/* up Facebook

May 31, 2015

42 ஆண்டுகள் உயிருக்கு போராடி இறந்த நர்ஸ்: வார்டு பாய் மீது கொலை வழக்கு பதிவாகுமா?


மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அருணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நர்ஸ்கள். உள்படம்: அருணா படம்: விவேக் பிந்த்ரே

42 ஆண்டுகள் உயிருக்குப் போராடி இறந்த மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக் விவகாரத்தில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய வார்டு பாய் சோகலால் பரத வால்மீகி மீது தற்போது உத்தரப் பிரதேசத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்வது குறித்து சட்டரீதியிலான கருத்துகளை கேட்டறிந்த பிறகு முடிவு செய்யப்படும் என மும்பை போலீஸார் தெரிவித்தனர். கடந்த 1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, மும்பை கிங் எட்வர்டு நினைவு (கே.இ.எம்.) மருத்துவமனையில் அருணாவை கொடூரமாக தாக்கி, நாய் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை வால்மீகி நெரித்ததால், அவர் சுயநினைவு இழக்கும் நிலைக்கு ஆளானார்.

42 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த அருணா, கே.இ.எம். மருத்துவமனை நர்ஸ்களால் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட வால்மீகி தாக்குதல், வழிப்பறி ஆகியவற்றுக்காக மட்டுமே தண்டிக்கப்பட்டார். பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் முறைகேடு வழக்கில் தண்டிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற வால்மீகி 1980-ம் ஆண்டு விடுதலை பெற்றார். அதன் பிறகு அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் வால்மீகி தற்போது உத்தரப்பிரதேசத்தில் இருப்பதாக ‘சகால் டைமஸ்’ என்ற மராத்தி நாளேட்டில் நேற்று செய்தி வெளியானது. இந்த நாளேட்டின் செய்தியாளர் ஒருவர், உ.பி.யின் காசியாபாத் மாவட்டம், பர்ப்பா என்ற கிராமத்தில் வால்மீகியை கடந்த புதன்கிழமை சந்தித்துள்ளார். தற்போது தொழிலாளியாக வேலை பார்க்கும் வால்மீகி, “துயரமிக்க அந்த நாளில் என்ன நடந்தது என்பதை தன்னால் நினைவுகூர முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் “உங்களைப் போன்ற நபர்கள் (பத்திரிகையாளர்கள்) அந்த சம்பவத்தை பாலியல் பலாத்காரம் என்று ஏன் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

வால்மீகி தற்போது உயிருடன் இருப்பதாக தெரிய வந்துள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்வது குறித்து பரிசீலிப்பீர்களா என மும்பை காவல்துறை இணை ஆணையர் தேவன் பார்தியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதில் அளிக்கும்போது, “அருணா தற்போது நிமோனியாவால் இறந்துள்ளார் என்பதால் பழைய வழக்கில் தற்போது புதிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. அவரை கருணைக் கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என மும்பை பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கில், அருணாவை இயற்கை மரணம் அடைய விடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் அருணா நிமோனியாவால் இறந்துள்ளதால், அவரது மரணத்துக்கு நிமோனியாதான் உடனடி காரணமாகத் தெரிகிறது. என்றாலும் சட்டரீதியிலான கருத்துகளை கேட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம்” என்றார்.

நன்றி - திஹிந்து...மேலும்

May 30, 2015

அகாலம் முதல் ஊழிக்காலம் வரை

மூன்று காலங்கள் –  மூன்று பெண்கள் – மூன்று படைப்புகள் – ஒரு பார்வை.

காலையில் வேலைக்குப் போகும் பொழுதும் மாலையில் வரும் பொழுதும் ஆகக்  குறைந்தது ஒரு வழியில் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும். வழமையாக இந்த நேரங்களில் குட்டித் தூக்கம் கொள்வது அல்லது சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பதாக இருக்கும். அல்லது வாசிப்பதற்கு எதாவது ஒரு புத்தகம் வைத்திருப்பேன். பல நேரங்களில் வாசிக்கும் மனநிலை இருக்காது.  சில நூல்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற அவசியத்தால் வாசிக்க முயற்சி செய்வேன். சிலவற்றை அலுப்பாக ஆரம்பித்து பின் மூடி வைக்க முடியாமல் வாசிப்பேன். சிலவற்றை ஆர்வமாகத் தேடி விருப்பத்துடன் வாசிப்பேன். அவ்வாறான மூன்று நூல்கள் தொடர்பான குறிப்பே இது.


முதலாவது நாவல் புஸ்பராணி அவர்கள் எழுதிய அகாலம். இப் படைப்பை போராட்டம் தோற்கடிக்கப்பட்டது எனக் கூறப்பட்ட பின் இலங்கைக்கு முதன் முதலாக 2012ம் ஆண்டு பயணம் செய்யும் வழியில் பிரான்சில் வாங்கினேன். அந்தப் பயணம் முழுவதும் இந்த நூலைத்தான் வாசித்தேன். இரண்டாவது நாவல் தமிழ்க்கவி எழுதிய ஊழிக்காலம். இப் படைப்பை  போர் முடிவுற்றதாக கூறப்பட்ட பின் இலங்கைக்கு 2013ம் ஆண்டு இரண்டாவது தடவையாக பயணம் செய்தபோது இந்தியாவில் வாங்கி அப் பயணத்தின்போது வாசித்தேன். இவ்வாறு பயணம் செய்தபோது இந்த இரு நூல்களையும் வாசித்ததால் இவை பற்றி அப்பொழுது உடனடியாக எழுத முடியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என எப்பொழுதும் யோசிப்பதுண்டு. இனிமேல் இவ்வாறு பயணம் செய்யும் பொழுது இப்படியான நூல்களை வாசிப்பதில்லை என முடிவெடுத்திருக்கின்றேன். அல்லது அவ்வாறு வாசித்தால் நேரம் ஒதிக்கி அது தொடர்பான குறிப்பொன்றை உடனே எழுதுவது எனத் தீர்மானித்துள்ளேன். ஏனெனில் இவ்வாறான படைப்புகளை வாசித்தவுடன் உருவாகும் மன எண்ணங்களும் உள உணர்வுகளும் முக்கியமானவை விசாலமானவை. காலம் கடந்து எழுதும் பொழுது இந்த உணர்வுகள் விடுபட்டுவிடுகின்றன. மூன்றவாது நூல் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய உம்மத். இந்த நாவலை இலங்கைக்கு மூன்றாவது பயணத்தை 2016ம் ஆண்டு மேற்கொள்வதற்காக பணத்தைச் சேகரிக்கும் வேலைக்கு செல்கின்ற பயணத்தின் போது வாசித்தேன். இதனை வாசிப்பதற்கு ஊக்கியாக இருந்தது முன்னால் சரிநிகர் ஆசிரியர் விக்கினேஸ்வரன் அவர்களின் முகநூல் குறிப்பொன்று. அதை வாசித்துவிட்டு அந்த வார இறுதியில் நடைபெற்ற காலம் செல்வம் அவர்களின் “வாழும் தமிழ்” நிகழ்வில் இந்த நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.

புஸ்பராணிபுஸ்பராணி அவர்கள் எழுதிய அகாலம் ஒரு நாவல் அல்ல. அவர் குறிப்பிடவாறு இது ஒரு ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் அதாவது 1970களின் ஆரம்பத்தில் பங்குபற்றிய பெண் அரசியல் போராளியின் அனுபவங்களை மையமாகக் கொண்டது. இவர் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்தவர். ஈழத்து தமிழ் சமூகத்தில் சாதியடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் ஒரு பெண்ணாகவும் ஒடுக்குமுறைகளையும் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தையும் அனுபவித்தவர். இருப்பினும் இவற்றை எல்லாம் எதிர்கொண்டு ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பத்தில் பங்குபற்றிய முதல் பெண் அரசியல் போராளிகளில் சிலரில் ஒருவர். இந் நூலின் வெளியீட்டு நிகழ்வுகள் பரிசிலும் இலன்டனிலும் நடைபெற்றபோது பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்வில் தான் சிறையிலிருந்தபோது தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட காவற்துறையைச் சேர்ந்த ஒருவரை கௌரவித்தமை நெகிழ்சியாக இருந்தது. மேலும் சம காலத்தில் அவருடன் செயற்பட்ட பலர் இந்த இரு நிகழ்விலும் உரையாற்றினார்கள். ஈழவிடுதலைப் போராட்டங்களின் ஆரம்பம் தொடர்பாக இதுவரை ஆண்களின் பார்வையில் ஆண்களால் எழுதப்பட்ட குறிப்புகளே அதிகமாக காணப்படுகின்றன. அந்தவகையில் ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில் பங்குபற்றிய ஒரு பெண் செயற்பாட்டாரின் நினைவுக் குறிப்புகள் என்றளவில் இந்த நூல் முக்கியமானது.

புஸ்பராணி அவர்கள் (பொதுவெளியிலும் சிறையிலும் இருந்தபோது) தனது பால், சாதிய, தேசிய அடையாளங்களுக்காக பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளானவர். அதாவது ஒரு பெண்ணாக தமிழ் சிங்கள ஆண்களாலும், ஒடுக்கப்பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணாக ஆதிக்க சாதியினராலும், ஈழப் போராட்டத்தில் பங்குபற்றிய ஒரு பெண்ணாக அரசாங்க காவற்துறையைச் சேர்ந்த (தமிழ் சிங்கள) ஆண்களாலும் பல பிரச்சனைகளுக்கு முகங் கொடுத்தார். இவற்றை இந்த நூலில் பல சந்தர்ப்பங்களில் விபரிக்கின்றார். சமூக பொதுக் கலாசாரங்கள் மட்டுமல்ல சிறைக் கலாசாரங்கள் கூட ஆண்தன்மையானது என்பதை தமது நாளாந்த வாழ்வின் அனுபவங்களினுடாக குறிப்பிடுகின்றார். சிறையில் இருந்தபோது பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதாந்த இரத்தப்பெருக்கு காலங்களில் கூட எந்தவிதமான அக்கறையுமின்றிப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்கின்றார்.

அகாலம் நுர்ல்இந் நூலில் தம்முடன் பணியாற்றிய அர்ப்பணிப்புள்ள தோழர்களின் பங்களிப்புகளை மதிப்புடன் புகழ்வதுடன் சில தோழர்களின் பொறுப்பற்றதனங்களையும் சுயநலப் போக்குகளையும் விமர்சிக்கின்றார். மேலும் பதவிகளிலிருந்த ஆதிக்க சாதி உயர் வர்க்க தமிழ்த் தேசியத் தலைமைகள் எவ்வாறு இளைஞர்களின் போராட்டங்களை தமக்கு சாதகமாக்கினர் எனவும் தம்மை முதன்மைப்படுத்துவதில் அக்கறையாக இருந்ததையும் குறிப்பிடுகின்றார். அதேவேளை போராட்டத்தில் பங்குபற்றிய பல தோழர்களின் பல்வேறு முகங்கள் வேவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டதையும் தனது அனுபவத்தினுடாக முன்வைக்கின்றார். இந்த அனுபவங்களின் விளைவாக அரசியல் செயற்பாடுகளில் இருந்து தன்னை ஆரம்பத்திலையே விடுவித்துக் கொண்டார்.

புஸ்பராணி 1ஆரம்பகாலங்களில் பலர் பல அர்ப்பணிப்புகளைக்களை தன்னலமின்றி ஒரே பொது நோக்கமான ஈழ மக்களின் விடுதலைக்காகச் செய்துள்ளனர். இருப்பினும் தொலைநோக்கற்ற திட்டமிடல்களும் அல்லது திட்டங்களில்லாத போராட்ட வழிமுறைகளும் சமரசங்களும் எவ்வாறு ஈழ விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கான வித்துக்களை ஆரம்பத்திலையே விதைத்தன என்பதற்கான சாட்சி இந்த நூல். ஆகவேதான் இத் தோழர்களின் பலரின் ஆரம்ப காலங்கள் அர்ப்பணிப்புகள் நிறைந்ததாக இருந்தபோதும் பிற்காலங்களில் ஈழ விடுதலைக்கும் ஈழ மக்களுக்கும் எதிராக செயற்பட்டது ஆச்சரியமானதல்ல. அந்தவகையில் இந்த நூல் ஒரு (சுய)விமர்சனமாகவும் இருக்கின்றது. மனிதர்கள் நல்லவர்களாக இருப்பது மட்டும் சமூக தேசிய விடுதலையை முன்னெடுப்பதற்கு போதுமானதல்ல. அதற்கு மேலும் தெளிவான நீண்டகால அரசியல் பார்வையைக் கொண்டிருப்பதும் அவசியமானது என்பதை இந்த நூலின் அடிப்படையில் உறுதிபடக் கூறலாம்.

