/* up Facebook

May 20, 2015

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதமா திருமணம்? - என்.கெளரி


இந்தியாவில் பாலியல் வன்முறையை அதிகம் நிகழ்த்துபவர்கள் கணவன்மார்களே எனச் சென்ற ஆண்டு வெளிவந்த தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையில் வெறும் 2.3 சதவீதம் மட்டுமே கணவன் அல்லாத பிற ஆண்களால் நடத்தப்படுகிறது எனக் குறிபிட்டுள்ளது அந்த அறிக்கை.

இந்த நிதர்சனம் ‘மேரிட்டல் ரேப்’(Marital Rape) எனப்படும் கணவன் மனைவிமீது நிகழ்த்தும் வலுக்கட்டாயமான பாலியல் வல்லுறவு குறித்த விவாதத்தை எழுப்பியது. இதைச் சட்டப்படி தடுப்பது குறித்த சிந்தனையைச் சமூக ஆர்வலர்களிடம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் உள்துறை மத்திய இணை அமைச்சர் இதுபற்றித் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தப் பிரச்சினையை மாநிலங்களவையில் கனிமொழி எழுப்பினார். உலக அளவில் பல நாடுகளில் குற்றமாக அறிவிக்கப் பட்டிருக்கும் ‘மேரிட்டல் ரேப்’ எனப்படும் திருமண வல்லுறவு இந்தியாவில் இன்னும் குற்றமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் எழுபத்தைந்து சதவீதப் பெண்கள், திருமணப் பந்தத்தில் வல்லுறவால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐநா மக்கள்தொகை நிதியம் தெரிவித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான இந்தப் பாகுபாடுகளை ஒழிப்பதற்காக இந்திய அரசை ‘திருமண வல்லுற’வைக் குற்றமாக அறிவிக்கச் சொல்லி ஐ.நா. குழு, பரிந்துரைத்திருக்கிறது. ஐ.நா. குழுவின் இந்தப் பரிந்துரையை முன்வைத்து, மத்திய அரசு ‘திருமண வல்லுறவு’ தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை விரைவில் கொண்டுவர வேண்டும் என்று கனிமொழி பேசினார்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி அதற்கு இப்படிப் பதிலளித்திருக்கிறார்: “திருமண வல்லுறவைக் குற்றமாகக் கருதுவது சர்வதேச அளவில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, அப்படிக் கருத முடியாது. ஏனென்றால், பல்வேறு காரணிகளான கல்வி, கல்வியின்மை, ஏழ்மை, எண்ணற்ற சமூக வழக்கங்கள், விழுமியங்கள், மத நம்பிக்கைகள், சமூகத்தின் மனப்போக்கு போன்றவை திருமணத்தைப் புனிதமாக நினைக்கச் சொல்கின்றன”.

இந்தக் கருத்து கடும் அதிர்வலைகளை நாடு முழுவது ஏற்படுத்தியிருக்கிறது. திருமணம் எனும் நிறுவனத்தின் புனிதத்தைக் காப்பாற்றப் பெண்ணுடலும் உள்ளமும் சிதைக்கப்பட்டால் தவறில்லை என்று அமைச்சர் சொல்லவருகிறாரா? இதை ஒரு பிரச்சினையாகவே அங்கீகரிக்க அவர் மறுப்பதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

குற்றமும் புனிதமும்

திருமணம் என்னும் சமூக நிறுவனத்தைப் புனிதம் என்று சொல்லி, அந்நிறுவனத்தைக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றிவிடலாம் என்று நினைக்கிறதா இந்த அரசு? இதன் மூலம் பிற்போக்கு மதவாத சக்திகளைத் திருப்திப்படுத்த முயல்கிறது. திருமண வல்லுறவை குற்றமாகச் சொல்ல முடியாது என்னும் அரசின் இந்த நிலைப்பாடு பெண்களுக்கு முற்றிலும் எதிரானது எனப் பல்வேறு அமைப்புகளும் குரல் எழுப்பியிருக்கின்றன.

மத்திய இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி தெரிவித்திருக்கும் கருத்துகள் ஆபத்தானவை என்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா. “திருமணம் புனிதமானது. அதனால், திருமண வல்லுறவைக் குற்றமாக வரையறுக்க முடியாது என்று அவர் சொல்வது சமூகத்தை ஒரு நூற்றாண்டு பின்னுக்கு அழைத்துச் செல்வதற்குச் சமமானது. கணவன் என்னும் ஆணுக்கு, மனைவி என்னும் பெண்ணின் உடல் மீது மட்டற்ற உரிமை இருக்கிறது என்று சொல்வது மனித உரிமைகளை மீறும் விஷயமாகும். மதவாதத்தின் பலவீனமான சிந்தனையாகத்தான் அரசின் இந்த வெளிப்பாட்டைக் கருதமுடிகிறது” என்கிறார் அவர்.

இந்தியச் சமூகத்தில் பெண்ணின் உரிமைகளை நிலைநிறுத்து வதற்குச் சட்டம் இயற்றப்படும் போதெல்லாம், திருமணம் புனிதமானது, அதற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றப்படக் கூடாது என்ற குரல்கள் ஓங்கி ஒலித்துவந்ததைச் சுட்டிக்காட்டும் ஓவியா, அந்தப் பிற்போக்குக் குரல்களை மீறி, கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடைசெய்யும் சட்டம் (1829), விதவைகள் மறுமணச் சட்டம் (1856), குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் சாரதா சட்டம் (1929), பெண்களுக்கு விவாகரத்து உரிமை, ஜீவானாம்ச உரிமை வழங்கும் சட்டங்கள் ஆகிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இவை எல்லாமே திருமணத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த புனித அந்தஸ்தை உடைத்துத்தான் எழுதப்பட்டன” என்கிறார்.

