/* up Facebook

May 30, 2015

அகாலம் முதல் ஊழிக்காலம் வரை

மூன்று காலங்கள் –  மூன்று பெண்கள் – மூன்று படைப்புகள் – ஒரு பார்வை.

காலையில் வேலைக்குப் போகும் பொழுதும் மாலையில் வரும் பொழுதும் ஆகக்  குறைந்தது ஒரு வழியில் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும். வழமையாக இந்த நேரங்களில் குட்டித் தூக்கம் கொள்வது அல்லது சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பதாக இருக்கும். அல்லது வாசிப்பதற்கு எதாவது ஒரு புத்தகம் வைத்திருப்பேன். பல நேரங்களில் வாசிக்கும் மனநிலை இருக்காது.  சில நூல்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற அவசியத்தால் வாசிக்க முயற்சி செய்வேன். சிலவற்றை அலுப்பாக ஆரம்பித்து பின் மூடி வைக்க முடியாமல் வாசிப்பேன். சிலவற்றை ஆர்வமாகத் தேடி விருப்பத்துடன் வாசிப்பேன். அவ்வாறான மூன்று நூல்கள் தொடர்பான குறிப்பே இது.


முதலாவது நாவல் புஸ்பராணி அவர்கள் எழுதிய அகாலம். இப் படைப்பை போராட்டம் தோற்கடிக்கப்பட்டது எனக் கூறப்பட்ட பின் இலங்கைக்கு முதன் முதலாக 2012ம் ஆண்டு பயணம் செய்யும் வழியில் பிரான்சில் வாங்கினேன். அந்தப் பயணம் முழுவதும் இந்த நூலைத்தான் வாசித்தேன். இரண்டாவது நாவல் தமிழ்க்கவி எழுதிய ஊழிக்காலம். இப் படைப்பை  போர் முடிவுற்றதாக கூறப்பட்ட பின் இலங்கைக்கு 2013ம் ஆண்டு இரண்டாவது தடவையாக பயணம் செய்தபோது இந்தியாவில் வாங்கி அப் பயணத்தின்போது வாசித்தேன். இவ்வாறு பயணம் செய்தபோது இந்த இரு நூல்களையும் வாசித்ததால் இவை பற்றி அப்பொழுது உடனடியாக எழுத முடியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என எப்பொழுதும் யோசிப்பதுண்டு. இனிமேல் இவ்வாறு பயணம் செய்யும் பொழுது இப்படியான நூல்களை வாசிப்பதில்லை என முடிவெடுத்திருக்கின்றேன். அல்லது அவ்வாறு வாசித்தால் நேரம் ஒதிக்கி அது தொடர்பான குறிப்பொன்றை உடனே எழுதுவது எனத் தீர்மானித்துள்ளேன். ஏனெனில் இவ்வாறான படைப்புகளை வாசித்தவுடன் உருவாகும் மன எண்ணங்களும் உள உணர்வுகளும் முக்கியமானவை விசாலமானவை. காலம் கடந்து எழுதும் பொழுது இந்த உணர்வுகள் விடுபட்டுவிடுகின்றன. மூன்றவாது நூல் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய உம்மத். இந்த நாவலை இலங்கைக்கு மூன்றாவது பயணத்தை 2016ம் ஆண்டு மேற்கொள்வதற்காக பணத்தைச் சேகரிக்கும் வேலைக்கு செல்கின்ற பயணத்தின் போது வாசித்தேன். இதனை வாசிப்பதற்கு ஊக்கியாக இருந்தது முன்னால் சரிநிகர் ஆசிரியர் விக்கினேஸ்வரன் அவர்களின் முகநூல் குறிப்பொன்று. அதை வாசித்துவிட்டு அந்த வார இறுதியில் நடைபெற்ற காலம் செல்வம் அவர்களின் “வாழும் தமிழ்” நிகழ்வில் இந்த நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.

