/* up Facebook

Apr 8, 2015

எனது நாட்டில் ஒரு துளி நேரம்.


நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. 240 பக்கங்கள் கொண்ட இந் நூலை விடியல் பதிப்பகம் 2013 இல் வெளியிட்டுள்ளது. புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும்.

வெளியிலிருந்து ஊடகவியலாளர்கள் வன்னிக்குள் வருவதை இலங்கை அரசு தடைசெய்திருந்தது. தம்மை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை புலிகள் தடைசெய்திருந்தார்கள் அதனால் வன்னி பற்றிய செய்திகள் ஒருவித இருட்டடிப்பு நிலைக்குள் போயிற்று. ஐநா உட்பட மற்றைய சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகளினூடகவும், புகலிட தமிழர்களிள் இணையவழி ஊடாகவும் வன்னிச் செய்திகள் வெளியில் வந்தன. அதுவும் புகலிட தமிழர்களின் இணையங்கள் புலியாதரவு என கணிக்கப்பட்டதால், அவற்றில் வரும் செய்திகளுக்கு சர்வதேச ரீதியில் உரிய பெறுமானம் இருக்கவில்லை என்கிறார்.

சில பொதுமக்களுக்கான அமைப்புகளாக,
1. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
2. பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு மையம்.
3. வட-கிழக்கு மனித உரிமைச் செயலகம் (நிசோர்)
4. செந்தளிர் (2. இன் சிறுவர் இல்லம்)
5. குருகுலம் (1. இன் சிறுவர் இல்லம்)
என்பவற்றையும்,
விடுதலைப் புலிகளின் நிறுவனங்களாக,
1. பெண்கள் ஆய்வு மையம்
2. தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி
3. வழங்கல் (போராளிகளுக்கான விநியோகத்தளம்)
4. செஞ்சோலை (பெண் சிறுவர்களுக்கான இல்லம்)
5. காந்தரூபன் (ஆண் சிறுவர்களுக்கான இல்லம்)
6. அறிவுச்சோலை
7. அன்புச் சோலை
8. மயூரி இல்லம் (ஊனமுற்ற பெண்போராளிகளுக்கான மையம்)
9. மக்கள் தொடர்பகம்
10. நவமறிவுக் கூடம் (ஊனமுற்ற போராளிகளுக்கான கல்வி நிலையம்)
என அமைப்புகளை வரிசைப்படுத்துகிறார் மாலதி அவர்கள்.

அரசியல்துறை, நீதித்துறை, நிதித்துறை போன்ற துறைகளுக்குக் கீழ் கிளைப் பிரிவுகளாகவும் சில அமைப்புகள் இயங்கியிருக்கின்றன. அதைவிட சிறுவர் பூங்கா, பொத்தக சாலை- நூல்நியைம், கடைகள்வழங்கல் (கோழிப் பண்ணை, வாழை உட்பட தோட்டங்கள்) நுண்கலைக் கல்வி (சினிமா, தொலைக்காட்சி, படப்பிடிப்பு துறைகளுக்கானது), உடற்பயிற்சி ஊக்குவிப்பு(குறிப்பாக கராத்தே), பொதுமக்கள் போக்குவரத்து இப்படியாய் பல சமூக நிர்மாண அமைப்பு வலைப்பின்னல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
புலிகளின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் போக, புலிகளின் “ஆட்சி நிறுவனங்களாக“ இயங்கியவற்றில் தவிர்க்க முடியாமல் மக்களின் பங்களிப்பு நிகழ்ந்த விதங்களை இந்நூலில் மாலதி சுட்டிக் காட்டுகிறார். பொதுப்பணித் துறையில் மக்களின் வாழ்வாதாரமும் தங்கியிருந்தது. ஒரு மூடுண்ட அரசாட்சியாக வன்னி விளங்கியதான பார்வையிலிருந்து எனது வாசிப்பு விலகமுடியவில்லை.

