித்வ தேசீய கருத்தாக்கம் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. காலனிய நாடுகளில் விடுதலைக்குப் பின்னான சமூகங்களில் சோசலிச அமைப்புக்கான சாத்தியம் ஏங்கெல்ஸின் கவனத்துக்குள் வரவில்லை. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படுமானால் அதையொட்டி பாதி நாகரீகமான நாடுகள் தமது ஒப்புமைக்கேற்ப எழும் என்று நினைத்தார் ஏங்கெல்ஸ்.

ஓப்பீட்டளவில் ரோஸாவின் அக்கறை ஐரோப்பா சார்ந்தாயினும், ஆசிய ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க தேசியங்களையும் அவர் கவனங் கொண்டார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் வரையறுத்த ஐரோப்பா மாறிவிட்டது என்றார் அவர். மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் ஜனநாயகப் புரட்சிகள் முடிந்துவிட்டன என்றார் ரோஸா. மார்கஸ் எங்கெல்ஸ் காலத்தில் புரட்சியின் மையங்களாக மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா இருந்தது. ஆனால் தற்போது புரட்சியி;ன் மையம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கு கிழக்கு நோக்கி நகர்ந்துவிட்டது என்றார் ரோஸா. ஜெர்மன் பிரான்ஸ் பிரிட்டன் பெல்ஜியம் போன்ற நாடுகள் இப்பேது ரஷ்யாவை எதிர்பார்க்கவில்லை. மாறாக ரஷ்யா இவர்களை எதிர்பார்த்து நிற்கிறது என்றார். போலந்து முதலாளித்துவம் தனது சந்தைக்காக ரஷ்யாவைச் சாரந்து நிற்கிறது. ரஷ்ய ஜாரிஸத்துடன் சேர்ந்து போலந்தினது தொழிலாளி வர்க்கத்தையும் புரட்சிகரப்பகுதிகளையும் ஒடுக்க போலந்து முதலாளித்துவம் முனைகிறது என்றார் ரோஸா.

எந்த சமூக வர்க்க சக்தியும் போலந்தை மீட்டெடுக்கக்கூடிய நிலையில் தற்பொழுது இல்லை என்பதையே தனது ஆய்வு நிருபிக்கிறதாகச் சொல்கிறார் ரோஸா.

இந்ய ஆய்விலிருந்து முதலாளித்துவத்தின் கீழ் தேசிய சுதந்திரத்திற்கு முற்போக்குப் பாத்திரம் இல்லை என்ற நிலைபாட்டுக்கு ரோஸா வந்தார். மாறாக சோலிசத்தின் கீழ் மானுடக் குலத்தின் சர்வதேசிய ஒற்றுமை நடைமுறையாகிவிடும், இச்சூழலில் தேசிய கோஷங்களுக்குத் தேவையிருக்காது என அவர் சொல்கிறார். தொழிலாளிவர்க்கம் தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடத் தேவையில்லை. அது மட்டுமல்ல அது எதிர் புரட்சித்தன்மை வாய்ந்ததும் என்றார் அவர்.

தொழிலாளி வர்க்கத்தின் தேசிய கோஷம் என்பது தமது கலாச்சார நடவடிக்கையில் தேசிய சுயாதீனம் என்கிற கோரிக்கையோடு வரையறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரோஸா.

ரோஸா லக்சம்பர்க்கின் இந்த நிலைபாடும் அவரது அக்காலத்திய அரசியல் சந்தர்ப்பவாத எதிரிகளுக்கெதிரான விமர்சன நிலைபாடாகத்ததான் மேற்கொள்ளப்படுகிறது. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போரில் ஒன்றைச் சார்ந்து மற்றொன்றை எதிர்ப்பதன் மூலம் தனது நலனைக் காத்துக் கொள்ளலாம் எனும் போலந்து சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி நிலைபாட்டுக்கு எதிராக அவர் இந்நிலைபாட்டை மேற்கொள்கிறார். ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்த்திரிய ஜெர்மன் ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டாகச் செயல்பட்டான் டாஸின்ஸ்க்கி எனும் போலந்து சோசலிஸ்ட் கட்சியின் தலைவன். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை அவன் கண்டித்தான். ரஷ்யப் பேரரசோடு தொழிலாளிகளை இணைத்து, அவர்களை ஜெர்மன் ஆஸ்ட்ரிய ராணுவத்துக் காட்டிக் கொடுத்தான் அவன்.

தனது உடனடி நிலைபாட்டிலிருந்து எழுந்த இந்த வரையறுப்பை அனைத்து விதமான சுயநிர்ணய உரிமைக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பது என ரோஸா பொதுமைப்படுத்தினார். இந்தக் பொதுமைப்படுத்தல் அவருக்குள் தகித்த பாட்டாளிவரக்க சர்வதேசீயம், உலகளாவிய மனிதநேயம் எனும் நிலைபாட்டிலிருந்து எழுந்தது. உண்மையில் இந்தச் சோகம் ரோஸாவினது மட்டுமல்ல மனித குலத்தை நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் நேரும் சோகம்தான்.

ரஷ்ய ஒரு ஒடுக்கும் நாடு. போலந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் நாடு. லெனின் ரஷ்யப் பேரரசைச் சார்ந்தவர். ஒடுக்கப்படும் நாட்டின் உரிமைக்காகப் போராட வேண்டியது அவரது புரட்சிகரக் கடமை. ரோஸா பாட்டாளிவர்க்க சர்வதேசீயத்திற்காக நிற்பவர். அவருக்குப் போலந்து விடுதலையைவிட, ரஷ்ய போலந்து பிரெஞ்சு ஜெர்மன் ஆஸ்த்ரிய தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை முக்கியம். போலந்தின் தேசிய விடுதலை எந்தவிதமான முற்போக்குப் பாத்திரமும் வகிக்காது என்பது அவரது நிலைபாடு. ரோஸாவினதும் லெனினதும் இறுதி இலக்கு சர்வதேசீயத் தொழிலாளர் ஒற்றுமைதான்.

ரோஸா தேசீய சுயநிர்ணய உரிமையை வர்க்கப் போராட்டத்தோடு இணைக்கவே முடியாதெனப் பார்த்தார். லெனின் தேசிய சுயநிர்ணய உரிமையயை வரக்கப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டு போபகமுடியும் என நினைத்தார். ரோஸாவிடம் இங்கு தவறுவது இயங்கியல். எதிர்மறைகளின் ஒற்றுமை.

தேசீய விடுதலைக்காக போராட்டப் பகுதியை சர்வதேசிய சோசலிசத்திற்கான போராட்ட முழுமையோடு இணைப்பது என்பதை லெனின் உணர்ந்து கொண்டிருந்தார். ரோஸா லக்ஸம்பர்க் சுதந்திரமான சிந்தனையாளர். ஆய்வாளர். மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் போன்றோரது வரையறுப்பக்களோடு முரண்படுவதற்கான வரலாற்றுக் காரணங்கள் கொண்டவர் ரோஸா. இதே ரோஸா லக்ஸம்பர்க், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நம்பிக்கைக்கு எதிராக, துருக்கிக்கு எதிரான ஸ்லாவ் மக்களின் தேசீய இயக்கத்தை ஆதரித்தார். இது போலந்து தொடர்பான அவரது அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆயினும் இங்கும் ரோஸாவினது அளவுகோல் பாட்டாளிவர்க்க சர்வதேசீயம்தான்.

போல்ஷிவிசம் பற்றிய விமர்சனம்

1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஸ்லாவ் சிறையிலிருக்கும் போது ரஷய்ப்புரட்சி பற்றிய The Russian Revolution எனும் புத்தகத்தை ரோஸா எழுதினார். ஜெர்மன் ரஷ்ய மொழிப் பிரசுரங்களை இந்நூலுக்கான ஆதாரங்களாக அவர் எடுத்துக் கொள்கிறார். 1922 இல், நான்கு ஆண்டுகள் கழித்து, ரோஸாவின் நண்பர் பால் லெவி அந்நூலை வெளியிட்டார். அன்று அது எழுதி முடிக்கப்படாத ஒரு புத்தகம். 1928 இல் மறுபடியும் பதிதாகக் கண்டெடுக்கப்பட்ட கையெழுத்துப் படிகளில் இருந்து அதன் ஜெர்மன் பதிப்பு வெளியானது. அதனது ஆங்கிலப்பதிப்பு 1940 ஆம் ஆண்டு நியூயார்க்கில் வெளியானது.

