/* up Facebook

May 15, 2015

ஈழத்து தமிழ் பெண்களுக்கு நடப்பது இனப்படுகொலை!!! - யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு


இலங்கையில் தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்களின் இன்றைய நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் அத்தோடு உலகில் போரினாலும் அடக்குமுறையாலும் பாதிக்கப்படும் பெண்களுடன் கைகோர்க்கவும் யேர்மனி பிராங்க்போர்ட் நகரில் "இலங்கையில் இனப்படுகொலைக்குள்ளாகும் ஈழத்து தமிழ் பெண்கள் " மாநாடு நடைபெற்றது .இம் மாநாட்டில் தாயகத்தில் இருந்து வடமாகாண சபையின் உறுப்பினரும் காணாமல் போனோர் விடையமாக அயராது உழைக்கும் திருமதி அனந்தி சசிதரன் அவர்களும் மற்றும் நோர்வே , பிரான்ஸ் ,சுவிஸ் என பல நாடுகளில் இருந்தும் பெண்கள் உரிமைக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .

திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றுகையில் தற்போது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், பெண்களின் நிலை உடலளவில், பொருளாதார நிலையில், சமூக அளவில் மேலும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது எனவும் அவர்கள் தொடர்ந்த உளவியல் அழுத்தத்திலேயே வாழ்கின்றனர். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேவைக்கு மிக அதிகமான ஆயுதப் படையினரின் இருப்பே ஆகும் எனவும் தெரிவித்தார் .

அத்தோடு போர் நடந்த காலத்திலும் விட ஈழத்து தமிழ் பெண்கள் இன்றைய நாளில் மிகப் பெரும் கொடூரத்தில் வாழ்கின்றனர் எனவும் குறிப்பாக போரினால் கொல்லபட்டவர்களின் மனைவிகள் சிங்கள ராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்
.தமிழ் பெண்கள் மீது நடைபெறும் வன்முறைகள் ஒரு இன அழிப்பின் வடிவமாகவே பார்க்கவேண்டும் என்றும் தெரிவித்தார் .

மாநாட்டில் கலந்துகொண்ட குர்டிஸ்தான் பெண்கள் ,ஆப்ரிக்கா நாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் , மற்றும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஏனைய மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறையை எடுத்துரைத்ததோடு ஈழத்து தமிழ் பெண்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுப்போம் என தமது தோழமையை வெளிக்காட்டினர் .

குர்டிஸ்தான் பெண்கள் தமது விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கை தமிழ் பெண்களோடு ஒப்பிட்டு பார்த்ததோடு தமிழ் பெண்களுக்கு நடக்கும் அதே அடக்குமுறை தங்களுக்கும் நடைபெறுகின்றது என்பதை பதிவுசெய்துகொண்டு , அதற்கு எதிராக நாம் ஒற்றுமையோடு சர்வதேச ரீதியாக போராட வேண்டும் என்றும் தெரிவித்தனர் .

நோர்வே நாட்டில் இருந்து கலந்துகொண்ட முன்னாள் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மை இயக்குனர் மதிப்புக்குரிய Bjorg Spillum அவர்கள் தமிழ் பெண்கள் படும் அவலங்களை தாம் நேரில் சென்று கண்டதாகும் அத்தோடு அவர்கள் சுதந்திரமாக வாழ்வதுக்கு நாம் உழைக்கவேண்டும் எனவும் தனது கருத்தை பதிவுசெய்தார் அத்தோடு நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் தாயகத்தில் தமிழ் பெண்கள் படும் அவலத்தை நிறுத்துவதுக்கு புலம்பெயர் தமிழ் பெண்கள் செய்யும் அரசியற்திட்டங்களை விளக்கினார் .

தாயகத்தில் நடைபெற்ற இறுதிப் போரின் சாட்சியாக கலந்துகொண்ட ஒரு பெண் , தமிழீழ விடுதலைப் போராட்டம் பெண்கள் உரிமையை நிலைநாட்டும் போராட்டமாகவும் அமைந்திருந்தது , அந்தவகையில் தமிழீழ நடைமுறை அரசு இருந்தபோது தமிழ் பெண்கள் கௌரவமாகவும் , ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் பொறுப்புகளை வகித்திருந்தனர் என தெரிவித்தார் . இறுதி போரில் தமிழ் பெண்கள் எண்ணில் அடங்கா துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தனர் என தனது சாட்சியை பதிவுசெய்தார் . சிங்கள ராணுவம் உலகப் போர் விதிமுறைகளை மீறி காட்டுமிராண்டித்தனமாக  நடந்துகொண்ட சம்பவங்கள் மனதை விட்டு அகலாமல் இன்றும் தங்களால் ஜீரணிக்க முடியாத நிலையில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் தான் நடைபிணமாக வாழ்கின்றேன் என்று வேதனையோடு சாட்சியளித்தார் .

மாநாட்டின் இறுதியில் பேச்சாளர்களாக கலந்துகொண்டவர்களால் ஈழத்து தமிழ் பெண்களுக்கு இனப் படுகொலை நடப்பதாகவும் , அத்தோடு அனைத்து நாடுகளின் பெண்கள் அமைப்புகளும் இணைந்து பெண்கள் உரிமைக்காக சர்வதேச ரீதியாக போராட வேண்டும் எனவும் தீர்மானம் எட்டப்பட்டது .யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .
தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்