மையத்திலிருந்து விரிவுபட்டு இந்த வாழ்வியல் வலைப்பின்னல் இதன் நுனிவரை வியாபித்ததான ஓர் உணர்வு நூலை வாசித்து முடித்தபின்னும் நீங்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிலிருந்து பாதிக்கப்பட்ட போராளிகளினூடாக, வாழ்வின் இறுதியை வந்தடைந்த முதியவர்கள்வரை அவர்களின் பராமரிப்புகளுக்கான பல அமைப்புகள் இயங்கியிருக்கின்றன. அவற்றையெல்லாம் விலாவாரியாக மாலதி விளக்கியிருக்கிறார்.
இவற்றுள் நடந்த விவாதப் பொருட்கள் உள்ளகப் பிரச்சினைகளை விவாதிப்துடனும், கோட்பாட்டுப் புரிதலற்ற விளக்கங்களுடன் அதை அணுகுவதுடனும், அதை புலிகளின் தலைமைக்கு அல்லது மையத்துக்கு வெளியே வைத்து விவாதிக்கமுடியாமல் சுழன்றதையும் அவதானிக்க முடிகிறது. முக்கியயமான விவாதப் பொருளாக கட்டாய ஆட்சேர்ப்பும், பெண்கள்நல திட்டங்களும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் மாலதி அவர்கள். கிரிக்கட் உலகக் கோப்பைக்கான போட்டிகள் எப்போதுமே முக்கிய விவாதப் பொருளாக அமைவதுண்டு என்ற தகவலையும் தருகிறார்.

இந்த விவாதக் களங்கள் மையத்தை பாதித்துவிடக் கூடாது என்ற வரையறைக்குள், அதுவும் பொதுப்புத்தி மட்டத்துள் நிகழ்ந்திருப்பதுபோல் உணரமுடிகிறது. சுpந்தனைகளில் ஒரு ஜனநாயக வெளியை திறந்துவிடக்கூடிய யன்னல்கள் மிகச் சிறிதாகவே இருந்திருக்கிறன.
செஞ்சோலை பற்றி அவர் குறிப்பிடும்போது அங்கு நுழைந்தால் அங்கு விடுதலைப் புலிகளின் சின்னங்களும், படிமங்களும், படங்களுமே வரவேற்கும் உறுப்பினர்களும் அவர்களது சீருடையில் சாதாரணமாக வந்துபோவார்கள் என்கிறார். இவையெல்லாம் செஞ்சோலை போன்ற சிறுவர் இல்லங்கள், சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்களின் மனதில் ஒரு இராணுவமயப்பட்ட மனநிலைகள் அரும்பி, படிப்படியாய் வளர்ச்சியடையும் சூழலை மாலதி சரியாகவே அடையாளம் காட்டுகிறார். அதேபோல் புலிகளின் போராளிகளை மையப்படுத்திய கொண்டாட்டங்கள் எவ்வாறு சமூகத்துள் ஒரு புதிய கலாச்சாரமாக வளரத்தொடங்கியது போன்ற விடயங்களையும் அவர் உளவியல் தளத்தில் வைத்தும் சமூகவியல் பார்வையுடனும் பார்க்க முனைந்திருப்பது இந் நூலின் சிறப்பு என சொல்லலாம்.

சர்வதேச அமைப்புகளுடன் நடந்த சந்திப்பெல்லாம் சக்தியை விரயம் செய்யும் ஒரு பெரிய நாடகமாகவே இருந்தது என்கிறார் மாலதி. அவர் இச்சந்திப்புகள் பலதிலும் மொழிபெயர்ப்பாளராக இருந்ததிலிருந்து அவர் கொண்ட அவதானம் இது. அரசியல் ரீதியில் இது புரிந்துகொள்ளப்படக் கூடியதும்தான். இந்த நாடுகளின் அதாவது மேற்குலகின் அரசியலை இதற்குள்ளால் புரிந்துகொண்டு, காய்களை நகர்த்துவதற்குப் பதிலாக, இதை புலிகள் சகட்டுமேனிக்கு கையாண்டுகொண்டிருந்தார்களா என கேட்கத் தோன்றுகிறது.


அவர் கூறும் சில விடயங்களை சுருக்கமாகத் தொகுத்தால்,
1. செஞ்சோலையில் புலிகளின் அடையாளமயமாக்கல் சிறுவர்களின் மனதைப் பாதித்த விடயங்களை சொல்லியிருக்கிறார்.

2. 2009 இன் ஆரம்பத்தில் செஞ்சோலை, அறிவுச் சோலை ஆகிய சிறுவர் இல்லங்களிலிருந்து வளர்ந்தவர்களை புலிகள் தமது அமைப்பில் இணைத்து போர் முனைக்கு அனுப்பியதாகவும், அவர்கள் 18 வயதை எட்டியவர்களா என்பது தனக்குத் தெரியாது எனவும் குறிப்பிடுகிறார்.