புஸ்பராணிபுஸ்பராணி அவர்கள் எழுதிய அகாலம் ஒரு நாவல் அல்ல. அவர் குறிப்பிடவாறு இது ஒரு ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் அதாவது 1970களின் ஆரம்பத்தில் பங்குபற்றிய பெண் அரசியல் போராளியின் அனுபவங்களை மையமாகக் கொண்டது. இவர் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்தவர். ஈழத்து தமிழ் சமூகத்தில் சாதியடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் ஒரு பெண்ணாகவும் ஒடுக்குமுறைகளையும் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தையும் அனுபவித்தவர். இருப்பினும் இவற்றை எல்லாம் எதிர்கொண்டு ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பத்தில் பங்குபற்றிய முதல் பெண் அரசியல் போராளிகளில் சிலரில் ஒருவர். இந் நூலின் வெளியீட்டு நிகழ்வுகள் பரிசிலும் இலன்டனிலும் நடைபெற்றபோது பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்வில் தான் சிறையிலிருந்தபோது தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட காவற்துறையைச் சேர்ந்த ஒருவரை கௌரவித்தமை நெகிழ்சியாக இருந்தது. மேலும் சம காலத்தில் அவருடன் செயற்பட்ட பலர் இந்த இரு நிகழ்விலும் உரையாற்றினார்கள். ஈழவிடுதலைப் போராட்டங்களின் ஆரம்பம் தொடர்பாக இதுவரை ஆண்களின் பார்வையில் ஆண்களால் எழுதப்பட்ட குறிப்புகளே அதிகமாக காணப்படுகின்றன. அந்தவகையில் ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில் பங்குபற்றிய ஒரு பெண் செயற்பாட்டாரின் நினைவுக் குறிப்புகள் என்றளவில் இந்த நூல் முக்கியமானது.

புஸ்பராணி அவர்கள் (பொதுவெளியிலும் சிறையிலும் இருந்தபோது) தனது பால், சாதிய, தேசிய அடையாளங்களுக்காக பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளானவர். அதாவது ஒரு பெண்ணாக தமிழ் சிங்கள ஆண்களாலும், ஒடுக்கப்பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணாக ஆதிக்க சாதியினராலும், ஈழப் போராட்டத்தில் பங்குபற்றிய ஒரு பெண்ணாக அரசாங்க காவற்துறையைச் சேர்ந்த (தமிழ் சிங்கள) ஆண்களாலும் பல பிரச்சனைகளுக்கு முகங் கொடுத்தார். இவற்றை இந்த நூலில் பல சந்தர்ப்பங்களில் விபரிக்கின்றார். சமூக பொதுக் கலாசாரங்கள் மட்டுமல்ல சிறைக் கலாசாரங்கள் கூட ஆண்தன்மையானது என்பதை தமது நாளாந்த வாழ்வின் அனுபவங்களினுடாக குறிப்பிடுகின்றார். சிறையில் இருந்தபோது பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதாந்த இரத்தப்பெருக்கு காலங்களில் கூட எந்தவிதமான அக்கறையுமின்றிப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்கின்றார்.

அகாலம் நுர்ல்இந் நூலில் தம்முடன் பணியாற்றிய அர்ப்பணிப்புள்ள தோழர்களின் பங்களிப்புகளை மதிப்புடன் புகழ்வதுடன் சில தோழர்களின் பொறுப்பற்றதனங்களையும் சுயநலப் போக்குகளையும் விமர்சிக்கின்றார். மேலும் பதவிகளிலிருந்த ஆதிக்க சாதி உயர் வர்க்க தமிழ்த் தேசியத் தலைமைகள் எவ்வாறு இளைஞர்களின் போராட்டங்களை தமக்கு சாதகமாக்கினர் எனவும் தம்மை முதன்மைப்படுத்துவதில் அக்கறையாக இருந்ததையும் குறிப்பிடுகின்றார். அதேவேளை போராட்டத்தில் பங்குபற்றிய பல தோழர்களின் பல்வேறு முகங்கள் வேவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டதையும் தனது அனுபவத்தினுடாக முன்வைக்கின்றார். இந்த அனுபவங்களின் விளைவாக அரசியல் செயற்பாடுகளில் இருந்து தன்னை ஆரம்பத்திலையே விடுவித்துக் கொண்டார்.