இரண்டாவது படைப்பு தமிழ்க்கவி எழுதிய ஊழிக்காலம். தமிழ்க்கவி வன்னியைச் சேர்ந்தவர். 1980களின் இறுதியிலிருந்து போர்க் காலத்தில் வாழ்ந்து ஆயுதப் போராட்டங்களில் பங்கு பற்றிப் போராடியவர். இது மட்டுமல்ல, தனது குழந்தைகளையும் போராட்டதில் போராளிகளாக இழந்தவர். மேலும் இறுதிப் போர் வரை வாழ்ந்து, முள்ளிவாய்கால் வரை பயணம் செய்து சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர். தனது அனுபவங்களை ஒரு பெண் போராளியாக மட்டுமல்ல மகளாக, துணைவியாக, தாயாக, மாமியாக, பேத்தியாக, பத்திரிகையாளராக, விமர்சகராக எனத் தனது பல பாத்திரங்களினுடாகவும் ஆற்றல்களினுடாகவும் வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு பல அனுபவங்களைத் தொகுத்து ஈழத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான ஒரு கால கட்டத்தை ஒரு சாட்சியாக இருந்து பதிவு செய்துள்ளார்.

முதன் முதலாக தமிழ்கவியை புலிகளின் ஒளி ஒலி வீடியோவில் 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் பார்த்தேன். ஈழ விடுதலைப் பிரச்சாரத்திற்காக பேசிய அவரது தமிழ் இனவாதத்தையும் சிங்கள எதிர்ப்புணர்வையும் சகிக்க முடியாமல் தொடர்ந்து பார்ப்பதை நிறுத்தினேன். அதன் பிறகு அவரது நிகழ்வுகளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். இவ்வாறு நான் அவரைப் புறக்கணித்தபோதும் அவரை அப்பொழுது நிறையப் பேர் புகழ்ந்தனர். விரும்பினர். இதற்கு ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாக இவர்கள் அனைவரதும் அலைவரிசை ஒன்றாக இருந்தது காரணமாக இருக்கலாம்.

காலம் மாறியது. 2009ம் ஆண்டின் பின் முகநூலினுடாக நாம் நண்பரானோம். மரணம் இழப்பு மலர்தல் நூல் தொடர்பாக உரையாற்ற நண்பர் ஒருவர் அவரை முன்மொழிந்தார். அப்பொழுது மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்வும் மற்றும் அதைப் பார்த்த பொழுது அவருடன் உடன்படாமல் இருந்ததும் நினைவுக்கு வந்தன. அதேவேளை அவருடைய இன்றைய அரசியல் நிலைப்பாடு தெரியாமல் இருந்தது. இருப்பினும் அவர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணத்தை எதிர்கொண்டு அனுபவித்து வந்தவர் என்ற காரணத்திற்காக உடன்பட்டேன். அவ்வாறான ஒருவர் தான் இவ்வாறான ஒரு நூலைப் புரிந்து உரையாற்றக்கூடியவர் என உணர்ந்தேன். நூல்  வெளியீட்டு நிகழ்வில் தான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். நல்ல அழகான தமிழில் சிறப்பாக உரையாற்றினார். அப்பொழுதான் அவரின் தமிழ் புலமையை மட்டுமல்ல அவர் தனிப்பட ஒரு பெண்ணாக எதிர்நோக்கிய பல பிரச்சனைகளை அறிந்தேன். இதன்பின்பு இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற்ற புத்தகச் சந்தைக்குச் சென்றபோது அவரது நூலை வாங்கினேன்.  வாசிப்பதற்கு மிகவும் கஸ்டமான நூல் இது.  மனவுறுதி அதிகம் வேண்டும். ஏனெனில் வாசிக்கும் பொழுது பலவிதமான உணர்ச்சிகளை எமக்குள் கிண்டிவிடக்கூடியது. இறுதிப் போரில் அதாவது தமிழின அழிப்பின்போது மரணங்களையும் இழப்புகளையும் கொலைகளையும் பசியையும் பட்டினியையும் மற்றும் முரண்பாடுகளையும் எதிர்கொண்ட அனுபவங்களின் பகிர்வு இப் படைப்பு. உண்மையின் தரிசனங்கள் இவை. இந் நூல் தமிழின அழிப்பு நடைபெற்றதற்கான எழுத்துச் சாட்சியம் எனலாம்.

சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் எவ்வாறு ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்தார்கள் என்பதை இந் நூலில் விரிவாக விபரிக்கின்றார். அதேவேளை ஒரு புறம் போராளிகளின் ஒரு பிரிவினர் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதையும் விமர்சிக்கின்றார். மறுபுறம் போராளிகளின் இன்னுமொரு பிரிவினர் மக்களுக்காக எவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்பதை மதிப்புடன் புகழ்கின்றார். இந்த அர்ப்பணிப்பு இவர்களது உயிரையும் காவு கொண்டது என்பதைப் பதிவு செய்து அவர்களுக்கு அஞ்சலி செய்கின்றார். மக்கள் பல மரணங்களை கடந்து தம் வாழ்வை வாழ பாதுகாப்புத் தேடி ஓடினர். தனது தாய் தந்தை மட்டுமல்ல துணைவர், துணைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரையும் காப்பாற்ற முடியாதபோது வலியுடன் அதைக் கடந்து பயணித்தனர். இப் பயணம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையைப் படிப்படியாக சிதைந்தது. விடுதலை சுதந்திரம் தொடர்பான கனவுகள் கலைந்தன. இப்படி எல்லாவற்றையும் கூறுகின்ற இந்த நூல் தலைவருக்குத் தெரியாமல்தான் மக்களுக்கு எதிரான விடயங்கள் பல நடைபெறுகின்றன எனத் தலைவரைக் காப்பாற்றுகின்றது. ஆனால் உப தலைவர்களை விமர்சிக்கின்றது. இது ஒரு ஆய்வுக்கு உரிய விடயம். இது தொடர்பாக ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வி: யார் பொறுப்பு என்ற எனது கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

மூன்றவாது ஸர்மிளா ஸெய்யித் எழுதிய உம்மத் (சமூகம் அல்லது மக்கள் கூட்டம்) என்ற நாவல். ஸர்மிளா ஸெய்யித் அவர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். எழுத்தாளர். விமர்சகர். கவிஞர். செயற்பாட்டாளர். இவ்வாறு பல தளங்களில் செயற்படுகின்றவர். இவர் பாலியல் தொழிலாளர்களின் நன்மை கருதி இத் தொழில் சட்டரீதியானது ஆக்கப்பட வேண்டும் என நேர்காணல் வழங்கியமைக்காக கொலை மிரட்டல்கள் உட்பட பல பிரச்சனைகளை தனது சமூகத்திற்குள் இன்றுவரை எதிர்கொள்கின்றார். சமூக சமய அடிப்படைவாதத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகத் துணிவுடன் முகம் கொடுப்பதுடன் அதன் தவறுகளை வெளிப்படுத்தி உரையாடல்களை ஆரம்பிக்கின்றார். இந்த அனுபவங்களின் அடிப்படையில் போரின் பின்பான காலத்தை வலியும் சோகமும் மட்டுமல்ல வாழ்வின் மீதான நம்பிக்கையும் நிறைந்த அழகிய ஒரு புனைவாக படைத்துள்ளார். மேற்குறிப்பிட்ட இரு நூல்களையும் விட இது ஒரு நாவலாக பரிணமிக்கின்றது.

உம்மத் நாவல் மூன்று பெண்களைப் பிரதானமாகக் கொண்டது.  இந்த மூவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு பெண் போராட்டத்தில் தனது காலை இழந்து போர் முடிவடைந்ததாக கூறியபின் சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வின் பின் தனது குடும்பத்திடம் சென்ற ஒரு முன்னால் போராளி. இன்னுமொருவர் போரின் பின் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் காலிழந்த முன்னால் பெண் போராளி. மூன்றாவது பெண் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் பெண்களுக்கு தனது சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் எதிர்ப்புகளையும் எதிர்த்துக் கொண்டு வாழும் முஸ்லிம் சமூக சேவகி. இந்த நாவல் ஒரு முஸ்லிம் பெண்(ணின்) (பாத்திரத்தின்) பார்வையிலும் ஆசிரியரின் அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டிருக்கின்றது.

உம்மத் ஒரு பெண் குடும்ப சூழ்நிலைகளால், வறுமையினால், அன்பின்மையால் மரணத்தைத் தேடி இயக்கத்திற்கு செல்கின்றார். இவர் இறுதி யுத்தம் வரை வன்னியில் நின்றது மட்டுமல்ல போராட்டத்தின் போது தனது காலையும் இழந்த ஒரு போராளி. போரின் பின்பு புனர்வாழ்வு முடிந்து மீண்டும் தனது குடும்பத்தாருடன் வாழ்வதற்காக தனது ஊருக்குச் செல்கின்றார் இவர். அங்கு இவர் எதிர்நோக்கும் பிரச்சனைகளே இந்த நாவலின் பிரதான கதைகளில் ஒன்றாக இருக்கின்றது. முன்னால் (குறிப்பாக பெண்) போராளிகள் ஒவ்வொருவரும் தற்கொலையை ஏன் நாடுகின்றனர் என்பதற்கு இந்த நாவல் இப் பாத்திரத்தினுடாக விடை தருகின்றது. இதற்காகவாவது இந்த நாவலை ஈழத் தமிழ் சமூகத்தினரும் முன்னால் போராளிகளில் அக்கறை உள்ளவர்களும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் வாசிக்க வேண்டும். இரண்டாவது பெண் ஒரளவு படித்தவர். இவரும் முன்னால் போராளி. இவர் போராட்டத்திற்கு சென்றதற்குப் பல சமூக அரசியல் காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. போரின் பின் தன் சொந்த முயற்சியால் வாழ்வதற்கு முயற்சி செய்கின்ற ஒருவர். நம்பிக்கை தருகின்ற ஒருவர். மேலும் தான் செயற்பட்ட இயக்கத்தின் செயற்பாடுகள் மீது விமர்சனங்கள் கொண்ட ஒரு போராளி.

உம்மத்சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறையையும் இன அழிப்பையும் தெளிவாக குறிப்பிடுகின்றது இந்த நூல். ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்துகின்றது.  இதற்கான அவசியத்தை எவ்விதமான சமரசமுமின்றி உறுதியாக முன்வைக்கின்றது. இந்த அடிப்படைகளில் போராளிகள் போராடுவதற்கு ஏன் சென்றார்கள்? யார் அதிகமாக சென்றார்கள்? எவ்வாறான வர்க்க சமூக சாதியப் பின்னணியிலிருந்து பெரும்பாலான போராளிகள் போராட சென்றார்கள்? என்பதை நன்றாகவே விளக்குகின்றது. அதேவேளை ஒரு புறம் இயக்கத்தின் நேர்மறையான அம்சங்களையும் மாற்றங்களையும் குறித்துச் செல்கின்றது.  குறிப்பாக அரசியல் கற்பித்தல் அதில் காட்டப்படும் அக்கறை போராட்டத்தின் மீதான உறுதி என்பவற்றைக் குறிப்பிடலாம். மறுபுறம் இயக்கத்தின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கின்றது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் சிறுவர்களைப் பலவந்தமாக பிடித்தது என்பவற்றைக் குறிப்பிடலாம். மேலும் அரசியலைக் கைவிட்டு ஆயுதப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை வைத்தது எனப் பல விமர்சனங்களையும் முன்வைக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறிப்பாக முன்னால் (பெண்) போராளிகளின் அவல வாழ்வை மனதில் உறையும் படி பதிவிடுகின்றது.  சில அம்மாக்கள் இப்படியும் இருப்பார்களா என்ற கேள்வியை பல தடவைகள் கேட்டிருக்கின்றேன். இந்த அம்மாக்கள் சமூகத்திறகுப் பயந்தும் தமது வாழ்வில் அக்கறை கொண்டும் எவ்வாறு இரட்டை வாழ்வை வாழ்கின்றார்கள் என்பதை அழகாக ஆசிரியர் விபரித்துள்ளார். இத் தாய்மார் பெண்களாக இருந்தபோதும் தெரிந்தோ தெரியாமலோ  பெண்களுக்கு அதுவும் தம் மகள்களுக்கு எதிரான தடை கற்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கும் இந்த ஆணாதிக்க சமூகமே பொறுப்பாகும். தமது ஆணாதிக்க சிந்தனையை ஊட்டி வளர்ப்பதற்கு பெண்களையே பயன்படுத்துவது இந்த சமூகத்தின் சிறந்த தந்திரோபாயமாகும். பெண்களும் இதை அறியாமல் இருப்பது ஒரு தூர்ப்பாக்கியமாகும். ஒரு குழந்தை அதுவும் ஒரு பெண் குழுந்தையாக இருந்துவிட்டால் வளரும் பொழுது ஒரு தாயின் அல்லது பெற்றோரின் அரவனைப்பு எந்தளவு முக்கியமானது என்பதை நாம் உணரச் செய்கின்றார் ஆசிரியர்.

ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் இவ்வளவு தெளிவாக ஈழப் போராட்டம் தொடர்பாக எழுதுவதை தமிழர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். சில அடிப்படைவாத முஸ்லிம்களின் தமிழர் விரோதப் போக்கினால் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற குறுந் தேசியவாத தமிழர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

sharmilaஇந்த நாவலில் வருகின்ற மூன்றாவது பெண் ஒரு முஸ்லிம். அவரே இந்த நாவலின் கதை சொல்லியாகவும் இருக்கின்றார். ஆகவே அப் பாத்திரம் நூல் ஆசிரியராகவும் அவரது சொந்த அனுபவமாகவும் இருப்பதுபோலத் தெரிகின்றது. இந்தப் பெண் அல்லா மீது நம்பிக்கை கொண்டவர். குரானை மதிக்கின்றவர். தொழுகைக்கான நேரங்களைத் தவறவிடுவதில்லை. ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு இதுவே போதும் என்கின்றார். ஆகவே ஒரு முஸ்லிம் பெண்ணாகவே தன்னை அவர் உணர்கின்றார். அவ்வாறே வாழ்கின்றார். ஆனால் சுதந்திரமான பெண்ணாக இருக்க விரும்புகின்றார். இதனை சமய அடிப்படைவாத சக்திகள் விரும்பவில்லை. ஆகவே தாம் விரும்பியவாறு வாழ்வதற்கு அவரை நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு எதிராகப் போராடுகின்றார். தனது மதத்தின் பெயரால் ஆதிக்கம் செய்கின்ற சிலரின் அடிப்படைவாதத்திற்கும் தனது சமூகத்தின் ஆணாதிக்க கருத்தியலுக்கும் எதிராக இந்தப் பெண் உறுதியாகப் போராடுகின்றார். மேலும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடிப்படைவாத சிந்தனையை எவ்வாறு ஈழத்து முஸ்லிம் சமூகத்திற்குள் திணிக்கின்றார்கள் என்பதையும் இதனால் யாருக்கு இலாபம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றார்.

முஸ்லிம் சமூகத்திற்குள் ஆண் பெண் உறவுகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை அதிகார அடுக்குகளை மிக அழகாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளார். பெண்களின் தெரிவுகள், விருப்பங்கள், உரிமைகள் என்ன என்பதை சிறிய உரையாடல்கள் மூலமாக அழகாகப் புரியவைக்கின்றார். இப் பெண் தனது சுதந்திரத்தையும் உரிமையையும் தடுக்கும் வழிகளையும் கட்டுப்பாடுகளையும் யார் கூறினாலும் அதை எதிர்க்கின்றாள். தனது மதத்தைப் போல பிற மதங்களையும் மதிக்கின்றாள். இம் மதம் சார்ந்த மனிதர்களுடன் உறவாடுகின்றாள். மேலும் தன்னைப் போன்ற பெண்களுக்கும், தமது சொந்தக் காலில் நிற்க முயற்சிக்கின்ற பெண்களுக்கும் குறிப்பாக முன்னால் போராளிகளுக்கும் தோல் கொடுத்து ஊக்குவிக்கின்ற ஒருவராக இருக்கின்றார். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதனால் எந்தவகையிலும் தான் ஒரு முஸ்லிம் இல்லாதவளாக இருக்க முடியாது என வாதிடுகின்றவர். ஆகவே தனது செயற்பாடுகளைத் தடுப்பவர்களை எதிர்ப்பவர்களை எதிர்க்கின்றாள். அவர்களுக்காக அவள் பயப்பிடவில்லை. துணிவாக தனித்து நிற்கின்றாள். இவளுடைய வாழ்வுடன் ஒப்பிடும் பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற பெரும் கேள்வி என் முன் எழுந்தது.

ஒரு இலக்கியப் படைப்பின் நோக்கம் எவ்வாறு இருக்கலாம் என்பதற்கு இந்த நூல் நல்ல உதாரணமாகும். சுதந்திரமாக வாழ விரும்புகின்ற ஒவ்வொரு முஸ்லிம் பெண்களும் வாசிக்க வேண்டிய நூல் இது. பெண்களை குறிப்பாக முஸ்லிம் பெண்களைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்புகின்ற (முஸ்லிம்) ஆண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டி நூல் இது. 30 வருடங்களுக்கு முதல் வாசித்த ரசிய நாவல்கள் என்னில் ஏற்படுத்திய பாதிப்பைபோல இந்த நூலும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிகரமான முடிவாக இருந்தாலும் நான் வாசித்த நாவல்களுக்குள் அன்றைய இரசிய படைப்பாளர்களின் தரத்திற்கு தமிழிலும் ஒரு நாவல் வந்துள்ளதா என்றால் இதனைப் பெருமையாக குறிப்படலாம்.

இந்த மூன்று நூல்களையும் வாசிக்கும் பொழுது பல இடங்களில் அழாமல் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. அந்தளவிற்கு வாழ்வின் துன்பங்களை, கஸ்டங்களை, வறுமையை, பசியை, பட்டினியை, ஏழ்மையை விபரிக்கின்றன. மேலும் மரணத்தைவிட வாழ்வின் முக்கியத்துவத்தையும் அதன் மேன்மையையும் இந்த நூல்கள் கூறுகின்றன. இந்த நூல்கள் தொடர்பான விமர்சனங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு எழுதாமல் தவிரக்கின்றேன். இதற்கு முக்கிய காரணம் இப் படைப்புகள் சமூகத்தில் பல வகைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பாக பெண்களின் அவலங்களை மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் தெளிவாகவும் வெளிப்படுதுவது மட்டுமல்ல அவர்களின் குரலாகவும் வெளிவருகின்றது. அவர்களைப் பிரநிதித்துப்படுத்துகின்றது. மேலும் ஒடுக்குமுறையை சந்தித்த பெண்களாலையே இவை படைக்கப்பட்டிருக்கின்றமை அதன் முக்கியத்துவதை மேலும் அதிகரிக்கின்றது. அதற்கு மரியாதை செய்து இந்த நூல்களுக்கான விமர்சனங்களைத் தனிப்பட படைப்பாளர்களுக்கு மட்டுமே அனுப்ப உத்தேசித்துள்ளேன். அவர்கள் விரும்பினால் மட்டும் பொதுவில் பகிர்வேன். இந்த நூலின் பாத்திரங்களை முன்னால் போராளிகள் எனக் கூறுவது தவறு. மாறாக அவர்கள் இப்பொழுதும் போராளிகளே. ஏனெனில் இன்று அவர்கள் வேறு வேறு தளங்களில் தம் வாழ்வை நிலைநிறுத்துவதற்காகப் தமது சமூகத்திற்கும் ஆண்களுக்கும் அரசபடைகளுக்கும் எதிராகப் போராடுகின்ற போராளிகள். அந்தவகையில் இப் படைப்புகளைப் படைத்தவர்களும் சமூகப் போராளிகளே.

அகாலம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் பங்கு பற்றியவர்களின் அர்ப்பணிப்புகளை குறிப்பிட்டாலும் குழறுபடிகளையும் கூறுகின்றது. இந்த நூலை இதன் ஆசிரியர் அரசியலிலிருந்து விலகிய காலத்தில் எழுதியிருந்தால் ஊழிக்காலம் மற்றும் உம்மத் போன்ற நாவல்கள் சிலவேளை வெளிவந்திருக்காது எனலாம். அல்லது வேறு வகையான நாவல்களை நாம் பெற்றிருக்கலாம். ஊழிக்காலம் போராட்டத்தினதும் இன அழிப்பின் உச்சத்திலும் இயக்கத்திற்குள் நடைபெற்ற அக முரண்பாடுகளையும் கூறுகின்றது. எவ்வாறு இயக்கம் மக்களுக்கு எதிராக செயற்பட்டது என்பதை விளக்குகின்றது. உம்மத் ஒரு காலத்தில் சமூகம் போற்றிப் புகழ்ந்த போராளிகளை இப்பொழுது எவ்வாறு இழிவாக நடந்துவதுடன் அவமானப்படுத்துகின்றது என்பதைப் பதிவு செய்கின்றது. மேலும் பெண்கள் எவ்வாறு சமூகத்தினால் நடாத்தப்படுகின்றர் என்பதையும் கூறுகின்றது.

இந்த நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். அகாலம் கருப்புப்பிரதிகள். ஊழிக்காலம் தமிழினி. உம்மத் காலச்சுவடு.

இந்த நூல்களை வாசித்போது
ஒரு தமிழனாக குற்றவுணர்வுக்கும் உள்ளானேன்.
ஒரு ஆணாக குற்றவுணர்வுக்கு உள்ளானது மட்டுமல்ல ஒரு ஆணாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகின்றேன்.
ஒரு மனிதனாக எனது இயலாமையை நினைத்து வேதனை கொள்கின்றேன். என் மீதும் சமூகத்தின் மீதும் கோவம் கொள்கின்றேன்.

என்னையும் இந்த சமூகத்தையும் மாற்றுவதற்கான வழிகளைத் தேடுகின்றேன். ஒவ்வொருவரும் சகல உரிமைகளுடனும் சம வாய்ப்புகளுடனும் தாம் விரும்பும் அடையாளங்களுடனும் சுதந்திரமாக எந்த அடக்குமுறைகளின்றி வாழ்வதற்கான வழிகளைத் தேடுகின்றேன். தேடுவதற்கு தூண்டப்படுகின்றேன்.novels

பி.கு: 1. இந்த மூன்று நூல்களும் ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் விடுதலையிலும் அக்கறை உள்ள அனைவரும் வாசிக்க வேண்டியது என்றால் மிகையான கூற்றல்ல. இந்த நூல்களின் கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தொடர்பான சமூக அரசியல் ஆய்வு ஒன்ற செய்வதற்கான பெரும் வெளி ஒன்றை இதன் ஆசிரியர்கள் திறந்து விட்டுள்ளனர்.

இந்த மூன்று நூல்களையும் மற்றும் முன்னால் ஆயுதப் போராளிப் பெண்கள் எழுதிய படைப்புகளையும் ஒன்றாக இணைத்து ஒரு கலந்துரையாடலை முழுநாளும் ஒழுங்கு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். அகாலம் முதல் ஊழிக்காலம் வரை – உம்மத் என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யலாம். இந்த நிகழ்வை ரொன்டோவில் இருக்கின்ற தமிழ் அமைப்புகள் ஒன்றினைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக செய்தோமானால் பயனுள்ளதாக இருப்பதுடன் சிறந்த ஒரு நிகழ்வாகவும் ஒழுங்கு செய்யலாம்.

இது தொடர்பாக ஒரு முறை பெண்கள் நடாத்திய நூல் வெளியீட்டில் கருத்துரைத்தபோது குறிப்பிட்டேன். அப்பொழுது ஒரு நண்பர் தாம் இதில் ஒரு நாவலை  அறிமுகம் செய்ய இருப்பதாக கூறினார். மிக அண்மையிலும் இன்னுமொரு நண்பர் தாமும் ஒரு நாவலை அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பட்டார். எனது விருப்பம் புஸ்பராணி, தமிழ்க்கவி, சர்மிளா செயித், மற்றும் வெற்றிச் செல்வி ஆகியோரை அழைத்து அவர்களது படைப்புகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் முழு நாள் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்கு செய்வதே பயனுள்ளதாகும். இதனை கூட்டுச் செயற்பாடாக செய்வதற்காக சகல அமைப்புகளுக்கும் இதனுடாக அழைப்பு விடுக்கின்றேன்.

நன்றி-மீராபாரதி- பிரக்ஞை...மேலும்

May 29, 2015

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி


பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் மட்டும் முழுமையில்லை. ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்து எஞ்சிய மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் சிங்கள-பவுத்த பேரினவாதம், மியான்மாரில் ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் நடத்தும் பவுத்த மதவாதம் போன்ற சமூக எதார்த்தங்ககள் இன்றி பவுத்த மதம் இல்லை.

ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ரொகிங்கியா மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ரொகிங்கியா இன மக்கள் மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை மியான்மரின் பூர்வகுடிகள் என்று கருதும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியான்மருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர். 1950-க்கு முன்புள்ள எந்த பர்மீய ஆவணத்திலும் ரொகிங்கியா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்று கூறி இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாக பாவித்து அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து வருகிறது மியான்மர் அரசாங்கம்.

1948-ல்  ஆங்கிலேயர்கள்  மியான்மரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு ரொகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ரொகிங்கியா மக்கள், ராணுவ சர்வாதிகார கும்பலால் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 1982-ம் வருடம் புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு ரொகிங்கியாக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான ஆவணங்கள் எதுவும் பெற முடியாமல் போனது. ஒரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. தங்கள் பகுதியை விட்டு அவர்கள் இதர பகுதிகளுக்கு செல்ல முடியாது.

உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில் ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி இந்து மதவெறியர்கள் பின்னிருந்து எப்படி ஒரு பெரும் வன்முறை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டதோ, அதே போன்றதொரு சம்பவம் 2012 மே மாதம் ரொகிங்கியா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது. சில நாட்கள் கழித்து ரொகிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர் பவுத்த மத வெறியர்கள்.

                                 ரொகிங்கியா அகதிகள்

பவுத்த வெறியர்களுக்கு பிரச்சினையை முடிக்க மனமில்லை. அதே மாதம் ரொகிங்கியா மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன. மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்கிறார்கள். சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ். மக்கள் தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினார்கள்.