மேற்கத்திய சமூக ஜனநாயகத்திடம் இல்லாது போன புரட்சிகரப் பெருமிதம், புரட்சிகரத் தகைமை கொண்டவர்கள் போல்ஷிவிக்குகள். அவர்களது அக்டோபர் எழுச்சியானது ரஷ்யப் புரட்சி விமர்சனம் மட்டுமல்ல, சர்வதேசீய சோசலிசத்தினது விமோசனத்தினது பெருமிதமுமாகும் என்கிறார் ரோஸா. இவர்கள் சர்வதேசீய பாட்டாளிவர்க்கத்திற்கு முன்னுதாரணமானவர்கள், முதலாமவர்கள் மட்டுமல்ல. இவர்கள் மட்டுமேதான் உதாரணமானவர்கள் என்கிறார் ரோஸா. எங்கெங்கும் எதிர்காலம் போல்ஷிவிஷத்திற்கு உரியதே எனக் குரல் தருகிறார் ரோஸா. மேற்கத்திய ஜனநாயக சோசலிசத்தின் துரோகம், ரஷயப் புரட்சியி;ன் தனிமை போன்றன திரிபுகளுக்கும் தவறுகளுக்கும் இட்டுச் செல்லுமென அவர் நினைத்தார்.

சர்வதேசீய ஆதரவு இல்லாமல், பாட்டாளிகளின் எத்துனை பெரிய தியாகம் இருந்தாலும் தனிப்பட்ட நாட்டில் தவிர்க்கவியலாமல் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் புரட்சி கொண்டிருக்கும் என்றார் ரோஸா.

ரஷ்யாவில் நிகழந்த ஒவ்வொன்றும் காரண காரியம் சார்ந்தவை. உடனடியில் லெனின் போன்ற புரட்சியாளர்களிடம் முழுமையான ஜனநாயகம், பாட்டாளிவர்க்க சர்வாதிகார முன்னுதாரணம், சோசலிசப் பொருளாதாரம் போன்றவற்றை நம் இச்சூழலில் கோருவது அதி மானுடச் செயலாகவே இருக்கும். அவர்களால் முடிந்த அளவு மிகக் கடுமையான சூழலினிடையேயும் அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்றார் ரோஸா. இவ்வாறு ரஷ்யப் புரட்சியைப் போற்றிப் புகழ்கிற் அவர், எல்லாவற்றையும் விமர்சனம்செய் எனும் மார்க்சீய மரபிற்கேற்ப சுதந்திர மார்க்சீயவாதியாகத் தனது விமர்சனங்களையும் முன்வைக்கிறார்.

புறநிலை அம்சங்கள் புரட்சியை தவறுகளுக்கு இட்டுச்செல்லும், அதைப்போலவே தலைமைத்துவத்தில் இருக்கிற அகநிலை அம்சங்கள் இந்தத் தவறுகளை இன்னும் ஆபத்துள்ளதாக ஆக்கிவிடும். ஆபத்து எங்கே வருகிறதெனில் அவர்களது சூழலில் எழுந்த அவர்களது நடவடிக்கை கோட்பாடுகள் போன்றவற்றை உறைநிலையில் கோட்பாட்டு அமைப்பாக்கி சர்வதேசியப்பாட்டாளிகளுக்கு அதைப் பரிந்துரை செய்யும் போது இத்தவறுகள் வரும் என்கிறார் ரோஸா.

இத்தகைய தவறுகள் நேர்ந்துவிட்டது என்பது வரலாறாக இருக்கிறது. இப்படித்தான் லெனினது செய்ய வேண்டியது என்ன? எனும் புத்தகம் கட்சி அமைப்பின் வேத புத்தகமானது.  ரோஸாவின் போல்சிவிஷம் தொடர்பான விமரசனங்கள் நான்கு விஷயங்கள் பற்றியது. : 1). நிலப் பிரச்சினை. 2). தேசிய இனப்பிரச்சினை. 3) அரசியல் நிர்ணய சபை குறித்த பிரச்சினை. 4). தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் குறித்த பிரச்சினை.

போலஸ்விக்குகள் உடனடியான நிலப்பறிமுதலை முன்வைத்து அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதை திட்டமாகக் கொண்டிருந்தார்கள் என ரோஸா சொன்னார் : முதலாவதாக முதலாளித்துவ நிலஉரிமையாளர்கள் அத்தோடு சிறுபான்மையினரான கிராம பணக்கார முதலாளிகள்தான் இருந்தார்கள். அவர்களிடமிருந்து நிலங்களை எடுப்பது புரட்சிகர இயக்கத்துக்கு சிறுபிள்ளை விளையாட்டு. ஆனால் அதன் பின்பு பறிக்கப்படுவதை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது விவசாய உற்பத்தியினை சமூக மயமாக்கப்படக்கூடிய எத்தகைய முயற்சிக்கும் எதிராக, எண்ணிக்கையில் பலமாக, புதிதாக வளர்ச்சியடைந்த நில உடமை கொண்ட விவசாயிகள், தாங்கள் புதிதாக வென்ற உரிமையுடன் பற்களாலும் நகத்தாலும் புரட்சியை எதிர்ப்பார்கள். எந்த விதமான சோசலிசத் திட்டங்களுக்கும் எதிராக அவர்கள் நிற்பார்கள். இந்த ஆபத்து ஸ்டாலின் காலத்திலேயே வெளிச்சத்துக்கு வந்தது. சிறிய தொழிலாளி வர்க்கத்தின் தனிமை, விரோதத்தன்மையுள்ள பிற்போக்காக சிறுமுதலாளி விவசாயிகள், ஸ்டாலின் காலத்தில் எழுச்சி பெற்றவர்கள் இவர்களே. ஆனால் விவசாயிகளின் நிலப்பசியும் எழுச்சியும் போல்ஸ்விக்குககளுக்கு வேறு வழியை விட்டுவைக்கவில்லை. மேலும் வர்க்க எதிரிகள் தனிமைப்பட்டிருந்து புரட்சியை எவ்வகையிலும் கவிழ்த்துவிட பசிகொண்டலைந்தார்கள்.

தேசிய இனப்பிரச்சின தொடர்பாக சகலவிதமான சுயநிர்ணயக் கோரிக்கைகளையும், பிரிந்து போகும் உரிமையையும் ரோஸா லக்ஸம்பர்க் நிராகரித்தார். ரஷ்யாவின் அன்றைய நிலையில் ரோஸாவின் நிலைபாடு ரஷய்ப்புரட்சி உடனடியில் புதைகுழியில் வீழுவதிலேயே முடிந்திருக்கும். நிர்ணய சபையும் சோவியத்துக்களும் இரண்டுமே வேண்டும் என்றார் ரோஸா. நிர்ணய சபை விவசாயப் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோவியத்தில் தொழிலாளிவர்க்கப் பிரதிநிதிகள் பெரும்பான்மையினராக இருந்தனர். போல்ஸ்விக்குகள் தொழிலாளி வர்க்கத்தின் அழுத்தமான வடிவமான சோவியத்தைத் தேர்ந்தார்கள். நிர்ணய சபையைக் கலைத்தார்கள்.

ரோஸாவின் நோக்கம் பரந்துபட்ட மக்கள் பிரதிநிதித்துவத்தைக் கோருவதாக இருந்தது. 1918 நவம்பர் 20 இல் ஜெர்மன் தேசிய சபை முதலாளித்துவத் தன்மை கொண்டது என்றும், பிர்க்ஞைபூர்வமாகவோ அல்லாமலோ புரட்சியை கீழ்மைப்படுத்தும் என்கிறார் ரோஸா. நமக்கு இப்போது முன்னுள்ள பிரச்சினை ஜனநாயகமா சர்வாதிகாரமா என்பதல்ல. முதலாளித்துவ ஜனநாயகம் உண்டு. சோசலிச் ஜனநாயகம் உண்டு. பாட்டாளி வரக்க சர்வாதிகாரம்தான் சோசலிச அர்த்தத்தில் ஜனநாயகமாகும். போல்சிவிஷம் பற்றிய ரோஸாவின் பிரதான விமர்சனம் யாதெனில், ஜனநாயகத்தை அவர்கள் தொழிலாளர்களின் ஜனநாயகத்துக் கட்டுப்படுத்துகிறார்கள், ஜனநாயகத்தைக் கீழாகக் கருதுகிறார்கள் என்பதுதான். தொழிலாளர் ஜனநாயகம் என்பது பாட்டாளிவர்க்கப் புரட்சியிலிருந்தும் சோசலிசத்திலிருந்தும் பிரிக்கப்படமுடியாதது என அவர் நம்பினார்.

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்தைச் செயல்படுத்துவதற்கு மாறாக அதை அழிப்பது அல்ல, இந்த சர்வாதிகாரம் வர்க்கத்தின் செயலாக இருக்க வேண்டும். மாறாக வர்க்கத்தின் பெயரால் செயல்படும் தலைமை தாங்கும் சிறுபான்மையுடையதாக அல்ல எனறார் அவர். பொதுத் தேர்தல்கள் இல்லாமல் அபிப்பிராயங்களின் சுதந்திரமான போராட்டம் இல்லாமல், கட்டுப்பாடற்ற சுதந்திரமான பத்திரிக்கைச் சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை இல்லாமல், எல்லா வெகுஜன நிறுவனங்களிலும் வாழ்வு இருந்தும் கட்டுப்பட்டுப் போகும். ஆதிகாரவர்க்கம் மட்டுமே உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டு, மேல்மட்டத் தொழிலாளிவர்க்கத்தில் சிலரை மட்டுமே அழைத்து கூட்டங்களின் தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கைதட்டிக் கொண்டு, நிச்சயமாக இது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இல்லை. இது விரல்விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளின் சர்வாதிகாரம், முதலாளித்துவ அர்த்தத்தில் சர்வாதிகாரம் என்றார் ரோஸா.