புஸ்பராணி 1ஆரம்பகாலங்களில் பலர் பல அர்ப்பணிப்புகளைக்களை தன்னலமின்றி ஒரே பொது நோக்கமான ஈழ மக்களின் விடுதலைக்காகச் செய்துள்ளனர். இருப்பினும் தொலைநோக்கற்ற திட்டமிடல்களும் அல்லது திட்டங்களில்லாத போராட்ட வழிமுறைகளும் சமரசங்களும் எவ்வாறு ஈழ விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கான வித்துக்களை ஆரம்பத்திலையே விதைத்தன என்பதற்கான சாட்சி இந்த நூல். ஆகவேதான் இத் தோழர்களின் பலரின் ஆரம்ப காலங்கள் அர்ப்பணிப்புகள் நிறைந்ததாக இருந்தபோதும் பிற்காலங்களில் ஈழ விடுதலைக்கும் ஈழ மக்களுக்கும் எதிராக செயற்பட்டது ஆச்சரியமானதல்ல. அந்தவகையில் இந்த நூல் ஒரு (சுய)விமர்சனமாகவும் இருக்கின்றது. மனிதர்கள் நல்லவர்களாக இருப்பது மட்டும் சமூக தேசிய விடுதலையை முன்னெடுப்பதற்கு போதுமானதல்ல. அதற்கு மேலும் தெளிவான நீண்டகால அரசியல் பார்வையைக் கொண்டிருப்பதும் அவசியமானது என்பதை இந்த நூலின் அடிப்படையில் உறுதிபடக் கூறலாம்.

இரண்டாவது படைப்பு தமிழ்க்கவி எழுதிய ஊழிக்காலம். தமிழ்க்கவி வன்னியைச் சேர்ந்தவர். 1980களின் இறுதியிலிருந்து போர்க் காலத்தில் வாழ்ந்து ஆயுதப் போராட்டங்களில் பங்கு பற்றிப் போராடியவர். இது மட்டுமல்ல, தனது குழந்தைகளையும் போராட்டதில் போராளிகளாக இழந்தவர். மேலும் இறுதிப் போர் வரை வாழ்ந்து, முள்ளிவாய்கால் வரை பயணம் செய்து சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர். தனது அனுபவங்களை ஒரு பெண் போராளியாக மட்டுமல்ல மகளாக, துணைவியாக, தாயாக, மாமியாக, பேத்தியாக, பத்திரிகையாளராக, விமர்சகராக எனத் தனது பல பாத்திரங்களினுடாகவும் ஆற்றல்களினுடாகவும் வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு பல அனுபவங்களைத் தொகுத்து ஈழத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான ஒரு கால கட்டத்தை ஒரு சாட்சியாக இருந்து பதிவு செய்துள்ளார்.

முதன் முதலாக தமிழ்கவியை புலிகளின் ஒளி ஒலி வீடியோவில் 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் பார்த்தேன். ஈழ விடுதலைப் பிரச்சாரத்திற்காக பேசிய அவரது தமிழ் இனவாதத்தையும் சிங்கள எதிர்ப்புணர்வையும் சகிக்க முடியாமல் தொடர்ந்து பார்ப்பதை நிறுத்தினேன். அதன் பிறகு அவரது நிகழ்வுகளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். இவ்வாறு நான் அவரைப் புறக்கணித்தபோதும் அவரை அப்பொழுது நிறையப் பேர் புகழ்ந்தனர். விரும்பினர். இதற்கு ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாக இவர்கள் அனைவரதும் அலைவரிசை ஒன்றாக இருந்தது காரணமாக இருக்கலாம்.

காலம் மாறியது. 2009ம் ஆண்டின் பின் முகநூலினுடாக நாம் நண்பரானோம். மரணம் இழப்பு மலர்தல் நூல் தொடர்பாக உரையாற்ற நண்பர் ஒருவர் அவரை முன்மொழிந்தார். அப்பொழுது மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்வும் மற்றும் அதைப் பார்த்த பொழுது அவருடன் உடன்படாமல் இருந்ததும் நினைவுக்கு வந்தன. அதேவேளை அவருடைய இன்றைய அரசியல் நிலைப்பாடு தெரியாமல் இருந்தது. இருப்பினும் அவர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணத்தை எதிர்கொண்டு அனுபவித்து வந்தவர் என்ற காரணத்திற்காக உடன்பட்டேன். அவ்வாறான ஒருவர் தான் இவ்வாறான ஒரு நூலைப் புரிந்து உரையாற்றக்கூடியவர் என உணர்ந்தேன். நூல்  வெளியீட்டு நிகழ்வில் தான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். நல்ல அழகான தமிழில் சிறப்பாக உரையாற்றினார். அப்பொழுதான் அவரின் தமிழ் புலமையை மட்டுமல்ல அவர் தனிப்பட ஒரு பெண்ணாக எதிர்நோக்கிய பல பிரச்சனைகளை அறிந்தேன். இதன்பின்பு இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற்ற புத்தகச் சந்தைக்குச் சென்றபோது அவரது நூலை வாங்கினேன்.  வாசிப்பதற்கு மிகவும் கஸ்டமான நூல் இது.  மனவுறுதி அதிகம் வேண்டும். ஏனெனில் வாசிக்கும் பொழுது பலவிதமான உணர்ச்சிகளை எமக்குள் கிண்டிவிடக்கூடியது. இறுதிப் போரில் அதாவது தமிழின அழிப்பின்போது மரணங்களையும் இழப்புகளையும் கொலைகளையும் பசியையும் பட்டினியையும் மற்றும் முரண்பாடுகளையும் எதிர்கொண்ட அனுபவங்களின் பகிர்வு இப் படைப்பு. உண்மையின் தரிசனங்கள் இவை. இந் நூல் தமிழின அழிப்பு நடைபெற்றதற்கான எழுத்துச் சாட்சியம் எனலாம்.

சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் எவ்வாறு ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்தார்கள் என்பதை இந் நூலில் விரிவாக விபரிக்கின்றார். அதேவேளை ஒரு புறம் போராளிகளின் ஒரு பிரிவினர் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதையும் விமர்சிக்கின்றார். மறுபுறம் போராளிகளின் இன்னுமொரு பிரிவினர் மக்களுக்காக எவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்பதை மதிப்புடன் புகழ்கின்றார். இந்த அர்ப்பணிப்பு இவர்களது உயிரையும் காவு கொண்டது என்பதைப் பதிவு செய்து அவர்களுக்கு அஞ்சலி செய்கின்றார். மக்கள் பல மரணங்களை கடந்து தம் வாழ்வை வாழ பாதுகாப்புத் தேடி ஓடினர். தனது தாய் தந்தை மட்டுமல்ல துணைவர், துணைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரையும் காப்பாற்ற முடியாதபோது வலியுடன் அதைக் கடந்து பயணித்தனர். இப் பயணம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையைப் படிப்படியாக சிதைந்தது. விடுதலை சுதந்திரம் தொடர்பான கனவுகள் கலைந்தன. இப்படி எல்லாவற்றையும் கூறுகின்ற இந்த நூல் தலைவருக்குத் தெரியாமல்தான் மக்களுக்கு எதிரான விடயங்கள் பல நடைபெறுகின்றன எனத் தலைவரைக் காப்பாற்றுகின்றது. ஆனால் உப தலைவர்களை விமர்சிக்கின்றது. இது ஒரு ஆய்வுக்கு உரிய விடயம். இது தொடர்பாக ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வி: யார் பொறுப்பு என்ற எனது கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

மூன்றவாது ஸர்மிளா ஸெய்யித் எழுதிய உம்மத் (சமூகம் அல்லது மக்கள் கூட்டம்) என்ற நாவல். ஸர்மிளா ஸெய்யித் அவர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். எழுத்தாளர். விமர்சகர். கவிஞர். செயற்பாட்டாளர். இவ்வாறு பல தளங்களில் செயற்படுகின்றவர். இவர் பாலியல் தொழிலாளர்களின் நன்மை கருதி இத் தொழில் சட்டரீதியானது ஆக்கப்பட வேண்டும் என நேர்காணல் வழங்கியமைக்காக கொலை மிரட்டல்கள் உட்பட பல பிரச்சனைகளை தனது சமூகத்திற்குள் இன்றுவரை எதிர்கொள்கின்றார். சமூக சமய அடிப்படைவாதத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகத் துணிவுடன் முகம் கொடுப்பதுடன் அதன் தவறுகளை வெளிப்படுத்தி உரையாடல்களை ஆரம்பிக்கின்றார். இந்த அனுபவங்களின் அடிப்படையில் போரின் பின்பான காலத்தை வலியும் சோகமும் மட்டுமல்ல வாழ்வின் மீதான நம்பிக்கையும் நிறைந்த அழகிய ஒரு புனைவாக படைத்துள்ளார். மேற்குறிப்பிட்ட இரு நூல்களையும் விட இது ஒரு நாவலாக பரிணமிக்கின்றது.