அதே வருடம் அக்டோபர் மாதத்தில் திரும்பவும் இரண்டாவது அலையாக ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த முறை ரொங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியாவுக்கு தப்பினார்கள். வழியில் படகு கவிழ்ந்து பலர் மாண்டார்கள். 1.45 லட்சம் ரொகிங்கியா முஸ்லிம்கள் மியான்மருக்கு உட்பட்ட பகுதிகளிலே சிதறி ஓடி பதுங்கி வாழ்கின்றனர். தாய்லாந்து. பங்களாதேஷ், மலேசியாவுக்கு ஓடியவர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்ற ‘ஜனநாயகத்தின் தேவதை’ ஆங் சான் சூ கீ ரொகிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 20 வருட சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்த பின்னர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் ரொகிங்கியாக்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பவுத்த இனவெறியர்களையும், வன்முறைகளில் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும் ரொகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்தார். பவுத்த இனவாதத்தை உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக’ தெரிவித்தார். இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

“ரொகிங்கியா இனப்படுகொலையை நிறுத்து”
இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த வன்முறையில் நாற்பது ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து 8,900 ரொகிங்கியாக்கள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடியிருக்கும் ரொகிங்கியாக்களின் எண்ணிக்கை 15,000 வரை இருக்குமென்பது சமூக ஆர்வலர்களின் கணக்கு. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் குடிபுகும் மக்களை கடுமையாக எச்சரித்து தனது தேர்தல் பரப்புரைகளின் போது அசாமிலும், மேற்குவங்கத்திலும் மோடி பேசியது நினைவிருக்கலாம். அசாமில் மோடி உரையாற்றிவிட்டு வந்த சில நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. எனவே மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வரும் ரொகிங்கியாக்கள் மீது புதிய அரசின் பார்வை எப்படி இருக்கும் என்ற நினைப்பே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ரொகிங்கியா மக்களுக்கு கொடுமைகள் 2012-ம் வருடத்திலிருந்து மட்டும் இழைக்கப்படவில்லை. இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள். ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான வெற்றியை கண்டுள்ளது பவுத்த பெரும்பான்மை சமூகம்.  அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர், பவுத்த பிக்குகள்.

மதவெறியால் வேட்டையாடப்படும் ரொகிங்கியா மக்கள்
இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த வன்முறையில் நாற்பது ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து 8,900 ரொகிங்கியாக்கள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடியிருக்கும் ரொகிங்கியாக்களின் எண்ணிக்கை 15,000 வரை இருக்குமென்பது சமூக ஆர்வலர்களின் கணக்கு. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் குடிபுகும் மக்களை கடுமையாக எச்சரித்து தனது தேர்தல் பரப்புரைகளின் போது அசாமிலும், மேற்குவங்கத்திலும் மோடி பேசியது நினைவிருக்கலாம். அசாமில் மோடி உரையாற்றிவிட்டு வந்த சில நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. எனவே மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வரும் ரொகிங்கியாக்கள் மீது புதிய அரசின் பார்வை எப்படி இருக்கும் என்ற நினைப்பே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ரொகிங்கியா மக்களுக்கு கொடுமைகள் 2012-ம் வருடத்திலிருந்து மட்டும் இழைக்கப்படவில்லை. இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள். ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான வெற்றியை கண்டுள்ளது பவுத்த பெரும்பான்மை சமூகம்.  அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர், பவுத்த பிக்குகள்.

மதவெறியால் வேட்டையாடப்படும் ரொகிங்கியா மக்கள்
நியூ யார்க் டைம்ஸ் இதழின் செய்தி கட்டுரையில் அசின் விராத்து என்னும் பவுத்த பிக்கு கூறும் போது ”அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்க முடியுமா?” என்று ரொகிங்கியாக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்தார். ”இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள் நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்” என்று பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டு ராணுவ சர்வாதிகார கும்பல் அரசை எதிர்த்து போராடிய பவுத்த பிக்குகளுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்கி வருகிறது, தற்போதைய ராணுவ கும்பலின் ‘ஜனநாயக’ அரசு.

இப்படி பவுத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் பொது பல சேனா உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராஜபக்சே, மியான்மரில் பவுத்த பிக்குகள் உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராணுவ சர்வாதிகார கும்பல், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் உருவாகியிருக்கும் சமூக உளவியல் பலத்தில் பாஜக என்று நம்மை பாசிசம் சூழ்ந்து நிற்கிறது. ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளிடம் ஒற்றுமையை வளர்த்து இந்த நச்சு சூழலை வெட்டி வீழ்த்துவோம்.
  - கௌதமன்
நன்றி - வினவு

...மேலும்

May 28, 2015

புங்குடுதீவின் தொடர்ச்சி கிளிநொச்சியிலா?புங்குடுதீவு மாணவி படுகொலையின் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை இடைவெளியில் மறித்த சிலர் பொதுமலசலகூடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பின்னர் அங்கேயே சிறுமியைக் விட்டுச்சென்றுள்ளனர். வாயில் துணி அடைந்தபடி மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமி மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிறுமி மாற்றப்பட்டுள்ளார்.

நன்றி - பதிவு
...மேலும்

பெண்ணுக்கு எட்டாக் கனியா நியாயம்?ஒரு பெண்ணின் அடையாளம் எது?
அவள் எப்படித் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாள்? எது அவள் இயல்போ, எது அவள் இருப்பை வெளிப்படுத்துகிறதோ அதுதானே அவள்? ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தை அழிப்பதற்காகப் போராடி, தன் லட்சியம் நிறைவேறுவதற்குள் அதே அடையாளத்துடனேயே மரித்துப் போன சூசட் ஜார்டனைப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அருணா ஷான்பாக், நிர்பயா வரிசையில் சூசட் ஜார்டனும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர். கொல்கத்தாவைச் சேர்ந்த சூசட் ஜார்டன் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் காருக்குள் வைத்துக் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். பிழிந்தெடுக்கப்பட்ட சக்கையாக வீதியில் வீசியெறியப்பட்டவர், காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கவே நான்கு நாட்கள் தேவைப்பட்டது. சூசட் கொடுத்த புகாரைக் கீழ்த்தரமாக விமர்சித்தனர் காவலர்கள். ஏன் இரவு நேரத்தில் வெளியே சென்றாய்?

இரண்டு குழந்தைகளின் அம்மா டிஸ்கோதேவுக்குப் போகலாமா? அறிமுகம் இல்லாதவர்களின் காருக்குள் நீ ஏன் ஏறினாய்? - இப்படிக் கேள்விகள் கேட்பதில் இருந்த ஆர்வம் அவர்களுக்குப் புகாரைப் பதிவு செய்வதில் இல்லை.

மறைக்கப்பட்ட முகம்
ஒரு வழியாகப் போராடி நீதிமன்றம் ஏறினார். அங்கே மட்டும் சூசட்டுக்கு அத்தனை சீக்கிரம் நீதி கிடைத்துவிடுமா என்ன? அங்கேயும் பாலியல் வன்முறையைத் தோற்கடித்துவிடுகிற கேள்விகள், விமர்சனங்கள். ‘இது ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்று மாநில முதல்வர் மம்தாவும், ‘தவறாக முடிவுற்ற செக்ஸ் ஒப்பந்தம்’ என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி ககோலி கோஷும் கருத்து தெரிவித்தார்கள். தொலைக்காட்சிகளில் முகம் மறைக்கப்பட்டு ‘Park street rape survivor' என்று சூசட் அடையாளப்படுத்தப்பட்டார். தவறு செய்தவர்களே துணிச்சலுடன் வெளியே வரும்போது, தீங்கிழைக்கப்பட்ட நான் ஏன் என் முகத்தையும் அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு குற்றவாளி போல் வாழ வேண்டும் என்ற கேள்வி சூசட் மனதில் எழுந்தது. கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு ஊடகங்களில் தன்னை வெளிப்படுத்தினார்.

“நான் பரிதாபத்துக்குரியவளோ, மீண்டு வாழ்கிறவளோ அல்ல. நான் சூசட் ஜார்டன். அப்படித்தான் நான் அறியப்பட விரும்புகிறேன்” என்று சொன்ன சூசட் அதன் பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கருத்தரங்குகளிலும் போராட்டங்களிலும் பங்கெடுத்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உரத்துக் குரல் கொடுத்தார். ஆனால் சூசட் ஜார்டனுக்கு அவர் வேண்டிய நீதி மட்டும் கடைசிவரை கிடைக்கவே இல்லை. கடுமையான மன உளைச்சலாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார்.

நீதி என்பது என்ன?
பெண்களைப் பாதுக்காக்க இயற்றப்படும் சட்டங்கள் எல்லாமே அவர்களை வதைப்பதற்கும் ஒடுக்குவதற்கும்தான் பயன்படுகின்றனவோ என்ற சந்தேகத்தைத்தான் இதுபோன்ற வழக்குகள் நமக்கு உணர்த்துகின்றன. வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் ஒன்று இறந்துவிட வேண்டும் இல்லையென்றால் இறப்பதற்கு நிகரான ஒரு நிலைக்குச் சென்றுவிட வேண்டும். நீதி கேட்டு நிமிர்ந்து நிற்கக் கூடாது. நியாயம் கேட்டுப் போராடக் கூடாது. அப்படிச் செய்தாலும் இங்கே எதுவும் நடக்காது. காலம் முழுக்கக் கறைபடிந்தவள் என்ற அடையாளத்துடனேதான் இந்தச் சமூகத்தின் முன்னால் முடங்கிக் கிடக்க வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகளில் குற்றமிழைத்தவர்களுக்குத் தரப்படும் தண்டனை என்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கிடைக்கும் நீதியா என்றால் நிச்சயம் இல்லை. அவள் கடந்துவந்த ரணங்களையும் வலிகளையும் அந்தத் தண்டனையால் மாற்றி அமைத்துவிட முடியாது. தொலைந்துபோன அவள் அடையாளங்களை மீட்டுத் தந்துவிடாது. ஆனால் சட்டம் நமக்குத் துணை நிற்கிறது என்ற நம்பிக்கையை அந்தத் தண்டனை உறுதிப்படுத்தும். அவளுக்குள் வாழ்வு மீதான பிடிப்பையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கும். ஆனால் நம் சட்டங்கள் இதைச் சரியாகச் செய்கின்றனவா? காவல் நிலையங்களுக்கும் நீதி மன்றங்களுக்கும் அலைந்து அலைந்து அனைத்தையுமே இழந்துவிடுகிற நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் எப்படித் தொடர்ந்து போராட முடியும்?

பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்க்கும் வாசகங்கள் தாங்கிய பதாகைகளைப் பிடித்தபடி நாம் போராட்டம் நடத்துவோம். மரித்துப் போன பெண்களுக்காக மெழுகுவத்தி ஏந்தியபடி ஊர்வலம் போவோம். நீதியும் சட்டமும் மௌனித்து இருக்கட்டும். குற்றவாளிகள் சுதந்திரமாக வாழட்டும்.

நன்றி - திஹிந்து...மேலும்

May 27, 2015

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி?அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் தரப்பானது தனது சமூகத்திற்குள் வாழும் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளையிட்டு ஏன் அந்தளவிற்கு அக்கறைப்படுவதில்லை என்று?” அவருடைய கேள்வி அன்று பகல் யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட ஒரு கேள்வியின் தொடர்ச்சிதான். மேற்படி கருத்தரங்கில் கேள்வி கேட்ட ஒருவர் சரண்யாவின் கொலையைச் சுட்டிக்காட்டி அதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக அதிகம் அக்கறைப்படாத தமிழ்ச் சிவில் செயற்பாட்டாளர்கள் அதேசமயம், அரச படைகளால் இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பில் பெருமளவிற்கு எதிர்ப்புக் காட்டுவது ஏன் என்ற தொனிப்பட கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரும் மரிஷாவும் கேட்ட கேள்விகளுக்கான பதிலை சரியாக ஒரு வாரத்திலேய தமிழ் மக்கள் வழங்கிவிட்டார்கள். வித்தியாவுக்காக புங்குடுதீவில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் வேகமாகப் பரவி குடாநாட்டையும் தாண்டி தென்னிலங்கை மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிற்கும் விரிவடைந்துவிட்டன. மே 18 நினைவு கூரலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே வித்தியா சிதைத்துக் கொல்லப்பட்டார். அவருக்கு நடந்த கொடுமையானது ஒரு விதத்தில் மே 18 ஒட்டிய நினைவுகளின் பின்னணியில் கூடுதல் அழுத்தத்தைப் பெற்றுவிட்டது. அவருக்காக யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் பெருமளவிற்கு தன்னியல்பானவை. ஒப்பீட்டளவில் அதிகம் உணர்வெழுச்சியானவை. அரசியல் ஆய்வாளரான ஜோதிலிங்கம் சொன்னார், “மாற்றத்தின் பின் யாழ். பல்லைக்கழக ஆசிரியர் சமூகம் ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை விடவும் அதிகரித்த அளவிலான உணர்வெழுச்சியோடு தாமாக முன்வந்து மக்கள் இவ் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக”.