3. தமிழர் விழாவான தைப்பொங்கல் ஒரு சமயச்சார்பற்ற விழாவாதலால், இதை ஒரு தேசிய விழாவாக பெரிதாக புலிகள் கொண்டாடுவார்கள் என்கிறார்.

4. வன்னி ஊடகங்களில் சாதிக்கொடுமை அழிந்துபோன சமூகக் கொடுமைகளாகப் பார்க்கப்பட்டது. புலிகளில் பல முதுநிலை, இளநிலை உறுப்பினர்களிடையிலும், அவர்களுக்கிடையிலான திருமணங்களிலும் சாதி ஒரு பொருட்டாக கணக்கிலெடுக்கவில்லை என்கிறார்.

5. இருதரப்பும் ஏராளமான போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களை செய்துள்ளார்கள் என்பதே உண்மை என்கிறார்.

6. வன்னியில் அதிக விகிதாசாரப் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். மோட்டார் சைக்கிள் ஓடும் பெண்களும் தீவின் ஏனைய பகுதிகளை விட வன்னி வீதிகளில் அதிகம் காணப்பட்டார்கள். பொதுமக்களைப் பணியாளர்களாகக் கொண்டிருந்த புலிகளின் நீதிநிர்வாகத்திலும் அதனோடு சேர்ந்த காவல் துறையிலும் ஏறத்தாழ 50 சதவீதம் பெண்கள் பணியாற்றினர். தலைமைத்துவம் கொடுக்கக்கூடிய ஆளுமையான (பாரதி, வானதி போன்ற) பெண்களை களமுனைக்கு அனுப்பியதன்மூலம் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை தெரிவிக்கிறார்.

7. பேண்போராளிகள் சீருடை அணியும் அதே நேரம், விடுதலைப் புலிகளின் நிறுவனங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பொதுப் பெண்கள் சேலை அணியுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

8. போர் காரணமாக வன்னியில் பெருமளவு இளவயது கணவனை இழந்தவர்கள் இருந்ததால், மீள் திருமணங்கள் பொது மக்களிடையேயும் அமைப்பின் உறுப்பினர்களிடையேயும் அதிகமாக நடந்தன என்கிறார்.

9. சர்வதேச நிறுவனங்களின் பணியாளர்கள் இந்த மக்களின் மனோதிடத்தை வியந்திருக்கிறார்கள். அதற்கு விடுதலைப் புலிகள் மட்டும் காரணமல்ல, தமிழ்க்கலாச்சாரத்தின் பல அம்சங்களும் (கூட்டுவாழ்க்கை முறையால் வந்தவை) இம் மக்களுக்கு தாங்கும் சக்தியைக் கொடுத்தன என்கிறார்.

10. வன்னி மக்கள் தாம் வெளியேற முயன்ற போது, தம்மை நோக்கி துப்பாக்கிச் சூடுகள் வந்ததென்று ஆத்திரத்துடன் பேசினார்கள். அவர்களெல்லோரும் விடுதலைப் புலிகளே தம்மை நோக்கிச் சுட்டதாக நம்பினார்கள். (ஓரிடத்தில்).

11. இன்னோரிடத்தில் சொல்கிறார் போர் நிலத்திலிருந்து தாம் வெளியேறியபோது இலங்கை இராணுவத்தாலோ விடுதலைப் புலிகளாலோ சுடப்படுவோம் என்ற பெரும் பீதியுடனேயே மக்கள் வெளியேறினார்கள் என்கிறார்.

12. டிசம்பர் 2009 இல் மெனிக் பாமிலிருந்து பெரும்தொகையினர் தமது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் அங்குள்ள “துணைக்குழுக்களின்“ சித்திரவதைகளும் தொல்லைகளும் தாங்க முடியாமல் இரகசியமாக மீண்டும் மெனிக்பாம் முகாமுக்கு திரும்பிச் சென்றவர்களும் உண்டு என்கிறார்.