உம்மத் நாவல் மூன்று பெண்களைப் பிரதானமாகக் கொண்டது.  இந்த மூவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு பெண் போராட்டத்தில் தனது காலை இழந்து போர் முடிவடைந்ததாக கூறியபின் சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வின் பின் தனது குடும்பத்திடம் சென்ற ஒரு முன்னால் போராளி. இன்னுமொருவர் போரின் பின் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் காலிழந்த முன்னால் பெண் போராளி. மூன்றாவது பெண் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் பெண்களுக்கு தனது சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் எதிர்ப்புகளையும் எதிர்த்துக் கொண்டு வாழும் முஸ்லிம் சமூக சேவகி. இந்த நாவல் ஒரு முஸ்லிம் பெண்(ணின்) (பாத்திரத்தின்) பார்வையிலும் ஆசிரியரின் அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டிருக்கின்றது.

உம்மத் ஒரு பெண் குடும்ப சூழ்நிலைகளால், வறுமையினால், அன்பின்மையால் மரணத்தைத் தேடி இயக்கத்திற்கு செல்கின்றார். இவர் இறுதி யுத்தம் வரை வன்னியில் நின்றது மட்டுமல்ல போராட்டத்தின் போது தனது காலையும் இழந்த ஒரு போராளி. போரின் பின்பு புனர்வாழ்வு முடிந்து மீண்டும் தனது குடும்பத்தாருடன் வாழ்வதற்காக தனது ஊருக்குச் செல்கின்றார் இவர். அங்கு இவர் எதிர்நோக்கும் பிரச்சனைகளே இந்த நாவலின் பிரதான கதைகளில் ஒன்றாக இருக்கின்றது. முன்னால் (குறிப்பாக பெண்) போராளிகள் ஒவ்வொருவரும் தற்கொலையை ஏன் நாடுகின்றனர் என்பதற்கு இந்த நாவல் இப் பாத்திரத்தினுடாக விடை தருகின்றது. இதற்காகவாவது இந்த நாவலை ஈழத் தமிழ் சமூகத்தினரும் முன்னால் போராளிகளில் அக்கறை உள்ளவர்களும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் வாசிக்க வேண்டும். இரண்டாவது பெண் ஒரளவு படித்தவர். இவரும் முன்னால் போராளி. இவர் போராட்டத்திற்கு சென்றதற்குப் பல சமூக அரசியல் காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. போரின் பின் தன் சொந்த முயற்சியால் வாழ்வதற்கு முயற்சி செய்கின்ற ஒருவர். நம்பிக்கை தருகின்ற ஒருவர். மேலும் தான் செயற்பட்ட இயக்கத்தின் செயற்பாடுகள் மீது விமர்சனங்கள் கொண்ட ஒரு போராளி.

உம்மத்சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறையையும் இன அழிப்பையும் தெளிவாக குறிப்பிடுகின்றது இந்த நூல். ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்துகின்றது.  இதற்கான அவசியத்தை எவ்விதமான சமரசமுமின்றி உறுதியாக முன்வைக்கின்றது. இந்த அடிப்படைகளில் போராளிகள் போராடுவதற்கு ஏன் சென்றார்கள்? யார் அதிகமாக சென்றார்கள்? எவ்வாறான வர்க்க சமூக சாதியப் பின்னணியிலிருந்து பெரும்பாலான போராளிகள் போராட சென்றார்கள்? என்பதை நன்றாகவே விளக்குகின்றது. அதேவேளை ஒரு புறம் இயக்கத்தின் நேர்மறையான அம்சங்களையும் மாற்றங்களையும் குறித்துச் செல்கின்றது.  குறிப்பாக அரசியல் கற்பித்தல் அதில் காட்டப்படும் அக்கறை போராட்டத்தின் மீதான உறுதி என்பவற்றைக் குறிப்பிடலாம். மறுபுறம் இயக்கத்தின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கின்றது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் சிறுவர்களைப் பலவந்தமாக பிடித்தது என்பவற்றைக் குறிப்பிடலாம். மேலும் அரசியலைக் கைவிட்டு ஆயுதப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை வைத்தது எனப் பல விமர்சனங்களையும் முன்வைக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறிப்பாக முன்னால் (பெண்) போராளிகளின் அவல வாழ்வை மனதில் உறையும் படி பதிவிடுகின்றது.  சில அம்மாக்கள் இப்படியும் இருப்பார்களா என்ற கேள்வியை பல தடவைகள் கேட்டிருக்கின்றேன். இந்த அம்மாக்கள் சமூகத்திறகுப் பயந்தும் தமது வாழ்வில் அக்கறை கொண்டும் எவ்வாறு இரட்டை வாழ்வை வாழ்கின்றார்கள் என்பதை அழகாக ஆசிரியர் விபரித்துள்ளார். இத் தாய்மார் பெண்களாக இருந்தபோதும் தெரிந்தோ தெரியாமலோ  பெண்களுக்கு அதுவும் தம் மகள்களுக்கு எதிரான தடை கற்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கும் இந்த ஆணாதிக்க சமூகமே பொறுப்பாகும். தமது ஆணாதிக்க சிந்தனையை ஊட்டி வளர்ப்பதற்கு பெண்களையே பயன்படுத்துவது இந்த சமூகத்தின் சிறந்த தந்திரோபாயமாகும். பெண்களும் இதை அறியாமல் இருப்பது ஒரு தூர்ப்பாக்கியமாகும். ஒரு குழந்தை அதுவும் ஒரு பெண் குழுந்தையாக இருந்துவிட்டால் வளரும் பொழுது ஒரு தாயின் அல்லது பெற்றோரின் அரவனைப்பு எந்தளவு முக்கியமானது என்பதை நாம் உணரச் செய்கின்றார் ஆசிரியர்.

ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் இவ்வளவு தெளிவாக ஈழப் போராட்டம் தொடர்பாக எழுதுவதை தமிழர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். சில அடிப்படைவாத முஸ்லிம்களின் தமிழர் விரோதப் போக்கினால் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற குறுந் தேசியவாத தமிழர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

sharmilaஇந்த நாவலில் வருகின்ற மூன்றாவது பெண் ஒரு முஸ்லிம். அவரே இந்த நாவலின் கதை சொல்லியாகவும் இருக்கின்றார். ஆகவே அப் பாத்திரம் நூல் ஆசிரியராகவும் அவரது சொந்த அனுபவமாகவும் இருப்பதுபோலத் தெரிகின்றது. இந்தப் பெண் அல்லா மீது நம்பிக்கை கொண்டவர். குரானை மதிக்கின்றவர். தொழுகைக்கான நேரங்களைத் தவறவிடுவதில்லை. ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு இதுவே போதும் என்கின்றார். ஆகவே ஒரு முஸ்லிம் பெண்ணாகவே தன்னை அவர் உணர்கின்றார். அவ்வாறே வாழ்கின்றார். ஆனால் சுதந்திரமான பெண்ணாக இருக்க விரும்புகின்றார். இதனை சமய அடிப்படைவாத சக்திகள் விரும்பவில்லை. ஆகவே தாம் விரும்பியவாறு வாழ்வதற்கு அவரை நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு எதிராகப் போராடுகின்றார். தனது மதத்தின் பெயரால் ஆதிக்கம் செய்கின்ற சிலரின் அடிப்படைவாதத்திற்கும் தனது சமூகத்தின் ஆணாதிக்க கருத்தியலுக்கும் எதிராக இந்தப் பெண் உறுதியாகப் போராடுகின்றார். மேலும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடிப்படைவாத சிந்தனையை எவ்வாறு ஈழத்து முஸ்லிம் சமூகத்திற்குள் திணிக்கின்றார்கள் என்பதையும் இதனால் யாருக்கு இலாபம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றார்.

முஸ்லிம் சமூகத்திற்குள் ஆண் பெண் உறவுகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை அதிகார அடுக்குகளை மிக அழகாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளார். பெண்களின் தெரிவுகள், விருப்பங்கள், உரிமைகள் என்ன என்பதை சிறிய உரையாடல்கள் மூலமாக அழகாகப் புரியவைக்கின்றார். இப் பெண் தனது சுதந்திரத்தையும் உரிமையையும் தடுக்கும் வழிகளையும் கட்டுப்பாடுகளையும் யார் கூறினாலும் அதை எதிர்க்கின்றாள். தனது மதத்தைப் போல பிற மதங்களையும் மதிக்கின்றாள். இம் மதம் சார்ந்த மனிதர்களுடன் உறவாடுகின்றாள். மேலும் தன்னைப் போன்ற பெண்களுக்கும், தமது சொந்தக் காலில் நிற்க முயற்சிக்கின்ற பெண்களுக்கும் குறிப்பாக முன்னால் போராளிகளுக்கும் தோல் கொடுத்து ஊக்குவிக்கின்ற ஒருவராக இருக்கின்றார். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதனால் எந்தவகையிலும் தான் ஒரு முஸ்லிம் இல்லாதவளாக இருக்க முடியாது என வாதிடுகின்றவர். ஆகவே தனது செயற்பாடுகளைத் தடுப்பவர்களை எதிர்ப்பவர்களை எதிர்க்கின்றாள். அவர்களுக்காக அவள் பயப்பிடவில்லை. துணிவாக தனித்து நிற்கின்றாள். இவளுடைய வாழ்வுடன் ஒப்பிடும் பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற பெரும் கேள்வி என் முன் எழுந்தது.