சுன்னாகம் நீர் விவகாரத்தை பேஸ்புக்கில் தொடக்கி வைத்து அதை ஒரு விவகாரமாக்கிய ஒரு விமர்சகர் பேஸ்புக்கில் பின்வரும் தொனிப்பட கேள்வி எழுப்பியிருந்தார். “வித்தியாவிற்காகத் திரண்ட அளவிற்கு பொதுமக்கள் மே 18இற்குத் திரளாதது ஏன்?” என்று. மற்றொரு எழுத்தாளர் பிரான்சில் இருந்து எழுதினார், “சரண்யாவிற்காகத் தெருவில் இறங்காத ஒரு சமூகம் வித்தியாவிற்காக ஏன் இவ்வளவு உணர்வெழுச்சியோடு தெருவில் இறங்கியது?” என்று.

உண்மைதான். கடந்த தசாப்தத்தில் வடக்கில் நிகழ்ந்த தன்னியல்பான ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றோடும் ஒப்பிடுகையில் உணர்வெழுச்சியோடு கூடிய ஆர்ப்பாட்டங்களாக இவை காணப்பட்டன. அதற்குக் காரணம் என்ன? மூன்று பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று உடனடியானது. மற்றது நீண்டகால அடிப்படையிலானது. மூன்றாவது இணையப் பெருக்கம்.

உடனடியான காரணம் ஆட்சிமாற்றம்தான். ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் வடக்குக் கிழக்கில் படிப்படியாக நிழ்ந்து வரும் சம்பவங்களின் ஒரு கட்ட வளர்ச்சியே இவ்வார்ப்பாட்டங்கள் எனலாம். ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அச்சம் குறைந்துள்ளது. தமது குரல்வளையை நெரிக்கும் இரும்புக்கரங்களின் பிடி ஒப்பீட்டளவில் தளர்ந்திருப்பதாக சாதாரண சனங்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். இத்தகையதோர் பின்னணியில் யாழ். பல்லைக்கழக ஆசிரியர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மிகப்பெரிய ஊர்வலம் முதலில் நடந்தது. அதைத் தொடர்ந்து சுன்னாகம் நீர் விவகாரத்தை ஒட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் பரப்பில் அண்மைத் தசாப்தங்களில் நிகழ்ந்த ஒரு நூதனம் என்று வர்ணிக்கத் தக்க பகிரங்க விவாதம் ஒன்று இடம்பெற்றது. யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க விவாதமே அது. அச்சிறிய மாநாட்டு மண்டபம் தாங்க முடியாத அளவிற்கு பெருந்திரளானோர் அதில் கலந்துகொண்டார்கள். தமிழ் அரசியல் பரப்பில் இது போன்ற பகிரங்க உரையாடல்கள் கடந்த சில தசாப்தங்களாக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன. தமிழ் அரசியலின் அகஜனநாயக வெளியானது ஆரோக்கியமான விதத்தில் அகன்று வருவதை இது காட்டுகின்றது. இப்பகிரங்க விவாதத்தின் பின் மே 18 வந்தது. 2009இற்குப் பின் தாயகத்தில் மே 18 இந்தளவிற்கு நினைவு கூரப்பட்டது இதுதான் முதற்தடவை. சட்டத் தடைகள் போடப்பட்ட போதும் சிறிய அளவிலேனும் இறந்தவர்கள் நினைவுகூரப்பட்டார்கள். அநேகமான நினைவு கூரல்கள் கட்சி நிகழ்வுகளாகவே காணப்பட்டன. கத்தோலிக்கத் திருச்சபையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வைத் தவிர ஏனையவற்றுள் பெரும்பாலானவை கட்சி நிகழ்வுகளே. கட்சிப் பிரமுகர்கள் தமது செல்வாக்குப் பிரதேசங்களுக்குள் ஓரளவிற்கு நினைவு கூரலைச் செய்தார்கள். அதை கட்சி மதங் கடந்த ஒரு பெருவணக்க நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது குறித்து கட்சிகள் அடுத்த ஆண்டு சிந்திக்கக் கூடும். எனினும், இது ஒரு நம்பிக்கையூட்டும் தொடக்கம்தான். இத்தகையதோர் அரசியல் சூழலில்தான் வித்தியா கொல்லப்பட்டார்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் செய்த ஊர்வலத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக மெதுமெதுவாக அகற்றப்பட்டு வரும் சிவில் ஜனநாயக வெளிக்குள்ளேயே வித்தியாவுக்கான ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. இதை இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது மாற்றத்தை மனோரதியப்படுத்துவதாக யாரும் நினைக்கக் கூடாது. ஆனால், மாற்றத்தின் பின் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஒருவித அசுவாசச் சூழலின் பின்னணியிலேயே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படுகின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது உடனடிக்காரணம்.

இரண்டாவது, நீண்டகாலக் காரணம். 2009இற்குப் பின்னிருந்து அமுக்கப்பட்டுவந்த உணர்ச்சிகளின் வெடிப்பே இது. இங்கு வித்தியா ஒரு பொறி மட்டுமே. ஏற்கனவே, நீறுபூத்துக்கிடந்த கோபத்தின் மீது வெறுப்பின் மீதும் வீழ்ந்த ஒரு பொறி. வித்தியாவுக்காக திருநெல்வேலிச் சந்தையில் முகப்பில் கட்டப்படிருந்த பதாதையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “நேற்று கிருசாந்தி, இன்று வித்தியா? நாளை யார்?”

இக்கேள்விக்குள் இருக்கிறது மூலகாரணம். இதற்கு முன் நிகழ்ந்த இதுபோன்ற எல்லாச் சம்பவங்களினதும் ஆகப்பிந்திய ஒரு குறியீடாக வித்தியா மாறிவிட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் வித்தியாவின் ஒளிப்படம் இருந்தது. ஆனால், அவர்களுடைய மனங்களில் கிருசாந்தியினுடையதும், இசைப்பிரியாவினுடையதும் அதுபோன்ற எல்லாப் பெண்களினுடையதும் ஞாபகங்கள் நிறைந்திருந்தன. வித்தியாவிற்கு நடந்த கொடுமையில் வெளிப்படையான அரசியல் இருக்கவில்லை. எனவே, வெளிப்படையான அரசியல் இல்லாத ஒரு விவகாரத்தை முன்வைத்து வெளிப்படையாகப் பேசமுடியாத எல்லா விவகாரங்களுக்குமான எதிர்ப்பை மக்கள் வெளிக்காட்டினார்கள் என்பதே சரி. மே 18ஐ பரவலாக நினைவுகூரமுடியாத சூழலில் தமது கூட்டுத் துக்கத்தை வெளிப்படுத்த முடியாதததால் ஏற்பட்ட கூட்டுக் கோபத்தை வித்தியாவின் பெயரால் தமிழ் மக்கள் வெளிப்படுத்தினார்களா? என்றும் கேட்கலாம். இது ஒரு வெளிப்படையான அரசியலை முன் வைக்கும் ஆர்ப்பாட்டமாக இருந்திருந்தால் இந்தளவிற்கு பெருந்திரளானோர் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பங்குபற்றியிருந்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு தமிழ் மக்கள் மாற்றத்தை முழுமையாக நம்பவும் இல்லை.

முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பது ஒரு வெளிப்படையான அரசியல். அதில் றிஸ்க் எடுக்க நடுத்தர வர்க்கம் தயங்கியது. சரண்யா கொல்லப்பட்டபோது இப்போதிருக்கும் அளவிற்கு சிவில் வெளி அதிகரித்திருக்கவில்லை. எனவே, சரண்யாவுக்காகவும் முள்ளிவாய்க்காலுக்காகவும், இசைப்பிரியாவுக்காகவும் கிளர்ந்தெழாத மக்கள் வெளிப்படையான அரசியலைக் கொண்டிராத வித்தியாவுக்காகத் தெருவில் இறங்கினார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் கேட்டார், “நாங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்தபோது மிகச் சிலரே எங்களோடு நின்றார்கள். மிகுந்த ஆபத்தின் மத்தியில் நாங்கள் அவற்றைச் செய்தோம். ஆனால், இப்பொழுது நிறையப் பேர் முன்வருகிறார்கள்” என்று. ஆனால், அவ்வாறு முன்வருவோர் கூட நேரடியாக படைத்தரப்போடு மோதும் அரசியல் விவகாரங்களுக்காக போராடத் தயார் இல்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

மூன்றாவது காரணம், இணையப் பெருக்கம். அபிப்பிராயங்களை உருவாக்குவதிலும், கோபத்தையும் வெறுப்பையும பரப்புவதிலும் இணையம் பெரிய பங்காற்றுகின்றது. ஒரு புறம் நியாயமான கோபம் காட்டுத் தீயாய் பரவுகிறது. இன்னொரு புறம் உள்நோக்கமுடைய வதந்திகளும் குருட்டுத் தனமாகப் பகிரப்படுகின்றன.

மேற்சொன்ன மூன்று பிரதான காரணங்களின் விளைவாக வித்தியாவின் விவகாரம் வெடித்துக் கிளம்பியது. அந்த ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவை என்பதும் யாரும் தூண்டாமலேயே தாமாகவே உருக்கொண்டவை என்பதும் அவற்றின் பிரதான பலமாகும். அதேசமயம், அரசியல் தரிசனமுடைய ஒரு கட்சியோ அல்லது செயற்பாட்டு இயக்கமோ மேற்படி ஆர்ப்பாட்டங்களுக்கு ஒட்டுமொத்த தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்பது அவற்றுக்குள்ள பிரதான பலவீனமாகும்.

தமிழ் மக்களின் கோபமும் வெறுப்பும் ஒரு வெகுசன சக்தியாக ஒரு அரசியல் ஆயுதமாகத் திரட்டப்படுவது என்றால் அதற்கு அரசியல் தரிசனமுடைய தலைமை இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த வெறுப்பும் கோபமும் விரயமாகிவிடும். இது சில சமயம் போராட்டத்தின் நோக்கத்தையும் வீரியமிழக்கச் செய்துவிடும். புதன்கிழமை நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின் முடிவில் என்ன நடக்கக் கூடும் என்பதை செவ்வாய்க்கிழமையே அனுமானிக்கக் கூடியதாக இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று பலாலி வீதியில் ஒரு சிறு குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அவர்கள் வீதியின் ஓரம் வீடுகளில் காய்த்துக் குலுங்கிய மாங்காய்களை மதில்களில் ஏறிப் பறித்தார்கள். இன்னொரு குழுவினர் நகரத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும், பொது நிறுவனங்களை அச்சுறுத்தியும் நகரத்தை உறைய வைத்தார்கள். மறுநாள் அதாவது புதன்கிழமை இது அதன் அடுத்தகட்ட வளர்ச்சியை அடையக் கூடும் என்பதை மக்களின் நாடித்துடிப்பை உணரத்தக்க எந்தவோர் அரசியல் வாதியும் கண்டுபிடித்திருக்கலாம்.

வித்தியாவின் சாவீட்டுக்குச் சென்று துக்கம் தெரிவித்துவிட்டு தமது கட்சி அலுவல்களுக்கு திரும்பிச் சென்றுவிட்ட அரசியல்வாதிகளால் தமது வாக்காளர்களின் அடிமனதில் படிப்படியாகத் திரண்டு வந்த நெருப்பைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. புதன்கிழமை நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் பெருமளவிற்கு பார்வையாளர்களாகவே நிற்கவேண்டியதாயிற்று. இதுபோலவே ஆட்சிமாற்றத்தை உடனடுத்து பல்கலைக்கழக சமூகம் மேற்கொண்ட ஊர்வலத்திலும் அரசியல்வாதிகளுக்கு மேடை கிடைக்கவில்லை. அதாவது, அண்மைக்காலங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிவில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் ஓரத்திற்குத் தள்ளப்படுவதைக் காண முடிகிறது. அதேசமயம், அரசியல்வாதிகள் இல்லாத வெற்றிடத்தில் சிவில் எதிர்ப்புக்களுக்குத் தொடர்ச்சியாக தலைமைதாங்கவல்ல மாற்று அமைப்புக்களையோ செயற்பாட்டு இயக்கங்களையோ அரங்கில் காண முடியவில்லை. இது எதைக் காட்டுகிறது?

கடந்த 6 ஆண்டுகளாக அரசியல்வாதிகளை அதிகளவில் உற்பத்தி செய்த ஒரு சமூகம் செயற்பாட்டு வீரர்களை உற்பத்தி செய்யத் தவறிவிட்டது. உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உண்டு. மாகாண சபைகளிலும் மகத்தான மக்கள் ஆணையைப் பெற்ற பிரதிநிதிகள் உண்டு. நாடாளுமன்றத்திலும் பிரதிநிதிகள் உண்டு. இவர்களில் யார் சொன்னால் மக்கள் அதைக் கேட்பார்கள்? மக்களை தமது கண்ணசைவிற்குள் வைத்திருக்கும் தலைவர்கள் எத்தனை பேருண்டு? அப்படியாரும் இருந்திருந்தால் அண்மைக்கால போராட்டங்களுக்கு நிச்சயமாக அவர்களால் தலைமையைக் கொடுத்திருக்க முடியும்.