செஞ்சோலைப் படுகொலை பற்றிய குறிப்பு முக்கியமானதாகப் படுகிறது. செஞ்சோலை சிறுவர் இல்லம் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டு, இவ் வளாகம் அதன் சேமிப்பிடமாக மட்டுமே இருந்தது. பின் முதிய பாடசாலை மாணவ மாணவியருக்கு முதலுதவி பட்டறைகள் வழங்கப்பட்ட இடங்களில் இந்த வளாகமும் ஒன்றாக இருந்தது. இப் பட்டறைகள் ஆரம்பமாவதற்கு முன் அவர்களுக்கு உடற்பயிற்சி கொடுக்கப்பட்டது. தமது அமைப்பில் அவர்கள் தானாக இணைந்துகொள்ள ஊக்குவிப்பதே அதன் நோக்கமாக இருந்தது என்கிறார் மாலதி.
இது இரகசியமாக நடத்தப்படவில்லை. இதை இராணுவம் அறிந்துகொண்டு தாக்குதல் நடத்துவதில் அவர்களுக்கு சிரமமிருக்கவில்லை. இதன்மூலம் இந்தக் கொடுமைக்கு புலிகள் தரப்பு பெருமளவு காரணமாகப் போய்விட்டது என கணிக்க முடிகிறது. இத் தாக்குதலால் ஏற்பட்ட உளத்தாக்கங்கள் மாணவர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தியது என மாலதி அவர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

(மேற்கூறிய குறிப்புகள் உட்பட) இவ்வாறான பல விடயங்களில் மாலதி அவர்கள் ஒரு விமர்சன நூலிழையை வாசகரிடம் தந்துவிடுவது நூல் முழுவதும் காணக்கிடைக்கிறது. ஆனால் அவரது அரசியல் சார்பு அல்லது நம்பிக்கை, அல்லது அவரது வன்னி வாழ்வனுபவம் அவரை இதை ஒரு விமர்சனமாக வளர்த்துச் செல்லவில்லை. மாறாக ஒருவித நியாயங்களை மெல்லியதாய் வழங்கியபடி கடந்துபோய்க் கொண்டிருக்கிறார் அவர். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்வதானால், யாழ் பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதமிருந்த மதிவதனியை (பின்னாளில் பிரபாகரனின் மனைவியானார்) புலிகள் அதிரடியாகக் கடத்தியது ஊரறிந்த உண்மை. ஆனால் மாலதி அதை மதிவதனியும் ஜனனியும் இந்தியாவுக்கு விடுதலைப் புலிகளால் கூட்டிச் செல்லப்பட்டனர் என்கிறார். இவ்வாறு வேறும் உதாரணங்கள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. இந்நூலை ஓர் ஆவணம் என்ற எல்லைக்குள் வைத்துப் பார்த்தால் அரசியல் பார்வையுடனும் சமூகப் பிரக்ஞையுடனும் ஓர் வாசிப்பை நிகழ்த்திக்கொண்டு போவதில் அவரது மென்மையானதும் புலியாதரவானதுமான போக்கை கடந்துசெல்வதில் சிக்கலேதுமில்லை.

சாதியம் பெண்ணியம் என்பவற்றைப் பொறுத்தவரையில் அவற்றை புலிகள் அமைப்பு உள்ளக ரீதியில் கடந்துவிட்டிருந்ததாக அவரது குறிப்புகள் சொல்கின்றன. இதில் சாதியம் புலிகளுக்குள் நிலவியது என்றொரு வாதமும் வெளியில் இப்போதும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எது எப்படியிருந்தபோதும் இவையிரண்டையும் அமைப்புக்குள் செயற்படுத்துவதால் அதுவும் நடைமுறை ரீதியில் மட்டும் வைத்துச் செயற்படுத்துவதில் சமூகத்துள் அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற பிரமை அல்லது நினைப்பு அப்பாவித்தனமானது என்ற செய்தி மீளவும் மாலதியின் கூற்றுகளினூடு வெளிப்படுகிறது. பலம்பொருந்திய மரபுசார்ந்து கட்டப்பட்டிருக்கும் இதன் ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிரான தொடர் கருத்தியல் போராட்டத்தை கவனத்தில் எடுக்காமல், புறநெருக்கடிகளற்ற சூழலுள் பின்பற்றப்படும் சில நடைமுறைகளால் அல்லது மீறல்களால் இவற்றை ஒழிக்கவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவரும் ஒன்று. இதை ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் கவனத்தில் எடுக்காமல் இருந்தால், அதை ஒருவழியிலேனும் நியாயப்படுத்த முடியாது.

