/* up Facebook

Apr 9, 2015

பகுத்தறிவுவாதிகளின் தாலி பறிப்பும், பஞ்சாலைகளின் சுமங்கலித் திட்டமும் - ஜீவசகாப்தன்


திராவிடர் கழகம் அம்பேத்கர் பிறந்த நாளில் அறிவித்துள்ள தாலி அகற்றும் போராட்டம் ஊடகங்கள் மற்றும் மதவாத அமைப்புகளால் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. தாலி அகற்றும் விழா என்று திராவிடர் கழகம் அறிவித்தாலும், தாலி அறுப்பு விழா என்றே மதவாத அமைப்புகள் விமர்சிக்கின்றனர். சில சாதிய அமைப்புகளும், தாலி கழட்டும் போராட்டத்திற்கு எதிராக அணியமாகின்றனர்.

தாலி இந்து பண்பாடா?

thaaliதாலியை சிலர் இந்து பண்பாடு என்கிறார்கள். மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில், பிரான்மலை கள்ளர் சமூகத்தினர் இசுலாமியர்களைப் போல் கடுகமணி அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இந்து அய்யங்கார் தாலி பிரான்மலை கள்ளருக்கு அந்நியமாக இருக்கிறது. இசுலாமியர்கள் அணிந்து கொள்ளும் தாலி அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. அப்படியென்றால், தாலியை இந்து மதத்தின் பொதுவான அடையாளமாக சித்தரிப்பது முரண்பாடு.

தாலி தமிழர்களின் பண்பாடா?

தமிழர்களின் அடையாளம் தாலி என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. கி. பி. 9ம் நூற்றாண்டிற்கு முன்னால் பக்தி இயக்கம், பதினெண் கீழ்கணக்கு, மேல்கணக்கு நூல்கள், அதற்கு முன்னால், நீதி நெறி இலக்கியங்கள், திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்ற தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடும் தொல் தமிழ் இலக்கியத்திலும், சமூகத்திலும் இந்த தாலி கிடையாது. ஏன் இன்று வரை கற்புக்கரசி பத்தினி என பண்பாட்டு காவலர்கள் போற்றும் கண்ணகி கூட தாலி அணிந்ததாக தரவுகள் இல்லை. ஆகவே, தமிழர் பண்பாடு என்று தாலியை முன்னிலைப்படுத்துவது தமிழினத்தின் மாண்பை கொச்சைப்படுத்தும் முயற்சி.

பெண்ணுரிமைச் சின்னமா தாலி?

தாலியை பெண்களின் அடையாளமாவுகம். அந்த அடையாளத்தை பெரியாரியர்கள் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாலி பெண்ணின் உரிமை என்றால், தான் எந்த தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? கொண்டய கோட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மறவர் சமூகப் பெண்கள் அணியும் தாலியை அணிய முடியுமா? என்றால் முடியாது. பார்ப்பன சமூகத்தில் அய்யர் தாலி வேறு, அய்யங்கார் தாலி வேறு. சிறு தாலி, பெரு தாலி, குண்டு தாலி என தீர்மானிப்பது அந்த பெண் சார்ந்திருக்கும் சாதியே. அந்த பெண்ணால் தனக்கு விருப்பமான வடிவத்தில் தாலியை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது. நடிகர் பிரசன்னாவிற்கும் நடிகை சிநேகாவிற்கும் திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் அறிந்தது. அப்போது சிநேகா, இரண்டு முறை தாலி அணிந்தார். எதற்காக, தான் சார்ந்த நாயுடு சமூகத்திற்காக ஒரு தாலி, தன்னுடைய கணவர் சாதியான பார்ப்பன சமூகத்திற்காக ஒரு தாலி என்று இரண்டு வகையான தாலியினை சிநேகா அணிந்தார். இந்த பாக்கியத்தை பெறுவதுதான் பெண்ணுரிமை என்கிறார்களோ. அப்படி பார்த்தால், சிநேகா இரட்டை உரிமை பெற்றவராவார்(!).

தன் பிறந்த சாதியை திருமணத்தின் மூலம் உலகிற்கு அழுத்திச் சொல்லும் வடிவமே தாலி. பிள்ளை பெற்றுத் தருவது, ஆணிற்கு சேவை செய்யும் எந்திரமாக இருப்பது பெண்ணிற்கு கடன் என்கிற பழமைவாதத்திற்கு வலு சேர்க்கும் பொருளே தாலி. சாதியமைப்பையும், ஆணாதிக்கத்தையும் இன்றைய நவீன உலகிலும் அதன் உள்ளடக்கம் மாறாமல் பாதுகாக்கும் கருவியே தாலி. பெண் விடுதலை பேசும் இளம் பெண்கள் பலருக்கும் தாலி மறுப்பு சிந்தனை வருவதில்லை. நகை அணிவதை தன்னுடைய உரிமையாக நினைக்கும் பேதைமைத்தனத்திலிருந்து இந்த சிந்தனை வருகிறது. தற்போதைய நுகர்வு கலாச்சாரத்திற்கு பலியாகிப் போன பெண்களுக்கு தாலி மறுப்பு சிந்தனை வருவதில்லை என்கிற உண்மையை உணர வேண்டும்.

இந்திய அளவில் இந்துத்துவ எதிர்ப்பில் மற்ற எல்லா அமைப்புகளையும் விஞ்சி நிற்கும், இடதுசாரிகள் கூட தாலி எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபட பயப்படுகிறார்கள். ஒரு வேளை இடது சாரித் தொண்டர்களுக்கு கூட தாலி குறித்த உருவகத்தில் மயக்கம் இருக்கிறதா? என்று தெரியவில்லை.