சட்டம் இயற்றுவது சாத்தியமா?

திருமணத்தை ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு ஒப்பந்தமாகவே இந்தியச் சட்டங்கள் பார்க்கின்றன. விவாகரத்து உரிமை அதனால்தான் சாத்தியப்படுகிறது. திருமணம் என்பது சம உரிமை நிலவ வேண்டிய சட்டபூர்வ அமைப்பு. அங்கே புனிதத்துக்கு இடமில்லை என்பதை நம் இந்தியச் சட்டங்களின் வரலாற்றைப் பார்த்தாலே எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

டெல்லி பாலியல் வன்புணர்வு நிகழ்வுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா குழு ‘திருமண வல்லுற’வைக் குற்றமாக அறிவிக்கும் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளச் சொல்லி 2013-ம் ஆண்டிலேயே பரிந்துரைத்தது. ஆனால், இந்திய அரசாங்கம் அதைச் செய்யாமல் தவிர்த்துக்கொண்டிருந்தது. இப்போது சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சொல்லியிருக்கிறது.

அரசின் இந்த நிலைப்பாடு அதன் பிற்போக்கு மதச்சார்பு அரசியலின் வெளிப்பாடுதான் என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. “திருமண வல்லுறவுக்கு எதிரான தண்டனைச் சட்டத்தை இரண்டு விதமாகப் பிரிக்க முடியும். பதினெட்டு வயதுக்குக் கீழ் இருப்பவர்கள், பதினெட்டு வயதுக்கு மேல் இருப்பவர்கள் என்று பிரிக்கலாம். இந்தியத் தண்டனைச் சட்டம் 375 பிரிவின்படி, ஓர் ஆண் திருமண பந்தத்தில் தன் மனைவியுடன் (பதினைந்து வயதுக்கு மேல் இருந்தால்) கட்டாய உறவில் ஈடுபடுவதைப் பாலியல் குற்றமாகக் கருத முடியாது. அதுவே, மனைவி பதினைந்து வயதுக்குள் இருந்தால் அதைப் பாலியல் குற்றமாகக் கருத முடியும். இதுவே ஒரு சட்டரீதியான முரண்தான். ஏனென்றால், பதினெட்டு வயதுக்குக் கீழ் இருக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்குக் குழந்தைகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் (POCSO Act) மூலம்தான் தண்டனை வழங்க வேண்டும். குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்திலும் (PWDV) Act) கட்டாய உடலுறவுக்குத் தண்டனை இருக்கிறது. ஆனால், இவை சிவில் சட்டங்கள் . திருமண வல்லுறவு என்பது ஒரு குற்றச் செயல். அதைக் குற்றவியல் சட்டத்தில் சேர்க்காமல் இந்திய அரசு தட்டிக்கழிப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குப் பின் கதவு வழியாக அனுமதி வழங்குவது போன்றதுதான்” என்கிறார் அஜிதா.

இந்திய அரசு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக்கொள்ளவே மாட்டோம் (Zero tolerance) என்று உறுதியளித்தது உதட்டளவில்தான் இருக்கிறது. ஒருவேளை, இந்தத் திருமண வல்லுறவுத் தடைச் சட்டத்தைப் பெண்கள் கணவருக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்றால் அதைத் தடுப்பது எப்படி என்றுதான் யோசிக்க வேண்டுமே தவிர, அதற்காகக் குடும்பத்துக்குள் பாலியல் வன்முறையை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

“ஒருவேளை, இந்தத் திருமண வல்லுறவைக் குற்றமாக அறிவித்தால் எங்கே நாடு முழுக்க வழக்குகள் வந்து குவிந்துவிடுமோ என்று அரசு பயப்படுவதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால், அதற்காக ஒரு குற்றத்தைக் குற்றமாக வரையறுக்காமல் இருப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் புகார் அளிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் நாடு முழுக்கவும் எல்லா மாநிலங்களிலும் ‘ஒன் ஸ்டாப் கிரைசிஸ் சென்டர்’ (One Stop Crisis Centre) அமைக்க வேண்டும் என்று ஜூன் 2014-ல் அரசு அறிவித்தது. ஆனால், அது இப்போது அவ்வளவு தீவிரமாகச் செயல்படவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறை எப்படி இருந்தாலும் அதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை” என்கிறார் அஜிதா.

குடும்ப வன்முறையின் தாக்கம்

மதவாதிகள் ஒருபுறம் பெண்ணுடலைப் புனிதம் என்கின்றனர். மறுபுறம் அதைச் சிதைப்பதை நியாயப்படுத்துகின்றனர். கணவனுக்குத் தன் மனைவி மீது எல்லா உரிமைகளும் -பாலியல் வன்முறை செய்யும் ‘உரிமை ' உள்பட - இருக்கிறது என்று நிலைநாட்ட விரும்புகின்றனர். தனிமனித உரிமை பற்றியெல்லாம் திருமணத்துக்குள் பேச முடியாது, பேசவும் கூடாது. ஏனெனில் திருமணம் சொர்க்கத்தில் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது. அதனால் அதன் புனிதம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்னும் பார்வை இன்னமும் நிலவுகிறது.

குடும்ப அமைப்புகள் சிதைந்துவிடக் கூடாது என்று அரசு காட்டும் அக்கறையைப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுப்பதிலும் காட்ட வேண்டும்.

நன்றி - thehindu

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்