“விடுதலைப்புலிகள் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாலும், தமது இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். முழு உலகையும் எதிர்த்து அதிலும்கூட வெற்றிகொள்வார்கள் போலத் தோன்றியது“ என்ற அவரது நம்பிக்கைகளை நாம் ஓர் அங்கலாய்ப்பாகத்தான் புரிந்துகொள்ள முடியும். அரசியல் ரீதியில் அந்த அங்கலாய்ப்பு பெறுமதியற்றது. அப்பாவித்தனமானது. அதுதான் அவரது நம்பிக்கையாக ஆசையாக இருந்துவிட்டுப் போகட்டும்.

இந்த நூலின் மோசமான கூற்றாக நான் பார்ப்பது இதைத்தான்… “வன்னியில் விடுதலைப் புலிகளின் கீழ் அதிசயிக்கத்தக்க பல சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன. காந்தியும் அம்பேத்காரும், பெரியாரும் எட்டாத வெற்றியை வன்னியில் விடுதலைப் புலிகள் எட்டினார்கள்…“ என்றெழுதுகிறார். தொடர் சமூக மாற்றத்தின் பொறிமுறைக்குள் அவரது காட்சிப்பிழையாகவே இந்த அர்த்தமற்ற ஒப்பீட்டை எடுத்துக்கொள்ள முடியும். புலிகளின் அழிவுக்குப்பின்னர் இதே போராளிகளின் சமூக மனநிலை எப்படிப் போயிற்று. பெண்போராளிகளை சமூகம் மட்டுமல்ல சக போராளிகளும்தான் திருமணம் முடிக்க பின்நின்றார்கள். சாதியை மீறி நடந்த அவர்களின் திருமணங்கள் எத்தனை?

மாலதி அவர்கள் நிசோர் அமைப்பில் தனது செயற்பாடுகளை செய்துகொண்டிருந்தவர். பின்னர் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இலங்கை இராணுவத்தாலும் அதனோடு சேர்ந்தியங்கிய தமிழ் இயக்கங்களாலும் கொலைசெய்யப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட பலரின் முறைப்பாடுகளை நிசோர் கையாண்டது. அதேபோல் புலிகளில் இணைந்த அல்லது பலவந்தமாக இணைக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரின் வேண்டுதல்களையும் கையாண்டது. பின்னர் சிறுவர் போராளிகளை விடுவிப்பதிலும் புலிகளுக்கும் யுனிசெப் க்கும் இடையில் செயற்பட்டது. இவ்வாறு அதற்கோர் முக்கியமான பாத்திரம் இருந்திருக்கிறது. சர்வதேச நிறுவனங்கள் சிறுவர் போராளிப் பிரச்சினையை அதைச்சுற்றிய மற்றைய பிரச்சினைகளையோ அதன் சூழலையோ கவனத்தில் எடுக்காமல் அதை மட்டுமே பிரித்தெடுத்து கையாள்வதிலேயே ஈடுபட்டனர் என்கிறார் மாலதி. அது உண்மையாயிருக்க சாத்தியம் உண்டு.

அதேபோல் விடுதலைப் புலிகளிடமும் இது பற்றிய ஈடுபாடும் கடப்பாடும் அசமந்தமானதாகவே இருந்தது. சிறுவர் போராளிகள் என்னும் கருத்தாடல் அவர்களுக்கு அர்த்தமற்றதாகவே இருந்தது என்பதையும் பதிவுசெய்கிறார்.
ஐநாவின் சிறுவர் உரிமைகளுக்கான சாசனத்திற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்ட இணைப்பில் அரசுசார்பற்ற ஆயுதக் குழுக்கள் மட்டும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே தமது அமைப்பில் சேர்க்க முடியும் என்ற விதி 2001 இல்தான் முதன்முதலில் சேர்க்கப்பட்டது. இதை கவனத்தில் எடுக்காத விடுதலைப் புலிகள் 2006 இன் இறுதியிலிருந்து 2007 முழுவதும் 17 வயதுக்கு மேற்பட்டவர்களை அமைப்பில் இணைத்தார்கள். அதற்காக சர்வதேச அமைப்புகளுடன் வாதாடினார்கள். ஆனால் சர்வதேசம் அவர்களையும் குழந்தைப் போராளிகளாக வரையறுத்தது. அத்தோடு அதன் நெருக்கடியால் புலிகள் அந்த வயதெல்லையை 18க்கு மேற்பட்டதாக 2008 இல் மாற்றியமைத்தார்கள்.