மூலதனக் குவியல்

1906 லிருந்து 1913 ஆம் ஆண்டு வரை ரோஸா அரசியல் பொருளாதாரம் பற்றி ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினர்க்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் இந்நோக்கத்துக்காக அவர் An Introduction To the Political Economy  எனும் புத்தகத்தை எழுதத் துவங்கினார். வரலாற்றின் திட்டமிட்ட வரையறைக்குள், முதலாளித்துவ உற்பத்தியின் செயல்முறை உறவுகளை தெளிவுடன் என்னால் விளக்கமுடியாத நிலைக்கு நான் வந்தேன் எனத் துவங்கும் ரோஸா, மிக ஆழ்ந்து நோக்கியபோது இது எவ்வாறு பிரச்சனையை முன்வைப்பது என்பது தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, மார்க்ஸின் மூலதனம் இரண்டாம் பகுதியின் கோட்பாட்டுப் பிரச்சினைகளோடு தொடர்பு படுத்தி தீர்வு காணப்படவேண்டிய விஷயம் என்பது தெரிந்தது என்கிறார் அவர்.

அதே சமயத்தில் அது சமகால ஏகாதிபத்திய அரசியலுடனும் பொருளாதார வேர்களுடனும் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் உணர்ந்தேன் என்று தொடர்ந்து சொல்கிறார் அவர்.

இவ்வழிதான் ரோஸா தனது Accumulation of capital : A contribution to an economic explanation of Imperialism எனும் புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் அவர் வளர்ச்சியடைந்த தொழில்நாடுகளுக்கும் வளர்ச்சியற்ற விவசாய நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்தார். இந்த ஆய்வின் மூலம் இவர் வந்தடைந்த பிரதான நிலைபாடு இதுதான்: ஏகாதிபத்தியம் நீண்ட காலத்துக்கு முதலாளித்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் அதே வேளை, அதனது இடிபாடுகளுக்கடியில் அது மனித குலத்தை சதா அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்.

இப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய பொருளியல் பேராசிரியர் ஜான் ஜகோபின் குறிப்பிடும் போது : கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக முதலாளித்துவத்தின் நீட்சியானது புதிய பிரதேசங்களுக்குப் பரவியதால்தான், கல்வித்துறைசார் பொருளியலாளர்கள் சொல்கிறபடி, பரந்துபட்ட சார்பற்ற வளர்ச்சி ஏற்ப்பட்டது என்பதை சிலரே மறுக்கமுடியும். பல கல்வித்துறை சார் பொருளியலாளர்கள் உலகெங்கும் பிரதேசங்களின் எல்லை மூடப்பட்டுவிட்டதால், முதலாளித்துவத்திற்கு நேர்ந்திருக்கும் அசெளகரியமான நிலையைக் கவனத்திலெடுக்கிறார்கள்.

இப்புத்தகம் ரோஸா திட்டமிட்ட வகையில் முழுமையடையாத ஒரு நூலாகும். பத்து அத்தயாயங்கள் எழுதுவதற்காகத் திட்டமிட்ப்பட்ட புத்தகத்தின் ஐந்து அத்தியாயங்கள் மட்டுமே கண்டெடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவரது அசலான திட்டத்தில் இடம்பெற்ற ஐந்து அத்தியாயங்கள் அல்லது எழுதி கிடைக்காது போன அத்தியாயங்கள் இவைதான் : 1).சமூக உற்பத்தி. 2).நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பு 3). மத்திய கால நகரிகமும் கைவினைத் தொழிலும் 4). மூலதனத்தின் இலாபம் 5). நெருக்கடி.

ரோஸாவால் திட்டமிடப்ப்ட்ட முழமையான புத்தகம் மார்க்ஸின் பொருளாதாரம் பற்றின முழு ஆய்வுகளின் சுறுக்கப்பட்ட வடிவமாகவும், அதன் நீட்சியாக ஏகாதிபத்தியக் காலகட்டம் பற்றின மார்க்சியப் பொருளாதார ஆய்வாகவும் இருக்கிறது. இப்புத்தகத்துக்கான முன்வரைவுகளை ரோஸா தனது காதலரும் தோழனுமுமான லியோ ஜோகித்சிக்கு எழுதிய ஒரு கடிதத்திலும் விரிவாகக் குறிப்பிடுகிறார். உலகமயமாதல் சூழலில் பரவாலாகிவரும் மூலதனம் பற்றிய ரோஸாவின் திட்டமிடப்பட்ட ஆய்வு இவ்வகையில் நம் காலத்திற்கும் பொறுத்தமானதாகும்.

ரோஸா எதிர்த்துப் போராடிய விஷயங்கள் இன்றளவும் இடதுசாரிக்கட்சிகளில் போராடவேண்டிய பிரச்சினைகளாகத்தான் இருக்கிறது. தொழிற்சங்கவாதம், கட்சியில் அதிகாரவர்க்கப் போக்கு, புரட்சிக்குப் பிந்திய சமூகங்களில் ஜனநாயகம், கட்சியில் தொழிலாளர்களின் பங்கெடுப்பு, ஏகாதிபத்தியம் விரிந்த உலகமயாதல் போக்கு, போன்றவற்றைப் பற்றி ரோஸா சொன்னது இன்னும் பொறுத்தமாகத்தான் இருக்கிறது.  தேச விடுதலைப் போராட்டத்தை, அதன் அடிப்படையில் ஒப்புக் கொண்ட பிரான்ஸ் பெனான், அமில்கார் கேப்ரியல் போன்றவர்கள் அதனது தலைமை சக்தி அதனது எதிர்கால சமூகப் பொருளியல் தெரிவு போன்றவை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

தேசியம் எதிர்ப் புரட்சித்தன்மை எய்துவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருக்கிறதென்பதை தேசியத்தை ஆதரிக்கிற பெரும்பாலுமான கோட்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள். தேசிய யுத்தத்தின் தலைமை சார்ந்த பிரச்சினையையும், புரட்சிக்குப் பிந்திய சமூகத்தின் ஆளும் சக்திகளில் வர்க்கம் சார்ந்த பிரச்சினைகளையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.

இவ்வகையில்தான், இன்று தேசிய ஒடுக்குமுறைக்கெதிரா அம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறவர்கள், தேசியத்தை இருவகைகளாக புரட்சிகர தேசியம், எதிர் புரட்சிகர தேசியம் என வரையறுக்கிறார்கள். தேசியம் பாசிசத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதை தன் அனுபவத்தில் கண்டவர்  ரோஸா. அவர் மிகப்பெரும் விடுதலைச் சக்தியாக நம்பிய அதே ஜெர்மன் சமூக ஜனநாயகம்தான் அவரது கொலைக்கும் காரணமாகியது. அந்த சமூக ஜனநாயகத்திலிருந்துதான் நாசிசமும் பின்னாளில் தோன்றியது. அவர் தேசியம் தொடர்பாக விடுத்த எச்சரிக்கை இன்றைக்கும் பொறத்தமானது. அவர் பின் புரட்சி சமூகங்களில் ஜனநாயகம் சம்பந்தமாக எழுப்பிய கேள்விகள் இன்றைக்கும் பொறுத்தமானது. அவர் புரட்சிகரக் கட்;சியில் மக்களை விலக்கிய அதிகாரவர்க்கம் சம்பந்தமாக எழுப்பிய கேள்வியும் இன்றைக்கும் பொறுத்தமானது.

ரோஸாவின் மரணம்

முதலாம் உலகப் போரில் ஜெர்மன் சமூக ஜனநாயவாதிகள் யுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தபோது தொழிலாளிவர்க்கத்தையும் ராணுவத்தையும் போருக்கு எதிராக நில்லுங்கள், யுத்தத்தை சோசலிசத்துக்கான உள் நாட்டு யுத்தமாக மாற்றுங்கள் என்றார்கள் ரோஸாவும் லீப்னெக்ட்டும். தனிமையிலிருக்கும் ரஷ்யப் புரட்சி பற்றி மிகுந்த அக்கறை கொண்டார் ரோஸா. அந்தப் புரட்சி காப்பாற்றப்படவேண்டுமானால் சர்வதேசியத் தொழிலாளர்கள் அப்புரட்சியைக் காப்பாற்ற வேண்டும், அதற்கு உதவ வேண்டும், அதன் பொருட்டு உலகின் பல்வேறு இடங்களில் தோழமைபூர்வமான புரட்சிகள் தோன்ற வேண்டும் என நினைத்தார் அவர்.