சரி அரசியல்வாதிகளை விடுவோம். இவர் சொன்னால் மக்கள் அதைக் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க சமூக செயற்பாட்டாளர்கள் யாராவது உண்டா? அல்லது மதச் செயற்பாட்டாளர்கள் யாராவது உண்டா? கிராம மட்டங்களில் இவர் சொன்னால் மக்கள் அதைக் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க எத்தனை சமூகத் தலைவர்கள் உண்டு? எத்தனை பங்குத் தந்தைகள் உண்டு? எத்தனை மதகுருமார் உண்டு? எத்தனை தொழிற்சங்கத் தலைவர்கள் உண்டு? உயர்கல்வி நிறுவனங்களில் இவர் சொன்னால் மாணவர்கள் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க எத்தனை விரிவுரையாளர்கள் உண்டு? எத்தனை மாணவத் தலைவர்கள் உண்டு? கிராம மட்டத்தில் அல்லது நகர மட்டத்தில் அல்லது மாகாண மட்டத்தில் இவர் சொன்னால் பெற்றோரும் மாணவர்களும் கேட்டு நடப்பார்கள் என்று சொல்லத்தக்க கல்வியாளர்கள் எத்தனைபேர் உண்டு? அதிபர்கள் எத்தனைபேர் உண்டு? ஆசிரியர்கள் எத்தனைபேர் உண்டு?

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக படைத்துறை மயப்பட்டுவந்த தமிழ்ச் சமூகமானது அதன் உள்ளூர் தலைமைத்துவங்களை (local leadership) பெருமளவிற்கு இழந்துவிட்டது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னரான கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் தமது மக்களுக்கு ஒரு புதிய அரசியல் தரிசனத்தைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். உள்ளூர் அரசியல் தலைவர்கள் பிரமுகர்களாகச் செயற்படுவதற்குப் பதிலாக சமூகச்சிற்பிகளாக செயற்படத் தவறிவிட்டார்கள். தமிழ் மக்கள் அரசியல் தரிசனமற்ற, இலட்சியவேட்கை இழந்த ஒரு சமூகமாகத் தேங்கிப்போய் நிற்கிறார்கள். தமிழ் சமூகத்திற்கு ஓர் அரசியல் தரிசனத்தை, தெளிவான இறுதி இலட்சியத்தைக் காட்டும் ஒரு தலைமைத்துவத்துக்கே, குறிப்பிட்ட அந்த அரசியல் தரிசனத்தை நோக்கி சமூகத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய உள்ளூர் தலைமைத்துவங்களை கட்டி எழுப்ப வேண்டிய ஒரு தேவை ஏற்படும். அவ்வாறு அரசியல் தரிசனமுடைய இலட்சியப்பாங்கான அல்லது குறைந்தபட்சம் நீதிமான்களாகக் காணப்படும் ஊர்த் தலைவர்கள் இல்லாத ஒரு வெற்றிடத்திலேயே வித்தியா போன்றவர்கள் சிதைக்கப்படுகிறார்கள். கோஷ்டி மோதல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. ​

இப்பொழுது தண்டனைகளை இறுக்குவதன் மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தலாம் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதில் ஓரளவிற்கு உண்மை உண்டு. ஆனால், தண்டனைகளால் மட்டும் ஒரு சமூகத்தை ஆற்றுப்படுத்த முடியாது. குற்றவாளிகளைத் தண்டிப்பது உடனடியானது. ஆனால், குற்றவாளிகளை உருவாக்கும் சமூகச்சூழலை மாற்றியமைப்பதே நிரந்தரமானது. சமூகத்தை அரசியல் தரிசனமுடைய சமூகமாக அல்லது இலட்சியப்பாங்கான ஒரு சமூகமாகக் கட்டி எழுப்பும் போதே விழுமியங்களை உருவாக்க முடியும். அதற்கு உள்ளூர் தலைமைத்துவங்கள் வேண்டும். உள்ளூர் தலைமைத்துவங்களால்தான் ஒரு புதிய பண்பாட்டை கீழிருந்து மேல் நோக்கி உருவாக்க முடியும். மாற்றத்தின் விரிவைச் சோதித்தறியும் ஒரு பரிசோதனைக்களமாகவும் அது அமையும்.

எனவே, உள்ளூர் தலைமைத்துவங்களை கட்டி எழுப்பாதவிடத்து கோஷ்டி மோதல்களையும் நிறுத்த முடியாது. பெண் பிள்ளைகளை ஆள் அரவமற்ற தெருக்களில் தனியாகச் செல்லவிடவும் முடியாது. புங்குடு தீவில் வல்லன் கிராமத்துப் பெண்கள் ஓர்மமானவர்கள், நெஞ்சுரம்மிக்கவர்கள் என்று ஓர் அபிப்பிராயம் உண்டு. வல்லன் கிராமத்து பெண்ணில் கை வைப்பதற்கு மற்றவர்கள் அச்சப்படும் ஒரு காலமும் இருந்தது. ஆனால், இப்பொழுது அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அக்கிராமத்தவர்களும் சேர்ந்து அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வைத்து சிதைத்துக் கொன்றுவிட்டார்கள். எமது கிராமங்கள் அவற்றின் அப்பாவித் தனத்தை இழந்துவிட்டன; அவற்றின் தனித்துவங்களை இழந்துவிட்டன.

புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் வில்வரத்தினம் கூறுவார், “சாவிலும் ஒரு வாழ்விருந்தது எமது கிராமங்களுக்கு” என்று. ஆனால், இப்பொழுது?

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

நன்றி - மாற்றம்
...மேலும்

May 26, 2015

புறக்கணிப்பை மீறிய சாதனை! - வி. சீனிவாசன்


மனிதராகப் பிறந்தும் இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் சொல்லி மாளாது. அன்றாட வாழ்வே அவர்களுக்குப் பெரும் சோதனைதான். சக மனிதர்களின் அங்கீகாரம் இல்லாமல், அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லல்படுகிற திருநங்கை வர்க்கத்தைச் சேர்ந்தவர்தான் பூஜா. ஆனால் உதாசீனங்களை உறுதிகொண்ட மனதுடன் எதிர்த்து நின்றார். இன்று தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கான வழிகாட்டியாக உள்ளார். சேலம் திருநங்கைகள் நலச் சங்கத் தலைவியாகச் செயல்பட்டு வருகிறார்.

“வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் என்ற பெயரில் ஐந்தறிவு உயிர்களைக்கூடப் பாசத்துடன் வளர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் திருநங்கை என்று தெரிந்ததுமே பெற்றவர்களால் அடித்து விரட்டப்படுகிற கொடுமையை என்னவென்று சொல்ல?” என்கிற பூஜாவின் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

ஆத்தூரைச் சேர்ந்த பெரியண்ணன்-வெள்ளையம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், பின்னாளில் மகளாக உருமாறினார்.

உதறித் தள்ளிய வீடு

“எனக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். நான் பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது, என்னுள் ஒளிந்துகொண்டிருந்த பெண்மை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. அதுவரை சிங்கக் குட்டியாக உலவிய நான், புள்ளிமானாய் மாறியது எனக்கே புரியாத ஆச்சரியம்தான். இயற்கையின் அந்த விந்தையை என் வீட்டில் இருந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அத்தனை நாட்களாகச் சீராட்டியவர்களே என்னை வீட்டைவிட்டு விரட்டியடித்தனர்” என்று சொல்லும் போது பூஜாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவமானங்களைக் கடந்துவந்த தெளிவு அதில் தெரிந்தது.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பூஜாவை, சேலம் திருநங்கைகள் நலச்சங்கம் அரவணைத்து அடைக்கலம் தந்தது. ப்ளஸ் டூ முடித்ததும் தொலைதுாரக் கல்வியில் பி.எஸ்சி முடித்தார். திருநங்கைகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த பூஜா, 2010-ம் ஆண்டு முதல் தலைவியாகப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். இவர்களது சங்கத்தில் மொத்தம் 2,300 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

வழிகாட்டும் சங்கம்

திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுரிமை, வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, இலவச வீடு ஆகியவை கிடைக்க இந்தச் சங்கத்தின் மூலம் உதவியிருக்கிறார்கள். மூன்று பேருக்கு மூன்றாம் பாலினப் பிரிவின் மூலம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர வங்கி மூலம் கல்விக் கடனுதவியும் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

பெற்றோரால் கைவிடப்பட்ட திருநங்கைகளை அரவணைத்து, அவர்களுடைய பெற்றோரை அழைத்துச் சங்கம் மூலமாக கவுன்சிலிங் அளித்து வருகிறார்கள். திருநங்கைகள் சுயதொழில் தொடங்கப் பல்வேறு பயிற்சிகளை அளிப்பதுடன் சுய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தருகிறார்கள்.

பாலியல் தொழில் மட்டுமே திருநங்கைகளின் அடையாளம் என்பதை மாற்ற இவர்களுக்குப் பல்வேறு விதமான பயிற்சிகளையும் அளித்துவருகிறார்கள். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 150 திருநங்கைகளுக்கு இலவசச் சட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது ஒரு மைல் கல். பாலியல் தொழிலில் ஈடுபடுகிற திருநங்கைகளை மீட்டு அவர்கள் சுயதொழிலில் ஈடுபட வழிகாட்டுகிறார்கள்.

“சமூகநலத் துறை சார்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் சுய உதவிக்குழு ஆரம்பிக்கச் சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். ஆனால் எங்கள் சங்கம் மூலமாக 40 திருநங்கைகள் சேர்ந்து சுயஉதவிக் குழு தொடங்கி, சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று சொல்லும் பூஜாவின் வார்த்தைகளில் தன்னிறைவின் பெருமிதம் தென்படுகிறது.

திருநங்கைகளும் மனிதர்களே

ஆண்டுதோறும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி மக்களுக்கான சேவை தினமாக இவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். மரக்கன்று நடுதல், கண் மற்றும் உடல் தானம் அளிப்பது என்று ஒவ்வொரு ஆண்டும் பயனுள்ள வகையில் அதைக் கொண்டாடுகிறார்கள்.

“இந்த வருடம் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் துாய்மைப் பணி மேற்கொண்டோம். தமிழக அரசு மூன்றாம் பாலினமாக எங்களை அங்கீகரிக்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்கிறார் பூஜா. சென்னையைச் சேர்ந்த ‘பார்ன் டூ வின்’ அமைப்பு சார்பில் சிறந்த திருநங்கை விருது பூஜாவுக்குக் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

“பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே சொந்தம் என்று நினைத்து மூன்றாம் பாலினத்தவரைக் கொச்சைப்படுத்தி, புறக்கணிப்பது நியாயமா? திருநங்கைகள் பலர் தம்பதி சகிதமாய் வாழ்ந்து வருகின்றனர்” என்கிற பூஜாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கிறார் சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ஸ்வேதா.

“எனக்குத் திருமணமாகி ஒன்பது வருஷமாகுது. மாமனார், மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். ஐந்து மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தோம். தாய்மையின் பூரணத்தை உணர்த்துகிறாள் என் மகள் தனுஷ்யா” என்கிறார் ஸ்வேதா. இவரைத் தொடர்ந்து கண்ணகி, ரஞ்சனா என்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் திருநங்கைகளின் பட்டியல் நீள்கிறது. வெளுக்கத் தொடங்கும் வானம்போல் ஒளிர்கின்றன அந்தத் திருநங்கைகளின் முகங்கள்!
நன்றி - thihindu
...மேலும்

May 25, 2015

கர்ப்பப்பை வாடகைக்கு! - வா.ரவிக்குமார்


இந்தியாவில் ஏறக்குறைய 50 கோடி டாலர் பணம் புழங்கும் அளவுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள எவ்வளவோ வாய்ப்பு இருந்தாலும், ஒரு கணவனும் மனைவியும் அவர்களின் விந்தணு, கருமுட்டையைக் கொண்டேதான் தங்கள் குழந்தை உருவாக வேண்டும் என்று நினைப்பார்கள். உலகில் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும் கருத்தாக இது உள்ளது. அதனால்தான் வாடகைத் தாய்க்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.

“உலகில் 26 நாடுகளில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் வாடகைத் தாய்மார்கள் இடைத் தரகர்களின் பிடியில் அவதிப்படும் நிலையும் இங்கே அதிகம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இதுபோல் ஏமாற்றப்பட்ட ஒரு சில வாடகைத் தாய்மார்கள் எங்களைச் சந்தித்தனர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் உலக வாடகைத் தாய்மார்களின் உரிமைகளை முன்னிறுத்தும் நிறுவனத்தின் தலைவர் அ.ஜ.ஹரிஹரன். இவர், இந்தியச் சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் நிறுவனர், செயலாளர்.

வாடகைத் தாயின் அவசியம் ஏன்?

தம்பதி இருவரில், ஆணுக்கு விந்தின் நிலை நன்றாக இருக்கும். பெண்ணின் கருமுட்டையோடு இணைவதிலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் அந்தக் கருவைத் தாங்கும் திறன் சில பெண்களின் கர்ப்பப்பைக்கு இருக்காது. இந்த இடத்தில்தான் வாடகைத் தாயின் அவசியம் தேவையாகிறது.