போர்ச் சூழலுக்குள் பிறந்து வளர்ந்து, இன்னுமொரு பகுதி பெற்றோர்களையே இழந்துபோகும் நிலையில் குழந்தைமையை அனுபவிக்க முடியாததோடு, உயிர்வாழ்தலுக்கான போராட்டமாக அமளிப்படும் சூழலில், ஒரு நிறுவனமயப்பட்ட அரச இயந்திரங்களில் படையில் சேர்க்கும் (ஆதாரத்துடன்கூடிய) வயதெல்லைக்கான நடைமுறை நியாயங்களை ஒரு நியமமாகக் கொள்ள முடியுமா என்ற கேள்வியை நாம் தொலைத்துவிட முடியாது. அதாவது அளவுகோல்கள் ஒன்றாக இருக்க முடியுமா என்ற கேள்வியை தட்டிக்கழித்துவிட முடியாது. இதை புலிகளின் குழந்தைப்போராளிகளை நியாயப்படுத்துவதாக அநியாயத்துக்கு மொழிபெயர்த்துவிடத் தேவையில்லை. மேற்குலகின் அளவுகோல்கள் மூன்றாமுலகைப் பொறுத்தவரை எல்லாவிடயத்திலும் கேள்விகேட்கப்பட வேண்டிய ஒன்றே. புலிகளின் நிழல் அரசு நிலவிய 2009 க்கு முற்பட்ட காலத்தில் இந்த அளவுகோல் புலிகளுக்குப் பிரச்சினைப்பாடாய் இருக்க நியாயமில்லை. போரற்ற சமாதான காலம் அது. போர்க்காலத்திலும் இதன்மீதான மீறல் பலவந்தமாகச் செயற்படுத்தப்படுவது ஒருவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

அக் காலத்தில் அவ் விடுவிப்புகளுக்கு நிசோருடனும் விடுதலைப் புலிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்ற சந்தேகம் பிற்காலத்தில் எனக்குத் தோன்றியது என்றும் பதிவுசெய்கிறார் மாலதி.
நிசோரை ஆரம்பித்தவர்களில் இருவர் 2004, 2005 இல் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அவர்கள் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மற்றவர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசசிங்கம். பின்னர் நிசோரின் அச்சாணியான கிளி பாதர் அவர்களும் 2009 ஏப்ரலில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2009 மார்ச் இல் போரின் கொடுமைகளை எதிர்நோக்கியபடி வன்னியில் தத்தளித்த மாலதி அவர்கள் ஐசிஆர்சி இன் கப்பலினூடாக பயணம்செய்து மெனிக் பாம் முகாமை வந்தடைந்தார். அங்கு அனுபவித்த கொடுமைகளையும் இந்நூலில் அவர் விபரித்துள்ளார். அறுபது வயதை தாண்டிய நிலையில், மீண்டும் தனது நியூசிலாந்தின் பாதுகாப்பான வாழ்வை நோக்கிய பயணத்தை ஒருவாறு சாத்தியமாக்கினார். அவரது அரசியல்சார்பு பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இந்த வயதிலும் தனது சமூகம் சார்ந்த அக்கறையை நடைமுறை ரீதியில் செயற்படுத்தத் துணிந்த மனநிலையும், அர்ப்பணிப்பும் கவனிப்புக்குரியது.
இறுதியாக,

“எனது நாட்டில் ஒரு துளி நேரம் என்ற“ என்ற இந் நூல் மெனிக்பாம் முகாமின் காட்சியொன்றை விபரிக்கிறது. இலங்கை அரச மந்திரிமார் முகாமை “தரிசிக்க“ வந்தபோது, அவர்களுடன் வந்த படப்பிடிப்பாளர்கள் வாகனத்திலிருந்து முகாமிலிருந்த மக்களை நோக்கி உணவுப்பொதிகளை வீசுகிறார்கள்… மக்கள் அதை எடுப்பதற்கு முண்டியடிக்கும்போது சிரித்துக்கொண்டே அவர்கள் தமக்கான படத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
ஒடுக்குமுறையின் கொடுமைக்குள் பரதேசிகளாய் விடப்படும் மக்களின் நிலையையும் அதிகாரங்களின் ரசனைக்கு தீனியாக அது அமைந்துவிடுவதையும், ஊடகப் பொறுக்கித்தனத்தையும் அறைந்து சொல்கிறது இந்தக் காட்சி!
– ரவி (05042015)

நன்றி  சுடுமணல்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்