முதலாம் உலகப் போரைக் கண்முன் நின்று பார்த்தவர் ரோஸா. போருக்கு எதிராக நின்றவர் அவர். முதலாம் உலகப் போரின் இறுதியில் ஆட்சிக்கு வந்த சமூக ஜனநாயகவாதிகள் ரோஸாவையும் லீப்னெக்ட்டையும் உறுதியாகக் கொலை செய்வதென்று திட்டம் தீட்டினார்கள். சம்பவங்கள் மிக விரைவாக நடந்தேறியது.

1919 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் ரோஸா லக்ஸம்பர்க்கும் கார்ல் லீப்னெக்டும் அடைக்கலம் புகுந்திருந்த வீடடிலிருந்து கைது செய்யப்பட்டார்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, அவர்கள் நேராக ஈடன் ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இரண்டு பேரும் விசாரனை அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதான நாடகம் நடந்தது. லீப்னெக்ட் சிறிது நேரத்தில் வெளியே கொண்டுவரப்பட்டார். முதலிலேயே துப்பாக்கிப் பின்கட்டையால் அடிக்கப்பட்டு காயம்பட்டிருந்தார் அவர். மறுபடியும் துப்பாக்கிப் பின்கட்டையால் மண்டையில் அடிக்கப்பட்டார் அவர். ராணுவ வாகனத்தில் தூக்கி வீசப்பட்டார். லாண்டவேயர் கால்வாய்க்கு அருகில் கார் நின்றது. சில அடிகள் நடக்குமாறு அவரை வற்புறுத்தினார்கள். தப்பிச் செல்ல முயன்றார் சுட்டோம் எனும் நாடகத்தின்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிற்பாடு அடையாளமற்ற நபர் என அவரது உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ராணுவ வாகனம் திரும்பவும்; ஈடன் ஹோட்டலுக்கு வந்தது. இப்போது ரோஸாவின் முறை. அறையிலிருந்து ரோஸா வெளியெ அழைத்துச் செல்லப்பட்டார். பின்மண்டையில் துப்பாக்கியில் அடித்ததில் ரோஸாவின் கபாலம் பிளந்தது. அவருடைய உடலை காரில் வீசினார்கள். பக்கவாட்டில் ஒருவன் துப்பாகியில் நெற்றியில் சுட்டார்கள். வாகனம்; விரைந்தது. லாண்டவேயர் கால்வாயில் உடலை வீசியெறிந்தார்கள். ரோஸாவின் காதலரும் தோழருமான் ஜோகித்சி பிற்பாடு திட்டமிடப்பட்ட கொலை இதுவென நிரூபித்துக் காட்டினார். மிக விரைவிலேயே அதற்கான விலையையும் அவர் கொடுத்தார். 1919 மார்ச் 10 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் தலையைகத்தையொட்டியிருந்த சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஜோகித்சி கொலை செய்யப்பட்டார். தப்பிக்க முயற்சி செய்த போது கொல்லப்பட்டார் என பின்னால் போலீஸ் அறிக்கை வெளியிட்டது. ரோஸாவுக்காகவே தனது உயிரைக் கொடுத்தார், ரோஸாவின் நண்பனும் தோழனும் காதலனும் ஆன ஜோகித்சி.

சோசலிசம் அல்லது காட்டமிராண்டித்தனம் என தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தவர் ரோஸா. முதலாளித்துவத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சோசலிசத்திறகான புரட்சியாக தொழிலாளி வர்க்கம் தலைமையேற்று மாற்ற வேண்டும் என்பதை நம்பியவர் ரோஸா. அவர் ஜெர்மன் ஜனநாயகக் கட்சியில் இருந்தபோது அவர் அடைந்த அனுபவங்கள் அனைத்தும் மிகக் கசப்பானவை. சோசலிசம் பேசிக் கொண்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் அனைத்துமே ஏகாதிபத்திய ஆதரவுக் கட்சிகளாக மாறிக் கொண்டிருந்தன. இன்னும் கபடத்தனமாக ஜெர்மன் மொழிலாளிவர்க்கம் ராணுவச் சீருடையணிந்து தனிமையிலிருந்த ரஷய்ப் புரட்சிக்கு எதிராகவும் திருபப்பட்டது.

ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஒருவரையொருவர் வெறுக்கவும் கொலை செய்யவும் துணிந்தனர். அவர் எச்சரிக்கை கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனம், இட்லர் காலத்தில் ஜெர்மனியில் வந்தது. புத்தகங்கள் எரிக்கப்பட்டன. எழுத்தாளர்களும் கலைஞர்களும் தூககிலிடப்பட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடிக் கொல்லப்பட்டார்கள். யூதர்கள் லட்சக்கணக்கில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை ஆரம்ப ஆண்டுகளிலேயே முன்னுனர்ந்திருந்தார் ரோஸா.

ரோஸாவின் மந்திர வாக்கியமொன்றுண்டு. அது என்றென்றைக்கும் பொருத்தமானதுதான். ‘சுதந்திரம் என்பது எப்போதுமே முழுமையாக வேறுபட்டு சிந்திக்கிறவனுக்குத் தரப்படும் சுதந்திரம் தான்’.


...மேலும்

Jun 24, 2015

‘பிரிட்டன் அரசுக்கு கடும் எச்சரிக்கை’ 750,000 ஆண்கள் சிறுமிகளுடன் பாலுறவு கொள்வதையே விரும்புகின்றனர்


இங்கிலாந்து நாட்டில் சுமார் 750,000 ஆண்கள் சிறுமிகளுடன் பாலுறவு கொள்வதையே விரும்புகின்றனர் என்று குற்றப்பிரிவு தரப்பில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஆண்கள் 750,000-த்திற்கும் அதிகமானோர் சிறுமிகளுடன் பாலுறவு கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருக்கலாம் என்று குற்றப்பிரிவு விடுத்துஉள்ள எச்சரிக்கையானது, நாட்டில் 35 ஆண்களில் ஒரு ஆண், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துக் கொள்ளும் ஒரு ஆபத்தை கொண்டு  எதிர்க்கொண்டு உள்ளனர். இங்கிலாந்து நாட்டின் தேசிய குற்றப்பிரிவு நடத்திய ஆய்வில் இந்த கொடூரமான தகவல் வெளியாகிஉள்ளது. இதில் மற்றொரு கொடூரமாக சுமார் 250,000 ஆண்கள், பருவம் அடையாத சிறுமிகளால் ஈர்க்கப்பட்டு இருக்கலாம் என்ற இங்கிலாந்து குற்றப்பிரிவின் அதிர்ச்சிகரமான தகவல்களை  டெய்லி மெயில் வெளியிட்டு உள்ளது. 

இதுதொடர்பாக இங்கிலாந்து தேசிய குற்றப்பிரிவு துணை பொது இயக்குநர் பில் கோர்ம்லே பேசுகையில், “எங்களுக்கு அளவு தெரிந்து உள்ளது. இந்த அளவில் எந்த அளவுக்கு உண்மை தன்மை உள்ளது என்பதை கண்டறிவதற்கனாக பணியினை தொடங்கிஉள்ளோம். பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் அதிக  அளவில் உள்ளனர், இதில் உண்மையென்னவென்றால் அவர்கள் ஒருவரிடம் இருந்து நாம் தூரே ஒதுங்கி வாழமுடியாது.” என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.  எனவே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த புதிய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துஉள்ள அவர், “நான் அனைவரையும் கைதுசெய்தாலும்,  சிறைவைப்பது என்பது அவர்கள் அதில் இருந்து மீண்டு வருவதற்கு உதவிசெய்யாது என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

சிறுமிகள் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக ஆண்களிடம் பேசும்போதும் இதுபோன்ற இன்னல்கள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சிறுவர்கள் போன்று பேசி ஏமாற்றுவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்த மேம்பாட்டு வழிமுறைகளை அரசு செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்ட உள்ளது. இதுபோன்ற பாலியல் வன் கொடூமை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து  சிறுமிகளை பாதுகாக்கும், புதிய தொழில் நுட்பங்களை  நடவடிக்கையில் ஈடுபட அரசுதீவிரம் காட்டுகிறது என்று கூறப்படுகிறது. 

பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் பெண் குழந்தைகளை துன்புறுத்துவதற்கு முன்னதாகவே அவர்களை சரிசெய்யும் பணியினை ஊக்குவிக்க  வேண்டும் என்பது தொடர்பான விவாதம் வேண்டும் என்று மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள்  வலியுறுத்தி உள்ளது. ஆனால் இது மிகவும் சங்கடமான ஆலோசனையானது என்று கோர்ம்லே குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பான பல்வேறு ஆவணங்களை  அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட கல்வி ஆராய்ச்சியில் இந்தஅளவானது வெளியே வந்துஉள்ளது. 