இந்திய வாடகைத் தாய்மார்களை ஏன் நாடுகிறார்கள்?

உலகின் பல பகுதிகளில் இருந்தும் தங்களின் சந்ததியைப் பெருக்குவதற்கு இந்தியாவுக்கு வருவதற்குச் சில காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமானது, வெளிநாடுகளில் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஏறக்குறைய 50 முதல் 60 லட்சம் ரூபாய் செலவு ஆகுமாம். இந்தியாவில் அதிகபட்சமாக 15 முதல் 20 லட்சம்வரை செலவாகிறதாம்.

இந்தியாவில் வாடகைத் தாயாக முன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிநவீன மருத்துவ சிகிச்சைகளும், திறன் வாய்ந்த மருத்துவர்களும் இங்கு அதிகம்.

வாடகைத் தாய்க்கான முறையான சட்டங்களே இந்தியாவில் இல்லை. இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சிலின் (I.C.M.R) வழிகாட்டும் நெறிகளே உள்ளன. உலகம் முழுவதும் இருப்பவர்கள் தங்கள் கருவைத் தாங்க இந்தியக் கர்ப்பப்பைகளைத் தேடிவர இவையே காரணம்.

ஜி-ஸ்மார்ட் உதயம்

“பணம் இருப்பவர்கள் லட்சங்களைச் செலவு செய்து வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுச் சந்தோஷமாக அவர்களின் நாடுகளுக்குத் திரும்புகிறார்கள். மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அவர்களுக்கு உண்டான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் கர்ப்பத்தை 10 மாதங்கள் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் வாடகைத் தாய்க்குக் கிடைக்க வேண்டிய பணம் சரியாகப் போய்ச் சேராமல் கேள்விக் குறியாக வேண்டுமா? இந்த யோசனைதான் நாங்கள் ஜி-ஸ்மார்ட் தொடங்கக் காரணம்” என்று சொல்லும் ஹரிஹரன், ஆண்டுதோறும் மே 31 அன்று வாடகைத் தாய்மார்களின் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

வாடகைத் தாய்க்கான சில உரிமைகளை ஜி-ஸ்மார்ட் வரையறுத்துள்ளது. அவை, வாடகைத் தாய்க்குச் சேர வேண்டிய பணத்தை, மருத்துவமனை, பயனாளிகளான குழந்தையின் பெற்றோர், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகியவை உறுதி செய்ய வேண்டும்.

பிரசவத்துக்குப் பின்னும் வாடகைத் தாயின் பாதுகாப்பும் பராமரிப்பும் அதற்கான மருத்துவச் செலவுகளையும் பயனாளிகள் ஏற்பதை உறுதி செய்ய வேண்டும்.

என்னதான் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிரசவித்தாலும் தொப்புள் கொடி உறவு சாதாரணமானதல்ல. பிரசவத்துக்குப் பின் மனதளவில் வாடகைத் தாய்மார்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியம்.

பிரசவக் காலத்தில் ஆயுள் காப்பீடு அவசியம்.

ஒரு பெண் தன் சம்மதத்தைத் தன் தாய் மொழியில் எழுத்துபூர்வமாக அளித்த பிறகுதான் அவர் வாடகைத் தாயாகி இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

“வாடகைத் தாய்க்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதோடு அவர்களுக்கென்று இருக்கும் சில கடமைகளையும் அவர்களுக்குப் புரியவைக்கிறோம். வாடகைத் தாய், தான் சுமக்கும் குழந்தைக்குச் சட்டப்பூர்வமாக உரிமை கொண்டாட முடியாது. தங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கும் வாடகைத் தாயைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். வாடகைத் தாயைத் தங்களின் வீட்டுக்குக் கொண்டுபோய்ப் பிரசவம் முடியும்வரை பார்த்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்” என்ற ஹரிஹரனிடம்,

“வாடகைத் தாயை ஏற்பாடு செய்துவிட்டு, ஏதோ காரணத்தால் தம்பதி திரும்பிவராவிட்டால் வாடகைத் தாயின் நிலை என்னாகும்?” என்றோம்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானைச் சேர்ந்த ஒரு தம்பதி, அவர்களின் கருவைச் சுமக்க ஒரு வாடகைத் தாயை ஏற்பாடு செய்தனர். குழந்தை பிறந்த நேரத்தில், கருத்து வேறுபாட்டால் அந்தத் தம்பதி பிரிந்துவிட்டனர். அந்தக் குழந்தையை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் கணவனின் தாயார், உச்ச நீதிமன்றத்தில் அந்தக் குழந்தை தங்கள் குடும்பத்தின் வாரிசு என்று வழக்கு நடத்தினார். இந்த வழக்கின் தீர்ப்பில் இந்தியாவில் வாடகைத் தாயின் மூலம் பிறக்கும் குழந்தை இந்தியக் குடிமகன்தான் என்று கூறி, குழந்தையை வழக்குத் தொடுத்த குழந்தையின் பாட்டியிடம் ஒப்படைத்தனர்” என்றார்.

“வாடகைத் தாயை இந்தியச் சமூகம் குழந்தைப்பேறின்மைக்கான தீர்வாகப் பார்க்காமல் பிரச்சினையின் பகுதியாகவே பார்க்கிறது. இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு அடைபவர்களுக்கான ART என்னும் சட்டம் இன்னும் முழுமையான வரையறைக்குள் வரவில்லை. வாடகைத் தாய்க்கான வயதைப் போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முதுமையின் விளிம்பில் இருப்பவர்களால் அந்தக் குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும்? உரிமைகள் காப்பாற்றப்படும் பட்சத்தில், குழந்தைப் பேறு இல்லாத தம்பதிக்கு மருத்துவம் அளிக்கும் கொடையாகத்தான் வாடகைத் தாய் முறையை நான் பார்க்கிறேன்” என்கிறார் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் கல்லூரியில் உடல் நலத்துறைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஜெயா தர்.
நன்றி - தே ஹிந்து
...மேலும்

May 24, 2015

விவாதம்: கறுப்பு நிறம் அவமானச் சின்னமா? - பிருந்தா சீனிவாசன்


அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப் படுகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகள் தங்கள் வார்த்தை ஜாலங் களுக்கு வாகாகப் பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இணை அமைச்சர் கிரிராஜ் சிங், “ராஜீவ்காந்தி, நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை மணந்து, அந்தப் பெண் சோனியாவைப் போல் வெள்ளைத் தோலுடன் இல்லாமல் இருந்தால் அவரை காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டிருப்பார்களா?” என்று கேட்டிருக்கிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம், “நீங்கள் இப்படி வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினால் உங்கள் தோல் கறுத்துவிடும். பிறகு உங்களுக்கு மணமகன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, திருமணம் தாமதமாகிவிடும்” என்று அறிவுரை வழங்கி யிருக்கிறார் கோவா மாநில முதல்வர் லகஷ்மிகாந்த் பர்சேகர்.

காப்பீட்டுத் துறை சீர்திருத்த மசோதா குறித்த விவாதத்தின்போது, “தென்னிந்தியப் பெண்கள் அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களின் கறுப்பு நிறமும் அழகானது. அவர்களுக்கு நடனமாடவும் தெரியும்” என்று சொல்லியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ். தான் கறுப்பு, வெள்ளை நிற பேதத்தைக் குறித்து மட்டுமே பேசியதாகவும் தன் கருத்தைச் சிலர் திரித்துச் சொல்கின்றனர் என்றும் சரத்யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பேச்சுகளுக்குப் பின் உள்ள அரசியல் நோக்கங்கள் தனி விவாதத்துக்கு உரியவை. கிரிராஜ் சிங்கின் கவலை நிறபேதம் பற்றியதா அரசியல் சார்ந்ததா என்பது கேள்விக்குரியது.

அறிவா, நிறமா?

ஆனால், அரசியலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இவர்களின் இந்தப் பேச்சுகள், கறுப்பு நிறத்தின் மீதான ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. நிறம் சார்ந்த ஆதிக்கம் சமூகத்தின் எல்லாத் தட்டு மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நிற வேறுபாடு குறித்த விருப்பு வெறுப்புகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு சமூக நிகழ்வும் மாற்றங்களும் அதைத்தான் சொல்கின்றன.

தொலைக்காட்சி விளம்பரங்களில் பெரும் பாலானவைச் சிவப்பழகு குறித்தவையாகவே இருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணுக்குக் கல்வி, வேலை, நண்பர்கள், திருமணம் உட்பட அனைத்தும் சாத்தியம் என்பது போலவே பல விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கை சாத்தியம் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் விளம்பரங்களும் உண்டு. ஆண்களுக்கான பிரத்யேக சிவப்பழகு க்ரீம்களும் சந்தைக்கு வந்துவிட்டன. மூன்று வேளை உணவில்லாமல்கூட இருந்துவிடலாம், சிவப்பழகு இல்லாமல் இருக்கவே கூடாது என்கிற தொனியில்தான் விளம்பரங்கள் கூச்சலிடுகின்றன.

காட்சி ஊடகம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நிறம் என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. வீடு, அலுவலகம், பொதுவெளி என்று எங்கேயும் எப்போதும் சிவப்புக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கிறவர்கள், கறுப்பு நிறத்தை அத்தனை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. சிவந்த, அழகான என்பவை மட்டும்தான் மணப்பெண்ணுக்கான தகுதிகளா? பல்வேறு நிறுவனங்களில் வரவேற்பாளராகவும், விற்பனைப் பிரிவில் வேலை செய்யவும் சிவந்த நிறம்தான் அடிப்படைத் தேவையா? அங்கே அறிவு ஏன் இரண்டாம்பட்சமாக்கப்படுகிறதா? அறிவைவிட நிறம் சக்தி வாய்ந்ததா?
நன்றி - thihindu
...மேலும்

May 23, 2015

யாழில் பெண் விடுதலை சிந்தனை நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்

பெண் விடுதலை சிந்தனை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்தும் பெண் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் யாழ் நகரில் தடுக்கப்பட்டதால் கொக்குவிலில் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.


...மேலும்

காலத்தால் அழியாத பெண் எழுத்து - பிருந்தா சீனிவாசன்


குடும்பச் சங்கிலிகளும் சமூகக் கட்டுக்களும் பெண்களைப் பிணைத்திருந்த காலத்திலேயே எழுத்தைத் தங்கள் விடுதலைக்கான ஆயுதமாக பெண்கள் ஏந்தினர். கழிவிரக்கமோ, சுயபச்சாதாபமோ இல்லாமல் புரட்சியைச் சுமந்துவந்த பெண்களின் எழுத்துகள், சமூக மாற்றத்துக்கான விதையைத் தூவிச் சென்றன. குடும்ப அமைப்புகளையும் அதில் மலிந்திருக்கும் அவலங்களையும் பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மூலம் கேள்விக்குள்ளாக்கினர். தங்கள் மீதான எதிர்மறை விமர்சனங்களையே தங்கள் எழுத்துக்கான உந்துசக்தியாக மாற்றிக்கொண்ட பல பெண்கள், சமூகப் பங்களிப்பை விரிவுபடுத்தினர். முதல் தலைமுறை பெண் எழுத்தாளர்கள் போட்டுத் தந்த பாதையிலும் புதிய கோணத்திலும் அடுத்த தலைமுறை தடம் பதித்தது. பொருளாதார முன்னேற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இன்று பெண்களின் வாசிப்புக்கான வாய்ப்பை ஓரளவுக்குச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. சமூக மாற்றத்தை முன்னெடுத்த இந்திய பெண் படைப்பாளிகளின் குறிப்பிடத்தகுந்த சில படைப்புகளை இங்கே பார்க்கலாம்.

பெண்ணின் ஆழ்மனக் கேள்வி

இருபதாம் நூற்றாண்டின் முன்னோடி பஞ்சாபிப் பெண் கவிஞராக அறியப்படும் அம்ரிதா ப்ரீதம், நாவல் எழுதுவதிலும் தேர்ந்தவர். அவர் எழுதிய Pinjar (எலும்புக்கூடு) என்ற நாவல், பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த நாவலில் வரும் ‘புரோ’ என்ற பெண் கதாபாத்திரம் காலத்தால் அழியாதது. பெண்கள் மீதான வன்கொடுமைக்கும் விதியின் பெயரால் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கும் புரோவே சாட்சி. இந்துக் குடும்பத்தில் பிறந்த புரோவை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ரஷீத் என்பவன் கடத்திவிடுகிறான். ‘தீட்டுப்பட்ட’ அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது புரோவின் குடும்பம். கையறு நிலையில் விடப்படுகிற புரோ, மீண்டும் ரஷீத்திடமே செல்கிறாள். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானது பிஞ்சார். அரசியலை மட்டுமல்ல, பெண்ணின் ஆழ் மன உணர்வுகளையும் அதில் வெளிப்படும் கேள்விகளையும் பதிவுசெய்த வகையிலும் பிஞ்சார் முக்கியத்துவம் பெறுகிறது.

