/* up Facebook

May 17, 2015

புதியமாதவியின் பெண்வழிபாடு சிறுகதைத்தொகுதி - தினகரன் வேலாயுதம்


இருவாட்சி வெளியிட்ட, புதியமாதவியின் பெண்வழிபாடு சிறுகதைத்தொகுதி வாசித்தேன்.12 சிறுகதைகளைக்கொண்ட இச்சிறுகதைத் தொகுதிக்கு சித்தன் பிரசாத் அணிந்துரை வழங்கியுள்ளார். நடைமுறை சமுகவாழ்வில் பெண்களின் பாத்திரம் நுட்பமாக மறைக்காப்படும் தந்திரங்களின் மீது புதிய மாதவியின் வெளிச்சம் பாய்ச்சல் சுவாரஸ்யமானது.சமுகத்தின் மீதான பற்றை, ஆர்வத்தை, கோபத்தை ஆர்ப்பாட்டமின்றி கதை போகும் போக்கில் சொல்லிவிடும் பக்குவம் அவர் படைப்புக்களோடும் சமுகத்தோடும் கொண்டிருக்கும் ஆழமான பார்வையை காட்டுகிறது. கிராமத்தில் தமது இதயத்தை வைத்துவிட்டு பெருநகர இரைச்சல்களிடையே தம் நிர்ப்பந்த வாழ்க்கையை வாழும் லட்சக்கணக்கான, மக்களின் மன ஓசையை இவரின் கிராமம் சார்ந்த படைப்புக்களில் கேட்கமுடிகிறது.

மரபுகள், நம்பிக்கைகள், புராணங்கள், தொன்மங்கள் என்பவற்றை நடைமுறை வாழ்வோடு வைத்து ஆழமாகவும் நகைச்சுவையாகவும் கேள்விக்குற்படுத்தும் பாணி இவரது படைப்பு வெளியின் விஸ்தீரணத்தை விரிவாக்குகின்றன.அண்மையில் புதியமாதவி அவர்களும் அவரது தோழியரும் பெண்ணிய உரையாடலுக்காக இலங்கை வந்திருந்த போது என் மனைவியினதும் எனதும் அழைப்பை ஏற்று , நாம் ஏற்பாடு செய்திருந்த காலையுணவுபசாரத்தில் [ சு. விசயலட்சுமி, ரஜனி,(இந்தியா) ரஞ்சி (சுவிஸ்), யோகி சந்ரு (மலேசியா) லரீனா அப்துல் ஹக், சந்திரலேக்கா, யாழினி (இலங்கை)] கலந்துகொண்டார்கள். புதிய மாதவியோடு சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது நேர்மையான பேச்சுக்கும் ,சிந்தனைக்கும் அவரது படைப்புக்களுக்குமிருக்கும் நெருக்கம் மிக இறுக்கமானது என்பதை இன்று பெண்வழிபாட்டை வாசித்து முடித்தபோது உணர்ந்தேன்.

மும்பையில் முப்பாட்டனின் பிரவேசமும் இன்றைய தனது வாழ்க்கை முறையையும் சமுக அசைவியக்கத்தின் கூறுகளின் ஒருபகுதியாக நோக்கும் புதியமாதவி குறித்த வாழ்வியல் கோலங்களை சமுக அக்கறையோடும் சுவாரஸ்யத்தோடும் நோக்குகிறார். தான் வாழும் மும்பாய் நகரின் ஒடுக்கப்பட்ட சேரிமக்களோடு சிறந்த தொடர்புகளையும் அம்மக்களின் வாழ்வின் மீது கொண்டுள்ள அனுதாபத்தையும் அக்கறையையும், அவரது பேச்சிலும் அதன் உண்மைத்தன்மையை அவர் அம்மக்களை பற்றி கூறும் போது கண்களில் தெரிக்கும் பிரகாசத்திலும் கண்டு கொள்ளமுடிந்தது.