அனைத்து ஆண்களும் தங்களது மாறுபட்ட ஆசைகளில் விருப்பம் கொண்டு இருக்கவில்லை. பாலியல் துஷ்பிரயோகங்களில் கையாளும், ஒருநிபுணர் தனது  அனுபவங்களை மதிப்பிடுகையில், இதில் பாதிபேர் மிகவும் மோசமானது என்பதை ஒத்துக்கொண்டு உள்ளனர் மற்றும் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டு உள்ளார். ஆய்வில் வெளியாகிஉள்ள எண்ணிக்கை விபரம் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்திஉள்ள  இங்கிலாந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு NSPCC, இன்னும் முறைகேடாக எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கும் என்று சந்தேகமும் எழுப்பி  உள்ளது. இங்கிலாந்தில் 12 குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையானது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளது என்று என்.எஸ்.பி.சி.சி. கூறிஉள்ளது. 
 
இங்கிலாந்தில் பெண் குழந்தைகள் தொடர்பாக ஆபாச படங்களை கூகுள் தேடலில், தேடப்படுவது என்பது கடந்த ஆண்டில் மட்டும் அதிகரித்து உள்ளது என்ற  எச்சரிக்கையும் எழுந்து உள்ளது. பிரிட்டனில் மட்டும் சுமார் 3 மில்லியன் முறை இதுபோன்ற தேடல்கள் நடந்து உள்ளது. கூகுள் தேடலில் பாதிபேர் இதனையே  தேடிஉள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகிஉள்ளது. இங்கிலாந்தில் பள்ளிகள், நீதிமன்றம், போலீஸ் நிலையம், குழந்தைகள் பாதுகாப்பு மையம் என  பல்வேறு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு உள்ளநிலையில், இதுதொடர்பான பிரச்சனையில் வெளியாகி உள்ள அளவானது எங்களை மிகவும் மலைக்க  வைப்பதாக உள்ளது என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. 

சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போலீசார் விசாரணை நடத்திவருவது, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 71 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதுபோன்ற வழக்குகள் 113,000 ஆக உயர்ந்து உள்ளது என்று கணிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் குழந்தைகள் பாலியல்  ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்பாக தேசிய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து சிறையில் உள்ளவர்களில் 6 பேர்களில்  ஒருவர் பாலியல் ரீதியான குற்றங்களை செய்துவிட்டு சிறைக்கு வந்தவரே என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர்களை அடைக்க கடந்த இரண்டு  வருடங்களுக்கு முன்னர் 5 சிறைகள் இருந்தது, தற்போது அது 8 ஆக உயர்ந்து உள்ளது. 

பிரிட்டனில் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பங்களை தடுக்க பிரிட்டனில் ஒரு மந்திரியே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிரிட்டன் வரலாற்றில் இத்துறை கொண்டுவரப்பட்டது இதுவே முதல் முறையாகும். பிரிட்டனில் பெண் குழந்தைகளை பாதுகாக்க, தொண்டு அமைப்புகள், பெண் மந்திரிகள் பெண்கள் அமைப்புகள் என அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசும் கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆய்வில் வெளியாகிஉள்ள இத்தகவல்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்திஉள்ளது. 

இதுபோன்ற பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் சிறுமிகள் சுமார் 12 முதல் 16 வயது கொண்டவர்களே, அதற்கும் குறைவான வயது கொண்ட குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்னதாக அந்நாட்டு உள்துறை செயலாளர் தெரேசா, பிரிட்டன் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் விவகாரத்தில் உண்மையான அளவை பிரிட்டன் இன்னும் உணரவில்லை என்று கூறியிருந்தார். எல்லா வகையிலான சமூகத்திலும் இந்த தொல்லையானது உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார். கடந்த வாரம் பிரிட்டன் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்பில்உள்ள, மைனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

போலீஸ் அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2012-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான தொல்லை வழக்கு 66,120 ஆக இருந்தது. அதுவே 2015-ம் ஆண்டில் என்பது 113,291 ஆக கணிக்கப்பட்டு உள்ளது. சுமார் 165 சதவீதம் உயர்ந்து உள்ளது. பிரிட்டனில் இத்துறைக்கு முதல்முறையாக மந்திரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ள  கரேன் பிராட்லி, தனக்கு நேர்ந்த அவலங்களையும் எடுத்துக்கூறி, இணையதளத்தின் தீமையும் எடுத்துகூறி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க போராடுவதாக தெரிவித்து உள்ளார். டெய்லி மெயில் வெளியிட்டு உள்ள செய்தியில் பிராட்லி தனது நடவடிக்கையை முழுமையாக எடுத்து உரைத்து உள்ளார். 

...மேலும்

Jun 23, 2015

தலித்துகளின் துயர் அறியாத மேட்டுக்குடி தலித்துகளின் கவனத்துக்கு… - மு.வி.நந்தினி


சமீபத்தில் கவிஞர் சுகிர்தராணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஆசிரியையின் தலித் விரோத நடத்தை குறித்து பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு பலர் ‘அய்யய்யோ…அப்படியெல்லாமா நடக்குது?’ என்றபடி தங்களுடைய ‘ஆழ்ந்த’ வருத்தங்களை பகிர்ந்திருந்தார்கள், இதில் பலர் தலித் அபிமானிகள்.  தலித் அபிமானிகள் தலித்துகள் படும் பாடுகள் குறித்து அறியாதவர்களாக இருப்பதிலிருந்து அவர்கள் தலித்துகளிடமிருந்து எத்தனை தூரம் விலகியிருக்கிறார்கள் என்பதும் ‘எல்லாம் நன்றாக நடக்கிறது’ என்கிற உலகத்துக்குள் வாழ்ந்துகொண்டிருப்பதையும் அறிய முடிகிறது.  இந்த அன்பர்கள், நண்பர்களுக்காக முத்துலட்சுமி என்கிற தலித் சிறுமியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை சொல்கிறேன். இந்த சம்பவத்தை அச்சிலேற்றிய தி இந்து (ஆ), எழுதிய நிருபர் வால்டர் ஸ்காட்டுக்கும் நன்றியை சொல்ல வேண்டும்.

துப்புரவுத் தொழிலாளியின் மகளான முத்துலட்சுமிக்கு தன் 11வது வயதில் காது கேட்கும் திறனில் பிரச்னை எழுந்தது. காதுகளில் கருவியை பொருத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்.  சென்ற வருடம் பத்தாம் வகுப்பில் நுழைந்த நேரம் அவருடைய காது கேட்கும் கருவியில் தண்ணீர் பட்டு, இயங்காமல் போனது. புதிய கருவி வாங்க வசதியும் வாய்ப்பும் கிடைக்கப் பெறாத முத்துலட்சுமி, படிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறார். காது கேட்காததால் வகுப்பில் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இதைக் கண்டுபிடித்த ஆசிரியை செய்ததுதான் மனிதத்தின் உச்சம்! முத்துலட்சுமியை எல்லா மாணவர்கள் மத்தியிலும் அவமானப்படுத்தியதோடு இனி வகுப்பு வரவேண்டாம் என்று சொன்னதோடு, அந்தப் பள்ளியை விட்டே துரத்த தலைமையாசிரியரிடம் பரிந்துரைத்திருக்கிறார். மகளுக்காக தந்தை கெஞ்சியதையும் காதில் வாங்காத செவிடாய் தலைமையாசிரியரும் முத்துலட்சுமியிடம் டிசி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

இங்குதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது… பத்தாம் வகுப்பில் ரிசல்ட் காட்ட வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கும் தனியார் பள்ளியா இது? எந்த பள்ளி இது என்று மேற்கொண்டு படித்தேன். அது ராமநாதபுரம் மாவட்டம், பேராவூர் அரசு மேனிலைப் பள்ளி.

இந்நிலையில் முத்துலட்சுமியின் மனதைரியமும் உறுதியும் என்னை நெகிழ வைக்கிறது. தன் குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு தன்னார்வ நிறுவத்தின் மூலம் தையல் கற்றுக் கொண்டார்.  தையல் மிஷின் வாங்க நிதி கேட்டு ராமநாதபுரம் கலெக்டரிடம் மனுகொடுத்த போது, 15 வயது தொழில் தொடங்கும் வயதல்ல என்று சொல்லி விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் முத்துலட்சுமி தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கிறார்.

புதிய காது கேட்கும் கருவியை வாங்க உதவி கிடைத்து, ஆட்சியரின் பரிந்துரையில் அவர் பள்ளிக்குத் திரும்பலாம். ஆனால் முத்துலட்சுமி, ‘மீண்டும் அவமானப்படுத்தப் படுவேன் என்று எனக்கு பயமாக இருக்கிறது’ என்று சொன்னதாக முடிக்கிறார் நிருபர்.