ஒரு இலக்கியப் படைப்பின் நோக்கம் எவ்வாறு இருக்கலாம் என்பதற்கு இந்த நூல் நல்ல உதாரணமாகும். சுதந்திரமாக வாழ விரும்புகின்ற ஒவ்வொரு முஸ்லிம் பெண்களும் வாசிக்க வேண்டிய நூல் இது. பெண்களை குறிப்பாக முஸ்லிம் பெண்களைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்புகின்ற (முஸ்லிம்) ஆண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டி நூல் இது. 30 வருடங்களுக்கு முதல் வாசித்த ரசிய நாவல்கள் என்னில் ஏற்படுத்திய பாதிப்பைபோல இந்த நூலும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிகரமான முடிவாக இருந்தாலும் நான் வாசித்த நாவல்களுக்குள் அன்றைய இரசிய படைப்பாளர்களின் தரத்திற்கு தமிழிலும் ஒரு நாவல் வந்துள்ளதா என்றால் இதனைப் பெருமையாக குறிப்படலாம்.

இந்த மூன்று நூல்களையும் வாசிக்கும் பொழுது பல இடங்களில் அழாமல் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. அந்தளவிற்கு வாழ்வின் துன்பங்களை, கஸ்டங்களை, வறுமையை, பசியை, பட்டினியை, ஏழ்மையை விபரிக்கின்றன. மேலும் மரணத்தைவிட வாழ்வின் முக்கியத்துவத்தையும் அதன் மேன்மையையும் இந்த நூல்கள் கூறுகின்றன. இந்த நூல்கள் தொடர்பான விமர்சனங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு எழுதாமல் தவிரக்கின்றேன். இதற்கு முக்கிய காரணம் இப் படைப்புகள் சமூகத்தில் பல வகைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பாக பெண்களின் அவலங்களை மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் தெளிவாகவும் வெளிப்படுதுவது மட்டுமல்ல அவர்களின் குரலாகவும் வெளிவருகின்றது. அவர்களைப் பிரநிதித்துப்படுத்துகின்றது. மேலும் ஒடுக்குமுறையை சந்தித்த பெண்களாலையே இவை படைக்கப்பட்டிருக்கின்றமை அதன் முக்கியத்துவதை மேலும் அதிகரிக்கின்றது. அதற்கு மரியாதை செய்து இந்த நூல்களுக்கான விமர்சனங்களைத் தனிப்பட படைப்பாளர்களுக்கு மட்டுமே அனுப்ப உத்தேசித்துள்ளேன். அவர்கள் விரும்பினால் மட்டும் பொதுவில் பகிர்வேன். இந்த நூலின் பாத்திரங்களை முன்னால் போராளிகள் எனக் கூறுவது தவறு. மாறாக அவர்கள் இப்பொழுதும் போராளிகளே. ஏனெனில் இன்று அவர்கள் வேறு வேறு தளங்களில் தம் வாழ்வை நிலைநிறுத்துவதற்காகப் தமது சமூகத்திற்கும் ஆண்களுக்கும் அரசபடைகளுக்கும் எதிராகப் போராடுகின்ற போராளிகள். அந்தவகையில் இப் படைப்புகளைப் படைத்தவர்களும் சமூகப் போராளிகளே.