கதைகள் பற்றி சொல்வோமானால் “அரசியலில் எல்லோரையும் பொத்தாம் பொதுவாக அடித்து விடும் போக்கு இவரது ’தேவபிரசன்ன விஜயம்” கதையில் தெரிகிறது. எல்லோரையும் அடித்துவிட்டு பயணித்துக்கொண்டிருக்கும் புத்திஜீவிகளை நாம் தினந்தோறும் காண்கிறோம். இவர்கள் மத்திய தரவர்க்கமாக மாறிக்கொண்டிருக்கும், முதலாளித்துவ நலன்களை நாடும் ‘படித்தவர்கள்’ ஆவர்.. சமுக செயற்பாட்டாளர்களாக, சமுக அக்கறையுள்ள படைப்பாளர்களாக இருப்பவர்கள் சரியான அரசியலை முன்மொழியவும் தம் படைப்புக்களை பயன்படுத்த வேண்டியது அவர்களின் சமுகப்பொறுப்பாகும். 

பெண்வழிபாடு – பெண்களின் ஏழு பருவங்களையும் அப்பருவத்தின் பாலியல் உணர்வுகளையும் அதன் தன்மைகளையும், பால் நிலைப்பட்ட சமுகப்பிரச்சனைகளையும் இயல்பாக நடமாடும் கதாபாத்திரங்களினூடாக உலவவிட்டுள்ளார். பாலியல் உறவில் பால்சார் பிரச்சனைகளையும் பாலியல் உறவில் பிராணிகளின் அணுகுமுறைகளையும் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கட்டமிட்டு கொடுத்திருப்பது கதை நகர்வோடு வாசகரை வித்தியாசமான உணர்வோடு இணைத்துச்செல்கிறது. தமிழ்ச்சூழலில் விமர்சனத்துக்குள்ளாகக் கூடிய கருப்பொருளை பேசத்துணிந்துள்ள புதிய மாதவி இக்கதையை நகர்த்த செம்மையாகவும் மிக நுட்மாகவும் சில இடங்களில் மிகக் கவனமாகவும் மொழியை கையாண்டுள்ளார். புதிய படைப்பாளிகள் இத்தகைய படைப்புக்களை கொணர்ந்திருந்தால் எக்கச்சக்கமான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். புதியமாதவிக்கு இருக்கும் படைப்பு சார்ந்த அங்கிகாரம் இச்சூழலை வெற்றிகொள்ள உதவியிருக்கும் என நம்புகிறேன்.

பெண்வழிபாடு
எஸ்தரும் கருப்பண்ணசாமியும்
பாட்டி என்ன சொல்லிவிட்டாள்
தசரத புரம்
அம்மாவின் காதலன்
மரகதம் பாட்டி யு.எஸ் விசிட்

என்பன என்னை மிகக் கவர்ந்த கதைகள். இவை பற்றியும் தனித்தனியே எழுத வேண்டும் . நேரம் கருதி மிகச்சுருக்கமான குறிப்புக்களையே தருகிறேன்.

”மரகதம் பாட்டி யு.எஸ் விசிட்ட்’ இல் கடைசி பந்தி வராமல் கதை முடிந்திருந்தால் இன்னும் உணர்வுசார்ந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறதுஎஸ்தரும் கருப்பண்ணசாமியும் கதையில் உணர்வுகளுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் முக்கியமானது. ஏனைய கதைகளில் இதனைச்சற்று குறைவாகவே காணமுடிகிறது. ”தசரதபுரம்” இராமனை யாக மண்டபத்தில் வைத்து குற்றவாளியாக்கும்காட்சி மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுவது.சீரியஸான விசயங்களை நகைச்சுவையோடும் அவற்றின் முக்கியத்துவம் குறையாமலும் வழங்குவதில் புதிய மாதவியின் படைப்பாளுமை மெச்சத்தக்கது. நிறைந்த வேலைப்பளுக்களுக்கிடையில் என் பயண நேரங்களை பயனுடையதாக்கவும் புதிய வாசிப்பனுபவத்தை பெறவும் புதிய மாதவியின் பெண்வழிபாடு உதவியுள்ளது.இவரின் இன்னொரு நூல் பற்றியும் எழுதவேண்டும் அது ’தனியறை’.

வே. தினகரன்
பத்தனை

நன்றி - தினகரன் வேலாயுதம் முகநூல்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்