சினிமா காக்கா முட்டைகளுக்காக விழுந்து விழுந்து நெகிழும், தலித்துகள் இப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப் படுகிறார்களா என்று அறியாத மேட்டுக்குடி மக்களுக்கு முத்துலட்சுமியின் நிலையும் அழுவதற்குரிய ஒன்றுதான். அழுவதற்காகவாவது நாலு பேர் வேண்டும் இல்லையா? இந்த அழுகையில் முத்துலட்சுமிக்குரிய நீதி அழிந்து போய்விடக்கூடாது. முத்துலட்சுமியை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தியதோடு அவருக்குரிய அடிப்படை உரிமை பறித்த அந்த அசிரியையும் இதில் தொடர்புடைய மற்ற ஆசிரியர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், கல்வி கற்பிப்பதற்கே லாயக்கற்ற அவர்களை ஆசிரியர்களாக தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது! உங்களின் நெகிழ்வான கண்ணீர்  வேண்டாம் இதை வலியுறுத்துங்கள், ஒரு சிறுமியின் அடிப்படை உரிமையை நிலைநாட்டுங்கள்!
நன்றி - நந்தினி
...மேலும்

‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’


நாட்குறிப்புப் படிப்பது என்பது பொதுவாகவே நிறையப் பேருக்குப் பிடித்த விஷயமாகவே இருக்கிறது. அதுவும் அடுத்தவரின் நாட்குறிப்பு என்றால், அதில் இருக்கும் அந்தரங்கத்தைப் படிக்க ஆர்வப்படுவது ஒரு போதையைப் போன்றது. கிட்டதட்ட நிர்வாணத்தை எட்டிப்பார்க்கும் ஒப்பீடுதான். பதின்ம வயதில் டைரி எழுதும் பழக்கம் கொண்டிருந்த நான், பலமுறை அது ரகசியமாகத் திருடப்பட்டு, வாசிக்கப்பட்டுப், பின் விமர்சீக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். என் நிர்வாணம் பல வேளைகளில் குடும்பச் சட்டசபையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறுவெறுப்பின் காரணமாகவே நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டொழித்தேன். களவாடப்பட்ட என் டைரிகள் எங்கு இருக்கிறது என்பது எனக்கும் தெரியாத ஒரு புதிர். அது இப்போதும் இருக்கும் என்றே நம்பிக்கையெல்லாம் அறுந்துபோய் வெகு காலமும் ஆகிவிட்டது.

அண்மையில் மேற்கொண்ட இந்தியப் பயணத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் ‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’.  ஜூன் 12 1942 முதல் 1 ஆகஸ்ட் 1944 வரை தனது 13-வது வயதில் ஆன் என்ற சிறுமி எழுத தொடங்கிய டைரிக் குறிப்புகள்தான் புத்தக வடிவமாகக் கிடைத்தது. யூதச் சிறுமியான ஆனி இரண்டாம் உலகப்போரின் போது தனது ரகசிய மறைவிடத்திலிருந்து அதை எழுதியுள்ளார். சுமார் 70 மொழிகளில் இந்த நாட்குறிப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த நாட்குறிப்பைத் தமிழில் உஷாதரன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். ‘எதிர்’ பதிப்பகம் அதை 2011 ஆம் ஆண்டு வெளியிட்டது.

ஓர் இளம்பெண்ணின் நாட்குறிப்பு என்றதைப் பார்த்தவுடன் அதை வாசிக்க அப்பவே மனம் விரும்பத்தொடங்கியது. மேலும், ‘70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட’ என்பதோடு ‘இரண்டாம் உலகப்போரின் குறிப்புகள் உள்ளடங்கிய’ போன்ற வரிகள் எனக்கு புத்தகத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. 328 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் பயணத்தின் ஊடே படிக்கத்தொடங்கி மலேசியாவில்தான்  முடித்தேன். ஆனின் சிரித்த முகம் கொண்ட அட்டைப் படமும், அவள் கையப்பமும் கையெழுத்தும் கொண்ட பின்னட்டையும் இந்தப் புத்தகத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது.

1942 ஜூன் 12-ஆம் தேதி தனது 13-வது வயதில் ஆனிற்குப் புதிய நாட்குறிப்புப் பரிசாகக் கிடைக்கிறது. அன்று இரவே அவள் அதில் ஒரு குறிப்பை எழுதி வைக்கிறாள். அதைனைத்தொடர்ந்து அவள் அதனுடன் தொடர்ந்து உறவாடத் தொடங்குகிறாள். தனது டைரிக்கு ‘கிட்டி’ எனப் பெயரிடுகிறாள். அவளின் நாட்குறிப்பு இவ்வாறு தொடங்குகிறது…

‘இதுநாள்வரை நீ என் உண்மையான நண்பனாக இருந்து எனக்குப் பெரும் ஆறுதலாக விளங்குகிறாய். நான் உன்னைக் கிட்டி என்று பெயரிட்டு அழைக்க விரும்புகிறேன். இதுபோன்ற நாட்குறிப்புகளை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கும் என்பதை உனக்குக் கூற விரும்புகிறேன். நான் தொடர்ந்து என் நினைவுகளை உன்னிடம் பதிவு செய்கின்ற மகிழ்ச்சிகரமான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். நீ என்னிடம் உள்ளதே எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது..’
-ஆன்

நெருங்கிய தோழமையோடு ஒரு நாட்குறிப்பை அனுகும் பாங்கு, உண்மையில் மேற்கத்திய கலாச்சாரத்திலேயே சாத்தியப்படுகிறது அல்லது தொடங்குகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்த வரிகளே எந்த ஓர் இடையூறும் இல்லாமல் நம்மை வாசிப்புத் தலத்திற்குள் புத்தகம் கொண்டு செல்கிறது.

ஆனின் அப்பா முன்னால் ராணுவ அதிகாரியாவார். ஒரு காலக்கட்டத்தில் அவர் ஜெர்மனியிலிருந்து நெதர்லாந்துக்கு (ஹொலந்து) தப்பிச்செல்கிறார். ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியேறுகிறது 4 பேர் கொண்ட அவர்களின் குடும்பம். அங்குதான் ஆன் தனது 13-வது வயது நிறைவுப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறாள் ஆன். பிறந்தநாள் பரிசுகளில் அவளுக்கு ஒரு டைரியும் கிடைக்கிறது.

ஆன்னுக்கு டைரிக் கிடைத்த ஒரு மாதம் மட்டுமே அவள் வெளியுலகோடு தொடர்புடையவளாக இருந்திருகிறாள். அதன் பிறகு, நெதர்லாந்தும் நாஜிகளின் வசம் விழ, தான் தங்கியிருந்த வீட்டின் புத்தக அலமாரிக்குப் பின் இரகசிய அறையை அமைத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்குவிடுகின்றனர் ஆனின் குடும்பத்தினர். பின்னர் அவளின் அத்தைக் குடும்பமும் அவர்களோடு தஞ்சம் அடைகிறது.

இவர்களோடு ஆனின் டைரிக் குறிப்பும் வளர்கிறது. கிட்டதட்ட 70 சதவிகிதம் ஆன், தனது சொந்த இருப்பு வெறுப்புகளையே அதில் பதிவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவர்களின் உணவுப் பற்றாக்குறை, பிறந்தநாள் கொண்டாட்டம், தனது அத்தை மகனின் மீது கொண்ட ஈர்ப்பு, அப்பாவிடம் உள்ள நெருக்கம், அம்மாவிடம் உள்ள வெறுப்பு ஆகியவையே தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது.

திருடர்களின் அட்டகாசம் குறித்தும், அதனால் ஏற்படும் சங்கடங்கள் குறித்தும் அவ்வப்போது டைரிகுறிப்புகளில் ஆன் குறிப்பிடும்போது, நாமும் சங்கடத்தில் ஆட்கொள்ளப்படுவதை உணர நேரிடுகிறது. குறிப்பாக ஆள் நடமாட்டத்தை உணரும்போதெல்லாம் அவர்கள் குறிப்பிட்ட மணிநேரத்திற்குக் கழிப்பறையைப் பயன் படுத்துவது உள்ளிட்ட சில விஷயங்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள்.

புத்தகத்தின் 300-வது பக்கத்திற்கு மேல், சில பக்கங்களில் போர் பற்றிய தீவிரத்தை ஆன் கொஞ்சம் பதிவு செய்திருக்கிறாள். மற்றபடி ஒரே இடத்தில் ஹிட்லரின் நண்பரான முசோலினி ராஜினாமா செய்ததைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஹிட்லரைப்பற்றியும், நாஜிகளைப் பற்றியும் ஆன் அவ்வளவாகக் குறிப்பிடவில்லை.

