/* up Facebook

May 23, 2015

காலத்தால் அழியாத பெண் எழுத்து - பிருந்தா சீனிவாசன்


குடும்பச் சங்கிலிகளும் சமூகக் கட்டுக்களும் பெண்களைப் பிணைத்திருந்த காலத்திலேயே எழுத்தைத் தங்கள் விடுதலைக்கான ஆயுதமாக பெண்கள் ஏந்தினர். கழிவிரக்கமோ, சுயபச்சாதாபமோ இல்லாமல் புரட்சியைச் சுமந்துவந்த பெண்களின் எழுத்துகள், சமூக மாற்றத்துக்கான விதையைத் தூவிச் சென்றன. குடும்ப அமைப்புகளையும் அதில் மலிந்திருக்கும் அவலங்களையும் பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மூலம் கேள்விக்குள்ளாக்கினர். தங்கள் மீதான எதிர்மறை விமர்சனங்களையே தங்கள் எழுத்துக்கான உந்துசக்தியாக மாற்றிக்கொண்ட பல பெண்கள், சமூகப் பங்களிப்பை விரிவுபடுத்தினர். முதல் தலைமுறை பெண் எழுத்தாளர்கள் போட்டுத் தந்த பாதையிலும் புதிய கோணத்திலும் அடுத்த தலைமுறை தடம் பதித்தது. பொருளாதார முன்னேற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இன்று பெண்களின் வாசிப்புக்கான வாய்ப்பை ஓரளவுக்குச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. சமூக மாற்றத்தை முன்னெடுத்த இந்திய பெண் படைப்பாளிகளின் குறிப்பிடத்தகுந்த சில படைப்புகளை இங்கே பார்க்கலாம்.

பெண்ணின் ஆழ்மனக் கேள்வி

இருபதாம் நூற்றாண்டின் முன்னோடி பஞ்சாபிப் பெண் கவிஞராக அறியப்படும் அம்ரிதா ப்ரீதம், நாவல் எழுதுவதிலும் தேர்ந்தவர். அவர் எழுதிய Pinjar (எலும்புக்கூடு) என்ற நாவல், பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த நாவலில் வரும் ‘புரோ’ என்ற பெண் கதாபாத்திரம் காலத்தால் அழியாதது. பெண்கள் மீதான வன்கொடுமைக்கும் விதியின் பெயரால் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கும் புரோவே சாட்சி. இந்துக் குடும்பத்தில் பிறந்த புரோவை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ரஷீத் என்பவன் கடத்திவிடுகிறான். ‘தீட்டுப்பட்ட’ அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது புரோவின் குடும்பம். கையறு நிலையில் விடப்படுகிற புரோ, மீண்டும் ரஷீத்திடமே செல்கிறாள். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானது பிஞ்சார். அரசியலை மட்டுமல்ல, பெண்ணின் ஆழ் மன உணர்வுகளையும் அதில் வெளிப்படும் கேள்விகளையும் பதிவுசெய்த வகையிலும் பிஞ்சார் முக்கியத்துவம் பெறுகிறது.

கலாச்சாரக் குழப்பம்

புலம்பெயர் இந்தியர்களின் மனநிலையை நுட்பமாகப் பதிவுசெய்பவர் ஜும்பா லஹிரி. இவர் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு Interpreter of Maladies. புலிட்சர் பரிசு பெற்ற இந்தத் தொகுப்பு உலகம் முழுவதும் 1.5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. கலாச்சாரம், மரபு ஆகியவை வாழ்க்கை மீது செலுத்தும் ஆதிக்கத்தை நேர்த்தியுடன் பேசுகின்றன இந்த சிறுகதைகள். ஒன்பது விதமான சூழ்நிலைகள், மனிதர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசும் இந்தத் தொகுப்பில் கலாச்சார நம்பிக்கைகள் மீதான கேள்வி அடிநாதமாக இழையோடுகிறது.

தலைமுறை இடைவெளி

பெண்களின் உள்ளத்தில் கனன்றுகொண்டிருக்கும் உணர்வுகளையும் உள்ளொளியையும் வார்த்தைகளாக வடிப்பவர் அனிதா தேசாய். இவர் எழுதிய Fire on the Mountain நாவல், பாட்டிக்கும் கொள்ளுப் பேத்திக்கும் இடையே நடக்கும் உணர்வுப் பரிமாற்றத்தைப் பேசுகிறது. கணவனின் இறப்புக்குப் பிறகு தன் இறுதி நாட்களைக் கழிக்க ஒரு மலையுச்சியைத் தேர்ந்தெடுக்கிறார் நந்தா கௌல். அவரது தனிமைக்குப் பங்கமாக வந்து சேர்கிறாள் நந்தாவின் கொள்ளுப் பேத்தி ராக்கா. அவள் வருகைக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள், திகிலூட்டும் பயணம்போல் விரிகின்றன.