பெண்ணுரிமை செயல்பாடுகளில் திராவிட இயக்கங்களையும், இடது சாரி இயக்கங்களையும் மறு வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்று புரட்சிகர சிந்தனைகளுடன் முழங்கும் புதிய பெண்ணுரிமைப் போராளிகள் கூட தாலி எதிர்ப்புப் பரப்புரையில் ஈடுபடுவதில்லை.

சுமங்கலி பெருமையும், பெண் உரிமையும்

ஒரு பெண் தன் வாழ்நாளில் செய்யக் கூடிய மிகப்பெரிய பேறு என்ன தெரியுமா? அவள் சுமங்கலியாய் இறப்பதுதான். அதாவது கணவனுக்கு முன்னால் இறப்பது தான். ஒரு பெண்ணின் பெருமையே ஆணிற்கு முன்னால் சாவதுதான். கணவனுக்கு சேவை செய்யும் பாக்கியம் இருக்கும் போதே உயிர் போய்விட வேண்டும். அதைத் தாண்டி , கணவன் இறந்த பிறகு வாழ்ந்தால், அவள் முண்டச்சி, விதவை என்கிற அவப் பெயர்களுடன்தான் வாழ வேண்டும்.

நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தாலும் முண்டச்சி, முண்டச்சி தான் என்று அழுத்தமாகச் சொன்னவர் சங்கராச்சாரியார்தான். அந்த வகையறாக்களின் தத்துவம்தான் இந்த சுமங்கலி தத்துவம். இந்த ஆணாதிக்க சுமங்கலித் தத்துவத்தின் எதிர்ப் பதம்தான் தாலி அறுப்பு. இப்போது சொல்லுங்கள் சுமங்கலி என்கிற பெயரை பயன்படுத்தி பெண்களை அடிமைப் படுத்துவது சரியா? தாலி அறுப்பு என்று சொல்லி பெண்ணின் தன்மானத்தை நிலைநாட்டுவது சரியா?

சுமங்கலி என்கிற பெயர் மயக்கத்தில் எப்போதும் பெண்கள் இருப்பது யாருக்கு சாதகம் ? நகைக்கடை முதலாளிகளுக்குத் தான். பெண்களிடம் திணிக்கப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கைகளை பயன்படுத்தி தொழிற்சாலை அதிபர்கள் சந்தைபடுத்திக் கொள்ளும் சுரண்டலையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருப்பூரில் சுமங்கலி பஞ்சாலைத் திட்டம் என்கிற பெயரில் பருவப் பெண்களின் உழைப்பை சுரண்டும் செயல் நடைபெற்று வருகிறது. பதினெட்டு, இருபது வயதில் இருக்கும் ஏழைப் பெண்களை குறி வைத்து நடத்தப்படுகிற திட்டம் இது. விடுப்பு கிடையாது, மரியாதை கிடையாது, போதுமான வருமானம் கிடையாது. இது போதாது என்று இரட்டை அர்த்த வசனத்தில் அவ்வப்போது திட்டுகள், பாலியல் சீண்டல்கள் இதுதான் சுமங்கலித் திட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவலங்கள். இவ்வளவு மோசமான திட்டத்தில் பெண்களை எப்படி கவர்ந்தார்கள்? அதற்கு அவர்கள் பயன்படுத்திய யுக்திதான் சுமங்கலி என்கிற சென்டிமெண்ட். ஒரு பெண்ணின் பிறவிப் பயனே சுமங்கலியாய் வாழ்வதுதானே, அந்த சுமங்கலி பாக்கியத்தை அடைவதற்காகத்தான் இந்த இன்னல்களை பெண் அனுபவிக்கிறாள். பெண்களை அடிமைப்படுத்த அவமானப்படுத்த அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பஞ்சாலை அதிபர்கள்.

இந்துத்துவ நம்பிக்கை, ஆணாதிக்க சிந்தனை, முதலாளித்துவ சுரண்டல் மூன்றும் கைகோர்த்து நடத்தும் கோரத் தாண்டவம் பஞ்சாலை சுமங்கலித் திட்டம். ஆனால், இந்த திட்டத்தை விமர்சிக்கும் இடதுசாரித் தோழர்களும் சரி, தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் சரி இதை வர்க்கசுரண்டலாக மட்டுமே பார்க்கின்றனர். இந்துத்துவத்திற்கும் ஆணாதிக்க பண்பாட்டிற்கும் உள்ள பிணைப்பே இந்தத் தாலி என்பதை சமூக மாற்றத்திற்கான சிந்தனையாளர்கள் அனைவரும் உணர வேண்டும்.

முற்போக்கு சிந்தனையாளர்களாகிய நாம் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள். அதே சமயம் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள். அந்த பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கைகளுக்கு நீங்கள் பயந்தீர்கள் என்றால், உங்களுடைய முற்போக்குச் சாயம் வெளுத்து விடும்.

இந்துத்துவ எதிர்ப்பை வெறும் மோடி எதிர்ப்பு என்று குறுக்கி பார்த்து விடாதீர்கள். தாலி அறுப்பிலிருந்து குறைந்த பட்சம் தாலி மறுப்பிலிருந்தாவது உங்களுடைய இந்துத்துவ எதிர்ப்பை தொடங்குங்கள்.

தாலி சம்பிராதயங்கள் ஒழியட்டும்! பாலின சமத்துவம் மலரட்டும்.!
நன்றி - கீற்று

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்