அதற்கு, ஆன்னின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். 13 வயது நிரம்பிய ஒரு சிறுமியிடமிருந்து இந்த அளவுக்குப் பதிவு இருப்பதே பெரிய விஷயம் என்றே தோன்றுகிறது. தான் ஒரு எழுத்தாளர் ஆகனும் என்ற ஆன்னின் எதிர்க்கால ஆசை அதற்குக் காரணமாக இருக்கலாம். சில இடங்களில் இரண்டாம் உலகப் போர் பற்றிய வரிகளில் நமக்கு நடந்துமுடிந்த இனஅழிப்பின் கொடூரத்தை ஞாபகப்படுத்துகிறது. ‘ஆம்ஸ்டர்டாமின் பல பகுதிகள் முழுக்கக் குண்டு வீசி அழிக்கப்பட்டுவிட்டது. பிணங்களை முழுக்க வெளியே இழுத்துப் போடவே பல நாட்கள் தேவைப்படும்.’

இப்படியான மனதை ஸ்தம்பிக்கும் வரிகள் பல இடங்களில் வந்தாலும் கூட இந்தப் புத்தகம் என்னை அந்த அளவுக்குத் திருப்தி படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. தட்டையான மொழிபெயர்ப்பு, சில இடங்களில் குழப்ப நிலையில் இருக்கும் வாக்கிய அமைப்பு, அங்காங்கு கண்ணில் படும் எழுத்துப்பிழை போன்றவற்றோடு, எனக்கு இந்தப் புத்தகத்தில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விஷயம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும், சில வாக்கியங்கள் மனதில் நிற்கும்படியாக இருக்கின்றன.
‘சிந்தை மிக உயர்ந்ததெனில், மனிதர்தம் செயல்களோ மிக அற்பம்’
இப்படியான சிந்திக்கக்கூடிய சில நல்ல வரிகளை இந்தப் புத்தகம் கொண்டிருந்தது என்னைத் தொடர்ந்து வாசித்து முடிக்கும் நிலை வரையில் கொண்டு சென்றது.

ஆன்னின் குடும்பமும் அவளின் அத்தை குடும்பமும் அவர்களோடு ஆனின் வீட்டில் வேலை செய்த மையீப் என்ற டச்சு பெண்மணி உட்பட 8 பேர் அந்த ரகசிய மறைவிடத்தில் வாழ்ந்தனர். நாஜி ராணுவம் 1944 ஆகஸ்ட் 4-ஆம் தேதி அந்த ரகசிய வீட்டை கண்டுபிடித்து மையீப்பை மட்டும் விட்டுவிட்டு மீதி அனைவரையும் பிடித்துச் சென்றது. அவர்கள் அனைவரையும் சித்திரவதை முகாமில் அடைத்துவைத்து நச்சுவாயு கூடத்திற்குப் பலியாக்கினார்கள் நாஜி அதிகாரிகள். சிறுமிகளான ஆன்னையும் அவளின் சகோதரியான மார்கரெட்டையும் தனிகூடத்தில் அடைத்து வைத்து அவர்களின் தலையை மொட்டையடித்து, நிர்வாணப்படுத்திச் சுமார் 8 மாதங்களாக வைத்திருந்தனர். பெர்ஜன் – பெல்சன் நகர முகாமில் 1945-ஆம் ஆண்டுப் பரவிய உயிர்கொல்லி நோயில் மார்கரெட் பலியாகச், சில நாட்களிலே ஆன்னும் டைபஸ் பசிக்கு பலியானாள்.

ஆன்னின் குடும்பத்தில் அவளின் தந்தை மட்டுமே உயிர் தப்பினர். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு, விடுவிக்கப்பட்ட அவர் தனது இருப்பிடத்திற்குத் திரும்பும்போது ஆன்னின் டைரி மட்டுமே அவரை வரவேற்றது. (மையீப்தான் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்) தனது மகளின் உணர்வுபூர்வமான எழுத்து வடிவத்தைப் படித்து மனமுறுகினார் அந்தத் தந்தை. எழுத்தாளராக வேண்டும் என்ற தனது மகளின் கனவை நிறைவேற்ற முடிவு செய்ததின் முயற்சி ‘The Diary Of A Young Girl’ என்ற புத்தகமாக உயிர் பெற்றது.

...மேலும்

Jun 22, 2015

ஆப்கானில் குரானை எரித்ததாக கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பம் அனுபவிக்கும் துயரங்கள்

                             
காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் பர்குந்தா. இவர் கடந்த மார்ச் 19-ம் தேதி குரானை எரித்ததாகக் கூறப்பட்ட தவறான தகவலையடுத்து கொடூரமாக கொல்லப்பட்டார். தற்போது இந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் பர்குந்தா. இவர் கடந்த 19-ம் தேதி காபூலின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்குச் சென்றார். மசூதி வளாகத்தில் இவர் புனித நூலான குரானின் சில பக்கங்களை எரித்ததாக சிலர் கோஷ மிட்டனர்.

இந்தத் தகவல் தீயாகப் பரவி ஒரு சில நிமிடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மசூதி வளாகத்தில் கூடிவிட்டனர். அங்கிருந்த சில போலீஸார், பாதுகாவலர்கள் மசூதியின் வாயிற்கதவுகளை மூடி பர்குந்தாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி குதித்து மசூதி வளாகத்துக்குள் புகுந்தனர்.

என்ன நடந்தது என்பது குறித்து எதுவுமே விசாரிக்காமல் அந்தப் பெண்ணை தரையோடு தரையாக இழுத்து வந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். சிலர் காலால் எட்டி உதைத்தனர், கற்களை வீசியெறிந்தனர், கம்புகளால் சரமாரியாக அடித்தனர். கூரையிலிருந்து அவரைத் தூக்கி எறிந்து, அவர் மீது காரை ஏற்றி கான்க்ரீட்டினால் அவரை சிதைத்து அந்தக் கும்பல் கொலைவெறியாட்டம் போட்டது. பிறகு பின்னர் காபூல் ஆற்றங்கரைக்கு உடலை எடுத்துச் சென்று தீ வைத்து கொளுத்தினர். இதை ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் வந்து பாதி எரிந்த நிலையில் பர்குந்தாவின் உடலை மீட்டனர்.

உலகை உலுக்கிய இந்த கொடூரமான கொலையை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இன்றும் நிம்மதியாக அங்கு வாழ முடியவில்லை. “வாழ்க்கை முற்றிலும் நின்றே போனது” என்று அவரது தந்தையான 72 வயது மொகமது நாதிர் மாலிக்ஸாதா வருந்தியுள்ளார்.

வயதான பெற்றோர், அவரது 7 சகோதரிகள், 2 சகோதரர்கள், இவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரை முற்றிலும் காபூல் சமூகம் புறக்கணித்து வருகிறது. கொலையுண்ட பர்குந்தாவின் பெயரை கூறிக்கொண்டு சுயநலமாகச் செயல்படுவோர் தங்கள் குடும்பத்தினரை கண்டும் காணாமல் செல்கின்றனர் என்றும் வெளியே தலைகாட்டினால் ஏளனமும், அவமானமுமே மிஞ்சுகிறது என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கொலைசெய்த கும்பலில் சிலர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, குடும்பத்தினர் தாக்கப்படலாம் என்பதால் வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளனர். “குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது போனால் என்ன ஆகும், அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக வாழ வேண்டுமா? என்று பர்குந்தாவின் 37 வயது சகோதரர் நஜிபுல்லா பர்குந்தா வருத்தத்துடன் கேட்கிறார்.

பர்குந்தாவின் தாயார், பீபி ஹஜிரா கூறும் போது, “எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் எங்களிடம் அதிகாரமோ, பணபலமோ இல்லை அவர்களை எதிர்த்து போராடுவதற்கு” என்றார். 

பர்குந்தா கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 18 பேர் போதிய சாட்சியம் இல்லாததையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர், மேலும் 8 பேருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 11 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் தண்டனை பெற்ற 37 பேரின் மேல்முறையீடு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பெண்ணை இழந்த குடும்பமோ, “நாங்கள் சாப்பிடுவதில்லை, உறங்குவதில்லை, எப்போதும் பர்குந்தாவின் நினைவு எங்களை வாட்டுகிறது. எங்களால் இனி சாப்பிடவே முடியாது, நாங்கள் அழுது கொண்டிருக்கிறொம்” என்று கூறியுள்ளனர்.
நன்றி - திஇந்து
...மேலும்

Jun 21, 2015

ஆமா எனக்கு மாசாமாசம் ரத்தம் வரும் இப்ப அதுக்கு என்னாங்கறீங்க??

                              அனிஷா பவனானி.

நான் ஐந்தாவது படிக்கும் போது பள்ளி சுற்றுலாவிற்கு கிளம்பும் சமயம் எனக்கு எதிர்பாராமல் பீரியட் வந்தது. அதை ஒரு டீச்சரிடம் சொன்னதன் பின் பஸ்சில் ஏறி அமர்ந்தேன்.