பெண்ணின் தேடல் வேட்கை

பலரும் பேசத் தயங்குகிற, பயப்படுகிற சங்கதிகளைத் துணிச்சலுடன் முன்வைத்தவர் உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். சிறுகதைகளில் பெரும் பொருளைப் பேசி விவாதங்களுக்கு வித்திட்டவர். இவரது சிறுகதைத் தொகுப்பான Quilt and Other Stories, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. அதில் இடம்பெற்றிருக்கும் Lihaaf (The Quilt) என்னும் சிறுகதை, பெண்ணின் பாலியல் தேர்வு குறித்து விரிவாகப் பேசுகிறது. பேகம் ஜான், வயதானவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். தன் கணவருக்குப் பெண்களைவிட ஆண்கள் மீதுதான் ஈடுபாடு என்பது பேகம் ஜானுக்குத் தெரியவருகிறது. உடைந்துபோகிற அவளின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கிறாள் அவளுக்கு உடம்பு பிடித்துவிடும் வேலை செய்யும் ராபு. இந்த இரண்டு பெண்களுக்கு இடையேயான உறவு, பல்வேறு கேள்விகளை இந்தச் சமூகத்தின் முன் வைக்கிறது.

சொல்லப்படாத கதை

மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் எழுதிய சுயசரிதையான Ente Katha (My Story), பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இது இந்தியப் பெண்களின் சுய சரிதைகளில் மிக முக்கிய மானது. கால வரிசைப்படி அமைந்த சம்பவங்களும் நேரடியான விவரிப்பும் ஒரு நாவல் போலவே இந்தப் புத்தகத்தை உணரச் செய்கின்றன. தன் அக வாழ்க்கை தந்த வேதனைகளையும் அதை மீறி வெளிப்பட்ட தன் சுய எழுச்சியையும் கமலா தாஸ் இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். சுயசரிதையாக இந்தப் புத்தகம் அங்கீகரிக்கப் பட்டாலும் நடுவே சில புனைவுகளைச் சேர்த்திருப்பதாகக் கமலா தாஸ் சொல்லியிருக்கிறார்.

முகமற்றவர்களின் வாழ்வு

சுதந்திரப் போராட்ட வீராங்கனை, இந்திக் கவிதைகளின் முக்கியத் தூண், பெண் கல்விக்கான களம் அமைத்தவர் என்று பல அடையாளங் களைக் கொண்டவர் மகாதேவி வர்மா. ஒடுக்கப்பட்ட பெண்கள், சமூகத்தால் புறக்கணிக்க பட்டவர்களைக் குறித்து இவர் எழுதிய

Sketches from My Past : Encounters with India's Oppressed என்ற புத்தகம் நம் சமூக அமைப்பில் இருக்கும் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தனக்கு நன்கு அறிமுகமான வர்களின் வாழ்க்கையை இதில் பதிவுசெய் திருக்கிறார். வளர்ப்புத் தாயால் கொடுமைக்கு ஆளாகும் சிறுமி, உடலாலும் மனதாலும் சிதைவுக்குள்ளாகும் விதவைச் சிறுமி, குழந்தை பிறந்ததுமே கணவன் ஓடிப்போய்விட தனிமையில் வாழ்க்கையை நகர்த்தும் துப்புரவுத் தொழிலாளி என ஒவ்வொரு முகமும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் துயரம் தோய்ந்த கதைகளும் மரித்துப் போய்விட்ட மனிதத்துக்குச் சாட்சியாக இருக்கின்றன.

அடக்குமுறைக்கு எதிரான எழுத்து

சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஓங்கி ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் மகாஸ்வேதா தேவி. Of Women, Outcastes, Peasants, and Rebels என்ற சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய ஆறு சிறுகதைகள் இடம் பெற்றிருக் கின்றன. நிலமற்ற பழங்குடியின மக்களைப் பற்றியும், தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள் மீது இந்தச் சமூகம் செலுத்தும் கொடூரமான ஆதிக்கம் குறித்தும் தன் சிறுகதைகளில் அழுத்தமாகப் பேசுகிறார். நம் சட்டம் வரையறுத்து வைத்திருக்கும் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படுகிற தீண்டத்தகாதவர்கள் குறித்தும் அவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற திட்டமிட்ட சுரண்டல் குறித்தும் புதிய பார்வையை இந்தச் சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. உயர் வகுப்பைச் சேர்ந்த சர்வாதிகார குணமுடைய நில உரிமையாளர்கள், அநியாய வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், இவற்றைக் கண்டுகொள்ளாத ஊழல் மலிந்த அரசு அதிகாரிகள் ஆகியோரால் அடக்கி வைக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை படம்பிடித்துக் காட்டும் ஆவணம் போல இந்தச் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