கலாச்சாரக் குழப்பம்

புலம்பெயர் இந்தியர்களின் மனநிலையை நுட்பமாகப் பதிவுசெய்பவர் ஜும்பா லஹிரி. இவர் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு Interpreter of Maladies. புலிட்சர் பரிசு பெற்ற இந்தத் தொகுப்பு உலகம் முழுவதும் 1.5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. கலாச்சாரம், மரபு ஆகியவை வாழ்க்கை மீது செலுத்தும் ஆதிக்கத்தை நேர்த்தியுடன் பேசுகின்றன இந்த சிறுகதைகள். ஒன்பது விதமான சூழ்நிலைகள், மனிதர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசும் இந்தத் தொகுப்பில் கலாச்சார நம்பிக்கைகள் மீதான கேள்வி அடிநாதமாக இழையோடுகிறது.

தலைமுறை இடைவெளி

பெண்களின் உள்ளத்தில் கனன்றுகொண்டிருக்கும் உணர்வுகளையும் உள்ளொளியையும் வார்த்தைகளாக வடிப்பவர் அனிதா தேசாய். இவர் எழுதிய Fire on the Mountain நாவல், பாட்டிக்கும் கொள்ளுப் பேத்திக்கும் இடையே நடக்கும் உணர்வுப் பரிமாற்றத்தைப் பேசுகிறது. கணவனின் இறப்புக்குப் பிறகு தன் இறுதி நாட்களைக் கழிக்க ஒரு மலையுச்சியைத் தேர்ந்தெடுக்கிறார் நந்தா கௌல். அவரது தனிமைக்குப் பங்கமாக வந்து சேர்கிறாள் நந்தாவின் கொள்ளுப் பேத்தி ராக்கா. அவள் வருகைக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள், திகிலூட்டும் பயணம்போல் விரிகின்றன.

பெண்ணின் தேடல் வேட்கை

பலரும் பேசத் தயங்குகிற, பயப்படுகிற சங்கதிகளைத் துணிச்சலுடன் முன்வைத்தவர் உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். சிறுகதைகளில் பெரும் பொருளைப் பேசி விவாதங்களுக்கு வித்திட்டவர். இவரது சிறுகதைத் தொகுப்பான Quilt and Other Stories, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. அதில் இடம்பெற்றிருக்கும் Lihaaf (The Quilt) என்னும் சிறுகதை, பெண்ணின் பாலியல் தேர்வு குறித்து விரிவாகப் பேசுகிறது. பேகம் ஜான், வயதானவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். தன் கணவருக்குப் பெண்களைவிட ஆண்கள் மீதுதான் ஈடுபாடு என்பது பேகம் ஜானுக்குத் தெரியவருகிறது. உடைந்துபோகிற அவளின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கிறாள் அவளுக்கு உடம்பு பிடித்துவிடும் வேலை செய்யும் ராபு. இந்த இரண்டு பெண்களுக்கு இடையேயான உறவு, பல்வேறு கேள்விகளை இந்தச் சமூகத்தின் முன் வைக்கிறது.

சொல்லப்படாத கதை

மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் எழுதிய சுயசரிதையான Ente Katha (My Story), பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இது இந்தியப் பெண்களின் சுய சரிதைகளில் மிக முக்கிய மானது. கால வரிசைப்படி அமைந்த சம்பவங்களும் நேரடியான விவரிப்பும் ஒரு நாவல் போலவே இந்தப் புத்தகத்தை உணரச் செய்கின்றன. தன் அக வாழ்க்கை தந்த வேதனைகளையும் அதை மீறி வெளிப்பட்ட தன் சுய எழுச்சியையும் கமலா தாஸ் இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். சுயசரிதையாக இந்தப் புத்தகம் அங்கீகரிக்கப் பட்டாலும் நடுவே சில புனைவுகளைச் சேர்த்திருப்பதாகக் கமலா தாஸ் சொல்லியிருக்கிறார்.

முகமற்றவர்களின் வாழ்வு

சுதந்திரப் போராட்ட வீராங்கனை, இந்திக் கவிதைகளின் முக்கியத் தூண், பெண் கல்விக்கான களம் அமைத்தவர் என்று பல அடையாளங் களைக் கொண்டவர் மகாதேவி வர்மா. ஒடுக்கப்பட்ட பெண்கள், சமூகத்தால் புறக்கணிக்க பட்டவர்களைக் குறித்து இவர் எழுதிய

Sketches from My Past : Encounters with India's Oppressed என்ற புத்தகம் நம் சமூக அமைப்பில் இருக்கும் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தனக்கு நன்கு அறிமுகமான வர்களின் வாழ்க்கையை இதில் பதிவுசெய் திருக்கிறார். வளர்ப்புத் தாயால் கொடுமைக்கு ஆளாகும் சிறுமி, உடலாலும் மனதாலும் சிதைவுக்குள்ளாகும் விதவைச் சிறுமி, குழந்தை பிறந்ததுமே கணவன் ஓடிப்போய்விட தனிமையில் வாழ்க்கையை நகர்த்தும் துப்புரவுத் தொழிலாளி என ஒவ்வொரு முகமும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் துயரம் தோய்ந்த கதைகளும் மரித்துப் போய்விட்ட மனிதத்துக்குச் சாட்சியாக இருக்கின்றன.

அடக்குமுறைக்கு எதிரான எழுத்து

சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஓங்கி ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் மகாஸ்வேதா தேவி. Of Women, Outcastes, Peasants, and Rebels என்ற சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய ஆறு சிறுகதைகள் இடம் பெற்றிருக் கின்றன. நிலமற்ற பழங்குடியின மக்களைப் பற்றியும், தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள் மீது இந்தச் சமூகம் செலுத்தும் கொடூரமான ஆதிக்கம் குறித்தும் தன் சிறுகதைகளில் அழுத்தமாகப் பேசுகிறார். நம் சட்டம் வரையறுத்து வைத்திருக்கும் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படுகிற தீண்டத்தகாதவர்கள் குறித்தும் அவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற திட்டமிட்ட சுரண்டல் குறித்தும் புதிய பார்வையை இந்தச் சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. உயர் வகுப்பைச் சேர்ந்த சர்வாதிகார குணமுடைய நில உரிமையாளர்கள், அநியாய வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், இவற்றைக் கண்டுகொள்ளாத ஊழல் மலிந்த அரசு அதிகாரிகள் ஆகியோரால் அடக்கி வைக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை படம்பிடித்துக் காட்டும் ஆவணம் போல இந்தச் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

பொங்கும் புதுப் புனல்

பயணித்த பாதைகளைத் தவிர்த்துப் புதிய தடம் பதித்தவர்களில் முக்கியமானவர் வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணா தேவி. இவர் எழுதிய The First Promise என்ற நாவல், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பெண்கள் சந்தித்தப் போராட்டங்களைச் சித்திரிக்கிறது. எளிய நடையிலும் உரையாடல் பாணியிலும் அமைந்த இந்த நாவல், தொடர்ந்து பலரால் விமர்சிக்கப்பட்டது. கிராமப் பெண்ணான எட்டு வயது சத்தியவதி, தன் கணவனுடன் கொல்கத்தாவில் குடியேறுகிறாள். அங்கே கிடைக்கிற பெண் கல்வி, சமூக சீர்திருத்தங்கள், நவீன மருத்துவம், பொழுதுபோக்கு ஆகியவை சத்தியவதியை வெகுவாகப் பாதிக்கின்றன. தன் மகளின் வளர்ச்சிக்கு நல்லதொரு சூழல் கிடைத்துவிட்டதாக நம்பும் அவளுக்குக் கடைசியில் வெறுமையே மிஞ்சுகிறது. அந்த வெறுமை நவீனமயமாக் கலுக்கும் மரபார்ந்த உரிமை களுக்கும் இடையே இருக்கிற இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.

நீடித்த மௌனம்

சசி தேஷ்பாண்டேவின் எழுத்துகள், யதார்த்தத்தின் வழி நம்மைச் செலுத்தும் சக்தி வாய்ந்தது. கல்வியும் பொருளாதாரமும் கிடைத்துவிட்டால் மட்டுமே பெண் முன்னேறிவிட்டாள் என்பதை மறுக்கும் வகையில் இவர் எழுதிய That Long Silence நாவல், மும்பை புறநகர்ப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஜெயாவை மையமாக வைத்து நகர்கிறது. திடீரென வேலையிழந்துவிட்ட கணவன், அதனால் தொடரும் அவனது அடுக்கடுக்கான கேள்விகள், மன உளைச்சல், ஏமாற்றம் தரும் வளரிளம் பருவக் குழந்தைகள், தோற்றுப்போன எழுத்தாளர் என்ற தன் அடையாளம் ஆகிய இவற்றுக்கு நடுவே ஜெயா தன் வாழ்வை இறுகப் பற்றியபடி இருக்கிறாள். சிறுவயதில் தொடங்கி தற்போது வரை தன்னுள் ஆழமாகப் பதிந்துவிட்ட நீடித்த மௌனத்தை அழித்தொழிப்பது எப்படி என்ற கேள்வி ஜெயாவுக்குள் நீள்கிறது.

ஒரு நாடு பல முகம்

நயன்தாரா சேகல், நம் அரசியல், சமூக அமைப்பில் இருக்கும் சீர்கேடுகளையும் அதிகார மட்டங்களில் நிறைந்திருக்கும் அநீதிகளையும் கேள்விக்குட்படுத்துகிறார். ஆடம்பரமும் உன்னதமும் நிறைந்த இந்தியாவின் பழமைக்கும் ஏமாற்றமும் ஊழலும் மலிந்திருக்கும் இந்தியாவின் தற்போதைய நிலைக்கும் இடையே இருக்கும் இடைவெளியைச் சொல்கிறது இவரது Rich Like Us நாவல். இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்ததைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவலில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நினைவு படுத்தும். நெருக்கடி நிலை சிலருக்கு ஆதாயத்தையும் சிலருக்கு ஆபத்தையும் தர, அரசுத் தேர்வில் தர வரிசையில் முதலிடம் பிடித்த சோனாலிக்கோ ஒரு கனவின் சிதைவாகத் தோன்றுகிறது. லஞ்சம் வாங்கத் தயங்காத சக ஊழியர், கம்யூனிசச் சிந்தனையுள்ள நண்பனும் ஊழலுக்குத் துணைபோக வேண்டிய அவல நிலை, ஒரு தவறும் செய்யாத ஒருவர் சிறையில் அவதிப்படும் கொடுமை என்று சோனாலியைச் சுற்றி நடக்கிற ஒவ்வொன்றும் அவளுக்குள் மட்டுமல்ல அனைவருக்குள்ளும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
...மேலும்

May 22, 2015

"ஏனெனில் அவள் தமிழச்சி புங்குடு தீவு எனும் சிறு கிராமத்தவள்.." - ஷமில தலுவத்த


அவர்கள் மன்னம்பேரியை 
பாலியல் பலாத்காரம் செய்து
அவளை உயிருடன் புதைத்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.
பின்னர் அவர்கள்
ககவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல.
நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் நுரிவத்தவில் வாழவில்லை.
பின்னர் அவர்கள்
வடக்கின் மகளீரிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா
இவர்கள் என் சகோதரிகளல்ல.
பின்னர் அவர்கள்
வேறு தோல் நிறம்கொண்ட 
பெண்ணிடம் வந்தார்கள்
கூட்டாய் எட்டுப்பேர்
விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை
பாலியல் பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் வெளிநாட்டவள் என்பதால்.
அந்தக கோரக் கும்பல்
ரீட்டா ஜானை 
பாலியல் பலாத்காரம் செய்தது
அவளது உடல் 
பதினைந்துமுறை குத்தப்பட்டு
மொடேரா கடற்கரையில் 
வீசப்பட்டது.
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் ஒரு இந்தியப் பெண் என்பதால்.
அவள் மாலை வேளை
நகைகள் அணிந்து
கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து
வினையை தானே தேடிக்கொண்டாள்.
பின்னர் அவர்கள் விஜேராமவில் 
பெண் ஒருவரை பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் ஒரு விபச்சாரி என்பதால்.
பின்னரும் அவர்கள் 
நூற்றுக்கணக்கான கன்னிகளை
பலாத்காரம் செய்தார்கள்
சம்பையின் மதுவுடன் 
அக்குரசவிலும் மொனராகலையிலும்
கொண்டாடினார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
எனக்கு அரசியல்வாதிகளுக்கு பயம்.
பின்னர் அவர்கள்
லோகராணியை 
பாலியல் பலாத்காரம் செய்து
புனித தலமொன்றில் நிர்வாணமாய்
உடலை வீசியெறிந்தார்கள்
கும்பலாய் அவர்கள் 
சரண்யா செல்வராசாவை
பாலியல் பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை.
இன்று அவர்கள்
வித்தியா சிவலோகநாதனை
பாலியல் பலாத்காரம் செய்தனர்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் தமிழச்சி
புங்குடு தீவு எனும்
சிறு கிராமத்தவள்.

- Shamila Daluwatte-
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்