சென்றடைந்த சுற்றுலா தளம் ஒரு மிகப் பழமையான கோவில். நானும் தோழிகளும் உள்ளே போய் சிற்பங்களின் அழகை ரசித்தவாறு சுத்தி வந்தோம். அப்போ வேகமா என்னிடம் வந்த இன்னொரு டீச்சர் உனக்கு பீரியட் வந்திருக்கான்னு கேட்டார். ஆமாம் என்றதும் அவர் முகம் மாறியது. கோபமா கத்த ஆரம்பித்தார்

"உனக்கு அறிவிருக்கா? ஏன் உனக்குத் தெரியாதா பீரியட் இருக்கும் போது கோவிலுக்குள் வரக் கூடாதுன்னு. உங்கம்மா உனக்கு சொல்லித் தரலயா? நாளைக்கு மொதல்ல உங்கம்மாவ வரச் சொல்லு ஸ்கூலுக்கு அவங்ககிட்ட பேசணும்.."

நான் பயத்தில் வெளிறிப்போனேன். வாழ்க்கையின் மிக மோசமான ஒரு குற்றத்தை செய்துட்டோம் போலிருக்கேன்னு தோனுச்சு. அத்தோடு பஸ்சில் போய் உட்கார்ந்துகிட்டேன். வீடு போய் சேரும் வரை மீதி பயணம் முழுதும் என் கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவில்லை.

நான் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? நாளை டீச்சர் என்ன சொல்வாங்க என்ற குழப்பத்தோடு வீட்டிற்கு போனதும் அம்மாவிடம் படபடப்பாக நடந்ததை சொன்னேன். அதைக் கேட்கும் போதே அம்மா முகத்தில் ஒரு அறுவெறுப்பு படர்ந்தது... சொல்லி முடித்ததும் அம்மா " நீ மொதல்ல ரிலாக்ஸ் ஆகு, நம்ம வீட்டில் இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு இடமில்லை. அந்த டீச்சரோட பேச்சை விட்டுத் தள்ளு அது ஒரு முட்டாள்தனமான மூடநம்பிக்கை. நீ வேலையப் பாரு" என்றார்.

மறுநாள் நான் அந்த டீச்சரை பார்க்கவில்லை. அவரும் அது குறித்து பேசவில்லை, மறந்துவிட்டார். ஆனால் மாதவிலக்கு இருக்கும் போது கோவிலுக்கு போனால் அது மாபெரும் குற்றம் என்கிற மாதிரி அவர் ஏற்படுத்திய பெருத்த அவமானமும், வடுவும்... எப்படி ஒரு மனித ஜீவனால் ஒரு சின்ன குழந்தையிடம் இப்படி நடந்துக்க முடியுது??

பீரியட் வறதினாலேயே நீ ஒரு மோசமான, அருவெறுக்கத்தக்க ஆளா ஆகிட முடியாதுன்னு அம்மா சொன்னாங்க. ஆனா அதை மத்தவங்க ஒத்துக்கற மாதிரி தெரியல. எனக்கு நடந்தது போலவே சம்பவங்கள் சில மாற்றங்களோடு என்னைச் சுற்றி நடப்பதை பார்த்துகிட்டேத் தான் இருந்தேன்.

என் தோழி வீட்டில் பீரியட் வந்த பெண்களை கிச்சனுக்குள்ள விட மாட்டாங்க, சாப்பாட்டைத் தொடக்கூடாது. என்னை ஆசையா ஒரு பூஜைக்கு கூப்பிட்ட அத்தை எனக்கு பீரியட்னு சொன்னதும் நல்ல வேளை நீ வரத் தேவையில்லைன்னு அதிர்ச்சியானாங்க.

இந்த நம்பிக்கையை நினைத்தாலே வெறுப்பா இருக்கு. பெண்கள் இதை குருட்டுத்தனமா நம்பறதும், அந்த வழக்கங்களை காலம் காலமா தொடர்வதும். ஆண்களும் இதுக்கு துணை போவதும் இதை வலியுறுத்தறதும்.

இந்தியப் பெண்களே!!
அடுத்த முறை யாராவது பீரியட் இருக்கும் போது கிச்சனுக்கு போகக் கூடாது, பூஜையறைக்கு, கோவிலுக்கு போகக் கூடாதுன்னு சொன்னா போய் உங்க வேலையப் பாருங்கன்னு சொல்லுங்க. நீங்களே இந்த மாதிரி ஒரு கற்கால வழக்கத்தின் மேல் நம்பிக்கை உள்ளவரா இருந்தா அதை விட அசிங்கம் வேறில்லை.

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு இயற்கையான உடற்கூறு நிகழ்வு. நாம ஒன்னும் அந்தப் புனிதத் தலங்களை நம்ம ரத்தம் சிந்தி அசிங்கப்படுத்தல. நம் உடம்புக்குள்ள வர ரத்தத்தால் அந்த இடத்தோட புனிதம் கெட்டுப் போய்டுதுன்னா முட்டியில் இடிச்சோ, கை விரலை தவறி வெட்டியோ ரத்தம் வறப்பவும் அந்த புனித இடங்களுக்குள் போகாதீங்க. பெண்களோட மாதவிடாய் ரத்தம் மட்டுமே அசுத்தமானதா??

ஒரு பெண்ணா இருப்பதாலேயே நான் ஒரு தகுதியற்றவளா, பலகீனமானவளா, அசுத்தமானவளா நடத்தப்படுவதை என்னால் ஏத்துக்க முடியாது. கடவுள் தன் எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் அன்பு செய்வார்; அது ஏழையா பணமுள்ளதா, ஆணா பெண்ணா, அதுக்கு மாதவிடாய் வருதா இல்லையான்னு பாக்க மாட்டார். இந்தியா போன்ற அர்த்தமற்ற பல நம்பிக்கைகள், தடைகள் உள்ள தேசத்தில் அவற்றை ஒவ்வொன்றாகக் களைய வேண்டும். மாதவிடாய் குறித்து விவாதிப்பதும் எழுதுவதும் அதில் மிக அவசியமானது. அதற்கான சிறந்த சமயமும் இதுவே.

கட்டுரையாளர்: அனிஷா பவனானி.
இவர் ,சில வருடங்களுக்கு முன்னர் தனது 18வது வயதில் எழுதிய கட்டுரை.இது
அனிஷா தற்போது மும்பை சேவியர் கல்லூரியில் சமூக அறிவியல், மனிதம் குறித்து படிக்கிறார்.

நன்றி- தமிழில் 
            அனிதா என் ஜெயராம்.


...மேலும்

Jun 20, 2015

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை; இளைஞரை அடித்துக் கொன்ற மக்கள்!

ஹைதரபாத்: ஆந்திராவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த இளைஞரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின்  7 வயது மகள் லாவண்யா. கடந்த 16 ஆம் தேதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்த லாவண்யாவை திடீர் என காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடினர்.


அப்போது சிறுமியை கடைசியாக கிராமத்தில் பெட்டிகடை நடத்தி வந்த கனிகந்தி சுரேஷ் என்ற இளைஞர்  அழைத்து  சென்றது தெரியவந்தது. உடனடியாகக் கிராமத்தினர் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது கிராம மக்கள் மடப்பள்ளியில் உள்ள சுரேஷ் வீட்டில் தேடி பார்த்த போது, வீட்டில் இருந்த இரும்பு டிரங் பெட்டியில் சிறுமியின் பிணம் நிர்வாணமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  தகவலறிந்த சுரேஷ் தலைமறைவாகி விட்டார்.

இதனால்,  சுரேஷ் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரிய வந்தது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு சுரேசை தேடி வந்தனர். இதற்காக 6 தனிப்படையும் அமைக்கப்பட்டன. 

இந்நிலையில் தலை மறைவான சுரேஷ் ஏலுர் பேருந்து நிலையத்தில் நிற்பதை கிராம மக்கள் பார்த்து விட்டனர். உடனடியாக  அவனைப்  பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் பிடிபடாமல் தப்பி ஓடினான். பொது மக்கள் விடாமல் விரட்டினர். தகவல் அறிந்ததும் போலீசாரும் அங்கு வந்து சுரேசை பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டனர்.

ஏலுர் ரயில்வே மேம்பாலத்தில் ஓடிய சுரேஷ், பொது மக்கள், போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தான். அதில் பலத்த காயம் அடைந்து  குற்றுயிறாகக் கிடந்த அவனை மீட்க போலீசார் முயன்றனர். 

ஆனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்களால் சுரேசை தாக்கினர். போலீசார் அவனை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் கோபம் குறையாத  மக்கள், போலீசார் முன்னிலையிலேயே சுரேஷை  அடித்து உதைத்தனர். இதில் சுரேஷ் பரிதாபமாக இறந்தான். இதனால் ஆந்திராவில் பரபரப்பு நிலவுகிறது.

நன்றி - விகடன்
...மேலும்

பிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்?!``இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா?’’இந்த சந்தேகங்களுக்கு பதில் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் உமா செல்வம்.

“பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்னை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்னை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது... அவசியமானதும்கூட!

சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்னை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.’’
- கே.அபிநயா ‪

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்