பொங்கும் புதுப் புனல்

பயணித்த பாதைகளைத் தவிர்த்துப் புதிய தடம் பதித்தவர்களில் முக்கியமானவர் வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணா தேவி. இவர் எழுதிய The First Promise என்ற நாவல், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பெண்கள் சந்தித்தப் போராட்டங்களைச் சித்திரிக்கிறது. எளிய நடையிலும் உரையாடல் பாணியிலும் அமைந்த இந்த நாவல், தொடர்ந்து பலரால் விமர்சிக்கப்பட்டது. கிராமப் பெண்ணான எட்டு வயது சத்தியவதி, தன் கணவனுடன் கொல்கத்தாவில் குடியேறுகிறாள். அங்கே கிடைக்கிற பெண் கல்வி, சமூக சீர்திருத்தங்கள், நவீன மருத்துவம், பொழுதுபோக்கு ஆகியவை சத்தியவதியை வெகுவாகப் பாதிக்கின்றன. தன் மகளின் வளர்ச்சிக்கு நல்லதொரு சூழல் கிடைத்துவிட்டதாக நம்பும் அவளுக்குக் கடைசியில் வெறுமையே மிஞ்சுகிறது. அந்த வெறுமை நவீனமயமாக் கலுக்கும் மரபார்ந்த உரிமை களுக்கும் இடையே இருக்கிற இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.

நீடித்த மௌனம்

சசி தேஷ்பாண்டேவின் எழுத்துகள், யதார்த்தத்தின் வழி நம்மைச் செலுத்தும் சக்தி வாய்ந்தது. கல்வியும் பொருளாதாரமும் கிடைத்துவிட்டால் மட்டுமே பெண் முன்னேறிவிட்டாள் என்பதை மறுக்கும் வகையில் இவர் எழுதிய That Long Silence நாவல், மும்பை புறநகர்ப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஜெயாவை மையமாக வைத்து நகர்கிறது. திடீரென வேலையிழந்துவிட்ட கணவன், அதனால் தொடரும் அவனது அடுக்கடுக்கான கேள்விகள், மன உளைச்சல், ஏமாற்றம் தரும் வளரிளம் பருவக் குழந்தைகள், தோற்றுப்போன எழுத்தாளர் என்ற தன் அடையாளம் ஆகிய இவற்றுக்கு நடுவே ஜெயா தன் வாழ்வை இறுகப் பற்றியபடி இருக்கிறாள். சிறுவயதில் தொடங்கி தற்போது வரை தன்னுள் ஆழமாகப் பதிந்துவிட்ட நீடித்த மௌனத்தை அழித்தொழிப்பது எப்படி என்ற கேள்வி ஜெயாவுக்குள் நீள்கிறது.

ஒரு நாடு பல முகம்

நயன்தாரா சேகல், நம் அரசியல், சமூக அமைப்பில் இருக்கும் சீர்கேடுகளையும் அதிகார மட்டங்களில் நிறைந்திருக்கும் அநீதிகளையும் கேள்விக்குட்படுத்துகிறார். ஆடம்பரமும் உன்னதமும் நிறைந்த இந்தியாவின் பழமைக்கும் ஏமாற்றமும் ஊழலும் மலிந்திருக்கும் இந்தியாவின் தற்போதைய நிலைக்கும் இடையே இருக்கும் இடைவெளியைச் சொல்கிறது இவரது Rich Like Us நாவல். இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்ததைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவலில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நினைவு படுத்தும். நெருக்கடி நிலை சிலருக்கு ஆதாயத்தையும் சிலருக்கு ஆபத்தையும் தர, அரசுத் தேர்வில் தர வரிசையில் முதலிடம் பிடித்த சோனாலிக்கோ ஒரு கனவின் சிதைவாகத் தோன்றுகிறது. லஞ்சம் வாங்கத் தயங்காத சக ஊழியர், கம்யூனிசச் சிந்தனையுள்ள நண்பனும் ஊழலுக்குத் துணைபோக வேண்டிய அவல நிலை, ஒரு தவறும் செய்யாத ஒருவர் சிறையில் அவதிப்படும் கொடுமை என்று சோனாலியைச் சுற்றி நடக்கிற ஒவ்வொன்றும் அவளுக்குள் மட்டுமல்ல அனைவருக்குள்ளும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்