/* up Facebook

Apr 25, 2015

பெரியார் பார்வையில் தாலி - செல்வ கதிரவன்


“தாலி பெண்களுக்கு வேலி” என்கிற சொல்லாடல் தமிழகத்தில் தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வருகின்றது. தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் முதலிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் அணிவிக்கும் தாலி குறித்தானவை ஆகும். கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தமிழ் நாட்டில் தாலி புனிதப் பொருளாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார்கள். இன்றும் கூட தாலி கட்டப்படாத திருமணம் என்பது எங்கோ ஒன்றிரண்டுதான் அபூர்வமாக நடக்கின்றது. தாலிக் கயிறு கட்டுவதற்குப் பதிலாக தங்கச் சங்கிலியில் தாலியை மாட்டுவது என்கிற மாற்றத்தை மட்டும் கொண்டு வந்திருக்கிறார்கள் அவ்வளவு தான்... தாலி கட்டாத கல்யாணங்களை ஜீரணிக்கிற அளவிற்கு நம்மவர்களிடம் மனப்பக்குவம் இன்னும் வரவில்லை என்பதே நிஜம். கட்டிய தாலி கழன்று விழுந்துவிட்டால் அவ்வளவுதான்... நமது பெண்கள் தமது கணவருக்கு ஆபத்து வந்திடுமோ என்கிற பயத்தில் கலங்கி கண்ணீர் விட்டுவிடுவார்கள்.

கழுத்தில் தாலிக் கயிறு அணிந்திராத மணியம்மையாருடன் பெரியார்

தாலி சென்டிமெண்ட் காட்சிகள் திரைப்படங்களில் தொடார்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இளம் காளையர் வனத்திற்குச் சென்று புலிகளைக் கொன்று அதன் பற்களால் மணப் பெண்ணிற்கு தாலி செய்து கட்டுவார்கள் என்கிற செவி வழிச் செய்தியும் உண்டு. இன்று தாலிகளின் அமைப்பு சாதிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன.

கணவனை இழந்தவளை ‘தாலி அறுத்தவள்’ என்று கேவலமாகக் கருதுகிற நடைமுறை எல்லா சாதியினரிடமும் இருப்பதை இங்கு காணமுடிகிறது. ஆனால் மனைவியை இழந்தவனுக்கு எவ்விதமான அடை மொழிகளும் அறவே கிடையாது. இப்படி தாலி குறித்த கனமான கருத்தியலை தாம் இளைஞராக இருந்த காலத்திலேயே தகர்த்தவர் தந்தை பெரியார் ஆவார். இந்தியச் சிந்தனையாளர்களில் தாலியை நிராகரித்துப் பேசியவர் தந்தை பெரியார் ஒருவரே.

தாலி மீது தந்தை பெரியாருக்கு எவ்வித மரியாதையும் இருந்ததில்லை. தாலியின் புனிதத்தை உடைக்கிற பணியை தனது வீட்டில் இருந்தே அவர் ஆரம்பித்தார்.

பெரியாருடைய வயது பத்தொன்பது ஆகும் போது பதின்மூன்று வயது நாகம்மாளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அந்தக் காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் முடித்து விடுவார்கள்.

ஒரு நாள் இரவு நாகம்மாளிடம் தாலியைக் கழற்றித் தந்துவிடுமாறு சொன்னார் பெரியார். நாகம்மாள் பதறிப் போய் தாலியைக் கழற்ற மறுத்தார்.

“நான் பக்கத்தில் இருக்கும் போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன...? நான் ஊரில் இல்லாத போதுதான் தாலி இருக்கக் கூடாது. இது தெரியாதா உனக்கு...?” என்று இஷ்டப்படி அளந்து விட்டிருக்கிறார் பெரியார். நாகம்மையும் பெரியார் பேச்சை நம்பிவிட்டார். நாகம்மை தாலியைக் கழற்றிக் கொடுக்க அதனை வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு தூங்கி விட்டார். விடிந்ததும் அந்தச் சட்டையோடு வெளியில் போய்விட்டார் பெரியார்.

நாகம்மாளுக்கு தாலி பற்றிய நினைப்பு வர... வெறும் கழுத்தைக் கண்டால் வீட்டார் திட்டுவார்களே... என்று புடவையால் கழுத்தை மறைத்திருக்கிறார். எவ்வளவு நேரம் இப்படி நாடகமாட முடியும்...? ஒரு கட்டத்தில் மாமியார் பார்த்துவிட்டு “எங்கே தாலி” என்று கேட்டிருக்கிறார். கணவன் சொன்னதை நாகம்மாள் திருப்பிச் சொல்ல... “புருசனுக்கு ஏற்ற பெண்டாட்டி” எனக் கூறிச் சிரித்திருக்கிறார்.

1930 மே மாதத்தில் ஈரோட்டில் மணவிழா ஒன்றிற்கு பெரியார் தலைமை தாங்கி இருக்கிறார். இந்த திருமணத்தில் தாலி கட்டுகிற சடங்கு தவிர்க்கப்பட... பெரியார் இதனைப் பெரிதும் பாராட்டிப் பேசி இருக்கிறார்.

“கல்யாண காலத்தில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தாலிக் கயிற்றைக் கழுத்தில் கட்டி ஆணுக்கு அவள் அடிமையென நடத்துவது என்பது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வருவது மாதிரி...”

பெரியார் பேசிய இந்தப் பேச்சு இன்றைய நாளில் கூட எவரும் பேசப் பயப்படுகிற விசயமாகும். இவ்வாறு வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்கிற பாணியில் பேசுகிற துணிவு இன்றைய தலைவர்கள் எவருக்கும் கிடையாது என்கிற போது 1930ல் பேசுவது சாதாரண காரியமா...?

“பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதென்பது கல்யாணம் ஆனது ஆகாதது என்கிற அடையாளத்தை காட்டுவதற்கும்... இன்னார் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும் பிறத்தியான் அப்பெண்ணை காதலிக்காதிருப்பதற்கும் என்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கல்யாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாருடைய புருசன் என்பதற்கும் பிற மாதா காதலிக்காதிருக்கும் பொருட்டும் அடையாளம் அவசியம் வேண்டுமல்லவா..? அதற்காக கல்யாணத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்ட வேண்டும். அப்படியானால் பெண்களை மட்டும் ஏமாற்றி கழுத்தில் தாலிக் கயிற்றை கட்டி... அடிமைப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்க ஒழிக்கத்தக்க சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.”

பெரியாரின் இந்தக் கறாரான கருத்தைத்தான் “போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கிடுவோம்” என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்பாடலாக்கினார்.

“தாலி புனிதமானது” என்கிற பெரும்பான்மையோரின் எண்ண ஓட்டங்களை எதிர்த்துப் பேச இன்று கூட மனது இடந்தராது. இன்றே இப்படி என்றால் எண்பது வருடங்களுக்கு முன்பு தாலியை, மாட்டின் கழுத்தில் கட்டப்படும் கயிற்றோடு ஒப்பிட்டப் பெரியாரின் பேச்சு சாதாரண நிகழ்வு அல்லவே...!

நன்றி - கீற்று

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்