அகாலம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் பங்கு பற்றியவர்களின் அர்ப்பணிப்புகளை குறிப்பிட்டாலும் குழறுபடிகளையும் கூறுகின்றது. இந்த நூலை இதன் ஆசிரியர் அரசியலிலிருந்து விலகிய காலத்தில் எழுதியிருந்தால் ஊழிக்காலம் மற்றும் உம்மத் போன்ற நாவல்கள் சிலவேளை வெளிவந்திருக்காது எனலாம். அல்லது வேறு வகையான நாவல்களை நாம் பெற்றிருக்கலாம். ஊழிக்காலம் போராட்டத்தினதும் இன அழிப்பின் உச்சத்திலும் இயக்கத்திற்குள் நடைபெற்ற அக முரண்பாடுகளையும் கூறுகின்றது. எவ்வாறு இயக்கம் மக்களுக்கு எதிராக செயற்பட்டது என்பதை விளக்குகின்றது. உம்மத் ஒரு காலத்தில் சமூகம் போற்றிப் புகழ்ந்த போராளிகளை இப்பொழுது எவ்வாறு இழிவாக நடந்துவதுடன் அவமானப்படுத்துகின்றது என்பதைப் பதிவு செய்கின்றது. மேலும் பெண்கள் எவ்வாறு சமூகத்தினால் நடாத்தப்படுகின்றர் என்பதையும் கூறுகின்றது.

இந்த நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். அகாலம் கருப்புப்பிரதிகள். ஊழிக்காலம் தமிழினி. உம்மத் காலச்சுவடு.

இந்த நூல்களை வாசித்போது
ஒரு தமிழனாக குற்றவுணர்வுக்கும் உள்ளானேன்.
ஒரு ஆணாக குற்றவுணர்வுக்கு உள்ளானது மட்டுமல்ல ஒரு ஆணாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகின்றேன்.
ஒரு மனிதனாக எனது இயலாமையை நினைத்து வேதனை கொள்கின்றேன். என் மீதும் சமூகத்தின் மீதும் கோவம் கொள்கின்றேன்.

என்னையும் இந்த சமூகத்தையும் மாற்றுவதற்கான வழிகளைத் தேடுகின்றேன். ஒவ்வொருவரும் சகல உரிமைகளுடனும் சம வாய்ப்புகளுடனும் தாம் விரும்பும் அடையாளங்களுடனும் சுதந்திரமாக எந்த அடக்குமுறைகளின்றி வாழ்வதற்கான வழிகளைத் தேடுகின்றேன். தேடுவதற்கு தூண்டப்படுகின்றேன்.novels

பி.கு: 1. இந்த மூன்று நூல்களும் ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் விடுதலையிலும் அக்கறை உள்ள அனைவரும் வாசிக்க வேண்டியது என்றால் மிகையான கூற்றல்ல. இந்த நூல்களின் கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தொடர்பான சமூக அரசியல் ஆய்வு ஒன்ற செய்வதற்கான பெரும் வெளி ஒன்றை இதன் ஆசிரியர்கள் திறந்து விட்டுள்ளனர்.

இந்த மூன்று நூல்களையும் மற்றும் முன்னால் ஆயுதப் போராளிப் பெண்கள் எழுதிய படைப்புகளையும் ஒன்றாக இணைத்து ஒரு கலந்துரையாடலை முழுநாளும் ஒழுங்கு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். அகாலம் முதல் ஊழிக்காலம் வரை – உம்மத் என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யலாம். இந்த நிகழ்வை ரொன்டோவில் இருக்கின்ற தமிழ் அமைப்புகள் ஒன்றினைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக செய்தோமானால் பயனுள்ளதாக இருப்பதுடன் சிறந்த ஒரு நிகழ்வாகவும் ஒழுங்கு செய்யலாம்.

இது தொடர்பாக ஒரு முறை பெண்கள் நடாத்திய நூல் வெளியீட்டில் கருத்துரைத்தபோது குறிப்பிட்டேன். அப்பொழுது ஒரு நண்பர் தாம் இதில் ஒரு நாவலை  அறிமுகம் செய்ய இருப்பதாக கூறினார். மிக அண்மையிலும் இன்னுமொரு நண்பர் தாமும் ஒரு நாவலை அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பட்டார். எனது விருப்பம் புஸ்பராணி, தமிழ்க்கவி, சர்மிளா செயித், மற்றும் வெற்றிச் செல்வி ஆகியோரை அழைத்து அவர்களது படைப்புகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் முழு நாள் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்கு செய்வதே பயனுள்ளதாகும். இதனை கூட்டுச் செயற்பாடாக செய்வதற்காக சகல அமைப்புகளுக்கும் இதனுடாக அழைப்பு விடுக்கின்றேன்.

நன்றி-மீராபாரதி- பிரக்ஞை0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்